கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: February 19, 2023
பார்வையிட்டோர்: 7,682 
 
 

அத்தியாயம்: ௮ | அத்தியாயம்: ௯ | அத்தியாயம்: ௧௦

ஈட்டி மனிதர்கள்

அவ்வாறு நான் அந்த ஒற்றைக் கல்லறையின் முன் மண்டியிட்டுப் பயங்கரமான யோசனைகளில் ஆழ்ந்திருந்த போது நான் பின்னாலிருந்து பிடித்துத் தூக்கி நிலத்தில் வீசப்பட்டேன். அப்படி விழும்போது ஒரு கதகதப்பான உடம்பு என் மீது அமர்ந்து என் கை கால்களை முறுக்கியது. நான் பார்க்க முடிந்தபோது பெரிய உருவங்கள் சில என்னைப் பற்சக்கரத்தில் நசுக்குவது போன்று அழுத்திக் கொண்டிருந்தன. அவைகள் இன்னும் சற்று வித்தியாசமான மனித இனங்கள். இப்போது விட்டு வந்தவைகளை விடச் சற்றே உயர்ந்த பரிணாமத்தைச் சேர்ந்தவை. அவர்கள் உயரமானவர்களாகவும் இருந்தார்கள். அவர்களது கபாலங்களும் சிறந்த முறையில் இருந்தன. புத்திசாலித்தனமான முகங்கள் கொண்டதாகவும் இருந்தன. மனிதக் குரங்குகளின் அம்சங்கள் கம்மியாகவும் கறுப்பினத்தவர்களின் அம்சங்களும் கம்மியாக இருந்தன. அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தனர். கற்கள் பொறுத்தியிருந்த நீண்ட கம்புகள் கல்லாலான கத்திகள் கோடரிகள் வைத்திருந்தனர். அவர்கள் ஆபரணங்களும் அணிந்திருந்தனர். கோவணம் உடுத்தி இருந்தனர். சிலர் சிறகுகளைத் தலையில் அணிந்திருந்தனர். கோவணங்கள் ஒற்றைப் பாம்பின் தோலால் செய்தது. இறந்த பாம்பின் தலை கூட அவர்கள் முழங்கால் வரை தொங்கிக் கொண்டிருந்தது.

இவ்வளவு நுணுக்கங்களும் அவர்கள் என்னைச் சிறை பிடிக்கும் போதே நான் கவனித்திருக்கவில்லை. அப்போது நான் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி இருந்தேன். அவர்களில் மூன்று வீரர்கள் என் மேல் அமர்ந்திருந்தனர். அவர்களது உடல் பலத்தாலும் தடுமாற்றத்தாலும் என்னைப் பிடிக்க முயற்சி செய்தனர். அவர்களது கைகள்தான் முழுமையாக இதற்குப் பயன்பட்டது என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும். நான் பெருமைக்காக சொல்லவில்லை. ஆனால் என் பலத்தை நினைத்து நான் நிச்சயம் கர்வம் கொள்கிறேன். அதை உபயோகிப்பதற்கு நான் கற்று வளர்த்த அறிவியலை எண்ணியும் பெருமைப் படுகிறேன். அதுவும் குதிரை ஏறும் என் திறமையை நினைத்தும் எனக்குள் எப்போதுமே கர்வம்தான். இவ்வளவு மணி நேரங்களாய் அவர்கள் என்னை கவனித்து கொண்டிருக்கும் நேரத்தில் நான் எடுத்த பயிற்சி எனக்கு மூன்றே நிமிடங்களில் என் முதலீட்டின் முழு பலனையும் கொடுத்து விட்டது. கலிபோர்னியா மக்களுக்குப் பெரும்பாலும் ஜூஜிட்சு தற்காப்புக் கலை தெரியும். நான் அதில் பல வருடங்கள் படித்திருக்கிறேன் பள்ளிக் கூடத்திலும் லாஸ் ஏஞ்சல்ஸ் உடற்பயிற்சிக் கழகத்திலும். சமீபத்தில் ஒரு ஜப்பானியர்தான் என் குருவாக இருந்தார். அதில் அவர் மன்னர்.

அதில் ஒருவனின் முழங்கையை உடைப்பதற்கு எனக்கு 30 வினாடிகளே போதுமானதாய் இருந்தது. இன்னொருவனைக் கீழே தள்ளி அவர்களது ஆட்களுடன் சேர்ந்து விழ வைத்தேன். இன்னொருவனை கிட்டத்தட்ட என் தலைக்கு மேலே தூக்கி விசிறி எறிந்தேன். அவன் கீழே விழும்போது அவன் கழுத்து ஒடிந்து விட்டது. அவர்கள் ஆச்சர்யத்தால் வாயடைத்து நிற்கும்போது நான் எனது சுழல் துப்பாக்கியை எடுத்தேன். அது என் முதுகில் சாதாரணமாக வைத்திருந்தேன். எழுந்தவுடன் மீண்டும் தாக்க வருவார்கள் என்று நினைத்தது போலவே வந்தார்கள். அதனால் அதில் ஒருவனது நெற்றியில் சுட்டேன். அவர்கள் ஒரு கணம் நின்றார்கள். அவன் இறந்து விழுந்ததால் அல்ல. இதுவரை கேட்டிராத துப்பாக்கிச் சத்தம் கேட்டதால். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு திரும்பவும் தாக்க யத்தனித்தார்கள். அப்போது அவர்களது தலைவன் உரத்த குரலில் சொன்னான். அவன் பேசியது தெற்கு மனிதர்களின் மொழியை விட வளர்ச்சி அடைந்த மொழி. அவர்கள் பேச்சு யாம் பேசியதில் இருந்தும் வேறுபட்டிருந்தது. அவர்களைத் தள்ளி இருக்கச் சொல்லிவிட்டு என்னருகில் வந்து பேசினான்.

நான் யார் எங்கிருந்து வந்தேன் எதற்காக வந்தேன் என்று கேட்டான். நான் கேஸ்பக்கிற்குப் புதியவன் என்றேன். நான் வழி தவறி விட்டேன். என் நண்பர்களைக் கண்டுபிடிப்பது மட்டுமே என் நோக்கம் என்றேன். அவர்கள் எங்கே என்றான். நான் தெற்கில் எங்கேயே என்றேன் கேஸ்பக்கின் ஒரு வாக்கியத்தில். “ஆதியில் இருந்து” என்பதுதான் அதன் அர்த்தம். அவன் சொல்வதற்கு முன்பே அவனது ஆச்சர்யம் அவனது முகத்தில் தெரிந்தது. “அங்கே காலுக்களே கிடையாது” என்றான்.

“நான் சொல்கிறேன்” என்று கோபமாகச் சொன்னேன். “நான் வேறொரு நாட்டில் இருந்து வருகிறேன். கேஸ்பக்கில் இருந்து ரொம்ப தூரம் அது. இந்தச் செங்குத்துப் பாறைகளில் இருந்து மிக மிக தூரத்தில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு காலு என்றால் யாரென்றே தெரியாது. நான் அவர்களைப் பார்த்ததே கிடையாது. வடக்கில் இவ்வளவு தூரம்தான் நான் வந்திருக்கிறேன். என்னைப் பார். எனது உடையையும் ஆயுதங்களையும் பார். எதாவது ஒரு காலுவோ அல்லது எந்த கேஸ்பக்கின் உயிரினமோ இதே போல் வைத்திருப்பதை நீ பார்த்திருக்கிறாயா?”

அவன் பார்க்கவில்லை என்று ஒத்துக் கொண்டான். அவனுக்கு என் மேல் மிகுந்த ஈடுபாடு வந்துவிட்டது. எனது துப்பாக்கி, பின் மூன்று ஆட்களை நான் கையாண்ட விதம். நான் சொன்னதில் பாதி வரை நம்பி விட்டான். தலைக்கு மேல் தூக்கி வீசியது எப்படி என்று தனக்குச் சொல்லிக் கொடுத்தால் எனக்கு என் நண்பர்களைத் தேடுவதில் உதவி செய்வதாகவும் சொன்னான். “அடிக்கும் ஈட்டி” என்று அவன் சொன்ன ஒரு ஆயுதத்தை-என் துப்பாக்கியை- தனக்குப் பரிசளிக்க வேண்டும் என்றும் சொன்னான். எனது துப்பாக்கியை அவனுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டேன். சரியான பாதையை காட்டினால் அந்த விதையை மட்டும் கற்றுக் கொடுப்பதாக வாக்களித்தேன். அவன் அதை நாளை பார்க்கலாம் என்று கூறினான். இன்று மிகவும் தாமதமாகி விட்டதென்றும் நான் அவர்களின் கிராமத்திற்கு வந்து தங்க வேண்டும் என்றும் சொன்னான். எனக்கு அவ்வளவு நேரம் பிரிந்திருக்க விருப்பமில்லை. ஆனால் அவன் மிகவும் பிடிவாதமாய் இருந்தான். அதனால் அவனுடன் சென்றேன். இறந்து கிடந்த அந்த இருவரையும் அவர்கள் கொஞ்சம் கூட சீண்டவேயில்லை. கேஸ்பக்கில் உயிரின் மதிப்பே அவ்வளவுதான்.

இந்த மனிதர்களும் குகையில் வாழ்பவர்களாகவே இருந்தார்கள். ஆனால் அவர்களது குகைகள் புத்திசாலிகள் இடம்போலவே தெரிந்தது. “ஆதியில் இருந்து’ வந்தவர்களை விட கிட்டத்தட்ட நாகரிகம் அடைந்தவர்களாக இருந்தனர். குகையின் உட்புறத்தில் இருந்த குப்பைகள் எல்லாம் அகற்றப்பட்டிருந்தன. இருந்தாலும் சுத்தம் என்பதற்கு அருகில் கூட வர முடியாது. காய்ந்த புற்களைக் கொண்டு ஒரு மெத்தை போல் செய்திருந்தனர். அதன் மேல் சிறுத்தை காட்டுப் பூனை கரடிகளின் தோல்கள் பரப்பப்பட்டிருந்தன. வாயிலை மறைத்துச் சின்னச் சின்ன கற்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு சிறு வட்டவடிவில் கல்லால் ஆன அடுப்பும் இருந்தது. சுவற்றில் மணல் பாறையில் செய்யப்பட்ட ஓவியங்கள் இருந்தன. அதில் சிவப்பு மான்கள் பெரிய மிருகங்கள் புலிகள் மற்றும் சில மிருகங்களின் வடிவங்கள் இருந்தன. இதற்கு முன் பார்த்த இனங்களைப் போலவே இங்கும் குழந்தைகள் முதியவர்கள் இல்லை. ஆண்களின் பெயர் இரண்டாய் இருந்தது. அல்லது இரண்டு அசைச் சொற்கள் இருந்தன. அவர்களின் மொழியும் இரண்டு அசைச் சொற்கள் கொண்டிருந்தன. திசாவின் மொழியில் ஒரே அசை தான் இருந்தது. ஏடிஸ் காலு போன்ற சொற்களைத் தவிர எல்லாமே ஈரசைச் சொற்கள்தான். தலைவன் பெயர் தோஜோ. அவன் வீட்டில் ஏழு பெண்கள் இருந்தார்கள். அவர்கள் திசாவின் இருப்பிடத்தில் பார்த்தவர்களைக் காட்டிலும் அழகாய் இருந்தார்கள். அருவருப்பு கம்மியானவர்கள் என்று சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன். அதில் ஒருத்தி கிட்டத்தட்ட அழகு என்றே சொல்லலாம். முடி கம்மியாக இருந்தாலும் தோல் நன்றாக இருந்தது.

அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது. என்னிடம் இருந்த ஒவ்வொரு பொருளையும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தடவிப் பார்த்தார்கள். மோந்து பார்த்தார்கள். அவர்களது மனிதர்கள் பாண்ட்லு என்று அழைக்கப்பட்டார்கள். ஈட்டி மனிதர்கள் என்று அர்த்தமாம். திசாவின் மனிதர்கள் ஸ்தோலு அல்லது கோடரி மனிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பரிணாமத்தில் அதற்குக் கீழே போலு கழி மனிதர்கள், அதன் முன் ஆலுக்கள். அவர்களுக்கு ஆயுதங்களுமில்லை மொழியுமில்லை.

அவர்கள் சொன்ன அந்த கடைசி வார்த்தைதான் கேப்ரோனாவில் நான் கண்டுபிடித்த மிகப்பெரிய விஷயம். தற்செயலானதா என்று தெரியவில்லை. பல லட்சக்கணக்கான வருடங்களாய்ப் பூமியின் மீது பேசப்பட்ட முதல் மொழியில் இருந்து வந்த அந்த வார்த்தையை நான் கேட்டேன். அது சிறிதாய் மாற்றம் அடைந்திருக்கலாம். கேப்ரோனா ஒரு பயங்கரமான மலையாய்ப் பலவிதமான உயிரினங்கள் செழித்து இருக்கும்போது அதன்மீது விடிந்து கொண்டிருக்கும் ஒரு புதிய இனத்தின் பழங்கால பாவின் மீதி இருக்கும் ஒரு நூலிழை அந்த வார்த்தைதான். கற்பனை செய்ய முடியாத அந்த நாட்களை இன்றோடு முடிச்சுப் போடுவது அதுதான். இவ்வளவு இருந்தாலும் அது வெறும் தற்செயலாகக் கூட இருக்கலாம். எனது உள் மனதும் அது தற்செயல் என்றுதான் நம்புகிறது. கேஸ்பக்கில் பேசாத முதல் மனிதன் ஆலு என்று சொல்லப்படுவது. வெளி உலகில் அவர்களை ஆலாலுக்கள் என்று சொல்கிறோம்.

நான் பேசிய அந்த அழகியின் பெயர் சோ-டா. அவள் என் மீது அவ்வளவு அன்பைக் கொட்டினாள். அதனால் தோஜோ அவளைக் கடிந்து கொண்டான். அவளைக் கீழே தள்ளி விட்டுக் குகையின் ஒரு ஓரத்தில் எத்தி விட்டான். அவளை உதைத்துக் கொண்டிருக்கும் போதே நான் அவர்களுக்கு நடுவில் சென்று நின்று கொண்டேன். சட்டென்று நான் அவனைப் பிடித்துக் கொண்டே தள்ளினேன். அதனால் அவன் கத்திக் கொண்டே வெளியே வந்தான். அவன் அவளை இனிமேல் எந்தக் காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது என்று சத்தியம் வாங்கினேன். இல்லையென்றால் பெரும் தண்டனையாக இப்படியொரு வலிதான் மிச்சம் என்றேன். சோ-டா என்னை நன்றியோடு பார்த்தாள். ஆனால் மீதி இருக்கும் பெண்களும் அவனும் கடுகடுப்புடன் பார்த்தார்கள்.

சாயந்திர வேளை சோ-டா என்னிடம் வந்து சொன்னாள் அவள் இந்தக் குடியை விட்டுக் கிளம்பப் போகிறேன் என்று.

“சோ-டா கூடிய சீக்கிரம் க்ரோலு” என்று மெதுவாகக் கிசுகிசுத்தாள். க்ரோலு என்றாள் என்னவென்று கேட்டேன். அவள் விளக்கம் கொடுத்தாள். ஆனால் அது என்னவென்று இன்னும் எனக்குப் புரியவில்லை. அவளின் சைகைகள் படி பார்த்தால் க்ரோலு என்பவர்கள் வில் அம்பு ஏந்தியவர்கள் என்றும் சமைப்பதற்குப் பாத்திரங்கள் வைத்திருப்பவர்கள் என்றும் குடிசையில் விலங்குகளுடன் வாழ்பவர்கள் என்றும் தெரிந்தது. அவள் சொன்னது மிகவும் துண்டு துண்டாகத் தெளிவற்றதாகத் தெரிந்தது. இருந்தாலும் சுருக்கமாகச் சொன்னால் க்ரோலுகள் பாண்ட்லுகளை விட வளர்ச்சி அடைந்தவர்கள். நான் கேட்டதை எல்லாம் நீண்ட நேரம் அசை போட்டுக் கொண்டே தூங்கி விட்டேன். இங்கிருக்கும் இனங்களுக்குள் இருக்கும் தொடர்பை அறிய முயன்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு இனமும் என்றோ ஒருநாள் காலுவாக ஏங்கிக் கொண்டிருக்கும் அந்தக் கனவின் விடையைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தேன். சோ-டா ஒரு யோசனை சொன்னாள். ஆனால் அதன் முடிவு ரொம்பக் கேவலமாய் இருக்கும் என்பதால் அதைக் கைவிட்டு விட்டேன். ஆனால் அது யாமின் நம்பிக்கையை ஒத்தே இருந்தது. கேஸ்பக்கில் நான் சந்தித்த வெவ்வேறு இனங்களில் நான் கண்ட பரிணாமத்தின் பல படிகள் ஒவ்வொரு இனத்திலும் இருக்கும் பல்வேறு நிலைகளுடன் ஒத்திருந்தது. ஒரு சிறு உதாரணமாக பாண்ட்லுகளுக்கு நடுவில் சோ-டா போன்றவர்கள் இருக்கிறார்கள். அவள் பரிணாமத்தில் மேலே இருக்கிறாள். தோஜோ கிட்டத்தட்ட மனிதக் குரங்கின் சாயலில் இருக்கிறான். இன்னும் சிலர் தட்டையான மூக்குகள் நீண்ட தாடை கொண்ட முகங்கள் முடிகள் அதிகமுள்ள உடம்புகள் என்று பல்வேறு தரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கேள்வி மிகுந்த குழப்பத்தை உண்டாக்கியது. பூமியில் எங்கோ ஒரு மூலையில் இதற்கான பதில் கிடைக்கலாம். யாருக்குத் தெரியும். எனக்கு நிச்சயம் தெரியாது.

மற்றொரு கல்லறை

ஒரு பைத்தியக்காரன் அல்லது கஞ்சா அடித்தவன் பற்றிய கனவு கண்டு கொண்டே நான் உறங்கி விட்டேன். எழுந்த போது என் கை கால்கள் நன்றாகக் கட்டப்பட்டு இருந்தன. என் ஆயுதங்கள் எடுக்கப்பட்டு இருந்தன. என்னை எழுப்பாமலேயே எப்படி இதைச் செய்தார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. அது ரொம்ப அவமானாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. தோஜோ என் மேல் நின்றிருந்தான். காலைக் கதிர் மெல்லக் குகையில் ஊடுருவியது.

“எப்படி ஒரு மனிதனை என் தலை மேல் தூக்கி வீசி எறிந்து அவன் கழுத்தை உடைப்பது என்று சொல். அதே போல் நான் உன்னைக் கொல்ல வேண்டும். அதற்கு முன் அதைச் சொல்லி விடு” என்று முழக்கமிட்டான்.

இதுவரை கேட்டிருந்த வெகுளியான பிரகடனத்தில் எல்லாம் இதுதான் மிகச் சிறந்தது. அது அவ்வளவு கேவலமாய் இருந்ததால் சாகப் போகும் நேரத்திலும் எனக்குச் சிரிப்பாய் வந்தது. இங்கே சொல்லியே ஆக வேண்டும். சாவு எனக்கு இப்போதெல்லாம் அவ்வளவு பயத்தைக் கொடுப்பதில்லை. மதிப்பில்லா மனிதர்களைப் பற்றிய லிஸ்ஸின் நிலையில்லா தத்துவத்திற்கு நான் அடிமை ஆகி விட்டேன். அவள் சொன்னது மிகவும் சரியென்பதை நான் உணர்ந்து விட்டேன். நாமெல்லாம் தொட்டிலில் இருந்து கல்லறை தாவும் நகைச்சுவையான உருவங்கள். நம்மையும் நமக்குப் பிடித்த சிலரை விட நமக்கு வேறு யாரிடமும் அவ்வளவு ஆர்வம் இருப்பதில்லை.

தோஜோவின் பின்னல் சோ-டா நின்றிருந்தாள். அவள் தன் வலது உள்ளங்கையை விரித்தவாறு கையை நீட்டினாள். அது கேஸ்பக்கில் தலையை எதிர்மறையாகத் திரும்புவதாக அர்த்தமாம்.

“எனக்கு யோசிக்க நேரம் கொடு” என்று நேரம் கடத்த முயற்சி செய்தேன். தோஜோ அன்றிரவு வரை கெடு விதித்தான். ஒரு நாள் அதைப் பற்றி யோசிக்க அனுமதித்தான். அதன் பின் அவன் கிளம்பி விட்டான். அவனது பெண்களும் கிளம்பி விட்டார்கள் ஆண்கள் வேட்டையாடவும் பெண்கள் ஸ்தோலுவின் பெண்கள் போல் சூடான குளத்தில் குளிக்கவும். “ஆட்டா” என்றாள் சோ-டா. இந்தக் காலைச் சம்பிரதாயத்திற்கு என்ன அர்த்தம் என்று அவளிடம் கேட்டேன். அதைப் பின் சொல்கிறேன்.

அங்கே நான் இரண்டு மூன்று மணி நேரம் அப்படியே கட்டுண்டு கிடந்தேன். அதன் பின் சோ-டா குகைக்கு வந்தாள். அவளிடம் ஒரு கூர்மையான கத்தி-என் கத்தி- இருந்தது. அதை வைத்து எனது கட்டை அறுத்தாள்.

“வா போகலாம்.” என்றாள். “காலுவோடு சேர்த்துவிட நான் வருகிறேன். பாண்ட்லுவை விட்டு நீங்கும் நேரம் சோ-டாவிற்கு வந்து விட்டது. இருவரும் சேர்ந்து க்ரோலுவிடம் செல்வோம். அதன் பின் காலுவிடம் செல்வோம். தோஜோ இன்றிரவு உன்னைக் கொன்று விடுவான். அவன் என்னையும் கொன்று விடுவான் உனக்கு நான் உதவி செய்தது தெரிந்தால். அதனால் இருவரும் சேர்ந்தே சென்று விடுவோம்.”

“நான் உன்னுடன் வருகிறேன் க்ரோலுவிடம் சேர்வதற்கு.” என்றேன். “அதன் பின் நான் என் மக்களைச் சந்திக்க ‘ஆதியினை நோக்கி'”.

“நீ திரும்பிப் போக முடியாது. அது தடை விதிக்கப்பட்டது. அவர்கள் கொன்று விடுவார்கள். இவ்வளவு தூரம் வந்து விட்டாய். திரும்பிச் செல்ல முடியாது” என்றாள்.

“நான் போயே ஆக வேண்டும்” என்று வற்புறுத்தினேன். “என் மக்கள் அங்கே இருக்கிறார்கள். நான் அங்கே சென்று அவர்களை இங்கே வரவழைக்க வேண்டும்”

நான் வற்புறுத்த அவள் வற்புறுத்த பின் இருவரும் சமாதானமானோம். க்ரோலுவின் நாட்டு எல்லை வரை அவளை நான் கூட்டிச் செல்வதென்றும் அதன் பின் நான் என் மக்களைத் தேடிச் சென்று வடக்கில் பாதுகாப்பான இடத்தில் கொலை பாவம் செய்யாத மக்களைத் தேடிச் செல்வதென்றும் முடிவெடுத்தோம். என்னிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருட்களை எல்லாம் அவள் என்னிடம் திரும்பிக் கொண்டு வந்து கொடுத்தாள். துப்பாக்கி கத்தி குண்டுகள் வெற்றிடக் குடுவை அனைத்தும். அதன் பின் இருவரும் கைகோர்த்துக் கொண்டு மலைப்பாறையில் இருந்து இறங்கி வடக்கு நோக்கிச் சென்றோம்.

மூன்று நாட்களாய் நாங்கள் அதே வழியில் பயணித்துக் கொண்டிருந்தோம். அதன் பின் வேயப்பட்ட குடிசைகள் நிறைந்த ஒரு கிராமத்தில் விடியும் வேளை வந்து சேர்ந்தோம். சோ-டா தனியாகச் செல்வதாகக் கூறினாள். நான் அங்கிருக்க விருப்பம் இல்லை என்றால் உடனே சென்று விட வேண்டும் என்று கூறினாள். இல்லை என்றால் திரும்பிச் செல்வது தடை செய்யப்பட்டதென்று கூறினாள். அதனால் அவள் சென்று விட்டாள். அவள் மிகவும் அன்பானவள். அவள் மிகவும் விசுவாசமானவள் உறுதி மிக்க போராளி. ஒரு ஆண் போன்றவள். அவள் காட்டுமிராண்டியாக இருந்தாலும் கொஞ்சம் பக்குவப்பட்டவள். பரிசுத்தமானவள். தோஜோவின் மனைவியாக இருந்தவள். கேஸ்பக்கின் வினோத வழக்கத்தில் க்ரோலுகள் நடுவில் வேறொரு கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்வாள். ஆனால் நான் திரும்பி வரும்போது அவள் அவனை விட்டுவிட்டு என்னிடமே வந்து விடுவதாகச் சொன்னாள். ஏனெனில் என்னைத்தான் அவளுக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னாள். ரொம்ப காலமாக வெட்கப்பட்டுக் கொண்டிருந்த நான் இன்று ஒரு பெண்கள் விரும்பும் மனிதனாகி விட்டேன்.

அந்த ஊரில் எந்த மாதிரி மனிதர்கள் வசிக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் எல்லையிலேயே அவளை விட்டுவிட்டு நான் இருள் குவிந்திருந்த தெற்கு நோக்கித் திரும்பி விட்டேன். பாண்ட்லு நாட்டின் எல்லையைத் தொட்டு விடக் கூடாது என்பதால் மேற்குப் பக்கமாகச் சிறிது விலகிச் சென்றேன் மூன்றாம் நாளன்று. தோஜோவைச் சந்தித்து அவனது சிறைப் பறவையாக மாற நான் விரும்பவில்லை. ஆறாவது நாள் ஸ்தோலுகள் இருந்த அந்த மலைச் சிகரத்தை நோக்கி வந்தேன். அதை நெருங்க நெருங்க என் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. ஏனெனில் அங்குதான் என் கண்மணி லிஸ் இருக்கிறாள். விரைவில் அவள் கரங்களை நான் கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன். அவளது சூடான உதடுகள் என் உதடுகளுடன் கலக்கும். ஏற்கெனெவே அந்த மகிழ்ச்சியையும் காதலையும், என்னை மீண்டும் கண்டதும் அவளது கண்களில் இருந்து மின்னும் ஒளியையும், நான் மனதில் கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டேன். கடைசியில் இருந்த அந்த மரத்தைத் தாண்டி மலைச் சரிவை நோக்கி ஓடினேன்.

விடிந்து வெகு நேரம் ஆகி இருந்தது. பெண்கள் எல்லாம் குளத்தில் இருந்து திரும்பி இருக்க வேண்டும். இருந்தாலும் அருகில் செல்லச் செல்ல உயிர்கள் வாழ்வதற்கான தடயமே தெரியவில்லை. “அவர்கள் அதிக நேரம் அங்கே இருக்கிறார்களோ” என்று நினைத்தேன். மலைச் சரிவில் மிக அருகில் வந்தபோது நான் பார்த்த காட்சி என் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர உடைத்து நொறுக்கி விட்டது. நான் இல்லாத நேரம் அங்கு என்ன நடந்தது என்பதற்கான மோசமான மற்றும் மௌன சாட்சியங்களாய் அவை இருந்தன. சதைகள் நீக்கப்பட்ட எலும்புகள், மனிதர்கள் போன்ற உருவங்களின் எலும்புகள், அங்கு வாழ்ந்த ஸ்தோலு இன மக்களின் எலும்புகள் சிதறிக் கிடந்தன. எந்தவொரு குகையிலும் யாரும் இருந்ததற்கான அறிகுறி இல்லை.

அந்தக் கொடூரமான தடயங்களுக்கு நடுவில் என் வாழ்நாளின் மகிழ்ச்சியை சுக்கு நூறாக்கும் ஒரு மெலிந்த எலும்பு தென்படுகிறதா என்று நுணுக்கமாகத் தேடிப் பார்த்துக் கொண்டே இருந்தேன். வெகு கவனமாகத் தேடிப் பார்த்ததில் மனிதக் குரங்கில் இருந்து சிறிது வித்தியாசப்படுகின்ற எந்தவொரு மண்டை ஓடும் அந்த இருபது எண்ணிக்கையில் இருக்கும் எலும்புகளில் இல்லை. நம்பிக்கை இன்னும் உயிர் வாழ்ந்தது. இன்னொரு மூன்று நாட்கள் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என்று நான்கு திசைகளிலும் தேடிப் பார்த்து விட்டேன் கேஸ்பக்கின் கோடரி மனிதர்களை. ஆனால் ஒரு சிறு தடயமும் கிடைக்கவில்லை. இப்பொழுதெல்லாம் மழை நிறையப் பெய்து கொண்டே இருந்தது. கேப்ரோனாவில் குளிர் காலம் ஆரம்பித்து விட்டிருந்தது.

தேடுவதை ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டு டைனோசர் கோட்டை நோக்கிச் சென்றேன். ஒரு வாரம் – புராதனமான உலகத்தின் பயங்கரங்கள் நிறைந்த ஒரு வாரம் – தெற்கு என்று நினைத்த திசை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன். கதிரவன் அதன் பின் வரவே இல்லை. மழை விடுவதற்கான வாய்ப்பே தெரியவில்லை. நான் எதிர்கொண்ட விலங்குகள் எல்லாம் மிகவும் கம்மியாகவே இருந்தன. ஆனாலும் மிகவும் கோபம் கொண்டவை. இருந்தாலும் நான் உயிர் பிழைத்தேன். முழுவதும் தொலைந்து விட்டேன் என்று புரியும் வரை நடந்தேன். இனி ஒரு வருடம் முழுவதும் கதிரவன் ஒளி வீசினாலும் என் உடமைகளை நான் கண்டே பிடிக்க முடியாது. இந்த பயமுறுத்தும் உண்மை எனக்குப் புரிந்த போது, லிஸ்ஸை இனி கண்டே பிடிக்க முடியாது என்று புரிந்த போது நான் இன்னொரு கல்லறையைக் கண்டேன். அது வில்லியம் ஜேம்ஸின் கல்லறை. ஒரு சின்னக் கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அவன் செப்டம்பர் 13 அன்று ஒரு பட்டாக்கத்திப் புலியினால் கொல்லப்பட்டு இறந்ததாகக் குறிப்பிட்டது.

அதன் பின்தான் நான் உண்மையிலேயே கைவிட்டு விட்டேன் என்று எண்ணுகிறேன். வாழ்வில் எப்போதும் இது போல நம்பிக்கை இழந்ததும் இல்லை. விரக்தியானதும் இல்லை. தனி மரமாய் நின்றதும் இல்லை. நான் தொலைந்து விட்டேன். என் நண்பர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. அந்த நம்பிக்கையை என்னுள் விதைக்கக் கூட என்னால் முடியவில்லை. நானே செத்து விடலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் உயிர் வாழ்கிறேன். யாருக்கும் பயன்படாமல் நம்பிக்கை இல்லாமல் பயமுறுத்தும் ஒரு பொருளாய் ஆகி விட்டேன். எனது முன்னோர்களில் ஒன்றான பழங்கால ஊர்வன விலங்கு ஒன்று உயிர் வாழ்ந்து காலங்காலமாய் கடத்தி வந்து எனக்குத் தந்த அதன் சிறு மூளையை வழிகாட்டிய மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நோக்கம் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம்.

இறுதியில் நான் அந்தப் பெரிய செங்குத்துப் பாறைகளை அடைந்தேன். மூன்று நாட்களின் பைத்தியக்கார முயற்சியில் நான் உச்சியை அடைந்தேன். ஏணி போன்ற பொருட்களை உருவாக்கினேன். குறுகலான ஓட்டைகளில் குச்சிகளைச் செருகினேன். அதன் மேல் கை கால் வைப்பதற்கான தடங்களை வெட்டினேன். ஓரு வழியாக மேலே ஏறினேன். உச்சிக்குப் பக்கத்தில் ஒரு பெரிய குகை இருந்தது. அது ட்ரியாசிக் காலத்திய ஒரு பெரிய பறவையின் இருப்பிடமாக இருந்தது. இப்போது என்னுடையதாகி விட்டது. அதை வெட்டி வீழ்த்தி விட்டு எனது இருப்பிடமாக மாற்றினேன். உச்சிக்குச் சென்று அகண்ட சாம்பல் நிற பயங்கரமான பசிபிக் பெருங்கடலின் தூரத்தில் தெரியும் தென் குளிர் காலத்தைப் பார்த்தேன். அங்கே குளிராக இருந்தது. இன்று இங்கேயும் குளிராக இருக்கிறது. இருந்தாலும் இங்கே அமர்ந்து நான் பார்க்கிறேன் பார்க்கிறேன் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் வராது என்று தெரிந்தும் எதாவது ஒரு படகு வரும் என்று.

– தொடரும்…

தமிழாக்கம்: சு.சோமு, Translation of the book ‘The Land That Time Forgot’ by Edgar Rice Burroughs
வெளியான மாதம்/ஆண்டு: May 2017 in kdp.amazon.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *