ஹலோ? சார், ராமசாமி அவங்களா?
ஆமா, பேரு ராமசாமி. ஆனா நான் சாமி எல்லாம் கிடையாது. உங்களுக்கு என்ன வேணும்?

உங்க வயசு?
இப்போ அம்பது. ஒரு வருஷம் கழிச்சி 51 ஆயிடும்.
உங்க எடை?
சாப்பிடும் முன் 55 கிலோ. சாப்பிட்டப் பின் 55.5 கிலோ.
BP, சுகர், மஞ்ச காமாலை, HIV இருக்கா ?
அதெல்லாம் ஒன்னும் எங்கிட்ட இல்லிங்க. கொடுத்தாலும் வேணாங்க.
அப்போ , நீங்க நார்மலா ஆரோக்கியமா இருக்கீங்க?
நீங்க இந்த மாதிரி அசட்டுத்தனமா கேட்டிங்கன்னா இருக்கிற ஹெல்த்தும் போயிடும்!
சரிங்க, கோவிச்சுக்காதீங்க!. கடைசியா ஒரு கேள்வி . உங்க சொந்த ஊர்?
எனக்கு சொந்தமா ஊரெல்லாம் கிடையாது. சின்னதா பொட்டிக்கடை மாதிரி ஒரு வீடு இருக்கு. அவ்வளவு தான்.
ரொம்ப ஜோக்காப் பேசறீங்க!. ரொம்ப டென்ஷன் ஆவாதிங்க !. சரிங்க, உங்களுக்கு தகுதி இருக்கு. உங்களை ரெஜிஸ்டர் பண்ணிட்டோம். நாளைக்கு காலையிலே 10 மணிக்கு ரோட்டரி ஸ்கூலுக்கு வந்துடுங்க. நிகழ்ச்சி முடிந்தவுடன் உங்களுக்கு சான்றிதழ் கூட கொடுப்பாங்க. லைட்டா டிபன், காபி கூட உண்டு.
யோவ், எதுக்கு இவ்வளவு விவரம் கேக்கரிங்க? கிரெடிட் கார்டா? LIC பாலிசியா, லோனா? அதெல்லாம் ஒரு மண்ணும் வேணாம் !.
சார், மண் இல்லாம ஒரு விளைச்சலும் இருக்காது. நாம சாப்பிடவும் முடியாது. அப்புறம் வாழவே முடியாது.
என்ன, என்கிட்டேயே ஜோக் அடிக்கிறீங்க? போலீசில் கம்ப்ளைன்ட் கொடுப்பேன்.
அவ்வளவு தூரம் எதுக்குப் போறீங்க சார். கொஞ்சம் பொறுமையா கேளுங்க சார். நான் உங்களை எங்க இரத்த வங்கியில் தான்
ரெஜிஸ்டர் பண்றேன். உங்களுக்கு இரத்த தானம் செய்ய தகுதி இருக்கான்னு தெரிஞ்சிக்கத் தான் இவ்வளவு விவரம் கேட்டேன். நீங்க நினைக்கிற மாதிரி வங்கி எல்லாம் இது கிடையாது. சார், கேக்குதா. ஹலோ? ஹலோ?.
– குவிகம் ஜூன் 2023 மின்னிதழில் வெளியான சிறுகதை