ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும்..!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 10,146 
 
 

யாருக்கும் பயனில்லாமல் கொட்டிக்கொண்டு இருந்தது குற்றால அருவி. ராமசாமியும் ரொமானே ஹொசாரிகாவும் சாரல் தெறிக்கும் தூரத்தில் நின்று அருவியைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இருளில் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகவும் குளிரைத் தாங்க வேண்டும் என்பதற்காகவும் கரிய நிற ராமசாமி காதை மறைத்து வெள்ளைத் துண்டைச் சுற்றியிருந்தான். ரொமானே தன்னுடைய துப்பட்டா வால் தலையை மூடியிருந்தாள். கைகளுக்குள் பொத்திய விளக்கு போல அந்த இருட்டிலும் ரொமானேவின் முகம் பளீரென்று ஜொலித்தது. குளிரின் மிகுதியால் ராமசாமிக்கு நெருக்கமாக வந்து நின்ற ரொமானே, அவன் கைகளைப் பற்றிக்கொண்டாள். இத்தனை அண்மையில் ஒரு பெண் அதுவும் தன் தோளோடு இணைந்து நிற்கையில் ராமசாமிக்கு டீக்கடை பாய்லராக உடம்பு கொதிக்க ஆரம்பித்தது. ரயில் பயணத்தில் திடீரென்று புளியோதரை கொடுத்து உபசரிக்கும் பக்கத்து சீட்காரர் போல, ராமசாமிக்கு மூன்று நாட்களாக பல கனவுகளைக் கொடுத்துக்கொண்டு இருந்தாள் ரொமானே!

குற்றாலத்தில் ‘ராமசாமி சவுண்ட் சர்வீஸ்’ என்ற பெயரில் மைக்செட் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறான் ராமசாமி. ‘ஆயிரம் வாட்ஸ் முதல் ஐயாயிரம் வாட்ஸ் வரையும், கண்ணைக் கவரும் கலர் டியூப்லைட்டு கள், சிந்தனையைத் தூண்டும் சீரியல் செட்டுகள் மூலம் மின்சாரம் இருக்கும் இடங்களுக்கும் மின்சாரம் அல்லாத இடங்களுக்கும் பேட்டரி அண்ட் ஜெனரேட்டர் மூலம் ஒலி ஒளி அமைத்துக் கொடுக்கும்’ சாதாரண மைக்செட்காரன்.

அதிகபட்சமாக கிழக்கே முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆலங்குளம் வரையும், வடக்கே புளியங்குடி வரையும்தான் ஆர்டர் அடிக்கப் போயிருக்கிறான். தெற்கேயும் மேற்கேயும் மலையும் மலையாளமும் தடையாக இருப்பதால் அது தாண்டிய முயற்சிகளில் ராமசாமி இறங்கவில்லை. ஆனால், மைக்கில் பேசும்போது ‘ஆல் இந்தியாவிலும் மீண்டும் மீண்டும் பாராட்டப்பட்ட…’ என்று சொல்லித் தான் தன்னுடைய மைக்செட் பெருமைகளை அறிவிப்பான்.

ஆல் இந்தியாவில் பாராட்டப்பட்டானோ இல்லையோ… அஸ்ஸாம் பெண்ணான ரொமானே ஹொசாரி காவால் பாராட்டப்பட்டுவிட்டான்.

‘இந்தியாவின் பல பகுதிகள் பலவிதமான கலாசாரங்களால் நிறைந்து கிடக்கிறது’ என்ற ஏழாங் கிளாஸ் பாடப்புத்தகத்தை எதிரே கொண்டுவந்து காட்டியது போல குற்றாலத்துக்கு வந்து இறங்கிய கலைக் குழுவில் இருந்தாள் ரொமானே!

மத்திய அரசு சார்பாக நாடெங் கும் நம்முடைய கலாசாரத்தைப் பரப்புவதற்காக அமைக்கப்பட்டி ருந்த குழு. ஜம்மு வில் பிரதமர் தலைமையில் நடக்கும் விழாவில் நிறைவடையப் போகும் அந்தக் கலாசாரப் பயணத்தை லோக்கல் அமைச்சர் தலைமையில் குற்றாலத்தில் தொடங்கினார்கள். ராமசாமியின் சவுண்ட் சர்வீஸ்தான் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தது.

அங்குதான் ராமசாமிக்கும் ரொமானேவுக்கும் அறிமுகம் ஆனது. முதல் நாள் நிகழ்ச்சி சம்பிரதாயமான பேச்சாகவே முடிந்தது. அடுத்த மூன்று நாட்களுக்குத்தான் கலை விழா. மூன்று நாளும் ராமசாமிக்கு கலாசார குழுவோடுதான் சாப்பாடு எல்லாமே. மத்தியான நேரம் சாப்பிட்டுவிட்டு, ஆம்ப்ளிபயர் பக்கத்தில் தலைவைத்து கொஞ்சம் கண்ணசந்த நேரத்தில்தான் ரொமானே அவனைத் தேடி வந்தாள். அவளுக்கு முன்னதாக வந்தது சலங்கைச் சத்தம்.

செப்பு போல மூக்கு, சிவந்த சின்ன உதடுகள், கொஞ்சம் ஏறுநெற்றி, கோதுமை நிறம் என்று எல்லா வகையிலும் தனக்கு எதிர்துருவமாக இருந்த ரொமானேவைப் பார்த்த ராமசாமி, தன்னுடைய ஆங்கில அகராதியில் இருந்து வார்த்தைகளைக் கலைத்துத் தேடி, ஒரே ஒற்றைச் சொல்லான ‘யெஸ்’ஸைப் பயன்படுத்தி னான். தமிழ் தெரியாதவர்களிடம் அவன் அதிகம் வைத்துக்கொள்வதில்லை. ஏனென்றால் அவனுக்கு தமிழ் தவிர ஏதும் தெரியாது. ஆனால், ரொமானே முப்பது நாட்கள் காத்திருக்கத் தயாராக இருந்தால், அஸ்ஸாம் மொழிகூட கற்கத் தயாராக இருந்தான்.

ரொமானேவும் உடைந்த ஆங்கிலத் தில் ஏதோ பேசினாள். அவளுடைய பேச்சு புரியாவிட்டாலும் கையில் வைத்திருந்த கேஸட்டைத் தன்னுடைய டேப்பில் போடச் சொல்கிறாள் என்பதை சைகை மூலம் புரிந்துகொண்டான். உடனே வாங்கிப் போட்டான். ‘தன்னுடைய ரேடியோகூட அஸ்ஸாமி பாட்டு பாடுகிறதே…’ என்று ராமசாமிக்கு ஒரே ஆச்சர்யம்.

ராமசாமி என்ற ஒற்றை ரசிகனுக்காக ரொமானே சுழன்று சுழன்று ஆடினாள். அரை மணி நேர ஆட்டத்தின் முடிவில் களைத்துச் சரிந்த ரொமானே, சைகை காட்டி தண்ணீர் கேட்டாள். ஓடிப் போய் ஒரு சொம்பு நிறைய தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்தான். நெஞ்சு நனைய தண்ணீரைக் குடித்த ரொமானே, ‘‘தேங்க்ஸ்’’ என்றபடி அப்படியே மேடையில் படுத்துவிட்டாள்.

எந்த விகல்பமும் இல்லாமல் இடுப்பில் கட்டிய துப்பட்டாவுடன் படுத்துக்கிடந்த அந்தப் பெண்ணைப் பார்த்தபோது, ராமசாமிக்கு மனசுக்குள் எதுவோ செய்தது. தேடித் தேடி வார்த்தைகளைக் கோத்து கேள்வியாக்கினான். ‘‘எந்த ஊரு?’’.

‘‘கவுஹாத்திக்குப் பக்கத்தில்…’’ என்று ரொமானே ஊர் பேரைச் சொன்னது, ராமசாமிக்கு ஏதோ தின்பண்டத்தின் பெயர் போலப் பட்டது. ‘யாதும் ஊரே… யாவரும் கேளிர்’ என்ற ரீதியில் அடுத்த கேள்விக்குத் தாவினான். ‘‘பேர் என்ன?’’

‘‘ரொமானே ஹொசாரிகா!’’ என்று சின்ன சிரிப்போடு சொல்லிவிட்டு, ‘‘நைஸ் மியூஸிக் சிஸ்டம்…’’ என்று பாராட்டிவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடிப்போனாள். அதன்பிறகு, ‘ஆல் இந்தியாவில் மீண்டும் மீண்டும் பாராட்டப்பட்ட…’ என்பதைக் கொஞ்சம் அழுத்தமாகவே உச்சரிக்க முடிவு செய்தான். போன வேகத்தில் திரும்பி ஓடி வந்த ரொமானே, ‘‘சாயங்காலம்… என் டான்ஸ்!’’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் ஓடிப் போனாள்.

மதியம் மூன்று முறை ரிகர்சல் செய்ததில் ரொமானேவின் நடனம் ராமசாமிக்கு அத்துபடி யாகி இருந்தது. உடனே தென்காசிக்குப் பறந்து போய், எக்ஸ்ட்ராவாகக் கொஞ்சம் கலர் ஜரிகைத் தாள்களும், பவர் கூடிய பல்பும் வாங்கிக்கொண்டு வந்தான். அவசரமாக அட்டையை வெட்டி வண்ண ஜரிகை காகிதங் களை ஒட்டி, ஃபோகஸ் லைட்டின் முன்னால் எடுத்துவைத்தான். ரொமானேவின் நடனம் வந்தபோது, எக்ஸ்ட்ரா விளக்கின் ஒளியை வண்ண வண்ண ஜரிகை காகிதங்களின் வழியே செலுத்தி நடனத்தை மேலும் மெருகேற்றி னான். நடனம் முடிந்தபோது, ராமசாமி கொடுத்த லைட்டிங்கால் நடனம் பிரமிக்கத்தக்கதாக ஆகிவிட, கைத்தட்டல் குற்றால அருவி போலக் கொட்டியது.

அன்று இரவு மேக்&அப்பைக் கலைத்துவிட்டு வந்த ரொமானே, ‘‘நைஸ் லைட்டிங்’’ என்று கூடுதலாகப் பாராட்டிவிட்டுப் போனாள். அன்று ராத்திரி முழுக்க ராமசாமி பொங்குமாங் கடல் விளிம்பில் நின்று நடனமாடிய ரொமானே மீது கலர் கலராக லைட் அடித்தான். விழித்தபோது கனவு கண்ட கண்ணில் எரிச்சலாக இருந்தது.

குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவியபோது குளிர்ச்சி யாக இருந்தது. கூடவே, கையில் டீ கோப்பை யோடு வந்து நின்ற ரொமானேவைப் பார்த்த போது இன்னும் குளிர்ச்சி யாக இருந்தது. ‘‘இதிலே என்ன இருக்குனு படிச்சுச் சொல்லேன்’’ என்றபடி கையில் இருந்த தினத்தந்தியைக் காட்டி னாள்.

‘கலை நிலாவின் மயிலாட்டம்’ என்று தலைப்பு போட்டு கலர் போட்டோ போட்டிருந்தார்கள். கீழே, ‘வண்ண விளக்கொளியில் ரொமானே ஹொசாரிகா ஆடிய ஆட்டம் கண்ணைவிட்டு அகலாமல் இருந்தது’ என்றெல் லாம் எழுதியிருந்தார்கள்.

அன்று மாலை ரொமானே வின் நடனம் இல்லை. சந்தன சோப் வாசனையோடு, கீழே இறங்கி வந்து ராமசாமிக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, அவனுடைய லைட்டிங் திறமைகளை ரசித்துக்கொண்டு இருந்தாள். இடையிடையே காதோரம் குனிந்து, குசுகுசு வென்று ஏதோ சொல்லிச் சிரித்தாள்.

அன்று விழா முடிந்ததும், ‘‘என்னை வெளியில் கூட்டிட்டுப் போறியா?’’ என்றபடி வந்து நின்றாள் ரொமானே!

ராமசாமிக்கு குற்றால நகரியத்துக்கு சேர்மனாகிவிட்ட மாதிரி சந்தோஷமாக இருந்தது. சந்தோஷமாக நடந்தார் கள். ரொமானேவுக்கு அருவி சந்தோஷம், ராமசாமிக்கு ரொமானே சந்தோஷம்!

அகால நேரத்தில் அருவிக்கரையில் எண்ணெய் விற்றுக் கொண்டு இருந்த பெட்டிக் கடையில் வெற்றிலை பாக்கு வாங்கி, சிவக்கச் சிவக்க தாம்பூலம் தரித்தார் கள். தன்னுடைய நடனத்துக்குச் சிறப்பாக லைட்டிங் கொடுத்த ராமசாமிக்கு சிகரெட் கொளுத்த, லைட்டர் பரிசாகக் கொடுத்தாள் ரொமானே. பதிலுக்கு ராமசாமி பாசிமாலை, காதுமாட்டல், கை வளையல் எல்லாம் செட்டாக வாங்கிக் கொடுத்தான். ரூமுக்குத் திரும்பியதும், ராமசாமியின் கைகளைப் பற்றிக்கொண்டு ‘‘சுபராத்திரி’’ என்றாள் ரொமானே. அப்படியென்றால் ‘குட்நைட்’ என்று அர்த்தமாம். ‘‘எனக்கு மனசுக்கு நிறைவா இருந்தா, சந்தோஷமா இருந்தேன்னா என் வீட்ல அம்மா& அப்பாகிட்டே சுபராத்திரி சொல்லாமல் தூங்கப் போக மாட்டேன். நீங்க தமிழ்ல எப்படிச் சொல்வீங்க’’ என்றாள் அறையின் வாசலில் நின்றபடி.

ராமசாமிக்கு நினைவு தெரிந்து யாருக்கும் குட்நைட் சொன்ன தில்லை. ‘‘நான் சந்தோஷமா இருந்தா சரக்கு அடிப்பேன். அந்த சந்தோஷத்துல தூங்கிடுவேன். எனக்கு யாரும் குட்நைட் சொன்ன தில்லை. தமிழ்ல குட்நைட்னா நல்ல ராத்திரினு சொல்லணும். நாளைக்கு வேணா யாரு கிட்டயாவது விசாரிச் சுட்டு வந்து சொல்றேன்’’ என்றான் வாய் கொள்ளாத சிரிப்போடு.

‘‘நாளைக்குக் காலைல எல்லோரும் பாலக் காட்டுக்குப் போறோம் தெரியுமா?’’ என்று ரொமா னேவே ஆரம்பித்தாள், அருவியைப் பார்த்தபடி. அருவியைப் போலவே அவளுடைய கண்களும் பளபளத்துக்கிடந்தன. ‘‘இன்னும் எனக்கு நீ குட்நைட்டுக்குத் தமிழ்ல எப்படிச் சொல்லணும்னு சொல்லலை’’ என்றாள் போலியான சிரிப்போடு.

ராமசாமிக்கு மூன்று நாள் திருவிழா முடிவுக்கு வந்து விட்டது உறைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. ‘‘என்ன பெரியகழுதை குட்நைட்..! அதுக்குத் தமிழ்ல சொல்லத் தெரியலைன்னா மனுஷன் வாழ முடியாதா?’’ என்றான் எரிச்சலோடு.

‘‘அப்படின்னா ஓ.கே! தேங்க்ஸ் ராமசாமி…’’ என்று சொன்ன ரொமானே, தளும்பும் கண்களோடு சொல்லிவிட்டுப் போனாள்… ‘‘சுபராத்திரி!’’

ராமசாமி பேச்சற்று நிற்க, அருவி இரைச்சலோடு கொட்டிக்கொண்டு இருந்தது.

– ஏப்ரல் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *