அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7
“காமத்துப்பாலில் ஒரு சுவாரசியமான குறளைச் சொல்லி அதுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா?” – திருக்குறள் ஷோஜோவிடம் கேட்டார் புள்ளி.
“வெல்லப் பிள்ளையாரில் எல்லாப் பக்கமும்தான் இனிக்கும். அதுபோல எல்லாக் குறளுமே சுவாரசியம் தான். ஒரு குறள் சொல்றேன், கேளுங்க.”
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
“இதுக்கு என்ன அர்த்தங்க?”-புள்ளி கேட்டார்.
“தாம் காதலிக்கின்ற பெண்ணின் மிருதுவான தோள்களைத் தழுவிக்கொண்டு படுத்திருப்பதை விடத் தாமரைக் கண்ணனாகிய திருமால் உலகம் இன்பமுள்ளதா என்ன?’ – என்று அர்த்தம்.”
“வள்ளுவர் நல்லாத்தான் அனுபவிச்சு சொல்லியிருக்கார்.” என்று பெருமூச்சு விட்டார் புள்ளி சுப்புடு.
“ஐயனே, பெருமூச்சு விடறீங்களே, என்ன விஷயம்? இல்லக்கிழத்தியின் ஞாபகம் வந்துட்டுதோ?” என்று கேலியாய்க் கேட்டார் ஷோஜோ.
“என்னுடைய வீட்டுக்காரி இல்லக்கிழத்தி அல்ல ஐயா! அவள் இல்லக்கிழவி” என்று குறைப்பட்டுக் கொண்டார் புள்ளி.
“தாங்கள் மட்டும் வாலிபர் என்கிற நினைப்போ?”
“எனக்கு வயசு இருபத்தஞ்சுதானே!”
“எவ்வளவு சொன்னீங்க?”
“இரட்டையால் இருபத்தஞ்சு” என்று சமாளித்தார் புள்ளி.
“உங்க வயசையே புள்ளிக் கணக்கில் புதிர் போடறீங் களா!” என்று சிரித்தார் ஷோஜோ.
“கொடியேற்று விழா அடுத்த வாரம்தானே? அது வரைக்கும் இங்கே என்ன செய்யப் போறோம்? ஹகோனே லேக் பக்கம் போயிட்டு வந்துரலாமா? அங்கே எல்லா ஓட்டலிலும் மலால் செய்வாங்களாமே! ஹாட் ஸ்ப்ரிங் பாத் இருக்காம். ஆண் பெண் வித்தியாசம் இல்லா மல் எல்லாரும் நிர்வாண மாத் தண்ணியில இறங்கிக் குளிப்பாங்களாம். அந்த இடத்துக்கு காமன் பாத்னு பேராம்”
“ஆமாம்; காமன் கணை வீசற இடமாச்சே அது! பொருத்தமான பேர்தான்! நீர் அங்கே கூச்சமில்லாமல் குளிப்பீரா? வெட்கப்பட மாட்டீரே!” ஷோஜோ கேட்டார்.
“கோவணம் கட்டாதவங்க ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். வெட்கப்பட்ட முடியுமா?”
“ரொம்பத்தான் துணிச்சல் ஐயா உமக்கு” என்றார் ஷோ ஜோ.
“இது துணிச்சல் இல்லேய்யா! துணியிலாச் செயல்! புத்தரே நிர்வாண நிலையில் இருந்திருக்கிறார் – என்று சொல்வாங்களே. புத்தருக்கில்லாத வெட்கமா நமக்கு”
“அர்த்தத்தை அனர்த்தமாக்காதீங்க. புத்தரின் நிர்வாண நிலை என்பதற்கு அர்த்தமே வேறு. நீர் நினைக்கிற மாதிரி Naked நிலையல்ல!” என்றார் ஷோஜோ.
“அப்படியா! கர்நாடகாவில் சரவண பெலகுலாங்கற இடத்துல கோமதீசுவரர் சிலை பார்த்திருக்கீங்களா, உயரமா நிப்பாரே, அவர் கூட நிர்வாணமாத்தான் நிக்கறார்! அந்த மாதிரி புத்தரும் எங்கயாவது நிர்வாண நிலையில நிக்கறாரோன்னு நினைச்சேன்!” என்றார் புள்ளி.
“சரி, புறப்படுங்க. ஹகோனே பார்த்துட்டு வந்துரலாம்’ என்றார் ஷோஜோ.
இருவரும் புல்லட் ரயிலில் பயணமாகி ஒடாவாரா ஸ்டேஷனில் இறங்கி, டாக்ஸி பிடித்து ஒரு பெரிய ஓட்டல் வாசல் முன் போய் நின்றபோது இரவு மணி எட்டு. . அங்கே கிமோனோ உடையணிந்த பணிப்பெண் ஒருத்தி இவர்களை அழைத்துச் சென்று பின் பக்கமாக ஒரு பெரிய அறைக்குள் கொண்டு விட்டாள். அந்த அறைக்கு அருகில் தான் காமன் பாத் இருந்தது. டூரிஸ்ட்டுகள் கூட்டம் கூட்டமாக ஆடைகளைக் களைந்துவிட்டு அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம் முழு நிர்வாணமாய்க் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.
ஷோ ஜோ புள்ளியைப் பார்த்து அர்த்தபுஷ்டியாக ஒரு புன் சிரிப்பை உதிர்த்தார். (அவர் தங்கப்பல் கட்டியிருந்ததால் அதைப் பொன் சிரிப்பு என்றும் சொல்லலாம்!)
“என்ன சிரிக்கிறீங்க?” என்று கேட்டார் புள்ளி.
“பொதுக் குளியல் இடத்துக்குப் போயிட்டா – இந்த ஜட்டியைக்கூட எடுத்துருவாங்க. சர்வம் முழு நிர்வாண மயம்தான்! உமக்கு தைரியம் இருக்கா?” என்று கேட்டார் ஷோஜோ.
“தைரியம் எனக்கு வேணாம்யா. பாக்கறவங்களுக்குத்தான் வேணும்!” என்றார் புள்ளி.
“சரி; முதல்ல ரூமுக்குள்ளயே ஒரு குளியல் போட்டு உடம்பை சுத்தப்படுத்திக்குங்க. அப்புறம் மஸாஜ்! அப்புறம் ஸ்டீம்பாத். கடைசியாத்தான் பொதுக் குளியல், இதோ போய் மஸாஜுக்கு ஆள் அழைச்சிட்டு வந்துடறேன்” என்று சொல்லிப் புறப்பட்டார் ஷோஜோ.
“மஸாஜுக்கு யார் வராங்க? ஆணா, பெண்ணா?”
“உங்களுக்கு யார் வேணும்?”
“ஆம்பளையாப் பார்த்து அழைச்சிட்டு வாங்க; என் மனைவியைத் தவிர என்னை வேற எந்தப் பொண்னும் தொட்டதில்லே.”
“அப்படின்னா நீங்க அறையிலயே இருங்க. இதோ அழைச்சிட்டு வந்துடறேன்!”
ரிஸப்ஷன் கௌண்ட்டருக்குப் போனார். ஷோ ஜோ. “அங்கே கொழுக்கட்டை கொழுக்கட்டையாய் – மஸாஜ் பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தி பெண் மாதிரியும் இருந்தாள். ஆண் மாதிரியும் இருந்தாள். ஷோஜோ அவளைத் தேர்ந்தெடுத்து புள்ளி தங்கியிருந்த அறைக்கு அழைத்துப் போய் “இதோ மஸாஜுக்கு ஆள் வந்திருக்கு” என்றார்.
“வந்திருக்குன்னா என்ன அர்த்தம்? வந்திருக்கானா? அல்லது வந்திருக்காளா? இந்த ஜப்பானில் யாரைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்காங்க: ஆண் பெண் வித்தியாசமே தெரியலே! இது ஆணா, பெண்ணா?” என்று கேட்டார் புள்ளி.
“ஆண் தான்; பார்த்தால் தெரியலையா?” என்று கேட்டு விட்டு வெளியேறிவிட்டார் ஷோ ஜோ.
அந்தப் பெண் உள்பக்கம் கதவைச் சாத்திக் கொண்டாள், முதலில் – புள்ளியைத் தலைகுப்புறக் கவிழ்ந்து படுக்கச் சொன்னாள். பிறகு அவரது உடைகளை ஒவ்வொன்றாய் உரித்தெடுத்து முதுகையும் தோள்களையும் இதமாகவும் இறுக்கமாகவும் பிடித்துவிட்டாள்.
அடுத்து, உடம்பு முழுதும் தைலம் தடவி அப்பளமாவைப் பிசைவதுபோல் பிசைந்து பிடரி நரம்புகளைச் சுண்டி விட்டுக் கடைசியாக முதுகு முழுதும் பரவலாக ‘கும்’ ‘கும்’ என்று தபால் முத்திரை குத்துவதுபோல் குத்தினாள்.
“அம்மாடா என்ன சுகம்!” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தபோது இன்னொரு ‘கும்’ விழுந்தது!
புள்ளிக்குச் சந்தேகமாயிருந்தது. “ஒரு பெண்ணின் கைபோல் மிருதுவாக இருக்கிறது. அதே சமயம், குத்துவிமும் வேகத்தைப் பார்த்தால் ஒரு ஆண் போலவும் இருக்கிறது” என்று எண்ணியவர் மெதுவாக ஓரக் கண்ணால் மார்பை கவனித்தார்.
அவ்வளவு எடுப்பாக இல்லை. ஆண் போலவும் இருந்தது. பெண் போலவும் இருந்தது. காதில், மூக்கில் கழுத்தில் எந்த அணிகலனும் இல்லை. அரை நிஜாரும் கலர்ச் சட்டையும் அணிந்திருந்ததால், அது இருபாலாருக்கும் பொதுவான டிரஸ் என்பதால் நிச்சயப்படுத்த முடியவில்லை. புள்ளி குழம்பிப் போனார். குப்புறப் படுத்திருந்த புள்ளியின் ஜட்டியைக் கொஞ்சம் கொஞ்சமாய் விலக்கி, தைலம் பூசித் தேய்த்து விட்டாள் அந்த மஸாஜ் பெண். கூச்சத்தில் புள்ளி நெளிந்தார்.
“உன் பேர் என்ன?” என்று கேட்டார்.
“அயோகா”
‘ஆண் பேராய்த்தான் இருக்கணும். காலில் முடிகிறதே? பெண் பேராயிருந்தால் அயோகி என்று கி யில் முடியுமோ’
மஸாஜ் முடிந்ததும் அந்தப் பெண் கையைக் கழுவிக் கொண்டு “நீங்கள் எழுந்து ஸ்டீம் பாத்துக்குப் போகலாம். ஸ்டீம்பாத், ரொம்ப சூடாக இருக்கும். ஜாக்கிரதை” என்று எச்சரித்துவிட்டுப் போனாள்.
புள்ளி வெளியே எட்டிப் பார்த்தபோது ஷோஜோ குறும்பாகச் சிரித்தபடி “மஸாஜ் எப்படி?” என்று கேட்டார்.
“பிரமாதம்!” என்றார் புள்ளி.
இப்ப வந்தது “யார் தெரியுமா?” என்று கேட்ட ஷோ ஜோ பலமாகச் சிரித்தபோதுதான் புள்ளிக்குப் புரிந்தது.
“ஐயையோ! வந்தவள் பெண்ணா? என் மானமே போச்சு. நினைச்சாலே வெட்கமாயிருக்கு? ஆண் என்று பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டீங்களே! ஜட்டியெல்லாம் கழட்டி என்னைப் பிறந்த மேனிக்குத் தோல் உரிக்கிற மாதிரி உரிச்சு, சீ! வெட்கம், வெட்கம்!” என்று தலையிலடித்துக்கொண்டார்.
“சரி; இப்ப அந்த மேனியோடயே ஸ்டீம் பாத்ல குளிச்சுட்டு வாங்க. நான் வெளியே லௌஞ்சில் போய் உட்கார்ந்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார் ஷோஜோ.
ஸ்டீம்பாத்துக்குப் போகுமுன் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த ‘ஸண்ட்டோரி’ விஸ்கியை எடுத்துக் குடிக்கத் தொடங்கிய புள்ளி மேலும் மேலும் குடித்துக்கொண்டே இருந்தார். “ஆனந்தம்; இதுதான் சொர்க்கம்!” என்று எண்ணிக் கொண்டார்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு பாத்ரூமுக்குள் போய் வெந்நீர்த் தொட்டியில் இறங்கினார். வெந்நீர் ரொம்ப சூடாக இருந்ததால் மல்லாந்து படுத்தபோது வயிற்றி லிருந்த விஸ்கியின் வேகம் அதிகரித்தது. அந்த மயக்கத்தில் புள்ளியார் சுய நிலையை இழந்து தண்ணீரில் மூழ்கித் . திணறினார். அவர் பாத்ரூமுக்குள் போனதுமே பணிப் பெண்கள் அடிக்கடி வந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். டூரிஸ்ட்டுகள் குடித்துவிட்டு இம்மாதிரி தொட்டியில் மூழ்கிப் போவதும், அவர்களைத் தூக்கி வெளியே போட்டுக் காப்பாற்றுவதும் அந்த ஓட்டலுக்குப் புதிதல்ல.
புள்ளியார் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததுதான் தாமதம், ஏழெட்டுப் பெண்கள் வேகமாய் உள்ளே ஓடி அவரைத் தூக்கி வந்து படுக்கையில் கிடத்தினர். ஜடாயுவைப் போல் இரண்டு கைகளையும் விரித்தபடி மல்லாந்து கிடந்த புள்ளியின் வயிற்றை அவர்கள் கைகளால் அமுக்கி விஸ்கியை வெளிப்படுத்தினர். ஒருத்தி உடம்பைத் துடைத்து விட, இன் னொருத்தி விசிறியால் ‘விசிற, புள்ளியார் மெதுவாய்க் கண் விழித்துப் பார்த்தார்: சுற்றிலும் பெண்கள் கூட்டமாய்ச் சூழ்ந்து கொண்டு நிற்பதைக் கண்டதும் முதலில் ஜட்டி இருக்கிறதா என்று தொட்டுப்பார்த்துக் கொண்டார். நல்லவேளை, இருந்தது!
இதற்குள் ஷோஜோ மெதுவாக எட்டிப் பார்த்து “என்ன ஆச்சு?” என்று கேட்டார்.
“ஸ்டீம் பாத் எடுக்கத் தொட்டியில் இறங்கினேன்! அதுதான் எனக்குத் தெரியும். அப்புறம் நடந்தது எதுவும் தெரியாது” என்றார் புள்ளி.
“குளிக்கப் போகுமுன் விஸ்கி குடித்தீரா?”
“ஆமாம்; அதனால் என்ன?”
“அப்ப சரிதான்; விஸ்கியும் வெந்நீரும் நல்ல காம்பினேஷன் ரெண்டும், கைகோத்துக்கிட்டு வேலை செஞ்சிருக்கு. நல்லவேளை இவர்கள் வந்து பார்த்தாங்களோ, பீழைச்சீங்களோ! பெண்டாட்டியைத் தவிர வேறு யாருமே உம்மைத் தொட்டதில்லை என்று பெருமையாச் சொல்லிக் கொண்டீரே! பார்த்தீரா இப்ப உம்ம பெண்டாட்டியைத் தவிர எவ்லாப் பெண்களும் தொட்டு உபசரிச்சுக்கிட்டிருக்காங்க!” என்று கேலியாகச் சிரித்தார் ஷோஜோ.
ஜார்ஜ் அறைக்குத் திரும்பியபோது பென்னட் வெளியே புறப்படத் தயாராக இருந்தான்.
“என்ன பாஸ்? எதாவது திட்டமா?” என்று வார்த்தையை முடிப்பதற்குள் “கிளம்பு” என்று அவசர உத்தரவு பிறந்தது, நூறு மிளகாய் காரத்தில்.
இருவரும் தெருவில் நடந்து ஸப்வேயில் இறங்கினார்கள்.
மாலை மயக்கத்தில் கின்ஸா மின்சாரப் பூக்களை மெள்ளப் பூத்துக் கொண்டிருந்தது.
ஸோனி பில்டிங் அருகில், கிளைத் தெரு ஒன்றில் நுழைந்ததும், சின்ன பார்க் தெரிந்தது. அங்கே சிமென்ட் பெஞ்சு ‘மேல் இருவரும் அமர்ந்தார்கள்.
வழியில் ரகசியக்குழு ஆசாமி ஒருவன் பங்க் கடைப் பெண்ணிடம் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தான். பென்னட்டைப் பார்த்ததும் சர்வ அவயவமும் ஒடுங்கி வெல வெலப்பது தெரிந்தது.
“பாஸ்டர்ட்ஸ்! தினம் செக் பண்ணினாத்தான் சொன்ன இடத்திலே நிப்பாங்க! இல்லாட்டி பெண்ணுங்ககிட்டே இளிக்கப் போயிடறாங்க!” என்றான் பென்னட் ஆகாயத்தைப் பார்த்து.
அவன் சொன்னது அவனது இதர வேவு சகாக்களைப் பற்றி என்று ஜார்ஜ் புரிந்து கொண்டான்.
பிறகு ஜார்ஜை , கோக்கித் திரும்பி “ஆமாம் நீ மட்டும் என்ன வாழ்ந்தது. டயரியிலே ஒரு குறிப்பை விட்டிருக்கியே!” என்றான்.
“இல்லையே பாஸ்!”என்றான் ஜார்ஜ் கை உதறிக் கொண்டு.
“நேத்து நீ கின்ஸா பக்கம் போனயா, இல்லையா?”
செவிட்டில் அறைவதுபோலக் கேள்வி. தடுமாறினான் ஜார்ஜ். ‘பென்னட்டுக்கு அந்த விஷயம் எப்படித் தெரிந்தது?’ என்று யோசித்தான்.
“ஏன் முழிக்கிறே! உண்மையா, இல்லையா? டயரியிலே ஏன் எழுதலே?”
“அதைப் பெரிய விஷயமா நினைக்கலே…”
“தெருவிலே காலை வச்சா, அது என்ன காரியமானாலும் டயரியிலே குறிச்சாகணும்! தெரியுமில்லையா? உங்களுக்கு எத்தனை வாட்டி சொல்றது? உங்க மூவ்மெண்ட்ஸை விவரமா எழுதி வெச்சாத்தானே நாளைக்கு ஏதாவது நடந்து போச்சுன்னா நீங்க எங்கெங்கே போயிருந்தீங்கன்னு கண்டுபிடிக்க உதவும்?”
“மன்னிச்சுடுங்க! இனிமே இந்தத் தவறு நடக்காம பார்த்துக்கறேன்.”
“இதோ பாரு! இனிமே மன்னிப்பு இல்லை! ஐ வில் கில் யு! நீ இருக்கிறது இரகசியப் படை! தெரிஞ்சுதா?”.
வார்த்தை சூடாக வீசி அடிக்க, ஜார்ஜ் நடுங்கிப்போனான்.
ரகசியக் குழுவில் சற்று ஏறுமாறாக இருந்தவர்கள் திடீரென்று காணாமல் போயிருக்கிறார்கள், அவர்களெல்லாம் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது ஜார்ஜுக்குத் தெரியும்.
கண்கள் கலங்க “இனிமே எந்தத் தவறும் பண்ண மாட்டேன், பாஸ்” என்றான் நடுக்கத்தோடு.
“சரி! அந்த டயரியிலே விசிடிங் கார்ட் இருந்ததே, அது யாருடையது?”
“எனக்குத் தெரியாது பாஸ்”
“ஜார்ஜ்! விளையாடாதே. இது நெருப்பு விளையாட்டு. அந்தப் பெண்ணோட உனக்கு இதுக்கு முன்னாடி தொடர்பு உண்டா?”.
“சத்தியமாக் கிடையாது”
“அதை யாராவது படிச்சிருப்பாங்கன்னு உனக்குத் தோணலையா?”
“இல்லை; யாரும் படிக்கலை!”
“ரெஸ்டாரண்ட் ஆசாமி அதை எடுத்து வச்சிருந்தானே? அவன் படிச்சிருக்க மாட்டாங்கறது என்ன நிச்சயம்?”
“நிச்சயமா இல்லை! கிஜிமா சொன்னா அவனுக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு…”
“சரி! அந்த விசிடிங் கார்ட் எப்படி உன் டயரிக்குள் வந்தது?”
“அதைத்தான் என்னால் புரிஞ்சுக்க முடியலை!”
“அப்போ வேற யாரோ உன் டயரியைப் பிரிச்சிருக்கணும்.”
பதில் இல்லை .
“உடனே கிளம்பு! அந்த விஸிட்டிங் கார்டை யார் எதுக்காக வெச்சாங்கன்னு கண்டுபிடிக்க வேண்டியது உன் பொறுப்பு. எங்கே, உன் திறமையைப் பார்க்கலாம்! போ…”
இருவரும் ஸிக்னலுக்காகக் காத்திருந்து குறுக்கே நடந்து எதிர் சாரிக்குப் போனார்கள்.
“அதோ பார்! படி ஏறுகிறானே அவன் தானே அந்த ரெஸ்டாரண்ட் ஆள்? ஏற்கெனவே இவனை நான் பார்த்து வச்சிருக்கேன் ஞாபகம் வச்சுக்க. இவன் ஒரு ஹைகிளாஸ் பெண் வியாபாரத்திலே இருக்கிறவன்” என்றான் பென்னட்.
ஜார்ஜ் ஆச்சரியப்பட்டான். ‘இந்த பென்னட் எமகாதகன்! எத்தனை விவரங்கள் தெரிந்து வைத்திருக்கிறான்!’ என்று வியந்தான்.
“ரொம்ப ரகசியமா செய்யறான். நீ நேராகப் போ! அவனிடம் பேச்சுக் கொடு!…விசிடிங் கார்டைப் பற்றின ரகசியத்தைக் கண்டுபிடி.”
ஜார்ஜ் மேலே போய் விசாரித்தான்.
“என் ரெஸ்டாரண்ட்டுக்கு எத்தனையோ ஆளுங்க வராங்க, போறாங்க. அந்த விசிடிங் கார்டை யார் எப்போ, வச்சாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?” என்று ஒரே போடாகப் போட்டான் அந்த ஆசாமி.
சாலையில் வந்ததும் இரண்டு பக்கமும் பார்த்தான். பென்னட் மறைந்துவிட்டான். இனி என்ன செய்ய?
டாக்ஸியைக் கைகாட்டி அழைத்து “நகானோ” என்றான்.
கார் ஐம்பது மைலில் தாவல்!
எலெக்ட்ரானிக் மீட்டரில் யெ(எ)ன் (ண்)கள் ஏறிக் கொண்டே போயின.
நகானோவில் அழகான வீட்டுப்புறங்கள் நிறைந்த ஓரிடத் தில் போய் நின்றது கார்.
டாக்சியை வழி அனுப்பிவிட்டு, நம்பர் சரிதானா என்று பார்த்து, அந்த ஜப்பானிய வீட்டில் ஏறி மணியை அழுத்தினான்.
கதவு மெள்ளமாகத் திறக்க, ஒரு புன்னகைப் பெண் அவனைத் தன் சிறு விழிகளால் பார்த்தாள்,
“நீங்கதானே ஷூமாசிச்சி” – விசிடிங்கார்டைப் பார்த்தபடி கேட்டான்.
அவளுக்குப் புரிந்துவிட்டது: “வாங்க, வாங்க” என்று உள்ளே அழைத்தாள். உயரமாக இருந்தாள். முகத்தில் வரி தெரிய, பெரிசு பெரிசாகப் புன்னகை பூத்தாள்.
ஜப்பானிய பாணியில் ஹால். கும்ம்ம் என்று மாய வாசனை! சுவரில் ‘கபுகி’ ஓவியங்கள்! கீழே சுத்தமான ‘டடாமி’ நெடுகிலும் வியாபித்திருந்தது.
சின்ன பிரம்பு நாற்காலி ஒன்றில் அவன் உட்கார்ந்து கொள்ள, அவள் எதிரே மண்டியிட்டு உட்கார்ந்தாள்.
“உங்களுக்கு என்ன வேணும்?”
“என் டயரியை ஐஸ்கிரீம் பார்லரில் மறந்துவிட்டுப் போயிட்டேன்! நீங்க இந்தக் கார்டை அதிலே வச்சீங்களா?” என்று அந்தக் கார்டைக் காண்பித்தான்.
“ஓ, மைகாட் இது எப்படி அதில் வந்தது?” என்றாள் அவள் ஆச்சரியக் குரலில்.
“உங்களுக்குத் தெரியாதா? நான் உங்களை அந்த பார்லரில் பார்த்தேனே!. பின் வரிசையிலே இருந்தீங்களே” என்றான்.
“ஓ!” என்று அவளும் நினைவு கூர்வதுபோல் நெற்றியைச் செல்லமாகத் தட்டிக்கொண்டு “உங்களைப் பார்த்த நினைவு இருக்கு! உங்க பக்கத்து மேஜையிலேதான் என் சிநேகிதி உட்கார்ந்திருந்தாள்” என்றாள்.
“அதுவும் எனக்குத் தெரியும். அப்போதான் நான் எழுந்து வெளியே போனேன்! டயரி மறந்துவிட்டது.”
“உங்க டயரியை நான் கவனிக்கவில்லை”
“நிச்சயமா?”
“நிச்சயம்…”
“அப்ப நான் வரேன்…” என்று எழுந்தான்.
“மிஸ்டர் ஜார்ஜ் உடனே எமுந்து போறீங்களே! ஒரு டீ சாப்பிட்டுப் போகக் கூடாதா! இருங்க, ஒரு ஜப்பானிய டீ சாப்பிடுங்க” என்று அவனை மடக்கி உட்கார வைத்தாள்.
ஒரு டம்ளரில் ‘ஸாகே’ எடுத்து வந்து வைத்தாள்.
மனசில் அவனுக்கு அடிக்கடி பயம் ஏற்பட்டது. பென்னட்டின் வார்த்தைகள் வந்து பயமுறுத்தின. ஒருவேளை இவள்..ஜப்பானிய உளவாளியாக..
‘ஸாகே’யை ஒரு முறை சூப்பியவன் சட்டென்று அதைக் கீழே வைத்துவிட்டு மேலே நோக்கினான்.
இவள் ஏன் இத்தனை உபசாரம் செய்கிறாள்?
“போதும்! எனக்கு அவசர வேலை இருக்கிறது. நான் புறப்படுகிறேன்” என்றான்.
“ஏன் கோபம்? நான் என்ன செய்தேன்?”
அவன் மௌனமாகப் பார்த்தான்.
“எனக்குச் சந்தேகமாயிருக்கு” என்றான்.
“என்ன சந்தேகம்?”
“ஒரு பரிச்சயத்திலே நீங்க இத்தனை உபசரிப்பு செய்வதை என்னால் ஒத்துக்க முடியலை ஸாரி நான் வரேன்” என்று எழுந்து பல அடிகள் வைத்து விட்டான்.
“மிஸ்டர் ஜார்ஜ்!” என்று ஓடி வந்து அவனை வழிமறித்து,
“என் உபசரிப்புக்கு ஒரு காரணம் இருக்கு! சொல்லிடறேன் என்னைத் தவறாக நினைக்கமாட்டீங்களே?” என்று கேட்டாள்.
“சொல்லுங்க” என்று ஆவல் பொங்கக் கேட்டான் ஜார்ஜ்.
– தொடரும்…
– வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு, முதற் பதிப்பு: ஜனவரி 1991, அசோக் உமா பப்ளிகேஷன்ஸ் , சென்னை.