ஸ்திரீபார்ட் கிச்சா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 9, 2023
பார்வையிட்டோர்: 4,877 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எச்சுமிப் பாட்டியால் சின்ன வயதில் எடுத்து வளர்க்கப்பட்டு தற்சமயம் கான்பூர் ஐ.ஐ.டி.யில் கூடப் படிக்கும் ஒரு பையனைக் காதலித்தது போக மீதிநேரத்தில் மட்டும் படித்துக் கொண்டிருக்கும் கிச்சாவின் ஒன்றுவிட்ட கஸின் சிஸ்டர் வத்சலா, சென்ற வாரம் விடுமுறைக்காக சென்னை திருவல்லிக்கேணி வந்திருந்தாள். வத்சலாவுக்கு கான்பூரில் ஒரு ரோமியோ இருப்பதை அறியாத எச்சுமிப் பாட்டி, அவளைப் படிக்க வைத்து வளர்த்த சுவாதீனமான தெனாவட்டில் அவளுக்குத் தெரியாமலேயே வரன் பார்க்க ஆரம்பித்து, கடைசியில் அவளிடம் சொல்லாமலேயே அவளைப் பெண் பார்க்கத் தனது இரண்டு விட்ட கஸின் பிரதர் கல்கத்தா கோபாலனையும் அவருடைய சீமந்த புத்திரன் கல்யாணராமனையும் லெட்டர் போட்டுக் கூப்பிட்டும் விட்டாள்.

விவரம் அறிந்த வத்சலா தனது காதலைப் பாட்டியிடம் கூறிவிட்டு, கிடைத்த ரயில் பிடித்து கான்பூருக்குச் சென்றுவிட்டாள். வெள்ளிக்கிழமையன்று பெண் பார்க்க வரப்போகும் கல்கத்தா கோபாலனுக்கு, வத்சலா கான்பூர் ஓடிவிட்ட விஷயம் தெரிந்தால் அவளை வளர்த்து ஆளாக்கிய (பெண்ணாக்கிய) தன்னுடைய இமேஜுக்குப் பங்கம் வரும் என்பதை உணர்ந்த எச்சுமிப் பாட்டி, சோதனையிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்றாள்.

கோயில் பிராகாரத்தில் அம்போவென்று பெருமாளுக்கு மட்டும் பாரதம் சொல்லிக் கொண்டிருந்த உபன்யாசகர், அங்கு எச்சுமிப்பாட்டியைப் பார்த்ததும் ஆரண்ய வாசத்தின்போது அர்ச்சுனன் பெண் வேடம் போட்டதைப் புல்லரிக்கக் கூற ஆரம்பித்தார். அப்போது கிச்சாவைப் பார்த்த எச்சுமிப் பாட்டிக்கு, பார்த்தசாரதி பெருமாளே உபன்யாசகர் வேடத்தில் வந்து தனக்கு ஐடியா தருவது! போலப் பட்டது!

விளைவு? வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரப்போகும் கல்கத்தா கோபாலனுக்கும் அவர் மகன் கல்யாணராமனுக்கும் ‘இதோ வத்சலா…’ என்று பேரன் கிச்சாவைக் காட்ட பாட்டி முடிவு செய்தாள்.

என்னுடைய நாடகத்தில் பெண் வேடம் போட்டுப் பழகிப் போன என் நண்பன் வெங்கி, புடைவை கட்டும் கலையைக் கற்றுத் தந்து பெண் சாமுத்திரிகா லட்சணத்துக்குத் தேவையான மற்ற போஷாக்குகளை வாங்க வேண்டிய அவசியத்தைக் கூறி, அளவுக்காகக் கிச்சாவை அழைத்துக்கொண்டு பாண்டிபஜாரில் கடை கடையாக ஏறி இறங்கினான்.

கைக்கு வளையல், காலுக்குக் கொலுசு, காதுக்கு ஜிமிக்கி என்று வாங்கியதில் ஓரளவு பெண் வேடத்துக்குத் தயாராகி செட்டில் ஆகிவிட்ட கிச்சா, ரவிக்கையை அளவெடுக்கும்போது ‘முடிஞ்சா கையோட கையா ரவிக்கையை லோகட் டைப்புல தைச்சுடு…’ என்று நக்கலாகக் கூறினான்.

அடுத்து, கூந்தலுக்காக எந்த டைப் விக் வைத்தாலும் கிச்சா இன்னும் மோசமான ஆம்பளையாக மாறுவதைப் பார்த்துவிட்டு, இறுதியில் கிச்சா தலையில் கர்னாடகமான ‘ஒற்றைப் பின்னல் சவுரி விக்கை வைக்க, அதில் கிச்சா ஓரளவு ‘பப்ளிக் லேடீஸ் பாத்ரூம்’ வாசலில் வரையப்பட்ட பெண்ணின் ஜாடையில் இருக்க, அந்த விக்கையே முடிவு செய்தோம்.

விடிந்தால் பெண் பார்க்கும் படலம். தூங்கினால் எங்கே வெங்கி செய்துவிட்ட அலங்காரம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தில் கிச்சா கண்விழித்தபடி விடிய விடிய கண்ணாடிக்கு எதிரில் கன்னி கழியாமல் அமர்ந்திருந்தான். அழகுக்கு மேலும் அழகூட்டுவதாகக் கூறிவிட்டு, எச்சுமிப் பாட்டி அவனுடைய கை, கால்களில் எல்லாம் மருதாணியை அப்பிவிட, ஒரு இஞ்ச் கூட நகர முடியாமல் தூக்கிய மருதாணிக் கையோடு ஆடாமல் அசையாமல் நின்ற கிச்சா, காண்பதற்குக் கண்ணகி சிலை போலக் காட்சியளித்தான். நகர்ந்தால் மேக்கப் நாசமாகிவிடும் என்பதால், எதிரே டம்ளரில் எச்சுமிப் பாட்டி வைத்த காபி, நீராகாரம் போன்றவற்றை, நின்றபடி ராட்சத சைஸ் ஸ்டிரா வைத்து உறிஞ்சிக் குடித்த கிச்சா அன்று முழுக்க லிக்விட் டயட்டில் இருக்க வேண்டியதாயிற்று!

வெள்ளிக்கிழமை காலை. சொன்னபடி கல்கத்தா கோபாலனும் அவர் மகன் கல்யாணராமனும் வத்சலாவைப் பெண் பார்க்க வந்தார்கள். மேக்கப் கலைந்தால் ‘டச்-அப்’ செய்துவிட ஓர் அறையில் மறைவாக மேக்கப்மேன் எத்திராஜும் கிச்சாவின் புடைவை மானம் காக்க மற்றொரு அறையில் வெங்கியும் நானும் ஒளிந்துகொண்டிருக்க, ‘வத்சலா, வாம்மா…’ என்ற எச்சுமிப் பாட்டியின் குரல் கூடத்திலிருந்து பிசிறு தட்ட வந்தது.

தனது அறையிலிருந்து பயத்தில் தடுமாறியபடி தாற்காலிக வத்சலா வேடத்தில் கிச்சா வெளியே வர முயன்ற சமயம், தடாலென்று கோபாலன் எழுந்து வலது காலை எ எடுத்து வெச்சு வாம்மா…’ என்று உரத்தக் குரலில் கூவ, எது வலது, எது இடது என்று புரியாமல் குழம்பிப் போன கிச்சா, ஒரே சமயத்தில் இரண்டு காலையும் எடுத்து வைக்க முயற்சி செய்ய, வாசல்படி தடுக்கி கல்கத்தா கோபாலன் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான்!

‘வத்சலா நமஸ்காரம் பண்றா, ஆசீர்வாதம் பண்ணுங்கோ’ என்று எச்சுமிப் பாட்டி சமாளிக்க, கோபாலனும் ‘சீக்கிரமே விவாக ப்ராப்திரஸ்து…’ என்று அசுரக் குரலில், திருவல்லிக்கேணியில் உள்ள அத்தனை கன்னிப் பெண்களுக்கும் சேர்த்து ஆசீர்வதித்தார். பிறகு, ‘எழுந்திரும்மா’ என்று ஏழெட்டு முறை கெஞ்சியும் கீழே விழுந்த வேகத்தில் கட்டிய புடைவை அவிழ்ந்து போனதால், கிச்சா எழுந்திருக்காமல் அழிச்சாட்டியமாக அதே போஸில் படுத்துக் கிடந்தான். நிலைமையை உணர்ந்த எச்சுமிப் பாட்டி, குப்புறப்படுத்துக் கிடக்கும் கிச்சாவை மறைத்தபடி கோபாலனோடு பேச்சுக் கொடுத்தாள். கிடைத்த அந்த இரண்டு நிமிடத்தில் கிச்சா படுத்தவாக்கிலேயே ‘கோவிந்தோ’ போட்டபடி வாயுவேகம் மனோவேகத்தில் புரண்டுபோய்த் தன் அறையை அடைந்தான். இந்தக் குழப்பத்தில், கோபாலன் காலடியில் சுழன்று விழுந்துவிட்ட கிச்சாவின் கூந்தல் விக்கை அவர் பார்ப்பதற்குள் அறைக்குள் தள்ளி விட எச்சுமிப் பாட்டி, அதைக் காலால் நெம்பி எறிய, அது குறி தவறி, பேப்பர் படித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை பையன் கல்யாணராமன் மடியில் போய்த் தொப்பென்று விழுந்தது! என்னமோ ஏதோ என்று பயத்தில் அலறியபடி கல்யாணராமன் நாற்காலி மீது அவசரமாக ஏறி நிற்க, எச்சுமிப் பாட்டி ஒரே பாய்ச்சலில் அவனை நெருங்கி அருகில் இருந்த விக்கை எடுத்து மால்கம் மார்ஷல், பேட்ரிக் பேட்டர்ஸன் வேகத்தில் கிச்சா அறைக்குள் பௌல் செய்தாள். ‘கறுப்பாகப் பறந்து வந்தது என்ன?’ என்று கோரஸாகவும் நெர்வஸாகவும் கேட்ட அப்பா, பிள்ளையிடம், ‘பயப்படாதீங்கோ…எங்க வீட்டுல ரொம்ப நாளா இருக்கற கொஞ்சம் பெரிய சைஸ் வாழும் வௌவால்…’ என்று கூறிச் சமாளித்தாள் எச்சுமிப் பாட்டி!

‘நாங்க பொண்ணு முகத்தைச் சரியாப் பாக்கலை. மறுபடி வரச் சொல்லுங்கோ…’ என்று கோபாலன் சொல்ல, பாட்டி ‘வத்சலா!’ என்று கூப்பிட, அவசரம் அவசரமாக கிச்சா மீண்டும் வத்சலாவாக வெளியே வந்தான்(ள்)! கூப்பிட்ட அவசரத்தில் விக்கைத் தலையில் சரியாக வைக்காமல் எதிர்மாறாக எத்திராஜ் மாற்றி வைத்துவிட, பின்னால் தொங்க வேண்டிய ஒத்தைப் பின்னல் ஜடை, நெற்றியிலிருந்து புறப்பட்டு வயிறு வரை முன்னால் தொங்குவதைப் பார்த்தவுடன் அவசரமாக அறைக்குள் ஓடி விக்கைச் சரிசெய்து கொண்டு வெளியே வந்தான்!

‘பொண்ணு பாக்க நன்னாவே இல்லே. ஆம்பளைக்குப் பொம்பளை வேஷம் போட்டா மாதிரி இருக்கு…’ என்று சொல்லிவிட்டு கோபாலன் எழுந்து போய்விடுவார் என்று எதிர்பார்த்த எச்சுமிப் பாட்டியின் நினைப்புக்கு மாறாக, ‘வத்சலாவைச் சின்ன வயசுல பார்த்தது. பிரமாதமா வளர்ந்துட்டாளே. எனக்கு வத்சலாவை (கிச்சாவை!) ரொம்பப் பிடிச்சுடுத்து. கல்யாணத்தை எப்ப வெச்சுக்கலாம்? வரதட்சணை, சீர்செனத்தினு ஒரு பைசா வேண்டாம். மகாலட்சுமி இவ, என் வீட்டுக்கு மாட்டுப் பொண்ணா வந்தா போதும்…’ என்று கூறிவிட்டு, கிச்சாவின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி, அதனால் கையில் ஒட்டிய மேக்கப் பிசுபிசுப்பை வேட்டியில் துடைத்துக் கொண்டார் கோபாலன்.

இந்தப் பெண் பார்க்கும் (ஸாரி… பிள்ளை பார்க்கும்) படலம் கல்யாணம் வரை போகும் என்று எச்சுமிப் பாட்டி எதிர்பார்க்கவில்லை. பயம் அடிவயிறைப் புரட்ட, இதை எப்படித் தடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது கல்யாணராமன் எழுந்து, ‘அப்பா, ஒரு நிமிஷம். பொண்ணோட நான் கொஞ்சம் தனியா பேசணும்…’ என்று கூறிவிட்டு, பெண் வேஷத்தில் இருந்த கிச்சாவை அழைத்துக்கொண்டு பக்கத்து ரூமுக்குள் சென்றான்.

‘தான் வத்சலா இல்லை. கிச்சாதான்’ என்று கல்யாணராமன் கண்டுபிடித்து விட்டானோ என்ற பயத்தில் உறைந்து போயிருந்த கிச்சாவைப் பார்த்து, ‘தோ பாரும்மா. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. காரணம், நான் இன்னொரு பொண்ணுக்கு ஏற்கெனவே வாக்குக் கொடுத்துட்டேன்…’ என்று கூறிவிட்டு நிறுத்த, அந்த இடைவேளையில் கிச்சா ‘தப்பித்தோம்’ என்ற நிம்மதிப் பெருமூச்சை விட்டான். பிறகு தொடர்ந்த கல்யாணராமன், ‘என்கூட கான்பூர்ல படிக்கிற பொண்ணை நான் உயிருக்கு உயிரா லவ் பண்றேன். அவ பேரும் வத்சலாதான். தயவுசெஞ்சு உனக்கு என்னைப் பிடிக்கலேன்னு நீ எங்க அப்பாகிட்டே சொல்லிடு. ப்ளீஸ்… ஒரு காதலை வாழவெச்ச புண்ணியம் உனக்கு. வேற நல்ல இடத்துல உனக்குக் கல்யாணமாகும்’ என்று காலில் விழாத குறையாகக் கிச்சாவிடம் கெஞ்சினான்.

முழு சஸ்பென்ஸையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கிச்சா அவனிடம், ‘நீங்க படிக்கிறது கான்பூர் ஐ.ஐ.டி. ட.யிலயா?’ என்று தனது சுபாவமான கரகரத்த குரலில் கேட்க, கல்யாணராமன் ‘ஆம்’ என்று தலையாட்டிவிட்டுக் கிச்சாவைப் பார்த்து, ‘எரித்ரோமைஸின் ஒரு கோர்ஸ் சாப்பிடு. தொண்டைக்கட்டு சரியாப் போயிடும். சிவியர் இன்ஃபெக்ஷன். அதான் குரல் ஆம்பளைக் குரலாட்டம் இருக்கு…’ என்று கூறிவிட்டு ஹாலுக்குச் சென்றான்.

பாட்டியை உள்ளே கூப்பிட்டு நடந்ததைக் கிச்சா கூறி தன் பெண் வேடத்தைக் கலைக்க, ஏக குஷியான எச்சுமிப் பாட்டி வெளியே வந்து கல்கத்தா கோபாலனிடம், ‘கோபாலா… கல்யாணத் தேதியை ஃபிக்ஸ் பண்ணிடு. எம் பேத்தி வத்சலாவுக்கு உம்புள்ளையை ரொம்பப் பிடிச்சுப் போயிடுத்து’ என்று கூற, ‘நோ… இந்த வத்சலாவை எனக்குப் புடிக்கலை’ என்று கல்யாணராமன் வெகுண்டு எழுந்தான்!

அப்போது கிச்சா மீண்டும் மிஸ்டர் கிச்சாவாக வெளியே வந்தான். அப்பவும்கூட கிச்சா சாவை வத்சலா என்றே நம்பிய கோபாலன், ‘அப்ப உங்க பேத்தி தலையில இருந்தது சவுரி… தலையை கிராப் பண்ணிண்டு பாண்ட்-ஷர்ட் போட்டுண்டு இப்படித் தலைகீழா நிக்கற உங்க பேத்தியை எம் பையன் தலையில கட்டப் பாக்கறேளா? அதான் நடக்காது. டேய் கல்யாணராமா, கிளம்புடா…’ என்று கோபமாகக் கர்ஜித்தார்.

அப்பனுக்கும் பிள்ளைக்கும் ஆதியிலிருந்து நடந்த கதையைக் கூறி, ‘வத்சலா கல்யாண’த்தை நடத்தி வைப்பதற்குள் எச்சுமிப் பாட்டிக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது!

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019)[3] தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்.[4] அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *