(நகர) னகார, ணகார மயக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: June 5, 2024
பார்வையிட்டோர்: 423 
 
 

(1991ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உறுப்பினர்கள் 

15 வயது பையன் 

26 வயதுக்காரர்

பேராசிரியர் 

காட்சி-1 

15 வயதுப் பையன் : (சிரிக்கிறான்) ஹஹ்ஹ…ஹா!

25 வயதுக்காரர் : ஏய் அரப்படிச்ச மூஞ்சூறு! என்னத்த பார்த்து பிசாசாட்டுஞ் சிரிக்கிறே? 

15 வயது: ஐயா எழுதின தப்பாத்து, சிரிக்காம அழவாச் சொல்றீங்க! 

25 வயது : அப்படி என்ன எழுதிப்புட்டோம்? அத தப்புன்னு சொல்ற அளவுக்கு ஒங்ககிட்டே என்ன மேதாவிலாசம் இருக்குது? கொஞ்சங்கூட மரியாத இல்லாம்…… சே;சே ! 

15 உயது: வயசாய்ப் போச்சுதுன்னா மரியாத கொடுக்க வேணும்! உண்மைதான்! ஒத்துக்கறேன்…ஆனாக்க வயசுக்காக மட்டும் மரியாத எதிர்பாக்றது சரி யில்லே! வயசுக்குத் தகுந்த புத்தியும்கூட இருக்கணும்… 

25 வயது: அப்ப எனக்கு புத்தியில்லேங்கறே! காலம் அப்படி இருக்கு…சரி! விஷயத்த சொல்லிப்புட்டு சிரிச்சுத் தொலை…இல்லேன்னாக்க எவனாவது ஏதாவது ஒரு மாதிரின்னு நெனச்சுக்கப் போறான். 

15 வயது : இங்க வாங்க! (25 வயதுக்காரர் வயிற்றைத் தடவுகிறார்). 

25 வயது : ஏது! வரவர சேட்டை அதிகமாவுதே! 

15 வயது : இல்லே! காலைல பணம்பழம் சாப்புட்டதா எழுதியிருந்தீங்க…அதான் வயித்ல தனியா சத்தங் கேட்குதான்னு தட்டிப் பார்த்தேன்… 

25 வயது : ஐயய்யே! ஏம்ப்பா! கிராமாந்தரத்ல இருந்து கிட்டுப் பணம்பழம் தெரியாது! ‘நீ’ ல்லாம் இருந்து என்ன ப்ரயோஜனம்? 

15 வயது : சின்னவங்க சொல்லி நீங்க என்னிக்கு ஒத்துக் கிட்டீங்க! இதோ வந்துகிட்டிருக்காரே, படிச்ச பெரியவர் அவரு சொன்னா ஒத்துக்குவீங்களா? 

25 வயது: எவ்வளவு படிச்சவரு!… அவரு சொன்னாக்க சரி! 

(தமிழ்ப் பேராசிரியர் வருகிறார்) 

25 வயது 15 வயது இருவரும் : ஐயா! வணக்கங்க…! 

பேராசிரியர் பெரியவர்: வாங்க! வாங்க. நான் அப்பவே கவனிச்சுகிட்டுத்தான் இருந்தேன்… ஒங்களுக்குள்ள ஏதோ படிப்பு சம்பந்தமா சந்தேகம்… சரி தானே? 

15 வயது : ரொம்ப கரெக்டுங்க… 

25 வயது : குதிக்காதே! நானே அவருகிட்ட சொல்றேன்… கம்முனு கெட! 

15 வயது : வளவளன்னு பேசாம அவர் கைல கொடுங்க.. 

25 வயது : (சற்று அடக்கமும் வெட்கமும் கலந்து) : இங்க பாருங்கய்யா… இதுலே எழுதி இருக்கறது தப்புங்களா?… 

பேரா: (எழுதியதைக் கையில் வாங்கிப் புன்முறுவல் பூக்கிறார்) : நீங்க நெனச்சு எழுதினது பனம் பழந் தான் … ஆனாக்க பணம்பழம்னு எழுதினாக்க : அர்த்தம் வேறயாப் போயிரும்… காசச் சாப் புட்டதா அர்த்தம்…சொல்லிப் பாருங்களேன் பழக்கத்ல சரியா வந்துப்புடும்… 

25 வயது: சொல்லுங்கய்யா! தெரிஞ்சுக்கறோம்…

பேரா : பனம்பழம்…… 

25 வயது : பனம்பழம் … 

பேரா : நீங்க சொல்லுங்க தம்பி… 

15 வயது : பனம்பழம்… 

பேரா: பாத்தீங்களா; சொல்றப்போ ரெண்டு பேருமே சரியாச் சொல்றீங்க எழுதறப்ப வித்தியாசம் வருது …நம்ப தமிழ்ல ‘ன’ இருக்குது, ‘ந’ இருக்குது. இதுங்களையெல்லாம் சொல்லிச் சொல்லி எழுதி பழக்கப்படுத்திக்கிட்டா செரமமே இருக்காது… 

25 வயது : எப்பிடீங்க!…எப்பிடீங்க…! 

பேரா : இந்த அளவுக்கு உற்சாகம் இருந்தாக்க அதுவே போதும்! 

25 வயது : (15 வயதுப் பையனை நோக்கி) : நல்லா கேட்டுக்க…மோட்டு வளையப் பாக்கற மாதிரி முளிக்காதே அப்புறம்… 

15 வயது : (சற்று கிண்டலுடன்) சரிங்க…உத்தரவு! 

பேரா : “நண்பன்”ங்கற வார்த்தை கேள்விப்பட்டிருக்கீங்களா? 

25 வயது: ஓஹோ! இந்த சினேகிதகாரன்னு சொல்ற மாதிரி வார்த்தைங்களா…டிராமா, சினிமால கூட வருமே… 

15 வயது: ஐயா எனக்கும் தெரியுங்க… 

பேரா : இந்த வார்த்தைல மூணு வகை னா’வும் இருக்குது 

25 வயது : அப்பிடிங்களா? 

15 வயது : ஒரேடியா வாய பொளக்காதீங்க… விஷயத்த கவனிங்க… 

பேரா : ஒருத்தரை ஒருத்தர் கேலி பண்ணிகிட்டே இருக்கக்கூடாது… கவனமாக் கேக்கணும்…மொதல்ல சொன்னதை மனசுல வச்சுக்குங்க… இப்ப சில வார்த்தைங்க சொல்லப் போறேன்… கேளுங்க… எழுதியும் காட்றேன்… (பொதுவாக) நண்டு, நஞ்சை, நடவு, நத்தை; மண்ணு, பொன்னு, கனவு, நனவு. 

இருவர்: நண்டு, நஞ்சை, நடவு, நத்தை, மண்ணு, பொன்னு, கனவு, நனவு… 

பேரா : இதோ பாத்தீங்களா! எழுதியிருக்கிறேன்… 

25 வயது : பள்ளிக்கூடத்லே இருக்ற மாதிரியே தோணுதுங்க… 

பேரா : இப்ப நான் சொன்னதில என்ன தெரிஞ்சுகிட்டீங்க …தம்பி நீங்க சொல்லுங்க… யோசனை பண்ணிச் சொல்லுங்க! 

15 வயது : (தயக்கத்துடன்) அதாவதுங்கய்யா… நண்டு, நஞ்சை, நத்தை, நாணல், நாத்தங்கால்… இப்படி வர்ர வார்த்தைங்கள்ள மூணு ‘னா’ ல இந்த ‘நத்தை’ ‘ந’ ாவைத் தான் மொதல்ல எழுதணும்! அப்படித்தாங்களே… 

பேரா : பரவாயில்லையே! சொன்னவுடனே புரிஞ்சு கிட்டீங்களே! விடாமப் படிங்க…நெறைய சந்தர்ப்பம் இருக்குது… 

25 வயது: இதெல்லாம் எங்களுக்குப் பழக்கப்பட்ட வார்த்தைங்கதாங்க… வெவரமாச் சொன்னாத் தான வௌங்கு துங்க… இன்னமே இந்த நத்தை ‘நா’வையே மொதல்ல போட்டு எழுதுவோம்… 

பேரா : இப்ப அந்த மாதிரி நத்தை ‘நா’ல ஆரம்பிக்கிற செல வார்த்தைங்களைச் சொல்லுங்க (25 வயதுக் காரரை நோக்கி). 

25 வயது : சொல்றேனுங்க! நன்னாரி, நடப்பு,நரி, நான் நாடி, நாளு… 

பேரா : ப்ரமாதம் போங்க… இப்ப இந்த ‘நண்பன்’ங்கற வார்த்தைல நத்தை ‘நா’வுக்கப்பரம் வருது ‘ண’, அத மூணு சுழி ‘ணா’ன்னு சொல்வாங்க. ஒண்ணு மில்லே! உத்துப் பார்த்தீங்கன்னாக்க மூணு தடவை சுழிச்சிருக்கும் (செய்தே காட்டுகிறார்). இது எப்பவும் எடை தான் வரும்… கொஞ்ச எடங்கள்ள தான் கடைசீல வரும்…ஆனா இந்தக் கடைசீல இருக்குதே ரெண்டு சுழி ‘னா’ அது எடைலயும் வரும்… கடைசீலயும் வரும் 

25 வயது: அடாடாடா! எப்பிடிப் புட்டு புட்டு கொழுந்த புள்ளைக்குச் சொல்ற மாதிரி சொல்றீங்க!… 

பேரா : இன்னொரு சங்கதி! இப்ப இந்த ரெண்டு சுழி, மூணு சுழி ன’வும், ‘ணா’வும் ஒரே வார்த்தைல வந்தாக்க பெரியவருக்குச் சின்னவர் எடம் விட்ரு வாரு… 

15 வயது: எப்பிடிங்? 

பேரா : அண்ணன், கண்ணன், திண்ணன் 

25 வயது: ஆமுங்க! ஆமுங்க! அண்ணனுக்குத் தம்பி எடம் விடுதுங்க… எழுத்துங்க. கூட மரியாதை தெரிஞ்சு வச்சிருக்கு… 

பேரா : இப்ப பாருங்க இதுங்களை கவனிக்கணும்.. 

ஆனி, ஆணி 

மனம், மணம் 

பனி, பணி 

பனை, பணை 

இதுங்களுக்கு வித்யாசம் சொல்லுங்க பார்ப்போம். நீங்கதான் சொல்லுங்களேன். (25 வயதுக்காரரை நோக்கி). 

25 வயது : ஆனி ஒரு மாசம். ஆணி செவுத்ல அடிகிறது. ‘மனம்’னா மனசுன்னு சொல்வாங்க…பனின்னாக்க கைகாலை நடுக்குமே அது தெரியுமே! அடுத்தது தெரியாது…பனைன்னா நொங்கு வெட்டுவோமே அந்த மரந்தானே…பணைக்கு தெரியாது.

பேரா : தம்பீ! நீங்க சொல்லுங்க…ஐயா சொல்லாதது ஒங்களுக்குத் தெரியுமா? 

15 வயது : மணம்னா வாசனைங்க!… பணைன்னா தெரியாதுங்க… 

பேரா : பணைன்னா மூங்கில்னு அர்த்தம்… 

இருவரும்: இப்ப தெரிஞ்சு போச்சு! 

பேரா : தெரிஞ்சு இருக்கணும்!…போயிரக்கூடாது… இந்த மாதரி சின்னச் சின்ன வார்த்தைங்களா எடுத்து ரெண்டு சுழி போட்டா என்ன அர்த்தம்… மூணு சுழி போட்டா என்ன அர்த்தம்னு அத்துபடி செய்துக்கணும்…இப்ப நீங்களே இந்த மாதிரி வார்ததைங்க சொல்லுங்க! 

15 வயது : நான் சொல்லட்டுங்களா? 

பேரா : சொல்லுங்களேன்! 

15 வயது: அண்ணி, அன்னி, காணம், கானம். 

பேரா : அண்ணின்னு சொன்னாக்க அண்ணன் சம்சாரம்!… அன்னின்னு சொன்னா? 

15 வயது: ரொம்ப காலத்துக்கு முன்னாடி தமிழ்நாட்ல இருந்த ராஜாவாம்! 

பேரா : பலே! பலே! ரொம்ப ஞாபகசக்திதான் இன்னும் செல வார்த்தைங்க தர்ரேன்… மனசுல வச்சு நிதானமா சொல்லி அர்த்தம் புரிஞ்சு எழுதினா நாளாவட்டத்தில் கொழப்பமே வராது… 

25 வயது: சரீங்கய்யா! 

பேரா : நான் சொல்லச் சொல்ல சொல்லணும்… 

இருவரும் : சரிங்க! 

பேரா : நான், நாண்… 

இருவரும் : நான், நாண். 

பேரா :  கனை, சணை.. 

இருவரும் : கனை, கணை. 

பேரா : சரி! நாம் புலி, சிங்கங்களையேகூட்டுல அடச்சுப்புடறோம்…இந்த எழுத்துங்களை மனசுல நிறுத்த முடிநாதா!  பயமே கூடாது! பயிற்சி வேணும்! பழக்கம் வேணும்! எங்க நான் சொன்னதையெல்லாம் சுருக்கமாச் சொல்லுங்க தம்பி. 

15 வயது: வார்த்தைக்கு மொதல்ல எப்பவும் நத்தைல வர்ர ‘நா’வைத்தான் போடணும்.. அது பெரும் பாலும் எடைலயும் கடைசீலயும் வராது. 

25 வயது : மேல நான் சொல்லட்டுங்களா? 

பேரா : தாராளமா! 

25 வயது: ஒரே வார்த்தைல ரெண்டு சுழி, மூணு சுழி வந்தாக்க மொதல்ல அண்ணனுக்கு மரியாத! அப்புறம் தம்பிக்கு! 

பேரா : சின்ன சின்ன வார்த்தைங்களா எடுத்துக்கிட்டு ரெண்டு சுழி போட்டாக்க என்ன அர்த்தம்… மூணு சுழி போட்டாக்க என்ன அர்த்தம்னு கண்டுபுடிச்சு சொல்லியும் எழுதியும் பழகணும்! 

25 வயது : இதுக்குமுன்னால ஒரே பயமா இருந்துச்சுங்க! கொஞ்சங் கொஞ்சமா புரியராப்ல இருக்குது… ரொம்ப சந்தோஷங்கய்யா. 

15 வயது: எங்களுக்காக இவ்வளவு நேரம் செலவழிச்சத்துக்கு நன்றிங்க… 

பேரா : இது என் கடமை. ஒங்க அன்புக்கு ரொம்ப சந்தோஷம்! வர்ரேன்! முயற்சிய விட்ரக் கூடாது. 

25 வயது : மறக்க மாட்டோம். 

15 வயது : மாட்டோம்! 

– அலை தந்த ஆறுதல், முதற் பதிப்பு: டிசம்பர் 1991, பாரி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *