ராம சுப்பு இப்பொழுதெல்லாம் சமையல் செய்வதில் மிகவும் கெட்டிக்காரனாகி விட்டான். காரணம் அவனை ஒரு முறை அவன் மனைவி உனக்கு “வக்கனையா ஆக்கி வச்சா, இதுவும் பேசுவே, இன்னமும் பேசுவே” என்று ஒரு தொடர் வார்த்தை பேசி விட்டதால் மனம் நொந்து தனது வாரிசுகளை உதவிக்கு வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் சமையல் செய்து அதனை ருசி பார்த்து ஒளி, ஒலி பரப்ப வாரிசுகளை ஏற்பாடு செய்து கொண்டான். இதனால் அவனது சமையல் செய்யும் திறமை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்று பெரிய பெரிய ‘சமையல் வல்லுநர்கள்’ எல்லாம் தோற்கடிக்க கூடிய அளவில் தேர்ச்சி பெற்று விட்டான். இதனால் அவன் மனைவிக்கு பெருமையோ பெருமை.
இவன் மனைவியின் அரட்டை கச்சேரியின் பொழுதுகள் இதனால் அதிகமாகி பேசிக் கொண்டிருக்கும் எதிர் வீட்டு, பக்கத்து வீட்டு பெண்மணிகள் உங்க வீட்டுக்காரரு வந்துடுவாரே? குழந்தைகள் வந்துடுமே? அதுகளுக்கு சாப்பிட ஏதாவது தயார் பண்ண வேண்டாமா? இப்படிப்பட்ட கேள்விகள் அவர்களிடமிருந்து இவளை நோக்கி வீச இவள் இறுமாப்புடன் அவர்களை பார்த்து என் வீட்டுக்காரரு சமையல்தான் என் குழந்தைகளுக்கு நல்லா புடிக்குது, அதனால அவரே இப்பவெல்லாம் சமைச்சுடறாரு. இவள் குரலில் வழிந்த பெருமை மற்ற பெண்களுக்கு ஒரு பொறாமை புகைச்சலை உருவாக்க அவர்கள் தங்களது கணவர்மார்களை கவனித்துக் கொள்ள மனதுக்குள் கருவிக்கொண்டார்கள்.
இப்படியாக அந்த தெரு முழுவதும் ராமசுப்புவின் சமையலை பற்றி பெருமை பரவ பக்கத்து, எதிர் வீட்டு ஆண்களின் நிலைமை தர்ம சங்கடமாகி விட்டது. அவளோட வீட்டுக்காரரும் இருக்கறாரே, என்று ராமசுப்புவை பாராட்டாத பெண்களே அங்கில்லை என்னும் அளவுக்கு இவனின் பெருமை பரவ அதனால் அங்கிருந்த ஆண் மக்கள் அனைவரின் வயிற்றெரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தி கொண்டான் ராமசுப்பு.
எந்தளவுக்கு வீட்டு பெண்களின் அபிமானத்தை இவன் சமையல் பெற்றதோ அந்த அளவுக்கு அங்குள்ள ஆண்கள் இவன் மீது கோபம் கொண்டனர். இவனால் அவர்கள் பாடு திண்டாட்டமாகி கரண்டியும் கம்பலையுமாக அலைந்தனர். அப்பொழுது கூட அந்த மனைவிமார்கள் என்ன இருந்தாலும் நம்ம அம்முலு வீட்டுக்காரரு சமையல் மாதிரி வருமா? இந்த கேள்வி வர காரணம் அம்முலுவாகிய ராமசுப்புவின் மனைவி இவன் சமையல் செய்த பண்டங்களை அந்த தெரு முழுவதும் விநியோகித்து பெருமை சேர்த்திருந்தாள்.
ராமசுப்புவின் சமையல் திறமை நாளுக்கு நாள் வளர அவன் இது வரை யாரும் ருசித்து அறிந்திராத ‘போலோபாலா’(வாசகர்கள் அர்த்தம் தேட வேண்டாம்) என்னும் புதிய அயிட்டத்தை கண்டு பிடித்து அதை தன்னுடைய மனைவிக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்தான். அதன் ருசியில் மயங்கிய அவன் மனைவி அதன் மிச்சம் மீதியை அருகில் இருந்த அனைத்து தாய் குலங்களுக்கும் அனுப்ப, அவர்கள் அனைவருக்கும் பிடித்த உண்வாகி விட்டது. அனைத்து மாந்தர்களும் ராமசுப்புவின் மனைவியிடம் இதை உடனே பதிவு செய்து அதன் பேட்டன் உரிமையை வாங்கி வைத்து விடுங்கள் என்று உசுப்பி விட ராமசுப்புவின் மனைவி கணவனை உசுப்பி அதனை பதிவு செய்து கொள்ள மேற்கண்ட அலுவலகத்துக்கு சென்றான்.
இங்கு இப்படியிருக்க சென்னை பட்டணத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒரு விஞ்ஞானி தனது கண்டு பிடிப்பாக ஒரு ஆயுதத்தை கண்டு பிடித்து அதனை பதிவு செய்தார். அவருடைய துரதிர்ஷ்டம் அதற்கு “போலோபாலா” என்று பெயரிட்டு விட்டார். அது ஒரே நேரத்தில் பத்திருபது எதிரிகளை புகையாகவே காலி பண்ணிவிடும் ஒரு நச்சு வாயு பொருள் என்று அதனை பற்றி பெருமையாகவும் குறிப்பிட்டு விட்டார்.
இப்படியாக இந்த சமுதாயத்தில் “போலோபாலா” என்னும் பொருள் பத்திருபது பேரை காலி செய்யும் வாயு பொருள் என்று பரவ இவர்கள் இருவரின் துரதிருஷ்டம் ஒரே நேரத்தில் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் இவற்றை பற்றி வெளியில் தெரிந்து அதன் பின் நடந்த விஷயங்கள் ராமசுப்புவின் கண்டு பிடிப்பு பல பேரை காலி செய்து விடும் என்றும், அந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு உண்ண சுவை மிகுந்ததாகவும் இருக்கும் என்று செய்திகள் மாறி மாறி மக்களின் செவிகளில் பாய ஆரம்பித்து விட்டது.
அவ்வளவுதான் ராமசுப்புவின் வீட்டுக்கு கண்டணங்கள் வந்து குவிய அமைதியை விரும்பிய ஆர்ப்பாட்ட குழுவினரின் ஆக்ரோஷமான வாய் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் ராமசுப்புவின் குடும்பம் தடுமாறி போய் விட்டது. அதை விட அங்கிருந்த அனைத்து ஆண் வர்க்கங்களும் அதுதான் வாய்ப்பு என்று அவனுக்காக ஒரு சுவரொட்டியை தயார் செய்து இரவோடு இரவாக அவன் வீட்டு எதிர் காம்பவுண்டில் ஒட்டி விட்டு போய்விட்டார்கள் (கவனிக்க எதிர் வீட்டுக்காரரும் உடந்தை)
அதில் எழுதியிருந்த வாசகம் “ஏன் இந்த கொலைவெறி? எத்தனை பேரை கொல்ல இந்த ஆயுதம்? மனிதா சிந்தி ! அமைதியை விரும்பும் நாம் அடிதடியை விரும்பாவிட்டாலும் அது நடந்தால் நம்மால் தடுக்க முடியுமா? போவது ஒரு உயிர் அதை பற்றி கவலைப்படாத உயிர் பாதுகாப்போர் சங்கம்” இப்படியாக எழுதி ஒட்டி மேலும் அவர்கள் குடும்பத்தை போஸ்டர் மூலம் மிரட்டி வைக்க
இப்பொழுதெல்லாம் ராமசுப்புவின் குடும்பம் அவனது சமையல் திறமை பற்றி வாயே திறப்பதில்லை. அவன் சமையல் திறமையை பலரிடம் சொல்லி அடுத்த வீட்டு ஆண்களின் பாவத்தை சுமக்க அவர்கள் தயாரில்லை.