அவனும் சில வருடங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 69 
 
 

(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம் – 13

ஜனவரி 1986 

“பாரிஸ் எப்படி?” 

அதிபர் கேட்டார். சுருக்கமாக நடந்த விடயத்தைச் சொன்னான்.  

“புவனாவும், மைக்கலும் மார்ட்டினுக்கு எடிட்றிங் உதவி செய்வதாகச் சொன்னார்கள், இப்போது எத்தனை பிரச்சினை? அன்ரோனியோவுக்காகத் துக்கப் படுகிறேன்” 

“நிச்சயமாக” ராகவன் சொல்லிக் கொண்டான்.

“இன்னும் டெவீனா கல்லூரிக்கு வரவில்லை” அதிபர் துக்கப் பட்டார். 

“தாய்க்குச் சுகமில்லை என்று சொன்னாள்” 

அவனுக்கு இரண்டு நாளைக்கு முதற்தான் போன்பண் ணிச் சொல்லியிருந்தாள். தாயின் நிலை சரியில்லை என்றும் தகப்பனின் வருகைக்காகத்தான் காத்திருப்பதாகவும் சொன்னாள். 

புவனாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. மார்ட்டினின் படம் சரிவரவில்லை. இன்னுமொருதரம் எல்லா வற்றையும் திருப்பிச் செய்ய வேண்டும். 

புவனா தனது மூன்றாவது வருட படிப்புக்குத் தேவை யான கட்டுரைகளை எழுதி முடிக்க வேண்டும். மார்ட்டினின் படத்திற்கு எடிட்டிங் செய்ய ஒப்புக் கொண்டதால் தான் கொடுத்த வாக்குறுதியை மீற முடியாமல் தவித்தாள். தான் கமரா வேலைக்கு உதவ முடியாது என்று ராகவன் மார்ட்டினுக்குச் சொல்லி விட்டான். 

எல்லோரும் அன்ரோனியோவில் எரிச்சல் பட்டுக் கொண்டிருந்தார்கள். 

அம்மா வீட்டில் முந்தானையால் முகத்தைத் துடைக்கும் சாட்டில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். ராகவனுடன் பேசப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது. 

மாமா பாரிசிலிருந்து என்ன சொல்லியிருப்பாரோ தெரி யாது. அவன் அம்மாவின் சோகத்திற்குக் காரணம் கேட்க விரும்பவில்லை. 

கல்லூரியில் முடிக்க வேண்டிய செமினார், மார்ட்டினின் படப்பிடிப்பு, டெவீனாவின் தாயின் சுகவீனம் என்பன அவன் தலையில் பாரமாய் அழுத்தின.

குளிரில் வாடிய லண்டன் இளவேனிற் காலத்தில் மெல்லிய வெளிச்சத்தில் பரபரக்கத் தொடங்கியது. 

டெவீனாவுடன் பாரிஸ் சென்ற அனுபவம் இப்போது தான் அவன் சிந்தனையை உண்மையாகத் தாக்கத் தொடக்கியி ருந்தது. 

தகப்பனாரின் அகால மரணம் அவர்கள் லண்டனுக்கு வந்து அடுத்த வருடமே ஏற்பட்டதால் பத்தொன்பது வயதில் குடும்பச் சுமையை ஏற்று தம்பி தங்கையின் படிப்புக்கு உதவியவன். இப்போது இருபத்தைந்து வயதில் தனக்குப் பிடித்த படிப்பைத் தொடங்கியிருக்கிறான். அம்மாவுக்கு அதிகம் பிடிக்கவில்லை. மகாலிங்கத்திற்கு வேடிக்கையாக இருக்கிறது. 

கீதா தனது குழந்தை வயிற்றைத் தடவிப்பார்த்துச் சந்தோசப் பட்டுக் கொண்டிருக்கிறாள். 

மைதிலி சில மாதங்களாக அம்மாவுடன் பிரச்சினைப்பட்டுக் கொண்டிருக்கிறாள். 

ஒரு பின்னேரம் வீட்டுக்கு வந்தபோது ஆனந்தன் வந்திருந்தான். மைதிலியில் ஆனந்தனுக்கு ஒரு கண் இருப்பதை ராகவன் அறிவான். ஆனந்தனின் வருகையால் அம்மாவின் முகத்தில் சந்தோசம். ஆனந்தன் ஊரில் தமிழ் இயக்கங்கள் ஒருத்தரை ஒருத்தர் கொலை செய்வதைப் பற்றிச் சொல்லித் துக்கப்பட்டான். 

”உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்” ஆனந்தன் ராகவனிடம் சொன்னான். 

”ஊரில் நடக்கும் கொலைகளைப் பற்றி எனக்குச் சொல்வதானால் நான் வரவில்லை” 

ஆனந்தன் ராகவனை ஆச்சரியத்துடன் பார்த்தான். 

“என்ன பார்க்கிறாய். அரசியலில் நடக்கும் இந்தக் கொலைகளை நான் வெறுக்கிறேன். அதைப் பற்றிப் பேசவோ நியாயப்படுத்திக் கேட்வோ எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்கிறேன்” 

“உனது வீட்டுப் பிரச்சினைகளை என்றாலும் கேட்கப் பிடிக்குமா” 

ஆனந்தன் குரலில் எரிச்சல். ராகவனின் முகத்தைப் பார்த்தான். இருவரும் வெளியிற் போனார்கள். 

‘பார்’ ஒன்றுக்குப் போய் பீர் ஆடர் பண்ணிக் கொண்டார்கள். 

“மைதிலியின் விடயத்தை அம்மாவால் தாங்க முடியாமலிருக்கிறது” 

முன் பின் எந்த அறிவிப்புமின்றி ஆனந்தன் அப்படிச் சொன்னதை ராகவன் புரிந்து கொள்ளவில்லை. 

“என்ன சொல்கிறாய்” 

“உனது தங்கை மைதிலி ஒரு முஸ்லீமை விரும்புகிறாளாம்” 

குடித்த பீர் தொண்டையில் சிக்கிக் கொண்டது. ராகவன் இருமிக் கொண்டான். அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. 

ஒரு சில நிமிடங்கள் ஒரு சில மணித்தியாலங்கள் போல் கழிந்தன. 

ஆனந்தன் பொறுமையின்றி நண்பனைப் பார்த்தான். 

“ஆனந்தன்….” சொல்ல வந்தைச் சொல்லாமல் நண்பனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். ஆனந்தன் ஒன்றும் சொல்லாமல் நண்பனைப் பார்த்தான். 

“ஆனந்தன் உனக்கு மைதிலியில் விரும்பமென்று நான் நினைத்துச் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தேன்” 

”உஷ் அதெல்லாம் டூ லேட். இப்போது மைதிலியின் விடயத்தை எப்படிக் கையாள்வது என்று யோசிப்போம்” 

ஆனந்தனின் குரலில் தோல்வியில்லை. தத்துவம் தொனித்தது. தான் காதலித்த பெண்ணின் காதலுக்கு உதவி செய்யும் மனிதத் தன்மை தெரிந்தது. அற்புதமான தமிழர்களில் ஒருத்தன் ஆனந்தன். ராகவன் உணர்ச்சியுடன் நண்பனைப் பார்த்தான். 

“மைதிலியுடன் பேசினேன். …. தன்னுடன் சட்டக் கல்லூரியிற் படிக்கும் கொழும்பைச் சேர்ந்த முஸ்லீம் மாணவன் என்று சொன்னாள். அம்மாவுக்கு இவள் நடத்தைகளில் எப் போதோ சந்தேகமாம். உன்னுடன் இது பற்றிப் பேச விருப்ப மில்லையாம்” 

”ஏனாம்” ராகவன் அவசரமாய்க் கேட்டான். 

“நீ வெள்ளைக்காரப் பெட்டையுடன் திரிகிறாயாம்” ஆனந்தன் நண்பனைக் கூர்ந்து பார்த்தான். 

ராகவன் ஒன்றும் பேசவில்லை. அம்மாவுக்குத் தனக்குள்ள ஆத்திரத்திற்கு மகாலிங்கமும் பாரிஸ் மாமாவும் இன்னும் எரிபொருள் கொடுத்திருப்பார்கள் என்று தெரியும். 

“நீ மைதிலியை விரும்பியதை அம்மாவுக்குச் சொன்னாயா”  

“நான் என்ன முட்டாளா, எரியும் நெருப்பில் எண்ணெய் விட” ஆனந்தன் சோகத்துடன் சிரித்தான். 

கொஞ்ச நேரம் பக்கத்திலுள்ள குடிக்கும் கூட்டத்தைப் பார்த்தான். இந்தப் ‘பாரில்’ எத்தனையோ நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து குடிக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் கலப்புத் திருமணம் செய்திருப்பார்கள்? ராகவன் பெருமூச்சு விட்டான். 

”நான் மைதிலியின் விருப்பத்திற்குத் தடையாக இருக்க மாட்டேன்” ராகவன் உறுதியாகச் சொன்னான். 

”அம்மாவும் அதையேதான் சொன்னாள், நீ மைதிலி பக்கம் தான் இருப்பாய் என்று சொன்னாள்”. 

“வேறு என்ன செய்யச் சொல்கிறாய்?”

“மைதிலியுடன் பேசிப்பாரேன்” 

“ஆனந்தன் மைதிலிக்கு இருபத்தி ஒரு வயதாகிறது. அம்மாவோ நானோ மைதிலிக்கு ஒன்றும் சொல்ல முடியாது. அன்பால் வளைக்க முடியாத உணர்வுகளைச் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது.” 

“நீ வித்தியாசமான தமிழனாக இருக்கிறாய்” 

“இதில் ஒன்றும் வித்தியாசமில்லை. மாறிக் கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்” ராகவன் தெளிவாகச் சொன்னான். 

அம்மா இரண்டொரு நாட்களாகச் சாப்பிடவில்லை. அறையுள் முடங்கிக் கிடந்தாள். 

“இவள் என்னையிப்படித் தலை குனியச் செய்து விட்டாளே” அம்மா விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். 

கணேஸ் வந்திருந்தான். “நீங்கள் சொன்னால் அவள் மனம் மாறுவாள்” தமயனுக்குச் சொன்னான் கணேசு. தங்களுக்காக உழைத்தவன் ராகவன் என்ற நன்றி கணேசுக்குண்டு. மைதிலியின் பிடிவாதத்தை யுணராதவனாகத் தெரிந்தான் கணேஸ். 

அம்மாவிடம் இது பற்றிப் பேசி மேலும் தர்க்கத்தை யுண்டாக்க விரும்பவில்லை. ராகவன் முடியுமானவரை அம்மாவுடன் தேவைகளுக்கு மட்டும் பேச்சுக்களை வைத்துக் கொண்டான். 

கடந்த பல வருடங்களாகக் குடும்பத்திற்கு உழைத்தவன் இப்போது வேண்டாதவன் மாதிரி அம்மாவால் நடத்தப்படுவதாக நினைந்து மனம் வருந்தினான். 

அடுத்த நாள் கொலிஜ்ஜுக்கு பஸ் எடுத்த போது எல்லோ ரிலும் கோபம் வந்தது. 

கல்லூரியில் புவனாவின் கோபத்தை எதிர் நோக்க வேண் டியிருந்தது. மார்ட்டினின் படத்திற்காக எடிட்டிங் ரூம் ஒழுங்கு செய்திருந்தாள். இவள் பாவிக்கா விட்டால் மற்ற மாணவர்களுக்குக் கொடுக்கச் சொல்லி அதிபர் சொன்னதால் அவள் கோபமாயிருந்தாள். 

“அன்ரோனியோவின் பேச்சை நம்பினேனே” என்று திட்டிக் கொண்டிருந்தாள். 

ராகவனின் முகத்தைப் பார்த்ததும் தனது திட்டலைக் குறைத்ததுக் கொண்டு; “என்ன முகம் நீண்டு போயிருக்கிறது” என்று கேட்டாள். 

மைதிலியின் விடயத்தை இவளிடம் சொல்லியழ வேண்டும் போலிருந்தது. சொன்னான். புவனா இலங்கைப் பெண். அவளாள் இவனின் துயரை உணர முடிந்தது. 

“என்ன செய்யச் சொல்லி அம்மா எதிர்பார்க்கிறாள்” 

“மைதிலியின் காதலை விடச் சொல்லி என்னை எதிர் பார்க்கிறார்கள்” ராகவன் துக்கத்துடன் சொன்னான். 

“சொல்வாயா” 

“இல்லை” 

“ஏன்” 

“பெண்களின் சுதந்திரத்தை மிகவும் தீவிரமாக ஆதரிக்கிறேன். மைதிலியின் விருப்பம் அவளின் சொந்த விடயம். அடுத்த வருடம் சட்டத் தரணியாக வரப்போகிறாள். உலகம் தெரிந்தவள் என்று நினைக்கிறேன்” 

“நீ வித்தியாசமானவன்” 

“ஆனந்தனும் இதைத்தான் சொன்னான்” 

“யார் ஆனந்தன்?” 

“எனது சினேகிதன், மைதிலியில் மிகவும் விருப்பமாக இருந்தவன்” 

“பாவம், காதலில் தோல்வியா'” 

“இல்லை, ஒரு அனுபவம் என்று சொல்கிறான்” 

“உனது அனுபவம் பாரிசில் எப்படி? காதலர்கள் பூமியில் யாரையும் முத்தமிடச் சந்தர்ப்பம் கிடைத்ததா? மார்ட்டினின் நிறைய கேர்ள் பிரண்ஸ் ஹலோ சொல்லியிருப்பார்களே வார்த்தையாய்ச் சொல்லாமல் வாயில் தந்திருப்பார்களே” புவனா கிண்டல் செய்தாள். 

ராகவன் மறுமொழி சொல்ல முதல் மைக்கல் வந்து சேர்ந்தான். “ஏய் ராகவன், பாரிஸ் எப்படி?” 

“மழையும் குளிருமாயிருந்தது” 

“காதலர்கள் கட்டியணைக்க நல்ல சுவாத்தியம்” மைக்கல் பலமான சத்தத்தில் சிரித்தான். 

“சட் அப் மைக்கல்” புவனா அதட்டினாள். 

அன்று இத்தாலிய படத்துறைபற்றி லெக்ஸர் நடந்தது. ஹொலிவூட் படங்கள் மாதிரியில்லாமல் சமூகக் கருத்துக்கள் பற்றிய படங்களின் வளர்ச்சி பற்றி அதிபர் பேசிக் கொண்டிருந்தார். 

அந்த லெக்ஸருக்குச் சில இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களும் வந்திருந்தனர். மிஸ்டர் ஜான் பேர்ன்ஸ்ரைன் திரைப்படத் துறை மக்களிடம் எவ்வளவு மதிப்புப் பெற்றிருக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. 

புவனாவும் ஜேனும் டெவீனா இன்னும் கல்லூரிக்கு வந்து சேராதது பற்றித் துக்கப்பட்டார்கள். 

1940ம் ஆண்டுகளில் இத்தாலியில் தோன்றிய புது யதார்த்தம் (Neo-Realism) என்ற சித்தாந்தத்தைப் பற்றி விளங்கப் படுத்தினார் அதிபர். 

இந்தச் சிந்தனையின் பின்னணியில் உண்டான படங்கள் பற்றிப் பேசினார். உருவச் சீரமைப்பு, கதை சொல்லும் பாணி என்பவை எப்படி சமுதாய யதார்த்தத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை விளக்கும் சைக்கிள் திருடன் (Bicycle Thieves 1949) எனற படத்தைக் காட்டினார். 

இத்தாலிப் படங்களில் எப்படி பாஸிஸத்தைப் பற்றிய விளக்கங்கள் பிரதி பலித்தன என்பதை அதிபர் விளங்கப் படுத்தியபோது ராகவன் கூர்மையாக அவதானித்தான். 

நியோ-றியலிச் சித்தாந்தைப் பின் பற்றி எடுக்கப் பட்ட படங்கள் 1950 ஆண்டுகளுடன் முற்றப் பெற்றாலும் இத்தாலிய சினிமாத் துறை எப்படி உலக சினிமா அரங்கில் ஒரு இன்றிய மையாத இடத்தைப் பெற்றது என்பது மறுக்கக முடியாதது. 

“இப்படியான படங்கள் இந்தியாவில் வருமா” புவனா ராகவனைக் கேட்டாள். 

“நான் நினைக்கவில்லை, பாமர மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கவும் பாமர மக்களை முட்டாள்களாக்கிச் சினிமாக் கதாநாயகர்களைத் தலைவர்களாக்கவும் ஆத்மீகத் தலைவர்களாகவும் உயர்த்தி வைத்துப் படம் எடுக்கிறார்கள் இந்தியத் தயாரிப்பாளர்கள்” 

“அந்த நிலை மாறவே மாறாதா” 

“மூன்றாம் தர இந்திய சினிமாவை விட தரமான படங்கள் பெரும்பாலும் வரவில்லை, தரமான சிந்தனையாளர்கள் இந்தியச் சினிமாவில் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் எண்பது வீதத்திற்கு மேலான மக்கள் சாதாரண வாழ்க்கைத் தரத்தையே எட்ட முடியாத வறுமை நிலையில் வாழ்க்கிறார்கள். அவர்களின் துயர் படிந்த வாழ்க்கைவிலிருந்து ஒரு சில மணித்தியாலங்கள் என்றாலும் விடிவு பெற இந்தக் கற்பனைப் படங்கள் உதவி செய்கின்றன” 

“ஆமாம் ஆயிரக்கணக்கான தெய்வங்கள் அவர்களின் வறுமைக்கு நிவாரணம் செய்வார்கள் என்பது நினைப்பது போற்தான்” புவனா பெருமூச்சு விட்டாள். 

“இந்தியாவில் அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்து விட்டது. அரசியல்வாதிகள் தங்களின் ஊழல்களை மறைக்க சினிமா உதவுகிறது. இந்தியாவில் சினிமா ஒரு தீவிரமான சமயத்தின் ஸ்தானத்தைப் பெற்றுவிட்டது. மதம் அபினுக்குச் சமம் என்று உனக்குத் தெரியும்தானே. அந்த நிலைதான் இந்திய சினிமாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்திய சினமா பாமர மக்களுக்குப் போதை கொடுக்கிறது. அரை குறையாடையணிந்த நாயகிகள் காம போதை கொடுக்கிறார்கள். எகிறியடிக்கும் கதாநாயகர்கள் வீரவெறியை யுண்டாக்குகிறார்கள். நாளுக்கு கிட்டத்தட்ட மூன்று படங்கள் இந்தியாவில் தயாரிக்கப் படுகின்றன. இந்தியாவில் புனிதமான காதலும் மனிதனை மேம்படுத்தும் சமய சிந்தனைகளும் எவ்வளவு தூரம் யதார்த்தம் என்று எனக்குத் தெரியாது.” 

ராகவன் சொல்லிக் கொண்டே தன் மூட்டை முடிச்சுகளை எடுத்துகக் கொண்டு ஸ்ரேசனுக்குப் போனான். 

“மைதிலியின் விடயம் எப்படி” புவனா ஆர்வத்துடன் விசாரித்தாள். 

“அம்மா இன்னும் அரைகுறை அஞ்ஞாத வாசம் செய்கிறார். தமிழ்க் கலாச்சாரத்தை நானும் மைதிலியும் கேவலப் படுத்துவதாக முணு முணுக்கிறார்” 

ராகவன் படிகளில் இறங்கியபடி சொன்னான். 

“கலாச்சாரம் என்றால் என்ன?” புவனாவின் கேள்வி ராகவனைச் சிரிக்கப் பண்ணியது. 

“கலாச்சாரம் வளர அந்தக் கலாச்சாரத்தை ஒட்டிய சமயம், மொழி, பண்பாடு என்ற மூன்று விடயமும் தேவை. நான் தமிழ்ப் பெண் கோயிலுக்குப் போக மாட்டேன், நேரமில்லை, தமிழ் பேசச் சந்தர்ப்பம் இல்லை, சாரிகட்டிக் கொண்டு கல்லூரிக்கு வருவது வசதியான விடயமாகப் படவில்லை, அப்படி என்றால் நான் தமிழ்ப் பெண் இல்லையா” புவனா கேட்டாள். 

ராகவன் அவளையுற்றுப் பார்த்தான். ஓவர்க் கோட்டுக்குள் புதைந்த உருவம், குங்குமம் காணாத நெற்றி, தமிழ் அதிகம் வராத சம்பாஷணை, ஆனால் அவள் ஒரு நல்ல பெண், உலகத்துக் கொடுமைகளை உணர்ந்து துடிப்பவள். மனித நேயத்தின் பிரதிநிதி. அந்த உணர்வுக்கு எந்தக் கலாச்சாரமும் தேவையில்லை. மனித நேயம் என்ற கலாச்சாரமே போதும். 

“என்ன யோசிக்கிறாய்” 

“உன்னைப் பட்டுச் சோலையிலும் குங்குமப் பொட்டிலும் பார்க்க ஆசைப் படுகிறேன்”

“ஏன் என்னைக் கல்யாணம் செய்யப் போகிறாயா” கேலியாகக் கேட்டாள் புவனா. 

“உன்னைத்தான் றிச்சார்ட்டிடம் கொடுத்து விட்டாயே, அது சரி நீ றிச்சார்ட்டுடன் வாழ்வதை உன் குடும்பம் எதிர்க்க வில்லையா” 

புவனா ரெயினில் ஏறினாள். அவள் தொடர்ந்தாள். 

“பெரிய அக்கா அம்மா சொன்னபடி செய்தாள். மாப் பிள்ளை சோம்பேறி, வேலைக்குப் போகாதவன், அக்கா ஏதும் கேட்டால் அடியுதை. இரண்டாவது அக்கா காதலித்துக் கல்யா ணம் செய்தாள். முதல் இரண்டு வருடங்கள் சந்தோசம். குழந்தை பிறந்து வாழ்க்கைப் பொறுப்புக் கூடக்கூட ஒருத்தரை ஒருத்தர் வார்த்தைகளால் வருத்திக் கொள்கிறார்கள். என்னால் கல்யாணம் என்ற சிறைக்குள் போக முடியாது. றிச்சார்ட்டைச் சந்தித்தேன். சந்தோசமாக வாழ்கிறோம். கல்யாணம் செய்வது பற்றி அக்கறையில்லை. பேப்பரில் போடும் கையெழுத்துக் காகவோ, கழுத்தில் கட்டும் தாலிக்காகவோ, கையிற் போட்டுக் கொள்ளும் மோதிரத்திற்காகவோ உறவுகள் இல்லை. அன்பு ஆத்மீக ரீதியானது. சட்டத்தின் பாதுகாப்பும், சமயத்தின் ஆசிர்வாதமும் சம்பிரதாயத்தின் நல்வாழ்த்துக்களும் ஒருத்தரில் ஒருத்தர் உண்மையான அன்பு வைத்தால் தேவையற்ற அம்சங்கள் என்று கருதுகிறேன்” 

ரெயின் அடுத்த ஸ்ரேசனில் நின்றது. 

“உண்மையான அன்பு என்றால் என்ன?” ராகவன் ஆர்வத் துடன் கேட்டான். 

“ஒருத்தருக்கு ஒருத்தர் மரியாதை கொடுப்பது. கட்டிய பெண்சாதி காலம் பூராவும் கட்டிலில் இன்பம் தரவும் வயிற்றுக்குச் சமைத்துப் போடவும் வந்தவள் என்ற உணர்வின்றி வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்ட ஜீவன் என்று கௌரவம் கொடுப்பது” 

ராகவன் சிரித்தான். 

“என்ன சிரிக்கிறாய்” 

“உலகத்தில் எத்தனை தம்பதிகள் இப்படியிருக்கிறார்கள்”

“தெரியாது.ஆனால் நான் அப்படித்தான் வாழ்க்கிறேன்” 

அத்தியாயம் – 14

ஏப்ரல் 1986

ஜுலியட் லண்டனுக்கு வந்து அன்ரோனியோவுடன் வாழமுடியாது என்று எழுதியதாக அன்ரோனியோ சொன்னான். 

“மனதில் தடுமாறியிருக்கும் தாயை என்னவென்று தனியாக விட்டு வரமுடியும்” ராகவன் கேட்டான். 

”நான் மிகவும் பெலவீனமானவன் என்று நினைக்காதே, ஆனாலும் ஜுலியட் இல்லாமல் என்னால் வாழமுடியாது” 

இவன் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது டெவீனா ஸ்ருடன்ஸ் ஹாலில் காலடி எடுத்து வைத்தாள். 

கிழமைகளாக அவளைக் காணாததால் மனம் குமைந்து கொண்டிருந்த ராகவனில் ஆயிரம் சூரியன் கண்ட பிரகாசம். 

“எப்படி அம்மா” 

“ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணப் பட்டிருக்கிறாள். கான்சர் அவள் எலும்பெல்லாம் பரவியிருப்பதாகச் சொல்கிறார்கள். சிகிச்சை செய்கிறார்கள்” 

அன்ரோனியோ தனது ஒப்பாரியை ஒதுக்கி வைத்து விட்டு டெவீனாவின் தாயின் உடல்நிலை பற்றி விசாரித்தான். அன்று பின்னேரம் லண்டன் நாஷனல் பிலிம் தியேட்ட ரில் ‘சியாம் பெனகலின்’ படமொன்றுக்கு டெவீனாவுடன் போனான் ராகவன். 

ஒரு வருடத்திற்கு முதல் என்றால் ஒரு ஆங்கிலப் பெண்ணுடன் இந்தியப் படமொன்றுக்குப் போவதை நினைத்திருக்க மாட்டான். 

அப்பா இறந்தபின ஒரு பிலிம் டிவெலப் பண்ணும் கொம்பனியில் வேலை செய்தான். வேலையுண்டு தானுண்டு என்ற பாவம். அத்துடன் குடும்பச் சுமை வேறு. அந்தக் கால கட்டத்திற்கும் தற்போதைய தனது நிலைக்கும் உள்ள வித்தியா சத்தை அவனாற் கற்பனை செய்ய முடியவில்லை. 

படம் முடியவிட்டு தேம்ஸ் நதிக்கரைப் படிகளில் அமர்ந் திருந்தார்கள். 

“அம்மாவுக்கு ஏதும் நடந்தால் என்றால் எப்படித் தாங்க முடியுமோ தெரியுமோ தெரியாது.” 

“நடப்பதை யாரால் தவிர்க்க முடியும்?” 

“உலகம் வெறும் மாயையாகத் தெரிகிறது” 

“நானுமா” 

“நீ ஒருத்தன் இல்லை என்றால் லண்டன் திரும்பியிருப் பேனோ தெரியாது” அவர் குரலின் கலக்கத்தில் அவன் கரைந்து விட்டான். 

“வாருங்கள் லண்டனுக்கு வெளியில் எங்காவது போவோம்” 

அவன் அம்மாவுக்கு போன் பண்ணி லேட்டாக வருவதாகச் சொன்னான். கார் எங்கேயோ போய்க் கொண்டிருந்தது. 

“எங்கே போகிறோம்” 

“எங்களைத் துன்பப் படுத்தும் மனிதர்கள் இல்லாத உலகத்திற்கு” 

“அடேயப்பா அது எங்கேயிருக்கிறது, எப்படியிருக்கும்?” 

கார் பிறைட்டன் பக்கம் போய்க் கொண்டிருந்தது. “ஐயையோ பிறைட்டன் பீச் கல்லும் மண்ணுமானது, குளிர்காற்று உயிரைக் குடிக்கப் போகிறது” அவன் ஓலம் போட்டான். 

பிறைட்டனைத் தாண்டி கார் நியு ஹேவன் என்ற இடத்திற்குப் போனது. 

நேரம் பதினொரு மணிக்குமேல் இருக்கும். வெள்ளைக் குன்றுக் கடற்கரையில் அலைகள் ஓலமிட்டு அலறி முட்டின. காரை நிறுத்தி விட்டு அவள் நடந்தாள், அவன் தொடர்ந் தான். அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று ஒரு சில வினாடிகள் யோசித்தான். 

கண்ணுக்கெட்டிய தூரம் வரை மின்மினுக்கும் சில தெரு விளக்குகள், திறந்த வெளி, வெண்ணிறப் பாறைகள், பயங்கர ஓசையுடன் கடல் அலைகள். 

“டெவீனா இந்த இடம் அபாயமானதாகத் தெரியவில்லையா” 

”அபாயமென்று நினைத்தாத்தான் பயம். எனது இளம் வயதில் இந்தப் பாறைகளில் அமர்ந்திருந்து எத்தனையோ கனவுகள் கண்டிருப்பேன்” அவள் குரல் கனவில் ஒலிப்பது போல் தானிருந்தது. 

“என்னைத் தனிமையில் விட்டு ஓடிப் போக வேண்டும் போல் இருக்கிறதா” அவள் ஏக்கத்துடன் கேட்டாள். 

“என்ன பைத்தியத்தனமான கேள்வியது?” அவளை அணைத்துக் கொண்டான். 

”நீ உண்மையாகக் காதலிக்கிறாயா ராகவன்” அவன் மறுமொழி அவள் இதழ்களின் பதிந்தது. 

“எனக்கென்னவோ இந்த இடத்தில் இந்த நிமிடமே இறந்து விட்டால் சந்தோசமாக இருக்குமென்று நினைக்கிறேன்” விரக்தியின் பிரதிபலிப்பு அவள் குரலில். 

“டெவீனா குழந்தைத் தனமாகப் பேசாதே” 

“என்னில் அன்புள்ள அம்மா போய் விட்டால், உனது அன்பும் இல்லை என்ற நிலை வந்தால் என்றால் இந்த உலகத்தை முகம் கொடுக்க முடியுமோ தெரியாது” வாழ்க்கை யைப் பார்த்துப் பயந்த குழந்தையின் தொனியது. 

“நீயும் அன்ரோனியோ போல பேசத்தொடங்கி விட்டாய்” 

”அன்ரோனியோவை நான் இப்போது விளங்கிக் கொள்கி றேன். காதலில்லாத, அன்பில்லாத வியாபாரத்தனமான உறவுக ளில் ஏனோ தானோ என்று வாழ்க்கையை இழுத்தடிப்பதை விட தொலைந்துவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்” 

டெவீனாதான் இப்படிப் பேசுகிறாளா என்று ராகவனால் நம்ப முடியாமலிருந்தது. தாயின் சுகவீனம் அவளை எப்படிக் குழப்பியிருக்கிறது என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. 

அடுத்த சில நாட்களில் ஜூலியட் லண்டன் வந்தாள். அன்ரோனியோவின் முகத்தில் மகிழ்ச்சி. அன்ரோனியோவின் கட்டளையை அவளால் ஏற்க முடியாது என்று அழுதாள். 

ஒரு நாள் இருவரின் தர்க்கமும் மாணவர்களின் ஓய்வறை யிலிருந்து உக்கிரமாகக் கேட்டன. 

பின்னேரம் ஐந்து மணிக்கு லெக்ஸர் முடிந்து வகுப்பறைக ளால் வந்து கொண்டிருந்த மாணவர்கள் என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தார்கள். 

டெவீனாவைக் கடந்து கொண்டு ஜுலியட் மொட்டை மாடி நோக்கி ஓடினாள். 

“ஜூலியட் என்ன நடந்தது” என்று டெவீனா பின் தொடர்ந்ததும் அதற்குப் பின் நடந்ததும் திரைப் படக் கல்லூ ரியை உலுக்கி விட்டது. 

ஜூலியட் பதினான்காம் மாடியிலிருந்து குதித்து விட் டாள். கண்மூடித் திறப்பதற்குள் அந்தகக் கோர நிகழ்ச்சி நடந்தது. 

டெவீனா எட்டிப் பார்த்தபோது இரத்தத்தில் தோய்ந்து கிடந்த அழகிய ஜுலியட்டின் உடலைப் பார்த்ததும் அவனுக் குத் தலை சுற்றியது. ஆம்புலன்ஸ் வருவதற்கிடையில் ஜூலி யட்டின் ஆவி பிரிந்நது விட்டது. 

அவள் இல்லாவிட்டால் வாழமுடியாது என்று அடிக்கடி சொல்லிய அன்ரோன்யோவை விட்டு ஜூலியட் மறைந்து விட்டாள். 

அன்ரோனியோவை ஒரு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர டொக்டரை அழைத்து நித்திரை ஊசி போட வேண்டியிருந் தது. அவன் அலறலில் அந்த இடம் அதிர்ந்தது. 

அடுத்த சில நாட்கள் மைக்கல்,ஜேன், ஸ்ரீவன், ராகவன் நால்வரும் அன்ரோனியோவின் பிளாட்டில் தங்கினார்கள். 

அதிபர், ஒவ்வொரு பின்னேரமும் வந்து அன்ரோனியோ வைப் பார்த்தார். நித்திரை முடிந்து எழுந்தால் அலறுவான். 

நண்பர்கள் விஸ்கியைக் கொடுத்து அவனை நித்திரையாக்குவார்கள். 

ராகவன் போன் பண்ணி அம்மாவுக்கு விடயத்தைச் சொன்னான். 

“படத் தொழிலில் இருப்பவர்கள் அதிகம் பேர் பைத்தியம் தானே” முன்னுக்குப் பின் முரணாக அம்மா ஏதோ அலட்டினாள். 

மைதிலி தன் உளமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டாள். 

அன்ரோனியோ, ஜூலியட் இருவருக்குமிடையில் நடந்த தர்க்கத்தைக் கேட்டவர்கள் அன்ரோனியோ ஜூலியட்டைக் கண்ட பாட்டுக்குத் திட்டியதாகச் சொன்னார்கள். 

உன்னைப் போல பெண்களை நம்பிய எத்தனைபேர் சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று திட்டினானாம். 

அதைத் தாங்க முடியாத ஜுலியட் உணர்ச்சி வேகத்தில் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாகச் சொன்னார்கள். 

உயிர் போவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன் என்றாலும் தன் எதிர்காலம் இப்படி வெட்டப்படப் போகிறது என்று நினைத்திருப்பாளா? 

டெவீனா குன்றிப் பேனாள். 

கான்ஸரில் இறந்து கொண்டிருக்கும் தாயைப் பார்த்து விட்டு வந்தவளுக்கு கண்ணுக்கு முன்னால் பாய்ந்து மடிந்த ஜூலியட்டின் இறப்பு எவ்வளவு தாக்கத்தை யுண்டாக்கி யிருக்கும். யாராலும் கற்பனை செய்ய முடியவில்லை. 

அன்ரோனியோவுடன் ராகவன் தங்கி நின்றபோது புவனா, பிலிப், டெவீனா எல்லோரும் ஒரு பின்னேரம் வந்தனர். 

அன்ரோனியோ தள்ளாடியபடி எழுந்தான், அழுதான், தலையிலடித்துக் கொண்டிருந்தான். லண்டனிலிருந்தால் தனக் குப் பைத்தியம் பிடிக்கும் என்றான். 

ஜூலியட் தற்கொலை செய்து கொண்ட பிலிம் கொலிச்சுக் குத் தான் காலடி எடுத்து வைக்க முடியாது என்று விம்மியழு தான். அவனின் துயரை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. புவனாவும் பிலிப்பும் வீடுகளுக்குச் செல்ல ஆயத்த மானபோது டெவீனா இன்னும் அன்ரோனியோவைத் தேற்றிக் கொண்டிருந்தாள். 

“நீ வரவில்லையா” பிலிப் டெவீனாவைக் கேட்டான். ”நான் ராகவனுடன் போகிறேன்” என்று பிலிப்பின் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள். 

அவர்கள் போனாலும் அன்ரோனியோவுக்குச் சாப்பாடும் நித்திரைக் குளிசையும் கொடுத்து தூங்கப் பண்ணிறார்கள். 

“இப்படி ஒரு பயங்கர அனுபவம் யாருக்கும் வேண் டாம்… உயிருக்குயிராய் நேசித்த ஒருவள் தனக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டதை என்னவென்று ஒரு மனித மனம் மறக்க முடியும்?” 

டெவீனாவின் மனம் ஆழ்ந்த துயரத்திலாழ்ந்திருக்கிறது என்று அவர் பேச்சில் தெரிந்தது. 

“நடந்தைப் பற்றி யோசிக்காதே டெவீனா” ராகவன் ஆறுதல் படுத்திறான். 

“ராகவன், அன்ரோனியோ படிப்பிற் கவனமில்லாமல் குடித்துக் கொண்டும், மைக்கலுடன் சேர்ந்து கஞ்சா அடித்துக் கொண்டுமிருப்பதாக ஜுலியட்டுக்கு எழுதினேன். நான் எழுதி யிருக்கா விட்டால் அவள் வந்திருக்காமலிருந்திக்கலாம்” 

ராகவனுக்கு இது புதிய செய்தி. இரக்க மனமுள்ள டெவீனாவின் இந்தச் செயல் இத்தனை பார தூரமான விளை வைக் கொண்டுவரும் என்று யார் கண்டார்கள்? 

“டெவீனா நடந்ததையே திரும்பத் திரும்ப யோசித்தால் பைத்தியம்தான் பிடிக்கும்” ராகவன் அதட்டினான். 

”அன்ரோனியோ குடித்துக் கொண்டு அலட்டிக் கொண்டி ருப்பான் இப்போது பைத்தியமாகப் போகிறானேர், அது என்னாற்தானே நடந்தது” 

டெவீனா அழத் தொடங்கி விட்டாள். டெவீனா இப்படி அழுதது அவன் கண்டதில்லை. 

அவளையணைத்துக் கொண்டான். ஒரு குழந்தைபோல் அவள் அழ இவன் கண்களைத் துடைத்து விட்டான். 

தூரத்தில் இரண்டு கார்கள் மோதிக் கொண்ட சப்தம். யாரோ விபத்தில் அகப்பட்டிருப்பார்கள் போலும், வெளியில் கொஞ்சம் நேரம் ஆரவாரம். 

அவளையணைத்து அவள் பொன்னிறத் தலையைத் தடவி விட்டான். அவள் உடம்பு கொடியாய் அவனிற் துவண்டது. அவளின் ஸ்பரிசம் அவன் உடம்பில் அக்கினியை மூட்டிவிட் டது. அவள் இதழ்களின் தேன் அவன் உணர்வைத் திகட்டியது. 

அன்ரோனியோ குறட்டை விடுவது கேட்டது. அவனின் கதவைச் சாத்திவிட்டு வந்தான் ராகவன். தனக்குள் குடியிருந்த வேறு யாரோ விழித்துக் கொண்ட உணர்வு ராகவனுக்கு. இருபத்தைந்து வருடத்தின் திருப்பம் இன்றிரவு என்று மனம் சொல்லியது. 

சித்திரை மாத நிலவு வெட்கத்துடன் இவர்களை ஜன்ன லால் எட்டிப் பார்த்தது. நட்சத்திரங்கள் சம்மதத்துடன் கண் சிமிட்டின. 

“ஜ லவ் யூ சோ மச் ராகவன்” அவள் கிசு கிசுத்தாள். அதன் முழு அர்த்தத்திற்கும் விளக்கம் தேடும் நிலையில் அவன் இல்லை. உடம்பு தகித்தது. உள்ளம் பரபரத்தது. 

”நான் மிகவும் ஏழை” அவன் முணு முணுத்தாள். 

“தாஜ் மஹால் கேட்கமாட்டேன்” அவள் குரலில் குறும்பு. 

“நான் கருப்பன்” 

“நான் நிறங்களை ரசிப்பவள்” இருவரும் சிரித்தனர். “காதல் குழப்பத்தைத் தரும்” அவன் சொன்னான். “முழு மனிதம் என்பது காதலையுணர்வது. நான் ஒரு முழுமையான பெண்ணாக உன்னிடம் என்னை யர்ப்பணிக்கிறேன்” 

அவள் நேர்மை பேசியது. 

“நான் கொடுத்து வைத்தவன்”

“அது எனக்குத் தெரியாது.” 

அவளின் ஆடையற்ற உடம்பு பளிங்குச் சிலையாய் அவன் பார்வையைக் கலக்கியது. 

சாதி, சமய, நிற, மொழி, வர்க்க பேதங்கள் அந்தச் சங்கமத்தில் சிதறிப் பறந்தன. 

“ராகவன், இருபத்திரண்டு வயதில் ஆங்கிலப் பெண்கள் பலர் அனுபவமுள்ளவர்கள் என்று கேள்வி, ஐயம் எ வேர்ஜின், பிளிஸ் பி ஜென்டில்” அவளின் கெஞ்சலை அவனின் கொஞ்சல் அமைதிப் படுத்தியது. 

அத்தியாயம் – 15

மைதிலி ஜூலியட்டின் மரணத்தை அடிக்கடி விசாரித்தது அம்மாவுக்கு பயத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். 

“என்ன விசர் வேலை, நாங்கள் நாடோடிகளாக எத்தனை துன்பங்களை அனுபவிக்கிறோம், தற்கொலை செய்ய எல்லோரும் யோசித்தால் உலகத்தில் யாரும் மிஞ்சப் போவதில்லை” 

அம்மா சொன்னாள். அம்மாவின் பயம் முகத்தில் தெரிந் தது. ராகவன் கல்லூரிக்குப் புறப்பட்டான். காதல் சரிவரா விட்டால் மைதிலியும் இறந்து விடுவாளோ என்று அம்மா பயப்பட்டாள். “என்ன ஏதோ புது உலகம் கண்ட மனிதன் மாதிரி கண்களில் ஒரு வித்தியாசம் தெரியுதே என்ன” 

புவனா இவனை மேலும் கீழும் பார்த்தபடி சொன்னாள். அவன் புது உலகம் கண்ட அனுபவத்தை யாரிடமும் பங்கிடத் தயாரில்லை. டெவீனாவுடன் கழித்த சில இரவுகளின் பின் இன்று தான் கல்லூரிக்கு வந்திருக்கிறான். ஒரு புது உலகத்திலிருந்து பூமிக்கு வந்த உணர்வு அவனுக்கு. 

“என்ன அன்ரோனியோவுடன் சேர்ந்து நானும் விஸ்கி போட்டேன் என்று நினைக்கிறாயா” அவளின் கேள்விக்கு ஏதோ மறுமொழி சொன்னான். புவனாவைப் பார்க்காமல் சொன்னான். புவனா புதிர் தெரியாமல் விழித்தாள். அதிபர் மாணவர் அசெம்பிளியில் இறந்து போன ஜுலியட்டுக்காகத் தன் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார். 

மூன்றாம் வருட மாணவர்கள் தங்கள் கடைசி வருட படத் தயாரிப்பில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். ராகவனின் வகுப்பினர் பலர் உதவியாளர்களாகப் பல துறைகளில் பணி புரிந்தனர். 

அந்த வருட வசந்த காலத்தில் எடிட்டிங் அறைகளிலும் சவுண்ட் றெக்கோட்டிங் ஸ்ரூடியோக்களிலும் மாணவர் கூட் டம்; இரவும் பகலுமாக உழைத்தார்கள். 

படவிழா வழக்கம்போல் மிகவும் கோலாகலமாக ‘பாவ் ரர்’ தியேட்டர் என்ற இடத்தில் நடந்தது. 

மாணவர் தயாரிப்பில் லண்டனைச் சேர்ந்த சில கல்லூரிக ளுடன் போட்டி போட்டுக் கொண்டு இவர்கள் கல்லூரியும் நிறைய, நல்ல தயாரிப்புக்களை வெளியிட்டது. 

“அட கடவுளே இதையெல்லாம் பார்க்கப் பயமாக இருக்கிறது. அடுத்த வருடம் நான் இந்த நிலையில் இருப்பேன்” புவனாவின் பயம் தெளிவாகத் தெரிந்தது. 

“புவனா எதிர்காலத்தைப் பற்றிப் பயப்படாதே நம்பிக் கையுடன் இரு” டெவீனா சொன்னாள். 

”ஆமாம் நீ சொல்வாய்தானே. உனக்கென்ன படிப்பு முடிய பி.பி.சி.யில் நல்ல வேலை கிடைக்கும். நாங்கள் என்ன பண்ணலாம்? கறுப்பு, ஆசிய படத்தாயாரிப்பாளர்கள் லண்ட னில் படும் கஷ்டம் தெரியும்தானே? மூன்று வருடம் இந்தக் கல்லூரியில் நேரத்தை வீணாக்குவதை விட அம்மா சொன்னது போல் அக்கவுண்டன்ஸ் அல்லது எஞ்சினியரிங் செய்திருக்க லாமோ என்று யோசிக்கிறேன்” 

“புவனா இது உன் வாயிலிருந்துதான் வருகிறதா? நீ உறுதியான பெண் என்றல்லவா நினைத்தேன்” டெவீனா புவனாவைத் தட்டிக் கொடுத்தாள். 

அப்போது அவர்கள் ‘பாவ்ரர்’ பட விழாவிலிருந்து பிக்க டெலி அண்டர் கிரவுண்ட் ரெயின் எடுக்க வந்து கொண்டிருந் தார்கள். 

பிக்கடெலி சதுக்கம் வழக்கம்போல் இளைஞர்கள், ஊர் சுற்றிப் பார்ப்போர் என்போரால் நிறைந்திருந்தது. காதல் தெய்வம் ஈரோஸ் அம்புக்கணையுடன் சிலையாக அந்தச் சதுக்கத்தில் உயர்ந்து நின்றார். உல்லாச பூமியான லண்டனில் செல்வந்தர்களான அரேபியர்களின் படகுகள் போன்ற கார்கள் பகட்டாகப் போய்க் கொண்டிருந்தன. 

விபச்சார விடுதிகள் நிறைந்த ‘சோஹோ’ என்ற இடத்திற் குச் சிலர் தங்களை யாரும் அடையாளம் காணமாட்டார்கள் என்ற நினைவில் தலையைத் தாழ்த்தி, ஓவர்க் கோர்ட்டுக்குள் தங்களை மறைத்துக் கொண்டு திரிந்தார்கள். 

பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடுமா? 

“இந்த ஆண்களைக் கட்டி வைத்து உதைக்க வேணும்” புவனா வெடித்தாள். 

“வீட்டில் அன்பான மனைவியும் அழகான குழந்தைகளும் இருக்கும் மனிதர்கள் தான் இவர்களிற் பெரும்பாலானவர் களாக இருப்பார்கள்” புவனா தொடர்ந்தாள். 

“ஏன் இந்த ஆண்கள் மனைவிக்குத் துரோகம் செய்கிறார்கள்” டெவீனா கேட்டாள். 

“சுவையற்ற கல்யாணம், சுமையான குடும்பம். இவைகளிலிருந்து தப்ப இப்படி அலைகிறார்கள்” புவனா தொடர்ந்தாள். 

“ஏன் ஆண்களை மட்டும் திட்டுகிறாய். பெண்களும் தானே தங்கள் உடம்பை விற்பனை செய்கிறார்கள்” 

“டெவீனா பெரும்பாலான பெண்கள் வறுமையின் காரணமாகத்தான் இந்தத் தொழிலுக்கு வருகிறார்கள். இன்றைய கால கட்டத்தில் அபிவிருத்தி நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி யாகும் மூலப் பொருளில் இளம் பெண்களின் தொகையும் முக்கிய இடம் பெறுகிறது” 

“உலகத்தில் எப்போது ஒரு வறுமையற்ற சமுதாயம் உருவாகும்?” டெவீனா பெருமூச்சு விட்டாள். வறுமை, சாதிக் கொடுமை, பெண்ணடிமை என்பன டெவீனாவைத் துக்கப்படுத்தும் என்று யாருக்குத் தெரியும். 

“நீங்கள் வறுமை பற்றிப் பேச எனக்குப் பசிக்கிறது” ராகவன் முணு முணுத்தான். 

“உனது எதிர்காலப் படைப்புக்கள் உலகத்தில் வறுமையை ஒழிக்கத் தயாரிக்கப்படுமா” புவனா ராகவனைச் சீண்டினாள். 

“உலகத்தில் எத்தனையோ ஞானிகளும், சிந்தனையாளர்களும், புரட்சிவாதிகளும் செய்ய முடியாததை நான் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. ஆயிரக் கணக்கான வருடங்களாக உலகம் காணாத முன்னேற்றத்தைக் கடந்த ஐம்பது வருடங்களாக உலகம் கண்டு விட்டது. பெரும்பாலான விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கள் மனித நேயத்தை விரிவு படுத்துவதற்காக உதவுகிறதா எனக்குத் தெரியாது. 

இனி இல்லை என்ற நுண்ணிய, பெலம்வாய்ந்த பயங்கர மான போர்க்கருவிகளை இன்று மனிதன் கண்டு பிடித்திருக்கி றான். போர் ஆயுதங்கள் வில், அம்புக்கள் என்றில்லாமல் ஏவுகணைகளிலும் நச்சு வாயுக் குண்டுகளுமென்று உலக நாசத்திற்கே வழி காட்டுகிறது? காட்டையழிக்கிறான் மனிதன், கடலைக் குதறுகிறான், பிரபஞ்சத்தை நச்சுத் தன்மையால் நாசமாக்குகிறான் மனிதன். இவைகளின் கொடுமைகளின் தாக்கத்தை யார் தடுக்கப் போகிறார்கள். என் போன்ற இரு கலைஞர்களால் முடிந்த காரியமா?” 

ராகவன் தனது நீண்ட பேச்சை முடித்துக் கொண்டான். 

“இந்தக் கொடுமைகளைக் கண்டு வாய் பேசாமல் இருப் பதை விட எங்கள் எதிர்ப்பைக் காட்டுவதும் மனித அன்புக்கு நாங்கள் செய்யும் கடமையாக இருக்குமில்லையா” டெவீனா ராகவனின் பேச்சுக்கு ஆதரவாகச் சொன்னாள். 

பிலிப் வருவது தெரிந்தது. 

“டெவீனா உனக்கு விருப்பமான ஜாஸ் நிகழ்ச்சி ரொனி ஸ்கொட்டில் நடக்கிறது? வாயேன்” 

டெவீனா புவனாவையும் ராகவனையும் பார்த்தாள். 

”ஐயையோ என்னால் ரொனி ஸ்கொட் கிளப்புக்கு வர முடியாது.முட்டாள் பெண்ணே, மாணவர் ஊதியத்தில் என்ன வென்று இந்தக் கிளப்புகளுக்கெல்லாம் போக முடியும்” புவனா கூவத் தொடங்கிறாள். 

டெவீனா பிலிப்பைத் திரும்பிப் பார்த்தாள். 

“பட விழாவில் இன்றெல்லாம் திரிந்து நானும் களைத்துப் போய் விட்டேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடு’ பிலிப்பின் ஆவலான முகத்தில் தோல்வியின் சாயல் படிந்தது. 

“அன்பளிப்பு டிக்கெட்ஸ் என்னிடம் இரண்டு இருக்கிறது” பிலிப் கெஞ்சினான். வசதியான குடும்பத்து ஆங்கிலேயன். இருபத்தைந்து பவுண் கொடுத்துச் செல்லும் ரொனி ஸ்காட்டுக்கு வேறு எத்தனையோ தியேட்டர்களுக்கு அன்பளிப்பு டிக்கெட்ஸ் கிடைக்கலாம்.” 

“பிளீஸ் வேண்டாம், தயவு செய்து என்னைத் தொந்தரவு செய்யதே” 

டெவீனாவின் குரலில் கண்டிப்பு. 

பிலிப் சோர்ந்த முகத்துடன் போய்விட்டான்.

“பிலிப் உன்னில் மிகவும் பைத்தியமாக இருக்கிறான்”

புவனா கிண்டல் செய்தாள். 

“கிடைக்கமுடியாததைத் துரத்துவதில் ஆண்களுக்கு ஒரு ஆசை. எப்படியும் தங்களுக்குப் பிடித்ததை அடைய வேண்டும். அதிலும் தாங்கள் ஆசைப்படும் பெண்களை அனுபவித்து விடவேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு வந்து விட்டால் அதற்காக எந்தப் பொய்யும் சொல்வார்கள். ஜ லவ் யூ என்ற வசனத்தைச் சொல்லிவிட்டால் வாழ்க்கையை வளைத்துவிட்ட உணர்வு அவர்களுக்கு” 

டெவீனா பொரிந்து தள்ளினாள். 

“அடேயப்பா, இது என்ன திடீரென்று இப்படித் தத்துவங்கள் கொட்டுகின்றாளே. ஜேன் டார்வினா உனது குரு” 

புவனா ஆச்சரியப் பட்டாள். 

”யாரும் சொல்லித் தரவில்லை. பெண் சுதந்திரமாக நடக்க வெளிக்கிட்டால் அந்தச் சுதந்திரத்தைப் பாவித்துக் கொள்ள ஆண்கள் தயங்குவதில்லை. அதாவது சுதந்திரமான பெண் என்றால் படுக்கைக்கு வருவதைப் பெரிது படுத்த மாட்டாள் என்ற முட்டாள்தனமான கருத்து முற்போக்கு வாதிகள் என்ற போர்வையில் நடமாடும் போலிகளிடம் இருக்கிறது. பிற்போக்கு வாதிகளிடம் பழகிக் கொள்வது மிகவும் இலேசானது. அவர்கள் உலகத்தில் கடவுளும் கற்பும் என்ற பெயரில் சந்தர்ப்பம் வந்தால் எந்தப் பெண்களையும் அனுபவிக்கத் தயங்காதவர்கள். முற்போக்கு வாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு பெண்களைச் சுற்றுபவர்களை நம்பக்கூடாது. வெறும் வார்த்தைகளால் உலகத்தை மாற்றப் போவதாக உளறும் கனவான்கள் இவர்கள்” 

“இதோ பார் டெவீனா, சினிமாக் கொலிச்சுக்கு வரும் போது நீ நன்றாகத்தானேயிருந்தாய். என்ன இப்போது உலகத்துக் கொடுமைகளையெல்லாம் உடைத்தெறியும் புரட்சிப் பெண்ணாக மாறிவிட்டாய்” 

புவனா ஆச்சரியத்துடன் கேட்டாள். 

ராகவன் ஒன்றும் சொல்லாமல் இந்தப் பெண்களின் தர்க்கத்தைக் கேட்டுக் கொண்டு வந்தான். தூரத்தில் I.C.A என்ற இடத்தில் மைக்கல், ஸ்ரீவன் காத்திருப்பார்கள் என்று ஞாபகம் வந்தது. 

”புவனா I.C.A யுக்குப் போவோமா” ராகவன் கேட்டான். 

“நான் களைத்துப் போய்விட்டேன். அத்தோடு இன்று றிச்சார்ட் அம்மாவிடம் போய்விட்டு வருகிறான். ஏன் இந்த இந்தியப் பெண்ணுடன் சுற்றுகிறாய் என்று அவன் அம்மா ஒப்பாரி வைத்திருப்பாள். றிச்சார்ட் களைத்துப் போய் வந்தி ருப்பான். ஓடிப்போய் அவனுள் புதைந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது” புவனாவின் குரலில் காதல் கரைந்து பிக்கடெலி சதுக்கத்தில் வடிந்தது. 

புவனாவை ஸ்ரேசனில் சேர்த்துவிட்டு ராகவனும் டெவீ னாவும் I.C.A கட்டிடத்திற்குப் போகும் வழியில் நடந்து கொண்டிருந்தாள். 

“என்ன பேசாமல் வருகிறாய்” டெவீனா ராகவனைக் கேட்டாள். 

“ஏனோ இன்று நான் உனது வித்தியாசமான கருத்துக்க ளைக் கேட்டதால் ஆச்சரியப்பட்டுப் போய் விட்டேன்” 

“என்ன சொல்கிறாய்” 

“உன்னை இன்னும் அதிகம் புரிந்து கொண்டேன்” 

“எனக்குத் தெரியாது. எங்களை எங்களுக்கே முற்றும் புரியாது. புரிந்து கொள்ளக் கிடைக்கும் சந்தர்ப்பங்களால் நாங்கள் நடந்து கொள்ளும் விதத்தை முன்வைத்து எங்களை நாங்கள் கணித்துக் கொள்கிறோம், ஆனால் அது முழுக்க முழுக்க எங்களை நாங்கள் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகாது. நாங்கள் சமுதாயத்தில் மிகவும் புத்தியுள்ள மிருகங்கள் என்று நினைக்கிறேன். எங்களைத் திருப்திப் படுத்திக் கொள்ள எங்களுக்குப் பிடித்த தத்துவங்களில் தொங்கிக் கொண்டிருக்கி றோம் என்று நினைக்கிறேன்”. 

ராகவனுக்கு அவளில் இன்னொருத்தியோ, பலரோ இருப் பதாக உணர்ந்தான். வீட்டில் மைதிலி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுபோல் இந்தப் பெண்ணும் அடிக்கடி இவனை ஆச்சரியப் படுத்துகிறாள். 

அவன் அதை ரசித்தான். அவளை அறிந்து கொள்ளும் ஒவ்வொரு கோணத்திலும் அவள் மிகவும் ரசிக்கக் கூடிய பெண்ணாகத் தெரிந்தாள். 

அவனுடையவனாக இருப்பது தனது அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டான். 

அந்த அன்பில் அவளை இறுக அணைத்துக் கொண்டான். ”உனக்குப் பிலிப்பில் பொறாமையில்லையா” அவள் மெல்ல அவன் காதில் கிசு கிசுத்தாள். 

“ஏன் பொறாமைப் பட வேண்டும்” 

“அவன் என்னைச் சுற்றுகிறான். சாதாரண ஆண்களுக்கு வரும் பொறாமை உனக்கில்லையா” 

அவனுக்கு உடனடியாக மறுமொழி சொல்லத் தெரிய வில்லை. பொய் சொல்லவும் தயாராகவில்லை. 

”நான் உன்னை இந்த வினாடி ரொம்பவும் காதலிக்கிறேன். இந்த உணர்வு எப்போதும் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கு இடையூறாக ஏதும் நடந்தால் எப்படி நடந்து கொள்வோனோ தெரியாது” 

“மற்ற ஆண்களைப் போல் என்னைச் சிறையில் போட்டு வதைக்க மாட்டாயே” 

அவள் குழந்தை போன்ற கெஞ்சலுடன் கேட்டாள். அவனுக்குப் புரியவில்லை. இவன் ஒரு தமிழன், கல்யாணச் சிறையில் தள்ளத்தான் பார்ப்பான் என்று அவள் அடிமனத்தில் பயம் இருக்கிறதா? 

I.CA கட்டிடத்தின் வாயிலில் மைக்கல், ஸ்ரீவனுடன் காத்திருந்தான். மைக்கலின் கண்கள் கஞ்சா வெறியில் சிவந்து கனிந்து பழுத்துப் போய்க் கிடந்தது. 

“முட்டாள் இப்படிக் கஞ்சாவைக் காதலிக்கிறாயே உரை மூளை என்னமாதிரி தாங்கும்” ராகவன் அன்புடன் கடிந்து கொண்டான். 

“உனது காதல் உன் மூளையைப் பைத்தியமாக்கியிருப் பதை விட எனது கஞ்சா ஒன்றும் என்னை நாசமாக்கி விடாது” தத்துவம் பேசினான் கஞ்சா ஞானி. 

ஸ்ரீவன் இவர்கள் இருவரையும் பார்த்து ரசித்தான். ‘ஏய் முட்டாள் ராகவனே, காதற் பைத்தியம் அன்ரோனியோவை என்ன வாக்கியது என்று தெரியும்தானே. கவனம். அதுவும் வெள்ளைக் காரப் பெண்களுடன் கவனமாக இருக்க வேண் டும். அவர்கள எங்கள் பெண்கள் போல எதையும் பொறுத்துக் கொள்ள மாட்டாள். புவனா சொன்னாளே உனது கலாச்சாரத்தில் கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன் என்று பெண்கள் நடக்க வேண்டுமாம் உண்மையா” 

ராகவன் சிரித்தான். அதே கனம் தமக்கை கீதாவும் மைத்துனர் மகாலிங்கமும் ஞாபகத்தில் வந்தார்கள். நினைவு தரித்தது. கீதா ‘சந்தோசம்’ என்ற போர்வையில் எப்படி மகாலிங்கத்துடன் பெரும்பாலான நேரங்களில் போலியாக வாழ்கிறாள் என்று தெரிந்தது. 

அந்த வருடம் இலங்கையில் நடந்த மாற்றங்கள் ஆனந் தனை மிகவும் பாதித்திருந்தது. இலங்கையில் தமிழருக்குச் சிங்களவர் செய்யும் கொடுமைகளைத் தாங்காத இந்திய அரசாங்கம் அமைதிப் படையை அநுப்பியிருந்தது. 

ஏதோ ஒரு விதத்தில் இலங்கைப் பிரச்சினைக்கு விடிவு கிடைக்கும் என்று நம்பியிருந்த லட்சக்கணக்கான தமிழர்கள் குழம்பிப் போய் விட்டார்கள். 

இலங்கை அரசியல் மிகவும் சிக்கலான உருவில் வளர்ந்து கொண்டிருந்தது. 

ஆனந்தன் ஊருக்குப் போக ஆயத்தம் செய்து கொண்டிருந் தான். “அன்னிய நாட்டில் ஏதோ செய்து வாழ்ந்து கொண்டிருப்பதை விட சொந்த நாட்டில் செத்துப் போனாலும் பரவாயில்லை” விரக்தியுடன் சொன்னான் ஆனந்தன். 

மைதிலியில் அவன் வைத்திருந்த அன்பு தோல்வியடைந்ததன் தாக்கம் ஒரு புறம் ஆங்கில நாட்டின் இன ஒதுக்கலுக்கு முகம் கொடுக்க முடியாதது மறுபுறம், ஆனந்தனை வதைத்துக் கொண்டிருந்தது என்று ராகவனுக்குத் தெரியும். 

வீட்டில் மைதிலியும் அம்மாவும் தேவையில்லாமல் ஒரு பேச்சும் வைத்துக் கொள்ளாத அளவுக்கு அவர்கள் உறவு குறுகியிருந்தது. 

மைதிலியுடன் நேரடியாகப் பேசி அவள் என்ன நினைக்கி றாள் என்று அறியும் யோசனையும் ராகவனுக்குச் சரியாகப் படவில்லை. 

கீதாவும் மகாலிங்கமும் மைதிலியை ஒதுக்கி நடத்துவதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. தன்னையும் மைதிலியையும் அம்மாவும் மற்றவர்களும் தமிழ்க் கலாச்சாரத்தை அவமதிக்கும் விதத்தில் நடப்பதாக மறைமுகமாகப் பேசுவதும் அவனுக்குத் தெரியும். 

சந்தர்ப்பங்கள் என்னவென்று மனிதர்கள் பிரித்து வைக்கிறது என்பதை அவன் தன் நிலையில் வைத்துப் பார்த்தான். 

மைதிலியை அம்மாவும் மற்றவர்களும் ஒதுக்கி நடத்துவது போல் நாசர் வீட்டிலும் அவனைக் கோபமாக நடத்தமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? 

டெவீனாவின் தாய் இன்னும் ஹாஸ்பிட்டலில் இருக்கிறாள். நீண்ட நாளையச் சிகிச்சை தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெவீனாவின் தகப்பன் ராகவனைச் சந்தித்தால் எப்படி நடந்து கொள்வார்? அவனுக்குத் தெரியாது.

– தொடரும்…

– அவனும் சில வருடங்களும் (நாவல்), முதல் பதிப்பு: ஜூலை 2000, குமரன் பப்பிளிஷர்ஸ், சென்னை.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *