கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள் நாடகம்
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 1,242 
 
 

(1999ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி – 1

யாழ்.கொக்குவில் ஞானபண்டித வித்தியாசாலை என்றும் இல்லாதவாறு இன்று ஆரவாரமாகக் காணப்படு கிறது. மாணவ மாணவிகள் வண்ணத்துப் பூச்சிகள் போல் பாடசாலையில் அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டிருக் கிறார்கள். எம் விடுதலைவீரர்கள் தமிழீழத் தாயகத்தை வென் றெடுத்தமை காரணமாக புலம்பெயர்ந்து வாழ்ந்த சிறுவர் களும் இப்பாடசாலையிற் சேர்க்கப்பட்டு பிள்ளைகளின் தொகையும் கூடிவிட்டது சில மாணவர்கள் மரநிழலில் இருந்து சுவாரஸ்யமாக ஏதேதோ கதைத்துக் கொண்டிருக் கிறார்கள். காலைச்சூரியனின் பொன்னொளியில் பாட சாலைக் கம்பீரக் கட்டிடம், மாணவர்களின் கும்மாளம் என்பன பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளிக்கின்றது. நேரம் 830 மணியானதும் பாடசாலை மணி ஒலிக்கவே, மாணவர்கள் தத்தம் வகுப்பறைகளுக்குச் சென்று அமர்கின்றனர். 

தம்பிப்பிள்ளை மாஸ்டர் கணிதம் படிப்பிப்பதற்காக, கணிதப்புத்தகம் சோக்குக்கட்டி, சிறுதடி சகிதம் ஐந்தாம் வகுப்பறைக்குள் நுழைகிறார். ஒருசில மாணவர்கள் ஆசிரியரைக் கண்டதும் காணாததுபோல் சத்தமாகக் கதைத்துக் கொண்டிருக்கின்றனர். மற்றைய மாணவர்கள் ஆசிரியரைக் கண்டு பயபக்தியுடன் எழுந்து… 

பிள்ளைகள் : வணக்கம் சேர்! 

ஆசிரியர் : வணக்கம் பிள்ளைகளே! 

(மீண்டும் குறைந்த ஒலியுடன் கதைத்துக் கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்து கோபம் கொண்டவராக) 

சத்தம் போட வேண்டாம்!. (மேசையில் ஒரு தட்டுத் தட்டுதல். வணக்கம் சொல்லிய பிள்ளைகளை அமரச் செய்துவிட்டு…. ஏனையோரை அப்படியே நிற்கச் சொன்னார்) உங்களுக்குப் படிப்பிக்கு முன் பழக்கவழக்கத்தைப் படிப்பிக்க வேண்டும். (முன்பிருந்த மாணவனைப் பார்த்து..) இங்கு வா! நீ யாருடைய மகன்? எங்கே இருக்கிறனீர்? 

மாணவன் : சண்முகநாதனின் மகன். குரும்பசிட்டியில் இருக்கிறனான். (பார்ப்பதற்கு அழகான துடுக்குத்தனம் கொண்டவன், மேல்நாட்டுப் பாணியில் அவன் காணப்பட்டான்) 

ஆசிரியர் : என்ன பேசாமல் இருக்கிறாய்? (தணிந்த கோபத்துடன்) முன்பு யாரிடம் கணிதம் படித்தனீர்? 

மாணவன் : (சிரித்துப் பாசாங்கு செய்தபடி )நான் கெரர்டானியல் மாஸ்டரிடம் படிச்சனான்.

ஆசிரியர் : இங்கேயா? எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தனீர்? (ஆச்சரியத்துடன்) 

மாணவன் : ‘குறுண்ட் சூல’

ஆசிரியர் : என்ன? ‘குறுண்ட சூல’. அது என்ன? பெயர் ஒருமாதிரி இருக்கு… அது என்ன? பாட சாலையா? என் வாழ்நாளில் கேள்விப்பட்ட தில்லையே. 

மாணவன் : அதுவா? அது ஜெர்மனியில இருக்கு. நான் அங்கதான் படிச்சனான். சேர்! பிற்ற எனக்கு டொச்சில கணக்கை விளங்கப்படுத்து வீங்களா? 

குட மிய லைட தமிழில கணக்கு நான் வடிவாகச் செய்யமாட்டன். 

ஆசிரியர் : ஐயோ! தமிழைக் கொல்கிறார்களே. (தலையில் கை வைத்து சிறிது யோசித்த பின்) உம்மைப் பார்த்தவுடன் எனக்கு விளங்குகிறது. உங்களை எல்லாம் வழிக்குக் கொண்டுவர கனநாள் எடுக்கும். சரி..சரி அப்படியே போய் நில்லும். மற்றவர்? நீர் இங்கு வரலாம். 

மாணவன் 2 : (எந்தவித பயமும் இன்றி) கூப்பிட்டனீங் களா சேர்? இல்லை இல்லை குட்மாணிங்! சேர்? 

ஆசிரியர் : உம்முடைய பெயர் என்ன? 

மாணவன் 2 : ராகுலன் 

ஆசிரியர் : ஆசிரியர் வகுப்பறைக்கு வரும்போது மரியாதை செய்யத் தெரியதா? 

மாணவன் 2 : (கண்ணைச் சிமிட்டிக் கொண்டு) மரியாதை என்றால் என்ன சேர்? நான் படிச்ச பள்ளிக் கூடத்தில அப்படி இல்லையே. அங்க உள்ள மாஸ்டரும் இப்படிச் சொல்லித் தரேல்லை. 

ஆசிரியர் : ஏன் சொல்லித் தரவில்லை? 

மாணவன் 2 : நாங்களும் அவர்களும் பிரண்ஸ் ஆகப் பழகுகிறோம் என்றபடியால் தான் அந்த ஆசிரியர்களும் என்னைக் கண்டால் எழும்புங்கோ என்று சொல்லுறதில்லை. ஏன் சேர்? எழும்ப வேண்டும்? ஆசிரியர் ஏதாவது கேட்பார். எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றா எழும்பி நிற்கிறது? 

ஆசிரியர் : (திகைப்புடன் பதில் சொல்ல முடியாமல்) நீர் எந்த இடம்? 

மாணவன் 2 : ‘ஜியான்’ தான் எங்கட இடம். 

ஆசிரியர் : எங்க முன்பு படிச்சனீர்? 

மாணவன் 2 : பள்ளிக்கூடத்தில தான் படிச்சனான். பின்ன வீட்டிலயா படிக்கனான். 

ஆசிரியர் : எந்த நாட்டில் படித்தனீர்? 

மாணவன் 2 : பிரான்சில் படிச்சனான்… சேர்! எனக்கு பிரெஞ்சில் சொல்லித் தாங்கோ. தமிழில் எக்ஸ்பிளெய்ன் பண்ணாதையுங்கோ! பிளீஸ் சேர்! 

ஆசிரியர் : அது இருக்கட்டும். திறீயும் போரும் கௌ மச்? சொல்லு பார்ப்பம்? 

மாணவன் 2 : திறீயும் போரும்? தேர்ட்டி போர் மாஸ்டர் 34.

ஆசிரியர் : (தலையைச் சுற்றுகிறது..) சரி.. சரி இனி நான் பிரெஞ்சும் டொச்சும் கெதியில படிக்க வேண்டும். நீர் போய் கையைக் கட்டிக் கொண்டு நில்லும். 

ஆசிரியர் : (மேல்நாட்டு உடையணிந்து அலங்கரித் திருந்த சிறுமியைச் சுட்டிக்காட்டி) இங்கே வா! என்ன பிள்ளை? ஆசிரியர் வந்தால் வணக்கம் சொல்ல வேண்டும், மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று தெரியாதா? 

சிறுமி : தெரியாது சேர்! தெரிந்திருந்தால் அப்படிச் செய்திருப்பேனே… 

ஆசிரியர் : வகுப்பில் சத்தம் போடக்கூடாதென்று உனக்கு ஒருவரும் சொல்லித் தரவில்லையா?

சிறுமி : எங்களுக்கு அப்படிச் சொல்லித் தரவில்லை. ஏனென்றால் எங்கட வகுப்புக் கதவுகள் பூட்டி இருக்கும். ஆதனால எங்கட சத்தம் வெளியில் கேட்காது. 

ஆசிரியர் : அப்படியா விஷயம்? கணிதத்தில் எந்தக் கணக்குப் படித்தனீர்? 

சிறுமி : புதுக்கணக்கை எல்லாம் மணிக்கணக்கில் செய்வேன் சேர்!. ஆனால் தமிழ் முறைப்படி செய்யமாட்டேன். டேனீஷ் பாஷையில சொல்லித் தாறீங்களா? அப்படியென்டால் நான் பிடித்திடுவேன்…. 

ஆசிரியர் : டேனீஷா? அது யாருடைய பெயர்? 

சிறுமி : அது பெயரும் இல்லை. ஆக்களும் இல்லை. ஒரு பாஷை டென்மார்க்கை உங்களுக்கு தெரியாதா? 

ஆசிரியர் : ஓம் அம்மா! உலக நாடுகளெல்லாம் உங்களுக்கு இந்த வயதில் தெரியுது. எனக்கோ தமிழையும், இலங்கையையும் தவிர வேறொன்றும் தெரியாதம்மா… (எரிச்சலுடன் மற்றப்பிள்ளைகளைப் பார்த்து விட்டு வெளிநாட்டுப் பிள்ளைகள் என அறிந்து..) நீங்கள் எல்லோரும் இனி இருங்கோ… இது உங்கட பிழை இல்லை.. ஒவ்வொரு நாட்டுச் சூழ்நிலைகளின் பிரதிபலிப்புத்தான் நீங்கள். இனி நீங்கள் எல்லோரும் பெரிய மேதாவியாக வருவீர்கள். உங்கள் திறமைக்கு கணிதம் படிப்பிக்க வேறு ஆசிரியர் தான் வருவார். 

மாணவன் 3 : ஏன் சேர்!… எங்களைக் கண்டு பயப்படுகிறீர்களா? ஏன் இந்த சின்னத் தடியைக் கொண்டு வந்தனீங்கள்? அல்லது தடக்க உதவியாக இருக்கும் என்டா? இது முறிந்து விடுமே. ஏன் பெரிய பொல்லாக ஒண்டு கொண்டுவரலாமே. 

ஆசிரியர் : ஓம் தம்பி! புதிய பெரிய தடியை வாங்கிக் கொண்டு, வீட்டிலேயே இருந்து கொண்டு பென்ஷனுக்கு எழுதிப் போடுவம். நீங்கள் என்னைக் கெதியில பென்ஷன் எடுக்கச் செய்யப் போகிறீர்கள். பெரிய உதவி பிள்ளைகள்.(இரண்டாம் பாடத்துக்கான மணி அடிக்கிறது) தமிழ்ப்பாடத்தில் உங்கள் திறமைகளைக் காட்டுங்கள்! பிள்ளைகள்!! 

காட்சி – 2

(45 வயதுடைய திருமதி. சுந்தரம்பிள்ளை தமிழ் படிப்பிக்க வருதல். முன்பு போலவே மாணவர்கள் நடந்து கொள்கின்றனர். சிறுமி ஒருத்தி மேலிருந்து கதைத்துக் கொண்டிருத்தல்) 

ஆசிரியை : சத்தம் போட வேண்டாம் பிள்ளைகளே! சிறிது மௌனம். (மேசையிலிருந்து சிறுமியைக் கூப்பிட்டு,) இது என்ன கறிக் கடையா? அல்லது கத்தரிக்காய்க் கடையா? ஏன் சத்தம் போடுகிறாய்? படிக்கவேண்டும் என்று தெரியாதா? 

சிறுமி 2 : கறிக்கடை என்டா என்ன ரீச்சர்? (பயம் எதுவுமின்றி) 

ஆசிரியை : என்ன பெடியனா நீ? பொம்பிளைப் பிள்ளையல்லவா? நீ அடக்க ஒடுக்கமாக இருக்க உனது அம்மா அப்பா சொல்லித் தரவில்லையா? 

சிறுமி 2 : ஏன் ரீச்சர்? பெடியனுக்குத்தான் கை, கால், ஆசைகள், உரிமைகள் இருக்கு. பெட்டை களுக்கு அதுதான் எங்களுக்கு இல்லையா? ஆவங்களைப் போலத்தான் நாங்களும். என்ன வித்தியாசம்? சொல்லுங்கோ பார்ப்பம்? பிளீஸ்! 

ஆசிரியை : (மேலும் கதைக்க முடியாமல்) நீ எங்கே இருக்கிறனீர்? இப்படி எல்லாம் கதைக்க யார் சொல்லித் தந்தது? 

சிறுமி 2 : டோற்மூண்டில் நான் பிறந்தனான். 

ஆசிரியை : அது எங்கே இருக்கிறது? 

சிறுமி 2 : ஜேர்மனியில இருக்குது? எனக்கு தமிழ் எழுத வாசிக்கத் தெரியாது… 

ஆசிரியை : அது என்ன? டோற்மூண்ட்.. காட்மூண்ட்…

சிறுமி 2  : டோற்மூண்டில் தமிழ் வகுப்பு ஒண்டு இருக்கு. ஆனால் நான் அங்கு போறதில்லை.

ஆசிரியை  : ஏன் போய்ப் படித்திருக்கலாமே.

சிறுமி 2 : அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போறதால் அவர்களுக்கு என்னை வகுப்புக்கு கூட்டிப்போக நேரமில்லை. தமிழ் சொல்லித் தரவும் நேரம் இல்லை. ஆனால் நான் டொச் வடிவாக பேசுவன், எழுதுவன். நான் டொச் பேசுவதைப் பார்த்து அம்மாவும் அப்பாவும் பெரிய சந்தோஷப்படுவார்கள். எனக்கு இங்கிலிசும் பேசத்தெரியும். ஒரு மாதிரி டொச் உச்சரிப்பிலே வாசித்துப் போடுவன். ஆனால் தமிழ்தான் தெரியாது. தமிழ் எழுத்துக்களைப் பார்த்தால் வடிவான பூக்கள் போல இருக்கு. இனி நீங்கள் சொல்லித்தாங்கோ! 

ஆசிரியை : (மற்றப்பிள்ளைகளும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று ஒருவாறு உணர்ந்து கொண்டு ஒவ்வொரு பிள்ளைகளையும் விசாரித்தல்) நீர் எங்கு படித்தனீர்? 

மாணவன் 4 : நானும் பிரான்சில தான் படிச்சனான்.

மாணவன் 5 : நான் சுவிற்சலாந்தில் படிச்சனான் ரீச்சர்.

மாணவன் 6 : ரீச்சர்! நான் ஜேர்மனியிலதான் டொச்சில் மூண்டாம் கிளாஸ் படித்தனான்.

மாணவன் 7 : நான் மாடம்! கனடாவில் இங்கிலிஸ் மீடியத்தில் இரண்டாம் ஸ்ராண்டர்ட்டில படித்தனான். 

மாணவி 8 : டென்மார்க்கில நான் ரீச்சர்! நாலாம் வகுப்பில் வடிவாகப் படிச்சனான். அம்மா, அப்பா இங்கு கூட்டிக்கொண்டு வந் திட்டாங்கள். 

மாணவி 9 : இத்தாலி நாட்டில் நான் முதலாம் வகுப்பு படிச்சனான். 

மாணவி 10 : ரீச்சர்! எனக்குத் தமிழும் இங்கிலீசும் வடிவாகத் தெரியும். ஏனென்றால் நான் இந்தியாவில் மூன்றாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டேன். 

ஆசிரியை : (அவர்களை நோக்கி) இது நமது தாயகப் பள்ளிக்கூடம். தமிழ்ப் பாடசாலை. இப்போது நீங்கள் பாடம் படிக்க முன்னர் நல்ல பழக்கவழக்கங்களையும் நமது பண்பாட்டையும் படிக்க வேண்டும்; சத்தம் போடக்கூடாது; நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆசிரியர்களுக்கும் பெரியோர்களுக்கும் மரியாதை கொடுத்தல் வேண்டும்; இது தமிழ்ப் பண்பாடு; இதுவே எங்களுக்கு உடன்பாடு. வேற்று நாட்டில் பிறந்தும், வளர்ந்தும், வாழ்ந்தும் வந்த உங்களுக்கு இது தெரிய நியாயமில்லைதான். அம்மா, அப்பா ஆவது பழக்கியிருக்க வேண்டும். ஆனால் இனிமேல் இப்படி நடக்கக்கூடாது. உங்கள் பலருக்குத் தமிழ் தெரியாது. எனவே உங்களை இரண்டாம் வகுப்பில் விடவேண்டும். உங்களுக்கு வயதும்கூட.. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாவற்றையும் நான் நாளை அதிபரோடு கதைக்கிறேன். (கூறிக்கொண்டிருக்கும் போது அடுத்தபாட மணி ஒலித்தல்) உங்களுக்கு அடுத்த பாடம் சங்கீதம். அதற்கு ஆயத்தமாகுங்கள். (எனக்கூறி விடைபெறல்) 

காட்சி – 3

(மாணவர்கள் சத்தமாகக் கதைத்துக் கொண்டிருந்தனர்.) 

சங்கீத ஆசிரியை : என்ன சத்தம்? இது என்ன சந்தையா? எல்லோரும் கொப்பியை எடுங்கோ! (மாணவர்கள் கொப்பியை எடுத்துப் புரட்டுதல்) நேற்று என்ன கீர்த்தனை படித்தோம். -யாராவது சொல்லுங்கள்!! 

மாணவி : கலைஞானம் அருள்வாயே கலைத்தேவியே என்னும் கீர்த்தனை. 

ஆசிரியை : இது எந்த ராகத்தில் அமைந்துள்ளது? 

மாணவன் : கம்சத்தொனி ராகம். ரீச்சர்! 

ஆசிரியை : இந்தக் கீர்த்தனைமயின் தாளம் என்ன? உமா சொல்லுங்கள்! 

உமா : ஆதி தாளம். ரீச்சர்! 

ஆசிரியை : இந்தக் கீர்த்தனையை பிழையில்லாமல் யார் முழுதும் பாடுவீர்கள்? 

சிறுமியர் இருவர் : நான். நான்.. நான். நான். 

ஆசிரியை : (சிறுமியைச் சுட்டிக்காட்டி).. எங்கே நீர் பாடும்? 

சிறுமி : சின்னச் சின்ன ஆசை. சிறகடிக்கும் ஆசை- முத்து முத்து ஆசை 

ஆசிரியை : போதும். போதும். நிறுத்து! (காதைப் பொத்துதல்) சிறுமி தொடந்து பாட மாணவர்கள் ரசித்தல்) 

இதென்ன கலியுககாலம்? கீர்த்தனை பாடச் சொல்ல சினிமாப் பாட்டு பாடுகின்றீர்? இப்ப எல்லாம் சிலிமா மோகத்தில் தான் பிள்ளைகள் வளருதுகள்! (கோபத்துடன்)

மாணவி : ஏன் ரீச்சர்! சின்ன சின்ன ஆக்களுக்கு, சின்ன சின்ன ஆசைகள் தானே வரும். ரீச்சர்! 

ஆசிரியை : (கோபத்துடன்) சின்ன ஆட்களெல்லாம் இப்போது பெரியாளாகிவிட்டினம். இனிப் பெரிய பெரிய ஆசையும் வரும். உங்களுக்கு சங்கீதம் படிப்பிக்க இனி இளையராஜா, கங்கையமரன் ஆகியோர் வருவார்கள். நான் போகிறேன். (ஆத்திரத்தோடு வகுப்பை முடித்துச் செல்லல்.) 

(மணி ஒலிக்க பாடம் மாறுதல்) 

காட்சி – 4

(மாணவர்கள் முன்புபோலவே நடந்து கொள்ளல்) 

சமயபாட ஆசிரியை : குட் மோணிங் ஸ்ருடன்ஸ்! 

சில மாணவர்கள் : குட்மோணிங் ரீச்சர்! 

சமயபாட ஆசிரியை : (மீண்டும் குட்மோணிங் சொல்லுதல். சில மாணவர்கள் கதைத்தல், சிலர் காலை உணவு சாப்பிடல்,) நான் வந்துவிட்டேன். சத்தம் போடாமல் அமைதியாக இருங்கள்.! (சிரிப்போடு) நான் கூறுவதை வடிவாகக் கவனியுங்கள். இது எங்கள் தாய்நாட்டுப் பாடசாலை, இடைவேளைகளில் தான் விளையாடலாம். நீங்கள் கதைக்கலாம் அதற்கு முன்பு நீங்கள் ஆசிரியர் படிப்பிப்பதை அவதானமாகக் கேட்க வேண்டும். விளங்குகிறதா? ஆசியர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். பெரியவர்கள் நிற்கும்போது சிறியவர்களாகிய நீங்கள் கதிரைகளில் இருக்கக்கூடாது இது எங்கள் கலாச்சாரம். 

ஒரு மாணவி : ஏன் ரீச்சர்? பெரியாட்கள் நிற்கும்போது நாங்கள் நிண்டால் அவர்களுக்கு கால் நோகாமல் இருக்குமா? அதுக்கா?

ஆசிரியை : (சிரித்துவிட்டு) அப்படி இல்லை. ஒரு மரியாதைக்காக, அவர்களுக்கு கணம் பண்ணுவதற்காக அப்படிச் செய்ய வேண்டும். விளங்குகிறதா? முன்பு நீங்கள் படித்த பாடசாலைகளை, அந்தப் பழக்க வழக்கங்களை முற்றாக மறந்துவிட வேண்டும். இனி இங்குள்ள பிள்ளைகளின் பழக்கவழக்கங்களைப் பழக வேண்டும். ஆசிரியர்களுடன் எதிர்த்துக் கதைக்கக் கூடாது. ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அதை மறக்காமல் வகுப்பு முடிந்ததும் கேட்கலாம். 

ஒரு மாணவன் : (ஆச்சரியத்துடன் மற்ற மாணவனைப் பார்த்து) இந்த ரீச்சர் எங்களை ஏசவில்லை. என்ன காரணம்? நல்ல ரீச்சர். எங்களைப்பற்றி எல்லாம் தெரியும் போலக் கதைக்கிறா. 

மற்ற மாணவன் : அதுதானே … விசயம் ஐயாவிடம் இருக்கு.. 

ஒரு மாணவன்: சொல்லேண்டா. என்ன என்று? 

மற்ற மாணவன் : இந்த ரீச்சர் முன்பு ஜேர்மனியில் இருந்தவ. எங்களுக்கு அவ சொந்தம். (தன் ஷோட்டுக் கொலரை உயர்த்திப் பெருமையடித்தல்) 

இன்னோர் மாணவன் : அவவுக்குத் தெரியும் தானே. அங்கத்தையப் பழக்கவழக்கங்கள், படிப்புகள் எல்லாம். அதுதான், மற்ற ரீச்சர் மாஸ்டர் போல இவ இல்ல. ஏசவில்லை, திட்டவில்லை. 

ஒரு சிறுமி : கையில தடியும் கொண்டுவரவில்லை. 

சமயபாட ஆசிரியை : பிள்ளைகளே! நீங்கள் ஒழுங்கான, ஈழத் தமிழ்ப் பிள்ளைகள் போல நல்ல பிள்ளை களாக வாழப் பழகிக் கொள்ளவேண்டும். வெளிநாடுகளில் வாழ்ந்த உங்களுக்கு முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். பின்பு எல்லாம் சரியாகப் போய்விடும். தமிழ் படிக்க கஷ்டமாக இருக்கிறதென்றோ, ஆசிரியர்களுக்குப் பயந்தோ பாடசாலைக்கு வராமல் நிற்கக்கூடாது. நன்றாகத் தாய் மொழி படிக்க வேண்டும். வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்ய வேண்டும். தமிழ் ஈழத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில்தான் உண்டு. நல்ல அறிஞர்களாக வரவேண்டும். மகாத்மாகாந்தி, பாரதியார், ஆறுமுக நாவலர், விபுலாநந்தர் போன்ற பெரியோர்களைப் பற்றி நீங்கள் அறியவேண்டும். அவர்களைப்போல் நீங்களும் வரவேண்டும். அப்போதுதான் ஆசிரியையான எனக்கும் நல்ல சந்தோஷம்.. இனி… புத்தகத்தை எடுங்கோ! 

ஒரு மாணவனைச் சுட்டிக்காட்டி.. சைவசமயத்தின் முழுமுதற் கடவுள் யார்? 

மாணவி : எனக்குத் தெரியாது ரீச்சர்! நான் பிரான்ஸில் படிக்கும்போது கிறிஸ்தவமதம் தான் படிப்பிச்சவை. நாங்கள் அந்த பாடத்துக்குப் போவதில்லை. 

மற்ற மாணவி : நாங்கள் சேர்ச்சுக்குப் போறனாங்கள். கடவுள் எல்லாம் ஒன்றுதானே. என்று எங்கட ஆக்கள் சொல்லுவார்கள். 

ஆசிரியை : கடவுள் எல்லாம் ஒன்றுதான்.. ஒவ்வொரு சமயத்தவர்களின் நம்பிக்கையைப் பொறுத்தது. நாங்கள் எல்லாம் சைவசமயத்த வர்கள்தானே. யாராவது கிறிஸ்தவ மதத்தவர்கள் இருக்கிறீர்களா? 

மாணவர்கள் : (ஏகோபித்த குரலில்) இல்லை ரீச்சர்! 

சமயபாட ஆசிரியை : பத்தாம் பாடத்தை எடுங்கள்! தைப்பொங் கலைப் பற்றிப் படிக்கப் போகிறோம். தைப் பொங்கல் எப்போது வரும்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்! 

ஒரு மாணவன் : தையையும் பொங்கலையும் சேர்த்தால் தைப் பொங்கல் வரும். அதாவது தை+பொங்கல் தைப்பொங்கல். (மாணவர்கள் சிரிக்கவே வெட்கமடைந்து) ‘கை ஆணுங் ரீச்சர்! 

மற்றொரு மாணவி : எனக்குத் தெரியும் ரீச்சர்! தைப்பொங்கல் தை மாதத்தில் வரும்! 

ஆசிரியை : தைப்பொங்கலைப் பற்றி உமக்குத் தெரிந்த வற்றை சொல்லும். தெரியாதவர்கள் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். 

மற்றொரு மாணவி : தைப்பொங்கல் ஆண்டுதோறும் தைமாதம் முதலாம் திகதி தமிழர்களால் கொண்டாடப் படுகிறது. உழவர் திருநாளாம் தைப் பொங்கல் தமிழர்களின் பெருநாளாக விளங்குகிறது. உழவன் மக்களுக்கு உணவைக் கொடுக்கிறான். ஆண்டு முழுவதும் அயராது உழைத்து உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றான். அவனது தொழிலுக்கு மழையும் வெயிலும் அவசியம். இவற்றைத் தருபவன் சூரியன். ஆகவே சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே உழவர்கள் இப்பொங்கல் நாளைக் கொண்டாடு கின்றனர். சூரியனைத் தெய்வமாக மதித்துப் பொங்கலிட்டுத் தம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர். 

ஒரு மாணவி : ஜேர்மனியிலும் மழையையும் வெயிலையும் தருவது சூரியன். அதாவது (SONNE). அப்படி என்றால் அங்குள்ள ஆட்கள் இப்படி சூரியனுக்கு நன்றி செலுத்தவில்லையே.

ஆசிரியை : நீர் கதைக்காமல், கேள்விகள் கேட்காமல் சர்மிளா சொல்வதைக் கேளும். (மௌனம்) 

மற்றொரு மாணவி : மக்கள் முதல் நாளே வீடுகளைச் சுத்தம் செய்வார்கள். தைப்பொங்கல் அன்று அதிகாலை நீராடி, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபடுவர். பின் வீட்டு முற்றத்தை மெழுகி மாக்கோலம் போடுவர். அங்கே நிறைகுடம் வைத்துத் தூபமேற்றி, புதுப்பானை வைத்துப் பொங்கலிடுவார்கள். பொங்கிய பொங்கலைச் சூரியனுக்குப் படைப்பார்கள். தோத்திரங்கள் பாடி வணங்குவர் சிறுவர்கள் பட்டாக கொளுத்துவர். பின்னர் பொங்கற் சாதத்தைத் தாமும் உண்டு, அயலவர்களுக்கும் பகிர்ந் தளித்து மகிழ்வர். உறவினர் இல்லங் களுக்குச் சென்று பொங்கல் வாழ்த்துக்கூறி குதூகலமாக அனைவரும் இத்திருநாளைக் கொண்டயடி மகிழ்வர் 

ஆசிரியை : கெட்டிக்காரி! நல்ல வடிவாகப் பொங்கலைப் பற்றிச் சொன்னீர்! எல்லோரும் கை தட்டி விடுங்கள். (மாணவர்கள் கைதட்டுதல்)

ஆசிரியை : மூன்று வயதில் தேவாரம் பாடிய குழந்தை யார்? 

ஒரு மாணவி : நான் இல்லை. நான் இல்லை.. ரீச்சர்! 

(மாணவர்கள் சிரித்தல்) 

மற்ற மாணவி : திருஞானசம்பந்தர். 

ஆசிரியை : மணி அடிக்கிறது. மிகுதியை நாளைக்குப் படிப்போம். 

அதிபரின் அறிவித்தல்

நாளைக் காலை பத்துமணிக்குப் பெற்றோர், ஆசிரியர் சங்கக்கூட்டம் கூட்டப்படும். பிள்ளைகளின் படிப்பு, தரம், பழக்கவழக்கங்கள், புதிதாகச் சேர்ந்துள்ள வெளிநாட்டில் வாழ்ந்த பிள்ளைகளில் அக்கறை காண்பித்தல், விளையாட்டு மைதானத்தைத் திருத்தி அமைத்தல், என்பன பற்றிக் கலந்துரையாடப்படும். ஐந்தாம் வகுப்பைப் போன்று ஒன்பதாம் வகுப்பிலும் பிரச்சினை உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு சகல ஆசிரியர்களும் சமூகம் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம் 

அதிபர் : எல்லோருக்கும் வணக்கம்! 

இன்று முக்கியமான பிரச்சினை பற்றி உங்களுடன் கலந்து ஆராய வேண்டும். எமது பாடசாலையில் இந்த ஆண்டு பல பிள்ளைகள் சேர்ந்துள்ளனர். அதுவும் வெளிநாட்டில் வாழ்ந்த பிள்ளைகள் கூடுதலாக உள்ளனர். 

அவர்களுக்குத் தமிழ் அறிவு குறைவு. இங்கே வயதை மட்டும் கணித்து பிள்ளைகளை வகுப்பேற்றி விடக்கூடாது. பிள்ளைகளின் தமிழ்மொழி அறிவு, விவேகம், ஊக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, தரம் பிரிக்க வேண்டும். வகுப்புக்கு மீறிய வயதுடன் பிள்ளைகள் இருந்தாலும் நாம் அவர்களின் தமிழ் அறிவைத் தான் பார்க்க வேண்டும். 

ஆசிரியை : ஆம்! உங்கள் கருத்து நியாயமானதுதான். வரவேற்கிறேன். 

அதிபர் : வெளிநாட்டிலிருந்து வந்த பிள்ளைகளுக்கு பாடம் படிப்பிப்பது கஷ்டம் என்று நீங்கள் மனம் சோரக்கூடாது. உங்களது இந்தப் புனித சேவையை இந்தப் பிள்ளைகளுக்கு நீங்கள் கட்டாயம் பாடம் வழங்க வேண்டும். உங்கள் அபிப்ராயங்களை எதிர்பார்க்கிறேன். 

ஆசிரியை : எங்கள் குழந்தைகளை நாம் கைவிடலாமா? கஷ்டமான விஷயந்தான். கடினம் என்று கைவிடலாமா? இந்த எமது இறக்குமதிச் சந்ததிகளை, சொந்தச் சந்ததிகளாக்குவோம். 

பெற்றோரில் ஒருவர் : எனது மகள் பாடசாலைக்குப் போக மாட்டாவாம். ஏனென்றால் அவதான் வகுப்பில பெரிய பிள்ளையாம். சின்னப் பிள்ளைகளுடன் LILG க்க வெட்கமாக இருக்காம். நீங்கள் தான் இதற்கு ஒரு வழிகாட்ட வேண்டும். எனக்கோ பெரிய யோசனையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. 

மற்றொரு பெற்றோர் : எனக்கும் இதே பிரச்சினைதான். இந்தப் பாடசாலை தனக்குப் பிடிக்கவில்லை. நெடுகவும் மாஸ்டரும் ரீச்சரும் ஏசிக் கொண்டிருக்கிறார்கள். படிப்பு முறையே வேறு. ஏதோ ஒரு “போறிங்” ஆக இருக்கிறது. அங்கு எவ்வளவு சுதந்திரம். எவ்வளவு ஜோலி… ஏன் இங்கு வந்தனீங்கள்? என தினம் எங்களையே கேட்டுக்கேட்டு என் நிம்மதியே தொலைந்துவிட்டது. எனது பிரச்சினைக்கும் ஒரு நல்ல முடிவை நீங்கள் தரவேண்டும். 

இன்னொரு பெற்றோர் : எனது பிள்ளைக்கு தமிழ் அறிவு குறைவு. எழுத வாசிக்கத் தெரியாது. வயதைப் பற்றிப் பரவாய் இல்லை. அவனின் அறிவுக்கு வகுப்பில் விட்டால் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. 

ஆசிரியர் : எல்லாம் பெரிய சிக்கல்தான். ஏதோ முயற்சி செய்து எங்கள் குழந்தைகளை இந்த ஆபத்தி லிருந்து காப்பாற்ற வேண்டும். இது எங்கள் கடமை. தாயகத்துக்காக எத்தனை வீரர்கள் உயிரையே தியாகம் செய்துவிட்டார்கள். அவர்கள் அமைத்துத் தந்த சுதந்திர தாயகத்தில் காலூன்றிய இந்த வெளிநாட்டு வாசமுள்ள சிறார்களை நம்வீட்டு முற்றத்து மலர்களாக்குவோம். இந்த எதிர்காலச் சிற்பிகளாகிய இச்சிறார்களுக்கு எமது உழைப்பை அர்ப்பணிப்போம். 

அதிபர் : நல்ல தீர்மானங்கள் எடுத்துள்ளோம். அவற்றை நீங்கள் செவ்வனே நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நன்றிகள்! 

(கூட்டம் கலைகிறது) 

பின்னணி : தம் பிள்ளைகளின் தராதரத்தைத் தாய் நாட்டுக்கு வந்த பின்னர்தான் மேலும் சில பெற்றோரால் அறியமுடிகிறது. இதுவும் ஒரு விசித்திரம் தான்.

– சிறார்களுக்கான சிறு நாடகங்கள், முதல் பதிப்பு: 1999, மணிமேகலை பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *