நோ-வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 5,518 
 

2030, மார்ச் 4ஆம் தேதி

மணி ஐந்தாகி விட்டிருந்தது. அலுவலகத்தில் சந்தோஷ் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டு இருந்தான். வேலை நேரம் முடிந்தும் அவன் பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருப்பதை பார்த்த சக அலுவலர் விமல்,

“என்ன சந்தோஷ் ரொம்ப பரபரப்பா இருக்கீங்க இன்னும் வேலை முடியலயா?”, எனக் கேட்டார்.

“ஆமா விமல். ஒரு பழைய அக்கவுண்ட் பத்தின டீடெயில்ஸ ஹெட் ஆஃபீஸுக்கு இன்னைக்கே மெயில் அனுப்பணும்னு பாஸ் சொல்லிட்டாராம். அந்த டீடெயில்ஸ் அனுப்பிட்டு தான் போகணும்னு சொல்லி மேனேஜர் என்னை விடவே மாட்டேங்கிறாரு. Soft copyம் இல்ல. ஃபைலும் எங்கே வெச்சாங்கன்னு தெரியல. எங்கே தேடுனாலும் கிடைக்கவே மாட்டேங்குது”

“அடக் கடவுளே. இப்பவே மணி அஞ்சாகிடுச்சே. நீங்க எப்ப தேடி வேலைய எல்லாம் முடிச்சிட்டு கெளம்புறது?”

“அதான் சார் எனக்கும் ஒண்ணும் புரியல. நேத்து பத்து நிமிஷம் லேட்டா போனதுக்கே சந்தியா சகட்டுமேனிக்கு திட்டுனா. மறுபடியும் லேட்டா வந்தா என்னை பெட்ல படுக்க விட மாட்டாளாம். அதுக்கு வேற ஆள கூட்டிட்டு வர வேண்டி இருக்கும்’ன்னு சொல்லி பயமுறுத்துறா”

“அடப்பாவிகளா… இப்ப இப்படி எல்லாமா ப்ளாக் மெயில் பண்றாங்க”

“ஆமா சார். வர வர நிலைமைலாம் ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு”

“சரி சரி. உங்க கூட பேசிட்டு இருந்தா என் நிலைமையும் கவலைக்கிடம் ஆயிடும். நான் கெளம்புறேன். நீங்களும் சீக்கிரமா வேலைய முடிச்சிட்டு போய் சேருற வழியப் பாருங்க”

‘ஒரேடியா தான் போய் சேரணும் போலருக்கு’ என மனதுக்குள் எண்ணியபடி ஃபைல்களை தேடினான் சந்தோஷ். ஒரு 20 நிமிட தேடலுக்குப் பிறகு ஃபைலை கண்டுபிடித்து எடுத்தான். ஃபைலை எடுத்துக் கொண்டு வந்து கணினி முன் அமர்ந்தான். அவசரத்தில் தப்பு தப்பாக டைப் செய்து திரும்ப திரும்ப திருத்திக் கொண்டே இருந்தான். பதட்டத்தில் சந்தோஷிற்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன.

‘ஐயோ… பாடி மைண்ட் எதுவுமே வேலை செய்ய ஒத்துழைக்க மாட்டேங்குதே’

ஒரு வழியாக ஈ-மெயிலை அனுப்பிவிட்டு வேகமாக மேனேஜர் சுந்தர்ராஜினிடம் சென்று விஷயத்தை கூறினான்.

“சார், நீங்க சொன்ன அந்த அக்கவுண்ட் பத்தின விவரங்கள மெயில் பண்ணிட்டேன். நான் கெளம்பட்டுமா?”

“இருயா. உடனே றெக்கைய கட்டிக்கிட்டு பறக்காத. மெயில் வந்துடுச்சானு ஃபோன் பண்ணி கன்ஃபார்ம் பண்ணிக்குறேன். மாத்தி எதையாவது அனுப்பி தொலைச்சிட்டா மறுபடியும் நொய் நொய்’ம்பாங்க”

மேனேஜர் சுந்தர்ராஜன் ஹெட் ஆஃபீஸுக்கு ஃபோன் செய்தார்

‘கடவுளே..‌. கை நடுக்கத்துல எதுவும் தப்பா அனுப்பிருக்க கூடாது’

“(ஃபோனில்) ஹலோ சார்”

“…”

“நீங்க கேட்ட டீடெயில்ஸ் மெயில் பண்ணிட்டேன் சார்”

“…”

“ஓகே சார் ஓகே சார்”, எனக் கூறிவிட்டு ஃபோன் ரீசீவரை வைத்தார்.

“சார், அப்ப நான் கெளம்பட்டுமா?”

“இருயா. ஒரு அஞ்சு நிமிஷம் போனா செக் பண்ணி சொல்லிடுவாங்க. அதுக்கு அப்புறம் போலாம்”

“கொஞ்சம் என் நிலைமைய புரிஞ்சுக்கங்க சார். சந்தியா கேவலமா திட்டுவா சார்”

“யோவ் எதோ உனக்கு மட்டும் தான் பிரச்சினை இருக்க மாதிரி பேசாதயா. அங்க திட்டுனா வாங்கிக்கலாம். இங்க வேலை போச்சுனா சோத்துக்கு என்ன பண்ணுவ?”

“இப்ப கெளம்புனா தான் சார் எலக்ட்ரிக் ட்ரெயின் புடிச்சு டைமுக்கு போய் சேர முடியும்”

“ஏன் பைக் இல்லையா உன்கிட்ட?”

“பெட்ரோல் போடுறளவுக்கா சார் சம்பளம் தர்றீங்க”

“சரிய்யா. அந்த பொண்ணு பேரு என்ன சொன்ன?”

“சந்தியா சார்”

“ஹான் சந்தியா. வேலை போச்சுன்னு வை அப்பவும் அந்த சந்தியா பொண்ணு சீக்கிரமா வந்துட்டன்னு உன்னை பாராட்ட போறது கிடையாது. திட்டுனா யோசிக்காம கால்ல விழுந்து சரண்டர் ஆயிடு. கூச்சம் நாச்சம் பட்டா உசுரோட சுத்திட்டு இருக்க முடியாது. புரியுதா!!”

‘சொல்றதுக்கு என்ன வலிக்குது. பட்டா தான தெரியும்’ “சரிங்க சார்”

சிறிது நேரத்தில் ஃபோன் மணி அடித்தது. சுந்தர்ராஜன் எடுத்து பேசினார்.

“ஹலோ”

“…”

“மெயில் வந்துடுச்சா சார்?”

“…”

“ஓகே சார்”

“…”

“இது எங்க கடமை சார்”

ஃபோன் பேச்சு வளர்ந்து கொண்டே போனது.

‘ஐயோ பேசிட்டே இருக்கானே. சீக்கிரம் முடியா. டைம் ஆகுது’

“சார்.. நான் கெளம்பட்டுமா…”

போகாதே என்பது போல் சைகை காட்டியபடி சுந்தர்ராஜன் ஃபோனில் தொடர்ந்து பேசினார். சந்தோஷ் செய்வது அறியாது நின்று கொண்டு இருந்தான். ஒரு வழியாக சுந்தர்ராஜன் ஃபோன் பேச்சை முடித்துக் கொண்டு சந்தோஷை பார்த்தார்.

“நீ கெளம்பலாம் சந்தோஷ். டீடெயில்ஸ் எல்லாம் கரைக்ட்டா இருக்காம்”

“தேங்க் யூ சார்”, எனக் கூறிவிட்டு இரெயில் நிலையத்திற்கு விரைந்தான் சந்தோஷ்.

‘இந்த பாழப்போன ட்ரெயின் கூட நம்ம நேரத்துக்கு சீக்கிரம் வர மாட்டேங்குதே’

சிறிது நேரத்திற்கு பிறகு ட்ரெயின் ப்ளாட்ஃபார்மை வந்தடைந்தது. அவசர அவசரமாக ட்ரெயினில் ஏறிய சந்தோஷ் அங்கிருந்த ஒரு நபரின் மீது பலமாக மோதிவிட்டான்.

“அம்மா…”

“சாரி சார் சாரி சார். அவசரத்துல தெரியாம மோதிட்டேன்”

“அப்படி என்ன சார் அவசரம்?”

“சீக்கிரம் போகணும் சார். அதான்…”

“ட்ரெயினுக்குள்ள தான சார் இருக்கீங்க. ட்ரெயின் அது போற நேரத்துக்கு தான் போகும். நீங்க பதட்டப்படுறதுக்காக எல்லாம் உங்க ஸ்டேஷனுக்கு சீக்கிரம் போயிடுமா என்ன?”, எனக் கூறி சிரித்தார் அந்த நபர். ஆனால் பதிலுக்கு சிரிக்காமல் பதட்டமாகவே இருந்தான் சந்தோஷ். அதைப் பார்த்த அந்த நபர்,

“என்ன சார் சிரிக்கவே மாட்றீங்க? அவ்ளோ மொக்கையாவா இருக்கு?”

“அய்யய்யோ, அப்படிலாம் இல்ல சார். நான் வேற ஒரு டென்ஷன்ல இருக்கேன்”

“அப்படி என்ன சார் டென்ஷன்?”

சந்தோஷ் அவரை தயக்கமாக பார்த்தான்.

“ஓ… சொல்லக் கூடாததுனா சொல்ல வேணாம்”

“அப்படிலாம் இல்ல சார். ரொம்ப லேட் ஆயிடுச்சு. நேரத்துக்கு வரலன்னா அவ கேவலமா திட்டுவா. அதான் ரொம்ப டென்ஷனா இருக்கு”

“ரொம்ப சின்ன வயசுப் பொண்ணா?”

“ஆமா சார்”

“ரொம்ப அழகா இருப்பாளோ?”

“ஆமா சார்”

“அழகான சின்ன பொண்ணு’னதும் நேரங்காலத்த பத்தி எல்லாம் கவலைப்படாம உடனே ஓகே பண்ணிட்டீங்களா?”

“(அசடு வழிந்தபடி) ஹ்ம்ம். ஆமா சார்”

“ஹ்ம்ம். எல்லாருமே இதே தப்பதான் பண்றீங்க. Opinion கேட்கும் போது எதப் பத்தியும் யோசிக்காம சரி சரின்னு சொல்லிட்டு அப்புறம் அவஸ்தை படுறீங்க. இப்ப எனக்கு கூடத்தான் இதே பிரச்சினை இருக்கு. நான் என்ன உங்கள மாதிரி டென்ஷனாவா இருக்கேன்”

“உங்களுக்கும் இதே பிரச்சினை இருக்கா?”

“ஹ்ம்ம் இருக்கு”

“ரீச் ஆக நிறைய டைம் இருக்கா?”

“ம்ஹூம். இப்பவே அஞ்சு நிமிஷம் லேட்”

“அப்புறம் எப்படி சார் இவ்ளோ கூலா இருக்கீங்க? உங்கள திட்ட மாட்டாங்களா?”

“ம்ஹூம். உங்களுக்கு வாய்ச்ச மாதிரி அழகான சின்ன பொண்ணுலாம் எனக்கு அமையல. அவங்க என்னை விட வயசுல பெரியவங்க. நல்ல அனுபவசாலி. பொறுப்பா பொறுமையா தான் எதையும் கேட்பாங்க. காச்சு மூச்சுனுலாம் கத்த மாட்டாங்க”

“ஓஹோ. வயசுல பெரியவங்களா கிடைச்சா இப்படி ஒரு அட்வான்டேஜ் இருக்கா?”

“ஆமா. இந்த விஷயத்த பொறுத்தவரை அனுபவசாலிகள் தான் பக்குவமா நடந்துக்குவாங்க. நம்ம வலிய புரிஞ்சுக்குவாங்க”

“ஆமா சார். நீங்க சொல்றதும் ஒரு வகையில் சரி தான். அவ எப்பவும் அவளோட வேலை ஆனா போதும்னு தான் இருப்பா‌. என் வலி வேதனைய பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டா”

“சின்ன வயசில்ல. அப்படித்தான் இருப்பாங்க”

“வயசுல சின்னவளா இருந்தாலும் அவள வாங்க போங்கனு நான் மரியாதையா தான் கூப்பிடுவேன். ஆனா அவ என்னைய மதிக்கவே மாட்டா. மதிக்கலன்னா கூட பரவால்ல. ரொம்ப மொரட்டுத்தனமா நடந்துக்குவா”

“அப்படி என்ன பண்ணுவா?”

“போன வாரம் ரொம்ப வலியா இருக்கு வேண்டாம்’னு சொன்னேன். அதுக்கு பெட்ல படுத்து இருந்தா என்னை பொரட்டி போட்டு குத்துனா பாருங்க. வலியில இராத்திரி பூரா தூக்கமே வரல தெரியுமா?”

“வலிக்குதுன்னுலாம் பார்க்காதிங்க. அப்புறம் வேற யாராவது உங்க இடத்த புடிச்சிறப் போறாங்க. இப்ப எல்லாம் அவங்களுக்கு டிமாண்ட் ஜாஸ்தி ஆயிடுச்சு. அப்புறம் உங்க நிலைமை இன்னும் மோசம் ஆயிடும்”

“அந்த ஒரே காரணத்துக்காக தான் சார் அவ பண்ற எல்லாத்தையும் பொறுத்து கிட்டு இருக்கேன்”

“பொறுத்துக் கிட்டு தான் ஆகணும். வேற வழி இல்ல”

“ஹ்ம்ம்”

ட்ரெயின் சந்தோஷ் இறங்க வேண்டிய இரெயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

“ஓகே சார். நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் நெருங்கிடுச்சு. இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தோம். ஒருத்தருக்கு ஒருத்தர் பேர் கூட சொல்லிக்கல. ஐ அம் சந்தோஷ். (பாக்கெட்டில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டி) இது என்னோட ஆஃபீஸ் கார்ட். நீங்க ஃப்ரீயா இருக்கும் போது இதுல மேல உள்ள நம்பருக்கு கால் பண்ணுங்க”

“நிச்சயமா கால் பண்றேன்”

“நீங்க உங்க பேர சொல்லவே இல்லையே”

“ஹான். என்னோட பேர் சூர்யா”, எனக் கூறினார். அப்போது ட்ரெயின் இரெயில் நிலையத்தில் நின்றது. சந்தோஷ் அவரிடம் ‘பை’ சொல்லி விட்டு அவசரமாக ட்ரெயினில் இருந்து இறங்கி மீண்டும் ஓட ஆரம்பித்தான். இரெயில் நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்திற்குள் நுழைந்தான். அவன் நேரத்திற்கு லிஃப்ட் கூட சதி செய்தது. வேறு வழி தெரியாமல் துரித கதியில் படிகளில் ஏற ஆரம்பித்தான். மூச்சு வாங்கியபடி ஆறாவது மாடியில் இருந்த தன் அறைக்கு சென்று அறைக்கதவை திறந்தான். அறையினுள் அவன் மீது கடுங்கோபத்தில் அமர்ந்து இருந்தாள் சந்தியா. பயந்தபடி பேச ஆரம்பித்தான்.

“ஐ அம் வெரி சாரிங்க. ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகம். அதான் லேட் ஆயிடுச்சு”

“தத்தி முண்டம் சோத்து மாடு. இங்க புதுசா கல்யாணமான ஒரு பொண்ணு நமக்காக காத்துட்டு இருக்காளே. கொஞ்சமாவது நேரத்துக்கு வரணும்’ங்கிற அறிவு இருக்காயா உனக்கு”

“இல்லைங்க. நிஜமாவே ஆபீஸ்ல வேலைங்க. இல்லாட்டி டைமுக்கு வந்து இருப்பேன்”

“கிழிச்ச. கண்டபடி ஊர் சுத்திட்டு வர்றன்னு சொல்லு. ஊர் இருக்க நிலைமைக்கு நேரத்துக்கு வரணும்’ங்கிற அக்கறை துளியும் இல்ல. எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையா உட்கார்ந்து இருப்பா இளிச்சவாய்ச்சிங்கிற நெனப்பு தான”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லங்க. சொன்னா நம்புங்க”

“நம்பித் தொலையுறேன். பட் ஒன் திங். நேத்து மெரட்டுறதுக்காக பெட்ல படுக்க விட மாட்டேன்னு சொன்னேன். நாளைக்கு மட்டும் லேட்டா வந்த உனக்கு பதிலா வேற ஒருத்தன் தான் படுத்து இருப்பான். பார்த்துக்க”

“ஐய்யய்யோ அப்படி எதுவும் பண்ணிடாதிங்க. நான் டைமுக்கு வந்துடுறேன்”

“சரி பெல்ட்ட கழட்டி விட்டுட்டு பேண்ட்ட நல்லா லூஸ் பண்ணிட்டு வந்து பெட்ல படு”

சந்தோஷ் அவள் சொன்னது போலவே செய்து கொண்டு படுக்கையில் சென்று படுத்தான்.

“ஏன்ங்க கொஞ்சம் பார்த்து வலிக்காம…”

“அழுதாலும் புள்ள அவ அவ தான்யா பெத்தாகணும். அதனால கொஞ்சம் நேரம் வாய மூடிட்டு படு. தேவை இல்லாம டென்ஷன் ஏத்தாத. அப்புறம் எதாவது ஏடாகூடமா ஆயிடப் போவுது”

சந்தோஷ் பயந்தபடி அமைதியாக படுத்து இருந்தான்.

“ஆம்பிளைங்களுக்கு எல்லாம் NOVEED-30 பரவுது. தினம் ஆஸ்பத்திரிக்கு போவணும். ஊசிய போட்டுட்டு ட்ரிப்ஸ் ஏத்திக்கணும்’னு பொறுப்பு இருக்கா கொஞ்சமாவது. இந்த மருந்த சரியான காம்பினேஷன்ல குடுக்குறது ரொம்ப கஷ்டம், கொஞ்சம் தப்பானாலும் உயிர் போய்டும். இத சரியா செய்ய ட்ரையின்டு டாக்டர்ஸ் நர்ஸும் கம்மியா தான் இருக்காங்கன்ற நெனப்பும் சுத்தமா கிடையாது. Timing opinion கேட்கும் போதாவது உங்க வேலைக்கு ஏத்த மாதிரி நேரத்த எழுதி தர்றீங்களானா அதுவும் கிடையாது. யோசிக்காம எதாவது ஒரு நேரத்த எழுதி குடுத்துடுறது. அப்புறம் எங்க உசுர வாங்குறது. என் புருஷன் கல்யாணமான புதுசுலயே இவ்வளவு நேரம் காக்க வைக்குறியேடீன்னு தினம் புலம்புறாரு. பதிலே சொல்ல முடியல உங்களால”

“ஏன்ங்க. ஒரு டவுட் கேட்கலாமா?”

“என்ன?”

“உங்க ஹஸ்பெண்டுக்கும் NOVEED-30 பாதிப்பு இருக்கா?”

“இந்த பிரச்சினை வந்ததுலருந்து அவர நான் வீட்ட விட்டு வெளியவே அனுப்புறதில்ல”, எனக் கூறிக்கொண்டே சந்தோஷ் இடுப்பில் நறுக்கென ஊசியை குத்தினாள் நர்ஸ் சந்தியா. அலறினான் சந்தோஷ்.

“அம்மாஆஆஆ….”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *