பேயுடன் சில நாட்கள்

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: October 30, 2018
பார்வையிட்டோர்: 148,754 
 

வாசுதேவனுக்கு சொந்த ஊர் அம்பாசமுத்திரம்.

பி.ஈ. படித்து முடித்ததும் சென்னை வேளச்சேரியில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் டேட்டா சென்டர் இஞ்ஜினியராக வேலை கிடைத்தது.

வேளச்சேரியின் ஒதுக்குப் புறத்தில் ஒரு புதிய வீடு எடுத்து தனியாகத் தங்கி சமைத்துச் சாப்பிட்டான். அதன் ஓனர் மாடியில் இருந்தார். இரவு பத்து மணிக்குள் வீட்டுக்கு வந்து கேட்டைப் பூட்டி விடவேண்டும்; வீட்டில் சிகரெட் பிடிக்கக் கூடாது போன்ற பல கண்டிஷன்கள் போட்டு வீட்டை வாடகைக்கு கொடுத்தார்.

அவன் அந்த வீட்டுக்கு குடியேறிய புதிதில் பக்கத்து, எதிர் வீட்டினர் அவனை அதிசயமாகப் பார்த்தனர். ஆனால் வாசுதேவன் தான் உண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக காலத்தை ஓட்டினான்.

அவனுக்கு இருக்கும் ஒரே தலைவலி அவனுடைய பாஸ் தியாகராஜன்தான். அவன்தான் டேட்டா சென்டர் மானேஜர். சனி, ஞாயிறுகளில் கூட ஆபீஸ் வரச்சொல்லி ஏதாவது வேலை கொடுத்து உயிரை வாங்குவான். விடுமுறை நாட்களில் பல சமயங்களில் குடித்துவிட்டு ஆபீஸ் வருவான்.

ஆனால் வாசுதேவன் மிகவும் பொறுமையாக அவனிடம் வேலைகளை கற்றுக்கொண்டான். முன்னுக்கு வர வேண்டும் என்கிற முனைப்பு அவனுள் அதிகம் இருந்தது.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. இரவு எட்டு மணியிருக்கும்.

வாசுதேவன் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தான். வெளியே மழை பிசுபிசுவென தூறிக்கொண்டிருந்தது.

சமைத்ததை டேபிளின் மேல் வைத்துவிட்டு, சாப்பாட்டுத் தட்டை எடுக்க அலமாரியைத் திறக்கும்போது கரண்ட் போய்விட்டது. சற்று நேரத்தில் வந்துவிடும் என்று வீட்டின் கதவைத் திறந்து வைத்து வாசலில் நின்றான். எங்கும் ஒரே இருட்டு மயம்.

எட்டரை மணிக்கு கரண்ட் வந்தது. சாப்பிட வீட்டுக்குள் வந்தபோது டேபிளின் மேல் தட்டு நன்றாகக் கழுவி வைக்கப் பட்டிருந்தது. தட்டில் ஈரம் இருந்தது.

வாசுதேவன் சற்று பயந்தான். மிகுந்த பசியினால் ஒருவேளை தானே தட்டைக் கழுவி வைத்ததை மறந்து போயிருக்கலாம் என்று சமாதானப் படுத்திக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

பத்து மணிக்கு கட்டிலின்மேல் படுத்துக்கொண்டான். மழை விடாது தூறிக்கொண்டிருந்தது. தூக்கம் வரவில்லை.

பதினோரு மணிவாக்கில் மறுபடியும் கரண்ட் போய்விட்டது. அந்தத் தெருவே ஒரு அமானுஷ்ய அமைதியில் இருந்தது.

சற்று நேரத்தில் வாசுதேவனின் தலை மயிரை யாரோ பிடித்து இழுப்பதைப் போன்று இருந்தது. கரண்ட் வேறு இல்லை. திரும்பிப் படுத்தான். மறுபடியும் அவனுடைய தலை மயிர் இழுக்கப்பட திடுக்கிட்டு பயந்த குரலில், “யாரது…?” என்று அலறியபடி எழுந்து நின்றான்.

அவனருகே மிக மெல்லிய பெண்குரல் ஒன்று, “வாசு… ப்ளீஸ் பயப்படாத. நான் உனக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டேன்.” என்றது.

வாசுதேவனுக்கு உடல் வியர்த்து, பேச முடியாமல் நாக்கு ஒட்டிக்கொண்டது.

மிகுந்த சிரமப்பட்டு “யா… யார் நீ?” என்றான்.

“பதட்டப் படாதே. என் பெயர் கவிதா. நான் ஒரு பேய். நான் மூன்று வருடங்களுக்கு முன் இதே வீட்டில், இதே அறையில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டேன். தற்போது உன்னால் எனக்கு ஒரு உதவி வேண்டும்…”

“ஒ… ஒரு பேய்க்கு நான் என்ன உதவி செய்துவிட முடியும்? ஒருவேளை நான் உனக்கு உதவி செய்ய மறுத்தால்?”

“ப்ளீஸ் என்னை நம்பு. என்னால் உனக்கு பல உதவிகள் செய்யமுடியும் வாசு. எனக்கு இந்த உதவியை செய்யாவிட்டால் நீ இறக்க நேரிடும். நீ நல்ல பையன். உன் உயிரை விடாதே..”

வாசுதேவன் பயந்தபடியே யோசித்தான்.

“சரி… என்ன வேண்டும் சொல்…”

“அடுத்த சனிக்கிழமை உன்னுடைய பாஸ் தியாகராஜனை நீ இந்த வீட்டுக்கு அழைத்து வர வேண்டும். அவனை குடிக்க வைக்க வேண்டும். மற்றதை நான் பார்த்துக் கொள்வேன்….”

“………………………..”

“எதையும் யோசிக்காதே… நான் சொன்னதைச் செய்.” பேய் அதட்டியது.

“என்னிடம் ஒரு கெட்ட பழக்கம்கூட கிடையாது.”

“அது எனக்குத் தெரியும்….அடுத்த மூன்று நாட்களில் இரண்டு ‘அம்ருத்’ விஸ்கி பாட்டில்கள் க்ளாஸ்களுடன் இந்த வீட்டில் வைக்கப் பட்டிருக்கும்.”

“சரி…தியாகுவை என்ன செய்யப் போகிறாய்?”

“நான் அவனை அன்று இரவே கொன்று விடுவேன்….”

“கொ…கொலையா?”

“ஆமாம். அவனை நான் இதே வீட்டில் பழிக்குப் பழி வாங்கி விடுவேன். அப்போது நீ இந்த வீட்டில் இருக்க மாட்டாய். அன்று இரவு நீ உன் ஆபீஸில் இருக்கும்படி ‘அலிபி’ தயார்செய்து கொள்ளலாம். பயப்படாதே. போலீஸ் உன்னை நம்புவார்கள். உனக்கு எந்தச் சங்கடமும் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு.”

“எதற்காக தியாகுவை கொலை செய்யப் போகிறாய்?”

“எல்லாவற்றையும் மெதுவாகச் சொல்லுகிறேன் கேள்… நாளைக்கு சனிக்கிழமைதானே… உனக்கு ஆபீஸ் கிடையாது. மெதுவாக எழுந்திருக்கலாம். தியாகராஜனும் திருப்பதி போயிருக்கிறான்.”

“உனக்கு எப்படித் தெரியும் அவன் திருப்பதி போனது?”

“அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன்…”

அப்போது கரண்ட் வந்தது. குரல் வந்த திசையில் யாருமே இல்லை. வாசுதேவன் பயந்தான்.

“பயப்படாதே…நான் உன் அருகில் அரூபமாக இருக்கிறேன். அதனால் என்னை யாரும் பார்க்க முடியாது….”

“சரி. எனக்கு முதலில் இருந்து எல்லாவற்றையும் சொல்.”

“நானும் தியாகராஜனும் மூன்று வருடங்களாகக் காதலித்தோம். உன்னோட கம்பெனிக்கு எதிரே இருக்கும் ஹெக்ஸ் சாப்ட்வேர் கம்பெனியில் நான் அப்போது இஞ்சினியராக ஒர்க் பண்ணேன். என்னை திருமணம் செய்துகொள்வதாக ப்ராமிஸ் பண்ணினான். இதே வீட்டில் நான் அப்போது வாடகைக்கு இருந்தேன். இதே வீட்டில் நான் அவனிடம் என் கற்பை இழந்தேன். அவன் என்னை ஏமாற்றியதால் இதே அறையில் நான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டேன்…”

ஓஹோ அதனால்தான் தெருக்காரர்கள் தன்னை அதிசயமாகப் பார்க்கிறார்கள் போலும் என்று எண்ணிக்கொண்டான்.

“அவனைக் கொல்வது எனக்கு மிக எளிது. ஆனால் இதே இடத்தில் அவன் சாவதுதான் எனக்கு பழி வாங்கிய திருப்தி கிடைக்கும்…”

“எனக்கு பேய், பிசாசு பற்றி எதுவும் தெரியாது…”

“சொல்கிறேன் கேள்… இயற்கையான மரணத்திற்கு முன் ஒருவர் விபத்திலோ; கொலையுண்டோ; தற்கொலையாலோ இறந்து விட்டால் – அவர்கள் மறுபடியும் பதிமூன்றாவது நாளில் ஆவியாகப் பிறந்து இயற்கையான மரணத்தேதி வரை ஆவியாக அலைவார்கள். அவர்கள் பெண்ணாக இருந்தால் பேய்; ஆணாக இருந்தால் பிசாசு…. இறந்த இடத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரம் வரை ஆவிகள் வீரியமாக அலையும். மனிதர்கள்; பேய்கள்; பிசாசுகள் இவற்றின் அலைவரிசைகள் (frequency) வெவ்வேறு. இதில் முக்கியமானது விபத்தில் இறந்த ஆவிகள் மனிதர்களுக்கு பொதுவாக நன்மைகளே செய்யும். ஆனால் கொலையுண்டோ, தற்கொலையாலோ இறந்த மனிதர்களின் ஆவிகள் பழிவாங்கும் நோக்கத்துடன் அலையும். அதனால்தான் என் சாவிற்கு காரணமான தியாகுவை இதே இடத்தில் கொல்லத் துடிக்கிறேன்…இதற்கு நீ ஒப்புக்கொள்ளா விட்டால் உன் கதையை முடிக்கத் தயங்க மாட்டேன்.” குரலில் அதிகாரம் தொனித்தது.

“நா நான் ஒப்புக் கொள்கிறேன்…”

திங்கட்கிழமை ஆபீஸ் சென்ற வாசுதேவன் எதிரே இருந்த ஹெக்ஸ் சாப்ட்வேர் கம்பெனி ரிசப்ஷன் சென்றான்.

“ஐ வான்ட் டு மீட் கவிதா..”

“நீங்கள் யார்?”

“கவிதாவுடன் ஒன்றாகப் படித்தேன். மூன்று வருடங்கள் அமெரிக்காவில் இருந்துவிட்டு போனவாரம்தான் சென்னை திரும்பினேன்… “

“வெரி சாரி… ஷி இஸ் நோ மோர்..”

“வாட் ஹாப்பண்ட்?

“சூயிசைட்.”

வெளியே வந்தான். பேயின் கூற்று உண்மைதான்.

வீட்டிற்கு வந்தபோது இரண்டு அம்ருத் விஸ்கி பாட்டில்களும், கண்ணாடி கிளாஸ்களும் வைக்கப் பட்டிருந்தன.

புதன்கிழமை இரவு அந்தப் பேய் மறுபடியும் வந்தது.

“உன் சித்தப்பா இரண்டு பாட்டில்கள் விஸ்கி கொடுத்ததாகவும், அதை குடிக்க சனிக்கிழமை வரச்சொல்லி நாளையே தியாகராஜனுக்கு அழைப்பு விடு…”

“சரி…ஆனால் அவனுக்கு இந்த வீடு ஏற்கனவே பரிச்சயமானதால் இங்கு வரமாட்டானே?”

“வருவான். இரண்டாயிரத்துப் பதினைந்து நவம்பரில் சென்னையில் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளத்தில் இந்தத் தெருவே மாறிவிட்டது. இந்த வீடு முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு தற்போது வேறுமாதிரி காட்சி தருகிறது…. எனவே அது பற்றிய கவலை வேண்டாம்…”

“சரி.”

“நான் ஏற்கனவே கற்பை இழந்தவள்தான். நீ தூங்குவதற்கு முன் ஏதாவது சரீர ஒத்தாசை வேண்டுமா? கூச்சப்படாதே. என் அரூபத்தை நீ வசதியாக முயங்கலாம்…”

“ச்சீ… என்னைக் கேவலப்படுத்தாதே.”

“ஓகே. சனிக்கிழமை மீண்டும் பார்க்கலாம்…”

சனிக்கிழமை…

இரவு எட்டு மணிக்கு தியாகராஜன் வந்தான். அம்ருத் விஸ்கியை ஆசையுடன் பருகினான். கவிதா அரூபமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான்கு பெக்குகள் உள்ளே போனதும் அவனுடையை மொபைல் கவிதாவால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. மொடாக் குடியன் என்பதால் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தான்.

பத்து மணிக்கு வாசுதேவன் மொபைல் சிணுங்கியது.

ஆபீஸ் செக்யூரிட்டி பதட்டத்துடன், “சார்…டேட்டா சென்டரில் புகை வருது. தியாகு சார் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கு.” என்றான்.

“சரி நான் உடனே வரேன். மீன்ஒய்ல் நெருப்பை அணைக்கப் பாருங்க…”

வாசுதேவன் ஹவுஸ் ஓனரிடம் சென்று, எமர்ஜென்சியினால் ஆபீஸ் செல்வதாகவும்…வீட்டினுள் தன்னுடைய மானேஜர் இருப்பதாகவும் சொல்லிவிட்டு ஆபீஸ் விரைந்தான்.

அது மிகச் சிறிய ஷார்ட் சர்க்யூட். டேட்டா சென்டரை சரிசெய்துவிட்டு வாசுதேவன் இரவு ஒன்றரை மணிக்கு வீடு திரும்பினான்.

வீட்டின் வாசலில் போலீஸ் இருந்தது. ஏகப்பட்ட கூட்டம். பதட்டத்துடன் உள்ளே நுழைந்தான். அங்கு தியாகுவின் உயிரற்ற உடல் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. மூக்கில் ஏராளமான ரத்தம்.

கவிதா அவன் காதில், “தியாகுவை துடிதுடிக்க தூக்கிலிட்டேன். உனக்கு மிக்க நன்றி. பயப்படாதே…இனி நான் உன்னைத் தொந்திரவு செய்யமாட்டேன். ஆனால் என்ன உதவி வேண்டுமானாலும் என்னை நீ நினைத்தால் நான் ஓடோடி வருவேன்.” என்றாள்.

தியாகுவின் உடலை போலீஸ் போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பியது. நிறைய குடித்து தற்கொலை செய்துகொண்டதாக முடிவானது.

வாசுதேவன் இரண்டாவது நாளே தன்னுடைய ஜாகையை பாலவாக்கத்திற்கு மாற்றிக் கொண்டான்.

அடுத்த வாரம் அவனுடைய எம்டி அவனை மானேஜராக ப்ரொமோட் செய்தார். பேய்க்கு மானசீகமாக நன்றி சொன்னான். புதிய பொறுப்புகள்; புதிய வீடு என வாசுதேவன் சந்தோஷத்தில் மிதந்தான். பெற்றோர்களுக்கு போன் செய்து தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டான்.

அன்று அவன் தன்னுடைய ப்ரோமோஷனுக்காக அலுவலக நண்பர்களுக்கு பெரிய டின்னர் கொடுத்தான். வீடு திரும்ப இரவு ஒரு மணியாகி விட்டது. மிகவும் களைப்புடன், போட்டிருந்த உடையுடன் கட்டிலில் சாய்ந்தான்.

தியாகராஜன் இறந்த பதிமூன்றாவது நாள் அது.

நான்கு மணி வாக்கில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த வாசுதேவனின் கால்கள் வேகமாக இழுக்கப்பட்டன. அலறியபடி கீழே விழுந்தான்.

“நீதான் தியாகராஜனை கொன்று விட்டாயே… இனி நமக்குள் எந்த உறவும் கிடையாது. என்னை நிம்மதியாக வாழவிடு ப்ளீஸ்…”

“நான் அவ இல்லடா. மவனே உன்னைக் கொல்லாம விட மாட்டேண்டா… என்னைக் காண்பித்துக் கொடுத்த துரோகி நீ…”.

மிக அருகே அரூபமான தியாகராஜனின் குரல்.

ஓ காட். தியாகராஜன் இப்போது பிசாசாக….

உடனே வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் இறங்கி ஓடினான்.

மின்சார ரயில் நிறுத்தத்தில் மற்றவர்களுடன் போய் நின்றுகொண்டு கவிதா பேயை நினைத்து வேண்டிக்கொண்டான்.

சற்று நேரத்தில் கவிதா அரூபமாக வந்து, “என்ன இந்த நேரத்தில் இங்கு?” என்றாள்.

குரலில் அழுகை பொங்க, “தியாகராஜன் என் வீட்டிற்கு அரூபமாக வந்து என்னைக் கொலை செய்யப் பார்த்தான்…நான் தப்பித்து இங்கு ஓடி வந்தேன்” என்றான்.

“ஓ காட்… நான் இந்த ஆங்கிளில் யோசிக்கவேயில்லை வாசு. அவன் இப்போது பிசாசாக மாறி உன்னைக் கொல்லத் துடிக்கிறான். வேறு வேறு அலைவரிசை என்பதால் ஐ கான்ட் ஹெல்ப் யூ. அவன் இறந்த இடத்திலிருந்து நூறு கிலோமீட்டர் ரேடியசில் நீ தனியாக இருந்தால் உன்னைக் கொன்று விடுவான். எனவே நீ இப்படியே மின்சார ரயிலில் ஏறி ஏர்போர்ட் சென்று கிடைக்கும் ப்ளைட்டில் ஏறி நூறு கிலோமீட்டருக்கு அப்பால் சென்று விடு… ப்ளீஸ்.”

வாசுதேவனுக்கு பயத்தில் உடல் வியர்த்தது.

நல்லவேளையாக பர்ஸில் பணமும் கிரிடிட் கார்டும் இருந்தது. உடனே ட்ரெய்ன் பிடித்து ஏர்போர்ட் சென்றான். காலை விமானத்தில் தூத்துக்குடிக்கு ஒரு டிக்கெட் வாங்கிக்கொண்டு ஏர்போர்ட்டிலேயே காத்திருந்தான். .

அவன் காதில், “மவனே இப்ப நீ தப்பிச்ச. ஆனா எப்ப நீ சென்னைக்கு வந்தாலும் உனக்கு சங்குதான்…” தியாகுப் பிசாசு உறுமியது.

வாசுதேவன் ப்ளைட்டில் தூத்துக்குடி சென்று, ஒரு டாக்ஸி பிடித்து அம்பாசமுத்திரம் சென்றான். வீடு போய்ச் சேர்ந்த பிறகுதான் சற்று நிம்மதியடைந்தான்.

நல்ல வேலை போயிற்று… ஆனால் அவன் உயிர் தப்பியது.

நிம்மதியாக விவசாயத்தைக் கவனிக்கலானான்.

Print Friendly, PDF & Email

5 thoughts on “பேயுடன் சில நாட்கள்

  1. Sir intha Story. Use pannalama sir..short flim ku… Unga blessings veanum. I impress this jonor.. Sir

  2. ஐயோ பாவம்! தியாகு எப்போ சாகிறது? வாசு எப்போ சென்னை போகிறது? வாழ்த்துகள் கண்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *