வனமாலியும் ஞானி சுகரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 10, 2024
பார்வையிட்டோர்: 9,460 
 
 

வனமாலிக்கு சில நாட்களாகவே இடது கால் கட்டை விரலில் ஒரு மரத்துபோன மாதிரி இருந்தது. ஐடியில் வேலை பார்ப்பதால், ஷூ ரொம்ப நேரமாக போட்டிருப்பதால், அப்படி இருக்கலாமனெ அதை அவன் கண்டுக் கொள்ளவில்லை. அப்போதுதான் பக்கத்து வீட்டு, கிருஷ்ணமூர்த்தி மாமா, அவன் ததகா பிதகாவென நடப்பதைப் பார்த்து, அகஸ்மாத்தாக ஒரு வார்த்தை சொன்னது, அவன் வாழ்க்கையில் ஒரு கத்ரினா சூறாவளியை அவுட்சோர்ஸ் செய்யுமென, அவனுடைய பட்சி கூறவில்லை.

கிருஷ்ணமூர்த்தி மாமா ஒரு சுகர் பேஷண்ட். அவன் அணா, ஆவண்ணா படித்த காலத்திலிருந்தே, அவர் சுகரில்லாத காபி குடிப்பதைப் பார்த்து வந்துள்ளான். சுகர் விஷயத்தில், அவர் சுகரில்லாத காபி குடித்து குடித்தே, தலைக்கு மேல் பித்தம் ஏறியவர். அவர் சுகர் பற்றி சொன்னால், அதற்கு எதிராக அப்பீல் செய்வதற்கு, ஒரு தேர்ட் அம்பயர் கூட கிடையாது, அவன் தெருவில். அவர் அவனிடம், காலில் என்ன பிரச்சனை என்று, வம்பு கேட்டு, முடிவில் அது, சுகரே என்றும் தீர்ப்பளித்தார்.

சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம், அவன் மனதில் ஐமேக்ஸ் ஸ்கீரினைப் போல் விஸ்தாரமாக ப்ரொஜக்ட் ஆனது. அவன் தாத்தா பஞ்சாபகேசன், ஸ்ரீமத் பாகவதத்தை படித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவன் அஜீத்தின் ஆழ்வார் படம் பார்த்த எஃபெக்டில், பலவிதமான கெட்டப்களைப் பற்றி நண்பன் நாநா என்கிற நாராயணனுடன், அனலைஸ் செய்துக் கொண்டிருந்தான். அவன் அப்போது ஸ்ரீமத் பாகவததின் அட்டைப் படத்தில், ஞானி சுகரின்ஓவியம் இருந்ததைப் பார்த்தான். அதைப் பார்த்து, அவன் பலமாக சிரித்தான். என்ன இந்த கிளி மூக்கு மூஞ்சி என்றும், அஜீத் அந்த கெட்டப்பை ஆழ்வார் படத்தில் பயன்படுத்தவில்லை எனவும், அவருடைய கிளி மூக்கு மூஞ்சி குரல் எப்படி இருந்திருக்கக் கூடும், என மிமிக்ரி செய்துக் காண்பித்தான். அவனுடைய தாத்தாவிற்கு, இவையெல்லாம் ஹியரிங் எய்டு மூலம், தெள்ளத் தெளிவாக ப்ராட்கேஸ்ட் ஆனது. அவர் உடனே அவனைப் பார்த்து, வியாசரின் மகன், மகா ஞானி சுகப் பிரம்மரிஷியை, ஞானி சுகரை, அவமதித்து விட்டதற்கு, மன்னிப்பு கேட்டு, ஸ்ரீமத் பாகவததின் புத்தகத்திற்கு நமஸ்கரிக்கும்படி சொன்னார். வனமாலியோ தாத்தாவை, ஒரு ஏளனப் பார்வைப் பார்த்துவிட்டு, தெருவோர பஜ்ஜி கடைக்கு நாநாவுடன் நடையைக் கட்டினான்.

கிருஷ்ணமூர்த்தி மாமா, சொன்னது கூட பெரிசாக படவில்லை. ஆனால், அவனது வீட்டின் இன்னொரு ஆல் இண்டியா ரேடியோ, சாரு அத்தைக்கு, முன்பு சொன்னதுதான் அவனுக்கு ரொம்ப படுத்திவிட்டது. வீட்டில், அவனுக்கு பத்திய சாப்பாட்டின் மூலம், தினம் தினம் தனியாக டரீட்மெண்ட் ஆரம்பமானது. வீட்டில், கெஸ்ட் வாங்கிவந்த ஸ்வீட் பாக்கெட்டுகள், அவனுக்கு தெரியாமல், மறைவாக, ஒளித்து வைக்கப்பட்டன. வீட்டில் இருந்த வாண்டுகள் கூட, அவன் கண்ணுக்கு முன்னால், ‘வேவ்வெ’ என்று முகம் காண்பித்தும், ‘அஸ்கு பிஸ்கு’ என்று மடங்கிய கையை இடுப்பில் இடித்தும், முழுசாக ஸ்வீட்களை முழுங்கின. ஒரு வாண்டுவுக்கு, ஸ்வீட் தின்ன வாய் பத்தாத போதும், எங்கிருந்தோ திடீரென்று பிரசன்னமான, அதனது அம்மா, அதன் வாயில் ஸ்வீட்டைத் திணித்தாள். வனமாலிக்கு ஏற்பட்ட சுகர் புறக்கணிப்பு , வீட்டிலிருந்த எறும்புகளுக்கு தெரிந்து, அவை ஒன்றிரண்டு சர்க்கரையைத் தந்தால்தான் உண்டு, என்பது போல் ஆகிவிட்டது. இந்த சுகர் புறக்கணிப்பால், வீட்டில் இருந்த நெல்லிக்காய் அளவு இருந்த லட்டு கூட, திருப்பதி லட்டு அளவுக்கு மேக்னிஃபை ஆகி தெரிந்தது. ஜாங்கிரி கூட ஒரு சுத்து அதிகரித்தது போல் தெரிந்தது.  இதை சுகர்நோ ஃபோபியா என்று வனமாலி பெயரிட்டுக் கொண்டான்.

கிருஷ்ணமூர்த்தி மாமா, சுகரில்லாத காபி குடிக்கும் போது, அவன் சின்னப் பையனாக இருந்தபோது, கஷ்டமாக இல்லையா, என்று கேட்டுள்ளான். அதற்கு அவர், உடம்பிலேயே சுகர் உள்ளது எனவும், சுகர் மறுபடியும் தேவையில்லை எனவும், கூறினார். அதை இவனும் அசகு, பிசகாக நம்பியுள்ளான். ஆனால், இப்போதோ, சுகரில்லாத காபி குடிக்கும் போது, மாட்டிற்கு வைக்கும் கழனித் தண்ணீர், இதைவிட மேல் என்று உணர்ந்தான்.

சுகர் டெஸ்ட் செய்துக் கொள்ளும்படி, கிருஷ்ணமூர்த்தி மாமா அட்வைஸ் செய்ய, அவனும் அவனது ஏரியா, சுகர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர். ஹரிஹரனிடம், அப்பாயிண்ட்மென்ட் வாங்கினான். அதிகாலை, 6 மணிக்கு, வெறும் வயிற்றில், ஆஸ்பத்திரிக்கு வர சொன்னார். அவனும் சுகர் தொந்தரவிலிருந்து தப்பிக்க, அலாரம் அடிப்பதற்கு முன்பே எழுந்து, ஆஸ்பத்திரியில் ஆஜரானான். அவன்தான், முதல் என்று, பெருமித்தில் திரும்பிய போது, தாத்தா பாட்டிகளின் சிறு கும்பல் அவனுக்கு, தங்களது புன்சிரிப்பின் மூலம், குட் மார்னிங் சொன்னனரர். அப்போது, அங்கு வந்த ஒரு நர்ஸ், அவனைப் பார்த்து, ‘பெரியவங்க முதலில் டெஸ்ட் எடுத்துக்கட்டும். நீங்க அப்புறம் எடுத்துக்கலாம்’ என்று, வெடுக்கென்று கூறிவிட்டு சென்றாள். அப்போது, அந்தக் கும்பலில் இருந்த ஒரு தாத்தா, அவனைப் பார்த்து, ‘குழந்த… நீ வேணா முன்னாடி போய்க்கோ… எனக்கு அவசரமில்ல…’ என்றார். இதையெல்லாம் கேட்டும், அவன் அழாத குறையாக அமைதி காத்தான்.

சிறிது நேரம் கழித்து, அவனிடம் ஒரு சின்ன பாட்டில், யூரின் டெஸ்டுக்காக, ஒரு நர்ஸ் கொண்டு வந்துக் கொடுத்தாள். அவன் டாய்லெட்டுக்குள் சென்று தாப்பாள் போடுவதற்குள், கதவு பட பட வென தட்டும் சத்தம் கேட்டது. அவன் மறுபடியும், கதவைத் திறந்த போது, நர்ஸ் அவனைப் பார்த்து, ‘என்னங்க… படிச்சவங்க தான… ஒழுங்கா படிச்சுட்டு நுழைய மாட்டிங்களா’ என்று கேட்டாள்… அவனுக்கு ஒன்றும் புரியவில்லை… அவள் உடனே ‘நீங்க நுழைந்தது, டாக்டரோட டாய்லெட்… பேஷண்ட்ஸ் யூஸ் பண்ணக்கூடாது’ என்றாள். அவள் ‘பபளிக் டாய்லெட்’ என்று போர்டு போட்ட இடத்தைக் காண்பித்தாள்…. ஒரு வழியாக யூரின் டெஸ்டை முடித்தான்…

அவனுக்கு ஒரு ரஸ்னா போன்றொரு பானம் கொடுக்கப்பட்டது. வீட்டில் நடந்த சுகர் புறக்கண்ப்பினால். இந்த பானம் தேவாமிர்தமாக இனித்தது. ஆனால். அதைக் குடித்த சிறிது நேரத்திற்குப் பின், நர்ஸூகள் அவனை சூழ்ந்துக் கொண்டு, நரம்பு புடைக்க நன்றாக ஊசிப் போட்டனர். அந்த நர்ஸ் புதியவள் போலும் , இவனை ஒரு பி.வோ.சி(POC) போல, முதல் முறை சரியில்லை என்று கூறி, திரும்பவும் நரம்பை பதம் பார்த்தாள்… ரிப்போர்ட் வாங்க அடுத்த நாள் வர சொல்லி, டாக்டர் ஹரிஹரன் சொன்னார்.

வனமாலி, வீட்டில் நுழையும் போது, எல்லாரும், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகுவை காலி செய்துக் கொண்டிருந்தனர். இவனைப் பார்த்தவுடன், எல்லாரும அவசர அவசரமாக, அதைத் தின்றனர்… அவன், மிச்சமிருந்த ஒரு சின்ன பீஸை எடுக்கலாம் என்று கையை நீட்டிய போது, அத்தை சாரு, ‘எல்லாம் டெஸ்ட் ரிஸல்டை வைத்து, சாப்பிடலாமா, வேண்டாமான்னு டிஸைட் பண்ணலாம்’ என்றாள்… அன்று ரிஸல்ட் நல்லபடியாக வர, ஈவினிங் ஷோ நாநாவுடன், போகாமல், முரளிதர ஸ்வாமிஜீயின் பாகவத ஸிடியை ஐபாடில் கேட்டான்… ஸ்ரீமத் பாகவத்திற்கு, பக்தியோடு பலமுறை நமஸ்கரித்தான்…

அடுத்த நாள், டாக்டரைப் பார்க்க, நேரத்துடன் வெயிட்டிங் ரூமில் இருந்தான்… டாக்டர் அவன் கால் மரத்துப் போனதிற்கும், சுகருக்கும் சம்பந்தமில்லை எனவும், அது அவன் விடியற்காலையில், ரயில்வே கிரவுண்டில் குளிரில், ஹவாய் சப்பலுடன், கிரிக்கெட் ஆடுவதுதான் காரணம் என கூறி, நல்ல ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூ(அடிடாஸோ\ரீபாக்கோ) வாங்கிக் கொள்ளுமாறு ப்ரஸ்கரைப் செய்தார்… வீட்டிற்கு வந்தபிறகு, நேராக சமயலறையில் ஒரு தேக்கரண்டி சக்கரையை, அத்தை சாருவிற்கு முன்பு பெருமிதமாக சாப்பிட்டு விட்டு, மறுபடியும், ஞானி சுகரை நமஸ்கரித்தான்… இப்போது தாத்தா பஞ்சாபகேசன் புன்முறுவலித்தார்…

– செப்டம்பர் 2009 (https://karpanaikuthirai.wordpress.com/)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *