முப்பந்தல் – ஒரு பக்கக் கதை





(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(தமிழ் கூறும் நல்லுலகத்தின் திருக்கோவலூர் பகுதியை ஆண்டு வந்த மன்னன் மலையமான் திருமுடிக் காரி வசம் பாரி மகளிர் இரட்டையரை பாரியின் மறைவுக்குப் பிறகு ஒப்படைத்துச் சென்றார் பாரியின் உற்ற நண்பர் புலவர் கபிலர்.)
முதலாழ்வார்கள் மூவர் எம்பெருமானை தரிசித்து தீந்தமிழ்ப் பாசுரங்கள் இயற்றிய திருக்கோவலூர் நகரம். பகல் வேளையில் இருள் சூழ்ந்து மழை பொழிந்த தருணத்தில் ஔவைப் பாட்டி, அந்த சிறிய வீட்டின் திண்ணையில் மழைக்கு ஒதுங்கி அமர்ந்தார்.

பாட்டியின் வருகை அறிந்து உள்ளிருந்து வெளிப்பட்டனர் பாரி வள்ளலின் புதல்வியர் அங்கவை சங்கவை. முகம் மலர வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
தூங்கா விளக்கின் வெளிச்சத்தில் இளம்பெண்கள் இருவரையும் பார்த்தார் ஔவை. இளைஞிகள் இருவரும் தங்கள் வருத்தம் எதையும் துளியும் வெளிக்காட்டாமல் பாட்டியின் ஈர உடைகளைக் களையச் செய்து தாங்கள் அணியும் சிற்றாடைகளை (தாவணி) அவரிடம் அளித்தனர்.
ஔவையின் முகத்தில் புன்னகை. பால், பழங்கள், தண்ணீர் அளித்து உபசரித்தனர். ஔவை உண்டு பருகி மகிழ்ந்தார். அங்கிருந்த சிறிய கட்டிலில் தலை சாய்த்தார்.
அங்கவை சங்கவை அவர் அருகில் அமர்ந்தனர். கண் மூடிய ஔவை, இந்த குமரிகளுக்குத் திருமணம் நடத்திப் பார்க்க வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டார்.
வெளியே மழை பொழிந்து கொண்டிருந்தது…
(ஔவையார், மலையரசன் தெய்வீகன் என்னும் சிற்றரசருடன் பாரி மகளிர் திருமணத்தை முன்னின்று நடத்தினார்.அவர், மூவேந்தரையும் அழைத்து மூன்று வகை பந்தல் அமைத்து திருமணத்தை நடத்தியதால் அந்த இடம் முப்பந்தல் என்று வழங்கப்பட்டது. முப்பந்தல் குமரி அருகில் உள்ளது அகில இந்திய வானொலியில் கூறப்பட்ட தகவல்)
– ட்வின்ஸ் கதைகள் 10, முதற் பதிப்பு: 2020, எஸ்.மதுரகவி, சென்னை