வெங்குவும் கழுதையும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 12,126 
 
 

1

அந்த யோசனையை வெங்கி என்கிற வெங்கடசுப்ரமணியத்திற்குச் சொன்னதே சிவா என்கிற சிவச்சாமிதான்.!!

நேற்று வெங்குவும் சிவச்சாமியும் ஊருக்கு ஒதுப்புறம் ஆற்றோரமுள்ள புளியமரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் வெங்கு…..

“அம்மா! என்னைத் திட்றாடா..!” என்று முகம் தொங்கி சொன்னான்.

திடுக்கிட்டு…..

“எதுக்கு..?” இவன் அவனைப் பார்த்தான்.

‘’ நான் கதை எழுதுறதுனால… தினம் வீட்டுல நிறைய தாள் சேர்ந்து குப்பையாகுதாம். ‘ நானும் தினம் இடுப்பொடிய கூட்டி வாரிக்கொட்றேன். தெரு முனையிலே உள்ள முனிசிபாலிட்டி குப்பைத் தொட்டி வழிஞ்சி அக்கம் பக்கம் பறந்து குப்பையாகுது. தெருவாசிகள் மட்டுமில்லாமல் வீதியில போற வர்ற மக்களெல்லாம்….. என்னம்மா உனக்கு இதே வேலையாய்ப் போச்சுன்னு சண்டைக்கு வர்றாங்க. எத்தனை நாளைக்குத்தான் நான் உனக்காக அடுத்தவங்ககிட்ட ஏச்சு பேச்சு வாங்கி சண்டைக்கு நிக்க முடியும்…? ஒன்னு… நீ கதை எழுதறதை நிறுத்து. இல்லே… நீயே வாரிக்கொட்டி சண்டை போட்டுக்கோ. சொல்றா.” சோகமாய்ச் சொன்னான்.

சிவாச்சாமிக்கு விசயம் புரிந்தது. அவன் எப்போதுமே நியாயமாகவும் நல்லதாகவும் யோசிப்பவன். அதனால்…

“அம்மா சொல்றது நியாயம்தானே..?! நீதான் கதை எழுதறேன் பேர்வழின்னு தினம் கூடை கூடையாய்த் தாளை எழுதிக் கிழிச்சு கொட்டி குப்பையாக்குறே.! ஆனா இதுவரைக்கும் ஒரு கதையாவது பத்திரிக்கைகளில் பிரசுரமாகி வெளிவரலே. இந்த லட்சணத்துல யாருக்குத்தான் கோபம் வராது..?” என்றான்.

அதைக் காதில் வாங்கிக் கொண்ட வெங்கு…

“சரி. அதுக்காக என்னால கதை எழுதாம எல்லாம் இருக்க முடியாது.! என் எழுத்து பிரசுரமானாலும் ஆகாவிட்டாலும் நான் சாகிறவரை எழுகிட்டே இருப்பேன். அதுல மாற்றம் கிடையாது. அம்மா கண்டிச்சி சொல்லிட்டா அதனால இதுக்கு ஒரு வழி சொல்..?” அவன் தாடையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

‘பாவம்! அப்பிராணி!’வெங்குவைப் பார்க்க சிவச்சாமிக்குப் பாவமாக இருந்தது.

‘அவன் ஆசையை ஏன் கெடுப்பானேன் ?!’ என்று நினைத்து…

“வழியா..?!” கேட்டு நெற்றியைச் சுருக்கி வானத்தைப் பார்த்தான். விரல்களால் பொட்டுக் குழியைத் தேய்த்தான்.

சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு….மூளையில் ஒரு யோசனை உதித்தது.

“வழி கண்டு பிடிச்சாச்சு. உங்கம்மாவை தாளெல்லாம் பெருக்கி குப்பையில் போடாம எல்லாத்தையும் ஊறவெச்சு தாள் கூடை போடச் சொல்லு..?”-சொன்னான்.

“இந்த யோசனையை அம்மாவே செஞ்சிட்டாள். இருக்கிற பானை, சட்டி எல்லாம் கவுத்து வித விதமா போட்டு வீட்டையே அடைச்சுட்டாள். இன்னும் அவள் தலை, என் தலை சைசுக்கும்தான் போடலை. போட்டாலும் வைக்க இடமில்லே சொல்லிட்டாள்.”என்றான்.

“அப்படியா…?!…” கேட்டு சிவச்சாமி மீண்டும் யோசனையில் இறங்கினான்.

வெங்கு… அவன் முகத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வெகு நேரத்திற்குப் பிறகு… அவன் முகம் பிரகாசமானது.

“வெங்கு! ஒரு யோசனை!” என்று துள்ளிக் குதிக்காத குறையாய்ச் சொன்னான்.

“என்ன…?”

“ஒரு கழுதை வளர்க்கலாம்!” என்றான்.

நல்ல யோசனையை எதிர்பார்த்த வெங்குவிற்கு இது எரிச்சலாக இருந்தது.

“என்ன! விளையாடுறீயா..?” கோபித்தான்.

“விளையாட.லே..! அருமையான யோசனை. கோபப்படாம பொறுமையாக் கேளு. கழுதை எதைத் தின்னும்..?” – சிவச்சாமி கேட்டு நண்பனைப் பார்த்தான்.

“புள்ளைத் தின்னும்.!”

“மடையா..! என்னத்தை விரும்பித் தின்னும்..?”

இவன் மூளையைக் கசக்கினான். தன் சிற்றறிவிற்கு எதுவும் எட்டாமல் குழம்பி சிவச்சாமியைப் பார்த்தான்.

“குப்பையில கிடக்குற தாள், சுவத்துல ஒட்டி இருக்கிற போஸ்டரை எல்லாம் தின்னும்.! தாள்தான் அதுக்கு விருப்ப உணவு.” நிறுத்தினான்.

வெங்குவிற்கு அப்போதுதான் அது புத்தியில் பட்டது.

“ஒரு கழுதையை வாங்கி வளர்த்தா உனக்கும் உன் அம்மாவுக்கும் உள்ள பிரச்சனைத் தீர்ந்தது!”

“…..’

“கழுதை நீ கதை எழுதி கிழிக்கிற தாட்களையெல்லாம் தின்னுடும். அக்கம் பக்கம் வம்பு சண்டைக்கு வேலை இல்லே..”

“அருமையான யோசனை.!” என்று மலர்ச்சியுடன் சொன்ன வெங்கு.. மகிழ்ச்சியில் சிவச்சாமியை அப்படியே கட்டிக்கொண்டான்.

வீட்டில் நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, கொக்கு, குதிரை, கழுதை என்று எந்த வளர்ப்பும் கிடையாது. அப்படி வளர்க்க வேண்டுமென்று நெடுநாளாக இவனுக்குள்ளும் ஆசை. இப்போது கழுதையை வளர்த்தால் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி…! – தோன்ற…. யோசனை சொன்ன நண்பனைப் பெருமையாகப் பார்த்தான்.

“சரிடா! கழுதைக்கு எங்கே போவது…?” வெங்கு கேட்டான்.

“கவலையை விடு. தேடி பிடிச்சி வாங்கிடலாம்.”

“அதை எங்கே போய் தேடுறது…?”

“துணி சுமக்க வண்ணான்கள் வளர்க்கிறாங்க…”

“வண்ணான்கள்ன்னா…?!”

“சலவைத் தொழிலாளிகள்!”

“ஓஓ…! ஆனா…இப்போ எல்லா சலவைத்தொழிலாளிகளும் துணி மூட்டைகளைச் சுமக்க..வேன், தள்ளுவண்டி, தன் இரு சக்கர வாகனங்களைத்தானே உபயோகப்படுத்துறாங்க…?! .”என்றான்.

“அதெல்லாம் வசதியான தொழிலாளிங்க வைச்சிருக்காங்க. எனக்குத் தெரிஞ்ச ஆள் ஒருத்தன் இருக்கான். ஏழை. இதுக்காக இரண்டு கழுதைகள் வளர்க்கிறான். வருமானம் சரி இல்லே. வளர்க்க முடியலைன்னு ஒன்னை வித்துடனும் என்கிற முடிவிலிருக்கான். என்கிட்டேயும் சொன்னான்.”

“வாங்க பணம்…?”

“தோது பண்ணலாம்.”

“விலை…?”

“கஷ்டப்படுற ஆள் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துடலாம். இப்போ அவனுக்குத் தள்ளி விட்டால் போதும் அவ்வளவு கஷ்டம்.!”

வெங்குவிற்கு கேட்க கேட்க புளகாங்கிதமாக இருந்தது.

நண்பனை எப்படி பாராட்டுவதென்றே அவனுக்குப் புரியவில்லை.

“சிவா! நீதான்டா என் கண் கண்ட தெய்வம். கஷ்டம் பார்த்து உதவுற உண்மையான நண்பன். ஏழேழு ஜென்மத்துக்கும் நீதான்டா எனக்கு நண்பனாய் வரணும்!”சொல்லி அவனைக் கட்டிப் பிடித்து ஒரு’இச்!” கொடுத்தான்.

சிவச்சாமிக்கும் பெருமை பிடிபடவில்லை. கன்னத்தில் வழிந்த’இச்’எச்சிலைத் துடைத்துக் கொண்டான்.

2

மறுநாள்

அதிகாலையிலேயே எழுந்து முதல் வேலையாய் சலவைத் தொழிலாளிகள் வெளுக்கும் குளக்கரைக்குப் போய் ஆளை பிடித்து, பேசி கழுதையை வாங்கி….அதை அங்கேயே நன்றாகக் குளிப்பாட்டி, அங்கிருக்கும் மாரியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று அதற்கு நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து, காதுகளில் பூ சுற்றி, கழுத்தில் மாலை அணிவித்து, ஒரு புது இரு, நான்கு சக்கர வாகனங்களுக்குச் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் செய்து, கோயில் பூசாரியை தீபாராதனைக் காட்டச் செய்து, நான்கு கால்களிலும் எலுமிச்சைப் பழங்கள் வைத்து நசுக்கி அழைத்து வந்து வெங்கு வீட்டின் முன் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்தார்கள்.

தன் வேலை முடிந்து சிவச்சாமி அகன்றதும்… வெங்கு தன் வீட்டு வாசல் படியில் அமர்ந்து…கழுதையின் அழகை பார்த்து ரசித்தான்.

எதார்த்தமாய் ஏதோ ஒரு வேலையாய் வெளியே வந்த வெங்குவின் தாய் கிருஷ்ணவேணி, தன் வீட்டிற்கு எதிரே ஒரு கழுத்தை கட்டிக்கிடப்பதும், அதை வெங்கு வைத்தக் கண் வாங்காமல் அழகு பார்ப்பதும் கண்டு திடுக்கிட்டாள்.

“டேய்.! தடிக்கழுதை! இதென்னடா கூத்து..?” பதறினாள்.

“ஸ்ஸ்…! சத்தம் போடாதே. இன்னையிலேர்ந்து உனக்கும், எனக்கும் உள்ள பிரச்சனைக்கு வழி பண்ணிட்டேன்.!” என்று கூறி விசயத்தை விளக்கினான்.

கிருஷ்ணவேணிக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை.

“என் ராசா! புத்திசாலி!” என்று மகன் கன்னத்தை வழித்து சொடக்குப் போட்டாள்.

“நீ பொறந்த உடனேயே கழுதை ரத்தத்தைக் கொடுத்தேன். . அதான் இப்ப வேலை செய்யுது.!” சொல்லி மீண்டும் ஒரு முறை அவன் முகத்தை வழித்து சொடக்குப் போட்டு திருஷ்டி கழித்தாள்.

அத்தனை விரல்களும் படபடவென முறிந்தன.

‘அம்மாடியோவ்! எவ்வளவு திருஷ்டி!’அவளே ஆச்சரியப்பட்டாள்.

இத்தனை நாட்களாகத் ‘ தடிக்கழுதை,! முண்டம்,! தண்டம்! ‘ என்று வசைபாடி, வறுத்தெடுத்த தன் தாயே தன்னுடைய புத்திசாலித்தனத்தைப் பற்றி பாராட்டியதும் வெங்குவை யாரோ இமயமலையின் உச்சியில் வைத்துக் கொஞ்சுவதைப் போலிருந்தது.

அடுத்த ஐந்தாவது நிமிடம்…..

தாயும் மகனும் சேர்ந்து வெங்கு எழுதிக் குவித்த தாட்களையெல்லாம் ஒரு கூடையில் அள்ளி வந்து அந்த கழுதைக்கு முன்பாக வைத்தார்கள்.

அது காய்ந்த மாடு கம்பில் விழுந்ததாய் …அல்வா, அப்பளம் சாப்பிடுவதைப் போல அருமையாகத் தின்றது.

‘கழுதை மாங்கு மாங்குவென்று தின்கின்றதே! தொண்டை அடைத்துக் கொண்டால் என்ன செய்வது?’ – என்கிற நினைப்பெழ கிருஷ்ணவேணி எழுந்து வீட்டினுள் அவசரமாக ஓடினாள்.

அப்போதுதான் வடித்துவிட்டு வந்த சோற்றுப்பானையை நிமிர்த்தினாள். குண்டான் நிறைய நிரம்பி வடி கஞ்சியை கரித்துணியைப் பிடித்து தூக்கிக் கொண்டு வந்து அதன் முன்னே வைத்தாள்.

புது சோற்றுக் கஞ்சியின் வாசனையை மோப்பம் பிடித்த கழுதை ஆவலாய் குண்டானுக்குள் வாயை வைத்தது.

அடுத்த வினாடி …

சூடு தாங்கமுடியாமல் முக்கிய வாயை’பிர்ர்ர்ர்..!’என்று சிலுப்பி கவிழ்க்க… அருகில் அமர்ந்து அது அருந்துவதை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த தாய், மகன் கை கால்கள் மேல் பட்டு சுடு கஞ்சி வெப்பம் தாக்க, எரிய….. அவர்கள்….

“ஐயோ..! ஐயோ..!” கதறினார்கள்.

கிருஷ்ணவேணி சூட்டைத் தாங்கி சுதாரித்து…மகன் துடிப்பதைக் கண்டு பதறி வெடுக்கென்று எழுந்து வீட்டிற்குள் ஓடினாள்.

மகன் வாங்கி வைத்திருந்த அரை லிட்டர் இங்க் பாட்டிலை எடுத்து வந்து அப்படியே அவனுக்குக் கஞ்சி பட்ட இடங்களில் கொட்டினாள்.

அவளுக்கும் தடவிக்கொண்டாள்.

இப்போதுதான் வெங்குவிற்கு அந்த யோசனை உதித்தது. கை, கால்களில் பட்ட நமக்கே இந்த எரிச்சல் எரியும்போது… கழுதை வாய் வெந்து நொந்து போயிருக்குமே! என்கிற நினைப்பு வர சொரக் கென்றது.

தாய் இங்க் எல்லாம் கொட்டி வேறு வீணடித்து விட்டாளே..என்று கோபம் வர…

“அம்மா..! நமக்குத் போட்ட உனக்கு கழுதைக்குப் போடனும்ன்னு அறிவில்லையா..? சுடுகஞ்சியைக் கொதிக்க கொதிக்க கொண்டு வந்து இப்படியா வைக்கிறது. ?” சத்தம் போட்டான்.

அவளுக்கு அப்போதுதான் தன் தவறு தெரிந்தது.

“முன்னே பின்னே நான் கழுதையைப் பார்த்திருக்கேனா, வளர்த்திருக்கேனா..? உன்னைத்தானேடா வளர்த்திருக்கேன்.!” என்று கையைப் பிசைந்தாள்.

கழுதை பாவம்.! சூட்டின் எரிச்சல் பொறுக்க முடியாமல்… நாக்கால் மூக்கை, வாயைச் சுழற்றி, நக்கி, நக்கி…அவஸ்தைப் பட்டது.

இங்க் தடவி விடுவதைவிட மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கி வந்து தடவினால் சீக்கிரம் குணமாகிவிடும் என்ற ஞானோதயம் பிறக்க… வெங்கு உடனடியாக எழுந்து அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு ஓடினான்.

தனக்கும் தன் அம்மாவிற்கும் தீக்காயம் பட்டுவிட்டதென்று கூறி ஒரு பாட்டில் நிறைய நீல மருந்தை வாங்கி வந்து ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி கழுதையின் வாய், மூக்கு பகுதியில் பூசினான்.

மூக்கில் நீல சாயம் பூசிக்கொண்டு நிற்கும் கழுதை உருமாறி வேறொரு புது வினோத விலங்கு மாதிரி தெரிய….. அந்த வழியாக வருவோர், போவோர்களெல்லாம் அதை ஒரு நிமிடம் நின்று அதிசயாமாகப் பார்த்துச் சென்றார்கள்.

“வெங்கு! இது என்ன விலங்கு ?” என்று வேறு சிலர் நக்கலாகக் கேட்டுவிட்டுச் சென்றனர்.

கிருஷ்ணவேணியையும் அழைத்து…

“இது என்ன வகை கழுதை…?” என்று கேட்டு அவளையும் வெறுப்பேற்றிச் சென்றனர்.

3

மதியம் சாப்பிட்டுவிட்டு வழக்கம் போல் கிருஷ்ணவேணியும், வெங்குவும் அசந்து குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த நேரம் பார்த்தா கழுதைக்கு உற்சாகம் பிறக்க வேண்டும்..?!

“ஹேங்…! ஹேங்…! ஹேங்…!…. உங்…..! புர்ர்ர்ர்ர்ர்….” என்று உச்சக்கட்டக் குரலில் கர்ண கொடூரமாகக் கத்தி அக்கம் பக்கம், சுற்றுவட்டாரத்தையே அதிரடித்தது.

தாய், மகன் இருவரும் அலறி துடித்து எழுந்தார்கள்.

கழுதைக்கு என்னவோ, ஏதோ என்று வெளியே ஓடி வந்து பார்த்தார்கள். கழுதை ஒன்றும் அறியாத குழந்தை மாதிரி வாலை மட்டும் சுழற்றிக் கொண்டு தேமேவென்று நின்றது.

மனப் பிராந்தியோ…?! என்று நினைத்து இருவரும் உள்ளே சென்று படுக்க…. கழுதை மீண்டும் கத்தியது. இது போன்று நான்கு தடவைகள் கத்தி அவர்களைத் தூங்க விடாமல் செய்தது.

இது மத்தியானத் துக்கத்தைக் கெடுத்துவிடும் போலிருக்கிறதே..! தன்னைப் போலவே மத்தியானத் தூக்கம் தூங்கும் அக்கம் பக்கத்தவர்களையும் இப்படிக் கத்தி எழுப்பி விட்டால் சண்டைக்கு வருவார்களே என்று கிருஷ்ணவேணி நினைக்கும்போதுதான்…..

வெளியே…

“யாரு வீட்ல..?” குரல் கேட்டது.

வெங்குவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு மிரட்சியுடன் வந்து வாசல் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள் கிருஷ்ணவேணி.

ஆள் ஆறடி உயரம் வாட்ட சாட்டமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். முரட்டு முகம், மீசையும் கிருதாவும்… ஆளைப் பார்க்கவே பயமாக இருந்தது.

வெங்கு பயந்து படக்கென்று வந்து தாயின் பின்னால் நின்று கொண்டான். நெஞ்சு பக் பக் என்றது.

“இது உங்க கழுதையா..?” ஆளுக்கேற்றாற் போல் குரலும் கரடுமுரடாக இருந்தது.

“ஆ…..மா….”கிருஷ்ணவேணிதான் கிலியுடன் சொன்னாள்.

அவர்கள் இருவரையும் ஏற இறங்க ஒரு மாதிரியாகப் பார்த்தார் அவர்.

“எ….என்ன விசயம்…?” கிருஷ்ணவேணி மனதில் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு நரியடி புலியடியாகக் கேட்டாள்.

“என் பெஞ்சாதிக்குக் குழந்தை பிறந்திருக்கு. கரப்பான் நோய் வராம இருக்க நோய் எதிர்ப்பு சக்திக்கு கழுதை ரத்தம் வேணும் .” கேட்டார்.

அப்போதுதான் கிருஷ்ணவேணிக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

“ப்பூ! இவ்வளவுதானா..?!” என்றவாறு வெங்குவும் தாயின் பின்னாலிருந்து வெளி வந்தான்.

கழுதையின் வளர்ப்பில் இப்படி ஒரு அனுகூலம். வியாபாரம்! அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

கிருஷ்ணவேணிக்கும் முதல் வியாபாரம்! முகத்தில் களை வந்தது.

அவர் தன் இடுப்புப் பெல்ட்டிலிருந்து ஐம்பது ரூபாய் தாளை எடுத்து நீட்டி,,,

“தம்பி! அவசரம் சீக்கிரம் .”.கெஞ்சினார்.

‘எப்படி எடுப்பது..?’ தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

பக்கத்து வீட்டு மாமிக்கு குழந்தை பிறந்த போது அந்த மாமாவுடன் கழுதை ரத்தம் வாங்க இவனும் அவரோடு போயிருந்தான்.

கழுதையை வளர்த்த சலவைத்தொழிலாளியிடம் இவர் ரத்தம் கேட்டதும்… அந்த ஆள் சின்ன நெல்லிக்காய் அளவிற்கு வெள்ளைத் துணியைச் சுருட்டி, உருட்டி வந்து கட்டிக் கிடைக்கும் கழுதையின் காதைக் கிள்ளினான். அதற்கு வலியோ உபத்திரவமோ இல்லாது போல் சிவனே என்று நின்றது. அவன் கிள்ளிய இடத்தில் கசிந்த ரத்தத்தை அந்த துணியில் ஒற்றி எடுத்து நீட்டி சுளையாய் ஐம்பது வாங்கிக்கொண்டது நினைவிற்கு வந்தது.

பணத்தை வாங்கிக்கொண்டு வெங்கு உள்ளே சென்றான். வேட்டியைக் கிழிக்கச் சென்றவனுக்குக் காலையில் நீல மருந்துடன் வாங்கி வந்த பஞ்சு ஞாபகம் வந்தது. அந்த பஞ்சில் கொஞ்சம் எடுத்து நெல்லிக்காய் அளவிற்கு உருட்டி எடுத்து வந்தான்.

அப்படியே கழுதை காதை அறுக்க சின்ன கத்தியை எடுத்தான்.

‘வலி தாங்காமல் போனால் என்ன செய்வது..? அதிக ரத்தம் வந்தால் கழுதைக்கும் ரத்தக் குறைவு ஏற்படும், வீணாக ரத்தம் போய் பணமும் பாழ். நமக்குத் தேவை கொஞ்சமான ரத்தம். அதற்கு கத்தி, பிளேடு சரி படாது. அந்த சலவைத் தொழிலாளி செய்தது போல் காதைக் கிள்ளினால் ரத்தம் வரும். அதை ஒற்றி எடுத்து வந்து கொடுத்தால் பிரச்சனை தீர்ந்தது.! – புத்தி வர…

பஞ்சுடன் வந்து கழுதையின் அருகில் சுவாதீனமாகப் போய் நின்று அதன் அதன் காதோரத்தைக் கிள்ள… தோல் தடிமனாக இருந்தது.

கொஞ்சம் அழுத்திக் கிள்ள…வலி தாங்காத கழுதை துள்ளிக் குதித்து, திரும்பி பின்னங்கால்களால் பட் பட்டென்று நாலு உதைகள் விட்டது. வெங்கு எகிறிப் போய் நாலடி தள்ளி விழுந்தான். விழுந்த இடம் கருங்கல் கப்பி சாலை கரடுமுரடாக இருந்ததால் கை, கால்களெல்லாம் சிராய்ப்பு, ரத்தக் கசிவு. கழுதை உதை இட்ட இடங்கள் வேறு உயிர் போகுமாறு வலித்தது. தட்டுத் தடுமாறி எழுந்து அடி பட்ட இடங்களைத் துடைக்க…சிராய்ப்புக் காயங்களிலிருந்து கசியும் ரத்தத்தைக் கண்டதும்…

‘இந்த ரத்தத்தை அவருக்குத் தெரியாமல் பஞ்சில் ஒற்றி கொடுத்தாலென்ன ? ‘ தோன்றியது.

‘மனித ரத்தத்திற்கும், விலங்குகள் ரத்தத்திற்கும் கண்டிப்பாக வித்தியாசம் தெரியாது. இரண்டும் சிகப்பு.! ‘ என்று நினைக்கும்போதுதான்…

“ஐயோ..! வெங்கு கீழே விழுந்துட்டியேடா…!” பதறி அடித்துக் கொண்டு வந்து ஓடி அவனைத் தூக்கினாள் கிருஷ்ணவேணி.

‘ச்சே! சரியான நேரத்தில் அம்மா காலை வாரிவிட்டாள்.! ‘ என்று நினைத்துக் கொண்டே எரிச்சலுடன் எழுந்தான் வெங்கு.

இனியும் கழுதையிடம் ரத்தம் எடுப்பதென்பது இயலாத காரியம்! கழுதை வேறு சுதாரிப்புடன் காதலி விறைத்து, விடைத்துக் கொண்டு இவனையே பார்ப்பது வெங்குவிற்குப் பயத்தை ஏற்படுத்தியது.

பணத்தை வேறு கை நீட்டி வாங்கிவிட்டோம். கழுதை ரத்தம் கொடுக்கவில்லை என்றால் இந்த முரட்டு அசாமி தன் தோலை உரித்து தொங்கவிட்டு தன் ரத்தத்தை எடுத்து விடுவார் என்கிற நினைப்பு வர இவனுக்குள் உதறலெடுத்தது.

ரத்தம் எடுத்தே ஆகவேண்டும்.! வேறு வழியே இல்லை.!! எப்படி எடுப்பது என்று யோசனை செய்தவனுக்குள் மூளையில் மின்னல் வெட்டியது.

நாலு வீடு தள்ளி இருக்கும் வீட்டுக்காரரிடம் போய் ஒரு தாம்பு கயிற்றை வாங்கி வந்தான். தூர இருந்தபடியே கயிற்றைத் தூக்கிப் போட்டு அதன் வயிற்றுப பகுதியில் சுருக்குப் போட்டு அதன் ஒரு முனையை அந்த ஆளிடம் கொடுத்து கழுதை திரும்பாமலிருக்க இழுத்துப் பிடிக்கச் சொல்லி கொடுத்து விட்டு கழுதையின் அருகில் போய் காதோரத்தைப் பிய்க்க கழுதை முன்போலவே ஒரு துள்ளு துள்ளி திரும்ப… கயிற்றோடு அந்த ஆள் கீழே விழுந்தார்.

ஆளுக்கு முன் பல் இரண்டும் போய் ரத்தம் கொடகொடவென்று கொட்டியது.

தன் பல்லையும் ரத்தத்தையும் பார்த்த அவருக்கு ஆத்திரம் தாளவில்லை. கோபாவேசமாக எழுந்தார்.

“கழுதை ரத்தம் எடுத்துக் கொடுக்கச் சொன்னார் என் ரத்தத்தை எடுத்துட்டியா..?” – ஒரே கத்து கத்தி வந்து வெங்குவின் சட்டையைப் பிடித்துத் தூக்கினார்.

வெங்குவிற்கு தன் முட்டைக் கண்கள் இரண்டும் பிதுங்கி வெளியே வந்து விழுவிடும் போலிருந்தது.

“ஐயோ…! என்னை ஒன்னும் செய்ஞ்சிடாதீங்க..?” கதறி கை எடுத்துக் கும்பிட்டான் வெங்கு.

“ம்ம்ம்…!” என்று ஒரு உறுமல் உறுமி அவனைத் தூக்கித் தொப்பென்று போட்டு விட்டு அவர் நடையைக் கட்டினார்.

மனிதருக்கு கொடுத்தப் பணத்தைத் திருப்பி வாங்கக்கூட நிதானமில்லை.

ஏற்கனவே உதைபட்டு, விழுந்த வலி, இப்போது இவர் தூக்கிப் போட்டதில் வேறு வலி. வெங்குவினால் எழுந்திருக்க முடியவில்லை.

அம்மா வந்து தூக்கி உதவுவாள் என்று ஆளைப் பார்த்தான். அவள் எப்போதோ பயந்து வீட்டிற்குள் போய் பதுங்கி இருந்தாள்.

தட்டுத் தடுமாறி எழுந்து வந்து வாசலில் உட்கார்ந்தான். கழுதை மேல் இவனுக்கு ஆத்திரம் வந்தது.

இனிமேல் கழுதையும் வேண்டாம், உதையும் வேண்டாம்.! என்று நினைத்து’எங்கேயாவது போ!’என்று உரக்கச் சொல்லி கயிற்றை அவிழ்த்து விட்டான்.

அது மகிழ்ச்சியுடன் குதித்துக் கொண்டு ஒரே பாய்ச்சலாக பாய்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தத் தெருவிற்கு ஓடியது.

அப்படி! விட்டது சனியன்! – என்று அப்படியே வாசலில் சாய்ந்தான்.

4

அடுத்தத் தெருவிற்கு ஓடிய கழுதை சும்மா இருக்கக் கூடாது…?

அவன் நேரமோ, இல்லை அது நேரமோ… அதன் முதுகில் அரிப்பெடுக்க ஒரு குடிசை வீட்டின் மண் சுவரில் அது இப்படியும் அப்படியும் முதுகைத் தேய்த்தது.

ஏற்கனவே உப்பு மண் அரித்து அடியில் செல்லரித்துப் போன சுவர் தொபுக்கடீர் என்று விழ…

குடிசை கூரை அப்படியே’பப்பரக்கா!’வென்று பரப்பிக்கொண்டு விழுந்தது.

குடிசைக்குள் இருந்த மாயாண்டி, அவன் மனைவி, பிள்ளை குட்டிகள் குடும்பமும் பதறி அடித்துக் கொண்டு வந்து பார்த்தால்… கழுதை!

“ஐயோ…! வீடு போயிட்டே..!!…”மாயாண்டியின் மனைவி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கூப்பாடு போட்டு அழ,…. மாயாண்டிக்குள் ரத்தம் சூடேறியது.

விழுந்த கூரை உள்ளே சொருகி வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்துக் கொண்டு கழுதையைத் துரத்த… அந்த நன்றியுள்ள விலங்கு வெங்குவின் வீட்டு வாசலில் வந்து நின்றது.

‘ஓகோ..! இந்தக் கேணப்பயல் கழுதையா..?! மாட்டினான் படவா!’என்று கறுவி மாயாண்டி வாசலில் படுத்துக் கிடந்த வெங்குவைப் பிடித்து ஒரே தூக்காகத் தூக்கினான்.

“ஐயோ..! அண்ணே! என்ன நடந்துச்சு…?” தடாலென்று அவன் காலில் விழுந்தான் வெங்கு.

“உன் வீட்டு கழுதை என் வீட்டைத் தள்ளிடுச்சி. இப்போ நீ நஷ்டஈடு தர்றீயா..? இல்லே… உன் கழுதையோடு சேர்த்து உன் கழுத்தையும் வெட்டவா..?” உறுமினான்.

“அது என் கழுதை இல்லேண்ணே..!” வெங்கு பயத்தில் உளறினான்.

“வெளையாடுறீயா..? கழுதை உன் வீட்டு வாசல்ல நிக்கிது. உன்னுது இல்லேங்குறே..? உண்மையைச் சொல்றீயா..? வெட்டவா..?” அரிவாளை ஓங்கினான் மாயாண்டி.

“ஐயோ! வெட்டிடாதீங்கண்ணே.! என் கழுதைதான். இப்போ நான் என்ன செய்யணும்…?” மறுபடியும் மாயாண்டி காலில் விழுந்து அவன் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

“அப்படி வா வழிக்கு.! பத்தாயிரம் கொடு!” கையை நீட்டினான்.

“பத்தாயிரமா..? அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்..?!” கதறி விழித்தான்.

“நீ எங்கே போவியே..? என்ன செய்வீயோ..? எனக்குத் தெரியாது. நான் குந்தியிருக்கிற குடிசை போயிடுச்சு. பணம் கொடுக்கலை… ? ஒரே போடு..!” ஆளை விடாமல் அரிவாளை ஓங்கினான்.

வீட்டினுள் நின்று இதையெல்லாம் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணவேணி…

‘கொலைக்காரப் பயல் பையனைப் போட்டாலும் போட்டுடுவானே..!’என்று நினைத்து வெளியே ஓடி வந்து மாயாண்டியுடன்….

“சாமி! என் பையன் தப்பில்லே. கழுதை தப்பு. அதுக்கு வீடு தெரியுமா, சுவர் தெரியுமா..? அரிப்புக்குச் சொறிஞ்சிருக்குப் போல அது தப்புதான். எங்க கழுதை என்கிறதுக்காக இருக்கிறதைக் கொடுக்கிறேன்!” – என்று சமரசம் பேசி…முந்தா நாள் வாங்கி வந்து வைத்திருந்த முதியோர் தொகையை அப்படியே எடுத்து வந்து கொடுத்தாள்.

மாயாண்டி வெங்குவை விட்டு விட்டு. பணத்தை வாங்கிக்கொண்டு கழுதையை ஒரு முறை முறைத்துவிட்டுச் சென்றான்.

இது என்ன…? பிள்ளையார்ப் பிடிக்கப் போய்… குரங்காக முடிந்ததாய் எதற்கோ வளர்க்கப் போய் இப்படி வில்லங்கங்களில் மாட்டி விடுகிறதே..!’வெங்கு தலையில் கை வைத்து உட்கார்ந்தான்.

“ஏன்டா! தண்டக் கழுதை, கருமாந்திரம். இந்தக் கழுதை இன்னும் எங்கேயாவது போய் தண்டம் வைத்து குடிக்க கூழும், குந்தி இருக்க வீடு இல்லாம வைக்கணுமா..? கட்டிப் போடு!” சத்தம் போட்டாள் கிருஷ்ணவேணி.

வெங்கு அடுத்துப் பேசாமல் அவசரமாக எழுந்து போய் கட்டிப் போட்டான். நாளைக்கு சிவச்சாமியைப் பார்த்து இதுக்கு ஒரு வழி, ஏற்பாடு பண்ணனும்! என்று நினைக்கும்போதுதான்….

“தம்பி….!” குரல் கேட்டது.

தூரத்தில் வெள்ளை நிற இன்னோவா கார் நிற்க… அதிலிருந்து வெள்ளையும் சள்ளையுமாய் இறங்கி வந்து இவன் எதிரில் நின்ற பெரிய மனிதர்…

மறுபடியும்…

“தம்பி!” என்றார்.

“எ…… எ…ன்ன சார்…?”

“இது யாருடையக் கழுதை..?”

‘போச்சு! இது பத்து நிமிசத்துல இன்னும் எங்கெங்கோ போய் வில்லங்கம் வச்சிட்டு வந்திருக்கு. நம்மதுன்னு சொன்னா… கண்டிப்பா இந்த ஆள் தன்னைப் பிடித்து வண்டியில் திணித்து எங்கேயாவது கொண்டுபோய் என்னவாவது செய்து விடுவார். நம்மது இல்லை என்று சொல்லி தப்பி விட வேண்டியதுதான்! என்று தீர்மானித்த வெங்கு….

“என்னது இல்லே சார்.!” என்றான்.

“உங்க வீட்டு வாசல்ல கட்டி இருக்கே..?”

“யாரோ இங்கே கொண்டு வந்து கட்டிப் போட்டுருக்காங்க…” சொன்னான்.

பெரிய மனிதரின் முகம் வாடியது. அதைக் கவனித்த வெங்கு…

“ஏன் சார்..? எதுக்காக விசாரிக்கிறீங்க…?” கேட்டான்.

“ஓ….. ஒண்ணுமில்லே. ஒரு நல்ல காரியமா நான் இந்த வழியா போனபோது இது கத்திச்சு. நினைச்ச காரியம் வெற்றிகரமா முடிஞ்சுது. ஒரு லட்சம் லாபம். அதான் இந்த ராசியானக் கழுதையை வளர்க்கிறவனுக்கு இருபத்தஞ்சாயிரம் கொடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன். ஆள் கிடைக்கல. பரவாயில்லே. அந்தத் தொகையை அப்படியே திருப்பதி உண்டியலில் போட்டுடுறேன்!” என்று சொல்லி இவன் பதிலை எதிர்பாராமல் அவர் நடையைக் காட்டினார்.

அடுத்த வினாடி…

மயங்கி கீழே சாய்ந்தான் வெங்கு.!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *