அத்தியாயம்:௩ – துரோகி | அத்தியாயம்:௩ – திசை மாறிய பயணம் | அத்தியாயம்: ௪
அன்று மத்தியானம் மேக மூட்டமாயிருந்தது. காற்றின் வேகம் அதிகமாகிப் புயலாகிக் கொண்டிருந்தது. கப்பலைக் கவிழ்த்து விடுவது போல் கடல் பரப்பு ஏறிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அனைவருக்கும் உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. காற்றில் துர் நாற்றம் அடித்தது. இருபத்து நான்கு மணி நேரமும் நான் முறை கோபுரத்தை விட்டு இறங்கவில்லை ஓல்சன் ப்ராட்லி இருவருக்குமே பிணி ஏற்பட்டதால். இறுதியில் நான் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்று எண்ணினேன். யாராவது கிடைப்பார்களா என்று தேடினேன். பென்சன் ஒத்துக்கொண்டான். அவன் பாதிப்படையாமல் இருந்தான். இரண்டு வருடங்களுக்கு மேலாக அவன் நீர் மூழ்கிக் கப்பலில் இந்த வேலை பார்த்திருப்பதாகக் கூறினான். அவன் மேல் முழு நம்பிக்கையும் இருந்ததால் எனக்கு அவன் வந்தது மகிழ்ச்சியாகவே இருந்தது. அதனால் ஒரு பாதுகாப்புணர்வோடு நான் கீழே தூங்குவதற்காகச் சென்றேன்.
நான் பனிரெண்டு மணி நேரம் தொடர்ச்சியாக உறங்கினேன். எழுந்தவுடன் நான் என்ன செய்திருக்கிறேன் என்று புரிந்தவுடன் நேராக முறை கோபுரத்தை நோக்கிச் சென்றேன். பென்சன் அங்கு கொட்டக் கொட்ட விழித்திருந்தான். கவராயம் மேற்கு திசையை காட்டிக் கொண்டிருந்தது. புயல் இன்னும் ஓய்ந்த பாடில்லை. நாலாவது நாளாக அதன் கொட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது. எப்போது மேல் சென்று தூய்மையான புதிய காற்றை சுவாசிக்கப் போகிறோம் என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். இந்த நான்கு நாட்களும் அவள் தன் அறையிலேயே இருந்தாள். வேறெந்த அசம்பாவிதமும் நடந்திருக்கவில்லை. அதனால் சூழ்நிலை காரணங்கள் அவள் மீது சந்தேகத்தை அதிகரித்த வண்ணம் இருந்தன.
புயல் குறைந்து ஆறு நாட்கள் ஆகியும் பருவ நிலை இன்னும் மோசமாகத்தான் இருந்தது. கதிரவன் ஒரு தடவை கூட எட்டிப் பார்க்கவில்லை. ஜூன் மாத நடுவில் இந்தப் பருவ நிலை ரொம்ப மோசம்தான். தெற்கு கலிபோர்னியாவில் இருந்ததால் எனக்கு இதெல்லாம் சாதாரணம்தான். சொல்லப் போனால் உலகில் எல்லா இடங்களிலும் மோசமான வானிலை ஒரு வருடத்தின் எல்லாக் காலங்களிலும் இருக்கத்தான் செய்கிறது.
நாங்கள் சீராக மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். இந்த U-33 என்ற கப்பல்தான் நாங்கள் கட்டியதில் மிக வேகமானது. இந்நேரம் வட அமெரிக்கக் கடல் எல்லையைத் தொட்டிருக்க வேண்டும். கடந்த ஆறு நாட்களாக வேறெந்தக் கப்பலும் இதுவரை கண்ணில் படாததுதான் எனக்கு மிகவும் புதிராக இருந்தது. அட்லாண்டிக் கடலையே அமெரிக்கக் கடற்கரை ஓரமாக எந்தக் கப்பலையும் புகையையும் பார்க்காமலேயே கடந்து சென்று விடலாம் என்று எண்ணும் போது எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. இறுதியில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். உறுதியாக நாம் நம் வழியில் இருந்து விலகித்தான் செல்கிறோம். ஆனால் அது வடக்கு நோக்கியா இல்லை தெற்கா என்றுதான் புரியவில்லை.
ஏழாவது நாள் அதி காலை கடல் மிகவும் அமைதியாக இருந்தது. ஆனால் விண் மீன்கள் தெளிவாகத் தெரியாத அளவு மூட்டமாக இருந்தது. ஆக நாளை எப்படியும் தெளிவாகி விடும் என்ற நம்பிக்கையை விதைத்தது. நான் மேல் தளத்தில் நின்று கதிரவன் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். துளைத்துச் செல்ல முடியாத பனி மூட்டத்தின் மேல் கப்பலின் பின் புறம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கிழக்கில் நான் தான் கதிரவன் ஒளிக் கீற்றை முதலில் பார்க்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன். அது உறுதி ஆனால்தான் நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பது தெளிவாகும். ஆகாயத்தில் மெல்ல ஒளி படர்ந்தது. ஆனால் கப்பலின் பின் புறத்தில் இருந்து திரளான ஒளிக் கற்றை தென்படவே இல்லை. அப்படி வந்தால்தான் கதிரவன் வருவதற்கான அடையாளம். ப்ராட்லி என் அருகில் இருந்தான். என் கையைத் தொட்டபடிச் சொன்னான்.
“அங்கே பாருங்கள் மீகாமன்.” என்று தெற்குப் பக்கம் கையை நீட்டினான்.
எனக்கு அதைப் பார்த்தபின் ஒரு கணம் மூச்சே நின்று விட்டது. சரியாக இடது புறத்தில் மூட்டத்தின் உள்ளிருந்து கதிரவனின் மேல் புறம் எழுந்து கொண்டிருந்தது. நான் உடனே கோபுரத்தை நோக்கி ஓடிச் சென்று கவராயத்தைப் பார்த்தேன். அது நாங்கள் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்ததாய்க் காட்டியது. கதிரவன் தெற்கில் உதித்திருக்க வேண்டும் இல்லையேல் இந்தக் கவராயத்தை யாரோ பழுதாக்கி இருக்க வேண்டும். இரண்டில் எதுவென்று சொல்லவே தேவை இல்லை.
நான் ப்ராட்லியிடம் சென்று கண்டுபிடித்ததைக் கூறினேன். “இன்னும் ஒரு 500 காதம் கூட செல்வதற்கு எண்ணெய் இல்லை. சாப்பாட்டுப் பொருட்களும் தண்ணீரும் கூட பற்றாக்குறைதான். தெற்கு நோக்கி நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.”
“இப்போதே செய்வதற்கு ஒன்றும் இல்லை. நம் பாதையை மேற்குப் பக்கம் மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை நமக்கு. நாம் தரையை சீக்கிரம் பார்த்தாக வேண்டும். இல்லையேல் காணாமல் போய் விடுவோம்.” என்றான் ப்ராட்லி.
அப்படியே செய் என்று கட்டளை இட்டேன். பின் கோணமானியைச் சரி செய்யக் கிளம்பினேன். நம்பவில்லை என்றாலும் அதிலிருந்துதான் கடைசியாக நாங்கள் திசையைக் கணித்து வைத்திருந்தோம். ஒருவழியாக அதைச் சரி செய்த பிறகு இன்னும் அது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. அது 20 நொடி வடக்கு 30 நொடி மேற்கு என்று காட்டியது. கிட்டத்தட்ட 2500 மைல் விலகிச் சென்றிருக்கிறோம். இது சொல்வது ஏறக்குறைய சரியாக இருந்தாலும் கடந்த ஆறு நாட்களாக நாம் பாதையில் இருந்து விலகிச் சென்று இருக்கிறோம். ப்ராட்லி இப்போது பென்சனை அனுப்பி விட்டான். இரவுப் பணியை இப்போது ஓல்சனும் பென்சனும் பார்த்துக் கொள்கிறார்கள். நானும் ப்ராட்லியும் பகலில் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொள்கிறோம்.
நான் ஓல்சன் பென்சன் இருவரிடமும் கோணமானியை உடைத்தது யார் என்று தீவிர விசாரணை நடத்தினேன். ஆனால் இருவரும் மறுத்தார்கள். பென்சன் மட்டும் தெரிந்தது போல் புன் முறுவல் செய்தபடியே சொன்னான். “உனக்கும் எனக்கும் தெரியும் யார் உடைத்தது என்று.” இருந்தாலும் அவள்தான் செய்திருப்பாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
மேற்குப் புறமாகவே நாங்கள் பல மணி நேரம் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒருவன் இன்னொரு கப்பல் தென்படுவதாகக் கத்தினான். உடனே நான் கப்பலைத் திருப்புமாறு சொன்னேன். நாங்கள் அந்த அந்நியனைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அதுதான் தற்போதைய தேவை என்றும் தெரிந்தது. அட்லாண்டிக் கடலின் நடுவில் சாப்பிடாமலேயே உயிரை விட மனம் இல்லை. அந்தக் கப்பலும் எங்களைக் கண்டு கொண்டது மிகவும் தூரமாக இருந்தாலும். ஏனென்றால் அவர்களும் தப்பிச் சென்று விடத்தான் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். காற்றும் எப்போதாவதுதான் அடித்தது. இருந்தும் அவர்களால் தப்பிக்க இயலவில்லை.
அதனால் நாங்கள் பக்கத்தில் சென்று நிறுத்துமாறு சைகை செய்ததும் அதிலிருந்து இறக்கி விடப்பட்ட பாய் மரத் துணி காற்றில் மெதுவாகப் படபடத்தது. நாங்கள் மிகவும் அருகில் சென்று பார்த்தோம். அது பிரேசிலில் இருந்து ஸ்பெயினுக்குச் சென்று கொண்டிருக்கும் சரக்குக் கப்பல் ஹாம்ஸ்டட்-இன் பால்மேன், ஸ்வீடன்.
நான் அவர்களின் மீகாமனிடம் எங்கள் சூழ்நிலையை விளக்கிச் சொன்னேன். உணவு தண்ணீர் மற்றும் எண்ணெய் கொடுத்து உதவுமாறு. நாங்கள் ஜெர்மானியர்கள் இல்லை என்று தெரிந்ததும் அவன் கடும் கோபத்திற்கு உள்ளானான். திட்டிக் கொண்டே எங்களிடமிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தான். ஆனால் இதை எல்லாம் சகித்துக் கொள்ளும் மன நிலையில் நான் இல்லை. முறை கோபுரத்தில் இருந்த ப்ராட்லியை நோக்கி “துப்பாக்கிகளை மேல் தளத்தில் இருந்து கடலில் குதிக்கும் இடத்திற்கு உடனே அனுப்பு” என்றேன். பயிற்சி எடுப்பதற்கு நேரமில்லை. ஒவ்வொருவருக்கும் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மானியர்களுக்கும் தெரியும் ஒத்துழைக்கவில்லை என்றால் மரணம் என்று. ஏனென்றால் ஒவ்வொருவரையும் கவனிக்கவும் எங்கள் ஆள் ஒருவன் துப்பாக்கியுடன் இருக்கிறான். பெரும்பாலும் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவே மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள்.
ப்ராட்லி என் கட்டளையைக் கீழே உள்ளவர்களிடம் சொன்னான். உடனே துப்பாக்கிகள் ஏந்தியவாறு அந்த ஒடுங்கிய ஏணியில் ஏறி வந்தார்கள். நான் சொன்னவுடன் அனைவரும் மெதுவாகச் செல்லும் அந்த ஸ்வீடன் கப்பலைக் குறி வைத்தார்கள். கப்பலின் முகப்பில் சுடுமாறு உத்தரவிட்டேன்.
அந்த ஸ்வீடன் கப்பல் மீகாமனுக்குத் தான் செய்த தவறு உடனே புரிந்திருக்க வேண்டும். அதனால் சிவப்பும் வெள்ளையும் கலந்த கொடியை கம்பத்தில் பறக்க விட்டான் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக. திரும்பவும் அவர்களது பாய் மரத் துணி காற்றில் படபடத்தது. அவர்கள் படகு ஒன்றைக் கீழிறக்கி அனுப்புமாறு சொன்னேன். ஓல்சன் மற்றும் இரு ஆங்கிலேயர்களை என்னுடன் அழைத்துச் சென்று அவர்களது கப்பலில் ஏறினேன். அங்கு எங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டோம். பின் நாங்கள் எடுத்தவைகளுக்கு ஒரு ரசீது எழுதி அந்த மீகாமனிடம் கொடுத்தேன். ப்ராட்லி ஓல்சன் நான் அதில் கையொப்பமிட்டோம். எப்படி இந்த U – 33 கப்பல் எங்களுக்குக் கிடைத்தது என்றும் அவசரத் தேவைக்காக இவைகளை எடுத்திருக்கிறோம் என்று சின்னதாக ஒரு குறிப்பு எழுதினேன். இரண்டையும் ஒரு ஆங்கில அதிகாரிக்கு என்று எழுதி இருந்தோம். பால்மனின் சொந்தக்காரர்களுக்கு இழப்பீடு கொடுத்து விடவும் என்று சொல்லி இருந்தேன். கிடைக்குமா கிடைக்காதா என்று எனக்குத் தெரியவில்லை.
குடி தண்ணீர் உணவு மற்றும் எண்ணெய் எல்லாம் கிடைத்தவுடன் போன உயிர் திரும்பி விட்டது போல் இருந்தது. எங்கே இருக்கிறோம் என்று தெளிவாகத் தெரிந்தவுடன் நான் ஆங்கில கயானாவில் உள்ள ஜார்ஜ் டவுன் சென்று விடலாம் என்று முடிவெடுத்து விட்டேன். ஆனால் விதி வலியது. வேறோர் உருவத்தில் மீண்டும் ஒரு ஏமாற்றம் அளித்தது.
லிஸ்ஸின் உதவி
விசுவாசமான ஆறு பேர் மேல் தளத்திற்குத் துப்பாக்கிகளோடு வந்திருந்தனர் ஸ்வீடன் கப்பலைச் சமாளிப்பதற்கு. நடுவில் இருக்கும் ஏணி வழியாக ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டிருந்தோம். நான்தான் கடைசியாக இறங்கினேன். கீழே வந்த பிறகுதான் தெரிந்தது. வான் ஸ்சோன்வர்ட்ஸ் நீட்டிக் கொண்டிருந்த துப்பாக்கி முனையைத் தான் பார்க்க நேர்ந்தது. எங்கள் கூட்டாளிகள் அனைவரும் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். ஜெர்மானியர்கள் அவர்களுக்குக் காவலாக இருந்தனர்.
எப்படி நடந்ததென்று நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் அதுதான் உண்மை. பின்னால் எனக்குத் தெரிந்தது முதலில் உறங்கிக் கொண்டிருந்த பென்சனிடம் இருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்தார்கள். அதை வைத்து சமையல்காரனிடம் உள்ள துப்பாக்கியையும் பறித்தார்கள். பின் மிச்சமிருந்த இரண்டு ஆங்கிலேயர்களை வீழ்த்தினார்கள். ஏணியில் இறங்கும் போது ஒவ்வொருவரையும் துப்பாக்கியைக் காட்டிக் கைது செய்து விட்டார்கள்.
வான் ஸ்சோன்வர்ட்ஸ் முதலில் என்னைக் கூப்பிட்டு அனுப்பினான். கடற் கொள்ளையன் என்று அறிவித்து நாளை காலை முதல் வேளையாக என்னைச் சுட்டுத் தள்ளுமாறு உத்தரவிட்டான். பின் இந்த நீர்மூழ்கிக் கப்பல் இந்தக் கடலிலேயே பயணிக்கும் என்றும் நடுநிலையில் இருக்கும் கப்பல்களையும் எதிரிக் கப்பல்களையும் சரமாரியாகச் சுட்டு வீழ்த்துமாறு கட்டளை இட்டான். இந்தப் பக்கத்தில் இருக்க வேண்டிய மற்றொரு ஜெர்மன் போர்க்கப்பலைத் தேடுமாறும் சொன்னான்.
அவன் சொன்னபடி மறு நாள் என்னைச் சுடவில்லை. எனக்கு விளங்கவே இல்லை ஏனவன் தள்ளி வைத்தான் என்று. அதற்கு பதில் என்னைக் கம்பிகளுக்குப் பின் தள்ளினான் அவனை நான் செய்தது போலவே. பின் ப்ராட்லியை எனது அறையில் இருந்து வெளியே தள்ளி விட்டு முழுவதும் அவனே எடுத்துக் கொண்டான்.
நாங்கள் வெகு நாட்களாக பயணித்துக் கொண்டே இருந்தோம். இடையில் தென்பட்ட அனைத்துக் கப்பல்களையும் மூழ்கடித்தோம். ஒன்றே ஒன்றை மட்டும் சுட்டு வீழ்த்தினோம். ஆனாலும் ஜெர்மன் கப்பலை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பென்சனுக்கு மட்டும் அவன் அவ்வப்போது தலைமைப் பொறுப்பு கொடுத்தது ஆச்சர்யமாக இருந்தது.
இங்கிருக்கும் எந்த முட்டாள் ஜெர்மனியனைக் காட்டிலும் பென்சனுக்கு இதில் அனுபவம் இருப்பதால் இருக்கும் என்று சமாதானம் ஆனேன்.
ஓரிரு முறை லிஸ் என்னைக் கடந்து சென்றாள். பெரும்பாலும் அவள் தன் அறையிலேயே இருந்தாள். ஒரு முறை என் பக்கத்தில் என்னிடம் பேச வேண்டி இருப்பது போல் தயங்கி நின்றாள். ஆனால் நான் என் தலையை உயர்த்தவே இல்லை. அதனால் அவள் அங்கிருந்து சென்று விட்டாள்.
பின் ஒரு நாள் ஒரு செய்தி வந்தது. வான் ஸ்சோன்வர்ட்ஸ் தன் மரமண்டையை எடுத்துக் கொண்டு பசிபிக் கடல் வழியாக வட அமெரிக்கக் கடற்கரையில் பயணித்துக் கொண்டு வணிகக் கப்பல்கள் அனைத்தையும் தாக்கத் திட்டமிட்டிருந்தானாம்.
“நான் அவர்களுக்குக் கடவுள் மேலும் கைஸர் மேலும் பயம் வரும் படி செய்வேன்” என்று சூளுரைத்தான் வான்.
தெற்கு பசிபிக் கடலில் நுழைந்த முதல் நாளே எங்களுக்குச் சாகசமாகத்தான் இருந்தது. இதுவரை கடந்து வந்த சாகசங்களைக் காட்டிலும் அது மிகவும் உற்சாகம் ஊட்டுவதாக இருந்தது. இதுதான் நடந்தது. காலையில் எட்டு தடவை மணிச் சத்தம் கேட்டது. பின் மேல் தளத்தில் ஆலங்கட்டி மழைச் சத்தம் கேட்டது. பின் கப்பலின் அனைத்துப் பரிவாரங்களின் காலடிச் சத்தம் கேட்டது. ஏணியில் இருப்பவர்களின் காலடிச் சத்தம் அவ்வளவு இருந்ததால் சொல்கிறேன். மேல் தளத்தை இன்னும் வந்தடையாத யாரோ ஒருவனிடம் ஒருவன் உரத்த குரலில் சொன்னான். “அது ஜெர்மன் போர்க் கப்பல். ஜெர்மன் போர்க் கப்பல் கெயர்” என்று.
பின்னர் கீழே எந்தவிதமான சத்தமும் கேட்கவில்லை. யாரும் இல்லை. பின்னர் ஒரு கதவு திறக்கும் சத்தம் கேட்டது. நாப்ஸ் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அது என் முகத்தை நக்கியது. பின் கீழே விழுந்து புரண்டு என்னை நோக்கிக் கால்களை நீட்டியது. பின் வேறொரு காலடிச் சத்தம் கேட்டது. அது யாரென்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் திரும்பி நேராகத் தரையைப் பார்த்தேன். அந்தப் பெண் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தாள். உடனே என் பக்கத்தில் நெருங்கி வந்தாள். “இதோ” என்று கத்தினாள். “சீக்கிரம்” என்று சொல்லி விட்டு அந்தக் கையில் ஒரு சின்னப் பொருளைத் திணித்தாள். அது ஒரு சாவி. என் சிறையின் சாவி. அவள் எனக்கு ஒரு துப்பாக்கியும் நீட்டினாள். பின் நடுவழிக்குச் சென்றாள். அவள் சென்ற போது பார்த்தேன் அவள் கையிலும் ஒரு துப்பாக்கி இருந்தது. எனது பூட்டைத் திறக்க வெகு நேரம் ஆகவில்லை. உடன் நான் அவளைப் பின் தொடர்ந்து சென்றேன். “நான் உனக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன்” என்று ஆரம்பித்தேன். அவள் சொன்ன ஒரு வாக்கியம் என் வாயை மூடி விட்டது.
“நன்றி சொல்ல வேண்டாம்” என்று மிகவும் இறுக்கமாகச் சொன்னாள். “உனது நன்றியோ இல்லை எந்தவித உணர்ச்சியைப் பற்றி எனக்கு எந்தவித அக்கறையும் இல்லை. என்னைப் பார்த்து கொண்டே இருக்காதே. எதாவது செய்ய உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். இப்போதே செய்.” அவள் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் ஒரு ஆணை போல இருந்ததால் உடனே குதித்தோடினேன். மேலே பார்க்கும்போது கோபுரத்தில் யாருமில்லை. நான் உடனே மேலே ஏற ஆரம்பித்தேன். ஒரு நூறடி தூரத்தில் ஒரு போர்க் கப்பல் நின்று கொண்டிருந்தது. அதன் மேல் ஒரு ஜெர்மன் போர் நாயகன் கொடி பறந்து கொண்டிருந்தது. ஒரு படகு அப்போதுதான் இறக்கப்பட்டிருந்தது. அதிகாரிகளும் மற்றவர்களும் அதில் ஏறிப் பயணம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். எதிரிலேயே நின்று கொண்டிருக்கிறது அந்தக் கப்பல். “கடவுளே. எவ்வளவு அருமையான இலக்கு” நான் சிந்திப்பதையே நிறுத்தி விட்டேன். கீழிருக்கும் அவளை ஏக்கமாகப் பார்த்தேன். அவளை நம்பலாமா. ஏன் என்னை இந்த நேரத்தில் விடுவித்தாள். கட்டாயம் செய்ய வேண்டும். கட்டாயம் செய்ய வேண்டும். வேறெதுவும் வழி இல்லை. நான் திரும்பவும் கீழிறங்கி வந்தேன். “ஓல்சனை தயவு செய்து இங்கே வரச் சொல். நீ அவனிடம் பேசுவதை யாரும் பார்க்கக் கூடாது” என்று கேட்டுக் கொண்டேன்.
அவள் என்னை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் புதிராகப் பார்த்தாள். பின் திரும்பி ஏணியில் ஏற ஆரம்பித்தாள். சில நேரத்தில் ஓல்சன் இறங்கி வந்தான். அவனைப் பின் தொடர்ந்து அவள் வந்தாள். “சீக்கிரம்” என்று அந்த பெரிய ஐரிஷ்காரனிடம் கிசுகிசுத்தேன். பின் அவனைக் கப்பலின் முகப்புப் பகுதியில் இருந்த வெடிக்கண்ணி ஏவும் இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அவளும் எங்களைப் பின் தொடர்ந்து வந்தாள். நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை அறிந்தவுடன் அவளும் எங்களுக்கு ஒரு கை கொடுத்து வெடிக்கண்ணியைப் பொறுத்த உதவி செய்தாள். பின் நான் முறை கோபுரத்திற்குச் சென்று கவனித்தேன். எங்கள் கப்பல் அதே நிலையில் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே சென்றேன். நல்ல வேளையாக இரையின் மேல் பாய்வதற்கு ஏதுவாகத்தான் இருந்தது.
இலக்கு இதைவிட உண்மையாக எப்போதும் இருந்திருக்காது. நான் ஓல்சனுக்குச் சைகை காண்பித்தேன். “அனுப்பு” என்றேன். அந்த வெடிக்கண்ணி பாயத் தொடங்கியதும் நீர் மூழ்கிக் கப்பலே அதிரத் தொடங்கியது. எதிரிக் கப்பலை நோக்கி வெள்ளையாகக் கடல் நீர் நுரைத்து ஓடுவதை என்னால் பார்க்க முடிந்தது. எங்கள் கப்பலின் மேல் தளத்தில் இருந்தே பலர் ஒரு சேர கரகரப்பாய்க் கத்துவதைக் கேட்க முடிந்தது. எங்களை நோக்கி வந்து கொண்டிருந்த படகில் இருந்த அதிகாரிகள் உடனே விறைப்பானதைப் பார்க்க முடிந்தது. எதிரிக் கப்பலில் இருந்து கத்தல்களும் திட்டல்களும் கேட்க ஆரம்பித்தது. பிறகு நான் எடுத்த வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கப்பலின் மேல் தளத்தில் இருந்த அனைவரும் செயலற்று வெடிக்கண்ணியைப் பார்த்த வண்ணம் இருந்தனர். ப்ராட்லி முறை கோபுரத்தில் என்னைப் பார்த்தான். நான் தளத்தில் பாய்ந்து வந்து அவனை நோக்கி ஓடினேன். “அவர்கள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நாம் அவர்களை முறியடிக்க வேண்டும்”
ப்ராட்லிக்கு முன் புறம் ஒரு ஜெர்மன் நின்று கொண்டிருந்தான். ப்ராட்லி உடனே அவன் கழுத்தில் வெறி கொண்டு ஓங்கி ஒரு குத்து விட்டான். அவன் சரிந்து கொண்டிருக்கும்போதே அவனது துப்பாக்கியை உரையில் இருந்து எடுத்து விட்டான். வான் ஸ்சோன்வர்ட்ஸ் தனது முதல் அதிர்ச்சியில் இருந்து மீண்டு விசாரணை செய்யக் கிளம்பினான். நான் அவன் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தும் அதே வேளையில் வெடிக்கண்ணி எதிரிக் கப்பலின் மீது பெரும் சத்தத்துடன் மோதி அவர்களைக் கடலில் மூழ்கடித்தது.
ப்ராட்லி ஒவ்வொரு ஆங்கில மாலுமிகளிடமும் ஓடியபடி இருந்தான். ஜெர்மன்காரர்கள் அதைக் கவனித்தாலும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை ஆதலால் அவர்கள் எந்தவிதச் சலனமும் இல்லாமல் இருந்தார்கள்.
ஓல்சன் கீழே இருந்தான். அதனால் நாங்கள் 9 பேர் அவர்கள் 8 பேர். ப்ராட்லியால் அடிபட்டவன் மேல் தளத்தில் இன்னும் விழுந்து கிடந்தான். எங்கள் இருவரிடம் மட்டும்தான் துப்பாக்கி இருந்தது. ஜெர்மானியர்களிடம் மனசே இல்லை. அவர்கள் பாதியளவில்தான் எதிர்ப்புக் காட்டினார்கள். வான் ஸ்சோன்வர்ட்ஸ் மட்டும்தான் மோசமாக நடந்து கொண்டான். அவன்தான் கோபத்திலும் ஏமாற்றத்திலும் வெதும்பி இருந்தான். ஒரு வெறித்தனமான காளையைப் போல் என்னை நோக்கிப் பாய்ந்து வந்தான். அப்படி வரும்போது துப்பாக்கியால் சுட்டான். நின்று கொண்டு சுட்டிருந்தால் கட்டாயம் என்னைக் கொன்றிருப்பான். கோபம் தலைக்கேறி என்ன செய்வதென்று தெரியாமல் சுட்டுக் கொண்டே வந்ததால் என்னை ஒரு குண்டு கூடத் தொடவில்லை. பின் அவன் கைகளைப் பிடித்துக் கட்டிப் புரண்டதில் எங்கள் துப்பாக்கிகள் கீழே விழுந்து விட்டன. அவைகளை உடனே எனது ஆட்கள் எடுத்து விட்டனர். அவன் கைகலப்பில் சுத்த மோசம். எளிதாக அவனைக் கட்டிப் போட்டு விட்டேன்.
ஒரு அரை மணி நேரத்திலேயே எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது. கைதிகள் கலவரம் செய்வதற்கு முன் எப்படி இருந்ததோ அதே நிலைமைக்கு வந்து விட்டது. வான் ஸ்சோன்வர்ட்ஸ் மேல் இன்னும் கூடுதல் கவனம் பதிக்க வேண்டி இருந்தது. நாங்கள் இங்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கேயர் முழுவதும் மூழ்கி விட்டது. ஓல்சன் வெடிக்கண்ணியை அனுப்பிய போது அவர்கள் கீழிறக்கிய ஒற்றைப் படகை உயிர் பிழைத்தவர்களுக்காக விட்டுவிட்டு நாங்கள் வடக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம். அந்தப் பரிதாபமான சைத்தான்கள் கரை சேரும் வரை பிழைத்திருக்கப் போவதில்லை. ஒரு வேளை தப்பிப் பிழைத்தாலும் கரையில் கடுங்குளிரில் விறைக்கப் போவது உறுதி. ஆனால் அவர்களை எனது கப்பலில் நிச்சயமாக ஏற்ற மாட்டேன். ஏனெனில் எங்களிடம் இருக்கும் ஜெர்மானியர்களே போதும்.
அன்று சாயந்திரம் அந்தப் பெண் மேல் தளத்திற்குச் செல்ல அனுமதி கேட்டாள். கீழே அடைத்து வைக்கப்பட்டது போல் இருக்கிறது என்றாள். நான் உடனே அனுதித்தேன். என்னால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளிடம் பேசும் வாய்ப்பு திரும்பவும் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். அவள் மனதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் நான் அவளைப் பின் தொடர்ந்து ஏணியில் ஏற ஆரம்பித்தேன். அன்றைய இரவு தெளிவாக குளிராக அழகாக இருந்தது. கடல் அமைதியாக இருந்தது. கப்பலின் முகப்பில் கடல் நீர் நுரைத்துக் கொண்டிருந்தது. கப்பலின் பின் புறத்தில் இருந்து முற்செலுத்திகள் கடல் நீரில் பரப்பிக் கொண்டிருந்த அலைகள் ஒரு பெரிய ஆங்கில எழுத்தான v போல் இருந்தது. பென்சன் கோபுரத்தில் இருந்தான். நாங்கள் சான் டியாகோ நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். எல்லாம் சரியாக இருந்தது.
லிஸ் ஒரு கனமான போர்வையைத் தனது மெல்லிய தேகத்தில் போர்த்தி இருந்தாள். நான் அவளை நெருங்கியதும் திரும்பி என்னைப் பார்த்தவள் உடனே விலகிச் சென்றாள்.
“நான் உனக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்” என்றேன். “உன் வீரத்திற்கும் விசுவாசத்திற்கும். எல்லாம் அற்புதம். நான் உன்னை சந்தேகித்ததாக நீ நினைத்ததற்குக் காரணம் இருக்கிறது என்று அறிந்து நான் வருத்தப்பட்டேன்.”
“நீ என்னை சந்தேகப் பட்டாய்.” அவள் உறுதியாக பதில் சொன்னாள். “பாரன் வான் ஸ்சோன்வர்ட்ஸிற்கு உடந்தையாய் இருந்ததாக என்னைக் குற்றம் சாட்டினாய். இதை என்றும் மன்னிக்க மாட்டேன்”
அவளது வார்த்தையிலும் தொனியிலும் ஒரு தெளிவான முடிவு இருந்ததைக் கவனிக்க முடிந்தது.
“என்னால் நம்ப முடியவில்லை.” என்றேன். “எனது கூட்டாளிகள் இருவர் நீ வான் ஸ்சோன்வர்ட்ஸை இரண்டு இரவுகள் சந்தித்ததாக சொன்னார்கள். அதை அடுத்த இரண்டு காலைகளிலும் பெரிய சேதங்கள் ஏற்பட்டன. நான் உன்னை சந்தேகிக்க விரும்பவில்லை. ஆனால் எனக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. என் மாலுமிகள் உயிர் இந்தக் கப்பலின் பாதுகாப்பு, என் உயிர் உன் உயிர் எல்லாம் என் கைகளில்தான் இருக்கிறது. நான் உன்னை கவனித்தாக வேண்டி இருந்தது. நீ செய்த பைத்தியக்காரத்தனங்களுக்கு எதிராக உன்னை கவனிக்க ஆள் ஏற்பாடு செய்ய வேண்டியதாய்ப் போயிற்று.”
அவளது கரிய பெரிய வட்ட வடிவமான கண்களை வைத்து என்னைப் பார்த்தாள்.
“யார் உன்னிடம் சொன்னது நான் வான் ஸ்சோன்வர்ட்ஸைப் பார்த்ததாக.” என்று கேட்டாள்.
“அதை என்னால் சொல்ல முடியாது லிஸ். ஆனால் இரண்டு பேர் தனித்தனியாக என்னிடம் சொன்னார்கள்.”
“அவர்கள் இருவரும் பொய் சொல்லி இருக்கிறார்கள்.” என்று கோபப்படாமல் பொறுமையாகச் சொன்னாள். “முதன் முதலில் இந்தக் கப்பலில் ஏறும் போது உன் முன்னிலையில் மட்டுமே அவனிடம் பேசினேன். வேறு எப்போதும் அவனிடம் பேசியதே இல்லை. பின் இன்னொரு விஷயத்தையும் ஞாபகம் வைத்துக் கொள். என்னைக் கூப்பிடும் போது மற்றவர் போல் செல்வி லா ர்யூ என்றுதான் கூப்பிட வேண்டும்”
முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் யாராவது உங்கள் மூஞ்சியில் அறைந்திருக்கிறார்களா? இல்லையா? பின் நான் அப்போது என்ன உணர்ச்சியில் இருந்தேன் என்று உங்களுக்குப் புரியாது. எனக்குள் கொதிக்கும் ரத்தத்துடன் தசைகள் மேல் எழுந்து கன்னங்கள் தடவிக் காதுகளில் பாய்ந்து உச்சி மண்டையில் கிர்ரென்று சிதறடித்தது. அதனால் அவள் மேல் காதல் இன்னும் அதிகமாயிற்று. உள்ளுக்குள் ஆயிரம் முறை ஓதிக் கொண்டேன். அவளை நான் ஜெயித்தே ஆக வேண்டும் என்று.
1916 ஆம் ஆண்டு ஜூலை இறுதியில் கப்பல் செய்தியில் ஒன்று தென்பட்டது. ஜூன் மாதத்தில் ஜெர்மன் போர்க் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட பால்மன், ரியோ டீ ஜெனிரோ, என்ற கப்பலில் இருந்து ஒரே ஒருவர் உயிர் தப்பிக் கரை ஒதுங்கினார் என்றும் அவர் எதுவும் சொல்லாமலேயே இறந்து விட்டார் என்றும் அந்தச் செய்தி சொல்லியது.
– தொடரும்…
தமிழாக்கம்: சு.சோமு, Translation of the book ‘The Land That Time Forgot’ by Edgar Rice Burroughs
வெளியான மாதம்/ஆண்டு: May 2017 in kdp.amazon.com