மூவாமருந்து

 

பொதிப்பொதியாக மேகங்களைக் காற்று சுமந்துகொண்டு போகிறது. கண்ணுக்குத் தெரியாத யாரோ பொத்துவிட மேகம் உடைந்து மழை கொட்டுகிறது. இப்படித்தான் அக்கா சொல்லிக்கொடுத்தாள். இதற்குமேல் சொன்னால் எனக்குப் புரியாது என்று அவள் நினைத்துச் சொன்னதில் நான் அவ்வளவாகத் திருப்திப்படவில்லை. மழையின் வெவ்வேறு தாளகதியில் அமைந்த இசையும், ஜன்னலின்பின் தங்கமாய் நெளிந்து கலைடாஸ்கோப் ஜாலம் காட்டும் மின்னலும் மழை இரவுகளுக்காக மனதை ஏங்கவைக்கும்.

மழைக்கு அடுத்த நாள் காளான்கள் வாமனரின் குடைகளாக முளைத்து நிற்பதையும், புற்களெல்லாம் பற்றியெரிகிறப் பச்சையைப் பூசிக்கொண்டு நிற்பதையும் பார்த்து வியந்து நிற்கும்போதே, பவழமல்லிப் பூக்கள், சிகப்புக் காம்புகள் மடங்கி வதங்கிக் கிடப்பதைப் பார்த்து மனமும் வதங்கிப்போகும். மரவட்டைப் பூச்சிகள் பெரிய ஜங்க்ஷனின் யார்ட்களில் என்ஜின்கள் இலக்கில்லாமல் அலைவதாகத் தோன்றுவதுபோல் நகர்ந்து கொண்டிருக்கும். ஒரு குச்சியால் தொட்டால் சுருங்கிக்கொள்வதைப் பார்க்கும்போதெல்லாம், பேக்கரிக்கடையில் கண்ணாடி ஜாடிக்குள் வைத்திருக்கும் ‘ ஜாம் ரோல் ‘ தான் ஞாபகம்வரும். ரொம்பவும் மழையையும் மழைசார்ந்த விஷயங்களையும் அனுபவிக்கமுடியாது. வற்றாத ஜீவ நதிபோல் மூக்கு ஒழுகிக்கொண்டிருக்க கண்ணிரண்டும் வெளியேவந்துவிடும் அளவிற்குத் தொடரும் இருமலால், ” கடங்காரா! ஜலத்தில என்னடா ஆட்டம் ? ” என்ற திட்டோடு உள்ளே இழுத்துச் செல்லப்படுவேன்.

” நோவு சாத்திக்கொண்ட ” நாட்களில் அம்மா ரயில்வே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போய் ஊசிபோட்டுவிட மலையாள நர்சுகளிடம் மன்றாடுவாள். தடித்த தாதியர்கள் சிடுசிடுவென்ற மூஞ்சியோடு ரோட் எஞ்சின்போல மெதுவாக, கேளாத காதுகள்கொண்டு நகர்ந்துபோனாலும் அம்மா விடாமல் அவர்களைத் தொடர்வாள். அப்படி ஒரு நாள், அம்மாவின் தொணதொணப்புத் தாங்காமல் அந்த மலையாள நர்ஸ் ஊசி போடச் சம்மதித்து அதற்கான அறைக்குள் போகும்போதுதான் அந்தக் களேபரம் நிகழ்ந்தது. அங்கு நின்றுகொண்டிருந்த ரெண்டு பெரிய ஆட்களில் ஒருவர் குட்டையாகவும் இன்னொருவர் கொஞ்சம் வளர்த்தியாகவும் இருந்தனர். குட்டையானவர் பக்கத்திலிருந்த இன்னொரு நர்சைவிடக் குட்டை. இருவரும் வேஷ்டியை மடித்துக் கட்டியிருக்க, அவர்களிடம் பொதுவாக, என்ன வியாதி, எவ்வளவு நாட்களாக இருக்கிறது, டாக்டர் வேறு என்ன மாத்திரைகள் கொடுத்திருக்கிறார் என்ற கேள்விகளைப் பாட்டு போடுவதற்குமுன் நேயரைக் கேட்கும் தொகுப்பாளினிபோல் கேட்டுவிட்டு, குழந்தையைத் தலைக்குமேல் தூக்கிக்கொஞ்சுவது போல மருந்து பாட்டிலைத் தூக்கிப்பிடித்துக் கண்களைச் சுருக்கி சிரிஞ்சில் மருந்தை உறிஞ்சி விட்டு சட்டெனத் திரும்பி பக்கத்திலிருந்த உயரமானவரின் வேஷ்டியைத் தூக்கி ஊசிபோட யத்தனிக்குங்கால் அந்த ஆள் உள்ளே அண்டர்வேர் போடாதிருக்கக் கண்டு பயந்துபோய் ஊசியைக் கீழேபோட்டுவிட்டாள். பக்கத்திலிருந்த பெண்களெல்லாம் சிரித்துக்கொண்டே வெளியில் ஓட, வேஷ்டி தூக்கப்பட்ட ஆள் மிகக் கோபமாகி அந்த நர்சைப் பார்த்து, ” நீயெல்லாம் பொம்பளையா ? ஒரு ஆம்பளைக்கு ஊசி போடணும்னா கைல போடவேண்டியதுதானே ? எதுக்கு வேட்டியத் தூக்கறே ” ? என்று கத்த, பதிலுக்கு அந்த நர்சும், ” யோவ், நீ என்ன ஆம்பளே ? வீட்ட விட்டு வெளியில வர்ற ஆளு, அண்டர்வர்கூட போடாம எப்படி வரலாம் ? அதுவும் ஆஸ்பத்திரிக்கு வர்றவன் இப்படி வந்துட்டு என்னை எப்படிக் குத்தம் சொல்லப்போச்சு ? என்று கத்த, பெருமழைக்குமுன் கட்டியம் சொல்லும் இடிபோல வந்தக் கூச்சல்கேட்டு பெரிய டாக்டர் வெளியே வந்துவிட்டார். அவர் அந்தக் குட்டைமனிதரைப்பார்த்து, ” நான் உங்களைக் கேட்டுவிட்டுத்தானே இஞ்செக்ஷன் எழுதிக் கொடுத்தேன். உங்களுக்கு ஊசி போட்டுக் கொள்வதில் என்ன ப்ரச்சனை, வெறும் மாத்திரை மட்டும் போதுமா “? என்று ஆங்கிலத்தில் வினவ, அவரோ, ” எனக்கு ஒன்றும் ப்ரச்சனை இல்லை. நர்சம்மாதான் ஆளைமாத்தி, எனக்கு பதில் எனக்குத் துணையாக வந்த இவருக்கு ஊசிபோடுது ” என்று மெலிந்த சீக்காளிக் குரலில் சொல்ல நர்சம்மா ஏகத்துக்கு வெட்கம்கொண்டு நின்றாள். இதற்கிடையில், எனக்கு ஊசிபோட மலையாளத் தாதி ரெடியாக,அம்மாவின் புடவைத்தலைப்பை இழுத்து ” அம்மா! நானும் அண்டர்வேர் போட்டுக்கலியே, ப்ரச்சனை ஏதாவது வருமா “? எனக்கேட்டதில், சிடுமூஞ்சி நர்ஸ் முதல் தடவையாகச் சிரித்தாள். அந்த நிகழ்விற்குப்பின் ஆஸ்பத்திரிக்கு வரும் ஆண்களுக்கு ‘ ட்ரஸ் கோட் ‘ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளாடை அணிதல் கட்டாயமாக்கப்பட்டதோடல்லாமல், ஊசி போடும் முன் எங்கு போட்டுக்கொள்ள விருப்பம் என்று ஆப்ஷன் கேட்பது வழக்கிற்கு வந்தது.

ஆனால், ஊசியே போடாத ஒரு டாக்டராலும் ப்ரச்சனை வந்துவிட்டது ஒரு நாள். டாக்டர் ராமலிங்கம் ரொம்ப சாது. நல்ல உயரம். உயரத்திற்குத்தக்க நல்ல ஆகுருதி. ஆனால் குரல் மட்டும் அநியாயத்திற்கு சன்னம். டாட்டா சுமோவிற்கு மொபெட் ஹார்னை தவறி வைத்துவிட்டது மாதிரி இருக்கும். பொறுமையாக பேஷண்ட்டுகள் சொல்வதைக் கேட்டுக்கொள்வார். ” பேஷண்ட் ஹியரிங்க் ” என்று இதைத்தான் அங்கு வேலையிலிருந்த என் மாமா பையன் ராஜு சொன்னானோ என்னவோ! பத்துக்குப் பத்து அளவிலிருக்கும் அவர் அறையில் சின்ன மேஜையின்பின் அவர் உட்கார்ந்திருப்பார். அவரின் வலதுபுறம் ஒரு பெரிய ஸ்டூலும் அந்த ஸ்டூலின் மேல் சின்ன கழுத்துகொண்ட ஒரு அழகிய கண்ணாடிக் குடுவையும் அதில் மிகக் கவர்ச்சியான பிங்க் நிறத்தில் மருந்துக் கரைசலும் இருக்கும். அவரிடம் வைத்தியம் பார்த்துக்கொள்ளவரும் நோயாளிகள் சொல்வது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டபின் அவருக்குப் பின்னாலிருக்கும் அந்த வசீகரக் கண்ணாடிக் குடுவையிலிருந்து மிக் ஷ்சரை ஒரு கலக்குக் கலக்கிச் சின்ன பாட்டிலில் விட்டுக் கொடுப்பார். காலை, மதியம் இரவு ஆக மூன்று வேளைக்கும் அதை மூன்று நாட்கள் குடித்துவிட்டு, நான்காம் நாள் வந்து ரிப்போர்ட் பண்ணச்சொல்வார். யாருக்கு என்ன வியாதி என்றாலும் பிங்க் கலர் கரைசல்தான் மருந்து. அதுவும் மூன்று நாட்களுக்கு. ஏறக்குறைய எல்லா நோய்களையும் அது சரிசெய்துதான் வந்தது. ‘ மக்கர் ‘ பண்ணின கேஸ்களுக்கு இன்னொரு மூன்று நாட்கள். அவ்வளவுதான். ” வாட் அ பனேஷியா” என்று ராஜு சிலாகித்து உடல் குலுக்கிச் சொல்வதன் அர்த்தம் யாருக்கும் புரியாது. அவனும் யாரோ சொல்லக் கேட்டுத்தான், தானே கண்டுபிடித்ததுபோலச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும். இப்படிப் போய்க் கொண்டிருந்த போது ஒரு நாள், மெட்ராசிலிருந்து வந்த ஓர் அதிகாரி கடும் வயிற்றுப்போக்கில் துன்பப்பட, பெரிய டாக்டரும் இல்லாமல்போன ஞாயிற்றுக்கிழமையில், ராமலிங்க வைத்தியம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதில் திருப்தியுராத அந்த அதிகாரி, வேறு நல்ல இங்க்லீஷ் மருந்தை ப்ரிஸ்க்ரைப் பண்ணச் சொல்லி இங்க்லீஷிலேயேகேட்க, டாக்டர் ராமலிங்கத்தின் பேனாவில் சனி காத்திருந்தது. மருந்து எழுத எடுத்த அவர் பேனாவில் இங்க் தீர்ந்து போய்விட, அவர், ராஜுவைக் கூப்பிட்டு ஆவண செய்யப் பணித்தார். ராஜுவும் வழக்கம்போல பேனாவிற்கு இங்க்காக அந்தக் கண்ணாடிக் குடுவையிலிருந்த மருந்துக் கரைசலையே எடுத்ததைப் பார்த்த அதிகாரி , ” இட் இஸ் அட்றாஷியஸ் ” என்று அலறிக்கொண்டே எழுந்து போய், வயிற்றுப்போக்கு சரியாகும் முன்பே டாக்டர் போக்கு சரியில்லையென்று ரிப்பொர்ட் தந்துவிட டாக்டர் ராமலிங்கம் என்ற மகத்தான மக்கள் மருத்துவர் மாற்றலாகி வெளி மாநிலத்திற்கே போய்விட்டார். என் மாமா பையன் ராஜுவும் ஒர்க் ஷாப்பிற்கு மாற்றல் பெற்று டெக்னீஷியனாகி விட்டான். டாக்டர் நினைவாக அவன் இப்பவும் பிங்க் கலர் சட்டைகளையே அணிகிறான். 

தொடர்புடைய சிறுகதைகள்
என் நெடு நாளைய கனவு அன்று நிறைவேறி இருந்தது. நான் ஐந்து வருஷமாகத் தொடர்ந்து எப்போதும் பள்ளிக்கூடத்துக்கு மதிய சாப்பாடு எடுத்துச் செல்லும் அலுமினிய டிஃபன் பாக்ஸில் அடைக்கமுடியாத அளவிற்கு ஓட்டை விழுந்துவிட்டதால் என் அக்கா பள்ளிக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்த ( ...
மேலும் கதையை படிக்க...
ஜான் பீட்டர் தமயோன் எங்கள் வீட்டிற்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற பெரிய கிணற்றிற்கு எதிர்த்தாற்போலுள்ள வீட்டில் இருப்பவன். ரயில்வே பள்ளியில் இல்லாமல் பக்கத்திலுள்ள சாமியார் ஸ்கூல் என்னும் கிறிஸ்துவப் பள்ளிக்கூடத்தில் படிப்பவன். எஸ்.எஸ். எல். சியில் அதிக மார்க் வாங்கவேண்டுமென்றால் எல்லோரும் ...
மேலும் கதையை படிக்க...
” பிம்மாலையில பனி ஜாஸ்தி விழும். தலையில எதையாவது கட்டிக்கோடா கடங்காரா ” என்று பாட்டி அக்கறை கலந்து திட்டும் காலம் தையும் மாசியும். பாட்டி ” பிம்மாலை ” என்பதை இரவைக் குறிப்பிடும்போதும் சொல்வாள். சிற்றஞ்சிறுகாலையைக் குறித்தும் சொல்வாள். நாம்தான் ...
மேலும் கதையை படிக்க...
எஸ்.எஸ்.எல்.ஸி எனப்படும் பள்ளியின் கடைசி வருடமான பதினோறாம் வகுப்பில் ஏன் எங்கள் ரயில்வே ஸ்கூலில் வந்து சேர்ந்தான் என்று தெரியவில்லை. எங்களின் ஆங்கில ஆசிரியர் நடராஜன் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பள்ளியின் சீனியர் ப்யூன் ராஜன்தான் காசியை அழைத்துக்கொண்டுவந்து, ” சார்! ஹெட்மாஸ்டர் ...
மேலும் கதையை படிக்க...
ஜூன் மாதம் பள்ளிக்கூடம் தொடங்கிய முதல் வாரத்தில் புத்தகம் நோட்டு எல்லாம் இல்லாமல் ஜாலியாகக் கழிந்தபின் அடுத்த வாரத்தில் என்ன நோட்டு எத்தனை பக்கங்களில் இருக்கவேண்டும் என்று எழுதிப்போட்டதை என் பெரியண்ணாவிடம் நானும் என் தம்பியும் கலெக்டரிடம் மனுகொடுத்தபின் காத்திருப்பது போலக் ...
மேலும் கதையை படிக்க...
திண்டுக்கல்லிருந்து வெங்கடேச மாமா வந்து ரெண்டு நாளாகியிருந்தது. வெங்கடேச மாமா திண்டுக்கல் ஜங்க்ஷன் வி. ஆர். ஆர். என்றழைக்கப்பட்ட மரக்கறி உணவு சாலையில் வேலையில் இருந்தார். நல்ல வெங்கலக்குரல் அவருக்கு. தள்ளித் தள்ளி நட்டுவைத்த மரங்கள் போல சில பற்கள் மாத்திரம் ...
மேலும் கதையை படிக்க...
பிப்ரவரி மாதம் என்றால் எல்லோருக்கும் சந்தோஷம்தான். சுண்டுவிரல் மாதம் என்று கொஞ்சுவான் என் தம்பி ராஜா. லீப் வருஷ பிப்ரவரியின் இருபத்து ஒன்பதாம் தேதியை ஆறாவது விரல் என்பான். அப்பாவுக்கும்கூட பிப்ரவரி மகிழ்ச்சி தரக்கூடிய மாதமாகத்தான் இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் ...
மேலும் கதையை படிக்க...
நளினி அம்மா சற்று அதிர அதிரத்தான் நடப்பாள். பெரிய சரீரம். சாரீரமும் கனம்தான். அதட்டலான குரலில் ” ஏய் சிறுக்கி ! எதையும் தொடாம சும்மா ஒக்கார்ந்திருக்க மாட்டியா ? இந்த ஆம்பிளப்புள்ள ஒக்கார்ந்த்திருக்கல ? ” என்று என்னை ஒப்பிட்டு ...
மேலும் கதையை படிக்க...
மேமாதம் முதல் வாரமோ இரண்டாம் வாரமோ பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பிற்கு விடுமுறை விடுவார்கள். ” மெஷினெல்லாம் ஓவர் ஆயிலிங்க் பண்ணனுமில்ல, அதுக்காகத்தான் இந்த ஒருவார லீவு ” என்றான் என் நண்பன் ராஜு. எனக்கு அவன் சொன்னது புரியவில்லை. அப்பாவிடம் ...
மேலும் கதையை படிக்க...
ரயில்வே காலணியின் கோடியில் அமைந்திருந்த அந்த இரண்டு ப்ளாக்குகள் எங்களுக்கு அமானுஷ்யமாகத் தெரியும். அவற்றின் முன்புறம் ஒரு பெரிய புளியமரம் அடர்ந்து கிளைபரப்பி நிற்கும். சாதாரணக் குருவிகள், காக்கைகள் மற்றும் எப்போதாவது குரல் கொடுக்கும் கிளிகளோடு பெயர்தெரியாத பல இறகு ஜீவன்கள் ...
மேலும் கதையை படிக்க...
அன்பிற்குப் பாத்திரம்
நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?
ரோம சாம்ராஜ்ய வீழ்ச்சி
காசி யாத்திரை
கல்வித் தாத்தா
எனக்கு வந்த கடிதம்
வழிச் செலவு
சொல்லாமல் போனது
தொலைந்துபோன கோடை
சொல்லவந்த ஏகாதசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)