மீன் வாங்கலையோ!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 21, 2023
பார்வையிட்டோர்: 3,282 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

[புதிதாகத் திருமணமானவர்களும் குடும்பக்காரர்களும் மட்டும் இதைப் படிக்கவும்.]

நிலைமை மிகவும் மோசமாகிப் பைத்தியம் பிடிக்க வேண்டிய தருணம்-சிங்கப்பூர் அரசாங்கம் சாதித்து வரும் ஒரு மகத்தான காரியம் எனக்குச் சரியான சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றிக் கரை சேர்த்தது! தப்பிப் பிழைத்தேன்!

‘ஐஸில்’ வைத்து விறைத்துப்போன மீன் விவகாரம் தான். சொல்லும்போது சாதாரணமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் அதில் அகப்பட்டுக்கொண்டு நான் பட்ட அவதியிருக்கிறதே…அதை இப்போது நினைத்தாலே நெஞ்சு ‘பகீ’ரென்கிறது.

சரி, கதையைக் கேளுங்கள்:

சிங்கப்பூரில் குடும்பக்காரர்களாக வாழ்கிறவர்கள் எல்லாருக்கும் நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.

பிரசவ ஆஸ்பத்திரி சினிமாத் தியேட்டர், கோயில் கள், புடவைக் கடைகள்! இவையனைத்தும் நீங்கலாக இன்னொரு முக்கியமான இடமும் உண்டு. அதுதான் காய்கறிச் சந்தையான ‘மார்க்கெட்’!

மார்க்கெட்டுக்குப் போய் வருவது ஓர் அபூர்வக் சுலை! அங்கு பொருட்களை விலை பேசி வாங்குவது ஒரு விசித்திரமான விந்தை!

அழுகாத காய்களாகப் பொறுக்கி எடுப்பதற்குக் கைகளுக்குப் பழக்கம் வேண்டும். பூச்சியில்லாத கிழங்குகளைக் கண்டுகொள்வதற்குக் கண்கள் பக்குவம் பெற வேண்டும்!

என்ன பழக்கமோ, என்ன பக்குவமோ…… போங்கள்! அந்தப் பழக்கம், பக்குவம் எல்லாம் பயன் படாமல் போகும் சமயங்கள் நேர்வதும் உண்டு!

நசுங்கியிருக்கிறதா, பூச்சியிருக்கிறதா, கல்லைப் போல் இருக்கிறதா, பழசாயிருக்கிறதா என்றெல்லாம் பொறுக்கித் திருப்பித் திருப்பிப் பார்த்துப் பார்த்து வாங்கி வரும் காய்கறி கிழங்குகளை வீட்டில் மனைவி நறுக்கும்போது பார்த்தால் அவை நசுங்கியிருப்பது தெரியும்; பழசாகிக் கெட்டுப்போயிருப்பது புரியும்; கன்னிப்போய்க் கல்லாயிருப்பதும் தெரிய வரும்!

“ம்…பணத்தை இப்படிப் பாழாக்கியிருக்கிறீர் களே” என்று வீட்டரசி அப்போது சீறி எழுந்தால், அதைத் தவறென்று எப்படிச் சொல்வது?

அம்மாதிரிக் கட்டங்களில் கணவன்மாருக்கு வெளியில் எங்காவது அவசரமான காரியம் இருப்பது சகஜம்!

நல்ல காய்கறிகளைப் பொறுக்கி எடுப்பது போகட் டும்! அவற்றை நியாயமான விலைக்குப் பேரம் பேசி வாங்குவதில் உள்ள சிரமங்கள் சிக்கல்கள் கொஞ்சமா நஞ்சமா?

உதாரணமாக, என்னுடைய ‘மார்க்கெட் அனுபவம்’ எப்படியென்று பாருங்கள்:

அன்றைக்கு ஒருநாள் நான் ஆறு முருங்கைக் காய் களை தொண்ணூறு காசுக்கு வாங்கி வந்தேன். ஒரு காய் பதினைந்து காசு, ஈப்போவிலிருந்து வந்தகாயாம். சதை சதையாயிருக்குமாம்! கடைகாரர் சொன்னார்.

நறுக்கிப் பார்க்கும்போது சதை சதையாய் இல்லை, விதை விதையாய்த்தானிருந்தது. முற்றிப்போன முருங்கைக்காய்கள் அவ்வளவுதான்!

விலை கொடுத்ததிலும் மூன்று மடங்கு கூடுதலாய்க் கொடுத்து ஏமாந்திருந்தேன்.

எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் ஓர் அம்மாள் ஐந்து காசுக்கு ஒன்று வீதம் வாங்கி வந்திருந்த முருங்கைக் காய்களை என் மனைவியிடம் காண்பித்து என் ஏமாளித்தனத்தை வெளிச்சமாக்கி விட்டார்கள்!

அந்த அம்மாள் வாங்கியதுதான் உண்மையான ஈப்போ முருங்கைக்காயாம்!

‘பொய்யான ஈப்போ’ ஒன்று இருப்பது எனக்கு முதலில் தெரிந்திருந்தால் ஏமாறுவேனா?

இப்படி நான் ஏமாறுவதும், எதிர்வீட்டு அம்மாள் அதை என் மனைவிக்குச் சுட்டிக்காட்டுவதும் வாடிக்கையான சங்கதி!

‘இப்படியும் உலகத்திலே ஏமாறுவாங்களா? அஞ்சு காசு காய்க்குப் பதினைஞ்சு காசு கொடுக்கிற அநியாயம் உங்களுக்கே நல்லாயிருக்கா? அப்படி வாங்கின காய்கள் குழம்புக்குப் பயன்படவும் இல்லையே? ஒவ்வொரு காரியத்திலும் இப்படிச் சிக்கனம் தெரியாமலும் கெட்டிக்காரத்தனம் இல்லாமலும் வீண் செலவு செய்தால் மிச்சம் என்ன இருக்கும்? கொஞ்சம்கூட அக்கறை வேண்டாமா?’ என்றெல்லாம் என் மனைவி ‘பாடத்’ தொடங்கினாள் தொடங்கினாள் வழக்கம்போல்! எனக்கும் வழக்கமான வெளியில் ஓர் அவசர காரியம் முளைக்கவே மெள்ள நழுவி வெளியேறித் தப்பினேன்!

பிரச்சினை இதோடு தீர்ந்து போகுமா, என்ன? பிரச்சினையை உண்டாக்கி வைக்கும் இந்த எதிர்வீட்டு அம்மாளை நினைக்க நினைக்க ஆத்திரம் குமுறிக்கொண்டு, வந்தது.

எப்பொழுது பார்த்தாலும் இந்த அம்மாளால் தான் என் ஏமாளித்தனம் என் மனைவிக்குப் புரிந்து தொலைகிறது!

‘அமெரிக்காவிலிருந்து இப்போது அவரைக்காய் வருவதில்லையாம்! இத்தாலியில் கத்தரிக்காய் ஏற்றுமதியை நிறுத்திவிட்டார்களாம்! ஈராக்கிலிருந்து வாழைக்காய் அனுப்பவில்லையாம்! அதனால் எல்லாக் காய்களுமே விலை ஏறிப்போச்சு’ என்று நான் புளுகி வைப்பதையெல்லாம் வெட்டவெளிச்சமாக்கி என்னைச் சந்தியில் நிறுத்துவதால் இந்த அம்மாளுக்கு என்ன தான் கிடைக்கிறதாம்!

வாயை அடக்க முதலில் இந்த மனுஷியின் வேண்டும். அடைத்துவிட்டால் அப்புறம் என் மனைவி வாய் திறக்க வாய்ப்பு இருக்காது. ஆகவே அதற்கு என்ன செய்யலாம் என்று முழுசாக ஒருநாள் பூராவும் சிந்தித்து ஒரு வழி கண்டு பிடித்தேன்.

ஆனால், அந்த வழி இப்படி ‘அபாயகரமான’ வழியாக மாறும் என்று அப்போது எனக்குத் தோன்றவில்லை!

மார்க்கெட்டில் அன்று ஒரு ‘வஞ்சனை மீன்’ வாங்கினேன். எடை மூன்று கட்டியிருக்கும். விலை இரண்டரை வெள்ளி.

மீன் வாங்கிக் கூடைக்குள் வைக்கும் சமயம் எதிர் வீட்டு அம்மாள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களை எதிர்பார்த்துக்கொண்டு தானே நானும் நிற்கிறேன்!

“பெரிய மீனாயிருக்கே இரண்டு வெள்ளிக்கு மேலே சொல்லுவானே? நீங்க எவ்வளவுக்கு வாங்கினீங்க தம்பி?” என்று கேட்டார்கள். இப்படிக் கேட்க வேண்டும் என்பதுதான் நான் எதிர்பார்த்தது!

“அதை ஏன் கேட்கிறீங்க அம்மா? கடைக்காரன் கிட்ட அரைமணி நேரமாப் பேரம் பேசித் தொண்டை கூட வறண்டு போச்சு போங்க! கடைசியிலே ஒரு வெள்ளிக்கு வாங்கினேன்’ மா!” வாய் கூசாமல் புளுகிக் கொண்டே மீனை கூடைக்குள்ளிருந்து வெளியே எடுத்து மீன் வியாபாரிமாதிரி நன்றாகத் தூக்கிப் பிடித்தேன், வேண்டுமென்றே!

‘ஆ’ வென்று வாயைத் திறந்து என்னையும் மீனையும் பார்த்தார்களே ஒரு பார்வை…!

முதல் ‘ரவுண்டி’ல் எதிர்வீட்டு அம்மாளுக்குச் சரியான அதிர்ச்சிதான் என்று மனத்துக்குள்ளேயே சிரித்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினேன்!

வீட்டில் என் மனைவி கறிகாய்க் கூடைக்குள் கை விட்டு அந்த மீனை எடுத்ததும் பாம்பை எடுத்தது போல் துள்ளிக் குதித்தாளே பார்க்கலாம்!

“வெள்ளிக்கிழமை மீனை வாங்கிட்டு வந்திருக்கிறீர்களே, யார் சமைக்கிறது! யார் சாப்பிடறது?”

திகைத்துத் திடுக்கிட்டுத் ‘திருதிரு’வென்று விழித்தேன். வெள்ளிக்கிழமை தோறும், “கொல்லாமை” போற்றுவது எங்கள் வீட்டு வழக்கம்!

அடுத்த கட்டமாக, பணம் பாழானதுபற்றி என் மனைவி வாய் திறப்பதற்குள் தப்பிவிட நினைத்து, ‘வெளியில் அவசர காரியம் என்று நான் கிளம்புவதற்கும் எதிர்வீட்டு அம்மாள் வாயெல்லாம் பல்லாக (அவ்வளவும் பொய்ப்பல்) வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது!

“விலை பேசத் தெரியாது. குறைச்சுக் கேட்கத் தெரியாதுன்னு தம்பியைப்பத்தி நீ பேசறதெல்லாம் தப்பும்மா! மூணு வெள்ளி மதிக்கிற மீனை ஒரு வெள்ளிக்கு வாங்குறதுக்கு எவ்வளவு சமர்த்து வேணும்?” என்று நீட்டி முழக்கினார்கள்!

என் மனைவி என்னை எரித்து விடுவதுபோல் நோக்க, நான் எதிர்வீட்டு அம்மாளைப்பரிதாபமாய்ப் பார்க்க, வெள்ளிக்கிழமை விவகாரம் புரியாமல் அந்த அம்மாள் எங்கள் இருவரையும் பார்த்து விழிக்க……‘மெய் சொல்லல் நல்லதப்பா!’ என்று சீர்காழியின் குரல் வானொலிப் பெட்டியில் ஒலித்தது.

மெய் சொல்லத் தவறியது எவ்வளவு முட்டாள் தனம் என்பது மறுநாளே தெரிந்தது.

‘சனியன் பிடித்தது’ என்கிறார்களே, அது எப்படிப் பிடிக்கும் என்று அன்றுதான் அனுபவத்தில் கண்டேன். அதுவும் சனிக்கிழமை தான்!

விடிந்ததும் விடியாததுமாகவே எதிர்வீட்டு அம்மாள் தரிசனம் தந்தார்கள். ‘தம்பி, உங்கமாதிரிச் சாமர்த்தியமாக விலை குறைச்சுப் பேசி மீன் வாங்க என்னால்கூட முடியாது. நேத்து நீங்க வாங்கினமாதிரி எனக்கு ஒரு மீன் வாங்கித் தர்றீங்களா?’ என்று கேட்டுக்கொண்டே ஒரு வெள்ளியை என்னிடம் நீட்டினார்கள்!

அதிர்ச்சியோ அதிர்ச்சி; இரண்டாம் ரவுண்டில் எனக்கு அதிர்ச்சியோடு போகவில்லை! ஒன்றரை வெள்ளியும் இழப்பு! ஆம். இரண்டரை வெள்ளிக்கு ஒரு மீன் வாங்கி வந்து அதை ஒரு வெள்ளிக்கு வாங்கியதாகச் சொல்லித் தொலைத்தேன்.

‘கெட்டிக்காரத் தம்பி’ என்று புகழ்ந்தார்கள். புகழமாட்டார்களா, பின்னே?

அன்றோடு விட்டார்களா என்றால் அதுதானில்லை. சரியான மீன் தின்னிக்கூட்டம் போலும். இரண்டே நாட்கள் சென்றதும் மறுபடியும் மீன் வாங்கிவரக் கோரினார்கள். கோரிக்கையை மறுக்கவும் முடியவில்லை. மறுத்தால் என் ‘கெட்டிக்காரத்தனம்’ என்ன ஆவது? பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது! தப்ப முடியாத ஆபத்து; சரியான விபத்து!

வாரத்துக்கும் மூன்று நாள் அவர்களுக்கு மீன் வாங்கி அழுவது எனக்கு வாடிக்கையாகிவிட்டது.

ஒவ்வொரு தடவையும் குறைந்தது ஒரு வெள்ளியாகிலும் எனக்கு இழப்பு ஏற்பட்டது.

வாரங்கள் கிடுகிடுவென்று ஓடின.

வாரம் மூன்று வெள்ளி இழப்பு என்றால் மாதம் பன்னிரண்டு, வெள்ளி ஆகிறது. வருசத்துக்கு அடேயப்பா,சுமார் நூற்றைம்பது வெள்ளி போகுமே?

பதினைந்து காசு தபால் தலை ஒட்டிப் பத்திரிகை களுக்குக் கதை அனுப்புவதையே வெட்டிச் செலவு என்று முணுமுணுப்பவள் என் மனைவி. எதிர்வீட்டு அம்மாளுக்கு நான் கெட்டிக்காரத்தனமாய் மீன் வாங்கிக்கொடுத்து நஷ்டப்பட்டு வரும் கதை தெரிந்தால்…… சரிதான்.

அழுகிக் கெட்டுப்போன மீனாகப் பொறுக்கி எடுத்துச் சில சில தடவைகள் வாங்கி வந்து கொடுத்தேன். அதனாலாவது என்னை விட்டுவிடுவார்கள் என்று. ஊகூம்; அதிலும் தோல்விதான் எனக்கு!

“பரவாயில்லை தம்பி, நான்கூட சமயத்திலே இப்படி ஏமாந்து போறது உண்டு” என்று வேதாந்தம் பேசிவிட்டார்கள்!

எனக்கு இழப்பு அதிகரித்துக்கொண்டே போயிற்று.

முதலைப் பிடியாவது, உடும்புப் பிடியாவது! நான் அகப்பட்டுக்கொண்டு விழி பிதுங்கும் இந்த ‘மீன் பிடி’க்கு முன் அவையெல்லாம் எம்மாத்திரம்?

அல்லும் பகலும் இதே சிந்தனை. இதே நினைப்பு. என்ன செய்வதென்று தோன்றவில்லை. எப்படித் தப்புவதென்று புரியவில்லை. தவித்தேன். தத்தளித் தேன். குழம்பினேன். குமுறினேன். இழப்புக் கணக்கை ஈடுசெய்ய வழியில்லாமல் திணறினேன். இதெல்லாம் என் மனைவிக்குத் தெரிந்துவிடாமலிருக்க வேண்டுமென்பதற்காகப் படாத பாடுபட்டேன்.

அவதியோ அவதி! அவஸ்தையோ அவஸ்தை!

ரத்தம் சூடேறி, மூளை உருகி, புத்தி தடுமாறிப் பைத்தியம்தான் பிடிக்கப்போகிறதோ என்று முடிவு செய்யவேண்டிய நிலைமை; எங்காவது ஓடிப்போய் விடலாமா என்று சிந்தித்த சமயம்-

‘தம்பி, தம்பி’ என்று கூப்பிட்டுக்கொண்டே வந்தார்கள் எதிர்வீட்டு அம்மாள்.

‘நேற்றுத்தானே மீன் வாங்கி அழுதேன். அதற்குள் இன்றைக்கு வேறா?’ என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே ‘என்னங்க அம்மா?’ என்றேன்.

‘எங்களுக்கு அடுக்கு மாடி வீடு (வீடமைப்பு அபி விருத்தி போர்டு வீடு) கிடைச்சிருக்கு தம்பி! குயின்ஸ் டவுன் பக்கமாய். அடுத்தவாரம் குடிபோகப் போகிறோம்’ என்றார்கள்.

ஆகா! ஆனந்த சுதந்திரம் அடையப்போகிறேனே! இன்பத் தேன்வந்து பாயுதே காதினிலே! இது கனவா நனவா என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். ‘சனி ஒழிந்தது’ என்று குதிபோட்டது மனம். ‘அப்படியா?’ என்று ஏதோ கேட்டு வைத்தேன்.

‘ஆமா தம்பி! ஆனா இங்கேமாதிரி அங்கே மீன் மலிவான விலைக்குக் கிடைக்குமோ, என்னமோ?’ என்று ஏக்கத்தோடு கேட்டார்கள்.

‘கிடைக்கும், கிடைக்கும்’ என்று என் வாய் சொன்னபோது மனம் பின்வருமாறு சொல்லிக் கொண்டது,

‘என் மாதிரிச் சாமர்த்தியமாப் பேரம் பேசிமூன்று வெள்ளி மீனை ஒரு வெள்ளிக்கு வாங்கி வந்து தருகிற ‘கெட்டிக்காரத் தம்பி’ அங்கு நிச்சயமாக அகப்பட மாட்டான்’.

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

1 thought on “மீன் வாங்கலையோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *