அப்புசாமிக்கு அரசாங்கத்திடமிருந்து அழைப்பு வந்திருந்தது. சாதாரண அழைப்பு அல்ல, அவசர அழைப்பு. அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துகளைத் தடுப்பதற்கு அவர் என்ன திட்டங்கள் தரமுடியும் என்பதை அறியவே அப்புசாமியை டில்லி அழைத்திருந்தது.
ரயிலில் ஏர்கண்டிஷன் கோச்சில் அப்புசாமி பிரயாணமானார். முகத்தில் விஞ்ஞானிகளுக்கே உரிய சிந்தனை. கண்களில் அறிவு முதிர்ச்சியின் ஒளி வெறும் விஞ்ஞானி மட்டுமல்ல, பல நுட்பத்தொழில்களின் அதிபர். லட்சாதிபதி. மினுமினுவென்று ஜொலித்தார். இவ்வளவு சின்ன வயசில் இப்படிப்பட்ட புகழும் அறிவுமா என்று வியக்காதவர்கள் இல்லை. முப்பது வயசுகூட ஆகவில்லை. அதற்குள் அவரது சாதனைகள் சொல்லி முடியாது. சுருக்கமாக அரசாங்கத்துக்கு அவர் ஓர் விஞ்ஞான தூண்.
ரயில்கள் மோதுவதை எப்படி ‘ஆடமாடி’க்காகத் தடுப்பது என்று அப்புசாமி நீண்ட நாளாகத் தமது விஞ்ஞானக் கூடத்தில் ஆராய்ச்சிகள் நடத்தி வந்தார். அதற்குள் அரசாங்கமே அவரை அது விஷயமாகக் கூப்பிட்டுவிட்டது. அப்புசாமி எப்போதும் ‘பாக்கெட் வொர்க் ஷாப்’ ஒன்று தன்னுடன் வைத்திருப்பார். பிராயாணத்தின் போது பேப்பர் படித்துக்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் பாக்கெட் வொர்க்ஷாப்பை பிரித்து வைத்துக்கொண்டு ஏதாவது செய்த வண்ணமே இருப்பார்.
காந்த சக்தியினால் ரயில் மோதலை நிறுத்திவிடலாம் என்பது அப்புசாமியின் அபிப்ராயம். அதை எப்படி செயல்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். காந்தத்தில் ஒன்றுபட்ட துருவங்கள்
ஒன்றையொன்று ஆகர்ஷிக்காதல்லவா? ஆகவே எதிரெதிரே வரும் ரயில்களின் இன்ஜினில் ஒன்றுபட்ட காந்த சக்தி இயங்குகிற மாதிரி செய்யவேண்டும். அதற்கு என்ன வழிமுறை செய்வது என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார், ஏர்கண்டிஷன் கோச்சில்.
குளுகுளுவென்றிருந்த அந்தக் கம்பார்ட்மெண்டில் அப்புசாமி மட்டும் தனியாக இருந்தார். அவருடைய இடப்புறம் ‘காப்பியோ க்ளாக்’ என்னும் யந்திரம் இருந்தது. அவரே கண்டுபிடித்ததுதான். ‘டாண்’ என்று ஒரு மணி அடித்ததும், அந்த யந்திரம் காப்பி கலந்து கோப்பையில் அனுப்பிவிடும். இதனால் இடைவெளி ஸ்டேஷனில் அப்புசாமி வெளியே எட்டியே பார்க்கவில்லை.
நீண்ட நேரம் ஆராய்ச்சியிலேயே இருந்துவிட்டதால் ஒரு கொட்டாவி வெளிவந்தது அவரிடமிருந்து. மற்றவர்கள் கொட்டாவியை வீணாக்குவார்கள். ஆனால் அப்புசாமி அந்தக் கொட்டாவியை அளந்துபார்க்க ஒரு கருவி வைத்திருந்தார். கொட்டாவியின் அழுத்தம், வேகம் இவைகளைக் கணக்கிட்டு, எத்தனை கொட்டாவி களின் வேகம் சேமிக்கப்பட்டால் ஓர் இன்ஜினைச் செலுத்தும் சக்தி கிடைக்கும் என்று கணக்கிட்டார். அதுவும் முடிந்தது, சோம்பல் முறித்தார், அதுவும் முடிந்தது. ரயில் ஏதோ ஸ்டேஷனில் நின்றது. அப்புசாமி ஜன்னல் திரையை அகற்றிவிட்டுக் கண்ணாடி வழியே பார்த்தார், அடடா! எவ்வளவு சிறிய அழகான ஸ்டேஷன்.
என்னதான் பெரிய விஞ்ஞானியானலும் இயற்கைக் காட்சிக்கு அடிமையாகாமலிருக்க முடியவில்லை. மிகவும் சுத்தமாக இருந்தது, அந்தக் குட்டி ஸ்டேஷன். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு பழமை விரும்பி போலும் ஸ்டேஷன் பிளாட்பாரம் பூராவும் பச்சைப் பசேல் என்று சாணி தெளித்து மெழுகினாற்போலிருந்தது. ஸ்டேஷன் பெயர் பசுவனம். அப்புசாமி சிரித்துக்கொண்டார். நிறையப் பசுக்கள் இருப்பதால் இப்படிப் பசுமையாக மெழுகுவதற்குச் சொல்லியிருப்பார் போலும்.
அப்புசாமி இப்படியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது, “அடியே சீதா! சீதா! இங்கேவாடி. ஏதோ கோஷாப் பெட்டி மாதிரி ஒன்று இருக்கிறது. ஒரே ஒருத்தன் தான் இருக்கிறான்!” உன்று ஒரு
பாட்டியம்மாள் முடிச்சில்லாத மூட்டைகளுடன் பரபரப்புடன் ஓடிவந்தாள். வந்தவள் அப்புசாமி நின்றிருந்த வாசல்படியில் ஏற முயன்றவளாக, “ஏண்டாப்பா, இந்த ரயில் டில்லிக்குப் போகிற ரெயில்தானே… அடியே சீதா ஓடிவா… ஓடிவா. இந்தப் பொண்ணு பாரேன், இவ்வளவு இடத்தை விட்டுவிட்டு எங்கேயோ தேடுகிறது
இடம்… நகர்ந்துகோடாப்பா… உள்ளே போயிடறோம்… ஏன் பாவம் நீ காவல்காரன் மாதிரி நிற்கிறாய்…? ஏய் சீதா! சீதா! ஓடிவாடி… கொடியைக் காட்டிட்டான்”
அப்புசாமியின் தேகத்தில் ஏனோ ஒரு சிலிர்ப்பு, சுமார் பதினெட்டு வயது மதிக்கத்தக்க அழகிய பெண் சின்ன சூட்கேஸ¤டன் ஓடி வந்தாள். உயரம் அவ்வளவு அதிகமில்லை. ஆனால் நீளப்பின்னலும், தலை நிறையக் கதம்பமும், வாளிப்பான அந்தக் கிராமீய உடம்பும், சூட்கேஸை அனாயசமாகத் தூக்கிக்கொண்டு ஓடிவந்த நளினமும் அப்புசாமியை மிகவும் கவர்ந்துவிட்டன.
பாட்டியம்மாள் அதற்குள், “ஏறிக் கொள்ளடி… வழியை விடுடாப்பா… அட, வழியைவிட்டு நின்று தொலையேண்டாப்பா… ரயில் ஊதிட்டது…” என்று துரிதப்படுத்தினாள். “பாட்டி…” என்று தேனினும் இனிய குரல் அந்தப் பெண்ணிடமிருந்து வந்தது. “என்ன பாட்டி, இது ஏதோ ஸ்பெஷல் வண்டி போலிருக்கிறது. அவர் யாரோ பெரிய ஸ்ரீமான். அடிக்கடி பத்திரிகையில்கூட வருமே… பாட்டி… அவர் யாரென்று உனகுக்குத் தெரியவில்லையா…” கிசுகிசுத்தாள். அதற்குள் ரயில் ஊதிவிட்டது.
சீதா என்ற அந்தப் பெண் அப்புசாமியைப் பார்த்துப் பிரமித்தவளாகவும், அதனால் ஏற்பட்ட மதிப்பு, மரியாதை, பயம், நாணம், இத்தியாதி களுடனும், “பெரிய விஞ்ஞானி பாட்டி… இவர்… ரயிலிலே பெயர் தொங்குகிறது பார்…” என்று விவரித்தாள்.
அப்புசாமி சீதாவை லேசாகத்தான் பார்த்தார், ‘ஆகா… என்ன மின்னல் வேகமான புத்திசாலித்தனம்’ என்று வியந்தார். ‘வந்து நிற்பதுபோல் நின்றாள், அதற்குள் ரயிலில் தொங்கவிடப்பட்டிருந்த என் பெயரைக் கவனித்து விட்டாளே.. கிராமமாயிருந்தாலும் மிகவும் புத்திசாலித்தனமான பெண்… கிராமத்துப் பெண்களின் புத்தி நகர்ப்புறத்து சராசரிப் பெண்ணைக் காட்டிலும் எப்படிக் கூர்மையாயிருக்கிறது? ஆராயவேண்டிய விஷயம் தான்…’
ரயில் ‘விசுக்’ என்று குலுங்கிக் கொண்டது.
“பாட்டி.. பாட்டி.. நாம் அடுத்த ரயிலில் போய்க்கொள்ளலாம்… எல்லா இடத்திலும் ஒரே கும்பல். இது ஸ்பெஷல் கிளாஸ், நாம் ஏறக்கூடாது.” என்று பாட்டியின் கையைப் பிடித்து இழுத்தாள் சீதா.
அப்புசாமிக்கு உள்ளத்தை என்னவோ செய்தது. “பரவாயில்லை, ரயில் நகரப்போகிறது. ஆட்சேபமில்லையானால், இருவரும் தாராளமாக இதிலே ஏறிக் கொள்ளலாம்”
பாட்டியம்மாள் தன் கையிலிருந்த மூட்டைகளை அப்புசாமியிடம், “கொஞ்சம் வாங்கி வைடாப்பா… நல்ல பிள்ளையாக இருக்கிறாய்…” என்று திணித்துவிட்டுத் தானும் ஏறிக்கொண்டாள். சீதாவும் ஏறினாள்
கூச்சத்துடன்.
அவர்கள் ஏறி உள்ளே செல்வதற்கு காத்திருந்தது போல் ரயில் புறப்பட்டது.
சீதா ரயில் பெட்டிக்குள் நின்றவாறே இருந்தாள் நாணத்துடன். அவளது பாட்டியின் கண்கள் அப்புசாமியின் எதிரே இருந்த காந்தக் கட்டைகளையும், அதன் மீது அவர் ஓடவிட்டிருந்த சிறிய பொம்மை ரயில்களின் மீதும் சென்றன . “நன்றாகத்தானிருக்கிறது, இவ்வளவு பெரிய பையன் குழுந்தை மாதிரி, பொம்மை விளையாடறான்!”
“பாட்டி!” என்றாள் சீதா கடுகடுத்த குரலில், “நீ இந்த மாதிரியெல்லாம் ஏதாவது உளறுகிறதாயிருந்தால், நான் இப்போதே ரயிலிலிருந்து குதித்து விடுவேன்… அவர் பொம்மையா விடுகிறார்? விஞ்ஞானி யென்றால் இப்படித்தான்ஏதாவது பண்ணிக் கொண்டேயிருப்பார்கள்”
“சபாஷ்! நன்றாக சொன்னாய்” என்று அப்புசாமி பட்டென்று சீதாவின் முதுகில் ஒரு தட்டுத்தட்டி விட்டார் தன்னை மறந்து, ஆயிரம் வோல்டேஜ் கரண்ட் அவர் தேகத்தில் பாய்ந்தது போலிருந்தது. “ஸாரி… மன்னித்துக்கொள்… உற்சாக மிகுதியில் தட்டிவிட்டேன்”
“அடக் கட்டையில போகிறவனே! என் பேத்தி முதுகை என் கண்ணெதிரிலேயே தட்டிவிட்டாயா? உன் கையை ஒடித்து ரயிலிலே போட… ஐயோ, ஐயோ, என் பேத்தியை இந்தப் பாவி… ஏண்டா… இதற்குத்தான் நீ இடம் கொடுத்தாயா வண்டியிலே.. எருமைக்கடா மாதிரி வளர்ந்திருக்கிறவன்… வயசுவந்த பெண்ணை
ரொம்பத் தெரிந்த குட்டி மாதிரி பட்டேன்று தட்டிட்டாயே… ஏண்டா உன் கையைப் பாம்பு, நண்டுவாக்கிளி, தேள். பூரான் பிடுங்க!”
“பாட்டி ஷட் அப்!” அப்புசாமி சொல்லவில்லை. அந்தப் பெண் சீதாதான் சொன்னாள்.
பயந்து நடுங்கிப் போய்விட்ட அப்புசாமிக்கு, அந்தச் சொற்கள் காதில் அமிர்தமாக விழுந்தன.
எவ்வளவு பரந்த மனப்பான்மை, முற்போக்கான குணம் அவளும் பாட்டி மாதிரி கர்னாடகமாகக் கத்தாமல்…
அப்புசாமி நன்றி மிகுந்த கண்களுடன் சிதாவைப் பார்த்தார், காந்தம், காந்தம் என்று என்னென்னவோ ஆராய்ச்சி பண்ணுகிறோமே, இந்த கண்களிலிருந்து வெளிப்படும் காந்தம் எந்த ரகத்தில் சேர்ந்தது, என்று விஞ்ஞானி குழம்பினார்.
ஒரு மாபெரும் விஞ்ஞானி, தொழிலதிபர், ஓர் இளம் பெண்ணின் முதுகை ரயிலில் தொட்டுத் தட்டிவிட்டார் என்ற செய்தி மிகவும் சாமான்னியமானதல்ல, காட்டு தீ போலப் பரவக்கூடிய செய்தியாயிற்றே?
அந்தத் தீயைச் சரேலென அணைத்தமாதிரி ‘ஷட் அப்’ என்ற வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தின சீதாவை அவர் கண்ணிமைக்காமல் பார்த்தார்.
“பாட்டி…” என்றாள் சீதா. “முன்னையே சொன்ன மாதிரி, நீ கன்னாபின்னாவென்று பேத்துகிறதாயிருந்தால், நான் இப்போதே ரயிலிலிருந்து குதித்துவிடுவேன், நீ பேசும் ஒவ்வொரு பேச்சும் விடுகிற ஒவ்வொரு மூச்சும் எனக்கு அவமானமாக இருக்கிறது”
“இருக்கும்டீ… இருக்கும். வயசுப் பையனைப் பார்த்துவிட்டு “இளி இளி” என்று இளிக்கிறாயாக்கும் நீயும்?”
அப்புசாமி, “சே! சே! சே! உன் பாட்டி என்ன இப்படியெல்லாம் தரக் குறைவாகப் பேசுகிறாள்?” என்றார்.
சீதா கண்களில் நீர் பளபளக்க “எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள் சார், அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விடுகிறோம்…” என்றாள்.
அப்புசாமி பரபரப்புடன், “வேண்டாம், வேண்டாம் நான் ஒன்றும் தப்பாகச் சொல்லவில்லையே!” என்றார்.
“பாட்டி! அடுத்த ஸ்டேஷனிலே இறங்கத் தயாராக இரு இறங்கின வுடனேயே அடுத்த ரயிலில் ஏறி, நம்ம ஊருக்கே திரும்பப் போகிறோம். எனக்குக் கல்யாணமும் வேண்டாம், கல்லெடுப்பும் வேண்டாம்!”
அப்புசாமிக்குப் பக்கென்றது உடலெல்லாம் அதிர்ச்சி அலைகள் பாய்ந்தது போலிருந்தன. கல்யாணம்? அவருடைய முகம் திடுமென்று பிளாக் அவுட் ஆகியது. கார் மேகம் போலக் கருத்துவிட்டது. தான் இதுவரை இருந்து வந்த சொர்கத்திலிருந்து, தன்னைப் பிடித்து யாரோ கூவத்தில் தள்ளி, தலைமேலே ஒரு வண்டிக் குப்பையையும் கொட்டிய மாதிரி உணர்வு ஏற்பட்டது.
பாட்டியம்மா கொஞ்சினால் மிஞ்சி, மிஞ்சினால் கொஞ்சும் சுபாவம் கொண்டவள் சிதாவின் முடிவைக் கேட்டுத்திடுக்கிட்டாள். “நான் இப்போ என்னடி தப்பாப் பேசிட்டேன் பெரிய ஞானி சபிச்சுப்பிடுவார் என்கிற பயம் போலிருக்கு உனக்கு. நானும் திரும்பிச் சபிச்சுப்புடுவேன் நொடி நேரத்திலே. அதற்கெல்லாம் அஞ்சியவள் அல்ல. உன்னை அவன் முதுகில் தட்டினானே என்று கண்டித்தேன் இதுமாதிரி நடந்தால் என் வாய் சும்மா இருக்காதுதான்”
“பாட்டி..” என்று தழுதழுத்தார் அப்புசாமி “நான் ஓர் உற்சாக வேகத்தில் அப்படி செய்துவிட்டேன் இது வரை எந்தப் பெண்ணையும் நான் தொட்டதில்லை நான் ஓர் அயோக்கியனில்லை, உங்கள் மேல் இரக்கம் வைத்து இந்த ஏ.ஸி. கோச்சில் ஓஸியாக ஏற்றிக் கொண்டேன், என்னைத் திட்டுங்கள் பரவாயில்லை ஒரு பாவமும்
அறியாத உங்கள் பேத்தியை வையாதீர்கள் அவள்மேல் தப்பு ஒன்றுமில்லை…”
பாட்டியின் கண்களில் ஒரு சந்தேகம் “நீயும் நல்ல பிள்ளையாகத்தான் இருக்கிறாய்… ஹ¤ம்… எது எதற்கு எங்கெங்கு முடிச்சுப் போட்டிருக்கிறதோ…” என்று நீண்ட பெருமுச்சு விட்டாள்.
சீதாவை அப்புசாமி பார்த்தார் அவள் கண்கள்கூடக் கலங்கியிருந்தாற் போலிருந்தது. சீதாவின் பாட்டி இதற்கப்புறம் சமாதானமடைந்து விட்டவளைப்போல அப்புசாமியிடம் “ஏண்டாப்பா…
பூர்வீகம் உனக்கு எந்த ஊர்? என்ன நட்சத்திரம் நீ! ஜாதகம் இருக்குமா?” என்றாள்.
அப்புசாமி உடம்பு புல்லரித்தது செடி அரித்தது மரம் அரித்தது.
சீதா, “பாட்டி… நீ சும்மா இருக்கமாட்டே? தொண தொணக்காமல் சும்மாத் தூங்கு, இல்லா விட்டால், ரயிலிலிருந்து குதிக்க வேண்டியதுதான்,” என்றாள்,
நீ குதிப்பானேன்? பாட்டியை தள்ளிவிட்டால் போகிறது என்ற வார்த்தைகள் அப்புசாமியின் மனதில் தோன்றின.
பாட்டியம்மாள், ஒரு மூட்டையைத் தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் படுத்துவிட்டாள் ரயிலில் ‘கட்ட கட்ட கட’ ஓசையைத் தாலாட்டாகக் கொண்டு குறட்டைவிட அரம்பித்து விட்டாள்.
ஜன்னலோரமாக உட்கார்ந்தும் திரைகள் விடப்பட்டிருந்ததால் வெளியே பார்க்க முடியாமல் சீதா நாணத்தால் தலையைக் குனிந்துகொண்டு பொழுதும் போகாமல் தவித்தவாறிருந்தாள்.
அப்புசாமி காந்தத் தண்டவாளத்தில் பொம்மை ரயிலை விட்டபடியே “தூக்கம் வந்தால் நீயும் தூங்கலாமே” என்றவர் “உன் பாட்டி செய்த கலாட்டாவவில் உன்னோடு பேசுவதற்கே எனக்குப் பயமா இருக்கிறது என்றார்.
சீதா குனிந்த தலையுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள் “என் பாட்டி சரியான அசடு ரொம்பக் கர்நாடகம் உங்களை போன்ற பெரிய மனிதர்களையெல்லாம் அவள் ஆயுளில் பார்த்ததே இல்லை தயவு செய்து அவளுடைய அநாகரீகமான பேச்சுக்களையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்”
“சே! சே! நான் உன்னையல்லவா மனசில் வைத்துக் கொண்டு இருக்கிறேன். உன் பாட்டியின் திட்டுக்களை எப்போதோ துடைத்துப் போட்டுவிட்டேன்” என்று சொல்லவேண்டும் போலிருந்தது ஆனாலும் கூச்சத்தினால் சொல்லாமல் “சே! சே!” என்று மட்டும் சொன்னார்.
சீதாவை ஆச்சிரியப்படுத்த வேண்டுமென்றே அப்புசாமி அந்தக் காந்த ரயில் பொம்மைகளை இயக்கி காட்டினார் ‘கிசுகிசு’வென்று வட்டமடித்த விளையாட்டு ரயில்களை லாட வடிவம் போன்ற காந்தத்தைக் காட்டிப் பின்னுக்கு இழுத்தார்.
“மிகவும் வேடிக்கையாயிருக்கிறதே” என்று சீதா தன் அகலக் கண்களை மேலும் அகலத் திறந்ததைப் பார்த்து அப்புசாமி மகிழ்ந்தார்.
“இது மாக்னடிக் ஸிஸ்டத்தில் வொர்க் செய்கிறது உனக்கு ‘போர்’ அடிக்காவிட்டால் நான் இந்த ஸிஸ்டத்தை விளக்கி சொல்கிறேன்… அப்படி இல்லாவிட்டால் பொதுவாக வேறு ஏதாவது விஷயம் பேசலாம்.
அப்புசாமி சொல்லி வாய் மூடும்போது ‘கிர்ரிங்’என்று மணி அடித்தது சரேலென ஒரு கப் காப்பி அருகிலிருந்த இயத்திரத்திலிருந்து வந்தது சீதா பிரமித்து விட்டாள் “நான் ஏதோ எடை பார்க்கிற இயந்திரமென்று நினைத்துக் கொண்டிருந்து விட்டேன்! காப்பியா… தானாகவா?” என்று வியந்தாள்.
அப்புசாமி பெருமை பிடிபடாமல், “ஸயன்டிஸ்ட் அப்புசாமி என்றாள் சாமான்னியமா பின்னே? இதிலே ஒரு சங்கடம் என்னவென்றால் நான் பிரம்மச்சாரியாதலால் ஒரு மணிக்கு ஒரு கப் காப்பி தயாரிக்கிற மாதிரி தான் இதை அமைத்திருக்கிறேன். அடுத்த கப் காப்பி தயாராக இன்னும் ஒரு மணியாகும் ஆகவே இரண்டு பேரும் இதைப் பங்கு போட்டுக் கொள்வோம்” என்றார்.
சீதா அந்த மிஷின் காப்பியைக் குடித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசையினால் மறுக்காமலிருந்தாள். சிரித்தவாறு “உங்களைச் சந்தித்ததை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது” என்றாள் “இன்னும் நீங்கள் என்னென்ன கண்டு பிடிப்புகள் செய்திருக்கிறீர்கள்? எனக்கு ‘ஸைன்ஸ்’ என்றால் ரொம்ப பிடிக்கும் நூற்றுக்குத் தொண்ணூறு வாங்குவேன்…” என்றாள்.
“ஓ! நீ படித்தவளா!” அப்புசாமி ஆச்சரியப்பட்டார் சீதா நாணத்துடன் “ஏதோ ஒரு ஐந்தாங் கிளாஸ் படித்திருக்கிறேன்” என்றவாறு அப்புசாமி தந்த காப்பி டம்ளரை வாங்கிக் கொண்டாள்.
அதை வாங்கியபோது அப்புசாமியின் கை லேசாகப் பட்டு விட்டது. சீதா சரேலென்று தன் கையை இழுத்துக் கொண்டாள் பின்னுக்கு.
அதன் விளைவாக டம்ளர் டமாலென கீழே விழுந்து பெரிய ஒலியைக் கிளப்பி தூங்கிக் கொண்டிருந்த பாட்டியை எழுப்பிவிட்டது.
“காப்பி வாசனை அடிக்கிறதே? காப்பி போட்டியா என்ன? ஆமாம்… இந்த கூத்து வேறா? என்ன கண்ணராவியோ… எனக்கும் ஒரு வாய் கொடுங்கள். மண்டை வலி பிராணண் போகிறது, இந்த வண்டியிலே ஏண்டாப்பா ஏறினோம் என்று இருக்கிறது?”
“பாட்டி!” என்று கடிந்து கொண்டாள் சீதா “கொஞ்சம்கூட நன்றியில்லாத ஜென்மமாயிருக்கிறாயே? ஏரோப்ளேனுக்குச் சமமான சார்ஜ் ஆக்கும் இந்தப் பெட்டிக்கு? உன் ஆயுளில் நீ இந்த மாதிரி வண்டியில் பிரயாணம் பண்ணினதுன்டா? இந்தா கடியாரக் காப்பி அதோ இருக்கிறது பார் கடியாரம் அது தானாகத் தயார் பண்ணிக் கொடுத்தது ஒரு மணிக்கு ஒரு காப்பி தயார் பண்ணும்”
“ஆ! அப்படியா?” பாட்டி அதைப் பொறாமை ததும்பும் கண்களுடன் பார்த்தாள். பிறகு ரகசியமான குரலில் சீதாவிடம் ‘கண்ட விண்ணாளம் அடித்து என்ன பிரயோசனம்? அது மாதிரி ஒரு மிஷின் கேட்டுப் பார் கொடுத்தானானால் நல்ல பிள்ளை” என்றாள்.
“நீ மகா அல்பமாச்சே! உன் புத்தி எங்கே போகும்?” என்று சீதா அதட்டியதும் பாட்டி வாய் மூடிக் கொண்டாள்.
“பாட்டி என்ன கேட்கிறாப்போல?” என்றார் அப்புசாமி. “காப்பிக்கு சர்க்கரைப் போதவில்லையா?”
“அவளுக்கு என்ன வேலை?” என்ற சீதா ஆர்வத்துடன், “நீங்கள் இன்னும் வேறு என்னென்ன கண்டு பிடித்திருக்கிறீர்கள்?” என்றாள்.
“எவ்வளவோ உங்க பாட்டி தூங்கினாளே கொர் கொர் என்ற குறட்டை விட்டுக் கொண்டு. அந்த மாதிரி அருவருப்பாகக் குறட்டை ஒலி கேட்காதிருக்க ஒரு இயந்திரம் கண்டு பிடித்திருக்கிறேன் வருகிற ஒலியை அது உறிஞ்சிக் கொண்டு விடும் அதுமட்டுமல்ல மிஸ்…”
அப்புசாமி தடுமாறினார் “உன் பெயரை மறந்து விட்டேன். விஞ்ஞானிகளுக்கு மிகவும் ஞாபகமறதி என்பது உனக்குத் தெரியும் நீ அதிகம் படிக்காதவள். ஆனாலும் தெரிந்து கொள்… மிஸ்… உன் பெயரைப் பாரேன் மறந்து விட்டேன்… மிகவும் அழகான பெயரைப் பாரேன் மறந்து விட்டேன்… மிகவும் அழகான பெயர்… ஸாரி… மறந்து விட்டேனே…”
சீதாவுக்கு சிரிப்பாக வந்தது. அப்புசாமியின் அவதியைப் பார்த்து, “சீதா” என்றாள் நாணப் புன்னகை புரிந்தவாறு.
“தாங்க் யூ… சீதா… மிஸ் சீதா… ஒரு சின்னச் சம்பவம் சொல்கிறேன்… பாட்டியம்மா, நீங்களும் கேளுங்கள். கதை மாதிரி இருக்கும் கொஞ்சம் ‘ஸயன்ஸ்’ தெரிந்து கொண்ட மாதிரியும் இருக்கும்.”
“சொல்லுடாப்பா… ஓடற ரயிலிலே பின்னே குதித்து ஓடவா முடியும்?” என்றாள் பாட்டி.
அப்புசாமி சீதாவை பார்த்தவாறே, ‘ஸர் வால்ட்டர் ராலே’ என்பவரை பற்றி நீ கூடப் படித்திருக்கலாம் அவர் பெரிய விஞ்ஞானி” என்று துவங்கினார்
சீதா பரபரப்புடன் “இல்லை போலிருக்கிறதே” என்றாள்.
“உனக்குத் தெரியாது அவர் விஞ்ஞானிதான் அவர் எதைக் கண்டு பிடித்தார். எப்படி கண்டு பிடித்தார் என்பதைச் சொல்லுகிறேன். அப்போது பளிச்சென்று ஞாபகம் வரும் பார், பாட்டியம்மா… காதிலே விழறதா நான் சொல்லுவது… இந்த ‘கட்டக் கட கட்டக் கட’ ரயில் சத்தத்தில் விழாமலிருக்கிறதா!”
“விழுகிறது, விழுகிறது”
“ஒரு நாள் அவர் ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்”
“ஆப்பிளா?”
“ஆமாம் நீங்கள் கிராமப் புறமாகவே இருப்பதால் ஆப்பிளைத் தெரியவில்லை போலிருக்கிறது ஏன் சீதா… நீ கூட ஆப்பிள் பார்த்ததில்லையா? ஐயோ பாவம்… இதோ நறுக்கியே தருகிறேன்”
அப்புசாமி பிளாஸ்டிக் பையிலிருந்து இரண்டு ஆப்பிள்களை எடுத்தார். “இதுதான் பாட்டியம்மா ஆப்பிள். இந்த ஆப்பிள் தான் மரத்திலிருந்து அவர் தலையில் விழுந்தது”
“அது நியூடன் இல்லையா?” என்றாள் சீதா.
“ஓ… ஸாரி…. மறந்துவிட்டேன் விஞ்ஞானிகளுக்கு ஞாபக மறதி உண்டு என்று சொன்னேனல்லவா? அது நிஜமாகிவிட்டது. அந்த நியூடன் என்ன பண்ணுவான் தெரியுமா? சமையல்காரன் கொண்டு வந்து மசால்வடை வைத்திருப்பான் பக்கத்தில் ஒரு வாட்ச் இருந்தால் வாட்சை தின்றுவிட்டு, மசால் வடையில் மணி பார்ப்பான்…”
சீதாவுக்கு சிரிப்பு தாளவில்லை. ‘களுக்’கென்று சிரித்துவிட்டாள்.
“சிரிப்பென்னடி வேண்டியிருக்கிறது?” என்று பாட்டி கண்டித்தாள்.
“பாட்டி!” என்றார் அப்புசாமி சட்டென்று “உஸ்ஸ்…. கொஞ்ச நேரம் சத்தம் போடாதிருங்கள்” என்று காதைக் கூர்மையாக்கிக் கொண்டு உன்னிப்பாகக் கேட்கலானார்.
சீதா கலவரமடைந்தவளாக “என்ன சத்தம் அப்படிக் கூர்ந்து கேட்கும்படியாக?” என்றாள்.
அப்புசாமி சீதாவையும் உஸ்ஸ்! ஒரு நிமிடம் மிகவும் மெளனமாக இருங்கள். என்னைத் தயவு செய்து தொந்தரவு படுத்தாதீர்கள்!” என்று பரபரப்புடன் கைக் கடியாரத்தின் வினாடி முள்ளைப் பார்த்தவாறு இருந்தார் பார்க்கப் பார்க்க அவர் முகத்தில் பரபரப்பு படர்ந்தது.
“சீதே! என்றார் மிஸ்ஸைக் கூடப் பரபரப்பில் மிஸ் பண்ணிவிட்டார் “சீதே! அந்த அபாயச் சங்கிலியை இழு! உடனே இழு!” என்றவாறு பரபரப்புடன் ஒரு சிவப்பு துப்பட்டியை எடுத்து கதவருகே ஓடி நின்று அதை வெளியேகாட்டி ஆட்டினார்.
ஓடிக் கொண்டிருந்த ரயில் ‘கிரிகிரி கிரீக்’ என்று நின்றது.
சீதா, “என்ன சார் என்ன ஆபத்து? ஏன் அபாயச் சங்கிலியை இழுக்கச் சொன்னீர்கள்? ஐயோ என்ன கலாட்டா” என்று பதறினாள். அப்புசாமி பதில் பேசாமல் சிவப்புத் துப்பட்டியை ஆட்டியபடி இருந்தார்.
இன்ஜின் டிரைவரும் மற்றவர்களும் அந்தப் பெட்டி அருகே விரைந்தனர்.
“கமான், கமான் சீக்கிரம், கமான்!” என்று அப்புசாமி அவர்களைத் துரிதப்
படுத்தினார். அவருக்குச் சில அங்குல தூரத்திலேயே படபடக்கும் ‘பக்கும் புறா’ போல் நின்றுகொண்டு இருந்த சீதாவைக்கூட அவர் கவனிக்கவில்லை.
ஏ.ஸி.கோச் அருகே இன்ஜின் கார்டும் பல டிக்கட் பரிசோதகர்களும் நெருங்கினதும் உள்ளிருந்து அப்புசாமி கீழே குதித்தார்.
“ஸயன்டிஸ்ட் அப்புசாமி! ஸயன்டிஸ்ட் அப்புசாமி!” என்று பல்வேறு திசைகளில் குரல்கள் ஒலித்தன.
அப்புசாமி யாதொன்றையும் பாராமல் யாருடனும் பேசாமல், “மிஸ்டர் டிரைவர்! மிஸ்டர் கார்ட்! நாம் பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். உடனே ரயிலை ரிவர்ஸில் எழுபது மைல் வேகத்தில் பின்னோக்கி ஓட்ட வேண்டும். க்விக்! க்விக் ஓரொரு நிமிடமும் அபாயம்! இதே ரயில் பாதையில் நமக்கு எதிரே முப்பத்தைந்து மைல் வேகத்தில் ஒரு கூட்ஸ் வண்டி விரைந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம்! சிக்கிரம்!” என்றார்.
“உங்களுக்கு எப்படி தெரியும்” என்று அவ்வளவு பெரிய சதஸில் கேள்வி கேட்டது ஆவல் மிகுந்த சீதா தான் வேறு யாரேனும் கேடடிருந்தால் ஸயன்டிஸ்ட் அப்புசாமி படுகோபத்துடன் சள்ளென்று விழுந்திருப்பார்.
கேட்டது சர்க்கரையில் தோய்தெடுத்த கரும்புக் குரலாகையால் விளக்கினார் அந்தப் பரபரப்பினூடை “கட்டக் கட கட்டக கட என்று நம் ரயில் ஓடும் ஒழுங்கான ஒலி சரியாகக் கேட்டுக் கொண்டிருந்தது திடீரென்று அந்த ஒலியில் பேதம் எனக்கு தெரிந்தது இப்போதைக்கு இது போதும் விளக்கம், சீக்கிரம் வண்டியைக் கிளப்புங்கள் சீக்கிரம், சீக்கிரம்”
எல்லோரும் பிரமித்து நிற்க கையும் ஓடாமல் காலும் ஓடாமல் இன்ஜின் டிரைவர் கார்டுப் பெட்டியை நோக்கி ஓட கார்டு தன் பெட்டி என்று இன்ஜினை நோக்கி ஓட ஒரு வழியாக அவரவர் தத்தம் ஸ்தானங்களுக்கு போய் அமர்ந்ததும் ரயில் படுவேகமாக எழுபது மைல் வேகத்தில் பின்வாங்கத் தொடங்கியது.
“அப்பா! அப்பா! ரயில் பின்னாலேயே போகிறது என்று ஒரு சிறுவன் குதூகலித்ததான்.
“மடையா” என்றார் அவனது அப்பா
“ஆகா… ஸயன்டிஸ்ட் அபப்சாமி வாழ்க அவர் இன்று நம்மோடு பிரயாணம் பண்ணினது நாம் செய்த அதிர்ஷ்டம்தான்…” என்றார் ஒருத்தர்.
“ஸயன்டிஸ்ட் மூளைன்னு இதற்குதான் சொல்றது நாமும்தான் ‘கட்டக் கட’ என்று ரயில் போகிற சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தோம் ஸயன்டிஸ்டுக்கு அல்லவா தெரிகிறது எதிரிலே இதே லைன்லே இன்னொரு கூட்ஸ் வண்டி வருகிறது என்கிற விஷயம்…”
இதுதான் சாக்கு என்று பல பேர் அப்புசாமியின் ஏ.ஸி கோச்சுக்குள் ஏறி உட்கார்ந்துகொண்டு அவரைப் பலவாராகப் புகழ்ந்து கொண்டிருந்தனர்.
“வண்டி இப்போது எழுபது மைல் வேகத்தில் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. இது வரவேற்க்கத்தக்கது. எதிரில் இதே லயனில் வரும் கூட்ஸ் வண்டி முப்பத்தைந்து மைல் வேகத்தில் வருகிறது ஆகவே வித்தியாசம் என்ன?” அப்புசாமி தன்னைச் சூழ்ந்திருந்த ரசிகர்களைக் கேட்டார் ஓரக்கண்ணால் சீதாவையும் பெருமையுடன் பார்த்துக் கொண்டார்.
அப்புசாமியின் சாதனை சீதாவின் பாட்டிக்கு விளங்கவில்லை. “ரயிலை ஏன் பின்னாடி போகச் சொல்லிவிட்டான் இந்தப் பிள்ளை. இவன் சொல்லறதுக்கு இந்த ரயில் ஆடறதே… ஆச்சிரியம்தானடியம்மா… கைகாரப் பிள்ளைதான்…” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
“யாருடைய மூளைக்கும் ஒன்றும் தோன்றவில்லை பாட்டி இவர் மூளைக்குத்தான் தோன்றியது வெறும் ‘கட் டக் கட’ சத்தத்தை வைத்துக் கொண்டே அதிலே ஏதோ மாறுதலிருக்கிறது என்று தெரிந்து எதிரில் இதே லைனில் மிஸ்டேக்காக ஒரு கூட்ஸ் வருகிறது இவருக்குத் தெரிந்துவிட்டது வண்டியைக் கூட்ஸ் வேகத்தைப்போல இரண்டு மடங்கு வேகத்தில் பின்னாடி செலுத்தணும்கிற அருமையான யோசனையும் இவர்தான்…”
சீதா பேசி முடிக்கவில்லை ஓராயிரம் இடிகள் விழுந்தன ஆயிரத்தைந்நூறு கூச்சல்கள்.
டமடமால்… தடதடால்… டமால்!
முன்புறம் கூட்ஸ் வண்டி வருகிறதே என்று ரயிலைப் பின்னுக்கு விரட்டினார் ஸயன்டிஸ் ஆனால் பின்னால் ஒரு துரித வேகத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது அந்த ஸயன்டிஸ் முளைக்கு எட்டவில்லை.
“எந்த மடையன் பின்னால் வண்டியைவிடச் சொன்னது?” என்று அப்புசாமியை எல்லோரும் தேடிக் கொண்டிருந்தார்கள் அவர் தூக்கி எறியப்பட்டு ஒரு மரக்கிளையின்மேல் பத்திரமாக விழுந்து கிடந்தார்.
பிரக்ஞை திரும்பிய நிலையில் அப்புசாமி மெதுவே கண்ணை விழித்துப் பார்த்தார் ஆவலுடன் சீதாவைத் தேடின அவர் கண்கள்.
“ஏன் தூங்கியெழுந்த ‘ப·பலோ’ மாதிரி செக்கச் சிவக்க விழித்துப் பார்க்கிறீர்கள்? மத்தியானத் தூக்கம் வேண்டாம் வேண்டாம் என்றால் கேட்கிறீர்களா? பேப்பரை வைத்துக்கொண்டே தூங்குவது பேப்பருக்கே பெரிய இன்ஸல்ட்…” என்றவாறு அப்புசாமியின் மார்பிலிருந்த பத்திரிகையைச் சீதாப்பாட்டி பறித்துக் கொண்டாள்.
“அந்தச் சீதே எங்கே?” என்றார் அப்புசாமி குழப்பத்துடன்.
“விச் சீதே”?” என்று சீதாப்பாட்டி கடுகடுத்தாள்.
நடப்பது கனவா கண்டதுதான் கனவா என்பதை அப்புசாமியால் நிர்ணயிக்க முடியவில்லை விழித்தார் கொட்டக் கொட்ட.