மாத்ருபதத்தை மண்டியிட வைத்த மிஸ்டர் கிச்சா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 5, 2023
பார்வையிட்டோர்: 4,410 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தன்னுடைய பேரன் கிச்சா சாப்பாடு, தூக்கம் என்பதையே முழுநேர உத்தியோகமாகக் கொண்டிருந்துவிட்டால், வருங்காலத்தில் அவனை ‘வேலைக்குப் போகாமலேயே ரிடையர் ஆனவன்’ என்று ஊரார் எங்கே தூற்றி எள்ளி நகையாடுவார்களோ என்ற பயத்தில் எச்சமிப் பாட்டி அவனை அவ்வப்போது ஏதாவது ஒரு இடத்தில் வேலையில் சேர்த்துவிடுவாள். ஆனால், கிச்சா எந்த ஒரு ஆபீஸிலும் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் வேலை பார்த்ததில்லை. அப்படியொரு ராசி அவனுக்கு.

எச்சுமிப் பாட்டியின் வற்புறுத்தலால் கிச்சா வேலைக்குப் போன சந்தர்ப்பங்கள் அந்த ஆபீஸ் மேலதிகாரிகளைப் பொறுத்தமட்டில் நரகவேதனையான அசந்தர்ப்பங்கள். பிறர் தவறுகளுக்காக தனக்குத் தானே மெமோ கொடுத்துக் கொள்ளும் சில சாதுவான மானேஜர்கள் இன்றும் தூக்கத்தில்கூட ‘கிச்சா’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் பீதியோடு தூக்கி வாரிப் போடும் அளவுக்கு அவர்களை மிரள வைத்திருக்கிறான் கிச்சா.

ஆபீஸில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை என்ற பெயரில் சகஸ்ரநாமம், லட்சார்ச்சனை லெவலில் ஒரு மினி கும்பாபிஷேகமே செய்து, அங்குள்ள சாமி படங்களுக்கு – பக்கத்து ஆபீஸ்காரர்கள் தீ அணைப்பு வண்டிக்குச் சொல்லி அனுப்பும் அளவுக்குத் ‘திகுதிகு வென்று அண்ணாமலை தீபம் சைஸில் கற்பூரத்தைக் கொளுத்திக் காட்டிவிட்டு, அதை அப்படியே தேமே என்றிருக்கும் மானேஜர் டேபிளில் வைத்து, ‘எரியும் கற்பூரத்தை அணைத்தால் என்னெல்லாம் விபரீதம் வரும்’ என்று அவருக்குப் பட்டியல் போட்டுப் பயமுறுத்துவான் கிச்சா. அவரும் ஒரு வேலையும் செய்யாமல் டேபிளில் இடைஞ்சலாக எரிந்து கொண்டிருக்கும் தீயை ‘எப்போது அணையும்’ என்று உடல் நடுங்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். அது அணைவதற்கும், ஆபீஸ் நேரம் முடிவதற்கும் சொல்லி வைத்தாற்போல் சரியாக இருக்கும். சில ஆபீஸ்களில் கிச்சா ஏற்றி வைத்த வீரியமான கற்பூர வில்லைகள் இன்னமும் நந்தா விளக்காக எரிந்து கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

ஒரு ஆபீஸில் கான்டீன் பஜ்ஜியைச் சாப்பிட்டதால் தொடர்ச்சியாக நாலு பேர் எடுத்த வாந்திக்கு – ஆபீஸில் யாரோ வேண்டாதவர்கள் எந்திரம் புதைத்து பில்லி சூன்யம் வைத்துவிட்டதாகக் காரணம் காட்டினான் கிச்சா. அதற்கு சாந்தி பரிகாரம் செய்ய எவனோ ஒரு கேரள மாந்திரீகனை வரவழைத்தான். அவனுடைய சோழி உருட்டலுக்கு சாமி ஆடிய டைப்பிஸ்ட் சரளா அதே வெறியில் அம்மன் வாக்காக கோழி பிரியாணி படைக்க வேண்டும் என்று குரல் கொடுக்க, கோழி பிரியாணியை மேலிடத்துக்கு சிபாரிசு செய்யக் கூச்சப்பட்ட மானேஜர் தன்னுடைய ஒரு வருட போனஸ் பணத்தை அதற்காக அழுது புகாரியில் பிரியாணி வாங்கி அனைவருக்கும் போட வேண்டியதாயிற்று.

பெருமாள் கோயில் புளியோதரை பிரசாதத்தைத் தான் தின்பதோடு நில்லாமல் ஆபீஸில் உள்ள அனைவருக்கும் டேபிள் மீது ஏறி நின்று விநியோகித்து, சாப்பிட்ட எண்ணெய்ப் பிசுபிசுப்போடு கூடிய கையைச் சுவரில் தேய்க்கும் பழக்கத்தையும் உண்டாக்கி ஒரே வாரத்தில் ஒரு மொஸைக் தரை கம்பெனியை புளியோதரை கம்பெனி ஆக்கினான் கிச்சா.

சிறுவயதிலிருந்தே தான் எப்போதும் வைத்திருக்கும் லாட காந்தத்தில் ஆபீஸில் உள்ள அத்தனை ஊசி, ஜெம் கிளிப்புகளை ஒட்ட வைத்து மாடர்ன் ஆர்ட்டில் முள்ளம்பன்றி வரைந்தது போல அதைச் செய்து மானேஜர் ரூம் வாசலில் விளையாட்டாக கிச்சா வைக்க, வேகமாகக் கதவைத் திறந்துவந்த மானேஜர், அந்த விநோத வஸ்துவைப் பார்த்த அதிர்ச்சியில் மிரண்டுபோய் மூன்று நாள்கள் எது கேட்டாலும், “யழ்ழா… வழ்ழா… ரழ்ழழழா…’ என்று ‘யரலவழளவில்’ பேசிக் கொண்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட சாதுவான மானேஜர்கள் கிச்சா வேலையில் சேர்ந்த ஆறாவது மாதக் கடைசியில் ஒரு தட்டில் பழம் பாக்கு வெத்தலையோடு கிச்சாவுக்கு செட்டில் பண்ணவேண்டிய பணத்துடன் தங்கள் கைக் காசையும் போட்டு கிச்சா காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, ‘எங்களை விட்டுடு’ என்று கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டு, அவனே ராஜினாமா செய்யும்வரை புரண்டு அழுதபடி இருந்து, காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள்.

காரணமேயில்லாமல் தனக்கு மெமோ கொடுத்த கோந்து பசை தயாரிக்கும் கம்பெனி மானேஜரின் சுழலும் குஷன் நாற்காலியில் அந்த மாதம் விற்காமல் தங்கிவிட்ட கோந்தையெல்லாம் கொட்டி பூசி மெழுகிவிட்டு, ‘சந்தேகத்துக்குச் சாம்பாராக’ குண்டூசிகளை கண்ணி வெடிகளாக அதில் கிச்சா பதிக்க, முதலில் கிச்சாவைக் கூப்பிட்டு இன்னொரு மெமோ கொடுப்பதற்காக ஸ்டைலாக உட்கார்ந்த மானேஜர், தனது பின்பக்கத்தில் குண்டூசி கொடுத்த அக்குபஞ்சர் சிகிச்சையில் அலறிப் புடைத்து எழுந்திருக்க முயல, நாற்காலியும் தன்னோடு சேர்ந்த எழுந்திருப்பதைப் பார்த்தபோதுதான், கிச்சா விரித்த கோந்து வலையில் தான் சிக்கியதை உணர்ந்தார். மெமோ வாங்க வந்த கிச்சா, அவரைப் பார்த்து, ‘எங்கிட்ட மோதாதே’ பாடலை டேபிளில் தாளம் போட்டபடி ரஜினி ஸ்டைலில் பாடிக்காட்டிவிட்டுப் போக, மானேஜருக்கு அனஸ்திஷியா கொடுத்து வலி தெரியாமல் மயக்கமாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக கோந்துப் பிடியில் ஒட்டிக்கொண்டுவிட்ட குஷன் நாற்காலியை மேஸ்திரி, தச்சன் என்று ஒரு பெரிய படையே சுத்தி, ரம்பம் சகிதமாக ஒரு நாள் முழுக்க தட்டி, அறுத்து, பெயர்த்துப் பொடிப்பொடியாக்கி ஒருவாறு பிரித்து எடுத்தார்கள்.

இப்படியாக மானேஜருடன் ஒண்டிக்கு ஒண்டி தில்லாக நின்று பதிலடி கொடுக்கும் கிச்சாவின் வீரத்தை இன்றும் ஆபீஸ் வட்டாரங்களில் லஞ்ச் மற்றும் லஞ்ச நேரத்தில் கர்ண பரம்பரைக் கதைகளாக ரகசியமாகப் பேசி ஊழியர்கள் அல்ப சந்தோஷம் அடைவது வழக்கம்.

சமீபத்தில், குளிக்கும் சவுபாக்கியவதனா சோப்பில் ஆரம்பித்து கந்தக நெடி பவுடர், கழுவும் ஷாம்பு என்று ‘காதுகுடையும் பஞ்சு வைத்த குச்சி’ வரை தயாரிக்கும் ஒரு பார்ஸி கம்பெனியின் மெட்ராஸ் கிளையின் மகிஷாசுர மானேஜர் மாத்ருபூதத்தின் தொல்லையால் தவித்த கிளார்க்குகள், டைப்பிஸ்ட்டுகள் திருவல்லிக்கேணி வந்து திண்ணையில் அனந்த சயனத்தில் இருக்கம் கிச்சாவை உலுக்கி எழுப்பி, தங்களது மேலதிகாரி மானேஜர் மாத்ருபூதத்தின் கொட்டத்தை அடக்கச் சொல்லி வேண்டினார்கள்.

மாத்ருபூதத்தின் அதிகார துஷ்ப்பிரயோகம் பெருகிவிட்டதை அக்கவுண்ட்டண்ட் அருணாசலம் அக்குவேறு ஆணிவேறாக எடுத்துக்கூறி, கிச்சாவை நெகிழ வைத்தார்.

‘ஆபீஸ் நேரத்தில் யாரும் பாத்ரூம் போகக்கூடாது…’ என்று கட்டளையிட்டுவிட்டு அதை அமல்படுத்த பாத்ரூமைப் பூட்டி சாவியை மாத்ருபூதம் இடுப்பில் சொருகிக் கொண்டதால் தனக்கு ஏற்பட்ட அவஸ்தையால் தான் டயாலிஸிஸ் ஸ்டேஜுக்குக் கிட்டத்தட்ட போய்விட்டதை விசும்பலோடு கூறிய டெஸ்பாட்ச் சங்கரன், பாத்ரூம் பூதமாகிவிட்ட மாத்ருபூதத்தை மண்ணைக் கவ்வ வைக்குமாறு ஆக்ரோஷமாக விண்ணப்பிக்க, திண்ணையிலிருந்து வெகுண்டெழுந்த கிச்சாவின் தோள்கள் கண்ணுக்குப் புலப்படும் அளவுக்குத் தினவெடுத்துத் துடிப்பதைப் பார்த்த அவர்கள் பக்திப் பரவசத்தால் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

‘ரத்தத்துக்கு ரத்தம், பழிக்குப் பழி, ஷார்ட்ஹாண்டுக்கு ஷார்ட்ஹாண்ட், பாத்ரூமுக்கு பாத்ரூம்’ என்று கோர்வையில்லாமல் முதலில் கோஷம் போட்ட கிச்சா, தனது சிலிர்ப்பு ஓரளவு அடங்கியதும், அவர் (மாத்ருபூதம்) பாணியிலிலேயே அவரது கொட்டத்தை அடக்கப் போகும் தனது அதிரடி நடவடிக்கைகளைக் கூறி அவர்களை அசர வைத்தான். ஊழியர்கள் கஷ்டத்தை உணர்த்துவதற்காக மாத்ருபூதத்தை கிட்நாப் செய்து தனது திருவல்லிக்கேணி வீட்டில் அடைத்து வைத்து அங்கு, தான் செட்டப் செய்யப் போகும் மினி- ஆபீஸில் மாத்ருபூதத்தை ஸ்டெனோவாக, கிளார்க்காக, அக்கவுண்டண்டாக, அட்டெண்டராக ஒரு வார காலம் வேலை செய்ய வைக்கப்போவதாக கர்ஜித்தான் கிச்சா.

சொன்னபடி மறுநாள் இரவு ஏழு மணிக்கு முகமூடியோடு அந்த ஆபீஸுக்குள் நுழைந்த கிச்சா, மற்றவர்களின் வேலையில் மாசு >கற்பிப்பதற்காக தினமும் ஆபீஸ் முடிந்து இரவு வெகுநேரம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு லெட்ஜர்களை வேவு பார்த்துக் கொண்டிருந்த மாத்ருபூதத்தை, தீபாவளி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வாசலுக்கு வரவழைத்து, அங்கிருந்த சைக்கிள் ரிக்ஷாக்காரரிடம் ‘கிட்நாப்புக்குச் சவாரி போனா எவ்வளவு கேப்பே?’ என்று காஷுவலாகப் பேரம் பேசிவிட்டு, ரிக்ஷாவில் மாத்ருபூதத்தைத் திணித்து அவரை திருவல்லிக்கேணி வீட்டுக்குக் கொண்டு வந்தான்.

போகும் வழியில் பப்ளிக் டெலிபோன் பூத்தில் வண்டியை நிறுத்தி, தான் ஆபீஸ் டூர் போயிருப்பதாகவும் வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்றும் மாத்ருபூதத்தை வீட்டுக்கு போன் பண்ணும்படிச் செய்தான் கிச்சா. வீட்டுக்கு வந்ததும் அவரிடம் வெற்றுத்தாள்கள் பலவற்றில் கையெழுத்து வாங்கி அவர் தலைமறைவாக இருக்கப் போகும் அந்த ஏழுநாட்களை இந்தத் தாள்களை வைத்துக் கொண்டு சமாளிக்குமாறு அக்கவுண்டண்ட் அருணாசலத்திடம் கூறி அவரை விரட்டினான் கிச்சா.

அண்ணாநகரில் ஆண் துணை இல்லாத உறவுக்காரர் வீட்டுப் பெண்டுகளுக்குத் துணையாக இருக்க எச்சுமிப் பாட்டி போனதால், கிச்சாவின் ‘மாத்ருபூதத்தைப் பழிவாங்கும் படலம் அமோகமாக நடந்தது.

தினமும் காலையில் ரத்னா கபே இட்லி, வடை, சாம்பாரை ஜொள்ளுக் கொட்ட அமர்ந்திருக்கும் மாத்ருபூதம் முன்னே தட்டோடு வைத்துவிட்டு, அவர் பாதி இட்லி சாப்பிடுவதற்குள் தள்ளி அமர்ந்து வேடிக்கை பார்க்கும் கிச்சா, தட்டை துணி உலர்த்தும் குச்சியால் நெம்பித் தள்ளிவிட்டு, பத்துமணி ஆபீஸுக்குப் பல்லவனைப் பிடிப்பதற்காகப் பாதி சாப்பாட்டில் பரக்கப் பரக்க எழுந்து ஓடும் குமாஸ்தாக்களின் உள்ளக் குமுறலை சிம்பாலிக்காக அவருக்கு உணர்த்தினான்.

கவிழ்த்துப் போட்ட குறுகலான ஸ்டூலை நெரிசலான பல்லவனாகப் பாவித்து, கயிறு கட்டி அதிவேகமாக அறைக்குள் அங்கும் இங்கும் தன்னால் இழுக்கப்படும் அந்த ஸ்டூலின் நான்கு கால்களுக்கு இடையே உள்ள சந்தில் எப்படியாவது தொற்றி ஏறி நிற்குமாறு மாத்ருபூதத்தை அதே தீபாவளித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பீக் அவரில் கஷ்டப்பட்டு பஸ் பிடித்து ஐந்து பத்து நிமிடங்கள் ஆபீஸுக்கு லேட்டாக வரும் அன்பர்களை அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரில் லேட் மார்க் போட்டு இழிவு படுத்தும் மானேஜரென்னும் மாந்தர் தம் மடைமையை மாத்ருபூதத்துக்குப் புரிய வைத்தான் கிச்சா.

அலமாரி வசதி செய்து தராமல் அதலபாதாளத்தில் இறைந்து கிடக்கும் லெட்ஜர்களை ஒவ்வொரு முறையும் குனிந்து குனிந்து எடுப்பதால், அக்கவுண்டன்ட் அருணாசலத்துக்கு வரும் தலைச்சுற்றலை அனுபவித்துத் தெரிந்துகொள்ள வைப்பதற்காக கிச்சா, மாத்ருபூதத்தை விட்டத்திலிருந்து ஒரு ராட்டினத்தில் தாம்புக் கயிற்றில் தலைகீழாகத் தொங்கவிட்டு, பரணில் உள்ள பாத்திரங்களை லெட்ஜர்களாக நினைத்து எடுக்குமாறு பணித்து, ‘அருணாசலத்துக்கு அலமாரியோட சேர்த்து டி.வி., ஃப்ரிஜ் எல்லாம் கூட வாங்கித் தந்து தொலைக்கிறேன்’ என்று அவர் தலைகீழாகக் கதறும்வரை, அவரைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கப் போய்வரும் குடத்தைப் போல பரணுக்கும் தரைக்குமாக ஏற்றி ஏற்றி இறக்கினான்.

சுருக்கெழுத்து எடுத்து எடுத்து அதனால் ஷர்ட் பாக்கெட்கூட எட்டாத அளவுக்குக் கை சுருங்கிப் போன ஸ்டெனோ வரதனைப் பற்றி சோகமாகக் கூறிவிட்டு, தடாலென்று ‘ரெடி – ஸ்டெடி ஷார்ட்ஹாண்ட்’ என்று தீபாவளித் துப்பாக்கியைச் சுட்டு உணர்த்திய கிச்சா, ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகத்தை ஆங்கிலத்தில் ஷார்ட் ஹாண்ட் எடுக்கும்படி பணித்து மாத்ருபூதத்தின் கையை ஒடித்தான். ஒடிந்த கையோடு கையாக ஷார்ட்ஹாண்டில் எடுத்த பொன்னியின் செல்வனை அரைமணியில் ஒன் ப்ளஸ் ஹண்ட்ரட் டைப் அடித்து வைக்குமாறு கட்டளையிட்டான் கிச்சா.

கிச்சாவின் இந்த சீர்திருத்தச் சித்திரவதை சிகிச்சைகளால் மனத்தளவில் பலவீனமாகி நொந்துபோன மானேஜர் மாத்ருபூதம், விடுதலையான முதல் காரியமாக ஆபீஸுக்குப் போய் ‘எக்கேடு கெட்டாவது ஒழியுங்கள்’ என்று தானே டைப் அடித்து தன் கைப்பட நோட்டீஸ் போர்டில் ஒட்டிவிட்டு விரக்தியாகத் தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டார். மானேஜர் கைகழுவி விட்டுவிட்ட சந்தோஷத்தில் அந்த ஆபீஸ் சந்தைக்கடையாக மாறியது. ஆரம்பத்தில் டிரான்சிஸ்டரில் பாட்டு கேட்டபடி வேலை செய்ய ஆரம்பித்த அவர்கள், போகப் போக ஆபீஸ் நேரத்தில் லைட் மியூஸிக் கச்சேரி வைத்துக் கொள்ளும் அளவுக்குக் கூத்தடிக்க ஆரம்பித்தார்கள். ஆபீஸ் சீருடை எல்லாம் போய் லுங்கி, ஷார்ட்ஸ், கட்பனியன் என்று காஷுவல் டிரெஸ்ஸுக்கு ஆபீஸ் தாவியது. கிச்சாவால் பரப்பிரம்மமாக ஆகிவிட்ட மாத்ருபூதத்தின் அலட்சியத்தால் அவரை ‘மானேஜர் மச்சி’ என்று செல்லமாகக் கூப்பிடும் அளவுக்கு ஆபீஸில் டிஸிப்ளின் குறைந்தது. சமீபத்தில், அந்த ஆபீஸில் ‘டிஸ்கோ… காபரே’ எல்லாம்கூட வந்துவிட்டதாகக் கேள்வி.

இதற்கிடையே மாத்ருபூதம் விடுதலையான மறுநாளே அண்ணாநகரிலிருந்து வந்த எச்சுமிப் பாட்டி அவசர அவசரமாகக் கிச்சாவைக் கூப்பிட்டு, ‘அடேய்! ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு அயனான உத்தியோகம் உனக்குக் கிடைக்கப் போறதுடா…’ என்று கூற, ‘எப்படிப் பாட்டி?’ என்ற வாய் பிளந்தான் கிச்சா. ‘அண்ணாநகர்ல இருக்கற என் அத்தங்கா பேத்தியோட புருஷன்தான் அந்த கம்பெனிக்கு மானேஜராம். அங்கே அவன் வெச்சதுதான் சட்டமாம்’ என்று கூறிய எச்சுமிப் பாட்டியைப் பார்த்து ‘மானேஜர் பேர் மாத்ருபூதமா?’ என்று கிச்சா கேட்க, பாட்டியும் ‘ஆமாம்’ என்று தலையாட்ட, ‘பாட்டி, உன்னோட அத்தங்கா பேத்தி என்ன, நம்ம ஜனாதிபதியோட அத்தங்கா பேத்தி சிபாரிசு செஞ்சாக்கூட அந்த வேலை எனக்குக் கிடைக்காது’ என்று பூடகமாகக் கூறிவிட்டு, பழையபடி திண்ணைக்குப் போய் மாத்ருபூதத்தால் ஒரு வாரமாக விட்டுப்போன தூக்கத்தை வட்டியும் முதலுமாகச் சேகரிக்க சாய்ந்தான் கிச்சா!

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *