வாய்விட்டுச் சிரித்தால்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 3, 2024
பார்வையிட்டோர்: 4,423 
 
 

கோபி இயல்பாகவே ஒரு முன்கோபி. சாதாரணமாகவே அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். எதிலேயுமே ஒரு சலிப்பு. முகச்சவரம் செய்யும் போது வெட்டுப்பட்டது போல ஒரு எரிச்சல், சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் அனாவஸ்யமாக ஒரு கோபம், கொதிப்பு, கடுப்பு முதலியன பிறவியிலேயே இலவச இணைப்புகளாகப் பெற்றவனோ என்று பிறருக்குத் தோன்றுமாறு அவ்வப்போது நடந்து கொள்பவன். அவன் சிரித்து இதுவரை யாருமே பார்த்தது கிடையாது.

கோபியின் போதாத காலமோ என்னவோ, அன்று அவன் அவசரமாக தெருவில் நடந்து போகும் போது, ஒரு கூர்மையான கல் ஒன்றில் கால் இடறி, வலது காலின் கட்டை விரல் நகத்தையே பெயர்த்துக்கொண்டான். ஒரே ரத்தமாகக் கொட்ட ஆரம்பித்து விட்டது.

அருகிலேயே ஒரு தனியார் மருத்துவ மனை இருந்தது அவன் கண்ணில் பட்டது. உடனே உள்ளே நுழைந்து விட்டான். டாக்டரைப் பார்க்க வேண்டி சுமார் இருபது நபர்களுக்கும் மேல், டோக்கன் பெற்று, வரிசையில் காத்திருந்தனர்.

வெள்ளைப்புறா போன்ற நர்ஸ் ஒருவள், நம் கோபியை நெருங்கி வந்தாள்.

கோபி அவளிடம் தன் கால் நகத்தைக் காட்டி, ”அவசரமாக டாக்டரைப் பார்க்க வேண்டும்” என்றான்.

அவள் அவனை அமைதியாக ஐந்து நிமிடங்கள் உட்காரச் சொல்லி, சட்டையையும் பனியனையும் அவிழ்க்கச் சொல்லி விட்டு இங்குமங்கும் ஒரே பிஸியாக ஓடலானாள்.

கோபிக்கு அந்த வெள்ளைப்புறா சொல்லிப்போனது ஒன்றும் விளங்கவில்லை. வரிசையில் அமர்ந்திருந்த நோயாளிகளில், இருபதாவதாக அவன் அருகில் அமர்ந்திருந்த நபர், அந்த நர்ஸ் சொன்னது இவன் காதில் விழவில்லையோ என்ற நல்ல எண்ணத்தில், ”தம்பீ ………….. சீக்கரமாக, சட்டையையும், பனியனையும் அவிழ்த்து இங்குள்ள ஹாங்கரில் மாட்டி விட்டு அமைதியாக உட்காருங்க, இல்லாவிட்டால் அந்த நர்ஸ் அம்மா வந்து சத்தம் போடும்” என்றார்.

இதைக்கேட்ட கோபிக்கு கோபம் வந்து விட்டது. “யோவ், என் கால் கட்டை விரலில் அடிபட்டு நகம் பெயர்ந்துள்ளது; அதற்கான சிகிச்சை பெற வந்துள்ளேன்; நான் எதற்கு சட்டையையும், பனியனையும் அவிழ்க்கணும்” என்றான்.

அவனை விசித்திரமாக ஒரு முறை பார்த்த அந்த இருபதாம் நம்பர் ஆசாமி, தனக்குள் சிரித்துக்கொண்டே, “தம்பி நீ இந்த மருத்துவ மனைக்கு புதிதாக இன்று தான் வந்திருக்கிறீங்கன்னு நினைக்கிறேன்; நான் சொல்வது சரி தானே” என்று கேட்டார்.

“ஆமாம்ய்யா …. அதற்கென்ன இப்போ, தினமுமா நகத்தை பெயர்த்துண்டு இங்கு வர முடியும்?” எரிச்சலுடன் கேட்டான், கோபி.

“தம்பி ….. நீங்க சிறுவயசுப் பையன். வேகப்படக் கூடாது. விவேகமாக இருக்கணும். வாழ்க்கையிலே ரொம்ப பொறுமை வேண்டும். அவசரமோ ஆத்திரமோ படுவதால் எதுவும், நாம் நினைப்பது போல உடனடியாக நடந்து விடாது, என் அனுபவத்தில் சொல்கிறேன்” என்று உபதேசிக்க ஆரம்பித்தார்.

கோபி தன் கைக்குட்டையை அங்கிருந்த குழாய்த் தண்ணீரில் நனைத்து, வலியைப் பொறுத்துக் கொண்டு, தன் வலது கால் கட்டைவிரலைச் சுற்றி இறுக்க கட்டுப் போட்டபடி, அருகில் இருந்த நபரை ஒரு முறைமுறைத்துப் பார்ப்பதற்குள், இரண்டு மூன்று வெண் புறாக்கள் கோபியை நெருங்கி இருந்தன.

“சார், சட்டையையும், பனியனையும் அவிழ்த்து மாட்டச் சொல்லி விட்டுப் போனேன் அல்லவா! என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க இவ்வளவு நேரமும்?” என்று சொல்லியபடி ஒருத்தி, கோபியின் சட்டைப் பொத்தான்களை அவிழ்த்து சட்டையை உருவிப் போட்டாள். மற்றொருத்தி ”பனியனையும் சீக்கரம் கழட்டுங்க சார்” என்று சொல்லி அதை கழட்டி எறிய உதவியும் புரிய ஆரம்பித்தாள்.

பக்கத்து இருபதாம் நம்பர்காரர் கோபியைப் பார்த்து, இப்போது ஒரு விஷமப் புன்னகை பூத்தார். கோபி வாயைத் திறந்து ஏதோ சொல்வதற்குள், ஒருத்தி ஜுரமானியை, கோபியின் வாயில் திணித்து, ”வாயை இறுக்கி மூடுங்க சார்” என்று உத்தரவு போட்டு விட்டாள்.

ஒருத்தி ஸ்டெதஸ்கோப்பை வைத்து ஹார்ட் பீட் எப்படியுள்ளது என்று கவனிக்க ஆரம்பித்தாள்.

அதற்குள் மற்றொருத்தி, கோபியை கையை நீட்டச் சொல்லி ரத்தக் கொதிப்பு உள்ளதா என்று பம்ப் அடித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாள்.

ஒரு வெள்ளைத்தாளில் மூவரும் ஏதேதோ குறிக்க ஆரம்பித்தனர். டோக்கன் நம்பர் 21 என்று எழுதிய அட்டை கோபியிடம் கொடுக்கப்பட்டது.

”என் கால் கட்டை விரலில் நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டுகிறது. நான் உடனடியாக டாக்டரைப் பார்க்கணும்” என்று ஏதேதோ கோபி புலம்பியும், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், ”அமைதியாக வரிசையில் அமர்ந்து நாங்கள் கூப்பிடும் போது தான் வரணும்” என்று சொல்லி விட்டு, அடுத்தடுத்து வரும் நோயாளிகளின் சட்டை பனியன்களை அவிழ்க்கும் வேலையை கவனிக்கச் சென்று கொண்டிருந்தனர், அந்த வெண் புறாக்கள் மூவரும்.

கோபியின் கோபம் கட்டுக் கடங்காமல் போய் விட்டது. தன்னைப் பார்த்து சற்று முன் விஷமப் புன்னகை புரிந்த நபரைப் பார்த்து “என்னய்யா, ஆஸ்பத்தரி இது … கால் நகம் பெயர்ந்து வந்தவனுக்கு, ஏதேதோ தேவையில்லாத டெஸ்டுகளெல்லாம் செய்து, தொல்லைப் படுத்துகிறார்கள்” என்று எரிந்து விழுந்தான்.

“தம்பி ….. இப்போதும் சொல்கிறேன். நீங்க சிறு வயசுப் பையன். கோபப்படக்கூடாது. வந்த பொது இடத்திலேயாவது பொறுமையாக இருக்கப் பழகிக்கணும். ஆஸ்பத்தரி என்றால் ஒரு சில சட்டதிட்டங்கள், வழி முறைகள் அவர்கள் வகுத்து வைத்திருப்பார்கள். அதற்கு நாம் கட்டுப்பட்டு, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரணும். பொது அமைதிக்கு நம்மால் பங்கம் ஏற்படக்கூடாது” என்று ஏதேதோ அறிவுரைகள் கூற ஆரம்பித்ததும், கோபிக்கு தன் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் போய்விட்டது.

க‌ஷ்டப்பட்டு எழுந்து கொண்டு, தன் பனியன் சட்டையை உடுத்திக்கொண்ட பிறகு, இருபதாம் நம்பரில் தன் அருகே அமர்ந்திருந்த அந்த நபரின் சட்டையைக் கோர்த்து, வெளியே இழுத்துப்போய் நாலு சாத்து சாத்தலாமா என்றும் தோன்றியது, கோபிக்கு.

அல்சேஷன் நாய் போல, பற்களைக் காட்டி அவரைக் கடித்து விடுவது போல முகத்தை மாற்றிக்கொண்டிருந்தான், கோபி.

“தம்பி ….. அமைதி, அமைதி ….. எதற்கும் டென்ஷனே ஆகாதீங்க …. பொறுமையாய் இருங்க …… அது தான் நம் உடம்புக்கு நல்லது” என்றார் அந்த இருபதாம் நம்பர்.

“யோவ் …… நீர் இனிமேல் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசினாலும், நான் மனுஷனாக இருக்க மாட்டேன். எனக்கு வரும் ஆத்திரத்தில் உம்மைக் கடித்துத் துப்பி விடுவேன்” என்று பெரியதாகக் கத்தினான், நம் கோபி.

அதற்கும் ஒரு புன்னகையை உதிர்த்த அந்த இருபதாம் நம்பர் சொன்னார் : “தம்பி ….. இன்று முதன் முதலாக இந்த ஆஸ்பத்தரிக்கு வந்து ஒரு பத்து நிமிஷம் ஆவதற்குள், உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே; நான் இங்கு எதற்கு வந்திருக்கிறேன் என்று நீங்க கேட்டுத் தெரிந்து கொண்டீர்கள் என்றால்தான், என் நிலைமையும் உங்களுக்குப் புரிபடும்; இந்த ஆஸ்பத்திரியின் சட்ட திட்டங்களும் உங்களுக்கு ஓரளவு தெரிந்து விடும், பிறகு என் மீது நீங்க கோபப்பட்டதும் தவறு தான் என்று ஒருவேளை நீங்களே கூட உணர்ந்தாலும் உணர்வீர்கள்” என்று மிகவும் பொறுமையாகச் சொன்னார்.

“நீங்க எதுக்கு இங்கே உட்கார்ந்து கொண்டு, என் உயிரை வாங்குகிறீர்ன்னு, சீக்கரமாகச் சொல்லித் தொலையுமய்யா” என்றான் கோபி, தன் ஆத்திரத்தின் உச்சக் கட்டமாக.

“தம்பி …… நான் இந்தத் தெருவுக்கே கொரியர் தபால்களை பட்டுவாடா செய்யும் ஆளு. தினமும் இந்த டாக்டருக்கு ஒரு நாலு கொரியர் தபாலாவது வந்துண்டே இருக்கும். தினமும் இங்கு தபால் கொண்டு வந்து தருவதும் நான் தான். என்னை இங்குள்ள நர்ஸ்ஸம்மாக்கள் எல்லோருக்குமே நன்றாகவே தெரியும்; இன்று கூட இந்த டாக்டரைப் பார்த்து, தபாலைக் கொடுத்து விட்டு, அவரிடம் கையெழுத்து வாங்கிக்கிட்டுப் போகத்தான் உட்கார்ந்திருக்கிறேன்.

இங்கு வரும் என்னையும் தினமும் சட்டையையும், பனியனையும் அவிழ்க்கச் சொல்லி விடுகிறார்கள், எல்லாவிதமான டெஸ்டுகளும் செய்து பேப்பரில் குறித்து விடுகிறார்கள், பிறகு வரிசை எண் உள்ள டோக்கனைக் கையில் கொடுத்து விடுகிறார்கள். நல்ல வேளையாக அதிர்ஷ்டவசமாக இன்று எனக்கு 20 ஆம் நம்பர் டோக்கன் கிடைத்துள்ளது. நேற்றைக்கு எனக்கு கிடைத்த நம்பர் 108.

நானும் இது பற்றி இந்த நர்ஸம்மாக்களிடம் பலமுறைகளும், ஏன் ஒரு நாள் அந்த டாக்டரிடமும் கூட புகார் செய்து பார்த்து விட்டேன். ஒன்னும் பிரயோசனம் இல்லை. டாக்டரை யார், எது சம்பந்தமாகப் பார்க்க வேண்டும் என்றாலும், இங்குள்ள சட்டதிட்டங்கள் அது போலவாம். யாருக்கும் எந்தவிதமான விதிவிலக்கும் கிடையாதாம்.

சரியென்று நானும் பிறகு, தினமும் கொரியர் தபால்களுடன் உள்ளே வரும்போதே என் சட்டை பனியன், தொப்பி எல்லாவற்றையும் கழட்டியவாறே காத்தாட வந்து அமர்ந்து விட, பழகிக் கொண்டு விட்டேன்.

தினமும் அவசரமான கொரியர் தபால் கொடுக்க வரும் நானே, இவ்வளவு பொறுமையாக இங்கு உட்கார்ந்திருக்கும் போது, கால் விரலில் அடிப்பட்டு, கட்டை விரல் நகமே பெயர்ந்து, ரத்தம் சொட்டச்சொட்ட உடல் உபாதையுள்ள நீ, இப்படி அவசரமும், ஆத்திரமும் படலாமா தம்பி?” என்றார், மிகவும் நிதானமாக.

இதைக் கேட்ட முன்கோபியான நம் கோபி, தன் கால் கட்டை விரல் நகம் பெயர்ந்த வலியையும் சற்று மறந்து, வாழ்க்கையில் முதன் முதலாக வாய் விட்டுச் சிரித்தான்.

‘வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பார்களே, அது இது தானோ !

இப்போது தன்னைப்பார்த்து முதல்முதலாகச் சிரித்த கோபியிடம் கையை நீட்டி கை குலுக்கிய கொரியர்காரர் மேலும் சொன்னார். “தம்பி, டாக்டரைப் பார்த்துவிட்டு உடனே வீட்டுக்குப்போய் விடலாம் என தப்புக்கணக்குப் போட்டு விடாதீர்கள். எக்ஸ்ரே, ஈ.ஸி.ஜி, ஷுகருக்கான ப்ளட் டெஸ்ட், கொலஸ்ட்ரால் டெஸ்ட், தைராய்டு டெஸ்ட் என சர்வாங்கத்திற்குமான பல்வேறு டெஸ்டுகள் செய்ய டாக்டர் அவர்கள் சீட்டு எழுதித்தருவார்கள். எல்லா டெஸ்டுகளும் செய்துகொள்ள வேறு எங்கும் அலையாமல் இங்கேயே இந்த ஆஸ்பத்தரியிலேயே நீங்கள் செய்து கொண்டு விடலாம். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்காவது நீங்க இங்கு வர வேண்டியிருக்கும். நாமும் அடிக்கடி இங்கு சந்திக்கும் வாய்ப்புகளும் இருக்கும். நாளையிலிருந்து மறக்காமல் உள்ளே நுழையும் போதே சட்டை பனியனை கழட்டிவிட்டு, காத்தாட வந்து அமர்ந்து விடுங்கள்” என்றார்.

கோபி மீண்டும் அவரைப்பார்த்து முறைக்க அவரோ “எல்லாம் நம் நன்மைக்காகத்தான் செய்கிறார்கள், தம்பி. புதுபுதுசாக நிறைய மருத்துவ சாதனங்கள் வாங்கிப்போட்டுள்ளார்கள். நிறைய பேர்களை சம்பளம் கொடுத்துப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். நல்ல ஷகரான இடத்தில் இந்த ஆஸ்பத்தரி பிரபலமாக இயங்கி வருகிறது …. ஒரு ஆஸ்பத்தரி நடத்துவது என்றால் சும்மாவா … என்ன ? என்றார்.

இதைக்கேட்ட கோபிக்கு, தான் அங்கே டாக்டரைப்பார்க்க வெயிட் பண்ணலாமா, அல்லது இப்படியே ஓடி விடலாமா எனத் தோன்றியது. ஓட முடியாமல் வலது கால் கட்டைவிரல் வலி வேறு வேதனைப் படுத்தி வந்தது. பாவம் நம் கோபி.

– ஜூலை, 2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *