மப்பு மரியதாஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 34,854 
 
 

மணி இப்போது மாலை ஆறுதான். சனிக்கிழமை வேறு…

எட்டு மணிக்கு வீட்டில் இருந்தால் போதும். நிறைய நேரம் இருக்கிறது. போகும் வழியில் ஒரு லார்ஜ் விஸ்கி ட்ரிங் போட்டுவிட்டு வீட்டிற்கு சரியாக எட்டு மணிக்குள் போய்விடலாம்…

மரியதாஸ் உடனே செயல்பட்டான். போகிற வழியில் ஆதம்பாக்கம் ‘வீனஸ் பார் அண்ட் ரெஸ்டாரண்ட்’ உள்ளே நுழைந்தான். ஒரு லார்ஜ் டீச்சர்ஸ் விஸ்கி ஆர்டர் செய்துவிட்டு காந்திருந்தான். விஸ்கி வந்தது. மடக் மடக் என்று குடித்தான். அட, இன்னும் நேரம் இருக்கிறது. அடுத்து இன்னொரு லார்ஜ் சொன்னான். இன்னொன்று, இன்னும் ஒன்று என நான்கு லார்ஜ் அடித்து முடித்தான். அதற்குள் மணி எட்டரையாகி விட்டது.

மரியதாஸ் எப்போதுமே அப்படித்தான். விஸ்கியை மெதுவாக ரசனையுடன் ரசித்து சிப் செய்யமாட்டான். சீக்கிரமே அவசர அவசரமாகக் குடிப்பான். குடித்துவிட்டு உடனே மப்பாகி விடுவான்.

அவனுடைய பெண்டாட்டி லூர்துமேரிக்கு இவன் இப்படி ரசனையே இல்லாமல் குடிப்பது சுத்தமாகப் பிடிக்காது. எவ்வளவு ஆண்கள் மப்பு ஏறாமல் அமைதியாகக் குடிக்கிறார்கள்! ஐம்பது வயதாகியும் இந்த ஆளு இப்படி அநாகரீகமாக நடந்து கொள்கிறாரே என்று கோபம் கோபமாக வரும்.

லூர்துமேரி, தமிழ்ப்பட வில்லி சொர்ணாக்கா மாதிரி தாட்டியாக இருப்பாள். நண்பர்கள் மத்தியில் தன் கணவனுக்கு ‘மப்பு மரியதாஸ்’ என்று பெயர் வைத்திருப்பது அவளுக்குத் தெரியும். அதனாலேயே கணவன் குடித்தால் மூஞ்சி காட்டுவாள். ஞாயிறுகளில் மட்டும் கணவன் வீட்டிலேயே தனிமையில் குடித்துக்கொள்ள அனுமதி கொடுத்திருந்தாள்; அதுவும் ஒரேமகன் பதினெட்டு வயது ஜோசப்புக்கு தெரியக்கூடாது என்கிற கண்டிஷனுடன். அயல்நாடு செல்லும்போது அவளது சகோதரன் ஏர்போர்ட்டில் டியூட்டி ப்ரியில் வாங்கித் தந்த ஸ்காட்ச் விஸ்கி வீட்டில் நிறைய இருக்கிறது… அதனால் மரியதாஸ் டாஸ்மாக் கடைப்பக்கமே போகமாட்டான். ஏனோ அந்தக் கடைகளைப் பார்த்தால் அவனுக்கு பொதுக் கழிப்பிடக் கக்கூஸ்கள் மாதிரித் தோன்றும். வேலை நாட்களில் தினமும் எட்டு மணிக்குள் வீட்டில் இருக்க வேண்டும் என்று லூர்துமேரி சட்டமே போட்டிருந்தாள்.

கோபம் வந்தால், கையில் கிடைத்ததை எடுத்து கணவனை அடிக்கடி அடிப்பதும் உண்டு. அதனால் கெச்சலான உடல் வாகுடைய மரியதாஸ் மனைவிக்கு ஏராளமாகப் பயப்படுவார். ஆனால் குடி விஷயத்தில் மட்டும் அவ்வப்போது மனைவியை ஏமாற்றி ஏதாவது காரணத்தை கற்பித்துக்கொண்டு குடிப்பார். பிறகு மப்பில் மட்டையாகிவிடுவார்.

எட்டரை மணிக்கு மப்பில் ரெஸ்டாரண்டை விட்டுக் கிளம்புகையில் அவருடன் ஆபீஸில் வேலை செய்யும் சேகர் உள்ளே நுழைந்தான்.

“என்ன மரியா அதுக்குள்ளே கிளம்பிட்டே? இன்னிக்கி சனிக்கிழமைதானே? எனக்கு கம்பெனி குடு…. ஆல் த எக்ஸ்பென்சஸ் ஆன் மி…” தூண்டினான்.

“இல்ல சேகர், என் பெண்டாட்டி கத்துவா…”

“பொய் சொல்லி மனைவியை ஏமாற்ற நமக்கு கற்றுக் கொடுக்கணுமா என்ன… உன் பொண்டாட்டி மொபைல் நம்பர் கொடு…”

ஏற்கனவே மப்பில் இருந்த மரியதாஸ் யோசிக்காமல் கொடுத்தான்.

“மேடம், என் பெயர் சேகர். எங்க ஆபிஸ் பீட்டர் இன்னிக்கி சாயங்காலம் ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டாரு மேடம்… அபீஸ்லர்ந்து நாங்க எல்லாரும் நேரா பரியல் கிரவுண்டுக்கு போறோம்… அவரு பாதிரியார் கிட்ட ஏதோ பிஸியா பேசிக்கிட்டு இருக்காரு… வீட்டுக்கு வர்றதுக்கு ரொம்ப நேரமாகும். தூங்குவதற்கு முன், உங்களைக் கவனமா டோர் லாக் போட்டுக்கச் சொன்னாரு… “

“ஓ காட்… பத்திரமா அவரை வரச்சொல்லுங்க…”

அவ்வளவுதான் இருவரும் சேர்ந்து பன்னிரண்டு மணிவரை குடித்தார்கள். ஒரு பாட்டில் விஸ்கி முடிந்தவுடன், சேகர் பாட்டிலைக் குலுக்கி, ஒரு தீக்குச்சியை எரித்து உள்ளே போட்டான். அது குப்பென பற்றி எரிந்து அணைந்தது. இருவரும் சிரித்துக்கொண்டே வெளியே வந்தார்கள்.

“மரியா நான் உன்னை வீட்டில் ட்ராப் பண்ணட்டுமா?”

“போடா மழிரு, எனக்கு வளி தெரியும்…”

கால்கள் தடுமாற தள்ளாடி தள்ளாடி வீட்டை நோக்கி மெதுவாக நடந்தான்.

ஆனால் அவனால் முடியவில்லை. தெரு ஓர குப்பைத் தொட்டியில் மோதி தொட்டிக்குள் விழுந்தான். அப்படியே மட்டையாகிக் கிடந்தான். எழுந்துபோது மணி இரண்டு. முகத்தில் பலவித சிராய்ப்புகள். ரத்தம்வேறு கசிந்திருந்தது.

சற்று சுதாரித்து மெதுவாக நடந்து வீட்டின் டோர் லாக்கைத் திறந்து சப்தமில்லாமல் மாடியில் இருக்கும் தன்னுடைய பெட்ரூமிற்குள் நுழைந்து கதவைச் சாத்தினான். பாத்ரூமினுள் நுழைந்து லைட்டைப் போட்டு வாஷ்பேஸின் கண்ணாடியில் உற்றுப் பார்த்தான்.

முகத்தில் ஏராளமான சிராய்ப்புகள் இருந்தன. முகத்தைக் கழுவி பொறுமையாக பிளாஸ்டர்களை எடுத்து கண்ணாடி முன் நின்றுகொண்டு பிளாஸ்டர்களை ஓட்டினான். பிறகு படுத்துத் தூங்க ஆரம்பித்தான்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. எட்டு மணிக்கு லூர்துமேரி கோபத்துடன் வந்து அவன் தலையில் தண்ணீர் ஊத்தினாள்.

“மப்பாகி, மட்டையாகி இப்படித் தூங்கறியே, வெட்கமா இல்ல? நீ என்ன காரியம் பண்ண தெரியுமா?”

காலரைப் பிடித்துத் தூக்கி அவனை பாத்ரூமுக்கு இழுத்துச் சென்று அங்கிருந்த வாஷ்பேஸின் கண்ணாடியைக் காண்பித்தாள்.

கண்ணாடியில் ப்ளாஸ்டர்கள் ஏராளமாக ஒட்டப் பட்டிருந்தன.

இப்படித்தான் மரியாதாஸ் மனைவியிடம் அடிக்கடி மாட்டிக் கொள்வான்.

ஒருமுறை ஒரு ஞாயிறு மாலை நிறையக் குடித்துவிட்டு டைனிங் ஹாலில் மட்டையாகிவிட்டான். இரவு இரண்டு மணிக்கு கண்கள் ஜிவுஜிவுக்க தூக்கக் கலக்கத்தில் எழுந்து சிறுநீர் கழிக்கச் சென்றான்.

பாத்ரூமைத் திறந்தபோது உள்ளே லைட் எரிந்து கொண்டிருந்தது. ‘லூர்துமேரி லைட்டை அணைக்காமல் போயிருக்கிறாள்… சனியன்..’ என்று மனைவியை மனதிற்குள் (மனதிற்குள்தான்) திட்டிவிட்டு குடம் குடமாக யூரின் போனான். பாத்ரூம் கதவைச் சாத்திவிட்டு நிதானமாக பெட்ரூம் சென்று மறுபடியும் தூக்கத்தில் ஆழ்ந்தான். .

மறுநாள் காலையில் லூர்துமேரி அவனை பிஞ்ச விளக்கு மாற்றால் அடித்து எழுப்பினாள்.

“என்ன ரொம்பத்தான், நேற்று சண்டேதானே அதனால குடித்தேன்…”

“அடி செருப்பால, யோவ் நேத்து ராத்திரி நீ மூத்திரம் போனது நம்ம வீட்டு ப்ரிட்ஜ்ஜுக்குள்ள…”

இப்படியாக ‘மப்பு மரியதாஸ்’ மிகப் பிரசித்தம்.

ஒரு சனிக்கிழமை லூர்துமேரி தன் சகோதரனைப் பார்த்துவர வில்லிவாக்கம் சென்றிருந்தாள். ஞாயிறு மாலைதான் திரும்பி வருவாள். உடனே நம்ம மரியதாசுக்கு ஒரு ஐடியா தோன்றியது. அவள் இல்லாத நேரத்தில் ஒரேமகன் ஜோசப்பை குடிக்க வைத்து பாப்டைஸ் பண்ணினால் என்ன? வயசும் பதினெட்டாகி விட்டது… அவனும் எல்லாம் தெரிந்து கொள்ளட்டுமே!?

அவனை அன்று மாலை ‘வீனஸ் பார் அண்ட் ரெஸ்டாரண்ட்’ கூட்டிச் சென்றான். வோட்காவில் பாப்டைஸ் செய்தால் நல்லது என்று தோன்றியது. உடனே இரண்டு லார்ஜ் வோட்கா, ஸ்ப்ரைட் ஆர்டர் செய்தான்.

அப்பனும் மவனும் குடிக்க ஆரம்பித்தார்கள்.

சற்று நேரத்தில் ஜோசப்புக்கு ஒரு பெக் உள்ளே போனதும், “அப்பா, எனக்கு ஒரு சந்தேகம்…” என்றான்.

“என்னடா தைரியமாகக் கேள். கூச்சப்படாத.”

“இப்ப நான் இரண்டாவது பெக் வந்துட்டேன்… நான் எப்ப நிறுத்தனும்?”

“இதோ பக்கத்து டேபிளில் நான்கு பேர் உட்கார்ந்திருக்கிறார்களே, அவர்கள் உனக்கு எப்போது எட்டு பேராகத் தெரிய ஆரம்பிக்கிறார்களோ, அப்ப யு ஸ்டாப் ட்ரிங்கிங்…”

“அப்பா, அங்க ரெண்டு பேர்தான் இப்போது உட்கார்ந்திருக்கிறார்கள்…”

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *