மொய் கவரில் ஒரு வெடிகுண்டு!

 

கோ யம்பேடு பஸ் ஸ்டாண்ட் அருகே கல்யாண மண்டபங்கள் வண்ண விளக்குகள் மூலம் கண்ணடித்துக்கொண்டிருந்தன.

மூன்று தளங்கள். மூன்று கல்யாண மண்டபங்கள். ஓலாக்களும் ஊபர்களும் ஊர்வலம்போல் உள்ளே வந்துகொண்டிருந்தன.

வாசலில் வாட்ச்மேன்கள் பரபரப்பாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் கேள்விகளை அம்புகள் மாதிரி தொடுத்துக்கொண்டிருந்தார்கள்.பின்னே?

ஒரு மண்டபத்தில் நவீன் வெட்ஸ் மதுரா. மற்றொன்றில் ஷோபா வெட்ஸ் நவீன். எந்த நவீன் எந்த மண்டபத்தில்?

மொய் கவரில் ஒரு வெடிகுண்டுஏகமாய் கலாட்டா. சிலர் மதுரா எந்த ஃப்ளோரில்? சிலர் ஷோபா எங்கே… கேள்விகள்… கேள்விகள்“ம்… நல்லவேளை மணப்பெண்கள் பெயர்கள் வேற வேற..!” என்றார் ஒருவர்.“ஹி… ஹி.. மூன்றாவது மண்டபத்தில் மதுரா வெட்ஸ் வினய்னு இருக்கு கவனிச்சேளோ..?”

“அதிலாவது மணமகன் பெயர் வேறு இருக்கே… தாங்க்ஸ் ஃபர் த ஆல்மைட்டி!”

“வாடா ஒரு மண்டபத்தில் டிபன் காபி சாப்பிடலாம். மற்றொன்றில் லஞ்ச் சாப்பிடலாம்…’’ என்று பான் பராக் மணக்கத் திட்டம் போட்டுக்கொண்டிருந்த அந்த ஆசாமிக்கு இன்றைக்கு எந்தக் கல்யாணத்துக்குமே அழைப்பு வரவில்லை.சர்ரென்று மண்டபத்தில் போலீஸ் ஜீப் முழு வேகத்தில் வந்து நின்றது. வாட்ச் மேன் உஷாரானாலும் பரபரப்பில்லை. பல விஜபிக்கள் வீட்டுக் கல்யாணத்தில் இது நிகழும்.

ஜீப்பிலிருந்து இறங்கியவர் இன்ஸ்பெக்டர் பரத்வாஜ். தொப்பியைச் சுழற்றியவாறு லத்தியுடன் நிதானமாக நடந்து வந்தார்.ஓடி வந்த வாட்ச்மேனை மெதுவான குரலில் விசாரித்தவாறு அவன் சுட்டிக்காட்டிய மண்டபத்துக்கான படிக்கட்டுகளில் மெல்ல ஏறினார்.

ப வித்ரா பதற்றமாக இருந்தாள். தன் அறையில் உள்ள மேஜை டிராயர், டிரஸ் கப்போர்டில் உள்ள சல்வார்- லெக்கிங்ஸ் அடுக்கு என்று கலைத்துப்பார்த்துவிட்டாள்.ம்ஹும். அந்தக் கவரைக் காணவில்லை. உச்சியில் திறக்கும் சின்ன கவர். வாயை ஒட்டாத கவர். நான்காக மடித்த கடிதம்.

எங்கே வைத்தேன்?
கடவுளே!
யார் கையில் கிடைக்குமோ?
சாதாரண கடிதமா அது?
தற்கொலைக் கடிதம்!

“பவித்ரா… எங்கேடி தெலைஞ்ச? முகூர்த்தத்துக்கு நேரமாச்சு. சீக்கிரம் டிரஸ் பண்ணிட்டு வா…’’

பவித்ராவுக்கு பதற்றத்தில் அழுகை வந்தது.“இதோ வந்துட்டேன்…”“எவ்ளோ நேரம் மேக் அப்? வா… அங்கே போய்த்தான் டிபன் சாப்பிடணும். அதை நம்பி வீட்ல எதுவும் பண்ணக்கூட இல்லை!”தடதடவென்று மாடிப்படி இறங்கி வந்தாள்.

“மெதுவா வாயேன். கையைக் காலை உடைச்சுக்கப்போற…”வாசலில் கார் கிளம்பியது.இன்ஸ்பெக்டரின் வருகை மண்டபத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. டேபிள் ஃபேன் மாதிரி தலையை ஆட்டி வலது கை லத்தியால் உள்ளங்கையில் தட்டியபடி முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்தார்.

இளவட்டங்கள் குரலைத் தாழ்த்திப் பேசினார்கள். ஓரிருவர் நழுவிப்போய்விட்டார்கள். சிலர் தூணுக்குப் பின்னால் மறைந்தனர்.

பரத்வாஜ் எல்லாவற்றையும் ஓரக் கண்களால் நோட் பண்ணிக்கொண்டுதான் இருந்தார்.அவரை நோக்கி கல்யாணப் பெண்ணின் தந்தையும் மணமகனின் அப்பாவும் ஒருசேர வந்து கைகூப்பினர்.அவரும் எழுந்து நின்று சிரித்தபடி பேசினார். மாப்பிள்ளை நவீனும் மணமகள் ஷோபாவும் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டனர்.காரணம்…

ஒரு மாதம் முன்பு நடந்த நிகழ்ச்சி.சாந்தோம் கடற்கரையில் இரவு ஒன்பது மணிக்கு ஷோபாவும் நவீனும் மணலில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இரண்டு போலீஸ்காரர்கள் அருகில் வந்து விசாரித்தார்கள்.“கடற்கரையில் போலீஸ் ரோந்து இருக்கும்னு தெரியாதா? வாங்க ஸ்டேஷனுக்கு…” என்று காவல் நிலையத்துக்கு அழைத்துப் போய்விட்டனர் அந்தக் கடமை வீரர்கள்.அங்கே இருந்தவர் இன்ஸ்பெக்டர் பரத்வாஜ்.

நல்ல வேளையாக, “பார்க்க படிச்சவங்க மாதிரி இருக்கீங்க…” என்ற க்ளீஷே டயலாக்கைச் சொல்லவில்லை. “இருட்டின பிறகு இப்படி… சே… கல்யாணம் பண்ணிக்கப்போறீங்கன்னு சொல்றீங்க. உங்க வீட்டு முகவரி. பேரன்ட்ஸ் நேம்ஸ். மொபைல் நம்பர் எல்லாம் குடுங்க… என்ன மண்டபம்? என்ன தேதி? இதில் எழுதுங்க…”அவள் அழவே ஆரம்பித்துவிட்டாள்.

அவன் தைரியம் போல் முகத்தை வைத்துக்கொண்டு கை நடுங்க எழுதினான்.அதன் விளைவுதான் போலும்… இதோ முதல் வரிசையில்…இப்போது ஜம்மென்று தலை நிமிர்ந்து அமர்ந்திருந்தது அந்த ஜோடி.ஷோபா கீழ்க்குரலில் நவீனுடன் பேசினாள்: “இப்பதான் டாடி சொன்னார்… இன்ஸ்பெக்டரும் அப்பாவும் ஒண்ணாப் படிச்சவங்களாம்.

பத்திரிகை அனுப்பியிருந்தாராம்…’’“போட்டுக் கொடுத்துடுவாரோ?”“ஸோ வாட்?” தலை சாய்த்துச் சிரித்தாள்.இளம் அழகி பவித்ராவும், கொண்டையை அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு லேட்டானது பற்றி முணுமுணுத்தவாறு வந்த கோமதியும் காரில் வந்துகொண்டிருந்தனர்.ஹேண்ட்பேக்கில் இருந்த கவரைக் காண்பித்தாள் கோமதி. “உங்கப்பா அன்பளிப்புப் பணம் இருந்த கவரை மறந்துட்டார். நல்ல வேளை நான் பார்த்தேன். உனக்காவது பொறுப்பிருக்கா? மேஜை மேல குப்பை மாதிரி பேப்பர்ஸ் பரப்பி வைச்சிருக்க… கேட்டா ஒழுங்கு பண்ணினா தேட முடியாதுன்னு விவாதம் வேற…”

பவித்ரா ஆடிப்போய்விட்டாள். ஐயோ… கடிதக் கவர் இதுதானா? அல்லது இதுபோன்ற வேறொரு கவரா?

மொபைல் அடித்தது. “என்னங்க? மொய் கவர்தானே? நான் எடுத்துக்கிட்டு வரேங்க… மறப்பீங்க மறப்பீங்க… உங்களுக்கு என்னிக்கு வீட்டு ஞாபகம் இருந்திருக்கு?” என்றாள்.கோமதியின் கட்டளைப்படி டிரைவர் இறங்கிப்போய்ப் பார்ப்பதற்காக மணமக்கள் பெயர் கேட்டான். “இரண்டு மண்டபத்தில் நவீன் என்று பெயர் இருக்கு…” என்றான்.

ஹேண்ட் பேக்கிலிருந்து இன்விடேஷன் எடுத்துப் பார்த்து தம்பதி பெயர் சொல்லும்போது அந்தக் கவர் கீழே விழுந்தது. டிரைவரே எடுத்து பத்திரமாக அம்மா கையில் கொடுத்துவிட்டான்.இது தற்கொலைக்கவரா, மொய் கவரா? மறுபடி மனசில் கேள்வி. சித்தியின் சித்திரவதையையும் கல்லூரியில் காதல் செய்யும் பிளாக் மெயிலையும் வயிற்றில் சுமக்கும் கருவையும் விரிவாக விவரிக்கும் கடிதமாயிற்றே!

மண்டபத்தில் நுழைந்தார்கள். மெதுவாக நடந்து குறுக்கே வந்த குளிர்பான டிரேக்களில் இடிபடாமல்…“இங்கே வா…” என்று அழைத்தார் இன்ஸ்பெக்டர் பரத்வாஜ். “கோமு இங்கே உட்காரு…” என்றார் மனைவி கோமதியைப் பார்த்து. மகளின் கையைப் பிடித்து நாற்காலியில் அமர வைத்தார்.“என்னங்க மொய் கவரை மேஜை மேலயே வைச்சுட்டீங்க…”“சரி சரி குரலை உசத்தாதே… ஊரையே அதிகாரம் செய்யறவன் நான்…” கிண்டலாகச் சொன்னார்.

“கெட்டி மேளம் கெட்டி மேளம்…” யாரோ உதை வாங்கப்போற என்பது போல் விரலை ஆட்டினார்கள்.தாலி கட்டியாயிற்று.பரத்வாஜ் மனைவியும் மகளும் பின்தொடர மேடைக்குச் சென்றார். யூனிஃபார்ம் மாற்ற நேரமில்லாமல் வந்ததால் தொப்பி கையில்.

குனிந்து, மற்றவர்களுக்குக் கேட்காமல் சின்ன குரலில் சொன்னார்: “கங்கிராட்ஸ்… கடற்கரையிலிருந்து கல்யாண மேடை வரை… பயப்படாதீங்க. யார்கிட்டயும் சொல்லமாட்டேன். விசாரிச்சதுல என் நண்பர் குடும்பம்னு எப்பவோ தெரிஞ்சுடுச்சு…” சிரித்தார்.மேடையைவிட்டு இறங்கியபிறகு பவித்ராவைத் தனியாகத் தள்ளிக்கொண்டு போனார். “இந்தா… மொய் கவர்னு நினைச்சுதப்பா எடுத்துக்கிட்டு வந்துட்டேன்…” என்றார்.

பவித்ராவுக்கு வியர்த்துவிட்டது. “டாடீ…”

“கோமு… டைனிங்கில் இடம் பிடி… நான் யூனிஃபார்மில் இருக்கேன். சாப்பிட முடியாது…”

மகள் பக்கம் திரும்பினார். “ஈவினிங் வீட்டுக்கு வந்ததும் எனக்கு விளக்கம் வேணும்!”

அன்றிரவு… மகளை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்குப் போனார். கோயிலுக்குச் சென்ற கோமதி இன்னும் வரவில்லை.

“நல்லவேளையாய்க் கடிதம் என் கையில் கிடைத்தது. காதலன் டார்ச்சர் பண்ணினால் நாங்க எதுக்கு இருக்கோம்? வயிற்றில் பிரச்னைன்னா டாக்டர் எதுக்கு இருக்காங்க? சித்தி கொடுமைன்னா அப்பா எதுக்கு?”

“டாடி…”

“என்ன பெயர்?”

“மணி டாடி..”

“புரொசீட்…” சரியான போலீஸ் குரலில் கேட்டார்.

“என் சிநேகிதியின் முழுப்பெயர் ராதாமணி டாடி. அவளுக்குத்தான் இத்தனை பிரச்னை. அவ எழுதின இந்த லெட்டரைப் பிடுங்கிக்கிட்டு வந்தேன் அந்த ராஸ்கலைப்போய் நச்சுன்னு கேட்கணும்னு…” தலைகுனிந்தாள்.

“போலீஸ்காரன் பொண்ணுன்னு உன் தைரியத்தைப் பாராட்றதா அல்லது அப்பனுக்கே தெரியாம துப்பறியத் துணிஞ்சவன்னு உதைக்கவா?” என்றார் கோபமற்ற குரலில்.மடமடவென்று ஆக்‌ஷன் எடுத்ததில் அந்தப் பெண்ணைக் காதும் காதும் வைத்தமாதிரிக் காப்பாற்றிய பெருமை இன்ஸ்பெக்டருக்குத்தான் என்றாலும் அதற்குக் காரணமானவள் நூறு சதவீதம் தன் மகள் பவித்ராதான் என்பதில் அவருக்குப் பெருமைதான்!

- 29 Nov 2019 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)