கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,916 
 
 

அப்புசாமி வெகு மும்முரமாக எதையோ படித்துக் கொண்டிருந்தார், சீதாப்பாட்டி காப்பி கொண்டு வந்ததைக்கூடக் கவனியாமல்.

“அடேயம்மா, காப்பியின் ‘பிளேவர்’ கூட உங்களைக் கவரவில்லையே? அப்படி ‘டீப்’பாக எதில் முழுகி விட்டீர்கள்?” என்று சீதாப்பாட்டி அவர் கையிலிருந்த புத்தகத்தை வாங்க முயன்றாள்.

“பைட்டியே!” என்றார் அப்புசாமி.

“வாட்!” என்று அதிர்ந்து போனாள் சீதாப்பாட்டி. “பாட்டியே” என்றா சொன்னீர்கள்?”

“அட!” லடுக்கீ! ‘பைட்டியே’ என்றால் இந்தியில் ‘உட்காரு’ என்று அர்த்தம்!”

இந்தி படிக்கிறீர்களா என்ன? எனக்கு சர்ப்ரைஸாக இருக்கிறதே!” என்று வியந்தாள் சீதாப்பாட்டி.

“ஆட்சி மொழியாயிற்றே, தெரிந்து கொள்ள வேண்டாமா? அதுதான் கொஞ்சம் நானாக ‘கிதாப்’ வைத்துக் கொண்டு முட்டி மோதிப் பார்க்கிறேன். நீயும் கட்டாயம் படி. இரண்டு பேருமாகச் சேர்ந்து படித்தால் உற்சாகமாகப் படிக்கலாம்.”

“இந்தி! நோ, நோ!” லடுகியே, தடுக்கியே என்று நீங்களே தடுமாறிக் கொள்ளுங்கள்! நான் முன்னே பிராத்மிக்குக்குப் படித்து, பாதியிலே ‘ட்ராப்’ பண்ணியது தானே? டவுனுக்குப் புறப்படப் போகிறேன். நீங்களும் கிளம்புங்கள்.”

“அட அட! கொஞ்ச நேரம் நிம்மதியாகப் படிக்க விடுகிறாயா? நீயே டவுனுக்குப் போய்கொள். வரும்போது இந்தி-தமிழ் அகராதி ஒன்று வாங்கிவா. ப்ராம்மிக் பரீட்சை இதோ இன்னும் ஒரு மாதம்கூட இல்லை.”

“இங்கிலீஷ¤க்கு இருக்கிற ‘சார்மில்’ லிடரரி வேல்யூவில் நூற்றிலே ஒரு பங்கு இந்திக்கு உண்டா? சரி. சரி. கிளம்புங்கள். உங்கள் பல் ஸெட் விஷயமாகத்தான் டவுனுக்குப் போகிறோம். உங்களுக்காக நான் டென்டிஸ்ட்டிடம் பல்லைக் காட்ட முடியுமா?”

அப்புசாமி, “நீ ரொம்ப ரொம்ப புரீபாட்டி, அச்சீ பாட்டீ நஹி” என்றார்.

“என்னது? கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்,” என்றாள் சீதாப்பாட்டி.

“நீ ஆங்கிலம் கலந்தடிக்கிற மாதிரி நான் இந்தி கலக்கலாம் என்று பார்க்கிறேன். நீ ரொம்ப ரொம்பக் கெட்ட பாட்டி, நல்ல பாட்டி இல்லை என்றேன். நீ ஆங்கில ஆதரவாளியாக இருப்பதை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.”

“வாளியுமில்லை, தொண்டியுமில்லை, இந்தி உங்கள் நாஷனல் லாங்க்வாஜாக இருக்கலாம். ஆனால் இங்கிலிஷ் இன்டர் நாஷனல் லாங்க்வேஜ். ஒய் கம்பேர்?”

“இங்கிலீஷின் பல்லை மெதுவாகப் பிடுங்கிக்கொண்டு வருகிறார்கள்.”

“இங்கிலீஷ் பல்லை யாரும் பிடுங்கவில்லை. உங்கள் பல்லைத்தான் சுத்தமாகப் பிடுங்கியிருக்கிறது. பல் ஸெட்டும் உங்களுக்கத்தான்.”

“இப்போதே என்னோடு சேர்ந்து இந்தி கற்றுக் கொண்டுவிடு. இல்லை, வீணாகத் திண்டாடுவாய். உனக்கு இந்தியில் தந்தி வந்தால் சந்தி சிரிக்கும் என்னிடம் தூக்கிக்கொண்டு ஓடி வருவாய். நான் ·பீஸ் கேட்பேன்!”

“ஸ்டாப் ஒர்ரியிங் சார்! தட்டீஸ் மை ·ப்யூனரல்! டாக்டர் லட்சுமணசாமி முதலியார், டாக்டர் ஸி. பி., டாக்டர் ராஜாஜி எல்லோரும் இங்கிலீஷைத்தான் ஆதரிக்கிறார்கள். அவர்களைவிட நீங்கள் பெரிய ஜீனியஸா!”

“ஹே! பகவான்! இவளுக்கு வல்ல புத்தி கொடு. சரி, உட்டோ!”

“என்னது?”

“எழுந்திரு என்றேன்,” அப்புசாமி தான் படித்துக் கொண்டிருந்த இந்தி ஆரம்பப் பாடப் புத்தகமும் கையுமாகக் கிளம்பினார்.

“புக் எதற்கு? பஸ்ஸிலே படிக்கவா? ஓடுகிற பஸ்ஸில் படித்தால் ஐ சயிட் எதற்காகும்? தூக்கிப் போட்டுவிட்டு வாருங்கள்.” என்று எச்சரித்தாள் சீதாப்பாட்டி.

“ஓடுகிற பஸ்ஸில் படிக்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸ¤க்கு நிற்கிற நேரத்துக்கு, ப்ராத்மிக் பரீட்சைக்குப் படித்து முடித்து, மத்திமாவுக்குக் கூடப் படித்து விடலாமே?” என்று சிரித்த அப்புசாமி புறப்பட்டார், சீதாப்பாட்டியுடன்.

அன்றைக்கு டவுன் பரபரப்பாக இருந்தது. போலீஸ் லாரிகள், போலீஸ் குதிரைகள், காவல் கெடுபிடி இவை மிகுந்திருந்தன. பல கடைகள் சாத்தப்பட்டிருந்தன.

“என்ன விசேஷமோ?” என்றாள் சீதாப்பாட்டி பஸ்ஸிலிருந்து இறங்கியபடியே.

“எல்லாம் உன்னை வரவேற்கத்தான்! இந்தியை நீ எதிர்க்கிறாயல்லவா? இந்தி எதிர்ப்பு மறியல் செய்கிறார்களாம். அதற்கான முன்னேற்பாடு!” என்றார் தாத்தா.

“நேச்சுரலி!” என்றவாறே சீதாப்பாட்டி பஸ்ஸிலிருந்து இறங்கினாள். “எதிர்க்காமல் என்ன செய்வார்கள்? பீபிளுக்காக கான்ஸ்டிட்யூஷனே தவிர, கான்ஸ்டிட்யூஷனுக்காகப் பீபிள் இல்லை. பெங்களூரில் எக்ஸ் திவான் மாதவராவ்-உள்பட ஒரு டசன் லீடிங் பெரிய மனிதர்கள் ரிப்போர்ட் விட்டிருக்கிறார்கள். படித்தீர்களா? எஜுகேஷனுக்கு, முக்கியமாக ஸயன்டிபிக் ரிசர்ச்சுகளுக்கு உதவக் கூடியது இங்கிலீஷ்தான். காலவரையறையின்றி நீடித்திருக்க வேண்டும் என்கிறார்கள்.”

“உஸ்ஸ்! உஸ்ஸ்! என் இப்படி ஒரே ஆங்கில வெறி பிடித்து ஆடுகிறாய்” என்றார் அப்புசாமி எரிச்சல் மிகுதியாக.

சீதாப்பாட்டிக்குக் கடுமையான கோபம் வந்துவிட்டது. “நீங்கள் தான் இந்தி பனாடிக்! இந்தி வெறியர்! டெளன் வித் இந்தி!” என்று கத்தி விட்டாள்.

“டெளன் வித் இங்கிலிஷ்!’ என்று நான் கத்த அதிக நேரமாகாது!” என்ற அப்புசாமி கைத்தடியை உயரத் தூக்கி, “ஒழிக இங்கிலீஷ்!” என்றார்.

“டெளன் வித் ஹிந்தி!” என்று பாட்டி ரோஷமாக மறுபடி எதிர்க் கோஷம் போட்டாள்.

இந்தச் சத்தம் கேட்டு, இரண்டு கெஜத்துக்கு அப்பால் நின்று கொண்டிருந்த ஒரு வாணலித் தொப்பிப் போலீஸ்காரர் குறுந்தடியைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்.

வந்தவர் அப்புசாமியிடம், “மணி இன்னும் பத்தாக வில்லையே?” என்றார்.

அப்புசாமி சீதாப்பாட்டி மேலிருந்த கோபத்தோடு, “ஆகாவிட்டால் போகிறது. எனக்கென்ன?” என்றார்.

“உங்கள் நோட்டீஸை மறந்து பேசுகிறீர்களே?” என்றார் போலீஸ்காரர்.

அப்புசாமி எரிச்சலுடன், “நோட்டீஸா? யார் விட்ட நோட்டீஸ்?” என்றார்.

“நீங்கள் விட்ட நோட்டீஸ்! உங்கள் தலைவர் விட்ட அறிக்கை! அதில் பத்து மணிக்கு அல்லவா மறியல் ஆரம்பிப்பதாக அறிவித்திருந்தார். நீங்கள் இப்போதே கோஷம் போட ஆரம்பித்து விட்டீர்களே? இன்னும் ஐந்து நிமிடம் இருக்கிறதே? போக்கு வரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் நின்று கொண்டு கோஷம் போடுங்கள்! தள்ளிப் போங்கள் அப்படி,” என்றார்.

அப்புசாமி அடுத்த கணம் மகிழ்ச்சியோடு ஒரு துள்ளுத் துள்ளினார்! போலீஸ்காரரிடம். “ஐயா, போலீஸ்காரரே, இதோ, இந்த அம்மா இருக்கிறார்களே! இவர்கள் ஒரு ‘நடமாடும் வெடி குண்டு!’ இந்தியை எதிர்த்து அதைப் புதைக்கவே இங்கு வந்திருக்கிறார்கள். சற்றமுன் கத்தினதுகூட இவர்கள்தான்?” என்றார், பாட்டி வாயை அடக்குவதற்கு.

அப்புசாமி ஒரு நயத்துக்காக, பாட்டியை ‘நடமாடும் வெடிகுண்டு’ என்று சொன்னதை அந்தப் போலீஸ்காரர் நிஜமாகவே நம்பிவிட்டார். சீதாப்பாட்டி மறியலில் கலந்து கொண்டு போலீஸை எதிர்க்க ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறாள் என்று நினைத்து விட்டார்.

அடுத்த கணம் ‘பீய்ப்ப…’ என்று ஊதலை எடுத்துப் போலீஸ்காரர் முழங்கினார்.

ஏழெட்டு போலீஸ்காரர்கள் வந்து விட்டனர். அதே நேரம் எங்கு பார்த்தாலும் ‘இந்தி ஒழிக! ஒழிக இந்தி!’ ‘திணிக்காதே இந்தியை!’ ‘எங்கள் தலைவர்களை மதித்து நட!’ ‘அவர்கள் உணர்ச்சியே எங்கள் உணர்ச்சி!” என்ற கோஷங்களும் கிளம்பின. குறித்த மணி நெருங்கி விட்டதால் இந்தி எதிர்ப்பு மறியல் கோஷ்டியினர் கோஷம் போடத் துவங்கிவிட்டனர்.

விசில் ஊதிய போலீஸ்காரர் மற்றவர்களிடம், “பார்த்தீர்களா? உஷார்! லீடர்களை நாம் நெருங்கவும் கூட்டம் பெரிய கோஷமாகப் போடுகிறது!” என்று கூறிவிட்டு சார்ஜண்ட் ஒருவரிடம் ஓடி என்னவோ கூறினார். அடுத்த கணம் டிப்டாப்பாக உடை தறித்த ஒரு சார்ஜண்ட் டக்டக்டக் என்று பூட்ஸ் ஒலிக்க விரைந்தோடி வந்தார். அப்புசாமிக்கும் சீதாப்பாட்டிக்கும் எதிரில் நின்று ‘படீர்’ என்று ஒரு சல்யூட் அடித்தார். பிறகு, “தயவு செய்து இரண்டு பேரும் லாரியில் ஏறுங்கள்!” என்றார்.

அப்புசாமி, “ஹ! லாரியிலா! எந்த லாரியில்? ஏன் லாரியில்?” என்று விழித்தார், விதிர் விதிர்த்தார்.

“போலீஸ் லாரியில்தான்!” என்று அதிகாரி அப்புசாமியிடம் கூறினார். பிறகு, “சீக்கிரம்! நீங்களெல்லாம் பெரிய லீடர். எத்தனையோ மறியல் செய்திருப்பீர்கள். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்கும். ப்ளீஸ்! சீக்கிரம் லாரியில் ஏறுங்கள்” என்றார்.

அப்புசாமி, “சீசீ! என்னய்யாது! நாங்கள் லாரியில் ஏறமாட்டோம். எதற்கு ஏறுவது?” என்று மறுத்தார்.

அதற்குள் சார்ஜண்ட்டிடம் திடுதிடுவென்று ஓடிவந்து ஒரு போலீஸ்காரர் ஏதோ காதோடு சொல்லவும், “ஓ! அப்படியா! கூட்டம் இந்தத் திசையை நோக்கி ஓடி வருகிறதா? கல் வீச்சா! நாம் லீடர்களைக் காப்பாற்றிகாக வேண்டும். அது ரொம்ப முக்கியம்!” என்று கூறி அப்புசாமியைக் குண்டுக் கட்டாகப் பலாப் பழத்தைத் தூக்குவது போல் தூக்கிப் போலீஸ் லாரியில் போட்டார்!

அப்புசாமி, “ஆ…!” என்று அலறினார். போலீஸ் லாரியில் நீட்டிக் கொண்டிருந்த பலகை அவர் கணுக்கால் எலும்பில் பட்டுவிட்டது! உயிர் போவதைப்போல் வலி எடுத்தது.

அடுத்தபடியாக, “உம்! நீங்களும் ஏறுங்க பாட்டியம்மா சீக்கிரம்!” என்று சார்ஜண்ட் கூறவும் சீதாப்பாட்டி “ப்ளீஸ்! ப்ரிங்க் மி எ ஸ்டூல் ஆர் சேர்! ஹெல்ப் மி டு கெட் இன்டு தி லாரி! இவ்வளவு உயரமாக லாரியை வைத்துக் கொண்டு ஏறு ஏறு என்றால் எங்கே ஏறுவது!” என்று கண்டனம் தெரிவித்தாள்.

சார்ஜ்ண்ட் ஒரு கணம் அயர்ந்து போய், “ஸாரி மாடம்,” என்று சொல்லிவிட்டுப் பயபக்தியுடன் லாரிக்குள்ளிருந்து ஒரு நாற்காலியை எடுத்துத் தரையில் போட்டார்.

சீதாப்பாட்டி கம்பீரமாக ஏறி, லாரிக்குள் பிரவேசித்தாள்.

லாரி ஸ்டேஷனை நோக்கி விரைந்தது. சமையல் மேடையில் பாத்திரம் தேய்த்த புளிச்சக்கை, தேங்காய் நார் இவைகளை வைத்தால் கொசு போன்ற ஏதோ
மொய்க்கிறதல்லவா? புளிச் சக்கை மீது ஒரு டப்பாவைப் போட்டு மூடிவையுங்கள். பிறகு கொசு உங்களை மொய்க்குமே
தவிர புளிச்சக்கையை மொய்க்காது.
 

அப்புசாமி அழாத குறையாக, ‘சீதே! நிஜமாக உன்னைக் காட்டிக் கொடுக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. இவ்வளவு பெரிய அபாயம் நமக்கு வந்து விட்டதே! ஜெயிலில் முட்டியால் அடிக்கறதுண்டாமே?” என்றார்.

“அதெல்லாம் க்ரிமினல்ஸ¤க்கு. நாம் பொலிடகல் ப்ரிஸனர்ஸ்! ஏ க்ளாஸ் அல்லது பி க்ளாஸ் ஜெயில் கிடைக்கும்! தமாஷாய் பொழுது போக்குவோம்!” சீதாப்பாட்டி அமைதியாகக் கூறியதைக் கேட்டு அப்புசாமி, “சீதா! என் முழங்கால் விண் விண்ணென்று வலிக்கிறது. ஜெயிலில் நீலகிரித் தைலம் தருவார்களா? சுக்குத் தண்ணீர் சுடச் சுட வீட்டில் போட்டுத் தருவாயே, அது கிடைக்குமா ஜெயிலில். இளம் தயிரில் சர்க்கரை போட்டுக் கொண்டு சாப்பிட்டால்தானே எனக்கு ஜீர்ணமாகும்? ஜெயிலில் இதெல்லாம் கிடைக்குமா? சீதே! அரசியல் வாழ்வு நான் வேண்டேன். இந்தியை ஆதரிக்கும் எனக்கு இந்த அவலநிலையா? எப்படி நாம் ஒழுங்காக வீடு போய்ச் சேருவோம்?” என்று புலம்பினார்.

லாரி அவர் கதறலை லட்சியம் செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.

சீதாப்பாட்டி சில வினாடி மெளனமாக இருந்தாள். பிறகு, “க்யா மகராஜ்! துமாரா நாம் க்யா ஹை?” என்றாள்.

அப்புசாமிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. “சீதே! அதிர்ச்சியால் உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? ஆ! சீதே! சீதே!” என்று அலறினார்.

“யூ ஷட்டப்!” என்று சீதாப்பாட்டி அதட்டல் போட்டுவிட்டு அப்புசாமியின் ஜவ்வு மிட்டாய்க் காதைத் தன் பக்கமாக இழுத்துக் கிசுகிசுத்தாள், லாரி ஓட்டியின் காது கேட்காதவாறு.

அப்புசாமி அடுத்த வினாடி, “அச்சா! அச்சா! சீதா லட்கீ அச்சீ லட்கீ!” என்றார்.

சீதாப்பாட்டி, “கலம் வஹான் ஹை. மேஜ் பர் க்யா ஹை?” என்றாள்.

அப்புசாமி, “மேரா நாம் அப்புசாமி ஹை! துமாரா நாம் சீதா ஹை! குர்ஸீபர் நஹி பைடியே!” என்றார்.

“அரே பையா!” என்று லாரி ஓட்டியை அப்புசாமி அழைத்தார். லாரி ஓட்டி சந்து வழியாக அப்புசாமியைப் பார்த்து முறைத்தார்.

அப்புசாமி அவரிடம், “ஹமாரா தேச் பாரத் தேச்! லட்கா கஹான்ஹை, துமாரா ஸ்டேஷன் கா நாம் ஹை! இன்ஸ்பெக்டர் கஹான் ஹை! ஹம் இந்தி பட்தான் ஹ¤ம். பிதா ஜீ! ஜமீன் பர் பைடியே,’ என்று சடசடவென்று தனக்கு ஞாபகமுள்ள இந்தி வாக்கியங்களைப் பொழிந்து தள்ளினார்.

லாரி ஓட்டி, “என்னய்யா இழவு! என்னவோ இந்தியிலே சொல்கிறாயே? தெரியலியே. எல்லாம் இன்ஸ்பெக்டர்கிட்டே பேசிக்கொள்,” என்றார்.

சீதாப்பாட்டி, அன்பு சொட்ட, “பச்சா! க்யா போல்தே! டன்டா பாணி நஹி!” என்று தனக்குத் தெரிந்த இந்தி வார்த்தைகளை வீசினாள்.

போலீஸ் ஸ்டேஷன் வந்துவிட்டது. லாரி நின்றது.

அப்புசாமியும், சீதாப்பாட்டியும் லாரியிலிருந்து இறக்கி விடப்பட்டனர்.

பிரம்பை முறுக்கிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் அப்புசாமியைப் பார்த்து, “இப்படி உட்காருங்கள்,” என்றார்.

அப்புசாமி உடனே சீதாப்பாட்டியைப் பார்த்து, “சீதே! ஆவோ! தும் குர்ஸீபர் பைடியே!” என்றார்.

சீதாப்பாட்டி தான் படித்த இந்தி பால பாடங்களிலிருந்து வாக்கிங்களைக் கடகடவென்று கொட்டினாள். “ஹாத் மேன் க்யா ஹை? கிதாப் பீ மேஜ்பர் ஹை! யஹ் லட்காஹை! யஹ் காகஸ் ஹை! ஹாத்மேன் க்யா ஹை!”

!அடேயம்மா! ஒரே ‘ஹை’யாக இருக்கிறதே!” என்ற இன்ஸ்பெக்டர், அப்புசாமியிடம், “நீங்கள் இந்தி மறியலில் கைது செய்யப்பட்டவர்களா?” என்றார் சந்தேகம் தோன்ற.

அப்புசாமி கொஞ்சம் முன் மனப்பாடம் செய்த வாக்கியங்களை அவிழ்த்து விட்டார். “ஹமாரா ஹிந்தீ பட்தாம் ஹ¥ம். இன்ஸ்பெக்டர் ஜீ! தும் பாட்லிகோ! ஷீலா! தும் உடோ! மைன் மத்ரஸே பட்தாஹ¥ம்! தும் கெளன் ஹோ!”

இன்ஸ்பெக்டர் தலையைச் சொறிந்தார். “இந்த இந்தித் தம்பதிகள் என்ன பேசுகிறார்கள் என்றே தெரியவில்லையே. எதற்காக இவர்களை லாரியில் தூக்கிப் போட்டு வந்தீர்கள்?” என்றார்.

லாரி ஓட்டி, “இந்தி எதிர்ப்பாளர் சார்,” என்றார்.

அப்புசாமி “அரே பக்வான்! ஹமாரா பாஷா இந்தி! ஜூட் போல்தா! அச்சீ தர ஹ்! குச் நஹீ! வித்யார்த்தீ! பச்சோன்கீ கிதாப்! கர்மே ஆத்மீ ஹை!” என்றார்.

இன்ஸ்பெக்டர், “இவர்கள் எந்த எதிர்ப்பாளர்களாக வேண்டுமானாலும் இருக்கட்டும். முதலில் ஸ்டேஷனைவிட்டு வெளியே விரட்டிவிட்டு வா. இந்தியைத் தவிர எதுவும் பேசத் தெரியவில்லை இவர்களுக்கு. இந்தி எதிர்பபாளர்களாம்!” என்று முணுமுணுத்துவிட்டு, “நீங்கள் போகலாம்,” என்றார் அப்புசாமி தம்பதிகளைப் பார்த்து.

சீதாப்பாட்டி, “அச்சா! சாரதா தோமூகீ பஹன் ஹை!” என்று இன்ஸ்பெக்டருக்கு நன்றி செலுத்திவிட்டு நகர்ந்தாள்.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் அப்புசாமி, “அம்மாடி! பச்சோன்கியும் வேண்டாம், சிவப்போன்கியும் வேண்டாம்!” என்று கையிலிருந்த இந்தி பால பாடப் புத்தகத்தைத் தொப்பென்று போட்டார்.

சீதாப்பாட்டி, “தாங்க் காட்! இந்தப் புத்தகம் கையிலிருந்ததோ, நானும் நாலு வாக்கியம் லாரியிலேயே படித்துக்கொண்டேன்! நமக்குத் தெரிந்த இந்தி வார்த்தைகளை அவிழ்த்துவிடுவதுதான் தப்பிக்க ‘ஒன்லி வே’ என்பதும் இந்தப் புத்தகம் கண்ணில் பட்டதால்தான் ‘ஸ்டிரைக் ஆயிற்று!” என்றாள்.

“வாழ்க் பக்சோன்கி கிதாப்!” என்று அப்புசாமி சீதாப்பாட்டியை வாழ்த்தினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *