ஸ்மைல் ப்ளீஸ்…! சிரிப்பிற்கு கியாரண்டி…!

 

இன்று மாலை நான்கு மணிக்கு மாப்பிள்ளைப் பார்க்க வருவதாக பெண் வீட்டில் சொல்லியிருந்ததால், மாப்பிள்ளை வீட்டில் ‘தட புட’ லாக ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். இந்த வரன் நிச்சயம் முடிந்துவிடும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஜாதகமெல்லாம் பார்த்தாகிவிட்டது, எட்டு பொருத்தம். இது இரண்டாவது வரன், இதற்கு முன் பத்து நாட்களுக்கு முன்னால் இன்னொரு பெண் வீட்டிலிருந்து வந்திருந்தார்கள். பெண்ணிற்கு மாபிள்ளையை விட பத்து வயது அதிகம். அதனால் தாத்தா கறாராக சொல்லிவிட்டார்,

“நம்ம பையன் என்ன ரெண்டாம் தாரமாவா வாழ்க்கைப் பட போறான் இல்ல நம்ம பையன் என்ன கை கால் முடமா. அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டார்.

மாப்பிளைக்கு வேஷ்டியெல்லாம் கட்டி தயாராக வைத்திருந்தார்கள். பையன் இப்போது கல்லூரி முடித்திருந்தான், மேலும் படிக்க வேண்டுமென்று ஆசை. இருந்தாலும் அவன் அக்காவிற்காக திருமணம் செய்ய ஒத்துக்கொண்டான்.

அக்காவிற்கு வயது முப்பது ஆகிறது. “தம்பிக்கு முடித்த பின் தான் தனது கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன்” என்று சொல்லியிருந்தாள். வயதுக்கு வந்த தம்பியை வீட்டில் வைத்துவிட்டு, அக்கா கல்யாணம் முடித்தால் ஊர் உலகம் என்ன பேசும்.

பையன் கல்லூரியில் ‘டாப் பிகர்’, எல்லா பெண்களும் இவன் பின்னால் தான் சுற்றுவார்கள். இந்த நான்கு வருடங்களில் எண்ணற்ற காதல் கடிதங்கள், பள்ளியிலிருந்தே காதல் கடிதங்கள் குவிந்த வண்ணம் தான் இருந்தது. ஆனால் எந்தப் பெண்ணையும் இவன் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. எந்தப் பெண்ணுடனும் தோழமையுடன் கூட பேசுவதில்லை. இதனாலேயே சில பெண்கள் இவனை ‘திமிறு பிடித்த பையன்’ என்று சொல்லுவார்கள்.

பையன் படு சுட்டி! படிப்பில் கெட்டிக்காரன். வகுப்பறையில் எப்போதும் முதல் பெஞ்சில் தான் உட்காருவான். அவனுக்கு கடைசி வரிசையில் உட்காரும் பெண்களை சுத்தமாக பிடிக்காது. இவனை எப்போதும் கிண்டல் செய்து கொண்டே இருப்பார்கள்.

பையனின் அழகைப் பற்றி சொல்ல வேண்டுமே. சும்மாவா இவன் பின்னால் எல்லாப் பெண்களும் சுற்றுவார்கள். கிழவி முதல் சிறுமி வரை எல்லோரையும் கட்டி இழுக்கம் தோற்றம். கல்லூரியில் ‘கல்சுரல்ஸ்’ சமயங்களில் வேஷ்டி கட்டிக்கொண்டு வருவான். அன்று இவன் பின்னால் பெண்களின் கூட்டம் மொய்க்கும். கல்லூரியின் எல்லா விழாக்களிலும் வரவேற்ப்பில் நிற்பது இவன் தான். தைரியமான பையனும் கூட. ஒரு முறைப் பேருந்தில் ஒரு பெண் இவனது இடுப்பைக் கிள்ளிவிட்டாள். கொஞ்சம் கூட பயம் இல்லாமல் திட்டி தீர்த்துவிட்டான் “செருப்பு பிஞ்சிடும் நாயே, உனக்குலாம் அண்ணன் தம்பி இல்ல”.

ஒரு முறை இவனும் இவனது தோழனும் கல்லூரி முடிந்து நடந்து வந்திருக்கும் போது, குட்டிச்சுவரிலிருந்த வேறு கல்லூரி பெண்கள் இவனைக் கிண்டல் செய்தார்கள். இவன் கூட வந்த தோழன் “டேய் வேணாம்டா அவங்கலாம் மோசமான பொண்ணுங்க, சும்மா பேசாம வா போய்டலாம்” என்றான். ஆனால் இவன் தைரியமாக அவர்களை முறைத்துப் பார்த்துவிட்டு செருப்பு பிஞ்சிடும் என்பது போல செய்கை காட்டிவிட்டுப் போனான்.

அதன் பின் இவனது கல்லூரிப் பெண்கள் அந்த கல்லூரிப் பெண்களிடம் சண்டை போட்டது வேறு கதை.

இப்போது கல்யாண விஷயத்திலும் அம்மா அப்பா என்ன சொன்னாலும் சரி தான். “நீங்கள் காட்டும் பெண்ணிடம் நான் கழுத்தை நீட்ட தயார்” என்று சொல்லிவிட்டான். இருந்தாலும் அப்பா காட்டிய பெண்ணின் புகைப்படத்தை, அப்பாவின் முன் “அதெல்லாம் வேணாம்ப்பா, நீங்க பாத்தா போதும்” என்று சொல்லிவிட்டு, அப்பா சென்ற பின் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தான். முகம் முழுவதும் வெட்கத்தால் சிவந்தது!

இன்று பையன் வேஷ்டி சட்டையில், கல்யாணக் கலையில் கூடுதல் அழகாகவே இருந்தான்.

அப்பா வந்து பையனைப் பார்த்துவிட்டு “என் செல்லம்! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்று சொல்லி சிரித்துவிட்டு சமையலறைக்குச் சென்றார்.

பெண் வீட்டிலிருந்து வந்துவிட்டார்கள், இருபது முப்பது பேர் இருக்கும். அந்த அறையில் பெண் உட்காருவதற்கு மட்டும் நாற்காலி போடப்பட்டிருந்தது, மற்றவர்களுக்கு போர்வை விரிக்கப்பட்டிருந்தது. பெண் பார்ப்பதே நிச்சயதார்த்தம் போல் ‘தட புட’ லாக இருந்தது. பையனின் தோழர்கள் அவனைக் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். பையனுக்குத் துணையாக இரண்டு சிறுவர்களும் உடனிருந்தார்கள். சிறு உரையாடலுக்குப் பின் பெண்ணின் அம்மா தான் ஆரம்பித்தார், “பையனை வர சொல்லுங்க, பாத்து பேசி முடிவு பண்ணிடுவோம்”.

பையனின் அப்பா, பையனின் கையில் காபி தட்டைக் கொடுத்து “கண்ணா, பொண்ணுட்ட காப்பியக் கொடுத்து, பொண்ணு கால்லயும் பெரியவா கால்லயும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ” என்றார்.

“அப்பா வெட்கமா இருக்குப்பா, நீங்களே கொடுங்களேன்” என்றான்.

“அட என்ன நீ வெட்கப்பட்டுக்கிட்டு, டேய் நீங்க மாப்பிள்ளை கூட துணைக்குப் போங்கடா” என்று இரு சிறுவர்களையும் அனுப்பி வைத்தார்.

கையில் தட்டுடன், தரைக்கு வலிக்காமல் நடந்து வருவதைப் பார்த்த உடனேயே பொண்ணு காலி!

எல்லோருக்கும் காபி கொடுத்துவிட்டு பெண்ணின் காலிலும் அவளது பெற்றோரின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு ‘குடு குடு’ன்னு அறைக்கு ஓடிவிட்டான்.

“பையன் ரொம்ப வெட்கப்பட்றான்” என்றார் மாபிள்ளையின் அம்மா.

அப்பா பையனிடம் “என்னடா பொண்ணப் பிடிச்சிருக்கா”

“உங்களுக்குப் பிடிச்சா எனக்கும் ஒகேப்பா” என்று கூறிவிட்டு வெட்கப்பட்டு ஓடினான்.

கல்யாணம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடந்து முடிந்தது.

முதலிரவு…!

கட்டில் பூக்களால் ஜோடிக்கப்பட்டிருந்தது. பெண் பத்து நிமிடமாகக் காத்துக்கொண்டிருந்தாள்.

பையனின் கையில் பால் சொம்பைக் கொடுத்து, அவனது தோழர்கள் முதலிரவு அறைக்குள் பையனைத் தள்ளினார்கள்.

“டேய் பொண்ணு மனசு கோணாம பாத்து சூதானமா நடந்துக்கோடா” என்று சொல்லி ஹி ஹி ஹி என்று சிரித்துச் சென்றார்கள். பையனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

அதே நடை தரைக்குக் வலிக்காமல்.

ஒரு முறை ஏறெடுத்து அவளைப் பார்த்தான். இவனைப் பார்த்து தலையை சாய்த்து சிரித்தாள்.

“வா பக்கத்துல உட்காரு” என்று சொல்லலி பால் சொம்பை வாங்கும் போது அவளின் விரல் இவனது விரலின் மேல் பட்டது.

வெடுக்கென்று கையை எடுத்துக்கொண்டான். உடம்பு முழுவதும் பட்டாம்பூச்சி பறந்தது அவனுக்கு. வெட்கம் பாடாய் படுத்தியது.

“விளக்கை அணைக்கட்டுமா” என்றாள்.

“சீ… போங்க”

“நீ வெட்கப்படும்போது தான்டா ரொம்ப அழகா இருக்ற”

$**********$

அவள் சென்னையில் பணிபுரிவதால் தனியாக வீடு எடுத்து இருவரும் தங்கியிருந்தார்கள். அவன் வீட்டைவிட்டு வரும் போது தேம்பித் தேம்பி அழுததை தினம் தினம் சொல்லி கிண்டல் அடிப்பாள்.

வெட்கமெல்லாம் போய்விட்டது. பொறுப்பான கணவனாக இருந்தான், அவளும் பொறுப்பான மனைவியாக இருந்தாள். அப்பப்போ சமையல் வேளையில் அவனுக்கு துணைபுரிவாள். இருவரும் அன்யோன்யமாக இருந்தார்கள். ஆனால் அவ்வப்போது சிறு சிறு விஷயங்களில் சண்டையும் வரும். குறிப்பாக சமையலில், அப்போதெல்லாம் அவள் திட்டுவாள்.

“ஏன்டா உங்க வீட்ல உங்க அப்பா என்னடா சொல்லிக் கொடுத்தாரு? ரசம் வாயில வைக்க முடியல”

அவனது அப்பாவைப் பற்றி பேசியவுடன் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும்.

“என்ன பத்தி என்ன வேனா பேசுங்க, அப்பாவை பத்தி மட்டும் பேசாதீங்க”

“ஆமா இதுக்கு மட்டும் கொறச்சல் இல்ல, ரசம் வைக்கத் தெரியல”

லேசாகத் திட்டினாலும் அழுகை வந்துவிடும்

இப்படித்தான் ஒரு நாள் அவள் வேலைக்குக் கிளம்பும் போது சேலையை ஒழுங்காக தேய்த்து வைக்கவில்லை என்று திட்டினாள்.

அவன் தேம்பித் தேம்பி அழுதான்.

கோபமெல்லாம் இரவில் பறந்துவிடும். அல்வா வாங்கிக்கொடுத்து சமாதானம் செய்துவிடுவாள்.

“என்னங்க உங்கட்ட ஒன்னு சொல்லணும்” என்றான்.

“ம்ம்ம்ம் சொல்லுடா”

“போங்க சிரிச்சிகிட்டே கேட்டா தான் சொல்வேன்” என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

சிரித்துக்கொண்டே அவனருகில் சென்று நெற்றியில் முத்தமிட்டு “சொல்லுடா செல்லம்” என்றாள்.

“நீங்க அம்மா ஆகப்போறீங்க” 

தொடர்புடைய சிறுகதைகள்
என் போன்றவர்களுக்கெல்லாம் காதலிக்க அறுகதை கிடையாது. அதுவும் என்னை விட பத்து வயது சிறியவனைக் காதலிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது எனக்கு. ஆண்கள் தன்னை விட பத்து வயது சிறியவளைக் காதலிக்கலாம், மணந்து கொள்ளலாம். ஆனால் பெண்ணாகப் பிறந்தால்? பெண்கள் அவ்வாறு ...
மேலும் கதையை படிக்க...
இன்று இரவு சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு மீண்டும் இரயிலில் பயணம் செய்யப்போவதை நினைத்து மனம் புழுங்கிக்கொண்டிருந்தார் செல்வம். இதற்கு இவரது முந்தைய கசப்பான அனுபவம் தான் காரணம். சாதாரணமாக நாம் அனைவரும் தொலை தூரப் பயணம் என்றாலே, பேருந்தை விட இரயில் பயணத்தையே தேர்வு ...
மேலும் கதையை படிக்க...
ப்ரோடீன்ஸ் பிராய்லர் கடை... அவரது மகன் வைத்த பெயர் அது. கோழிகளும், கோழிகளின் தோல் உறிக்கும் இயந்திரமும் இருக்கும் ஒரு சிறிய அறையின் முன்னால் பனை ஓலையால் கூரை வேயப்பட்டிருக்கும். அந்த கூரையில் தோல் உரிக்கப்பட்ட கோழிகள் தொங்கியவாறு இருக்கும். கோழியை வெட்டுவதற்கு ...
மேலும் கதையை படிக்க...
இருவரும் நடைபாதை ஓரத்தில் பொடிநடையாக ஏதோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது உடையும் இன்ன பிற அணிகலன்கலுமே, அவர்கள் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் என்றும் சொல்லியது. மேலும் அவர்கள் சுமக்கும் குடும்ப பாரங்களை அவர்களது முகம் ...
மேலும் கதையை படிக்க...
புன்னகைகள் புரிவதில்லை…
இரயில் பயணம்
பக்… பக்… பக்…
கேளிக்கை…

ஸ்மைல் ப்ளீஸ்…! சிரிப்பிற்கு கியாரண்டி…! மீது ஒரு கருத்து

  1. tiru.kalyaani mannaaran says:

    சரியான சோக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)