ராஜாராமனுக்கு சளி பிடித்த கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 18,608 
 
 

ராஜாராமனுக்கு சளி பிடித்த கதை:1

ராஜாராமனுக்கு இப்பொழுதில் சளி பிடித்திருக்கிறது. சரி சளிதான் என்று ஒதுக்கி விடலாம் என்று யாரும் நினைக்கலாம். அது சடுதியில் நடக்காது. ஒரு சின்னத் தும்மல் ரிக்டர் அளவில் ஐந்தாகப் பதிவு ஆகும்.

“ஏண்டா கொஞ்சம் நிதானமாகத் தும்மக்கூடாது.. நீ தும்மினது அந்த கும்பகோணம் வரை கேக்கும்….”

எரிச்சலுடன் தகப்பனை பார்த்தான் ராஜாராமன்….”ஏன் ஜார்ஜ் புஷ்ஷிக்கே கேட்கும்னு சொல்லிடறது.. அவனவன் படறது அவனவனுக்குத் தெரியும்…”

“சளிக்குப் போய் எவனாவது இவ்வளவு படுத்துவானா என்னவோ டி.பி. வந்தமாதிரி இருமறே.. தும்மறே.. துப்பறே.. கண்ணு நிறைய ஜலம் விடறே..”

“அப்புறம் மூக்குல குற்றாலமா வடியறது.. நாய் மாதிரி ஜொள்ளுவிடற.. இப்படியெல்லாம் சொல்லுங்களேன்..”

எனக்கு இப்ப வேற சந்தேகம்டா உனக்கு சளி பிடிச்சிருக்கா இல்லே நாய் கடிச்சிட்டதா.. நீ சொன்ன மாதிரி வாயிலே ஜொள்ளு விடற.. சத்தம் கூட ஜலதோஷம் பிடிச்சவன் மாதிரி இல்லாம நாய்க்கடிபட்டவன் மாதிரி கேக்குது.. நெஜம்தான் என்ன..

அக்கா திடுமென்று ஓடி வந்தாள்..”ராஜப்பா சொல்லிட்டாரா பக்கத்திலே ஏதாவது நாய் உன்னை சீண்டித்தா…”

“ராட்ஷசி” என்று சத்தமாக வைத்தான் ராஜாராமன்..”பெரிசு கேட்டா நீ ஆரம்பிச்சிருவியே.. பக்கத்திலே கடிக்கல தூரத்திலே இருக்கற நாய் கடிச்சது.. அதும் வைறதராபாத்திலே இருந்து ஒரு மச நாய்.. புரியுதா..”

“என் புருஷனைப் பத்திப் பேசாதே..”

“நான் ஒரு மச நாயைப் பத்திப் பேசினேன்..”

எப்படியோ உன்னை ஒரு மச நாய் கடிச்சதுன்னு ஒத்துக்கிட்டியே அதிலே எனக்கு சந்தோஷம்..

“என்னைக் கடிச்சா உனக்கு சந்தோஷம் அப்படித்தானே..”

“பின்னே ஒரு சிங்கமா கடிச்சது… நாய் கடிச்சதுக்கு இப்படி அலட்டிக்கிறியே.. நீயெல்லாம் ஒரு ஆம்பிளை போடா..”

“அப்ப நாய் கடிச்சிருக்குன்னும் எனக்கு வெறி புடிச்சிருக்குன்னும் நீ சொல்ல வர்றே.. அப்படித்தானே.. என்று இவன் பேச ஆரம்பிக்கிற போது ஒரு தும்மல் சுனாமி வேகத்தில் வந்தது.. அந்த தும்மல் வந்த பாட்டையும் காணோம்.. நிற்கிற மாதிரியும் தெரியவில்லை.. தொண்டைக்கு வந்து திரும்பிப் போய் வாய்க்கு வந்து மறுபடி கீழே போய் வரட்டுமா வேண்டாமா.. தும்மட்டுமா வேண்டாமா அது உனக்கு பிடிக்குமா என்கிற மாதிரி அடம்பிடித்து நடுவில் நின்றது. வாய் திறந்து மூட ராஜாராமன் தடுமாறினான்.

“ஏண்டா கண்ணா என்னென்னமோ செய்யற.. எம் புள்ளைக்கு எவனாவது செய்வினை வச்சிட்டானோ.. ஐயோ நான் என்ன செய்வேன்..” வேறு சமயமாய் இருந்தால் அம்மாவைக் கடித்துக் குதறி இருப்பான் ராஜாராமன்.. இப்போது இந்த மாதிரி செய்தால் நிஜமாகவே நாய் பிடிக்கறவன் வந்து விடுவான் என்பதால் வாயை அழுத்த மூடினான்.. ஆனால், பாழாய் போன அந்த தும்மல் கோலுக்குப் போகாத பந்து மாதிரி வந்தது. போனது.. நின்றது..”

“அவன் தும்மப்போறாண்டி..”

“அது என்ன எலக்ஷன் வரப் போறதுங்கற மாதிரி பேசறீங்கப்பா..”

“கரெக்டா சொன்னே… அது வரலாம் வராமலும் போகலாம்..”

“வரும்பா.. என்ன பெட்..”

“வராது.. பத்து ரூபா பந்தயம்..”

“ஐயோ எம்புள்ள வாயைத் தொறந்து தொறந்து மூடறானே..”

“ஏண்டி அலற்றே.. வாயைத் தானே தொறந்து மூடறான்.. என்னமோ நெஞ்சையே தொறந்து மூடற மாதிரி ஊரைக் கூட்டற..”

தும்மல் இப்போது இந்தோனேசியாவில் இருந்து பயணித்து இருந்தது..

“டேய் ராஜாராமா தும்மிடாதே.. எனக்கு பத்து ரூபா போயிடும்..”

“நாயே தும்மிடு.. நான் ஜெயிக்கணும்..”

“ஆஞ்சநேயா அவன் தும்மிட்டா உனக்கு வடைமாலை சாத்திடறேன்..”
இப்போது தும்மலா இருமலா என்று பிரித்தறிய முடியாத ஒரு கொடூரமான சத்தம் ராஜாராமனிடம் இருந்து வெளிப்பட்டது..

“அப்பா தும்மிட்டாப்பா.. நான் ஜெயிச்சிட்டேன்..”

“இது தும்மலில்;லை.. இருமல்.. நீ ஜெயிக்கலை..’

“அப்பா நீங்க எப்பவும் புழுகிணி ஆட்டம் ஆடுறீங்க..”

“ஐயோ எம்புள்ளைக்கு வாயிலே இருந்தே ஜலமா கொட்றதே..”

“நல்லா கவனிடி அவன் கண், மூக்கு ஜலம் எல்லாம் வாய்க்கு வந்து வடியறது..”
இப்போது யாரும் எதிர்பார்க்காமல் ஒரு தும்மல் வர வீட்டில் கதவு ஜன்னல் எல்லாம் அதிர்ந்தது..

அம்மா முகத்தை முந்தானையால் துடைத்துக்; கொண்டாள்..” முகம் அலம்பிக்கோம்மா..”

“சனியனே.. நான் பத்து நிமிஷமா முழுங்கவும் மாட்டாம, துப்பவும் மாட்டாம, அவதிப்படறேன். நீங்க பந்தயம் கட்டி வேடிக்கை பாக்கறீங்களா.. என்று திட்ட ஆரம்பிக்க மூக்கில் ஜலம் வருகிற உணர்வு மூக்கை பலமாக உறிஞ்சினான் ராஜாராமன்..”

“கடன்காரா அவ்வளவு வேகமா மூக்கை உறிஞ்சப் போய் பல் உள்ளே போய்விடலாம் என்று உள்ளபடியே பயம் வந்தது.. பல்லைத் தொட்டும் பார்த்துக் கொண்டான்..

“பயப்படாதே.. பல்லு வாயிலேதான் இருக்கு..”

“சுத்தப் பைத்தியக்காரப் பயல்.. ஒரு நல்ல டாக்டரைப் பார்க்காம இப்படி இருமி,இருமி மத்தவங்களைச் சாகடிக்கிறான்..”

“நானா சாகடிக்கிறேன்.. பெரிசு ஒரு நாளைக்கு உனக்கு வரும் அப்போ வச்சுக்கிறேன்.. ஏய் ஐதராபாத்து உனக்கு வரட்டும் அப்புறம் உன்னையும் வச்சுக்கிறேன்..”

“த்தூ.. வாயைக் கழுவு.. அக்கா நான் என்னைப் போய் வச்சுக்கறேன்கறியே.. உனக்கு நெஜமா பைத்தியம் தான் பிடிச்சிருக்கணும்..”

“விட்றி.. அவனே நொந்து போய் கெடக்கறான்…. குத்தாதே.. விட்டுரு.. ஏம்பா கொஞ்சம் கொள்ளு ரசம் வச்சித்தரட்டுமா..”

“முதல்லே இவங்க லொள்ளு விட்டுத் தொலைக்கச் சொல்லு..”

நடுவில் பாட்டி நுழைந்தாள்.

“எனக்கு சளி பிடிச்சிருக்கும் போல” என்று சொல்லி சின்னதாக ஒரு தும்மல் போட்டாள்.

“பாரு பாட்டியை அதோட தும்மல் கூட எவ்வளவு அழகா சங்கீதம் மாதிரி வெளியே வருது.. நீயும் இருக்கியே.. காண்டாமிருகம் இல்லே ஒட்டகச்சிவிங்கி மாதிரி தும்பறே.. நெஜம்மா கேட்கறேன்.. நம்ம பரம்பரையிலே யாரும் இப்படித் தும்மினதில்லையாமே.. உனக்கு எப்படி இப்படி தும்மல் வருது..”

“இப்ப நீ என்ன சொல்;ல வர்றே.. யார் மேலே சந்தேகப்படற.. நான் இந்தப் பரம்பரை சம்மந்தப்பட்டவன் இல்லைங்கறீயா..”

“ஆஸ்பத்திரியில குழந்தை மாறினதா அம்மா சொல்லுவாங்க உனக்கு ஜீன் டெஸ்ட் எடுக்கணும்டா ராஜாராம்.. அம்மாவுக்கும் பல்லு நேர்.. அப்பாவுக்கும் பல்லு நேர்.. உனக்கு மாத்திரம் எப்படி அது நூத்து எம்பது டிகிரிக்கு குத்தி நிக்குது..”

“அவன் மூக்கைப் பாருடி.. அப்படியே அச்சு அசலா என் மூக்கு என் புள்ளைக்கு..”

“அம்மா நீ யார் கட்சி.. எப்படியாவது கஷ்டப்பட்டு அவளுக்கு பாயிண்ட் கொடுத்திடாதே.. இப்ப என் மூக்கை பத்தி அதுவும் தும்மல் நேரத்திலே..”

“அதில்லே கண்ணா உனக்கு ஜலதோஷம் வந்தால் ஒரு மாதிரியா பேசறே உடனே ஒரு டாக்கரைப் பாக்கறது நல்லதில்லையா..”

ஒரு மாதிரியா பேசறேன்னு உன் செல்ல அம்மாவே ஒத்துக்கிட்டாச்சி.. ஒரு பைத்தியக்கார டாக்கரைப் பார்த்துடு.. வெட்கப்படாத ராஜா..”

“எனக்கென்ன வெட்கம்.. ஆறுமாதம் நீ உட்கார்ந்து சாப்பிடறே.. அப்புறம் உன் புருஷன் ஆறுமாசம் இங்கே வந்துடறது.. உனக்கில்லாத வெட்கம் எனக்கென்ன”
“பாவம்மா இவனுக்கு முத்திப் போச்சு.. இல்லப்பா..”

“ஆமா.. ஆமா.. சளி பிடிச்சா இவனுக்கு கூடவே சித்த பிரமையும் வந்துடறது..”
உர்ரென்று உறுமி விட்டு கூடவே வந்த சளியை விழுங்கி விட்டு சடாரென்று வீட்டை விட்டு வெளியேறினான் ராஜாராமன்..

ராஜாராமன் டாக்டரிடம் போன கதை -2

சளி பிடித்த நோயாளி மாதிரி அந்த ஆஸ்பத்திரி காட்சியளித்தது.. ராஜாராமன் உள்ளே போனபோது நோயாளிகள் யாரும் இருக்கவில்லை. டாக்டரின் அறையில் இருந்து இருமல் சத்தம் கேட்டது. யாராவது நோயாளியை டாக்டர் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று ராஜாராமன் நினைத்துக் கொண்டான். ஒரு மாதிரி வடிவத்தில் இருந்த நர்ஸ் இவனிடம் வந்தாள். அவளுக்கு கழுத்தே இல்லை. முகம் கூட தோல் அளவுக்கு விகசித்திருந்தது..

“நீங்க யாரைப் பார்க்கணும்..”

“இங்க வர்றவங்க யாரைப் பார்க்க வருவாங்க..” நர்ஸை ரொம்ப புத்தி சாலித்தனமாக மடக்கி விட்டதாக ராஜாராமன் நினைத்து சந்தோஷப்பட்டான்.
“ம்.. கக்கூஸ் சுத்தம் பண்றவன், துணி அழுக்கு எடுக்கறவன், பெயிண்டர், மருந்து விக்கறவன், இப்படி நெறைய பேர் என்னைப் பார்க்க வருவான்.. பைத்தியம் பிடிச்சவன்.. பிடிக்க தயாரில் இருக்கறவன்.. டி.பி.கே”,_வஅp_ரசட_1_.கேஸ்.. பொம்பளை சீக்கு இவனெல்லாம் டாக்டரைப் பார்க்க வருவான்.. நீ எதுலே சேர்த்தின்னு புரியலை..”

வீட்டிலே பேசினவர்கள் பரவாயில்லை என்று யோசித்துக் கொண்டான் ராஜாராமன்..

“எனக்கு சளி பிடிச்சிருக்கு..”

“யார் சொன்னது..”

சன் டிவியிலே சொன்னான்..

“என்னன்னு..”

“ராஜாராமனுக்கு சளி பிடிச்சிருக்குன்னு..”

“ஓ.கே. டாக்டர் கேட்டா இதே மாதிரி சொல்லிடு..”

“டாக்டரைப் பார்க்கலாமா..”

“இரு நீ டாக்டரைப் பார்க்கலாம் அவர் உன்னைப் பார்க்கிறாரா தெரியணும்..”

“யாரோ இருமினாங்களே..”

“இது ஆஸ்பத்திரி இங்கே யார் வேணாலும் இருமலாம், தும்மலாம், வாந்தி எடுக்கலாம், ஒன்றுக்கு போலாம், டூபாத்ரூம் போகலாம்.. ப+ர்ண சுதந்திரம் இருக்கு..”

ரோபோ மாதிரி பேசிய கழுத்தில்லாத அந்த நர்ஸை ஓங்கி அறையலாம் என்று ஆத்திரம் வந்தது..

“பீஸ் எவ்வளவு..”

“அது உன் நோயைப் பொறுத்தது. முப்பது ரூபாயில் இருந்து மூணு லட்சம் வரை போகலாம்..

“எனக்கு சளிதான் பிடிச்சிருக்கு..”

நர்ஸ் அவன் முகவாய்க்கட்டையை நிமிர்த்து இரு விரலால் கன்னப்பகுதியை அழுத்த ராஜாராமன் ஓ வென்று வாயைப் பிளந்தான். நர்ஸ் இயந்திரமாகி உஷ்ணமானியை நாக்குக்கு அடியில் நுழைந்தாள்.

ஊ..ஊ..ஊ..

“கடிச்சி துப்பிடாதே.. உள்ளே பாதரசம் இருக்கு வயித்துக்குள்ளே போனா நீ ஐநூறு ரூபாய் செலவு செய்ய வேண்டி வரும்..”

ஊ..ஊ..ஊ..ஊ

மூணு நிமிஷம் அப்படியே இரு..

ஊ..ஊ..ஊ..ஊ

“ஊளையிடாதே.. நாய் மாதிரி பக்கத்திலே நாய் பிடிக்கிறவன் வேற இருக்கான்..
விருக்கென்று ஜீரமானியை இழுத்தாள் அந்த நர்ஸ்..

“நீ உள்ளே குத்திட்டே என்ன வலி தெரியுமா.. ஏய் என்ன கையிலே கட்டற..”

“பையா நீ ரொம்ப தொந்தரவு பண்றே.. அப்புறம் ஆபரேஷன் பண்ற போது ஒரு விஷயத்தைக் காணாம பண்ணிடுவேன்..”

“எனக்கு எதுக்கு ஆபரேஷன்.. எதக் காணாம பண்ணிடுவேங்கற..”

“நர்ஸ் சுட்டு விரலைக் நீட்டிக்காட்டி சிரிக்க டாக்டர் குரல் வந்நதது.. அந்தப் பேஷண்டை அனுப்பு..”.

“போ.. உனக்கு டாக்டர்தான் சரி..”

“வந்து வச்சிக்கிறேன்.. உன்னை”

“எத்தனைப் பேர் சொல்றான்.. எவனாவது சொன்னபடி செஞ்சாத்தானே..” நர்ஸின் சூடான பெருமூச்சு ராஜாராமனின் மேல்பட்டது..

“உட்கார்.. உன் ப்ராபளம் என்ன..”

“அந்த நர்ஸ்..”

“அவளை விடு.. அவகிட்ட ரத்தக்காயம் இல்லாம தப்பிச்ச முத ஆள் நீதான்..”

“அவ ரொம்ப மோசம்”

“அவளை வச்சிட்டுத்தான் உனக்கு ஆபரேஷன் பண்ணப்போறேன்.. அவளை அனுசரிச்சி வச்சிக்கோ..”

“அவளை நீங்களே வச்சிகோங்க.. எனக்கு எதுக்கு ஆபரேஷன்.. எனக்கு சளிதானே பிடிச்சிருக்கு..”

“நீயே சொன்னா எப்பிடி.. பதிமூணு வருஷம் வைத்தியம் படிச்ச நான் அத சொல்லணும்.. சரி என்ன தொந்தரவு..”

“மூக்கிலே வாயிலே கண்ணில் ஜலமா கொட்டுது..”

“எப்பவாவது நாய் கடிச்சதா..”

“அதெல்லாம் கிடையாது.. எங்க அக்கா,அப்பா இவங்க வேணா கடிச்சிருக்காங்க..”
“அவங்களை எப்பவாவது நாய் கடிச்சிருக்கா”

“டாக்டர் எனக்கு சத்தியமா சளிதான்..”

“மேலே என்ன செய்யுது..”

“மேலே தலை அரிக்குது.. அப்புறம் தொண்டை வறட்சி.. கண் எரிச்சல் லேசா காய்ச்சல்..”

“எத்தனை நாளா இப்படி”

“ஒரு மாசமா.. அடிக்கடி.. வரும்.. போகும்..”

“சரி ஒரு ஸ்கேன் செய்துடலாம்.. கூடவே நாலு ரத்தப் பரிசோதனை..”

“சளிக்குப்போய்.. இவ்வளவு ஸ்கேன் எதுக்கு..”

“நீ சளிங்கறே.. அடையாளம் பார்த்தா எய்ட்ஸ் மாதிரி தெரியுது.. பதிமூணு வருஷம் வைத்தியம் படிச்சவன் நான்..

“சண்டாளப்பாவி” என்று மனசில் திட்டினான்.. ராஜாராமன்.. நான் “கட்டை பிரம்மச்சாரி டாக்டர்..”

“டெஸ்ட் உறுதியானா கல்யாணமே பண்ணிக்க தேவையில்லை.. எப்படி நான் சொல்றது.. எப்படி.. நர்ஸ்.. இவனுக்கு ரத்தம் எடு..”

நர்ஸ் வந்தாள்..

“இந்த பாத்திரத்திலா ரத்தம் எடுக்கப் போறீங்க.. டாக்டர் இன்னிக்கு வெள்ளிக்கிழமை.. நான் அப்பாவோட நாளைக்கு வந்துடறேன்.. இப்படெம்பரவரியா மாத்திரை ஏதாவது குடுத்துடுங்களேன்..”

“டெம்பரவரி மனைவி.. டெம்பரவரி மாத்திரை எல்லாம் ரொம்ப ஆபத்தானது..”

“பஸ்ட் எய்ட் பண்ணலாமில்லையா.. டாக்டர்..”

“ஓ.கே… டெம்பரவரியா ஒரு பஸ்ட் எய்ட் எழுதறேன்.. ஒரு நாலு மாத்திரை.. டானிக்.. மேலே தடவ ஒரு கிரீம் அப்புறம்.. உன் கை ஏன் நடுங்கறது.. ராத்திரியிலே இல்லே பகல்லே கனவு வருமா..”

“வரும் டாக்டர்..”

“எதுக்கும் ஒரு மென்டல் ஆஸ்பத்திரியிலே நீ நாலு நாள் தங்கிப்பார்க்கலாம்..”

“எனக்குப் பைத்தியங்கறீங்களா..”

“ச்சீ.. உலகமே பைத்தியக்கார ஆஸ்பத்திரி.. இதுலே இருக்கறவங்க எல்லாம் பைத்தியக்காரங்க.. நீ நான்.. எல்லாம்..

“அந்த நர்ஸ் வாயிலே தெர்மாமீட்டரை வச்சி..”

“அவளை விடு.. போனவாரம் தான் நாகூர்லே இருந்து குணமாகித் திரும்பி வந்தா..”

டாக்டரும் நர்ஸிம் கொஞ்சம் அசந்தபோது ஒரே தாவில் வெளியே வந்து விழுந்தான் ராஜாராமன்..

“அட ராஜாராமா ஏண்டா இப்படி நாய் துரத்தர மாதிரி ஓடி வர்ற..”

“நாய் இல்ல.. நாய்கள்.. இந்த டாக்டரும் நர்சும்..”

“மாட்டிக்கிட்டியா.. பதிமூணு வருஷமா வைத்தியம் படிச்சேன்னு சொல்லியிருப்பானே..”

“ஆமா.. சொன்னானே.. என்ன படிச்சான்..

“அஞ்சு வருஷ படிப்பைத்தான் அவன் பதிமூணு வருஷம் படிச்சானாம்.. ஸ்கேன் பண்ணச் சொன்னானா.. பெரிய பாத்திரத்திலே ப்ளட் எடுக்க வந்தாங்களா..”

ஆமாண்டா.. ஆமாம்.. என்று சினிமாப் பாணியில் அலறினான் ராஜாராமன்.

“ஏரியாவை விட்டு ஓடிடு..”

“ஜெய் ஜக்கம்மா” என்று கத்திக் கொண்டே பல் தெறிக்க ஓடினான் ராஜாராமன்..

ராஜாராமன் பார்த்த இன்னொரு டாக்டர் கதை

“இந்த மாத்திரையெல்லாம் சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா..”

“தெரியாது..”

“தெரியாதா.. பைத்தியக்காரனா இருக்கியே.. வயத்திலே இருக்கே குடல்..”

“அது தெரியும்..”

“அது எப்படித் தெரியும்.. அதான் வயத்துக்குள்ளே இருக்கே..”

“அதில்லே வயத்திலே குடல் இருக்குன்னு தெரியும்னு சொல்லவந்தேன்..”

“அட என்ன ஒரு பெரிய கண்டுபிடிப்பு.. இந்த மருந்தைத் தின்னா குடல் உருகி ஒட்டிக்கும்.. புரிஞ்சிக்க..”

“எங்க ஒட்டிக்கும்..” என்று அப்பாவியாய்க் கேட்டான் ராஜாராமன்..

ஒரு வினாடி டாக்டர் கொஞ்சம் ஆடிப்போனார். குடல் எங்கே ஒட்டிக் கொள்ளும் என்று அவருக்கும் சொல்லத் தெரியவில்லை..

அவன் நீளமான பல் கண்ணில்பட்டது.

“அட வயித்துலே இருக்கிற குடல் பல்லுலயா ஒட்டிக்கும் எல்லாம் வயத்துலதான் ஒட்டிக்கும்..”

“நல்லவேளை குடல் வயத்திலேதான் இருக்கும்..” என்று சந்தோஷப்பட்டான் ராஜாராமன்..”

“அதெப்படி அப்படி நிம்மதியா சந்தோஷப்படற என்ன ஆச்சோ.. எப்படி ஆச்சோ.. ஒரு ஸ்கேன் எடுத்துறலாம்..”

மறுபடிஸ்கேன்.. திக்கென்றது ராஜாவுக்கு.. “டாக்டர் எனக்கு சளிதான்.. பிடிச்சிருக்கு..”

“அட அது தனி விஷயம் முதல்லே குடலுக்கு ஒரு ஸ்கேன் பண்ணலே.. சிறுகுடல் பெருகுடல் வழியா வெளியே வந்துடும்.. அதக்கவனிப்போம்..ஒரு சின்ன ஆபரேஷன்லே சரி பண்ணிடலாம். அப்புறம் உனக்கு பிடிச்சிருக்கிறது சளின்னு நீ சொல்றே.. அதுலே எனக்கு சந்தேகம்.. உனக்கு என்ன செய்யுது.. விலாவரியா சொல்லு..

“மொதல்லே வயறு பெரட்டுது..”

“எப்ப இருந்து..”

“உங்களை பார்க்க வந்ததில் இருந்து..’

“குறிச்சிக்கிறேன். அப்புறம்.. மூக்கிலே வாயிலே ஜலம் வடியறது.. தொண்டை வரள்றது..”

“யாரைப் பார்த்தாலும் கோபம் வருது சரியா..”

“ஆமாம் டாக்டர் ரொம்ப சரி..”

“பசி இருக்காது.. தண்ணி சாப்பிடக் கூட மூடு வராதே..”

“கரெக்ட் டாக்டர்..”

“நாய் வளர்த்தீங்களா ராஜாராமன்..”

“இல்லையே எங்கக்காவை வீட்லே வச்சிருக்கோம்..”

“தப்பில்லே.. வீட்டைச் சுத்தி கட்டு விரியன் இருக்கா ராஜாராமன்..”

“கட்டுவிரியன் கட்டாத விரியன் இதெல்லாம் நான் பாத்ததில்லை டாக்டர்.. எனக்கு சளி பிடிச்சிருக்கு..”

“அத நான் பாத்துக்கறேன்.. கண்ணைக்காட்டுங்க.. நாக்கை நீட்டுங்க.. பனியனை நீக்கி அக்குளை காட்டுங்க.. கட்டி இருக்கா பார்க்கணும்..”

“ஏன் டாக்டர் என்ன சந்தேகம்.. அவரு எனக்கு எய்;ட்ஸ் இருக்கலாம்னு சந்தேகப்பட்டார்..”

“கிடக்கான் பைத்தியக்காரன்.. கட்டை பிரம்மச்சாரிக்கு எய்ட்ஸ் எல்லாம் வராது..”
“அப்பா நல்ல வேளை எனக்கு எய்ட்ஸ் இல்ல..”

“அப்படி சந்தோஷப்பட்டா எப்படி.. உங்க முதுகெலும்பிலே ஏதாவது ஜாயிண்டுக்கு பக்கத்திலே நரம்பிலே ஒரு கட்டி வந்திருக்கலாம்னு எனக்கு சந்தேகம்..”

“அப்ப சளி”

“அட சளியாவது புலியாவது.. ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணினா சரியாப் போகும் ஒரு ஸ்கேன்.. நாலு ப்ளட் டெஸ்ட்.. ஒரு ஆபரேஷன்.. உலகம் எங்கேயோ போயிருச்சிப்பா.. உன் ஆபரேஷனை நீயே கண்ணால பார்க்கலாம்.. டி.வி. எல்லாம் வச்சி கிராண்டா பண்ணிடலாம்..”

“டாக்டர் கல்யாணம் பண்ணப் போறீங்களா.. ஆபரேஷன் பண்ணப்போறீங்களா..”
“கல்யாணம் பண்ணிப்பார் வீடு கட்டிப் பாருங்கறது பழைய மொழி.. கூடவே ஆபரேஷன் பண்ணிப் பாரை சேர்த்துக்கோ.. எப்போ ஆரம்பிக்கலாம்..”

“அப்புறம் அந்தக் குடல் சமாச்சாரம்..”

“அது ஒண்ணும் பெரிசில்லே.. இது வயத்திலே செய்யறது.. மல்லாக்க போட்டு செய்யனும்.. முதுகு ஆபரேஷனை குப்புறப்படுக்க வச்சி செய்யணும்..”

“சரி டாக்டர் நான் அப்பாவோட வந்திடறேன்..”

“ரொம்ப நல்லது.. அவருக்கும் ஒரு ஸ்கேன் பண்ணிடலாம். இப்ப நர்ஸ்கிட்ட மறக்காம நூறு ரூபா கொடுத்துட்டு போயிடு.. அப்புறம் ஒரு சந்தேகம் எதுக்கும் நீ கீழ்பாக்கம் போயி..”

ராஜாராமன் அழுதுகொண்டே வீடு வந்து சேர்ந்தான்.

“அய்யோ புள்ளைக்கு இன்னும் கண்ணுல தண்ணி வடியறது..”

“லொள்” என்று சத்தம் கேட்க ராஜாராமன் அதிர்ந்தான்..”

“அக்கா நாய் குளைச்ச சத்தம் கேட்டதே..”

“எனக்கு கேக்கலையேடா.. இந்த ஏரியாவிலே ஏதுடா நாய்.. நீ பேசினது உனக்கு அப்படிக் கேட்டிருக்குமா..”

“எனக்கு கேட்டதுக்கா..”

“அப்பா கீழ்பாக்கம் போக ஒரு டாக்ஸி வேணும்..” என்று அக்கா கத்தினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *