விசுவாசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 12,889 
 

வழக்கத்தைவிட சோர்வுடன் அவன் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். இரண்டு நாட்களாக ஒர்க்ஷாப்பில் அதிகவேலை. எல்லாவற்றையும் அவனே கவனிக்க வேண்டியிருந்தது. ஒன்றும் தெரியாத ஒரு பையனை உதவிக்கு வைத்துக்கொண்டு எத்தனை வேலையைத்தான் அவனால் செய்யமுடியும்? இவ்வளவு நாள் இந்த கஷ்டம் தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் வழக்கமாக வருபவன் நின்று விட்டான். இவனிடம்தான் அவன் வேலை கற்றுக்கொண்டான். ஒரு குறையும் வைக்கவில்லை. எல்லாம் அவன் போக்குபடிதான் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று அவனுக்கு மூளைதான் பிசகிவிட்டிருக்கவேண்டும்; வேறுஒரு ஒர்க்ஷாப்பில் போய் வேலைக்கு சேர்ந்துவிட்டான். வெட்கமில்லாமல் அவர்களும் அவனை சேர்த்துக்கொண்டு விட்டார்கள். என்ன ஆசை காட்டினார்களோ

கேட்டைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் அவனுடைய கிரி ஓடி வந்தது. வாலை வேகமாக ஆட்டி பரபரப்புடன் அவன் கால்களை நக்கியது.

‘கிரி! போ அப்பாலே’ என்று செல்லமாக விரட்டினான். ஆனால் அது போகவில்லை. ‘உய்ங் உய்ங்’ என்று ஏதோ சப்தம் எழுப்பிக்கொண்டே வாலையும் உடம்பையும் ஆட்டியது.

கதவை தட்டும் உத்தேசமில்லாமல் வாசல் படியிலேயே உட்கார்ந்தான். உள்ளே அவள் தூங்கி விட்டிருப்பாள். கதவை தட்டினால் கடமைக்காக திறந்துவிட்டு திரும்பவும் போய்ப் படுத்துக்கொள்வாள். சாப்பாட்டை தானே எடுத்து வைத்து சாப்பிட்டுவிட்டு திரும்பவும் எடுத்து வைக்கவேண்டும். எந்த காரணத்திற்காகவும் தூக்கத்தை மட்டும் அவளால் விட்டுக் கொடுக்கவே முடியாது. தூங்குவதற்கு முன்னாலேயே போய்விட்டால் தான் மற்ற சமாச்சரங்கள். எழுப்பினால் எரிந்து விழுவாள்.

கிரி அவனுக்கெதிரிலே வந்து நெருங்கி நின்று வாலை ஆட்டியது. இந்த நாய்களுக்குத்தான் தங்கள் எஜமானர்கள் மேல் எவ்வளவு நன்றி விசுவாசம்! மனிதர்களுக்கோ மற்ற எந்த வளர்ப்பு மிருகங்களுக்கோ, விலங்குகளுக்கோ இப்படிப்பட்ட ஒரு அற்புத ஏற்பாடு இல்லை.

நாய் உடலை இசைக்கருவிபோல பாவித்து வாலை அசைக்கிறது. கண்களில் நேசத்தின் பிரகாசம். இரண்டு மூன்று நாய்கள் வரிசையாக நின்று இதுபோல் அசைந்தால் இன்னும் அற்புதமான ஒரு காட்சியாக இருக்கும். ஒரே இசையை நான்கைந்து வயலின்களில் இசைக்கும்போது எழும் நாதம்போல! இந்த வீட்டில் ஒரு நாயைக் காப்பாற்றுவதே பெரும்பாடாக இருக்கும்பட்சத்தில் நான்கைந்து நாய்களை எங்கேவைத்துக்கொள்வது?

அவனுடைய மெக்கானிக்கல் புத்திக்கு ஒரு எண்ணம் உதித்தது; ஒரு நாய்க்கே இரண்டு மூன்று வால்கள் இருந்தால்? ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான அசைவுகளை வெளிப்படுத்தும் மூன்று வால்கள்! அதிகப்படியான விசுவாசம்!

இன்று இது வெறும் கனவல்ல, சாத்தியமாகக்கூடிய ஒன்றுதான். அதற்கான மையங்கள் இந்த நகரத்தில் தொடங்கி நடத்தப்பட்டுவருகின்றன. விலங்குகளை நாம் வேண்டியபடி வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கிக்கொள்ளலாம். இரண்டு சக்கர வாகனங்களுக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங் செய்து, வடிவங்களை மாற்றியமைத்துக்கொள்வது போல நாய், பூனை, மாடு போன்ற வளர்ப்பு மிருகங்களை நாம் மாற்றிக்கொள்ளலாம். அதற்கான தொழில்நுட்பத்தை வழங்குகிறது இந்த மையங்கள்.

எந்த வேலை எப்படி இருந்தாலும் நாளை இந்த நாயைக்கூட்டிக்கொண்டு போய்விடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தான். இதைச்சொன்னால் அவன் மனைவி சண்டைக்குத்தான் வருவாள். ஒரு மிருகத்தின் விசுவாசத்தை அதிகப்படுத்துவது எவ்வளவு அற்புதமான காரியம் என்று அவளுக்கு எங்கே தெரியப்போகிறது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒர்க்ஷாப் விடுமுறைதான். விடுமுறை நாட்களில் அந்த மையங்கள் செயல்படுமா என்று தெரியவில்லை. சிட்டி கைடில் பார்த்தால் தெரிந்துவிடும். எல்லா விபரங்களும் அதில் அடங்கியிருக்கிறது.

நாயை கூட்டிக்கொண்டு ஒரு ஆட்டோவில் ‘ஜீனோம் அனிமல்ஸ் பியூட்டி பார்லர்’ என்ற அந்த மையத்திற்கு சென்றான். ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் மையம் அது ஒன்றுதான். பிரதான வீதி ஒன்றில் பிரமாண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் அது இயங்கிவந்தது. வரவேற்பறை அகலமானதாகவும் பகட்டாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உருமாற்றம் செய்யப்பட்ட விலங்குகளின் துள்ளியமான புகைப்படங்கள் ஆங்காங்கே மாட்டப்பட்டிருந்தன. ‘கடவுளுடன் போட்டி போட்டுக்கொண்டு இத்தனை விதமான சிருஷ்டிகளா!’ என்று வியந்து போனான். நாய்களின் படங்கள்தான் அதிகம் இருந்தன. அடுத்ததாக பூனைகள், பறவை இனங்கள், பன்றிகள், ஆடுகள், கோழிகள்…

அவன் கொண்டுபோயிருந்தது நாட்டு நாய். இதுவே அவனிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டுபண்ணியது. நாட்டுநாய் என்றாலும் கிரி அவ்வவளவு சாதாரண நாய் என்று சொல்லிவிடமுடியாது. செந்நிறத்தில் வசீகரமாகத்தான் இருந்தது. அது குட்டியாக இருக்கும்போதே அவன் அம்மாதான் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப்போனார்கள்.

இந்த நகரத்தில் அவரவர்களின் அந்தஸ்திற்கு ஏற்ப வகை வகையான நாய்களை வளர்க்கிறார்கள். அவைகளை பராமரிப்பதற்கென்றே நிறைய தொகையை செலவிடுகிறார்கள். சொகுசு கார்களிலும், பகட்டான மாடி வீடுகளின் ஜன்னல்களிலும் மட்டுமே தென்படக்கூடிய நாய்கள் அவை. யூரியா போட்டு வளர்ந்தது போல புசுபுசுவென்று உடம்பெல்லாம் முடியுடன் கூடிய நாய்கள், நன்றாக வளர்ந்த ஒரு கன்றுக்குட்டியளவுக்கு உயரமான நாய்கள், பளபளப்பான தேகத்துடன் கட்டை குட்டையான செந்நிற நாய்கள், புள்ளி போட்டது, கோடு போட்டது… காரில்போகும் சிவந்த தோளுடைய மனிதர்களைப்போல இந்த நாய்களும் பணக்காரத்தன்மையுடனேயே பிறக்கின்றனவோ என்னவோ.

அந்த குளுகுளு வரவேற்பறையில் சிவந்த நிறத்தில் ஒரு ஆண் பகட்டான ஆடையுடன் காணப்பட்டான். அவனுக்கு உதவியாக ஒரு பெண். அவள் பூங்காவில் செடிகளை வெட்டிவிடுவதுபோல கேசத்தை ஏதோ ஒரு விதத்தில் வெட்டிவிட்டுக்கொண்டிருந்தாள். உதட்டுக்கு லிப்ஸ்டிக். அவள் அணிந்திருந்த பனியனுக்கு உள்ளே பெரிய அளவிலானஇரண்டு முலைகள் பதுங்கியிருப்பது நன்கு புலப்பட்டது. ஒருவேளை அது செயற்கையாக பெரிதுபடுத்தப் பட்டதோ என்று நினைத்தான்.

அந்த வாலிபனோ இவன் இருக்கும் இடத்திற்கு வந்து “என்ன செய்யவேண்டும் இதற்கு?’’ என்று விசாரித்தான்.

“இந்த நாயின் விசுவாசத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்’’ என்று பதிலிருத்தான் இவன்.

அவன் சற்று திகைத்தவனாக,

“உருவத்தை வேண்டுமானால் மாற்றித்தரலாமே தவிர குணத்தை எங்களால் மாற்றமுடியாது’’ என்றான்.

“இரண்டே இரண்டு மாற்றங்களை செய்து கொடுத்தால் போதும். வாலுக்குப்பக்கத்தில் அதேபோன்ற இன்னும் இரண்டு வால்களை பொருத்தித்தரவேண்டும்; விசுவாச வெளிப்பாட்டின் போது அதன் வாயிலிருந்து வெளிவரும் சப்தத்தை இனிமைப் படுத்தவேண்டும் அவ்வளவுதான்’’

“இது சற்று வினோதமான மாற்றம்தான். இதுவரை வடிவத்தையோ நிறத்தையோதான் நாங்கள் மாற்றித்தந் திருக்கிறோமே தவிர உறுப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தித் தந்ததில்லை’’

“அதுபோல் செய்யமுடியாது என்கிறீர்களா?’’ என்று ஏமாற்றத்துடன் இவன் கேட்டான்.

“இது பெரிய விஷயமே இல்லை. இதுபோன்று எத்தனை வால்களை வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளளலாம். ஆனால் நாய்க்கிருக்கும் நல்லதோற்றம் போய்விடுமே என்று பார்க்கிறேன்’’

“தோற்றத்தில் என்ன இருக்கிறது! எனக்குவேண்டியது அதன் விசுவாசம்! அதிகப்படியான விசுவாசம்’’

“வால்களை எப்படி பொருத்தலாம் செங்குத்தான திசையிலா கிடைமட்டத்திலா?’’

சற்று யோசித்துவிட்டு சொன்னான். “கிடைமட்டத்திலேயே பொருத்துங்கள் அப்போதுதான் சற்று மேலிருந்து பார்க்கும்போது மூன்று வால்களும் ஒரமாதிரியான கோணத்தில் நம் கண்ணில் படும்’’

ஒரு விண்ணப்பத்தை எடுத்துவந்து பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டாள் அந்த பெண். இவனுடைய விலாசம், நாயின் பெயர், இனம், வகை, வயது, நிறம், நாய்க்கு என்ன விதமான மாற்றங்கள் செய்யவேண்டும் போன்ற விவரங்களை அதில் பூர்த்தி செய்துதந்தான். ‘சிகிச்சையின்போது ஏற்படும் எதிர்பாராத அசம்பாவிதங்களுக்கு நிறுவனம் பொறுப்பேற்க முடியாது’ என்ற பாரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள்.

கம்பிகள் இடப்பட்ட கூண்டு ஒன்றை தள்ளிக்கொண்டு வந்த இரண்டுபேர் அவனிடமிருந்து நாயை வாங்கிக்கொண்டார்கள். இருவரும் நீல நிற சீருடையும், முரட்டு தனமான கையுறையும் அணிந்திருந்தார்கள். கூண்டுக்குள் போக மறுத்து முரண்டு பண்ணியது நாய். ஒருவன் முன்னாலிருந்து அதன் கழுத்துப்பட்டையைப் பிடித்து இழுக்க, பின்னாலிருந்து ஒருவன் தள்ளினான். கூண்டு அடைக்கப்பட்டது. வந்தவழியே அந்தக்கூண்டை தள்ளிக்கொண்டு போனார்கள்.

இதற்கான தொகைதான் முதலில் அவனை அதிர்ச்சியடைய செய்தது; வேறுவழியில்லை. அவனுக்கு இப்போது பணம் முக்கியமல்ல; விசுவாசம்! அதிகப்படியான விசுவாசம்!

மறுநாள் ஒர்க்ஷாப்பில் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. மாலை நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். நாயை ஐந்து மணிக்குத்தான் கொடுப்பதாக சொல்லியிருந்தார்கள். அரைமணிநேரத்திற்கு முன்பாகவே அங்கே போய்விட்டான். ரசீதை காட்டியபோது அந்த பெண் – அவள் இன்று வேறுவிதமான தலையலங்காரத்துடனும், ஆடைகளுடனும் காணப்பட்டாள் அதே அளவு முலைகள் – கறாராக சொல்லிவிட்டாள், சரியாக ஐந்து மணிக்கு வாருங்களென்று.

மீண்டும் சாலைக்கு வந்து ஒரு சிகரெட்டை எடுத்து புகைத்தான், தொலைவில் சென்று ஒரு கடையில் டீ அருந்திவிட்டு, நடைபாதையின் ஓரத்தில் முன்னும் பின்னும் நடந்தான்.

‘இன்றுமுதல் கிரிக்கு மூன்று வால்கள்! இதை விட விசுவாசம் கொண்ட நாயை யாரும் வேறுஎங்கும் பார்க்கப்போவதில்லை’

அவனுடைய மனைவியோ இதுவென்ன பைத்தியக் காரத்தனம் என்று எதிர்ப்பு தெரிவித்தாள். ஒரு அதிசய நாய்க்கு தான் ஒரு எஜமானியாக இருக்கபோகிறோம் என்ற விஷயம் அவளுக்கு இன்னும் விளங்கவேயில்லை.

சரியாக ஐந்து மணிக்கு வரவேற்பறைக்குள் நுழைந்தான். சீட்டை நீட்டினான். உட்காருங்கள் என்றாள் அவள். இன்டர்காமில் ஏதோ பேசினாள். சிறிது நேரத்தில் கூண்டைத் தள்ளிக்கொண்டு, அதே நீல நிறசீருடையும், முரட்டுத் தனமான கையுறைகளையும் கொண்ட இரண்டுபேர் வந்தனர். நேற்று பார்த்தவர்களில் ஒருவன் இல்லை, அதற்கு பதில் இன்னொருவன் இருந்தான்.

உள்ளே கிரி நின்றிருந்தது. கம்பிகள் மறைத்தாலும் அதன் இடுப்பு பாகத்தை பார்க்கமுடிந்தது. அந்த பகுதி முழுவதும் பேண்டேஜ் சுற்றியிருந்தார்கள். வால் எதுவும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கவில்லை.

இவனைக் கண்டதும் நாய் பரபரப்புற்றது. அவர்கள் கூண்டைத் திறந்து வெளியே விட்டதும் அருகே வந்து, உற்சாகத்தையெல்லாம் வலி அழுத்திக்கொண்டிருக்க அது மெல்ல முனகியது.

இந்த நிலையில்கூட அது எவ்வளவு விசுவாசமாக இருக்கிறது! அதனுடைய குரல்தான் முன்புபோல இல்லாமல் கரகரப்புடன் வெளி வந்தது. தொண்டையில் ஏதோ சிகிச்சை செய்திருக்கிறார்களாம். காயம் ஆறியவுடன் சரியாகிவிடும்; முன்பை விட குரல் இனிமையாகிவிடும் என்றார்கள்.

மூன்று நாட்களுக்குப் பிறகுதான் இடுப்புப்பகுதியில் போடப்பட்டிருந்த பேண்டேஜை அவிழ்க்கவேண்டும் என்பது உத்தரவு. இது பெரிய ஏமாற்றமாக இருந்தது அவனுக்கு. நாய்க்கு தரவேண்டிய உணவு வகைகளையும், மருந்து கொடுக்கவேண்டிய முறைகளையும் விளக்கிச் சொன்னாள் அந்தப் பேரழகி.

மூன்று நாட்கள்! இப்படி காத்திருப்பது பெரும் நரகம். மனமும் உடலும் தவித்து நோய்கண்டுவிட்டது. இரண்டு மூன்று முறை கட்டை அவிழ்க்கும் வேலையில் இறங்கிவிட்டான் அவனுடைய பையன். அவனுடைய மனைவியோ பிள்ளையைத் திட்டும் சாக்கில் கணவனையும் சேர்த்துக்கொண்டாள், ‘உருப்படாத ஜென்மங்கள்!’

மூன்றாம் நாள் காலை தூங்கி விழித்ததும் முதல்வேலையாக கத்தரியை கொண்டு பேண்டேஜ்களை அவிழ்த்தான். மூன்று வால்களும் வெளிப்பட்டன. மேலே பசை பூசப்பட்டிருந்ததால் புண் பிடித்ததுபோல கோரத்துடன் காணப்பட்டன. அதை சுத்தம் செய்வதற்கான ஏதோ ஒரு திரவத்தையும் அவர்கள் கொடுத்தனுப்பியிருந்தார்கள். அதைக்கொண்டு காய்ந்துபோயிருந்த பசையை அகற்றினான். ஈரம் வற்றியவுடன் சிறிது நேரத்தில் வால்கள் இயல்பான வடிவத்திற்கு வந்தன. மூன்று வால்கள்! இயற்கையாகவே பிறந்து வளர்ந்ததுபோலவே அவ்வளவு இயல்பாக!

இந்த மூன்று நாட்களில் நாயின் குரல்கூட ரொம்பவும் இனிமையாகிவிட்டது. அது தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் போது அற்புதமான ஒரு சத்தம் அதன் வாயிலிருந்து வெளி வருகிறது.

வால்களை தடவிக்கொடுத்தான். மெல்ல இழுத்துப் பார்த்தான். நேர்த்தியாகத்தான் செய்திருக்கிறார்கள். உள்ளேபோய் அதற்கு பிரத்தியேகமாக வாங்கி வைத்திருந்த பிஸ்கட்டை கொண்டு வந்து அதன் எதிரில் காண்பித்தான். நாய்க்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. உடலை அசைத்து இனிமையாக கத்தியது. ஆனால் வாலில்தான் ஏதோ குறைபோல தெரிந்தது. நன்றாக கவனித்தான். நடுவிலிருந்த ஒரிஜினல் வால் மட்டும் திணறிக்கொண்டு மெல்ல அசைய, மற்ற இரண்டும் வெறுமனே தொங்கிக்கொண்டிருந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *