மூக்கணாங்கயிறு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 7,033 
 

ஜான்ஸிப்ரியா கல்யாணத்திற்கு, ஊர் அல்லோகலப்பட்டதோ இல்லையோ, ஒரு வீடு தடபுடலாக களைகட்டி இருந்தது. நேற்று வைத்த சாம்பாரை கொதிக்க வைத்து, சுண்டல் என்ற பெயரில் பரிமாறும், ஜான்ஸிமாவின் வீடடுச் சமையலறை கூட ‘நாங்க என்ன மட்டமா’ என்பதுபோல, புகையைக் கசிந்து கொண்டிருந்தது. ஆனால் உதிர்ந்துபோன முடியைத் தவிர, ஒட்டிக் கொண்டிருக்கும் முடியுடன் சவரிமுடியைச் சேர்த்துக் கட்டி, கூம்புக் கொண்டை யபோட்டிருந்த ஜான்சி, பக்கத்து வீட்டுத் திண்ணையில், அளந்து கொண்டிருந்தாள். அவளுடைய சகோதரி முன்னாராணி, ‘அப்டிச் சொல்லுக்கா’ என்று அவ்வப்போது தூபமிட்டு, பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தாள்.

‘அக்கா உன்னை மாதிரியே, எம் பையனுக்கும், கௌரவமான குடும்பத்திலே, பொண்ணெடுக்கப் போறேன்’

‘என்னடி சொல்றே, யாருடி அந்தப்பொண்ணு?’

‘திருப்போத்தியூர்லெ இருக்கால கொடியரசி, அவ பொண்ணத்தாக்கா, பேசி முடிக்கப்போறோம்”

‘நல்ல குடும்பந்தாண்டி, சொத்துப் பத்தெல்லாம் இருக்கு, ஒரே ஒரு கொறைதான், மூளை கொஞ்சம் கம்மிடி, கேள்விப்பட்டியா..?

’மூளை இருந்தா நமக்குத்தானக்கா பிரச்சினை, இதாக்கா நம்ம ஆட்டி வக்கிறதுக்கு சரியாயிருக்கும்’

‘ஏண்டி, இப்புடி மூளைய வித்து சொத்து வாங்குனவங்க, இன்னோரு மூளைய வாங்கி, ஏதாவது பண்ணமாட்டாங்களா என்ன?’ என்ற ஜான்ஸி, ‘வாடி போகலாம்’ என்று வீடு நோக்கி நடந்தார்கள்.

வீட்டுக்கு உள்ளே ஜமக்காளத்தை விரித்து, உட்கார்ந்தவர்களுக்கு, காபி கொண்டு வந்தாள் மருமகள் செல்லி. இரவு ஏழு மணி இருக்கும், பணி முடித்து திரும்பிய உத்தம்பாண்டியன், ‘என்ன சாவகாசமா பேசிட்டு இருக்கீங்க. வேலை இல்லையா?’ என்றான்.

‘எல்லாத்தையும் பாத்துக்கிறேன்னு மருமக்க சொல்லிட்டாங்கங்க, அதான் உட்காந்திருக்கோம்’ என்றாள் ஜான்ஸி. மனைவியிடமிருந்து வந்த பதிலை, காதில் வாங்காமல் பாத்ரூமிற்குள் நுழைந்த உத்தம்பாண்டியன், சிறிது நேரத்தில் வெளியே வந்து சாப்பாட்டில் உட்கார்ந்தான். உள்ளேயிருந்நது சோற்றுச் சட்டியுடன் வந்த ப்ரிய தர்ஷிணி, சாப்பாட்டைப் பரிமாறி பருப்பை ஊற்றினாள். சிறிது நேரத்தில் பின்னால் வந்த செல்லி, சாம்பாரை ஊற்றினாள். உட்கார்ந்த வேகத்திலேயே, சாம்பாருடன் ஒரு வாய குழைத்து உண்ட உத்தம பாண்டியன், முகத்தைச் சுளித்துக் கொண்டே, கையை கழுவி விட்டு, படுக்கையறைக்குச் சென்றான்.

சாப்பாட்டை சரியாக எடுத்துக் கொள்ளாத கணவனை, அவனது அறையில் சென்று சந்தித்தாள் ஜான்ஸி.

‘என்னங்க சரியா சாப்டலை, வயிறு மப்பா இருக்காட..?’

‘நல்லாத்தான் இருக்கேன்’

‘பெறகு ஏன் சரியாச் சாப்டலை’

‘முதல்ல பருப்புக்கு நெய்போட்டது ப்ரியா. பெறகு சாம்பாரு ஊத்தம்போதும் நெய்மாதிரி சோத்துலெ விழுந்தது. நிமிந்து பாத்தா ரெண்டாவது மருமக மூக்குலெ சளி இருக்கு, இது கொஞ்சம் அருவருப்பா இருந்த்தாலே, எழுந்துட்டேன்’.

‘இந்த ரெண்டு பேருக்குமே மூக்கு சுரங்ப்பாதை மாதிரித்தா இருக்கு. அதுக என்ன செய்யும், ஒரு ஆளா மூக்கைச் சுத்தப்படுத்த முடியலெ போல’

‘நீயே சாபபாடு போட்ருக்கலாம்ல’

‘ஏங்க அதுங்க ஆசைப்படுங்க, எப்புடி வேண்டான்னா சொல்ல முடியும்? பாவம் அந்தப்புள்ளெங்க மனசு கஷ்டப்படுமுல்ல சாப்பாட்டைப் போட்ருங்கடின்னு சொன்னேன். இந்தப்பிரச்சனையை நீங்க நெனைச்சா முடிச்சு வெக்கலாமுங்க..!’

‘என்ன சொல்ல வர்றே..?’

‘நீங்களே அதுக மூக்கைச் சிந்தி சுத்தப்படுத்துனா, மருமக்களுக்கும் உங்களைப் புடிச்சுப் போகும். அந்தப் பொண்ணுக மூஞ்சியும் களையாயிடுமுங்க’

‘ஒங்கிட்டெப் போயி சொல்றேன் பாரு’ என்ற அவன், ‘தூங்கித்தொலை’ என்றான் நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் உத்தம்பாண்டியன் துறையைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், வீட்டுக்கு வந்தனர். அப்போது சங்க மாநாட்டு ஏற்பாடுகள் குறித்துப் பேசினார்கள். அதில் ஒருவர், ‘இந்த மாநாட்டுலெ உங்களுக்கு சிறப்பு பட்டம் ஒண்ணு கொடுக்கலாம்னு, நம்ம நிர்வாகிங்க ஆசைப்படுறாங்க’ என்றான்.

‘அதெல்லாம் வேண்டாம்’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடிக்கும் போது அங்கு வந்த மனைவி, காபியைக் கொடுத்துவிட்டு, ‘அவரு அப்டித்தான் சொல்லுவாரு, நீங்க பட்டம் கொடுக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க’ என்றாள். ‘ஓகேமா’ என்று சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்ட சங்க நிர்வாகிகள், பட்டப் பெயர்களைப் பட்டியலிட்டனர். எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்ட ஜான்சி, ‘இதெல்லாம் சரிவராது, அவரு செய்ற வேலைக்கேத்த மாதிரி, பட்டப்பேரை ஒண்ணு சொல்லட்டுமா’ என்றாள். ‘சொல்லுங்க’ என்று கூறி அநேக குரல்கள், அவள் முகத்தைப்பார்த்தனர். ‘நான் செலக்ட் பண்ண பேரு ஒங்களுக்கும் புடிக்குமுன்னு நெனைக்கிறேன். அழுக்கு நீக்கியார்னு கொடுத்திடலாம்’ என்றாள்.

‘இந்தப்பேரு ஒரு மாதிரியா இல்ல.. வேற எதாவதுவ பேரு இருக்கா..?’

‘இதையே கொடுத்திடுங்க, ஏத்துக்குவாரு..’

‘சரிங்கம்மா, ஏற்பாடு பண்ணிடுறோம்” என்று புறப்பட்டுச் சென்றனர். நாட்கள் நெருங்கியது. சமூக வலைத்தளங்களில், ரீல்ஸ் மூலம் கலாய்த்து வரும் அரசியல் தலைவரை, சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்து, நோட்டீஸ் அச்சுக்கு கொடுக்கப்பட்டது. அச்சான நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பெற்றன.

மாநாடு குறிப்பிட்ட நாளில் கூடியது. ஜான்ஸி உறவினர் பட்டாளங்களுடன் மாநாட்டில் பங்கேற்றார். பட்டம்தான் என்ன பட்டம் என அறிவிக்காததால், எதிர்பார்ப்பு. பட்டத்தை வழங்கிய சிறப்பு விருந்தினர் மைக்கைப் பிடித்தார். சம்பிரதாயப்படி பேச்சைத் தொடங்கியவர், பட்டம் பெற்ற உத்தம பாண்டியனின் பெருமைகளை அடுக்கினார். நல்ல குடும்பத் தலைவர்தான் தலைமைப் பொறுப்பை வேகிக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்தான் இவர். அவருக்கு அழுக்கு நக்கியார் என்ற பட்டத்தை வழங்குவதில் பெருமையடைகிறேன். சங்கத்தில் இருந்த முறைளைக் களைந்த இவர், குடும்பத்திலும் அதே அக்கறையைச் செலுத்தியுள்ளார். என்று கூறியபோது, பட்டம் பெற்றவர் முதல் பார்வையாளர்வரை அதிர்ச்சி.

அப்போது சுயநினைவுக்கு வந்த உத்தம்பாண்டியன், பிரபலங்களுக்கு வழங்கிய அழைப்பிதழை வரிக்கு வரி வாசித்தார். அழுக்கு நீக்கியார் என அச்சிட வேண்டிய இடத்தில் அழுக்கு நக்கியார் என தவறாக அச்சிடப்பட்டிருந்தது. இதனை திருத்துவதற்கு அவகாசம் இல்லாததால், எதுவும் செய்யவில்லை. வீட்டுக்குச் சென்ற உத்தம்பாண்டியன், ‘வேறை பேரே கெடைக்கலையா’ என்று தொடங்கி மனைவியை ஒரு பிடி பிடித்தான். அப்போது இதனை பூசி மெழுக நினைத்த ஜான்ஸி, ‘இதுக்குப் போயி கோச்சுக்குறீங்க’, ஏந்தம்பி கூட பட்டம் வாங்கிருக்கானாம். அந்தப் பேரு கவிக்கொண்டையாமுல்ல’ என்றாள்.

‘அடியே கவிக்கொண்டையில்லடி, கவிக் கொண்டல். இது ஒரு கவிஞருக்கு கொடுத்த பட்டம், அறிவாளிங்கல்லாம் சேந்து கொடுத்தது.அவருக்கு கொடுத்த பட்டத்தை எல்லோரும் ஏத்துக்கிட்டாங்க, உங்க அண்ணனுக்கு கொடுத்ததை யாரு ஏத்துக்கிட்டா’

‘அதெப்படி ஏந்தம்பிக்கும கொடுத்திருப்பாங்க’

’ஒன்னை மாதிரி சில அரைவேக்காடுங்க சேந்து கொடுத்திருக்கும்’

‘அப்புடியா, அவனுக்குப் போட்டியாத்தான் உங்களுக்கும் இதை ஏற்பாடு செஞ்சேன். இதை முன்னாலே சொல்லிருந்தா, நாங்கூட இந்தப்பட்டத்துக்கு ஆசைப்பட்ருக்க மாட்டேனே..’

‘சரி சரி, கொஞ்ச நேரம் தூங்கு, மூளையாவது பத்தரமா இருக்கும்’ என்று அவள் தலையில் கோதியபடியே, தலையணையில் முகத்தைப் புதைத்தான். ‘அவங்க மூளை ஏதோ பெருசா கண்டுபுடிச்ச மாதிரித்தான். பிரிண்டிங் மிஸ்டேக்கேயே கண்டுபுடிக்க முடியலை, பேச்சைப்பாரு’ என்ற முகத்தைச் சுளித்துக் கொண்டு இவள் ஒரு பக்கமாக தலையை வைத்து சாய்ந்தாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “மூக்கணாங்கயிறு

  1. I am also an ex V.A.O. The general secretary of our association, will also focus on collection. A similar incident ,took place 10 years ago. Thanks publish this story. Lot of thanks our sirukathaigal.com

    A.Paranthamon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *