பூந்தமல்லி கன்டோன்மென்ட்டில் இருக்கும் குருமூர்த்தியின் வீட்டு பச்சை நிற இரட்டை கேட், அவர் மனசைப் போலவே எப்போதும் விசாலமாக விலங்கினங்களுக்காகத் திறந்திருக்கும். ராட்சச இரும்பு சீப்பால் நேர் வகிடு எடுத்தாற்போல் கேட்டில் இருந்து ஓடிய பாதையின் இரண்டு பக்கங்களிலும் செடிகள், கொடிகள், மரங்கள், பதியன்கள், பூச்சட்டிகள், கலர் கலராகப் பூக்கள். அவற்றில் ஹெலி காப்டராகப் பறந்து இறங்கும் பட்டாம்பூச்சிகள், சாம்பல் நிற சிட்டுக் குருவிகள், குக்கூ குக்கூ என்று கச்சேரி செய்யும் கருங்குயில்கள், கீக்கீ என்று விமர்சனம் செய்யும் கிளிகள்!
மழைச்சாரல் நிறைந்த காலை வேளைகளில் வீசும் மந்தமாருதத்தில், மகிழம் பூக்களின் கும் என்ற வாசனை தேவர்களையே சுண்டி இழுக்கும். இருந்தாலும், கேட்டுக்குள் சுவாதீனமாக நுழை பவை கால்நடைகள்தான்!
‘குட்மார்னிங் ஆட்டுக் குட்டி’ என்ற குதூகலமான வரவேற்புக் குரலைக் கேட்டு உற்சாகமாக உள்ளே ஒரு ஸ்பிரிங் குதிப்புடன் நுழையும் ஆட்டுக்குட்டி, ‘மே…ஏ…ஏ’ என்று பதில் வணக்கம் செய்யும்.
‘‘வா, வா. செடியை மேய்ஞ்சுடாதேடா கண்ணா! இந்தா, உனக்காகத் தழைகள் வெச்சிருக்கேன், பார்! பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு சமத்தா ஓடிப் போயிடணும், என்ன? ஹய்! அங்கே பார், அதோ உன் ஃப்ரெண்ட் வந்துட்டான்! வாடா, வாடா! குட்மார்னிங்டா நாய்க் குட்டி!’’
பூந்தமல்லிவாசிகள் அவருக்குச் சூட்டிய பெயர் ‘குட்மார்னிங்’ குருமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூர் பள்ளி ஒன்றில் உயிரியல் மற்றும் தோட்டவேலை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், கன்டோன்மென்ட்டின் ஒதுக்குப் புறத்தில் வீடு வாங்கிக் குடி புகுந் தவர். அவர் அதிகம் யாரிடமும் பேசுவது இல்லை, பழகுவதும் இல்லை. தனிமரமாக இருந்தார்.
காலையில் எழுந்தவுடன் அரை நிஜாரும் கை வைத்த பனியனும் போட்டுக்கொண்டு, ஒரு தொப்பியை எடுத்துத் தலையில் மாட்டிக்கொண்டு, தோட்டத்தில் காலடி வைப்பார் குருமூர்த்தி. கல்யாண மண்ட பத்தில் வயசாளிப் பாட்டி உறவினர்களை ஒட்டுமொத்த மாகப் பார்த்ததும் பரவசப்படுவது போலச் சிலிர்ப்பார்.
‘குட்மார்னிங் அரச மரம். எப்படி இருக்கீங்க? குட்மார்னிங் வேப்ப மரம். நல்லா தூங்கினீங்களா? ஹாய்… குட்மார்னிங் ரோஜாச் செடி! கலக்கிறியே… பிரமாதமாப் பூத்திருக்கியேம்மா! வெரிகுட்!’’
உடனே ரோஜாச் செடி, பள்ளி மாணவியின் கூச்சத்துடன் தலைகுனியும். அன்று பூத்த புதிய பூ வெட்கத்தால் இன்னும் சிவப்பாகும்.
‘‘குட்மார்னிங் அணில் குட்டி, குட் மார்னிங் மரவட்டை, குட்மார்னிங் கம்பளிப்பூச்சி…’’ என இறைவன் படைத்த வாயில்லாப் படைப் புக்களுக்கெல்லாம் உற்சாகத்துடன் குட் மார்னிங் சொல்வார் குருமூர்த்தி.
‘‘குட்மார்னிங் லட்சுமியம்மா! உன் கன்னுக்குட்டிக்குப் பால் குடுத்தாச்சா? நான் கொஞ்சம் கறந்துக் கட்டுமா? நான் காபி குடிக்கணும்மா! குட் மார்னிங்டா கன்னுக்குட்டி! செல்லத்துக்குத் தொப்பை ரொம்பிடுச்சா?’’ என்று கன்றின் கழுத்தைக் கட்டிக்கொள்வார்.
குருமூர்த்தியின் வீடு பொம்பளை இல்லாத வீடாகப் போனது, அவர் கல்யாணமாகி ஒரு வருடத்துக்குள்தான்! தாய்& தந்தை இல்லாத தனி மரமாக இருந்த அவர், துளசியின் கையை 40 வயதில் பிடித்தபோது பூரித்துப் போனார்.
‘‘ஆங்கிலத்தில் பேஸில். லத்தீனில் ஓசிமம் பாஸிலிகம். தமிழில் துளசி. ஆஹா! தோட்டத்தில் நாட்டம் கொண்ட எனக்கு அமைந்த மனைவியின் பெயர் எத்தனை பொருத்தம்!’’ என்று அவள் பெயரை தினம் 100 முறையாவது உச்ச ரித்து மகிழ்ந்தார்.
‘‘குட்மார்னிங் துளசி!’’
‘‘குட்மார்னிங் எனக்கா, இல்லே மாடத்திலே இருக்கிற துளசிச் செடிக்கா?’’ & துளசியின் குரலில் இழைந்தோடிய கேலியின் விளிம்பில், கோபத்தின் சிவந்த செம்மண் பூச்சு!
குருமூர்த்திக்கு தாம்பத்யத்தின் நெளிவு சுளிவுகள் சரியாகப் பிடிபடவில்லை.
‘‘மாடத்திலே இருக்கிற துளசிக்குதான்! என்னமா வளர்ந்துடுச்சு பார்! அதுவும் கற்பூரத் துளசி. அட! குட்டியா ஒரு கத்திரிக்காய் முளைச்சிருக்கே. குட்மார்னிங் குட்டிக் கத்திரிக்காய்!’’
‘‘கத்திரிக்காய் எக்கேடு கெட்டுப் போகட்டும். இன்னிக்கு என் பொறந்த நாள். புதுப்புடவை கட்டிட்டு இருக்கேன். காஞ்சீவரம். எப்படி இருக்கு?’’
‘‘ஹைய்யா! வயலட் கலர் கத்திரிக் காய்லே எவ்வளவு குட்டியூண்டு பாவாடை! அழகாயிருக்கில்லே?’’
இப்படியாக நகர்ந்த வாழ்க்கையில் வெறுத்துப்போய், ஒரு கட்டத்தில் விவா கரத்து கோரி துளசி மனு செய்தபோது, குருமூர்த்தி திகைத்தார்.
வக்கீலைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசிக்கொண்டு இருந்தபோது, அறையில் திடீரென்று மியாவ் சத்தம். பாதாம் மரத்தின் மேல் ஏறித் தலையை ஆட்டிக்கொண்டு இருந்த ஓணானை ஜன்னல் வழியாகப் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்த குருமூர்த்தி விலுக்கென்று திரும்பினார். ‘‘குட்மார்னிங் பூனைக் குட்டி! ஹவ் ஆர் யூ டியர்? குட்டி போட்டிருக்கியா? டிக்கி டிக்கி! எத்தனைக் குட்டிடா? கறுப்பிலே எத்தனை, வெளுப்பிலே எத்தனை?’’
தாய்ப் பூனை சீறாமல் சாதுவாக வாலைத் தூக்கி, நடு உடம்பை உயர வாட்டில் நிமிர்த்தி, குருமூர்த்தியின் பின் கால்களில் ஆசையுடன் உராய்ந்து ‘மிய்ய்யாவ்வ்வ்’ என்று அடித்தொண்டையில் கத்திற்று.
துளசியை வக்கீல் பரிதாபமாகப் பார்த்தார். தனது குட்டிகளை குருமூர்த்திக்கு அறிமுகப்படுத்தி வைக்க, அவரைத் தாய்ப்பூனை தனது ஜாகையான கார் ஷெட்டுக்கு அழைத்துப் போக, துளசியிடம் பேசினார் வக்கீல்…
‘‘அம்மா துளசி, உன்னையும் அவரையும் சட்டப்படி பிரிக்கிறது கஷ்டம். அதைவிடக் கஷ்டம் அவரைப் பிராணிகள் கிட்டேர்ந்தும், மரம், செடி, கொடிகள் கிட்டேர்ந்தும் பிரிக்கிறது! கொஞ்ச நாள் அவரைப் பிரிஞ்சிருந்து பார்!’’
படுக்கையில் படுத்திருந்த குரு மூர்த்திக்கு ஏதேதோ யோசனைகள்…
‘மரங்களுக்கும், செடிகளுக்கும் குட்மார்னிங் சொன்னா என்ன தப்பு? அதுக்கு ஏன் என்னைப் பார்த்து எல்லாரும் சிரிக்கிறாங்க? வாக்கிங் போறப்ப எதிரே வர்ற டிராயிங் மாஸ்டருக்கு குட்மார்னிங் சொன்னா, விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி ஹ§ம்னு தலையை ஆட்டிட்டுப் போவாரே தவிர, ஒரு புன்சிரிப்பைக் கூட பதிலுக்குக் காட்டறதில்லே.
அவரைச் சொல்வானேன்… இந்தத் துளசி… அவளுக்குத் தேவையானதெல்லாம் வகைவகையா புடவை, நகை, ரிப்பன், வளை, தோடு, மை, சாந்துதான். தோட்டத்தை அழியுங்க, அணிலை விரட்டுங்க, ஓணானை அடியுங்க, பூனைகளைத் துரத்துங்கன்னு எப்பவும் கூப்பாடு. பிடிவாதமா மாட்டேன்னதும், நானே வேண்டாம்னு ஓடிப்போயிட்டா. போயேன்! அழிக்கிறதுக்கு இந்தத் தோட்டம் என்ன அசோகவனமா? நான் தான் அனுமாரா? போடீ போ!’
சிவன் கோயிலின் டாண் டாண் மணிச் சத்தம், அவரை நனவுலகுக்குக் கொண்டுவந்தது. நான்கு ஐந்து அதிர் வேட்டுகள் தொடர்ந்து வானை அதிர வைத்தன. தாரை தப்பட்டையின் கொட்டும், மேளச் சத்தமும் தூரத்தில் கேட்டது.
‘அட, பொழுது விடிஞ்சாச்சா? சுவாமி புறப்பாடு ஆரம்பிச்சு முடிய விடிகாலம் ஆயிடுமே! இன்னிக்கு ரிஷப வாகனம் ஆச்சே! பால் வெள்ளை நந்திகேஸ்வரர் வாகனத்திலே வைத்தீஸ் வரன் கம்பீரமா பவனி வரணும் இல்லையா?’
குருமூர்த்தி புரண்டு படுத்தார்.
‘அது சரி, சுவாமியைத் தூக்குறவங் களெல்லாம் எங்கே காணோம்? அட, இதென்ன… நந்திகேஸ்வரருக்கு குட் மார்னிங் சொல்லலாம்னா, அவரையும் காணோமே! அதற்குப் பதில் ஒரு கொழுத்த எருமை மாடுன்னா பூதாகரமா ஆடி அசைஞ்சு வருது! யப்பா… கொம்பைப் பார்த்தியோ! எவ்வளவு பெரிசு! எருமை மேல யார் அது கன்னங்கரேல்னு உட்கார்ந்திருக்கிறது? கிழங்கு கிழங்கா அட்டிகைகள். துளசி பார்த்தாள்னா இப்பவே வாங்கித் தரணும்னு அடம்பிடிப்பா! தோளிலே தூக்கியிருக்கும் கதை, கையிலே கயிறு… அடடே! இவரா? என்னை அழைச்சிட்டுப் போக வாகனத்திலே வந்தாச்சா? அப்போ எனக்கு விடிஞ்சாச்சு! இவருக்கு ஒரு குட்மார்னிங் சொல்லுவோமா? வேணாம். டிராயிங் மாஸ்டர் மாதிரி மூஞ்சியை சுளிச்சுப்பார்! ஹாய்… குட்மார்னிங் எருமை மா…’
– வெளியான தேதி: 01 நவம்பர் 2006