அம்பாளின் அருமைப் புதல்வியே ஆனாலும்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 10,661 
 

பெண்களை பலாத்காரப்படுத்தி காதலிக்கும்படி பலவந்தம் செய்யும் துர்குணம் இன்று நேற்றல்ல. புராண காலத்திலிருந்தே தொடரும் சாபக்கேடாக உள்ளது. சிவபெருமானின் புதல்விக்கே இந்த கதி ஏற்பட்டது. அவள் எப்படி அதனைச் சமாளித்தாள்? இதற்கு நம் புராணங்கள் கூறும் விமோசனம் என்ன? பார்ப்போமா?

சிவ -பார்வதியின் புதல்வியாக அசோக சுந்தரி பற்றிய ஆதாரம் பத்ம புராணத்தில் காணப்படுகிறது. மேலும் குஜராத்திலும் வங்காளத்திலும் விரத கதைகளின் மூலம் பரவலாக அறியப்பட்ட தேவதையாக அசோக சுந்தரியின் வரலாறு தெரிய வருகிறது.

பதினெட்டு புராணங்களில் இரண்டாவதான பத்ம புராணம், பத்ம கல்பத்தில் நிகழ்ந்த கதைகளை மிகச் சுவையாக எடுத்துக் கூறுகிறது.

மார்க்கண்டேய புராணத்தில் ஞானப் பறவைகள் ஜைமினி முனிவரின் ஐயங்களைத் தீர்த்து பல கதைகளைக் கூறியது போலவே பத்ம புராணத்தில் கிளிக் குஞ்சுகள் கதை கூறுகின்றன.

ஓர் ஆலமரத்தின் மீது கற்ற கிளி ஒன்று வசித்து வந்தது. அதன் பெயர் குஞ்சலா.அதற்கு மனைவியும், உஜ்வலா, சமுஜ்வலா, விஜ்வலா, கபிஜ்வலா என்ற நான்கு மகன்களும் இருந்தனர். இந்த கிளிக் குஞ்சுகள் தினமும் காலையில் வெளியில் சென்று மாலையில் கூடு திரும்பியதும், தாம் அன்று கண்டவற்றையும் கேட்டவற்றையும் தந்தையிடம் சொல்லி விளக்கம் பெறுவது வழக்கம்.

இக்கிளிகள் பேசிக்கொள்ளும் செய்தியாக பத்ம புராணத்தில் நூற்றியிரண்டாவது அத்தியாயம் முதல் சில அத்தியாயங்களில் அசோக சுந்தரியின் கதை விரிவாக விளக்கப்படுகிறது.

ஒருமுறை சிவனும் பார்வதியும் கண தேவதைகளோடும் பரிவாரங்களோடும் சுவர்கத்திலிருக்கும் நந்தவனத்திற்கு உலா வரச் சென்றனர். அங்கிருந்த கற்பக விருட்சத்தைப் பார்த்து பார்வதி தேவி ஆனந்தமடைந்தாள். அம்மரத்தின் சிறப்பை சிவபிரான் கௌரி தேவிக்கு விவரித்தார். ‘இதனருகில் நின்று எதனை சங்கல்பித்தாலும் நிறைவேறும்’ என்றார்.

அவ்வாறு கூறிய சிவனுடைய வதனத்தைப் பார்த்தபடி, தன் இதயத்தில் ஒருஅற்புத சவுந்தர்யத்தை பார்வதி தேவி பாவனை செய்தாள். அந்த எண்ணம் உடனே ஒரு பெண் உருவமெடுத்து எதிரில் தோன்றியது. சிவனை தியானித்து சக்தி பாவனை செய்த ரூபமாதலால், அந்தப் பெண் சிவ பார்வதி புதல்வியாக அழைக்கப்படுகிறாள்.

கௌரியின் மானஸ புத்திரியாக உத்பவமான அந்த தேவியின் பெயர் ‘அசோக சுந்தரி’. ‘அசோகம்’ என்றால் சோகமற்ற ஆனந்தம் என்று பொருள் ‘சுந்தரி’ என்றால் சௌந்தர்யம். சிவ சக்திகளின் தத்துவமான ஆனந்த, சௌந்தர்யங்களின் ஒரு பாவனை வடிவமே அசோக சுந்தரி.

வருங்காலத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த ‘ஆயு’ என்ற சக்கரவர்த்தியின் தனயன் ‘நகுஷன்’ இவளை மணப்பான் என்றும், அவன் சிறந்த மகா புருஷன் என்றும், உலக நன்மைக்காக ‘ஹுந்தாசுரன்’ என்ற அசுரனை சம்ஹாரம் செய்வான் என்றும் சிவபெருமான் எதிர்காலத்தைப் பற்றி எடுத்துக் கூறினார். சிவனும் பார்வதியும் அசோக சுந்தரியை ஆசீர்வதித்து கைலாசத்திற்கு திரும்பிச் சென்றனர்.

தேவ கன்னிகைகளால் சூழப்பட்டு கற்பகவனத்திலேயே திவ்ய போகங்ளோடு வசித்து லட்சுமி தேவி போல் ஒளிர்ந்த அசோக சுந்தரி, சிவனாரின் மொழிகளை நினைவு கூர்ந்து, நகுஷனை மணப்பதற்காக தவம் மேற்கொண்டாள்.

விப்ரசித்தி என்னும் அரக்கனின் மகனான ஹுந்தா, அசோக சுந்தரியின் அழகையும் குணத்தையும் கேள்விப்பட்டு அவ்வனத்திற்கு வந்து அவளிடம் தன்னை மணம் புரியும்படி வேண்டினான். அசோக சுந்தரி அவனை மறுதலித்தாள். கோபம் கொண்ட ஹுந்தாசுரனை தன் தவச்சக்தியால் தடுத்து நிறுத்தினாள். தான் நஹுஷனை மணக்கப் போவதாக எடுத்துக் கூறினாள்.

“இன்னும் பிறக்காத கணவனுக்காக இப்போதிலிருந்தே காத்திருப்பது பைத்தியக்காரத்தனம். மேலும், வயதில் சின்னவனை மணப்பது அதர்மம்” என்று ஹுந்தாசுரன் இடித்துரைத்தான்.

“அயோனிஜர்களுக்கு (கர்பத்திலிருந்து பிறக்காதவர்களுக்கு) பூமியில் பிறக்கும் உடலுக்கான தர்மங்கள் செல்லாது” என்று அசோக சுந்தரி பதிலளித்தாள்.

வேறு உபாயம் தேடிய ஹுந்தா, அசுரருக்குள்ள மாயா சக்தியால் ஒரு பெண் போல் உருவமெடுத்து அசோக சுந்தரியின் முன் தோன்றி கதறி அழுதான். அசோக சுந்தரி அப்பெண்ணிடம் அழுகைக்கான காரணம் என்ன என்று வினவினாள்.

“என் கணவனை ஹுந்தாசுரன் கொன்று விட்டான். நான் ஹுந்தாசுரனை அழிக்க தவம் செய்யப் போகிறேன். நீயும் என்னுடன் வந்து தவத்தில் கலந்து கொள்” என்று அழைத்தாள் அப்பெண்.

அசோக சுந்தரி இரக்கம் மேலிட அப்பெண்ணுடன் சென்றாள். ஆனால் ஹுந்தா, அரக்க உருவமெடுத்து அவளைக் கெடுக்க முனைந்தான். கோபம் கொண்ட அசோக சுந்தரி, “நஹுஷனின் கையால் நீ மரணமடைவது திண்ணம்” என்று சூளுரைத்தாள்.

பின் வனத்திலிருந்து வெளியேறி கங்கா தீரத்திற்கு சென்று தவத்தைத் தொடர்ந்தாள்.

ஆயு என்ற சக்கரவர்த்திக்கு ராணி இந்துமதிக்கும் தத்தாத்திரேயர் அருளால் விஷ்ணுவின் அம்சத்தோடு நஹுஷன் பிறந்தான். அசுரனை அழிப்பதற்காக நாராயண அம்சத்தோடு பிறந்தவன் நஹுஷன் என்று பத்ம புராணம் கூறுகிறது.

நஹுஷன் பிறந்ததை அறிந்த ஹுந்தாசுரன், குழந்தையைக் கடத்திக் கொண்டு வந்து தன் சமையல்காரனிடம் கொடுத்து அதனைக் கொன்று தனக்கு உணவு சமைக்குமாறு ஆணையிட்டான். ஆனால் குழந்தையைக் கொல்ல மனமின்றி அதனை வசிஷ்டர் ஆசிரமத்தில் விட்டுவிட்டு ஒரு முயலைக் கொன்று அரக்கனுக்கு உணவு படைத்தான் சமையல்காரன்.

நஹுஷனை வசிஷ்டர் வளர்த்து சகல கலைகளையும் கற்றுத் தந்தார். ஹுஷா என்றால் அச்சம். நஹுஷா என்றால் அச்சமில்லாமை. நஹுஷனிடம் அவன் பிறப்பின் ரகசியத்தையும், ஹுந்தாசுரன் பற்றியும் எடுத்துக் கூறினார் வசிஷ்டர்.

நஹுஷன் ஹுந்தாவுடம் போர் செய்வதற்குத் தேவையான சகலவித ஆயுதங்களையும் தேவர்கள் அளித்து அருளினர். நஹுஷனின் கையால் ஹுந்தாசுரன் வதம் செய்யப்பட்டான். லோக க்ஷேமம் ஏற்பட்டது. அசுர சம்ஹாரம் நிகழ்ந்த இக்கதை விஸ்தாரமாக பத்ம புராணத்தில் சில அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஹுந்தனின் மரணத்திற்குப் பின் ‘அப்சரஸ் ரம்பா’வின் தூது மூலம் அசோக சுந்தரியைப் பற்றி அறிந்து கொண்ட நஹுஷன், பெரியோர்களின் ஆசியோடு அசோக சுந்தரியை மணந்தான்.

உத்தம குணங்களோடு தர்ம பரிபாலனை செய்த நஹுஷன் யாக பலத்தால் இந்திரனாகவும் ஆனான். நஹுஷனின் மகன் யயாதி. இவனும் சிறந்த புண்ணியவான். இப்படிப்பட்ட சிறந்த புதல்வனுக்குத் தாயானாள் சிவபெருமானின் புதல்வி அசோக சுந்தரி.

ஆனால் பிள்ளையார், முருகன் போல் இவளுக்கு புதல்வி தத்துவம் கூறப்படவில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் உபாசனா தெய்வங்கள். சிவ பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள். அசோக சுந்தரி தர்ம ரட்சணைக்காக, ஒரு மகா புருஷனை மணந்து ஒரு மகா புருஷனைப் பெற்றெடுப்பதற்காக தோன்றிய காரண ஜென்மமெடுத்தவள். சிவ கௌரியின் மானச புத்திரி என்ற வகையில் பூஜிக்கத் தகுந்தவள். தவச் சக்தி, தர்ம நிஷ்டை, தெய்வீகம் பொருந்திய பெண் இவள் என்று புராணம் போற்றுகிறது.

பார்த்தீர்களா?

சிவப் புதல்வி அசோக சுந்தரியைப் போல, தம்மை இக்கலி கால அசுரர்களிடமிருந்து காத்துக் கொள்வதற்கு நம் பெண்களும் தங்களின் வலிமையையும் தவச் சக்தியையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. இது தான் இப்புராணம் உபதேசிக்கும் பரிகாரம். இது போன்ற அரக்கர்களை அழிக்க தேவலோகத்து முனிவர்களும் தெய்வங்களும் கூட துணை நிற்க வேண்டும் என்று தெரிகிறது.

-சிநேகிதி, நவம்பர் 2016ல் பிரசுரமானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *