வைத்தியர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 9, 2021
பார்வையிட்டோர்: 8,042 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசகர்களுக்கு

இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறோமே ? என்றும், சில இடங்களில் இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்றும் தோன்றியது. இப்புத்தகம் முதன் முறை வெளியானபோது இதைப் படித்த ரசிகமணி டி. கே. சி. அவர்கள் என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மிக அருமையான கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள். எதிர் காலத்தில் நான் ஒரு சிறந்த நகைச்சுவை ஆசிரியராக விளங்குவேன் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் என்னே வாழ்த்தியிருந்தார்கள். இச்சமயம் அவரை நினைவு கூர்ந்து அஞ்சவி செலுத்துகிறேன்.
மயிலாப்பூர்
சாவி
14-4-1964

வைத்தியர்

அகத்தியபுரம் ஸ்டேஷனில் தினமும் ஒரு ரூபாய் ஏழே காலனாவுக்கு டிக்கட் விற்று வந்தார்கள். ஓரோர் தினத்தில் இரண்டு ரூபாய்க்கு வியாபாரம் நடந்து விட்டதானால், ஸ்டேஷன் மாஸ்டர் மூர்ச்சை போட்டு விழுவது வழக்கம்.

அகத்தியபுரம் என்று ஓர் ஊர் இருப்பதாகவே வெகு நாள்வரை தமிழ் நாட்டு ஜனங்களுக்குத் தெரியாமலிருந்தது. ஆகவே, ஜனங்கள் போக்கு வரத்தும் அந்த ஸ்டேஷனில் குறைவு.

அந்த ஊரில் ஒரு கோயிலோ. குளமோ, அல்லது ஒரு குட்டையோ விசேஷமாக இருந்தால்தானே ஜனங்கள் வரு வார்கள் ? மெனக்கட்டு ஊர் என்று ஒன்று இருந்தால் அங்கே ஏதோ ஒரு தொழிலாவது பிரசித்தி அடைந்திருக்க வேண்டும். ஒன்றுமில்லாத ஊரைக் கண்ணெடுத்தும் பார்ப்பவர்கள் யார்? எனவே ரயில்வே ஸ்டேஷனில் போர்ட்டர் முதற்கொண்டு ஸ்டேஷன் மாஸ்டர் வரை சீட்டாடுவதைத் தவிர்த்து வேறு வேலையின்றித் தவியாய் தவித்தார்கள்,

இப்படிக் காசுக்கு உதவாத அந்த ஊர் மிகப்பிரசித்தி பெற்ற கிராமமாக மாறிவிடும் என்று அந்தச் சங்கரனுக்கே தெரியாது.

***

சங்கரன் ஒரு சாமான்ய மனிதன். அவனுக்கு ஆஸ்திக புத்தி அபாரமாயிருந்தது. “‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்ற முதுமொழியை நம்பி வாழ்ந்து வந்தான்” அவன்; வேதாந்தி. உலக வாழ்க்கையே மாயம், அதில் தான் இருப்பது நியாயம் என்று அவன் எண்ணிக்கொண்டிருக்கவில்லை.

orr-5621_Vaithiyar_picசங்கரனுக்கு ஸ்வப்பன சாஸ்திரத்தில் பரம நம்பிக்கை. உண்டு. பிரதி தினமும் ராமாயணப் பாராயணத்திற்குப் பிறகு, திரிஜடையின் சொப்பன கட்டத்தை ஒருமுறை படித்து” முடிப்பான். அவனுக்கு அதில் அவ்வளவு, நம்பிக்கை. ‘ஸம்சயாத்மா விநச்யதி’ என்று பகவான் ஏன் சொன்னார்? நம்பிக்கையற்றவன் நாசமடைவான் என்பதுதானே அதன் தாத்பர்யம்? ஆகையால் எதிலும் நம்பிக்கை வை, அது ஸ்வப்பனமாயிருந்தால் என்ன, பனங் கற்கண்டாய் இருந் தால் என்ன? நம்பினவன் மோசம் போகான் என்று இப்படியெல்லாம் கனாக்கண்டு வந்தான் சங்கரன்.

ஒரு நாள் கனவில் ஒரு குள்ள உருவம் சங்கரன் முன் சான்னித்யமாயிற்று. அது யார்? அவர்தான் ஆயுர்வேதப் பிதா அசுத்தியமா முனிவர். சங்கரன் ஸ்வப்பனத்தில் தோன்றி, “அப்பா, இந்தா; இந்த ஏனத்தை வைத்துக் கொள், நீ கடவுளை நம்புகிறாய் ; அதற்குப் பதிலாகக் கடவுள் என்னை இந்த மருந்தை உன்னிடம்கொடுத்துவரச் சொன்னார். இதற்கு அகத்திய கல்பத்வஜம் என்று பெயர். நீ நாளை முதல் கடவுளின் கட்டளைப்படி வைத்தியனாகி இந்த உலகுக்கு உதவி புரிவாயாக. அவரவர்கள் சக்திக்குத் தக்கபடி கொடுக்கும் பணத்தை உன் வயிற்றுப் பிழைப்புக்கு உபயோகித்துக்கொள்” என்று சொல்லி மறைந்தார்.

கண் விழித்துப் பார்த்தான் சங்கரன். அங்கே அகஸ்தி யரையும் காணோம். அவர் கொடுத்த ஏனத்தையும் காணோம்.

“ஸம்சயாத்மா விநச்யதி!” – சந்தேகப்படுகிறவன் நாசமடைவான். ஏன் அகஸ்தியர் கொடுத்த ஏனம் இல்லையென்று சந்தேகப்பட வேண்டும்? அவர் கொடுத்தால் தான் அது இருக்கவேண்டுமா ? கொடுக்காமலேயே அது இருக்கக் கூடாதா?.

‘இதோ’ என்று சங்கரன் திரும்பிப் பார்த்தான். சமையலறை அலமாரியில் அவன் மனைவி வைத்திருந்த மிளகு ஏனம் தென்பட்டது. “ஆ! அகத்தியர் இன்று காட்டியதும் இந்த அருமை ஏனம் தானென்று நம்பினான். இதோ வைத்தி பயனானேன்! இன்றே இதை உலகத்திற்கு அறிவிக்கிறேன்” என்று ஒரு கரும் பலகையில், “அகத்திய கல்பத்வஜம் ; தீராத வியாதிகளைத் தீர்த்து வைக்கும், அகத்தியர் கனவில் தோன்றி அருளிச் செய்த மருந்தைச் சாப்பிட்டு இன்றே உங்கள் வியாதிகளைப் போக்கிக் கொள்ளுங்கள்” என்று எழுதித் தன் வீட்டு வாசலில் தொங்க விட்டான். அவ்வளவு தான்!

இந்த விஷயம் அக்கம் பக்கம் உலவி பிறகு நாடெங்கும் காட்டுத்தீ போல் கன சீக்கிரத்தில் பரவியது.

காயகல்ப சிகிச்சை செய்து கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த கிழங்களெல்லாம் சங்கரனை நாடிப் போனார்கள்.

நாட்டின் நாலா பக்கத்திலிருந்தும் ஜனங்கள் சங்கரனைத் தேடி வந்து புடைசூழ நின்றுகொண்டு, “கொண்டா அந்த மருந்தை” என்று கூக்குரலிட்டனர்.

நற்சாட்சிப் பத்திரங்களெல்லாம் சங்கரன் மேஜையில் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. உதாரணமாக ஒரு கடிதத்தை மட்டும் இங்குத் தருகிறோம்:

“ஐயா,

எழுந்து நடக்கக்கூடச் சக்தியின்றித் தடியைப் பிடித்துத் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டி ருந்த எங்கள் வீட்டுக் கிழத்திற்கு உங்கள் அகஸ்தியர் லேகியத்தை ஒரு தடவை கொடுத்துப் பார்த்தோம். அவ்வளவு தான்; சாப்பிட்ட இரண்டு நிமிஷத்திற் கெல்லாம் அந்தக் கிழவர், யௌவனத்தை அடைந்து விட்டார். இன்னும் கொஞ்சம் உங்கள் லேகியத்தைக் கொடுத்துவிட்டேன். இப்போது – அப்பா! நான் பள்ளிக்கூடம் போகவேண்டும். ‘ஐஸ்கிரீம்’ வாங்கிச் சாப்பிடவேண்டும், காலணக் கொடு என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு வெளியே சொல்லிக் கொள்ள வெட்கமாயிருக்கிறது; வீட்டுக்குள்ளேயே இந்தப் புதுப் பையனை வைத்திருக்க விரும்புகிறேன். அவருக்கு விளையாட ஒரு பம்பரமும் நாய்க்குட்டியும் வாங்கத் தீர்மானித்திருக்கிறேன். இதெல்லாம் உங்களுடைய மருந்தினால் வந்த ரகளை அல்லவா?

தைக் கொடுக்னனும் கொஞ்சம் தைதை அடைந்து

இப்படிக்கு,
ஒரு கிரகஸ்தன்.”

டாக்டர் ஷங்கருக்கு நாடி பிடித்து பார்க்கக்கூடத் தெரியாது. என்றாலும் ஊரார் ‘டாக்டர், டாக்டர்’ என்று அவரைக் கொண்டாடுகிறார்கள்.

எப்படி அந்தப் புகழ் வந்தது? அகத்தியர் அருளிச் செய்த மருந்தைச் சகல விதமான ரோகங்களுக்கும் சங்கரன் கொடுத்து வருகிறான். ஆனால் அவன் சொல்லும் முறை மிக மிக விசித்திரமானது ! அதன்படி செய்தால் உடனே எந்த வியாதிகளும் குணமாகிறது.

தலைவலி வந்தால் ‘யூகலிப்டஸ்’ ஆயிலில் இந்தப் பௌடரைக் கலந்து பத்துப் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஜுரம் வந்தால் சுக்குக் கஷாயத்தில் இந்த மருந்தைக் கலக்கிச் சாப்பிட வேண்டும்.

இப்படிச் சங்கரன் கொடுத்த அகஸ்திய மருந்தைச் சாப்பிடப் பல ஊர்களிலிருந்தும் ஜனங்கள் திரண்டு வந்து கொண்டே இருந்தனர். ஈ ஓட்டிக் கொண்டிருந்த ஸ்டேஷனில் இப்பொழுது ஒரு கொசு நுழையக்கூட இடம் கிடையாது. டாக்டர் சங்கரன் ஒரு பெரிய லக்ஷாதிபதியாக மாறினான்.

கொச்சியில் மிளகு எஸ்டேட்கூட ஒன்று வாங்கி விட்டா னாம். இவ்வளவும் வைத்தியத்திற்கு வருகிறவர்கள் அவரவர்கள் இஷ்டப்படி காலணா அரையணா என்று கொடுத்த காசு தான்.

***

“யார் அது? உங்களைத்தானே! உடம்பு சரியாயில்லை என்று சொன்னீர்களே? மிளகுக் கஷாயம் போட்டுவைத்திருக்கிறேன். மணி எட்டடித்து விட்டது. இன்னும் தூங்குகிறீர்களே! எழுந்து கஷாயத்தைச் சாப்பிடுங்கோ! மிளகுக் கஷாயத்தின் மகிமை உங்களுக்குத் தெரியவில்லையே? சகல வியாதிக்கும் நல்லதாயிற்றே!” என்ற கம்பீரமான அவன் மனைவியின் குரல் சங்கரனுக்குக் கேட்டது!

– மௌனப் பிள்ளையார், இரண்டாம் பதிப்பு: ஏப்ரல், 1964, மங்கள நூலகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *