மணமகள் தேடிய மணமகன் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 1,926 
 
 

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன மணமகள் தேடிய மணமகன் கதை

“விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டுவர, அது அவருக்குச் சொன்ன பதினெட்டாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ஐம்பது வயதைக் கடந்த பிரமுகர் ஒருவர் ஐயம்பேட்டையிலே உண்டு. ‘அம்பலவாணர், அம்பலவாணர்’ என்று அழைக்கப்பட்டு, வந்த அவருக்கு மனைவி இல்லை; ‘அம்சா, அம்சா’ என்று ஒரு மகள் மட்டுமே உண்டு. அந்த மகளாகப்பட்டவள் பட்டணத்திலே விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருக்க, இவராகப்பட்டவர் இங்கே ஒரு சமையற்காரனை மட்டும் வேலைக்கு வைத்துக்கொண்டு தனியாக இருந்து வருவாராயினர். அந்த வயதில் அவருக்குத் தனிமை கசக்காமல் இருந்திருக்கலாம். ஏனோ தெரியவில்லை; கசந்தது. அதற்காக நாலுபேருக்குத் தெரிந்து பெண் தேடவும் அவருக்கு வெட்கமாகயிருக்கவே, அந்தக் காரியத்தை அவர் ரகசியமாக செய்ய விரும்பினார். ‘அதற்கு என்ன வழி!’ என்று யோசித்துக்கொண்டே, ஒரு நாள் அவர் தினசரிப் பத்திரிகையொன்றைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதிலிருந்த ‘மணமகள் தேவை’ என்ற விளம்பரம் அன்னார் கண்ணில்பட, ‘அதுவே வழி, அதுவே வழி’ என்று அந்த வழியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அதற்குமேல் செய்ய வேண்டிய முயற்சியை அவர் காதும் காதும் வைத்தாற்போல் செய்வாராயினர்.

⁠‘ஐம்பது வயதுள்ள ஒருவருக்கு இருபத்தைந்து
வயதிலிருந்து முப்பது வயதுக்குள் ஒரு மணமகள்
தேவை. அவள் கன்னிப் பெண்ணாய்த்தான்
இருக்க வேண்டும் என்பதில்லை; விதவையாகவோ,
விவாகரத்துச் செய்து கொண்டவளாகவோகூட
இருக்கலாம். எழுதவும்: பெட்டி எண் 888, ‘டிங்-டாங்’
சென்னை-2’

இந்த விதமாகத்தானே விளம்பரம் செய்துவிட்டு அம்பலவாணராகப்பட்டவர் ஒவ்வொரு விநாடியும் தபாற்காரரை எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அதற்கு முதல் தடவையாக வந்த பதில் கடிதங்களிலெல்லாம், ‘ஏ கிழவா, உனக்கு இன்னுமா கலியான ஆசை தீரவில்லை?’ என்றும், ‘அரை நூற்றாண்டு காலம் வாழ்ந்து விட்டாயே, அது போதாதா?’ என்றும் இருக்கவே, அவர் மனம் உடைந்து, ‘இதற்குத்தான் ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் வீட்டில் இருக்கக் கூடாதென்றும், காட்டுக்குப் போய்விடவேண்டும் என்றும் அந்தக் காலத்தில் பெரியவர்கள் அனுபவப்பூர்வமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்போல் இருக்கிறது!’ என்று அவர் வேத கால வாழ்க்கையை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கையில், இரண்டாவது தடவையாக வந்த பதில் கடிதங்களில் ஒன்று அவருடைய இதயத்தில் இன்பக் கிளுகிளுப்பை மூட்டவே, அதை ஒரு முறைக்கு இரு முறையாக அவர் விழுந்து விழுந்து படித்துச் சுவைப்பாராயினர்:

⁠“என் பெயர் ஆனந்தி; வயது இருபத்து நாலே
முக்கால் அரைக்கால்-அதாகப்பட்டது, தாங்கள்
கேட்டிருந்த வயதிலே அரைக்கால் குறைவாகவே
என் வயது ஆகிறது. எனக்காகக் கடிதம் எழுத வேறு
யாரும் இல்லாததால் நானே எழுதுகிறேன். சும்மா
எழுதுவதாக நினைத்துவிடாதீர்கள்; வெட்கப்பட்டுக்
கொண்டுதான் எழுதுகிறேன். நான் கன்னிப்
பெண்ணல்ல; கைம்பெண்ணுமல்ல, ‘வேறு என்ன
பெண்?’ என்று கேட்பீர்கள். விவாகமான பெண். ஆம்,
எனக்குக் கணவர் என்று ஒருவர் இன்னும் இருக்கிறார்.
அவர் அடிக்கடி பொடி போடுவார். தாம் போடுவதோடு
நிற்காமல் சில சமயம் எனக்கும் போட்டு, ‘அச், அச்!’
என்று என்னையும் நாலு தும்மல் தும்ம
வைப்பதில் அவருக்கு ஓர் அலாதி ஆனந்தம். அந்த
ஆனந்தம் எனக்குப் பிடிக்கவில்லை. சொல்லிப்
பார்த்தேன்; கேட்கவில்லை. ஆகவே, வேறு
வழியின்றி அவரிடமிருந்து விவாகரத்துக் கோரி
வழக்குத் தொடர்ந்தேன். விசாரணையெல்லாம்
முடிந்து தீர்ப்புக் கூறும் தறுவாயில் அந்த வழக்கு
இருந்து கொண்டிருக்கிறது. தற்போது நானும்
தனியாகத்தான் இருக்கிறேன். எனக்கும் தனிமை
கசக்கத்தான் கசக்கிறது. தாங்கள் விரும்பினால்
தங்களை நான் நேரில் வந்து சந்திக்கத் தயார்.
ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. நம்முடைய விவாகம்
மட்டும் என்னுடைய விவாகரத்துக்குப் பின்னரே
நடக்க வேண்டும். சம்மதமாயின் எழுதவும். மற்றவை
நேரில் – ஆனந்தி’
இப்படியாகத்தானே எழுதியிருந்த அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்க அம்பலவாணருக்கு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. மேலே, இன்னும் மேலே, மேலே மேலே இன்னும் மேலே மேலே என்று அவர் பறந்துகொண்டிருக்கையில், ‘சார், தந்தி!’ என்று சைக்கிள் மணி ஒலியுடன் தந்திச் சேவகன் ஒருவனின் குரலும் வாசலிலிருந்து கலந்து வர, ‘வா, உள்ளே!’ என்று வேண்டா வெறுப்புடன் அவனை வரவேற்று, அவனிடமிருந்த தந்தியை விரும்பா மனத்துடன் வாங்கிக்கொண்டு, அவர் அவனை வெளியே அனுப்பி வைப்பாராயினர்.

தந்தியில் கண்டிருந்ததாவது:

⁠‘அப்பா, எனக்குக் கோடை விடுமுறை விட்டு
விட்டார்கள். நாளைக் காலை நான் ஊருக்கு
வருகிறேன். ஸ்டேஷனுக்கு வண்டி அனுப்பி
வைக்கவும் -அம்சா.’

இந்தத் தந்தியைப் படித்ததும், ‘போயும் போயும் இப்பொழுதுதானா இவளுக்குக் கோடை விடுமுறை விட வேண்டும்? அந்தக் காரியத்தை இவளுக்குத் தெரிந்து செய்வது அவ்வளவு நன்றாயிராது போல் இருக்கிறதே! இதற்கு என்ன செய்யலாம்?’ என்று ஒரு கணம் யோசித்து, மறுகணம், ‘இவள் இங்கே வந்து இருக்கப் போவதோ இரண்டே மாதங்கள்; அந்த இரண்டு மாதங்களைத் தாங்கும் அளவுக்கு இவளிடம் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி வைத்துவிட்டால் போகிறது!’ ‘பிறருக்கு நன்மை தருமாயின் பொய் சொல்லலாம்’ என்று சொன்னவர்கள், ‘தனக்கு நன்மை தரும் என்றாலும் பொய் சொல்லலாம்’ என்று சொல்லாமல் விட்டது யார் குற்றம்? அவர்கள் குற்றமா, தன் குற்றமா? விடு, கவலையை! இன்றே ஆனந்திக்கு எழுது ஒரு கடிதத்தை, ஆனந்தமாக!’ என்று தம்மைத் தாமே தைரியப் படுத்திக்கொண்டு, அன்னார் அந்த ஏந்திழைக்கு அக்கணமே ஓர் எழில் மடல் தீட்டுவாராயினர். ‘அன்புள்ள என்று ஆரம்பித்த அவர், ‘அதற்குள் அன்பாவது, ஆசையாவது?’ என்று அந்தக் கடிதத்தைக் கிழித்து எறிந்துவிட்டு, இன்னொரு கடிதத்தை எடுத்து எழுதியதாவது:

⁠‘ஆனந்திக்கு, உன் கடிதம் கிடைத்தது.
என்னுடைய முதல் மனைவி என்ன சொன்னாலும்
தலையாட்டிக் கொண்டிருந்த அனுபவம் எனக்கு
ஏற்கெனவே நிறைய உண்டு. நீ எதற்கும் அஞ்ச
வேண்டாம். நான் சொல்வதற்கெல்லாம் நீ தலை
யாட்டுவதாயிருந்தால், நீ சொல்வதற் கெல்லாம்
நானும் தலையாட்டத் தயார்! தயார்! தயார்! உடனே
புறப்பட்டு வா! புறப்படுவதற்கு முன்னால் எனக்கு
ஒரு கடிதம் எழுது. அடையாளத்துக்காக, ‘வயோதி
கத்தில் வாலிபராகத் திகழ்வது எப்படி?’ என்ற
புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு நான்
முதல் வகுப்புப் பிரயாணிகள் அறையில் உட்கார்ந்
திருக்கிறேன். நீயும் பச்சை நிறப் புடைவையைக்
கட்டிக்கொண்டு வா; ஒருவரை ஒருவர் உடனே
தெரிந்து கொள்ள அது கொஞ்சம் உதவியாயிருக்கும்.
மற்றவை நேரில் – அம்பலவாணர்.’

இந்தவிதமாகத்தானே அன்றே ஆனந்திக்கு அவசர அவசரமாக ஒரு கடிதத்தை எழுதிப் போட்டுவிட்டு, அடுத்த நாள் காலையிலிருந்தே அவர் மீண்டும் விநாடிக்கு விநாடி தபாற்காரரை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அந்தத் தபாற்காரருக்குப் பதிலாக அவருடைய மகள் அம்சா அவருக்கு எதிர்த்தாற்போல் வந்து நின்று, ‘என்ன அப்பா, இப்படிச் செய்துவிட்டீர்களே? ஸ்டேஷனுக்கு வண்டி அனுப்பச் சொன்னால் அனுப்பவேயில்லையே?’ என்று அங்கலாய்க்க, ‘மறந்து விட்டேன், அம்மா! வயதாகி விட்டதோ இல்லையோ?’ என்று அதற்கு மட்டும் தம் வயதின்மேல் பழியைப் போட்டு, அவர் அவளிடமிருந்து தப்பித்துக் கொள்வாராயினர். எண்ணி இரண்டு நாட்கள்கூட ஆகவில்லை; வந்து விட்டது, ஆனந்தியிடமிருந்து அம்பலவாணருக்குப் பதில் வந்தே விட்டது. அந்தப் பதிலில் கண்டிருந்ததாவது:

‘அன்புள்ள அத்தானுக்கு, அடியாள் வணக்கம்……

அவ்வளவுதான்; அதற்கு மேல் அந்தக் கடிதத்தை அம்பலவாணரால் உடனே தொடர்ந்து படிக்க முடியவில்லை. தம்முடைய உச்சி முடியில் நான்கைச் சேர்த்துப் பிடித்து யாரோ தூக்குவது போல் அவருக்கு ‘ஜிவ்’ வென்று ஓர் உணர்ச்சி; தம்மையும் அறியாமல் குலுங்கிய தம் உடம்பை அவர் ஒரு முறை தடவி விட்டுக் கொண்டு, மேலே படிக்கலானார்:

⁠…….நீங்கள் சொன்னது சொன்னபடி பச்சைப்
புடைவை கட்டிக்கொண்டு நாளைக் காலை நான்
ஐயம்பேட்டைக்கு வருகிறேன். நீங்களும் மறக்காமல்
‘வயோதிகத்தில் வாலிபராகத் திகழ்வது எப்படி?’
என்ற புத்தகத்துடன் ஸ்டேஷனுக்கு வந்து முதல்
வகுப்புப் பிரயாணிகள் அறையில் இருங்கள்.
மற்றவை நேரில் – ஆசை முத்தங்களுடன், ஆனந்தி.’

இதைப் படித்ததும் அவருக்கே ஒரு மாதிரியாகப் போய், “சீச்சீச்சீ!’ என்று முகத்தைச் சுளிக்க, ‘என்ன அப்பா, என்ன?’ என்று அதுகாலை அங்கே வந்த அம்சா கேட்க, ‘ஒன்றும் இல்லை, அம்மா! பட்டணத்து நண்பர் ஒருவர் ஏதோ வியாபார விஷயமாக உலகம் சுற்றப் போகிறாராம். வர இரண்டு மாதங்கள் ஆகுமாம். அவருக்கு ஒரு வாழா வெட்டித் தங்கை. ‘நான் வரும் வரை அவள் உங்கள் வீட்டில் இருக்கட்டும்’ என்று அவர் எனக்கு எழுதியிருந்தார். ‘சரி, அனுப்பி வையுங்கள்!’ என்று நான் எழுதியிருந்தேன். அவள் நாளைக் காலை வருகிறாளாம். ‘ஊருக்குப் புதுசாகையால் மறக்காமல் ஸ்டேஷனுக்கு வாருங்கள்; கூச்சப்பட்டுக் கொண்டு வராமல் இருந்துவிடாதீர்கள்!’ என்று அவள் எழுதியிருக்கிறாள். இந்த வயதில் எனக்கென்ன கூச்சம்? அதனால்தான் ‘சீச்சீச்சீ!’ என்றேன்!’ என்று நாளை சொல்லவிருந்த பொய்யை இன்றே சொல்லி, அவர் அவளைச் சமாளிப்பாராயினர்.

மறுநாள் காலை ஏற்கெனவே திட்டமிட்டபடி அம்பலவாணரும் ஆனந்தியும் முதல் வகுப்புப் பிரயாணிகள் அறையில் சந்திக்க, ‘நீங்கள்தானே பெட்டி எண் எட்டு எட்டு எட்டு?’ என்று அவள் அவரைக் கேட்க, ‘ஆமாம், நானேதான் அந்த எட்டு எட்டு எட்டு!’ என்று அவர் கொஞ்சம் எட்டி நின்றே நெளிய, அவள் கொஞ்சம் கிட்ட வந்து, ‘ஏன் இப்படி நெளிகிறீர்கள்? இங்கேதான் இந்தக் கூத்தெல்லாம்! மேல் நாட்டில் அறுபது எழுபது வயது கிழவர்கள்கூட ‘டீன் ஏஜர்’சைக் கலியாணம் செய்துகொள்கிறார்களே, அவர்களெல்லாம் இப்படியா நெளிகிறார்கள்?’ என்று சிரித்துக் கொண்டே அவருடைய தொந்தியின்மேல் ஒரு செல்லத் தட்டுத் தட்ட, ஐயோ, தட்டாதே! என்னை என்னவோ பண்ணுகிறது!’ என்று அவர் பின்னும் நெளிந்து, ‘ஆமாம், உன்னுடைய மாஜி கணவர் யார்? அவர் இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்?’ என்று கேட்க, ‘அவர் ஒரு குஸ்தி பயில்வான்; சென்னையில் இருக்கிறார். முதல் பந்தயத்தில் எதிரியின் முப்பத்திரண்டு எலும்புகளை முறித்த அவர், அடுத்த பந்தயத்தில் அறுபத்து நாலு எலும்புகளையாவது முறிக்க வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் அயராமல் ‘கசரத்’ செய்துகொண்டிருக்கிறார்!’ என்று அவள் சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டு அவருடைய முகத்தைப் பார்க்க, அதைக் கேட்டு, ‘ஆ!’ என்று வாயைப் பிளந்த அவர் அப்படியே மூர்ச்சை போட்டுக் கீழே விழுவாராயினர்.

அவள் ‘இடி, இடி’, என்று சிரித்துக் கொண்டே அவரைத் தூக்கி உட்கார வைத்து, முகத்தில் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து முந்தானையால் விசிற, அவர் கண் விழித்து, ‘இதென்ன வம்பு? என் விலாசம் அவனுக்குத் தெரியுமா?’ என்று நடுங்கிக் கொண்டே கேட்க, அவள் மேலும் சிரித்து, ‘நான் விளையாட்டுக்குச் சொன்னால் அதை நிஜமென்று நம்பி இப்படி விழுந்துவிட்டீர்களே?’ என்று சொல்ல, ‘இதையாவது நான் ‘விளையாட்டு இல்லை’, என்று நம்பலாமா, வேண்டாமா? என்று ஒரு முறைக்கு இரு முறையாக அவளைக் கேட்க, ‘நம்புங்கள், நம்புங்கள்!’ என்று அவளும் ஒரு முறைக்கு இரு முறையாகச் சொல்லி, அவரை மெல்ல அழைத்துக்கொண்டு வெளியே வருவாளாயினள்.

‘கடைசியாக ஒன்று’ என்றார் அவர்; ‘என்ன?’ என்றாள் அவள். ‘எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்!’ என்றார் அவர்; ‘இருக்கட்டும்!’ என்றாள் அவள்.

‘பெயர் அம்சா!’ என்றார் அவர்; ‘அதாகப்பட்டது, அன்னமாக்கும்!’ என்றாள் அவள்.

‘பட்டணத்தில் உள்ள காலேஜில் அவள் படிக்கிறாள்!’ என்றார் அவர்; ‘படிக்கட்டும்; நன்றாய்ப் படிக்கட்டும்!’ என்றாள் அவள்.

‘கோடை விடுமுறைக்காக அவள் ஊருக்கு வந்திருக்கிறாள்’ என்றார் அவர்; ‘வந்திருக்கட்டும்!’ என்றாள் அவள்.

‘அவளுக்கு இன்னும் கலியாணமாகவில்லை!’ என்றார் அவர்; ‘ஏன் ஆகவில்லை?’ என்றாள் அவள்.

‘படிப்பு முடியட்டும் என்று காத்திருக்கிறேன்!’ என்றார் அவர், ‘அதெல்லாம் அந்தக் காலம்; கலியாணத்தை முதலில் முடித்துக்கொண்டு, படிப்பை அப்புறம் முடிப்பது இந்தக் காலம்!’ என்றாள் அவள்.

‘அதற்கு அவள் தயாராயில்லை!’ என்றார் அவர்; ‘தயாராக்குவது என் பொறுப்பு!’ என்றாள் அவள்.

‘அது முடியாத காரியம்!’ என்றார் அவர், ‘ஏன் முடியாத காரியம்?’ என்றாள் அவள்.

‘இப்போது நான் அவளுடைய சித்தியின் ஸ்தானத்தில் உன்னை வைப்பதாக இல்லை!’ என்றார் அவர்; ‘வேறு எந்த ஸ்தானத்தில் வைக்கப்போகிறீர்கள்?’ என்றாள் அவள்.

‘நீ என்னுடைய நண்பர் ஒருவரின் வாழாவெட்டித் தங்கையென்றும், அவர் உலகப் பயணத்தை மேற் கொண்டிருப்பதால் இரண்டு மாத காலம் நீ எங்கள் வீட்டில் தங்கப் போவதாகவும் நான் அவளிடம் சொல்லியிருக்கிறேன். அதே மாதிரி நீயும் சொல்ல வேண்டும்!’ என்றார் அவர்; ‘அப்படியே சொல்கிறேன்!’ என்றாள் அவள்.

‘கோடை விடுமுறை முடிந்ததும் அவள் பட்டணத்துக்குப் போய் விடுவாள்!’ என்றார் அவர்; ‘போகட்டும்!’ என்றாள் அவள்.

‘அதற்கு மேல்தான் நம்முடைய கலியாணத்தைப் பற்றி நாம் யோகிக்க வேண்டும்!’ என்றார் அவர்; ‘அப்படியே யோசிப்போம்!’ என்றாள் அவள்.

‘அதுவரை எனக்கு நீ மனைவியாயில்லாவிட்டாலும் துணைவியாகவாவது இருப்பாயா?’ என்றார் அவர்; ‘இருப்பேன்!’ என்றாள் அவள்.

இப்படியாகத்தானே இருவரும் பேசிக் கொண்டும் சிரித்துக்கொண்டும் வீட்டை அடைய, ‘இந்த மாமியை ஏற்கெனவே உங்களுக்குத் தெரியுமா, அப்பா?’ என்று அம்சா ‘மாமிமுறை’யில் அவளை வைத்துக் கேட்க, ‘நன்றாய்த் தெரியுமே! பட்டணத்துக்குப் போனால் இவர்களுடைய வீட்டில்தான் நான் தங்குவது வழக்கம்!’ என்று அம்பலவாணர் அதற்கும் கொஞ்சம்கூடக் கூசாமல் ஒரு பொய்யைச் சொல்ல, ‘ஓஹோ!’ என்று அவள் தலையைப் பலமாக ஆட்டிக் கொண்டே அடுக்களைக்குச் சென்று, அவர்கள் இருவருக்கும் ‘டிக்ரி காப்பி’யாகவே போட்டுக் கொண்டு வந்து கொடுப்பாளாயினள்.

அதற்குப் பின் குளியல் ஆயிற்று; சாப்பாடும் ஆயிற்று. மத்தியானம் சிற்றுண்டி ஆயிற்று; மாலை காப்பியும் ஆயிற்று. இரவு சாப்பாட்டுக்குப் பின், ‘கொஞ்சம் பொறுங்கள்; நான் போய் அம்சாவைத் தூங்க வைத்துவிட்டு வந்துவிடுகிறேன்!’ என்று ஆனந்தி அம்பலவாணரிடம் சொல்லிவிட்டு நழுவ, ‘அவள் என்ன பச்சைக் குழந்தையா, நீ போய் அவளைத் தட்டித் தூங்க வைக்க? கொஞ்ச நேரம் இப்படித்தான் உட்காரேன்; பேசிக் கொண்டிருப்போம்!’ என்று அவர் ஆசையோடு அவள் பின்னலைப் பிடித்து இழுக்க, அந்தப் பின்னல் அவர் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அவருடைய கையோடு கழன்று வர, ‘அம்சா! ஆபத்து, ஆபத்து! உன் அப்பாவிடமிருந்து என்னைக் காப்பாற்று, உன் அப்பாவிடமிருந்து என்னைக் காப்பாற்று!’ என்று கத்திக் கொண்டே அந்த ‘ஆனந்தி’யாகப்பட்டவள் அம்சாவைத் தேடி ‘ஓடு, ஓடு’ என்று ஓடுவாளாயினள்.

‘நான் அப்போதே சொன்னேனே, கேட்டீர்களா?’ என்று அந்த ‘ஆனந்தி’யிடம் தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு வந்த அம்சா தன் அப்பாவின் கையிலிருந்த பின்னலைப் பிடுங்கி அப்பால் எறிந்துவிட்டு, ‘அவர் ஆனந்தியும் இல்லை. கீனந்தியும் இல்லை, அப்பா! என்னுடன் படிக்கும் ஆனந்தன் அவர்! டிங்-டாங் பத்திரிக்கையின் விளம்பர இலாகா மானேஜரும் இவரும் நண்பர்கள். அவர் கொடுத்த விலாசத்திலிருந்து இவர் நீங்கள்தான் என் அப்பா என்பதைத் தெரிந்து கொண்டு இந்த வேஷத்தைப் போட்டிருக்கிறார்!’ என்று குட்டை உடைத்துவிட்டுக் கையைப் பிசைய, ‘எனக்கு மட்டும் தெரியாதா, அது? கோடை விடுமுறையில்கூட உன்னை விட்டுப் பிரிந்திருக்க முடியாமல் இவர் இப்படிச் செய்திருக்கிறார்! அதையும் தெரிந்துகொண்டுதான் தெரியாதவன் போல் நடித்தேன் நான்!’ என்று சொல்லி அவர் அவளைச் சமாளித்து, அடுத்த முகூர்த்தத்திலேயே அவளுக்கும் அவனுக்கும் கலியாணத்தையும் செய்து வைத்து, ‘எனக்குப் பொழுதே போகமாட்டேன் என்கிறது; நீங்களாவது சீக்கிரம் ஒரு பேரக் குழந்தையைப் பெற்று என்னிடம் கொடுங்கள், விளையாட!’ என்பதாகத்தானே சொல்லித் தம் அசட்டுத்தனத்துக்கு அன்றுடன் ஒரு முடிவு கட்டிக் கொள்வாராயினர்’.

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘ஆசை மனிதனை ஏன் இப்படியெல்லாம் அலைக் கழிக்கிறது?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘அசட்டுத் தனத்தைப் போக்கத்தான்!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின் மேல் ஏறிக்கொண்டு விட்டது காண்க….. காண்க….. காண்க…..

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *