மனைமாட்சியில் குல்குல் சில்மல் கல்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 13, 2022
பார்வையிட்டோர்: 11,908 
 

சென்ற மாதம் எனது தம்பியின் திருமணத்துக்கு அழைப்பதற்காக இஷ்டமித்ர பந்துக்கள், நண்பர்களின் ‘ஆண்ட்டனா’ கொடியேற்றப்பட்ட வீடுகளுக்குச் சூறாவளி சுற்றுப் பயணம் செய்யவேண்டி வந்தது. இதில் ஒரு ஆச்சரியம் : அழைக்க நுழைந்த எங்களை எல்லா வீடுகளும் சிங்கள மொழியில் வரவேற்றதுதான்! அதாவது, எல்லா வீடுகளிலும் நமது சுதேசி டி.வி. பெட்டிகளில் மாற்றான் தோட்டத்து மல்லிகையான ‘ரூபவாகினி’ மணம் வீசிக்கொண்டிருந்தாள்!

வான மண்டல அலைவரிசையில் சூட்சும சரீரத்தில் சஞ்சரிக்கும் இந்தக் கள்ளி ரூபவாகினியைத் தனது தொலைக்காட்சிப் பெட்டியின் வாயிலாகத் தரிசிப்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் நூற்றுக் கணக்கில் செலவழித்து ஒரு எலெக்ட்ரானிக் யாகமே நடத்திக் கொண்டிருந்தார்கள்.

குழாயில் தண்ணீர் வராவிட்டால் கூடப் பரவாயில்லை ; டி.வி-யில் சிலோன் தெரியாவிட்டால் அதைப் பெருத்த அவமானமாகக் கருதும் அளவுக்கு ரூபவாகினி’ அவர்களை மயக்கியிருந்தாள்.

ரூபவாகினியை ஈர்ப்பதற்காகச் சிலர் ஆண்ட்ட னா பூஸ்ட்டர் என்று கம்பி கம்பியாகச் சாதனங்களை நிரப்பியதால் அசப்பில் பார்ப்பதற்கு அவர்கள் வீட்டு மொட்டை மாடி ஒரு சிறிய அளவு பவர் ஸ்டேஷன் போலத் தோற்றமளித்தது. தலை தீபாவளிக்கு மாமனார் கொடுத்த டி.வி-யில் இலங்கை தெரியாததால் மாப்பிள்ளை மனஸ்தாபம் என்ற செய்தியை எங்கோ படித்ததாகக்கூட நினைவு.

சிலுக்கைவிட பாப்புலரான இந்த ‘ரூபவாகினி’ சில நண்பர்கள் வீட்டு டி.வி-களில் தனது பூத உடலை (வீடியோ) மறைத்து நாதஸ்வரூபத்தை (ஆடியோ….) மட்டும் காட்டி அவர்களை அழவைக்கிறாள்.

வேறு சில டி.வி-களில் உருவத்தை மட்டும் காட்டி மௌனம் சாதிக்கிறாளாம். ரூபவாகினியின் ஒலி, ஒளி இரண்டும் தெரிவதற்காக எனது நண்பர் ஒருவர் தாம் தனிப்பட்ட முறையில் மொட்டை மாடியில் ஒரு டவர் கட்டப் போவதாகப் பேச்சுவாக்கில் கூறினார்.

நமது முதல் தாரமான சென்னை தொலைக்காட்சியை டைவர்ஸ் செய்துவிட்டு நாம் ஏன் அவசர அவசரமாக இரண்டாம் தாரமாக ரூபவாகினியின் கழுத்தில் பூஸ்ட்டர் கட்டி மூன்று முடிச்சு போட்டோம்..?

பதில் அறிய சிங்களத் தீவினுக்கோர் பாலமே அமைத்துள்ள நண்பர் வீட்டில் ஒரு வாரம் சிலோன் டி.வி. பார்த்தேன். நிகழ்ச்சிகள் துல்லியமாகத் தெரிந்தன. சும்மா சொல்லக்கூடாது! ரூபவாகினி தாரத்தில் வேண்டுமானால் இரண்டாவதாக இருக்கலாம். தரத்தில் அவள் முதல் தான்…

ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக, இரண்டு வாரங்கள் (இரண்டாவது வாரம் பல்லைக் கடித்துக்கொண்டு) தொடர்ந்து சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்த அனுபவத்தில் மூன்றாவது வார நிகழ்ச்சிகள் என்னவாக இருக்கும் என்று கற்பனையில் ஊகித்துக் கூறுகிறேன். கேளுங்கள்…

பயந்த சுபாவம் உள்ளவர்கள், பலவீன இருதயம் கொண்டவர்கள், சிறுவர்கள், வயதானவர்கள் தயவு செய்து மேலே படிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கண்மணிப் பூங்கா: இந்த நிகழ்ச்சியை வாரா வாரம் நடத்துபவர் குழந்தை நேயர்களுக்குப் புரிய வேண்டுமே என்ற அதீத ஜாக்கிரதையில் காக்கா நரி கதையை மழலையில் கீழ்க்கண்டவாறு சொன்னார்கள்.

காக்கா வாய்ல வதையை வெச்சுண்டிருந்ததாம். அப்ப நதி வந்து ‘காக்கா காக்கா, பாத்து பாதேன்’னு கேத்துதாம்; காக்கா பாத…வதை விதுந்துதாம்…நதி வதையை கபக்குனு எதுத்துண்டு வாய்ல கவ்விந்து போயிதுத்தாம்….’

டி.வி. பார்க்க வந்திருந்த பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் என்னிடம் ‘மாமா… வாசல்ல விளையாடிண்டிருக்கோம். ‘ஒலியும் ஒளியும் வந்தா கூப்பிடுங்கோ’ன்னு சொல்லிவிட்டு எப்போதோ ஓடியாகிவிட்டது. நான் மட்டும் தான் அமர்ந்திருந்தேன். பாவம், நிகழ்ச்சி நடத்தியவர் இந்த ரேட்டில் மழலையை உச்சரிக்க ஆரம்பித்தால் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குத் தவழ்ந்து தான் செல்லவேண்டி வரும்.

வயலும் வாழ்வும்: ஐ.ஆர். எட்டு தலை விரித்து ஆடிப் பசுமைப் புரட்சி செய்யும் மகத்துவம் பற்றியும், யூரியா, பாஸ்பேட் போன்ற உரங்களின் உன்னதம் பற்றியும் உழவர் சின்னானோடு நிகழ்ச்சி நடத்துபவர் பேட்டி…. பேட்டி இயற்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக வயலுக்கு நடுவிலேயே எடுத்திருப்பதால் பேட்டியைவிட டிராக்டர் சத்தமும் பம்பு செட்டு சத்தமும்தான் பெரிதாகக் கேட்கின்றன.

கேள்வி : சின்னான், உங்க பேர் என்ன சொன்னீங்க….? பதில் : எம் பேர் சின்னான்க. கேள்வி : உங்களுக்கு எத்தனைப் பசங்க…? பதில் : (சின்னான் முகத்தில் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பரவ…) எட்டுங்க.

கேள்வி: ஐ.ஆர். எட்டு போல பசங்களும் எட்டுனு சொல்லுங்க. (நிகழ்ச்சி நடத்துபவர் முகத்தில் சுபாவமாக ஹாஸ்யத்தைப் பேட்டியில் புகுத்திவிட்ட பெருமிதம் தெரிகிறது.)

கேள்வி: சின்னான்! நீங்க டி.வி-ல எந்த நிகழ்ச்சியை விரும்பிப் பாப்பீங்க?

பதில் : ஒலியும் ஒளியும்.க…..

கேள்வி : வயலும் வாழ்வும் பாக்க மாட்டீங்களா…? (நிகழ்ச்சி நடத்துபவர் குரலில் ஆதங்கம் தெரிகிறது.)

பதில் : அதான் பொழுது விடிஞ்சு பொழுது போனா வயல்ல கஷ்டப்படறோமே…அதையே மறுபடி டி.வி-ல பாக்கறதுல என்ன இருக்கு?

(வயலும் சின்னானும் மறைகின்றன. நிகழ்ச்சி நடத்துபவர் க்ளோஸ் அப்பில் வந்து….) நேயர்களே, ஐ.ஆர். எட்டு பற்றியும், யூரியா பாஸ்பேட் பற்றியும் பேட்டி அளித்த சின்னான் அடுத்த வாரம் கேழ்வரகு, கம்பு பயிரிடுதலைப் பற்றி உங்களுக்கு விளக்குவார்…

மனை மாட்சி : குடும்பப் பெண்மணி குமுதா கோபாலன் தனது இரண்டு வருட சமையற்கட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடித்த குல் குல் சில் மல் கல் இனிப்பைப் பற்றி நேயர்களுக்குக் கூற வருகிறார். வழக்கம் போல நிலையப் பெண்மணி நிர்மலா நடராஜன் பேட்டி காண்கிறார்.

நி.ந. (திடீரென்று) பேர் என்ன?

கு. கோ.: குமுதா கோபாலன்.

நி.ந .. (கண்களில் நீர் தளும்பச் சிரித்துவிட்டு…) உங்க பேரைக் கேக்கலை, நீங்க கண்டுபிடிச்ச இனிப்போட பேரைக் கேட்டேன்.

கு.கோ.: (முகத்தில் பொய்யான கோபத்தோடு…) நீங்க ஆனாலும் ரொம்ப குறும்பு… இந்த இனிப்போட பேர் ‘குல் குல் சில் மல் கல்…’

நி.ந.: (நாக்கை அசம்பாவிதமாகச் சப்புக் கொட்டி…) பேரைக் கேக்கறச்சேயே நாக்குல ஜலம் தளும்பறது. ஆமாம், இதை எப்படித் தயாரிக்கிறது…?

கு.கோ . இதைத் தயாரிக்கறது ரொம்ப சுலபம். நி.ந… இவ்வளவு சுலபமா இந்த இனிப்பை உங்களால் எப்படித் தயாரிக்க முடிஞ்சது…?

கு.கோ.. நீங்க நெனைக்கறா மாதிரி இது அவ்வளவு சுலபமான காரியமில்லை. ரொம்பக் கஷ்டப்பட்டுப் பொறுமையா செய்யணும்.

நி.ந .: அப்ப , இந்த இனிப்பைச் செய்ய பொறுமை வேணும்கறீங்க…..

கு. கோ.: நீங்க நெனைக்கற அளவு பொறுமை தேவையில்லை. நெனைச்சா வேகமாகக்கூட இந்த இனிப்பைச் செய்யலாம்.

நி.ந.: அப்ப விருந்தாளிங்க வந்துட்டா அவசரத்துக்கு ‘குல் குல் சில் மல் கல்’ செஞ்சு தரலாம்னு சொல்லுங்க….

கு. கோ.: நோ நோ… அந்த அளவு அவசரமெல்லாம் பட்டா இதைச் சரியாக செய்ய முடியாது. ஓரளவு அவசரமா இதைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டா நாம அப்ப பொறுமையா, நிதானமா வேகவேகமா செஞ்சுடலாம்.

நி.ந.: நேயர்களே! இதுவரை குமுதா கோபாலன் குல் குல் சில் மல் கல்’ இனிப்பு செய்வது பற்றி விளக்கினார்கள். அடுத்தவாரம் இதே பகுதியில் பங்கஜம் பலராமன் அவர்கள் சுட சுட கர கரப்ரியா’ என்ற கார வகையைப் பற்றிக் கூறுவார்கள்.

நாடகம் : விதியின் பாரபட்சமற்ற தன்மையை யதார்த்தமாக விளக்கும் ‘பன்னீர் சோடா’ நாடகம்……

காட்சி 1: சிறுவன் முத்து : தேம்பித் தேம்பி அழுதுகொண்டே) ஆத்தா, தாகமா இருக்கு…முப்பது பைசா கொடு , பன்னீர் சோடா சாப்பிடணும்…

ஆத்தா : (விசித்து விசித்து அழுது கொண்டே) கொட்டற இந்த வறுமைல உனக்குப் பன்னீர் சோடா எப்படிடா நான் வாங்கிக் கொடுப்பேன்…? (திடீரென்று கோபாவேசமாகி….) நீ பொறந்த வேளை அப்பனை முழுங்கிட்ட… இப்ப பன்னீர் சோடா முழுங்கணுமா மூதேவி … (என்று கூறிக்கொண்டே மகன் முத்துவை மொத்துகிறாள். முத்து அழுது கொண்டே ஓடுகிறான்…)

காட்சி 2: சுரேஷ்: (பணக்கார வீட்டுப் பையன்) மம்மி… சம்மருக்கு ரொம்ப தேர்ஸ்டியா இருக்கு… பக்கத்துக் கடைல போய் பன்னீர் சோடா சாப்பிட்டுட்டு வரேன் … சேஞ்ச் இருந்தா கொடு…

மம்மி : இந்தாடா சுரேஷ் நூறு ரூபாய்… போய் ஜில்லுனு பன்னீர் சோடா சாப்பிடு…..

(சுரேஷ் விசிலடித்துக் கொண்டே பன்னீர் சோடா சாப்பிடப் போகும் சந்தோஷத்தைக் காட்டுகிறான்.)

காட்சி 3: (ஆத்தாவின் அடி பொறுக்க முடியாமல் ஓடும் முத்துவின் மீது பன்னீர் சோடா சாப்பிட வந்த சுரேஷின் கார் ஏறுகிறது…)

முத்து: (வீதியில் அடிபட்டு மயங்கிய நிலையில் உளறுகிறான்) பன்னீர் சோடா, பன்னீர் சோடா….

முத்துவின் கடைசி ஆசையைத் தீர்க்க பன்னீர் சோடா வாங்கி வந்து அதை உடைக்கிறான் சுரேஷ்.

வாயு அழுத்தத்தின் காரணமாக, பன்னீர் சோடா பாட்டில் தூள் தூளாக உடைந்து சுரேஷின் முகத்திலும் மார்பிலும் கண்ணாடித் துகள்கள் பதிந்து அவன் உயிருக்கே உலை வைக்கிறது. சுரேஷின் உயிர் பிரிந்த அதே சமயத்தில் முத்துவின் உயிரும் பிரிகிறது… இருவரும் வீதியில் கை கோத்தபடி இறந்து கிடக்கிறார்கள். பன்னீர் சோடா பாட்டில் அருகே உடைந்து கிடக்கிறது….

பி.கு: டி.வி. வந்த பிறகு மேடை நாடகங்கள் பாதிக்கப்பட்டு விட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். பார்க்கப் போனால் பன்னீர் சோடா’ போன்ற நாடகங்களினால் டி.வி.யே பாதிக்கப்பட்டு இருக்கிறது. மலரும் நினைவுகள் : கிட்டத்தட்ட எண்பது வயதான குந்தளாதேவியை’ கனகாரியமாக வீல் சேரில் அமர்த்தி நிலையத்துக்கு அழைத்துவந்து அவளுடைய நினைவுகளை மிகவும் சிரமப்பட்டு நிலைய பெண்மணி மலர வைத்தார்….

நிலைய பெண்மணி : குந்தளாதேவி அவர்களே! நீங்கள் கடைசியாக நடித்த படத்தில் உங்களோடு நடித்த கதாநாயகர் யார்…?

குந்தளாதேவி : (ஹியரிங் எய்டைச் சாவகாசமாகக் காதில் பொருத்தி) என்ன கேட்டீர்கள்?

நி.பெ.: நீங்கள் கடைசியாக நடித்த படம் பற்றி எதாவது கூறுங்களேன்…

கு.தே : நான் கடைசியா நடித்த படத்துல எம். கே. தியாகராஜ பாகவதருக்கு அம்மாவா நடித்தேன் …

நி.பெ : அதுலேருந்து ஒரு சீனை இப்ப நாம் பார்ப்போமா…? (எம். கே. தியாகராஜ பாகவதர் பாடுகிறார். குந்தளாதேவி ஒரு மூலையில் அமர்ந்து மெய்ம்மறந்து தோசை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.)

நி.பெ.: (கண்களைத் துடைத்துக் கொண்டே) நிஜமாவே இந்த சீன்ல நீங்க என்னை நெகிழ வச்சுட்டீங்க…..

கு.தே.: (சிறிது நேரம் பயங்கரமாக இருமி விட்டு, பின் ஆசுவாசப்படுத்திக்கொண்டு) இப்ப பாத்தீங்களே தோசை வார்க்கற சீன்… அப்ப நான் நெஜமாவே தோசை வார்த்தேன். அந்தக் காலத்துல டூப்லாம் கிடையாது. ஒரு வாரம் தோசை வார்க்க ப்ராக்டிஸ் பண்ணிகிட்டுதான் செட்டுக்கே வந்தேன்…. எம். கே. தியாகராஜ பாகவதருக்கே புல்லரிச்சுப் போச்சு…

நி.பெ.: உங்களுக்கு இப்ப என்ன வயசாறது…. நேயர்களுக்குச் சொல்ல முடியுமா…?

கு. தே.: திருநீலகண்டர்ல நடிக்கறச்சே எனக்குப் பதினெட்டு வயசு… இப்ப என்ன ஆறதுன்னு நீங்களே கணக்கு போட்டுக்குங்களேன்.

நி.பெ : திருநீலகண்டர் எந்த வருஷம் வெளிவந்தது…

கு.தே : இப்பதான் ஒரு அஞ்சாறு வருஷம் ஆயிருக்கும்.

நி.பெ.: (நிலைமையைச் சமாளிக்க நிலைய பெண்மணி பேச்சைத் திசை திருப்பினார்) நீங்க முதன் முதல்ல நடிச்ச படத்துலேந்து ஒரு வசன காட்சியைப் பார்க்கலாமா…?

கு.தே.: பார்க்க முடியாது… ஏன்னா, நான் நடிச்ச மொதல் படத்தில் வசனமே கிடையாது…அது ஒரு மௌனப் படம்.

(இதற்கு மேலும் வேலை வெட்டி இல்லாதவர்கள் தான் தொடர்ந்து குந்தளாதேவியின் மலரும் நினைவைக் கேட்பார்கள் என்று அடித்துச் சொல்லலாம்…)

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *