மல்டிப்ளெக்சும் மஸ்தான் பாயும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 25, 2023
பார்வையிட்டோர்: 3,151 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குன்றத்தூர் ரோடில் போனீர்களானால் பெரிய பணிச்சேரி என்று ஒரு பகுதி வரும். அந்தப் பகுதியில் போய் வாப்பாகடை என்று கேட்டால் யாரும் காட்டுவார்கள். காதர் பாய் அந்தக் கடையின் சொந்தக்காரர். இமிடேஷன் நகைகளை விற்கும் கடை அது. இப்போது பரவிக் கிடைக்கும், ஒரு கிராம் கோல்ட் கடைகளுக்கு முன்னாலேயே ரோல்ட் கோல்ட் கடைகள் சென்னையில் பிரசித்தம். அப்படி ஒரு கடைதான் காதர் பாயின் கடை.

மங்களம் மாமி வாப்பா கடையில்தான் எல்லாவற்றையும் வாங்குவாள். சுற்றியிருக்கும் புர்க்கா போட்ட இளம்பெண்கள் வாப்பா.. அது.. வாப்பா இது.. என்கிறபோது ‘வயசானவர்.. அவரைப் போய் வாப்பா, போப்பான்றயே ‘ என்று அவர்களைக் கடிந்து கொள்வாள். அப்புறம் என்ன.. புர்க்காவுக்குள் ஒரே சிரிப்பு சத்தம் தான்.

காதர்பாய் ஹஜ் யாத்திரை போய் விட்டு வந்தபிறகு பிறந்தவன் மஸ்தான் பாய். உண்மையிலேயே அவன் பி ஓ ஒய் பாய்தான். பதினாறு வயது. ஹுசைனி பள்ளியில் பத்தாவது தாண்டுவதற்குள் அவனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிவிட்டது.

காதர் பாய் அறுபது வயது தாண்டியும் வெல்டராக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்த்தார். கிடைத்த கணிசமான வருமானத்தில் வாங்கிப் போட்டதுதான் இந்த பெரிய பணிச்சேரி இடம். ஆறு சென்ட் இடம் சல்லிசாகக் கிடைத்தது. பக்கத்தில் ஒன்றிரண்டு இஸ்லாமியக் குடும்பங்கள் இருந்தன. அவர்களெல்லாம் இறைச்சி வியாபாரத்திலோ, அல்லது பிரியாணி, சூப் கடைகளோ வைத்து பிழைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த மாதிரி கடைகள் எதுவும் அந்தப் பகுதியில் இல்லை. எல்லோரும் அண்ணாசாலை தர்காவிற்கு அருகிலோ அல்லது திருவல்லிக்கேணி பெரிய மசூதி அருகிலோ கடை போட்டிருந்தார்கள்.

காதர் பாய் ஆம்பூரில் பெண் எடுத்திருந்தார். அதிகம் படிப்பில்லாத பெண் நூர்ஜகான். ஆனால் அழகாக இருந்தாள். காதர் பாய் நல்ல ஆகிருதி. கலியாணம் பாய்க்கு முப்பத்தி ஐந்து வயதாகும்போதுதான் நடந்தது. அப்போது நூருக்கு பதினாறு வயது. இரண்டு வருடங்கள் ஆம்பூரிலேயே விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு போய் போய் வந்தார் காதர்பாய். வரும்போதெல்லாம் பாதாம் பிஸ்தா என்று கொடுத்து நூரைத் திங்கச் சொல்வார். அவ்வளவுக்கு நூர் மிகவும் ஒல்லி. என்ன பாதாம் பிஸ்தா சாப்பிட்டாலும் நூர் தேறவேயில்லை. முதல் பெண் ரிஸ்வானா பிறந்தபோது காதர் பாய் ஊரிலேயே இல்லை. டிரங்கால் போட்டு விவரம் சொன்னார்கள். முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததில் பாய்க்கு கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் சாக்லேட் வாங்கி நண்பர்களுடன் கொண்டாடினார்.

காதர் பாய் தமிழ் முஸ்லீம். லப்பே என்று சொல்வார்கள் மற்ற முஸ்லீம்கள். உருது சுட்டுப்போட்டாலும் வராது. வெளிநாட்டில் இருந்த போது, பிழைப்புக்காக, கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டார். ஆனாலும் பேசும்போது அவருக்கு குமட்டியது. தமிழ் முஸ்லீம்களாக யாரும் கிடைப்பார்களா என்று தேடியபோது கிடைத்தவன்தான் அலிபாய். அலிபாய் பழக்கவழக்கங்களில் ஒரு அந்தணன். இருபது வருடங்கள் சென்னையில் ஐயங்கார் கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு, ஐம்பது சொச்ச வயதில் கத்தார் வந்தவன். அப்படியே சவுதி அரேபியா, அபுதாபி என்று சுற்றியவன். இப்போது இங்கு கடலின் நடுவில், எண்ணை எடுக்கும் நிறுவனத்தில், உதிரி பாகங்கள் வினியோகப் பிரிவில் இருக்கிறான். ஒரு அபூர்வமான வேளையில், கம்பெனி சாப்பாட்டுக் கூடத்தில், அவனைச் சந்தித்தார் காதர் பாய். தட்டு நிறைய காய்கறிகளுடன், தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தார். அவர் தட்டில் எலும்புத் துண்டுகளுடன் பிரியாணி இருந்தது. அத்தனையும் குப்பைத்தொட்டியில் கொட்டி விட்டு, வேறு ஒரு தட்டு எடுத்து, காய்கறிகளையும் தயிர் சோற்றையும் நிரப்பிக் கொண்டார் காதர் பாய். அலிபாய் அருகில் போய் உட்கார்ந்தார். தட்டை பார்த்துவிட்டு, அவரை ஏறெடுத்தான் அலிபாய். சிநேகமாய் சிரித்தான். பற்றிக் கொண்டது.

அலிபாய் காலை எட்டுமணி முதல் இரவு எட்டுமணி வரை வேலை செய்வான். அவனுக்கு ஓவர்டைமையும் சேர்த்து அறுபதாயிரம் சம்பளம். காதர் பாய்க்கு அதில் பாதி யிலும் பாதி. அலிபாயின் அறையைப் பகிர்ந்து கொண்டவன், வேலையை விட்டு நின்று விட்டான். காதர்பாய் எப்படியோ அலியின் அறையில் சேர்ந்து கொண்டார். இருவரும் மாதம் ஒருமுறை, நகரத்திற்கு போய், பழைய தமிழ் பட கேசட்டுகளாக வாங்கி வருவார்கள். இரவு பன்னிரெண்டு மணிவரை, அதை டெக்கில், போட்டு சின்ன தொலைக்காட்சிப் பெட்டியில் பார்ப்பார்கள். காதர் பாய் அசைவத்தை அறவே மறந்து விட்டார்.

‘என்னா ஸ்டெப்ஸ் பாய் ‘ என்று உத்தமபுத்திரனை பனிரெண்டாவது தடவை பார்த்து விட்டு சிலாகிப்பார். பாய் என்றால் உருதுவில் சகோதரன் என்று அர்த்தம். காதர் பாயைப் பொறுத்தவரை அலிபாயை ஆத்மார்த்தமாக ஒரு சகோதரனைப் போலவே உணர்ந்தார்.

காதர் பாய் வருடம் ஒரு முறை சென்னை வருவார். ஆம்பூர் போய் அரை மாசம் இருப்பார். அடுத்த வருடம் போனபோது, ஹசீனா இரண்டு மாதம். இப்படியே நாலு பெண் பிறந்த பின்னும், காதர் பாயின் ஆண் வாரிசு ஆசை நிறைவேறவேயில்லை. கொஞ்சம் காலம் இனிமே குழந்தை வேண்டாம் என்று தவிர்த்தார். பிள்ளைகள் பெருகியதாலும், மாமனாருக்கு வயதாகி விட்டதாலும் பெரிய பணிச்சேரியில், ஒரு ஷீட் வீடு கட்டி, குடும்பத்தை இடம் பெயர்த்தார். புது வீடு கட்டிய மகிழ்ச்சியில் நூர் கருவுற்றாள். காலம் கடந்து எதிர்பாராமல் பிறந்தவன் தான் மஸ்தான் பாய்.

காதர் பாய்க்கு தன் ஒரே மகனின் பேரில் ஏக வருத்தம். படிப்பு ஏறவில்லை. தொழுகைக்கும் சரியாக வருவதில்லை. ஒரே மகனை கண்டிக்கவும் முடியாமல் தண்டிக்கவும் முடியாமல் தவித்தார். காதர்பாய் வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு பெரியபணிச்சேரியில் கடை வைக்கும்போது மஸ்தானுக்கு பதினேழு வயது. விடலைகளுக்கே உரித்தான எல்லாப் பழக்கங்களும் அவனுக்கு இருந்தன. சில்க் புல்கை சட்டையை, எம்ஜிஆர் பாதிப்பில் புஜம் வரையிலும் உருட்டி விட்டு, முதல் இரண்டு சட்டை பட்டன்களை கழட்டி விட்டு சுற்றிக் கொண்டிருப்பான். இடையில் பளபளவென்று சிங்கப்பூர் லுங்கி. கண்களில் ரேபான் கூலிங்கிளாஸ்.

காதர் பாய் வெளிநாட்டில் இருக்கும்போதே நான்கு பெண்களுக்கும் கலியாணம் ஆகிவிட்டது. ஒன்றுக்கும் அவர் வரவேயில்லை. பணம் அனுப்பவதோடு சரி. மூணு வயதில்தான் முதல் பேரனையே பார்த்தார். அவர் அப்படிச் செய்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அவனுடன் இருந்த அலிபாய், பாஸ்போர்ட் வாங்கிக்கொண்டு லீவு எடுத்துக் கொண்டு, ஊருக்குப் போனவன்தான். வரவேயில்லை. அவனே வேலையை விட்டு நின்றுவிட்டான் என்று எண்ணினார். தன்னிடம் கூட சொல்லவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு இருந்தது. புதிதாக சென்னையிலிருந்து வேலைக்குச் சேர்ந்த ஒருவன், அவரிடம் பிரிக்கப்பட்ட ஒரு கடித உறையைக் கொடுத்தான். அதைப் பிரித்து படித்தபிறகுதான் உண்மையே தெரிந்தது.

அலிபாய் விடுப்பு முடிந்து மீண்டும் வேலைக்குச் சேர கேட்டபோது, கம்பெனி அதைக் கண்டு கொள்ளவேயில்லை. அவனுக்குப் பதிலாக, பாதி சம்பளத்தில் இன்னொருவனை சேர்த்துக் கொண்டது. காதர்பாய்க்கு அஸ்தியில் சுரம் கண்டது போல் ஆனது. அதற்குப் பிறகு அவர் விடுப்பு கேட்கவேயில்லை. அதை கம்பெனிக்கே கொடுத்து விட்டு பணமாக வாங்கிக் கொண்டார். காதர் பாய் எல்லோரையும் போல இறைச்சி கடைதான் வைத்திருப்பார். ஆனால் அலிபாயுடன் ஏற்பட்ட பழக்கம் அவரைத் தடுத்தது. அதனால்தான் ரோல்ட் கோல்ட் நகைக்கடை வைத்தார்.

அவர் வருவதற்குள் பெரியபணிச்சேரி வெகுவாக மாறியிருந்தது. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்துகள் ஓடிக் கொண்டிருந்தன. நிறைய வீடுகள் வந்திருந்தன. முகத்தில் மச்சம் போல பத்துக் குடும்பங்கள் தான் இஸ்லாமியர்கள். மீதி எல்லாம் வேறு மதத்தவர்கள். ஒரு கோயில், ஒரு திருச்சபை என்று அந்தப் பகுதி வெகுவாக மாறி இருந்தது. இரண்டு சினிமா தியேட்டர்கள் கூட வந்துவிட்டன. மகள்கள் கலியாணம் ஆன சூழலில் காதர் பாய், நூருடனும், மகனுடனும் அந்த தியேட்டர்களுக்கு படம் பார்க்க போவார். வயது ஏற, ஏற மஸ்தான் அவர்களுடன் வர மறுத்து விட்டான். ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு, நண்பர்களுடன் பூந்தமல்லியோ தாம்பரமோ போய் விடுவான். அவனுக்கு ஏசியும் டிடிஎஸ்சும் வேண்டியிருந்தது.

புஜங்கள் தெரிய உருட்டிய சட்டையும் பள பளவென்ற லுங்கியுமாக அவன் நண்பர்கள் புடை சூழ போகும்போது காதர் பாய் பெருமையுடன் பார்ப்பார். ‘தூள் விக்ரம் மாதிரி இருக்கான்ல ‘என்பார் நூரிடம்.

விருகம்பாக்கத்தில் மல்டிப்ளெக்ஸ் திறந்தபோது, மஸ்தானின் நண்பர்களெல்லாம் அதைப் பார்த்துவிட்டு, ஆகா ஓகோ என்று வியந்தார்கள். மஸ்தான் பாய் அதைப் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தான். ஒரு டிக்கெட் விலை நூற்றிருபது ரூபாய் என்கிற போதுதான் அவனுக்கு கலக்கம் ஏற்பட்டது. மூன்று வாரம், நண்பர்களுடன் சினிமா போவதாகப் போக்கு காட்டிவிட்டு, பணத்தைச் சேர்த்தான். நூற்றைம்பது சேர்ந்தவுடன், காலையிலிருந்தே பரபரப்புடன் காணப்பட்டான். கடைசியாக வாங்கிய ரோஸ் கலர் சட்டையைப் போட்டுக் கொண்டான். புஜம் தெரிய மடித்து விட்டுக் கொண்டான். கடைசி மடிப்பில் மூன்று ஐம்பது ரூபாய் நோட்டுகளை மடித்து செருகிக் கொண்டான். புதிதாக வாங்கிய கறுப்புக்கலர், நாலு பேக்கட் பர்முடா நிக்கரை மாட்டிக்கொண்டான். நீலக்கலர்சில்க் லுங்கியை கட்டிக் கொண்டான். காலர் அழுக்காகி விடும் என்று, கறுப்புக் கைக்குட்டையை மடித்து,

கழுத்துக்குப் பின்னால் சொருகிக் கொண்டான். வெள்ளைச் செருப்பு மாட்டிக் கொண்டான். ரேபான் அணிந்து கொண்டான். கச்சேரி ரோடு அக்பர்பாய் செண்ட் கடையில் வாங்கிய வாசனை அத்தரை உடல் முழுவதும் தெளித்துக் கொண்டான். சட்டை கசங்கிவிடும் என்று, 88 ல் கடைசி படியில் பயணம் செய்து, விருகம்பாக்கம் வந்தான்.

மல்டிப்ளெக்ஸில் ஏகக் கூட்டம். நவநாகரீக உடைகளில் யுவன்களும் யுவதிகளும். தோளில் கறுப்புப் பை மாட்டிக் கும்பலாக இளைஞர்கள். ஐந்து மாடிக் கட்டிடம். பெரிதுபெரிதாக சினிமா விளம்பரப் படங்கள். மலைத்துப் போய்விட்டான் மஸ்தான் பாய். நான்கு யுவதிகளுக்கும் நான்கு இளைஞர்களுக்கு இடையில் தன்னை நுழைத்துக் கொண்டு, கையை மட்டும் நீட்டினான் டிக்கெட் கவுண்டரில். மூன்று ஐம்பது ரூபாய் நோட்டுக்கள் இருந்தன அவன் கையில்.

டிக்கெட் கொடுப்பவன் அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. கணினியைத் தட்டிக் கொண்டே ஒலிபெருக்கியில் ‘பத்தரை மணிக் காட்சி, நண்பன், ஒரு டிக்கெட் ‘என்று சொல்லி கையில் டிக்கெட்டை திணித்தான்.

கையில் டிக்கெட் வந்தவுடன் அவனது தன்னம்பிக்கை மீண்டது. ஸ்டைலாக உள்ளே நுழைந்தான். மாடிப்படியில் கால் வைத்தவுடன் அவை ஓட ஆரம்பித்து விட்டன. அலறிப் போய் கீழே குதித்து விட்டான். பின்னால் சிரிப்பு சத்தம் கேட்டது. கறுப்புப்பை ஆசாமிகள் கும்பலாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவனைத் தள்ளிவிட்டு ஒருவன் படியில் தாவி ஏறினான். பின்னாலேயே அவனது சகாக்கள். படிகள் ஓடத் தொடங்கின. மேலே போய் எல்லோரும் கையாட்டினார்கள்.

ஒருவழியாக நடப்பது நடக்கட்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனும் படியில் நின்று கொண்டான். மேலே போகும்வரை கண்ணை மூடிக் கொண்டான்.

இன்னமும் வேறு எதிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று கொஞ்ச நேரம், சுற்றிலும் என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தான். பை பையன்கள் சீட்டைக் காட்டிவிட்டு உள்ளே போனார்கள். அவர்களை ஒவ்வொருவராக தலை முதல் கால் வரை ஒருவன் தடவிக் கொண்டிருந்தான். நல்லவேளை அரை நிக்கர் போட்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டான் மஸ்தான் பாய்.

லுங்கி மடிப்புகளை நீவி விட்டு, மெதுவாக நுழைவாயில் நோக்கி நகர்ந்தான் மஸ்தான் பாய். சீட்டை நீட்டினான். அவன் தடவுவதற்கு ஏதுவாய் கைகளை அகட்டிக் கொண்டான். ஆனால் அவன் தடவவேயில்லை. ஆச்சர்யத்துடன் அவனைப் பார்த்தான்.

‘சாரி சார்.. லுங்கி நாட் அலவுட்‘

பத்தாம் கிளாஸ் படித்த மஸ்தான் பாய்க்கு பகிரென்றது. அல்லா இது என்னா சோதனை? லுங்கி இஸ்லாமியர்களின் உடை.. இந்திய பாரம்பரிய உடைகளில் ஒன்று என்று ஏதேதோ சொல்ல எண்ணினான். நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

‘ஹே ட்யூட்! நாட் கம்மிங்? ‘ என்றான் பை ஆசாமி ஒருவன்.

வாசலில் இருந்தவன் நாசுக்காக மஸ்தான் பாயைத் ஓரம் தள்ளிவிட்டு அடுத்த ஆட்களை கவனிக்க ஆரம்பித்தான். குழுவாக சத்தம் போட்டபடி ஒரு இளைஞர் கூட்டம் உள்ளே போனது. நாலைந்து இளைஞர்கள் கார்கோஸ் முக்கால் பேண்ட் அணிந்து உள்ளே போனார்கள். வாசலில் இருந்தவன் மரியாதையுடன் வழியனுப்பினான்.

ஒரு முடிவுக்கு வந்தான் மஸ்தான் பாய். பரபரவென்று லுங்கியைக் கழட்டினான். மடித்து கக்கத்தில் வைத்துக் கொண்டான். கீழே கறுப்பு அரை நிக்கர் இருந்தது.

‘ம்?’ என்றான்.

வாயில் ஆசாமி பேசாமல் டிக்கெட்டைக் கிழித்து கையில் கொடுத்தான். இப்படித்தான் மஸ்தான் பாய் மல்டிப்ளெக்சில் அன்று படம் பார்த்தான்.

– ஜனவரி 2012

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *