இன்று…
மாரியப்பன் என்னைப் பார்க்க வந்திருக்கும் தகவல் என்னிடம் சொல்லப்பட்டது. அவர் எதற்காக வந்திருக்கக்கூடும்? ஒரு எஸ்.எம்.எஸ்ஸின் வருகைபோல மூளைக்குள் திடீர் வெளிச்சம். அடக் கடவுளே… அந்த விஷயத்தை அப்போதே முடித்திருக்கலாமே… நான் பெரிதும் கலவரம் அடைந்தேன்.
செய்தியைச் சொன்ன ஊழியன் ரவி கூட எனது அவஸ்தையை உள்ளூர ரசிப்பதாகவே எனக்குப்பட்டது. அவன் ஓர் ஆறுதல் புன்னகை சிந்தினாலும்கூட, அதற்குப் பின்னால் ‘நல்லா மாட்டிக்கிட்டீங்களா?’ என்ற வார்த்தைகள் ஒளிந்திருப்பதாகவே தோன்றின. ”வரச் சொல்லுங்க…” என்றபோது எனது குரலின் நடுக்கத்தை நானே உணர்ந்தேன்.
பதற்றத்தைத் தணிக்கும்விதமாக, நான் எனது சுழல் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டேன். மாரியப்பனை எதிர்கொள்ள என்னை அந்தக் குறுகிய இடைவெளியில் தயார்செய்துகொள்ள முயன்றேன். குரலின் நடுக்கத்தை அவர் உணராத மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும்; அவருக்கான வார்த்தைகளைச் சேகரிக்க வேண்டும்.
‘சார்… அண்ணாச்சி… என்ன வராதவுங்க வந்திருக்கீங்க… என்ன விஷயம்..? என் பெயர் இளங்கோ… உங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். ஒரு போன் செஞ்சிருக்கலாமே… என்ன சாப்பிடுறீங்க?’- வார்த்தைகளின் வரிசை எனக்குத் திருப்தி தரவில்லை.
நான் இந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் வங்கி அதிகாரி. இந்த ஒரு மாதத்தில் மாரியப்பனை நேரில் பார்த்ததில்லை. ஆனால், சகமனிதர்கள், பத்திரிகைச் செய்திகள், சுவரொட்டிகள், சுற்றுப்புறக் காட்சிகள் மூலமாக மாரியப்பனைச் சந்தித்திருக்கிறேன்.
சுவரொட்டிகள்…
நான் இந்த ஊருக்கு வந்த இரண்டாவது நாளில் வால்போஸ்டர்களில் நிறைய மாரி யப்பன்களைச் சந்தித்தேன். நகரின் முக்கியப் பாதைகளிலும், சந்திப்புகளிலும் நீக்கமற மாரியப்பன் அவர்கள்!
‘… எங்கள் மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் குழந்தையை ஆசீர்வதிக்க வருகை தரும் அண்ணன் மாரியப்பன் அவர்களை இரு கரம் கூப்பி வணங்கி வரவேற்கிறோம்.’
வேட்டி – சட்டையில்; ஜீன்ஸ் – சட்டையில்; குர்தாவில்… என விதவிதமான அலங்காரங்களில் மாரியப்பன். பேனாவும் மையுமாக மாரியப்பன் கன்னத்தில் கை பதித்துக்கொண்டு, எதையோ ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டு மாரியப்பன். கொஞ்சம் விட்டால் பட்ஜெட்டைப் பற்றிக்கூட கருத்து சொல்வார் போல் இருந்தது.
பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை ஏதுமற்ற இது மாதிரி அநேக முகங்களை நான் பார்த்திருக்கிறேன். முதல் கண அருவருப்பையும் எரிச்சலையும் மீறிக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் சுயநலத்தையும், பேராசையையும், பாதகத்தனத்தையும் உணர லாம். ஒட்டுமொத்தமாக அசட்டுத்தனம். மொத்தத்தில், மக்களுக்குச் சேவை செய்ய ஆயத்தமான ஒரு முகம். சுவரொட்டியின் இறுதிப் பகுதியில் அண்ணன் மாரியப்பனின் வருகையை விரும்பும் அவரையத்த, ஆனால், சற்றே வீரியம் குறைந்த முகங்கள்.
சட்டென அந்த இடத்தைவிட்டு நீங்கினேன்.
உரிமையாளர்…
நான் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் அன்றிரவே மாரியப்பனைப் பற்றிப் பேசினார்.
”இளங்கோ சார், அன்னிக்கு ‘சாராயம் காய்ச்சத் தெரிந்தவர்கள் தேவை’னு ஒரு விளம்பரத்தை அரசாங் கம் கொடுத்திருந்தா, வெட்டியாத் திரிஞ்சுட்டு இருந்த இந்த மாரியப் பன் அப்ளை பண்ணியிருப்பான். இப்படி ஒரு திறமையை வெச்சுக்கிட்டு அவனால சும்மா இருக்க முடியல. சாராயம் என்னவோநல்லாத் தான் இருந்துச்சுனு குடிச்சவங்க சொன்னாங்க. ஆனா, கவர்மென்ட் அத ‘கள்ளச் சாராயம்’னு சொல்லிச்சு. எஸ்.ஐ. ஒருத்தரு… அவன அடி அடினு அடிச்சு, பானையைத் தலைல வெச்சு, இதே தெரு வழியாக் கூட்டிட்டுப் போனாரு. ‘சொல்லுடா, மாரி’ம்பாரு… கூட நாலு அடி. ‘இனிமே, நான் சாராயம் காய்ச்ச மாட்டேன்… இனிமே, நான்… ஐயோ, அடிக்காதீங்க சார்’னு அவன் கத்திக்கிட்டே போனது இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது, முப்பது வருஷம் ஆன பிறகும்கூட.”
ஊரில் நான் சிறுவனாக இருந்தபோது ஏறக் குறைய இதே நிலையில் ஒருவனை அடித்து இழுத்துச் சென்றார்கள். அந்தக் கணமே ‘யாராவது அடித்தால் போலீஸில் சொல்லலாம். போலீஸே அடித்தால் யாரிடம் சொல்வது?’ என்ற தத்துவத்துக்கு அதிபதியானேன். அடுத்த நாளில் நாங்கள் விளையாடிய போலீஸ் – திருடன் விளையாட்டில் நான்தான் போலீஸ்.
பழைய செய்தித்தாள்…
வங்கியில் பழைய ரிக்கார்ட் ஒன்றைத் தேட வேண்டியிருந்தது. துருப்பிடித்த சைக்கிளும், கைவிடப்பட்ட இருக்கைகளும், அதிகபட்சம் எலிகளும் குறைந்தபட்சம் பாம்புகளும், நிறைந்த அறை ஒன்றில் உள்ள பீரோவில் தனலட்சுமி இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய செய்தித்தாளைக் கண்டெடுத்துத் தூசு தட்டினார். அப்போதைய சவரன் தங்கத்தின் விலையை வியந்துவிட்டு, ஒரு செய்தியை வாசித்தார்.
”… இதை நம்பி 300-க்கும் மேற்பட்டோர் பல ஆயிரம் ரூபாயை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன், இதன் உரிமையாளரான மாரியப்பன் தலைமறைவாகிவிட்டார். எனவே, ஏமாந்த மக்கள் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்தனர்.
குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மாரியப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
… இந்த நிலையில் மாரியப்பன் ஆந்திராவுக்குத் தப்பி ஓட முயன்றதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்ற னர். தப்பி ஓட முயன்ற மாரியப்பனை போலீஸார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட மாரியப்பனை 19-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.”
நமது மக்கள் எதையும் பொருட்படுத்தாத ஞானிகள். பெருமிதம் அடைந்தேன்.
‘பேராசைகொண்டு மாரியப்பன் பின்னால் ஏன் செல்கிறீர்கள்’ என்றெல்லாம் போலீஸார் திட்டித்தீர்ப்பார்களே என்ற கவலையோ, கூச்ச உணர்வோ ஏதும் இன்றி, அடுத்த கணமே பணத்தை மீட்டுத்தருமாறு புகார் கொடுக்கக் கிளம்பிவிடுவார்கள். ஈர நெஞ்சினரும்கூட. அவர்களை யாரும் ஏமாற்றவே முடியாது. ஏனென்றால், அவர்கள் தாங்களாகவே ஏமாந்துவிடுவார்கள். எதிரிகளுக்கு எந்தச் சிரமமும் தராதவர்கள்!
ஒரு இன்ஸ்பெக்ஷன் முடிந்து திரும்பும்போது மூன்று ஸ்கார்ப்பியோ வாகனங்கள் எங்களைக் கடந்துசென்றன.
”மாரியப்பன்தான் போறார்…” என்றான் என் பைக்கின் பின்னால் இருந்த ரவி. எனக்கு நான் பார்த்த தாதா சினிமாக்கள் நினைவு வந்தன. ‘இதுபோன்ற கூட்டம் சினிமாவைப் பார்த்துதான் டாடா சுமோ, ஸ்கார்ப்பியோ வாகனங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறதா? இல்லை, இந்த நிஜக் கூட்டத்தைப் பார்த்துதான் சினிமா ரவுடிகளை இயக்குநர்கள் முரட்டு வாகனங்களில் ஏற்றிவிடு கிறார்களா?’ என்றொரு பாமர சந்தேகம் மனதில் தோன்றியது.
வாகனங்களின் வேகத்தால் இரண்டு ப்ரீ. கே.ஜி. பருவ ஆடுகள், ஐந்து உறுப்பினர்களைக்கொண்ட ஒரு கோழியின் குடும்பம், கல்லெறி வாங்கியிருந்த ஒரு நாய்… இவர்கள் ஒரு பெரும் கண்டத்திலிருந்து தப்பித்தார்கள். இவர்களின் மே…மே, கொக்…கொக், வள்…வள்… குரல்களைத் தெறித்து விழுந்திருந்த ஒரு கிழவர் மொழிபெயர்த் தார்.
”நாசமாப் போறவனுக… இவ்வளவு வேகமாப் போய் என்னடா புடுங்கப்போறீங்க?”
”மக்களுக்குச் சேவை செய்ய இவ்வளவு வேகம் அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் மக்களின் துயரம் அதிகரித்துக்கொண்டே இருக் கும்” என்றேன். ரவி சிரித்தான்.
ஒலி பெருக்கியில்…
வீட்டில் இரவு நேர மொட்டை மாடியில் நின்றுகொண்டிருந்தேன். எங்கிருந்தோ ஒலி பெருக்கிச் சத்தம். மாரியப்பனின் பெருமைகளைக் காற்று சுமந்துவந்தது.
‘விழா அமைப்பாளர்களை நான் கோபித்துக்கொள்கிறேன்… நமது அண்ணன் மாரியப்பன் அவர்களின் பெருமைகளை ஐந்து நிமிடத்தில் பேசு என்றால், அது எப்படி முடியும்? நடக்கிற காரியமா அது?’
எனக்குத் திருக்குறள் பற்றிய அறிவு பெரிய அளவில் கிடையாது என்றாலும், ‘தோன்றிற் புகழொடு தோன்றுக…’ குறள் மாரியப்பன் போன்றோரை உத்தேசித்து எழுதப்படவில்லை என்பது தெரியும். ஆனால் பேச்சாளர், வள்ளுவர் மாரியப்பன் அவர்களை நேரில் கண்டிருக்கக் கூடும் என்று அபிப்ராயப்பட்டார். வள்ளுவர் எப்போது இந்த ஊருக்கு வந்தார் என்றும் வியந்தார். தொடர்ந்து புத்தர், காந்தி, அன்னை தெரசா, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா… உள்ளிட்ட குழுவினரும் அவமானங்களைப் பெற்றுச் சென்றனர்.
அண்ணனிடம் சென்று, ”மாணவர்களுக்குப் பரிசு வழங்கிக் கௌரவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டோம். ”நான் பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லையே” என்றார் அண்ணன். நான் சொன்னேன், ”எங்காவது பள்ளிக்கூடம் பாடம் படிக்கச் செல்லுமா.?”
தொடர்ந்து மாரியப்பனின் கரங்கள் பொற்கரங்களாகித்தானே தீர வேண்டும்?
சமீபத்திய பத்திரிகைச் செய்தி…
போன வாரம் கிசுகிசு பாணியில் வந்திருந்த பத்திரிகைச் செய்தி ஒன்றைப் படித்திருந்தேன்.
”அவரா?” என்றார் அண்ணாச்சி. ”அவர் சூப்பர் அரசியல்வாதி ஆச்சே! என்னது… சூப்பர் அரசியல்வாதின்னா என்னன்னு தெரியாதா..? ஏதாவது ஒரு கட்சில இருந்தா, அவர் அரசியல்வாதி. எல்லாக் கட்சிலயும் இருந்தா, அவர் சூப்பர் அரசியல்வாதி” என்று விளக்கம் கொடுத்தார் அண்ணாச்சி. ”இந்தப் பகுதில புதுசா யார் வீடு கட்டினாலும், பில்டிங் கட்டினாலும் இவருக்கு கமிஷன் கொடுத்தாதான் வேலை நடக்குமாம். இல்லேன்னா, ஏதாவது இடைஞ்சல் பண்ணிட்டே இருப்பாராம். பாதிக்கப்பட்டவங்க போலீஸ், பிரச்னை, அது இதுனு அலையணுமானு புகார் கொடுக்கவே தயங்குறாங்களாம். இந்த சூப்பர் அரசியல்வாதியோட செல்வாக்கு அப்படி” என்றார் அண்ணாச்சி. அப்போது ஒலித்த மொபைல் போனை எடுத்து, ”என்னது… மாரியப்பன் சித்தப்பாவா? அப்படி யாரும் இங்க இல்லியே… ஸாரி ராங் நம்பர்…” என கட் செய்தார்.
பேருந்துப் பயணத்தில்…
ஒரு பேருந்துப் பயணத்தில், முன் சீட் பயணி கள் இருவர் பேசுவது என் காதில் விழுந்தது.
”இதோ இந்த லாலாக் கடைக்குப் பக்கத்தில் ஒரு இடம் இருக்கே… இந்த மூணு மாடிக் கட்டடம். அந்த இடம் நம்ம மாரியப்பன் இடம்தான். பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த இடம் சும்மாத்தான் கெடந்தது. மாரியப்பன் திடீர்னு காம்பவுண்ட் கட்டி, உள்ள ஒரு குடிசை போட்டு உக்காந்துட்டான். போகவே மாட்டேன்னு ஒரே தகராறு. அப்புறம் பஞ்சாயத்து எல்லாம் நடந்தது. அடி மாட்டு விலைக்குப் பேசி வாங்கிட்டான்.”
”யோவ்… மெள்ளப் பேசுய்யா… அவன் இன்னிக்குப் பெரிய மனுஷன்.”
நமது சமூகம் உயர்ந்த மனிதர்களால் அல்ல… பெரிய மனிதர்களால் நிறைந்திருக்கிறது.
மாரியப்பனின் வீட்டில்…
வங்கியில் விழா ஒன்றுக்கு ஏற்பாடாகியிருந்தது. பிரமுகர்களை அழைக்கச் சொன்னது தலைமை.
”ரவி, இந்த ஊர்ல உள்ள பெரிய மனுஷங்க லிஸ்ட் வேணுமே…”
”போற வழிலதான் போலீஸ் ஸ்டேஷன்.”
அதில் இருந்த ஜோக்கை ரசித்துவிட்டு, ஒரு நாள் மாரியப்பனின் வீட்டுக்குச் சென்றோம். மாட்டேன் என்றுதான் சொன்னேன். ‘மேனேஜர் வந்து கொடுப்பதுதான் முறை’ என்று சொல்லி, ரவி என்னை அழைத்து வந்துவிட்டான்.
வரவேற்பறையில் காத்திருந்தோம். எதிரிலும் அருகிலும் இருக்கைகள். யார் யாரோ இருந்தார் கள். உட்புறம் ஓர் அறை. அதிலிருந்துதான் மாரியப்பன் வெளிப்பட வேண்டும். அதன் வாசலில் ஒரு பணியாள். ரவி விளக்கினான். இது ஓர் உத்தி. வாசலில் நிறைய இருக்கைகள் போடப்பட்டிருக்க வேண்டும். யாரையும் வந்த வுடன் பார்க்க அனுமதிக்கக் கூடாது. காத்திருப் பின்போது உடன் அமர்ந்திருக்கும் படித்தவர், பாமரர் என்று விதவிதமான மனிதர்களைப் பார்த்ததும் மாரியப்பனுடன் பேச நினைப்பவன் எவ்வளவுதான் தைரியசாலி என்றாலும், அவனது சுருதி சற்று குறைந்துவிடும். அவ்வப் போது பணியாள், ‘அண்ணன்ட்ட சொல்லிட்டேன். வெய்ட் பண்ணச் சொன்னாரு…’ என்பான். இந்தத் திட்ட மிடப்பட்ட தாமதத்தால் காத்திருக்கும் ஒருவன் எப்படியாவது பார்த்தால் போதும் என்ற எண்ணத்துக்கும், பத்து வார்த்தை பேச வேண்டிய இடத்தில் ஒரு வார்த்தையாவது பேசினால் போதும் என்ற மனநிலைக்கும் தள்ளப்படு வான்.
இதனால், அவனது டெம்போ மேலும் குறையும்போது அண்ணன் உள்ளே அழைத்ததாகப் பணியாள் அறிவிப்பான். ‘போனை சைலன்ட்ல வெச்சிருங்க’ என்பான். இதுபோன்ற பிரமுகத்தன்மையால் தைரியமும் வார்த்தைகளும் பிடுங்கப்பட்ட பிறகு, அண்ணனைப் பார்க்க அறைக்குள் செல்லும் ஒரு சராசரி மனிதன், அண்ணன் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் சரணாகதி மன நிலைக்கு வந்துவிடுவான்.
அருகில் இருந்த 85 கே.ஜி. பெண்மணி அவளது காத்தி ருப்புக்கான காரணத்தை விளக்கினாள். லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டுவிட்டாளாம்.
”கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். நீங்களே சொல்லுங்க. இதுல வெக்கப்பட என்ன இருக்கு? யாரும் செய்யாததையா நான் செஞ்சுட்டேன்! யாரு இங்க யோக் கியம்… சொல்லுங்க? அண்ணனுக்கு யாரையோ தெரியும்னு சொன்னாரு.”
இங்கு காத்திருப்பவர்களைப் பற்றி ஓரளவு தெரிந்து விட்டது. அவள் மேலும் தொடர்ந் தாள்.
”அஞ்சு, பத்தக் கொடுத்தாவது… ஆமாம், உங்களுக்கு என்ன பிராப்ளம்? ஓ… போன வாரம் முகத்த கர்சீப்பால மறைச்சுக்கிட்டு வேன்ல போனது நீங்கதானே?”
கடவுளே, என்னை ஏன் இங்கு காத்திருக்கவிட்டீர்? அதைவிட முக்கி யமாக மாரியப்பன்களை ஏன் உருவாக்கி விட்டீர்? உடனடியாகக் கிளம்ப விரும்பினேன். நல்லவேளை… பணி யாள், ‘அண்ணன் இன்னிக்கு வரலி யாம்’ என்றான்.
ரயில் நிலையத்தில்…
மேலதிகாரி ஒருவரை வழியனுப்ப ரவியுடன் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றிருந்தேன். வட இந்தியாவிலிருந்து 15 வயசு முதல் 35, 40 வயதுகளில் ஆண்கள் கூட்டம் ஒன்று இறங்கியது. ”இவங்களுக்குப் பாதிக் கூலிதான் கிடைக்கும். பன்னிரண்டு மணி நேரம் வேல பாக்கவெச்சிருவாங்க” என்றார் ஆபீஸர்.
”கடைசில தமிழன் ஆப்பிரிக்காலேர்ந்து கறுப்பர்களைக் கடத்திட்டுப்போன வெள்ளைக்காரன் மாதிரி ஆயிட்டானே” என்றான் ரவி.
”இந்த ஊர்ல எங்க வேலை பாக்கப் போறாங்க..?” என்றேன்.
”மாரியப்பன்னு ஒரு வெள்ளைக்காரத்துரை. அவர்தான் இந்த அடிமைகளை வேலை வாங்கப்போறார்.”
”எப்படி ரவி, இதுக்கெல்லாம் மனசு வருது..?” என்றேன் வருத்தமுடன்.
”எதையும் நியாயப்படுத்த நாம் இப்போ கத்துக்கிட்டோம் சார்.”
உறவுக்காரப் பெண்
இரண்டு நாட்களுக்கு முன் வங்கிக்கு ஒரு பெண் வந்து, சுற்றிவளைக்காமல் ”மாரியப்பன் அண்ணனைத் தெரியுமா சார்?” என்றாள்.
”……”
‘அவரோட சின்ன மாமாவோட, சகலையோட, தம்பியோட, பொண்டாடிக்கு அக்காவோட, மச்சினிக்குத்தான்…’ அவளது சித்தப்பா மகனின், மனைவியின், தம்பியின் மகனைக் கல்யாணம் செய்துகொடுத்திருக்கிறது. தவிர, சிறைச்சாலைகளில் இருந்தபோது தாயம், ஆடு – புலி ஆட்டம் விளையாடி மாரியப்பனும் அவளது வீட்டுக்காரரும் பொழுதுபோக்குவார்களாம்.
”லோன் வேணும் சார்…”
அவளாகக் கேட்டால்கூடப் பொறுமையாகப் பதில் சொல்லியிருப்பேன். ”பரிசீலனை பண்றோம்” என்றேன் எரிச்சலுடன்.
இன்று
”பரிசீலனை பண்ணியாச்சு சார்… நாளைக்கே கொடுத்துடுறோம்… என்ன சாப்பிடறீங்க?” என்றேன் என் எதிரில் இருந்த மாரியப்பனைப் பார்த்து. எனது சுயவிருப்பு, வெறுப்புகளை நான் வாடிக்கையாளர்களிடம் காட்டிக்கொண்டுஇருக்க முடியாது.
”அண்ணே… ரொம்ப நன்றி!” என்றாள், மாரியப்பனுக்குப் பின்னால் நின்ற ‘உறவுகள் தொடர்கதை’ பெண்மணி. உண்மையில் மாரியப்பன் வரவில்லை என்றாலும்கூட இரண்டு நாட்களில் அவளுக்குக் கடன் கிடைத்திருக்கும் என்பதை நினைத்து நான் புன்னகைத்துக்கொண்டேன். ஆனால், தனது வருகையினால்தான் இந்த வெற்றி சாத்தியமாயிற்று என்பதுபோல் மாரியப்பன் சில முகபாவங்கள் புரிந்தார்.”சாருக் காகத்தான் மேனேஜர் லோன் கொடுத்திருக்கார். அவர் பேரைக் காப்பாத்தணும்” என்று ரவியும் அவரது பெருமிதத்தை அதிகப்படுத்தினான். ”அண்ணா… வீட்டைக் கட்டறதுக்கு வெளி மாநிலத்துல இருந்து ஆளைக் கூட்டிட்டு வந்தீங்களே… அது சரியான மூவ் அண்ணா. உள்ளூர்ல இவனுக இம்சை தாங்கல…” – புகழ்ந்தான்.
மாரியப்பன் சிரித்துக்கொண்டார். ரவி கையெழுத்துகளுக்காக அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுவிட, இப்போது நானும் மாரியப்பனும் மட்டும்.
”தம்பி… வெளி ஊர்ல இருந்து வந்திருக்கீங்க. இந்த ஊர்ல உங்களுக்கு ஏதாவது பிரச்னைன்னா எங்கிட்ட சொல்லுங்க… நான் பாத்துக்கறேன்!”
”……”
”இது தவிர… வேற ஏதாவது பெர்சனல் மேட்டர் இருந்தாலும் சொல்லுங்க. முடிச்சுத் தர்றேன். நமக்கு எல்லா இடத்துலயும் ஆள் இருக்கு” – கனிவான குரலில் சொன்னார்.
நான் சட்டெனப் பெருமை அடைந்தேன். இது எவ்வளவு பெரிய விஷயம். மேலும், இது பாதுகாப்பான விஷயமும்கூட. ஒரு பெரிய மனிதரின் தொடர்பு இருப்பது நல்லதுதானே. ஊரில் நாலு பேர் மதிப்பான். ‘சாருக்கு அவரை நல்லாத் தெரியுமாமே…’ என்று யாராவது சொல்வது பெருமைக்குரியதுதானே. என் மனைவியிடம் சொல்ல வேண்டிய வார்த்தைகள் அனிச்சையாகப் பிறந்தன. ‘எவ்வளவு பெரிய மனுஷன்… எவ்ளோ சாஃப்ட்டாப் பேசினாரு தெரியுமா..? ஏதாவது பிரச்னைன்னா, கால் பண்ணச் சொல்லி நம்பர் எல்லாம் கொடுத்தாரு… காலம் போற போக்குல இது மாதிரி ஆளுக பழக்கம் தேவைதானே!’
என்னிடமிருந்து வார்த்தைகள் பிரவாகம் எடுத்து ஓடி, அறையில் தேங்கிக்கிடந்தன. அதன் சூழலில் நான் சிக்கத் துவங்கினேன். நியாயமாகப் பார்த்தால், என் முன் இருப்பது ஒரு ரவுடி. அவரால் உடனடிப் பலன் தேவைப்படும் அளவு நிர்பந்தமோ, கட்டாயமோ எனக்கு இல்லை. பாதுகாப்பு தேவை என்கிற அளவு எனக்கு எதிரிகளும் இல்லை. என்னிடம் எத்தனையோ நல்லவர்கள், மனிதாபிமானிகள் வந்து சென்றிருக்கலாம். அவர்கள் யாரையும் தெரிந்துவைத்திருக்க நான் சிரத்தை எடுத்ததில்லை. அவர்கள் யாரும் எனக்குத் தேவைப்படாதபோது ஒரு பெரிய மனிதரின் தொடர்பு தேவை என்று என்னைப் பெருமையாகச் சொல்லவைத்தது எது? இதில் எனக்கு ஏன் இத்தனை போதையும் பரவசமும்? எப்படி நடந்தது இந்த ரசவாதம்?
எனக்குப் புரியவில்லை. ஆனால், மாரியப்பனுக்குப் புரிந்திருக்க வேண்டும். சின்னதாகச் சிரித்தார்!
– ஜூலை 2013