‘மூணு சீட்டு’ முத்தண்ணா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 28, 2023
பார்வையிட்டோர்: 6,686 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தம் தலையணைக்கு அடியில் வைத்திருக்கும் சீட்டுக்கட்டை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்ட பிறகுதான் முத்தண்ணா தினமும் காலையில் படுக்கையை விட்டு எழுந்திருப்பது வழக்கம்.

சீட்டாட்டம் என் து பொழுது போக்குக்காக ஏற்பட்ட ஒரு விளையாட்டு’ என்றே அவர் எண்ணுவதில்லை.

‘மனிதன் பிறப்பதே சீட்டாடுவதற்காகத்தான் ; பணத்தைச் சம்பாதிப்பதே சீட்டாடுவதற்காகத்தான்’ என்பது அவர் நினைப்பு .

எல்லா ஆபீஸ்களிலும் வேலை நேரத்தைக் குறைத்து, சீட்டாடும் கிளப்புகளில் இன்னும் கொஞ்சம் அதிக நேரத்தை ஒதுக்க வேண்டுமென்பது அவர் கருத்து. ஒவ்வொரு சமயம் தாம் ஏன் பள்ளிக்கூட வாத்தியாராகவோ, வக்கீலாகவோ போயிருக்கக் கூடாது என்று எண்ணி வருத்தப்படுவார். காரணம் : அந்த உத்தியோகங்களில் சம்மா வெகேஷனும் சேர்ந்து அதிக நாட்கள் லீவு கிடைக்குமல்லவா? லீவு நாட்களில் சீட்டாடுவது போதாதென்று, இரவு நேரங்களிலுங்கூட ஆடுவார். ஆபீசில் டிபன் சாப்பிடுவதற்காக விடும் ‘இண்டர்வல்’ நேரத்தை வீணாக்க மனமின்றி அப்போதும் இரண்டு ஆட்டம் போடுவார்.

ஆபீஸுக்குப் புறப்படும் போது ‘பைல்’ கட்டை எடுத்துக் கொள்ள மறந்தாலும் சீட்டுக் கட்டை எடுத்துக்கொள்ள அவர் ஒரு நாளும் மறக்கமாட்டார்.

‘நாலு பேர் சேர்ந்து செய்கிற நல்ல காரியங்களில் சீட்டாட்டத்தைப் போன்ற சிறந்ததொரு பணி வேறொன்றும் கிடையாது’ என்பது முத்தண்ணாவின் மணி மொழிகளில் ஒன்று. இராம சரித்திரம் சொல்லப்படும் இடங்களிலெல்லாம் அநுமார் பிரசன்னமாகியிருப்பார் என்று கூறுவது உண்டல்லவா? அதைப்போலவே சீட்டுக் கச்சேரி நடைபெறும் இடங்களிலெல்லாம் முத்தண்ணா பிரசன்னமாகியிருப்பார்!

எங்கேயாவது குழப்பம், கலவரம் ஏற்படுகிற போது சர்க்கார் நாலு பேருக்குமேல் தெருவில் கூடக்கூடாது என்று 144 உத்தரவு போட்டால், “நாலு பேர் வீதிகளில் தானே கூடி நிற்கக்கூடாது? வீட்டுக்குள் கூடிச் சீட்டாடுவதற்குத் தடை யில்லையே!” என்பார் அவர்.

விடுமுறை நாட்களில் முத்தண்ணாவின் தோழர்கள் அவருடைய வீட்டுக்கு வந்து, “என்ன முத்தண்ணா , கச்சேரி ஆரம்பிக்கலாமா?” என்பார்கள். அவ்வளவுதான் ; முத்தண்ணா பாயைப் பிரித்துப்போட்டுச் சீட்டைக் குலுக்கத் தொடங்கினால் அப்புறம் பிரளயமே வந்தாலும் தெரியாது. அன்று முழுவதும் முத்தண்ணா வீட்டில் தான் அவ்வளவு பேருக்கும் டிபன் காப்பி சப்ளை!

முத்தண்ணாவின் மனைவி, ”உங்களுக்கு என்ன வேலை, வீட்டிலே ஒரு படையைச் சேர்த்து வைத்துக் கொண்டு?” என்று எரிந்தெரிந்து விழுவாள். முத்தண்ணா அவ்வப்போது ஆட்டத்திலிருந்து நழுவிச் சமையலறைப் பக்கம் போய் மனைவியைச் சமாதானப்படுத்திவிட்டு வந்து உட்காருவார்.

முத்தண்ணாவின் குழந்தைகளுக்கும் அன்றெல்லாம் ஓயாமல் வேலை இருந்து கொண்டிருக்கும்.

“கடைக்குப் போய்ச் சீவல் வாங்கிண்டு வாங்கடா கூஜாவிலே தண்ணி கொண்டு வாங்கடா!” என்று அவர்களை ஏதாவது ஏவிக்கொண்டேயிருப்பார்.

பையன்களும் உற்சாகமாக ஓடிப் போய் வந்து கொண் டிருப்பார்கள். காரணம், ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிட அவர்களுக்குக் காசு கிடைக்கும் !

சீட்டாட்டத்தில் அப்பாவின் லாப நஷ்டங்களை யெல்லாம் குழந்தைகள் அவ்வப்போது கவனித்து அம்மாவுக்கு அஞ்சல் செய்து கொண்டிருப்பார்கள்.

கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்ற கீதை வாக்கியத்தைக் காரியத்தில் கடைப்பிடிப்பவர் முத்தண்ணா. சீட்டாட வேண்டியது அவருடைய கடமை. பலனைப்பற்றி அவர் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஆட ஆடப் பணம் போய்க்கொண்டேயிருக்கும் அவருக்கு. ஆனால் எவ்வளவு பணம் போனாலும் சளைக்கமாட்டார் அவர்.

ரம்மியில் விட்டதை மூணு சீட்டில் பிடிக்கப் பார்ப்பார். மூணு சீட்டில் விட்டதை ரம்மியில் பிடிக்கப் பார்ப்பார். சீட்டாட்டத்தின் போது அவருக்குள்ள கவலையெல்லாம் கையிலுள்ள பணம் தீர்ந்து போய்விட்டால் அடுத்தாற் போல் சீட்டாடுவதற்கு என்ன செய்வது என்பதுதான்.

சீட்டாட்டத்தில் நேர்மையையும் ஒழுங்கையும் கடைப் பிடிப்பவர் அவர். ஒரு சமயம் அவரும் எதிர் வீட்டு நண்பர் மட்டும் உட்கார்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தனர். ஆட்டத்துக்கு இடையில் சற்று அவசரமாக எழுந்து வீட்டுக்குப் போனார். அவர் திரும்பி வரும்வரை சும்மா இருக்கப் பிடிக்காத முத்தண்ணா நண்பரின் சீட்டையும் தாமே எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். எதிர் வீட்டுக்காரர் திரும்பி வந்ததும், ”இந்தாங்க சார். உங்க ஆட்டத்தையும் நானே ஆடினேன். அதில் எனக்கு இரண்டரை ரூபாய் நஷ்டம். உமக்கு இரண்டரை ரூபாய் லாபம்” என்று சொல்லிக் காசை எண்ணிக் கொடுத்தார்.

முத்தண்ணாவிடம் இன்னொரு நல்ல குணமும் உண்டு.

“சார், நாற்பது ரூபா இருந்தா கொடுங்க நாளைக்குச் சாயந்தரம் ஆறு மணிக்கெல்லாம் திருப்பிக் கொடுத்துறேன்” என்று தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு போவார். ஆட்டத்தில் நஷ்டம் வந்தாலும் லாபம் வந்தாலும் மறுநாள் மாலை ஆறு மணிக்குத் தலையை அடகு வைத்தாவது கடனைத் திருப்பிக் கொண்டு போய்க் கொடுத்து விடுவார்.

சம்பாதிப்பதையெல்லாம் சீட்டில் தொலைப்பதே முத்தண்ணாவின் வழக்கமாகிவிடவே, அவருடைய நண்பர்கள் பலர் அவரோடு சீட்டாடுவதையே நிறுத்திக்கொண்டார்கள். “முத்தண்ணா! உமக்கு வயசாச்சு; உம்முடைய பெண் கலியாணத்துக்குக் காத்துக்கொண்டிருக்கிறாள். அதைப்பற்றி உமக்குக் கொஞ்சமாவது கவலை இருக்கிறதா? இந்த வழக்கத்தையே இனி விட்டுவிடவேண்டும். எப்போதாவது கலியாணம் போன்ற விசேஷ நாட்களில் மட்டும் ஆடுங்கள். போதும்” என்று அவரிடம் சத்தியம் வாங்கிக் கொண்டனர்.

சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட முத்தண்ணா சரி என்று ஒப்புக் கொண்டார்.

அவ்வளவுதான். வெகு சீக்கிரத்திலேயே அவர் தம் பெண்ணுக்கு ஒரு வரனைப் பார்த்துக் கலியாணத்திற்கு நிச்சயம் செய்துவிட்டார். “எல்லோரும் முத்தண்ணாவுக்குப் புத்தி வந்து விட்டது” என்று சொல்லிச் சந்தோஷப்பட்டார்கள்.

ஆனால் முத்தண்ணா தம் மகளின் திருமணத்தை அவ்வளவு சீக்கிரம் முடித்தது எதற்குத் தெரியுமா? இனிமேல் நிம்மதியாய்ச் சீட்டாடிக்கொண்டிருக்கலாம் அல்லவா?

– கேரக்டர், 9வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *