பொறுமை கடலிலும் பெரிது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 26, 2022
பார்வையிட்டோர்: 9,859 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

[முத்துப்பாக்கம் பெரிய எஜமான் ஓர் சுய காரியப் புலி. அவர் தம் காரியத்தில் அதிக அக்கரையும், சுறு சுறுப்பும் உள்ளவர். பிறர் காரியத்தில் மகா மந்தம்.

முத்துப் பாக்கம் 50 வீடுகள் உடைய கிராமம். நமது பெரிய எஜமான் ஊருக்கே பெரிய எஜ மான். மிகப் பெரிய மிராசுதார். அவருக்கு 15 வயதுள்ள பிள்ளையாண்டான் உண்டு. அவரை ஊராரும், வீட்டுக் கணக்கர். ஆட்கள் முதலியவர்களும் சின்ன எஜமான் என்பார்கள். சின்ன எஜமான் தவிர 8, 5, 3, 1 வயதுள்ள 4 பசங்களும் உண்டு .

அதிகாலையில் வெளிக்குப்போய் பெ. எஜமான் தம் வீடு நோக்கி மெதுவாக வந்து கொண்டிருக்கிறார். பரிதாப முகத்துடன் வீட்டுக்கணக்கர் பின் தொடர்கிறார்.)

கணக்கர் : எஜமான்! வீட்டில் என் மனைவியைப் பாம்பு கடித்துவிட்டது

பெ. எ : (இந்த வார்த்தையைக் கேட்டதில் பதை பதைப் பொன்றுமின்றி) சாந்தலிங்கம் நேற்று வட்டிப் பணம் கொடுத்தானா?

கணக்கன் : கொடுத்தான். வைத்யரை இட்டு வந்து காட்டினேன். சீக்கிரமாக, பெரிய எஜ மானிடம் ஓடி, மருந்து கேட்டு வாங்கிவா என்று சொன்னார். ஓடிவந்தேன்.

பெ.எ: அந்த முத்துச்சாமி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான். எப்போதுதான் பணம் கொடுப்பான்?

கணக்கன் : இந்த மாதத்திலேயே கொடுத்து விடுவதாகச் சொன்னான். வந்துவிடும். வைத்தியரிடம் பாம்புக்கடி மருந்து இல்லையாம். உங்களுக்குச் செய்து கொடுத்தாராம் போனமாதம். அவசரமாகக் கொடுங்கள்.

பெ. எ : விழுப்புரத்தில் இப்போது என்ன சினிமா நடக்கிறது?

கணக்கன் : இந்திப்படம். கொஞ்சம் அவசரமாக வந்தால் தேவலை எஜமான்.

பெ. எ : பொறுமை கடலிலும் பெரிது.

கணக்கன் : இதுக்குக் கூடவா?

பெ. எ : சின்னசாமியைக் கணக்குப் பிள்ளையாய் வைத்துக் கொள்ளச் சொல்லி, உன்னை நீக்கி விடச்சொன்னார்; என்னிடம், தொந்தரவு பண்றாரே.

கணக்கன் : உங்க சித்தம். மருந்து இருக்குதல்ல உங்க கிட்ட?

பெரிய எஜமான் தம் வீட்டுத் திண்ணையை அடைந்துவிட்டார். அவர் உள்ளிருப்பவரை நோக்கி.

பெ. எ: பாயைக் கொண்டுவந்து போட்றா. தலைக்காணிஎடுத்துவா. காலெல்லாம்வலிக்குது.

கணக்கர் : உட்கார்ரிங்களே. மருந்து அவசரமாச்சே எஜமான்.

இதற்குள் பாய்போடுகிறான் ஓர் ஆள். தலையணை போடுகிறான் ஒருவன். கால் பிடிக்கிறான் ஒருவன்.

பெ. எ: எந்த வைத்யர்?

கணக்கர்: வேலுசாமி.

பெ. எ : உம்……..கையைப் பிடிடா.

இதற்குள் கணக்கர் இந்தப் பாவியின் அட்ட காசம் பொறுக்க முடியாமல் பெரிய எஜமான் வீட்டினுள் புகுந்து அங்கு இருக்கும் சின்ன எஜமானிடம் கூறுகிறான்.

கணக்கர்: சின்ன எஜமான்! என் மனைவியைப் பாம்பு கடித்துவிட்டது. மருந்து இருக்கு தாம் இங்கே. அவசரமா எடுத்துக் கொடுங்களேன்.

சின்ன எ : அப்படியா. அப்பாவிடம் இருக்கு. கேட்டியா?

கணக்கர் : அவர் எப்போது வர்ரது? அதற்குள் மனைவி ஒழிஞ்சிபூடுவார் போலிருக்கே

சின்ன எ: (வெளியில் தன் தகப்பனை நோக்கி) அப்பா பெட்டிச் சாவிகொடுங்க. மருந்து வேணுமாங் கணக்கப்பிள்ளைக்கு,

பெரிய. எ: காப்பி சாப்பிட்டியா? என்ன பலகாரம் வைச்சா அம்மா?

சி. எ: தோசை சொஜ்ஜி! சாவிகொடுப்பா பாம்பு கடிச்சிட்டுதாமே, கணக்கப் பிள்ளை வீட்டில்.

கணக்கன் : உடனே மருந்து கொடுக்கணும் என்று வைத்யர் பறக்றார்.

பெரிய எ : வரதராஜலு கடிதம் போட்டானே அதை எடுதம்பி. சின்ன எஜமான் எரிச்சலுடன் உள்ளே போகிறான்

கணக்கன் : என்ன ஆச்சோ வீட்டில்! மருந்து இருக்குதல்ல எஜமான்?

இதற்குள் ஓர் ஆள் தினசரி ஒன்றைக்கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி விரித்துக் கணக்கனை நோக்கி.

பெரி. எ: உள்ளே கண்ணாடியை எடுத்துவா.

கணக்கன் : வாசித்த பிறகுதான் எழுந்திருப்பிங்களோ. ஐயோ அவசரமாச்சே எஜமான்

பெரிய. எ : பொறுமை கடலிலும் பெரிது.

விசிறியிருந்த ஆள் ஓடிக் கண்ணாடியை எடுத்துக் கொடுக்க, பெ. எ. கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்து விடுகிறார்.

கணக்கன் : சாவியைக் குடுங்களேன் எஜமான் எப்போ வாசிக்கறது? எப்போ மருந்து கொடுக்கறது?

பெரிய. எ: என்ன கடித்தது?

கணக்கர் : பாம்பு.

(வாசிக்கிறார் பெரிய எஜமான்.)

கணக்கர்: பாம்புங்க.

பெரிய. எ : மருந்து இல்லியே.

கணக்கர் கையுதறிக்கொண்டு வீட்டைநோக்கி ஓடுகிறார்.

கணக்கனின் பந்து:

இப்படிக்கொடும் மருந்தை!ஆர் வீட்டில்? அவசரமாகக் கொஞ்சம் தண்ணீர் கொண்டா. மருந்தே வாயில் போட்டுத் தண்ணியை ஊத்தணும்.

((உடனிருக்கும் வைத்யர் கையை நீட்டுகிறார்)

கணக்கர்: எங்கே? அந்தப்பாவி இந்நேரம் காத் திருக்க வைத்து மருந்து இல்லேண்ணு சொல்லிவிட்டானே.

என்று கூறி, அங்கு வளர்த்தி வைத்திருக்கும் தன் மனைவியை நோக்கி.

தனபாக்யம்!

(தனபாக்யம் வாயில் நுரை தள்ளுகிறது.)

வைத்தியர்: நா….நா…நான்…..போ …போய்….வ….வ வ…வர்ரேன்.

போகிறார்! கணக்கனும் உடன் போகிறான்.

இதற்குள் பெரிய எஜமானனுக்குக் கால் அமுக்கிக் கொண்டிருக்கும் இரிசனின் தகப்பனாராகிய ஓர் கிழவன் பெ. எஜமானனை நோக்கி.

கிழவன் : பேரன் ஊருக்குப் போரான் பாட்டி கூட! அரை ரூபா குடுங்க. குடுத்தனுப்பவாணாங்களா எஜமான்?

பெரிய. எ: தெக்கு வெளியிலே பயிரெல்லாம் எப்டியிருக்கு பார்த்தியா கிழவா ?

கிழவன் : பாத்தேன். நல்லா இருக்கு. அதோ நிக்றாங்க. தே வந்துட்றேன், இண்ணு ஓடியாந்தேன். குடுங்க.

பெரிய. எ : முதுகே உருட்டு.

இரிசன் : எங்க பெரிவரே அனுப்னா தேவலை எஜமான்.

இதற்குள் விசிறியிருந்த குப்பனின் இடதுகையில் ஒரு தேள் கொட்டிவிடுகிறது.

குப்பன் : ஐயோ! (பார்க்கிறான் தேள்)

தேள் கொட்டி புட்டுதுங்க.

பெரிய. எ: இந்தப் பக்கம் வந்து விசிறு. பொறுடா.

(மறுபக்கம் வலியோடு விசிறுகிறான். சீனனை இருவர் தூக்கிவந்து பெ. எ. எதிரில் தெருவில் கிடத்துகிறார்கள்)

கொள்ளு : வேலுப்பையன் இவனெமண்டையை ஒடைச்சிபுட்டு வூட்லே பூந்து. பொண்டு வளே அடிச்சுபுட்டு, பணம் நகை யெல் லாம் தூக்கிக்கிணு நொச்சிக் காட்டுக்கு ஓடிப்புட்டான். போலீஸுக்கு ஆளெ உடுங்க. ஆகவேண்டித்தே பாருங்க எஜமான்.

பெரிய. எ: அங்காரு!

மனைவி கனகம்: (உள்ளே யிருந்துவந்து) ஏன்?

(பெ’ எ. பேப்பர் வாசிக்கிறார்) வேலுப்பையன் ஒடிப்புடுவாங்க.

கிழவன் : கொஞ்சம் தயவு பண்ணுங்க.

காயப்பட்டுக் கிடக்கும் சீனன் தத்துக் குத்தலான நிலையில்,

சீனன் : என்னெ காப்பாத்துங்க. அவனெ புடிக்க ஏற்பாடு பண்ணுங்க.

வைத்தியர்: “ம”….

மருந்து என்று சொல்ல எண்ணி “ம” எழுத் தில் அகப்பட்டுக்கொண்டு அவஸ்தை யடை கிறார் தெற்றுவாயராகிய வைத்தியர்

கனகம் : ஏன் கூப்பிட்டிங்க.

பெ. எ : இதோ வந்துட்டேன்.

கணக்கன் : என் மனைவிக்கு உயிர் போவுதுங்களே எழுந்திருங்களேன்.

பெ. எ: பொறுமை கடலிலும் பெரிது.

(பேப்பர் வாசிக்கிறார் உற்றுக் கவனித்தபடி. சுப்ரமண்ய குருக்கள் வருகிறார்.)

சுப்ர: வரணும். (இடது கையைத் தூக்கி ஆசீர்வதித்தபடி)

பெரிய. எ : வாங்க சாமி. உக்காருங்க.

சுப்ர : உட்கார்ரதுக்கில்லே. கொஞ்சம் அவசரமா வந்தேன். நம்ம ஆத்லே இன்னிக்கு நம்ம மருமான் ஊருக்குப் போறது அவன் ஆம்படையாளெ கூட்டினு.

பெ. எ : ராமைய குருக்கள் சௌக்யமா இருக்காரா?

சுப்ர: இருக்கார். மருமான் வந்தா செலவு இருக்காதா? 10 ரூபாய் கொடுங்க. நிக்க வைச்சிட்டு வந்தேன்.

பெ. எ: கடுதாசி கிடுதாசி போட்டாரா?

சுப்ர : போட்டார். நான் அப்றம் வந்து சொல்றேன். என்னை அனுப்புங்க.

பெ. எ: (பேப்பர் பார்க்கிறார் பழையபடி)

சுப்ர : என்னை அனுப்புங்க. சாவகாசமா பாருங்களேன் பேப்பரை.

பெ. எ : ஒங்கமேலே ஒரு பிராது,

சுப்ர : என்னா அது?

பெ. எ: (பேப்பர் பார்க்கிறார்.)

கணக்கன் : ஆபத்துங்க. (பரிதாபமாய்)

கிழவன் : அரை ரூபாய் தானுங்க. (பரி….;)

இரிசன் : எங்கபெரியவரே அனுப்புங்க (பரிதாபமாய்)

குப்பன் : தேளுங்க. (பரிதாபமாக)

கொள்ளு : திருட்டுப் பையன். (பரி…)

சுப்ர: 10 ரூபாய். (கையைப் பிசைந்தபடி)

சீனன் : – ஐயோண்ணு போவுது உயிர்.

(என்றிவ்வாறு அவரவர் முணு முணுத்துக்கொண்டிருக்கிறார்கள் வாய் ஓயாமல்)

மனைவி : (பெ. எஜமானை நோக்கி.) ஏன் கூப்பிட்டிங்க

பெ. எ : கலியாண விஷயம் என்ன?

கனகம்: அவன் கலியாணம் இப்ப வாண்டாம் இண்றான். சம்பாதனைக்கு வழி தேடிய பின்னே தான் இண்ணு சொல்றான்.

பெ. எ : (கணக்கனை நோக்கி) நம்ப பையன் பெரியவனா போயிட்டான் கலியாணம் பண்ணணுமா இல்லையா?

கணக்கன் : ஆபத்துங்க.

பெ. எ: (திடுக்கிட்டு, நிதானித்து.) கண்ணுக்குப் பிடிச்ச பொண்ணா பார்த்தா போறது. (கிழவனை நோக்கி) ஏன் கிழவா பெண்ணா நமக்கு அகப்படாது?

கிழவன் : அரை ரூபாய் தானுங்க.

பெ. எ : (திடுக்கிட்டு, நிதானித்து) நல்ல இடத்துப் பெண் ஒண்ணு இருக்கு. உங்க அப்பாவை அனுப்பிக் கேக்கலாமிண்ணு நினைக்கிறேன். (இரிசனை நோக்கி) ஏன்?

இரிசன் : எங்க பெரியவரெ அனுப்புங்க.

பெ. எ : என்னடா மடப்பயலே.

இரிசன்: அவசரங்க. பெரியவரெ அனுப்புங்க.

பெ. எ:- ஓகோ …ஏண்டி கனகம்? ஜமீன்தார் மகள் எப்படி. படிச்ச பொண்ணு. நல்ல அழகு. (குப்பனை நோக்கி) ஏன்?

குப்பன்: தேளுங்க.

பெ. எ:- தேளா! (நிதானித்து) ஓகோ உன் சங்கதியோ? (மனைவியை நோக்கி) ஜமீன்தார் அந்தஸ்தில் குறைஞ்சவரா கனகம்? (கொள்ளுவை நோக்கி) அவர் அந்தஸ்து எப்டி?

கொள்ளு:- திருட்டுப்பையன்.

பெ. எ:- அடடடா. என்னாடா அப்டி சொல்லிட்டியே ஜமீன்தாரே.

கொள்ளு:- திருட்டுப்பையன் ஓடிடுவானுங்க.

பெ. எ: ஓகோ அதுவா?

கனகம்: எங்க அண்ணன் மவ நல்லா இல்லியா? அவளெ ஏங் கட்டப்படாது? நாங்க என்னா பொறமாட்டமா? பரியம் ஏதாவது குடுங்க. ஏன் குருக்களே?

சுப்ர: பத்து ரூபாய்.

கனகம்: அட ஒன்னே பாடயிலே வைக்க. குருக்களா நீ. மூஞ்சே பாரு திருட்டுப்பையனாட்டம்.

சுப்ர: மருமானை ஊருக்கு அனுப்பணும். 10 ரூபாய் தேவையிண்ணேன்.

கனகம்: ஓகோ. (பெ. எஜமானை நோக்கி) நீங்க கட்டாட்டிப் போனா எங்கூட்லே சோறு கொதிக்காத பூடாது. கிராக்கி இல்லா மல் இல்லே . (இச்சமயம் சீனன் எழுந்தி ருந்து உட்கார்ந்திருக்கிறான். அவனைக் காட்டி) சீனனுக்குத் தெரியும் எங்க வீட்டு நெலவரம்.

சீனன் : ஐயோண்ணு போவுது உயிரு.

கனகம்: ஏங் குடும்பமா?

சீனன்:- போலீசுக்குச் சொல்லுங்க. மண்டை ஒடஞ்சி போச்சிங்க.

பெ. எ: உனக்கென்ன செய்யணும்ண்றே ?

கிழவன்: அரை ரூபாய். நாழி ஆவுதுங்க.

பெ. எ: சரி. ஒனக்கு?

கொள்ளு:- வேலு ஓடிப்டுவானுங்க. சீக்கிரம் போலீசுக்கு ஆள் அனுப்பனுங்க.

பெ. எ: சரி. நீ?

குப்பன் : தேள் கொட்டிபுட்டது. போறேனுங்க! மருந்து இருந்தா போடுங்க!

பெ. எ: சரி. நீர்?

வைத்தியர்: (“ம” என்ற எழுத்தைத்தாண்டி மருந்து என்று கூறி முடித்து, பெட்டியில் என்பதற்கு “பெ” என்ற எழுத்தில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட ஆரம்பிக்கிறார்.)

கணக்கர்:- மருந்து, பெட்டியில் இருக்கிறதாமே! அவசரம். எஜமான்!

பெ. எ: சரி, நீ.

கிரிசன்: எங்க அப்பாவை அனுப்புங்க அவசரமா.

பெ. எ: சரி நீங்க.

சுப்ர: அதான். 10 ரூபாய் கேட்டேனே.

பெ. எ : சரி. (உள்ளே போகிறார். அனைவரும் ஆவ லாகக் காத்திருக்கிறார்கள். பெ. எ. சற்று நேரம் சென்றபின் ஒரு பொட்டணத்து டன் வெளிவருகிறார். கணக்கர் கை நீட்டு கிறார். ஆவலுடன் பொட்டணத்தைக் கணக்கனிடம் கொடுத்துக் கூறுகிறார்.)

இந்தப் பொட்டளத்தை கோயில்லே குருக்கள் இருப் பார். அவர்கிட்ட கொடுத்துட்டு அவசரமா ஓடியா.

கணக்கன் : ஐயோ. எனக்கிண்ணு நெனச்சேன்.

(பொட்டளத்தை வாங்காமல் தலை தாழ்த்தி நிற்கிறான்.)

பெ. எ:- (திண்ணையிலே அதை வைத்து)அவசரமா கொடுத்துட்டு ஓடியா.

(உள்ளே போகிறார். சிறிது நேரம் சென்று எட்டணாவுடன் வெளிவந்து)

பெ. எ: இந்தா-(அரை ரூபாயைக் காட்டி.) யாரங்கே?

கிழவன் : நான் தாங்க. (ஆவலாகக் கைநீட்டி நெருங்குகிறான்.)

(தேள் கொட்டப்பட்ட குப்பனை நோக்கி)

பெ. எ:- குப்பா இதைக் கொண்டுபோய் ராமசாமி பிள்ளை நெய்கேட்டார். நல்ல நெய்யா வாங்கிக் கொடுத்துட்டு ஓடியா.

கிழவன்: எனக்கு எஜமான்? என்னை அனுப்புங்க.

குப்பன் : கொட்டுவாயில் ரொம்ப கடுக்குதுங்க.

பெ. எ: சரி நான் அனுப்புகிறேன். (உள்ளே போகிறார். சற்று நேரம் சென்று ஒரு நோட்டோடு வெளிவருகிறார்)

சுப்ர: ரொம்ப உபகாரமாபோச்சு (என்று கூறிக் கையை நீட்டுகிறார்)

பெ. எ: நாளைக்கு ஒரு விசேஷம் அதற்குச் சில்லறை வேணும். வைத்யரே மாத்தி வரீரா?…அப்றம் ஆகட்டும்…இருங்க இதோ வந்துட்டேன். (சிறிது நேரம் சென்று குப்பனை நோக்கி) பல்லு குச்சி நல்ல வேப்பங்குச்சா பாத்து ஒடிச்சிகினுக்கு வா. இதோ சாப்டுட்டு வந்துடுறேன். (உள்ளே போகிறார் இதற்குள் ஒரு பையன் ஓடி வந்து கணக்கனைப் பார்த்து)

பையன் : ஒங்க பொண்டாட்டி செத்துப்புட்டாங்க.

பெரிது கணக்கன்:- பூட்டாளா ஐயோ.

(இதற்குள்)

பெ. எ: பூஜையை முடிச்சிபுட்டு வர்ரேன்.

கணக்கன் : அடட காமாட்டி (என்று கூறி ஓடுகிறான்)

குருக்கள் : சரியாபோச்சு!

(போகிறான். மற்றவர்களும் முணுத்துக் கொண்டும், திட்டிக் கொண்டும் போகிறார்கள்.)

மறுநாள்

(பெ. எஜமான் திண்ணையில் உட்கார்ந்திருக்க, மனைவி எதிரில் நிற்கிறாள்.)

பெ. எ: நேற்றே தெரியும் எனக்கு! அவன் ஒரு மாதிரியாயிருந்தான். காசிமாலை இருக்கா? அதையும் எடுத்துகினு பூட்டானா?

கனகம்: அதையுந்தான்.

பெ. எ:- அடபாவி! எங்கே போயிருப்பான்? மொத்தம் பதினாயிர ரூபாய் நகை இருக்கும். ரொக்கம் ஆயிரம். அல்லாத்தையும் எடுத்துக்கினு போய்ட்டானே. பணம் நகை போகட்டும். பிள்ளை இருக்கிற இடம் தெரிந்தா போதும்.

கனகம்:- அதுதானே நான் நெனைக்கிறேன். ராத்ரி கௌம்பி நேரே ரயிலுக்குப் போயிட்டான் இருட்டில்! காலை 3 மணி ரயில் ஒத்துக்கிச்சி எங்கியோ பூட்டான்!

(தந்தியுடன் ஒரு பியூன் சைக்கிளில் வருகிறான்.)

பெ. எ:- தந்தியா!

(தந்தியைக் கொடுக்க அதை வாகிக்கிறார்)

இப்ப என்னா மணி? 3 இருக்கும் ஐயோ இன்னும் ஒரு மணி நேரந்தானே இருக்குது. அவசரமா ரயிலுக்குப்போகணுமே! ஐயையோ!

கனகம்: என்னா சங்கதி? கேட்கறனே?

பெ. எ: சென்னையிலே நாளை காலையிலே கப்பல் ஏறப்போறானாம் பையன் மோரீசுக்குப் போக! அதுக்குள்ளே நாம் வந்தா தாம் பார்க்க முடியுமாம். கிளம்பு, கிளம்பு. இன்னும் ஒருமணி நேரந்தான்! 6 மைல் இருக்கு ரயில் ஸ்டேஷனுக்கு! கிளம்பு.

(கனகம் உள்ளே ஓடி உடுத்துகிறாள். மூட்டை கட்டுகிறாள். பிள்ளைகட்கு உடுத்துகிறாள் வெகு பரபரப்புடன். பெ. எ..வெளியில் ஓடுகிறார். கணக்கப்பிள்ளையின் வீட்டெதிரில் நின்று)

பெ. எ:- கணக்கப்பிள்ளை ! ஓடியா.

(கணக்கப்பிள்ளை வருகிறான்) ரயிலுக்கு அவசரமா போகணும் வண்டிக்காரனைக் கூப்பிடு ஓடு.

கணக்கன்: நாளைக்குத்தான் மூணா நாள்! கொஞ்சம் கிரியை விசேஷமாக நடத்த யோசனை.

பெ. எ: நான் என்னா சொல்றேன் / அவசரம் ஓடு.

கணக்கன் : பொறுமை கடலிலும் பெரிது.

பெ. எ: என்னா மடையா சீக்கிரம் வண்டி.

கணக்கன் : என்னா விஷயம்?

பெ. எ: ஐயோ ! சோம்பேறி நாயே.

(என்று கூறி வண்டிக்காரனாகிய குப்பனின் வீட்டிற்கு ஓடி எதிரில் நின்று) குப்பா! ஓடியா வண்டி கட்டு.

(குப்பன் வந்து எதிரில் நின்று)

குப்பன் : தோ வந்துட்டேன். இந்தக் கையைத் தூக்க முடியவிங்க. தேள் கொட்டிச்சி பாருங்க. என்னாங்க.

பெ. எ: கதை சொல்லியிருக்க நாழியில்லை. அவசரம் ஓடியா. வண்டியைக்கட்டு. வா.

குப்பன்: (தன் வீட்டுக் காரியை நோக்கி) அங்காரு? வெற்றிலைப் பையை எடு. தோ வர்ரேன் போங்க.

பெ. எ: என்ன? வர்ரியா? புறப்டு. ஓடு. சொல்றனே.

குப்பன்: பொறுமை, கடல் இருக்குது பாருங்க. அதுக்கீடு பெரிசுங்க

பெ. எ: அடே வாடா சீக்கிரம்.

குப்பன்: சரி. (நகருகிறான். பெ. எ. அவனைத் தள்ளிக்கொண்டு ஓடுகிறார்.)

பெ. எ: போய் வண்டியைக் கட்டு இதோ கொள்ளுப்பையனைக் கூட்டிகினு ஓடியார்ரேன். ஓடு.

(அவசரமாக ஓடுகிறார்.)

பெ. எ. வீட்டின் எதிரில் கட்டைவண்டி நிற்கிறது, அதன் கூண்டு தனியாக ஒரு புறம் இருக்கிறது. அதைப் பழுதுபார்க்க ஆரம்பிக்கிறான் குப்பன்! பெரிய. எ. கொள்ளு, சீனு, கணக்கன், வருகிறார்கள்.)

பெ. ஏ:- கணக்கப்பிள்ளே. புஸ்தகத்தே யெல்லாம் எடுத்து உள் அறையிலே வைச்சிக்கோ. நான் வர இரண்டு நாள் ஆவும்.

என்னாடா செய்யறே குப்பா. போதும் பழுது பார்த்தது. கூண்டே எடுத்து மூடு, சீக்கிரம்.

குப்பன்: சரிங்க. (கூண்டைத் தூக்கி வருகிறான்.)

பெ. எ. (உள்ளே போகிறார்.)

பெ. எ: போகவேண்டிய மூட்டை – முடிச்சி, பொட்டி, போழை யெல்லாம் ஒரு பக்கம் எடுத்து வை கனகம். அப்றம் உடுத்தலாம், சீக்கிரம், நாழி ஆவுது.

(இதற்குள் கொல்லைப்புறமிருந்து கழுதை ஒன்று வீட்டுக்குள் நுழைந்துவிடுகிறது. கூடத்தில், எடுத்துப் போகவேண்டிய சாமான்களை, கனகம் கொண்டுவைக்கி றாள். இடுப்பில் ஒரு பிள்ளையைச் சுமந்தபடி, ஒவ்வொன்றாக.)

அவை: வேடுகட்டிய ஒரு தவலை, ஒரு மூட்டை ஒரு கூஜா செம்பு, சர்க்கரைச் சீசா, சோப்புப் பெட்டி, பாலடை, சீப்பு முதலியவை அடங்கிய ஒரு சிறு தகரப்பெட்டி, பிள்ளை தடுக்கு, மெத்தைச் சுருணை! தலையணைக்கட்டு, பலகாரம் அடங்கிய ஒரு டின், வெற்றிலை பாக்குப் பெட்டி, செறுப்பு ஒரு ஜோடி, அப்போது கட்டிக் கொள்ளவேண்டிய புடவை, அப்போது போட்டுக்கொள்ளவேண்டிய நகை,ஒட்டி யாணம், கண்ணாடி, பிள்ளைகளின் உடைகள், நகைகள்.

[இதற்குள் பெ. எ. டிரங்கில் உடுப்பு அடுக்கிக்கொண்டே கூறுகிறார்.)

பெ. எ: கணக்கப்பிள்ளே

கணக்கன்: இதோ புஸ்தகங்களை எடுத்துவைக்கிறேன்.

பெ. எ: ஆரையாவது அனுப்பு கொல்லைக் கதவைச் சாத்தச் சொல்லு….நானே சாத்திவிடுறேன்.

(ஓடிச் சாத்துகிறார்.)

(கனகத்தை நோக்கி) ஆச்சா? நாழிகை ஆகிறது. சாமான்களை யெல்லாம் வண்டியிலே எடுத்துவை ஓடு.

(வெளியில் போகிறார். வண்டியில்கூண்டு மூடுகிறவனைப் பார்த்து.)

போதும்டா.

குப்பன்: சரி. (கூண்டை மேலோடு வைத்துவிடுகிறான்.)

பெ. எ: வண்டியை கட்டு, மாட்டெ ஓட்டிவா (குப்பன் கொல்லைநோக்கிப் போகிறான்.)

பெ. எ. (உள்ளே தலை வாரிக்கொண்டிருக்கும் கனகத்தை ஓர் அறை அறைந்து.) முண்டே! நாழிகை ஆகிறது. (என்று கூறி டிரங்கு தடுக்கக் கீழேவிழுகிறார். எழுந்து சாமான்களை எடுத்துக்கொண்டு வண்டியை நோக்கி ஓடி, அதில்வைத்து அவசரமாகத் திரும்பி மற்றும் சாமான் களை யெடுத்து வருவதற்குள் கழுதை ஓர் அறையில் புகுந்துவிடுகிறது. கனகமும் சாமான்களை வண்டியில் கொண்டுவைக்கிறாள்.

பெ. எ: தவலை வேண்டாம்.
என்று கூறி அதை அறையில் வைக்க நுழைகிறார். கனகம் அவசரமாகக் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டிவிடுகிறாள்.

அதே அறையில் கழுதையும் இருந்ததால் அதனிடம் பெ. எ. உதைபடுகிறதால் ஏற் படும் கதறல் வீட்டைப் பிளக்கிறது)

பெ. எ: ஜயையோ !ஐயையோ !! – (கனகம் கதவைத் திறக்க, பெ. எ. பல் உடைந்தபடி வெளியே வந்து விழுகிறார். அறையில் கனகம் நுழைகிறாள். இது பெ. எஜபானுக்குத் தெரியாது. அவசர மாக எழுந்து கதவைச் சாத்துகிறார். கழுதை கனகத்தை உக்ைகிறது.)

கனகம்: ஐயையோ ! ஐயையோ!! (பெ. எ. கதவைத்திறக்கிறார். மண்டை உடைந்தபடி கனகம் வெளியில் வந்து விழுகிறாள் கழுதை இருப்பது தெரிகிறது.

பெ. எ.: அதைரியப்படாதே. எழுந்திரு வண்டி யிலேறு. (கழுதையை நோக்கி.) உஸ். சீ. (தனக்குள்) உள்ளேயே கிடந்து ஒழி (கதவைச் சாத்துகிறார்.

அடுத்த அறையில் தன் 8. வயதுப்பையன் என்னமோ எடுக்கிறான். அது தெரியாமல் பூட்டி விடுகிறார். 8. வயது பிள்ளை தவிர மற்ற பிள்ளை கள் சாடான்கள் வண்டியில் ஏற்றுமதி நடந்து விட்டது.)

பெ. எ:- கணக்கப்பிள்ளை. பத்திரம். நான் இரண்டு மூன்று நாளில் வந்துவிடுகிறேன்.

(வண்டியில் ஏறக், கூண்டுசாய்கிறது.)

அனைவரும்:- ஜயையோ!

குப்பன் : பயப்படாதிங்க. இதோ சரிப்படுத்திவிடுகிறேன் (என்று இறங்க முயலுகிறான்.)

பெ. எ:- கூண்டு இல்லாவிடில் பாதகமில்லை ஓட்டு.

(கூண்டு இல்லாத வண்டி ஒடுகிறது.)

கனகம்:- எல்லா சாமான்களும் சரியாய் எடுத்து வைச்சாச்சோ என்னமோ.

பெ. எ: வச்சாச்சி. ரயில் அகப்படுமா குப்பா!

குப்பன் : ஆகா நல்லா.

பெ. எ: ஓட்டு வண்டியை,

குப்பன்:- ஏய்….(மாட்டை அபாரமாக அடித்து விரட்டுகிறான். வண்டியில் கடையாணி இல்லாததால் இரு சக்கரமும் ஏக காலத்தில் கழன்று, பார் நிலத்தில் உட்கார்ந்து விடுகிறது. பிள்ளைகள் கீழே உருளுகின்றனர். கனகம் விழுந்து எழுந்து பிள்ளைகளைக் காப்பாற்றுகிறாள். 8 வயதுள்ள பிள்ளை பெயர் ராமு.)

கனகம்:- ஐயோ ! ராமு எங்கே ?

(இதற்குள் எதிரில் ஒரு கூண்டுவண்டி வருகிறது. பெ. எ. கைகாட்டி நிறுத்துகிறார். சாமான்கள் ஏற்றப்படுகின்றன. பிள்ளைகள் ஏற்றப்படுகிறார்கள்.)

கனகம்:- ராமுவைக் காணோமே.(என்று கூவுகிறாள்.)

பெ. எ:- மணி ஆகிவிட்டது. ஓட்டு வண்டியை. (என்று கத்துகிறார்.)

குப்பன்: பொறுமை கடலிலும் பெரிது. (என்று கத்துகிறான். வண்டி ஓடுகிறது.)

கனகம்:- ராமுவைக் காணோமே, ஐயோ.

பெ. எ:- ராமு எங்கே? (இறங்கி வண்டிவந்த வழிநோக்கி ஓடுகிறார். திரும்பி ஓடிவந்து) வீட்டிலேயே தங்கிவிட்டானோ?

கனகம்:- அப்படித்தான் இருக்கும்.

(பெ. எ. வீட்டை நோக்கி ஓடுகிறார். திரும்பி ஓடிவந்து)

பெ. எ :- வீட்டுச் சாவி எங்கே?

கனகம்:- என்னிடம் கொடுக்கலியே.

பெ. எ:- போடி முண்டே (என்று ஓடுகிறார். திரும்பி ஓடிவந்து,)

கனகம்! கணக்குப்பிள்ளையிடம் இருக்குமா சாவி?

கனகம்:- இருக்கும்.

(பெ. எ. ஓடுகிறார். திரும்பி ஓடிவந்து.)

பெ. எ:- வண்டியை ஓட்டு. டிக்கட்டு வாங்கிவிடு. நான் எப்படியாவது வந்துவிடுகிறேன்.ஆம்பளை!

கனகம்:- சரி,

(வண்டி ஓடுகிறது. பெ. எ. ஓடுகிறார் வீட்டை நோக்கி. கணக்குப்பிள்ளை வீடு சாத்தியிருக்கிறது. பெ. எ. கதவைத் தட்டுகிறார் விரைவாக.)

பெ. எ: கணக்குப்பிள்ளை !

கணக்கன் : (உள்ளே யிருந்தபடி.) யாரடா அவன்?

பெ. எ: நான்தான் பெரிய எஜமான்.

கணக்கன் :- ஏன். என்ன சங்கதி. நீங்களா? ரயில் அகப்டலியா?

பெ. எ: சாவி கொடு.

கணக்கன் : எந்தச் சாவி?

பெ. எ: வீட்டுச் சாவி.

கணக்கன்: ஏன்?

பெ. எ: பையனை வீட்லே விட்டுச் சாத்திவிட்டுப் பூட்டேன், அவசரத்தில்!

கணக்கன்: அடடட அதுதான் அறையில் சத்தம் கேட்டதோ. பையனை அறையில் வீட்டுச் சாத்திவிட்டிங்க.

பெ. எ:- ஐயையோ! என்ன பண்ணுவேன். அடடா. வாயேன் வெளியே. என்ன பண்றே ?

கணக்கன்: இதோ வந்துட்டேன்.

பெ. எ: சாவியாவது குடேன்.

கணக்கன் : இதோ வந்துட்டேன்.

பெ. எ: என்னடா பண்றே. பாவி.

கணக்கன் : பொறுமை கடலிலும் பெரிசு. எண்ணெய்த் தலையோடு இருக்கேன் இதோ வந்துட்டேன்.

பெ. எ:- சாவியைக் கொடுத்தனுப்பேன்.

கணக்கன்: வீட்டில் யாரும் இல்லே.

பெ. எ: ஜன்னலால் போடு.

கணக்கன் : எதை?

பெ. எ: அறைக்கதவு சாவியை.

கணக்கன்: என்னிடம் ஏது.?

பெ. எ: பின் எங்கே?

கணக்கன்: எங்கே வச்சிங்க?

பெ. எ: வீட்டுக் கதவு சாவிகொடு.

கணக்கன் : அறையில் தானே பிள்ளையிருக்கான்?

பெ. எ:- (கதவை உடைக்கிறான். கதவு உடைந்து விடுகிறது. எதிரில் நிற்கிறான் கணக்கன்.) சாவி கொடு!

கணக்கன்: பொறுமை கடலிலும் பெரிது. இந்தாங்க சாவி.

(சாவியை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடுகிறார் பெ. எ.

அவசரமாக வீட்டைத் திறக்கிறார். கொத்துச் சாவியிலிருக்கும் வேறு சாவி யைப் போட்டு. பிறகு சரியான சாவியால் திறந்து உள்ளே ஓடுகிறார். அறைக் கதவு சாவியைத் தேடுகிறார். அகப்படவில்லை. அங்கிருந்த கடப்பாறையால் அறைக் கதவை உடைக்கிறார். கழுதை வெளியே ஓடி வருகிறது.

பிறகு இரண்டாவது அறைக்கதவை உடைக்கிறார், பிள்ளை படுத்துத் தூங்குகிறான். அள்ளியெடுக்கிறார்.)

பெ. எ:- ஓடியா தம்பி. தெரியாமல் சாத்திவிட்டேன்.

(இழுத்துக்கொண்டு ஓடிவிடுகிறார் வீட்டைச் சாத்தாமல்.)

(சிறிது தூரம் செல்ல.) பெ. எ: அடட! வீட்டைப் பூட்டவில்லை, போ தம்பி ஸ்டேஷனுக்கு! இதோ வந்துட்ரேன், (வீட்டை நோக்கி ஓடுகிறார். பையன் சோக்கமாக அங்கு உட்கார்ந்துவிடுகிறான் திரும்பி. பெ. எ. ஓடி வருகிறார். பையன் சோர்ந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவனைத் தோளில் தூக்கிக் கொண்டு ஓடுகிறார். எதிரில் கனகம் வண்டி ஓடி வருகிறது கண்ட பெ. எ.)

பெ. எ: என்ன சங்கதி? ஏன்?

கனகம்: பணம் என்னிடம் கொடுக்க வில்லையே! டிக்கட் வாங்க!

பெ. எ: சரி. சரி. என்னிடம் இருக்கிறது.

(வண்டியில் அனைவரும் ஏறிக்கொள்ள வண்டி ஸ்டேஷனை நோக்கி ஓடுகிறது. ரயில் ஸ்டேஷனை அடைகிறது.)

பெ. எ: (புக்கிங்கிளார்க்கை நோக்கி) டிக்கட் கொடுங்க.

கிளார்க்கு:- எந்த ஊருக்கு?

பெ. எ: பட்டணம். (பையில் கையை விடுகிறார்.)

கிளார்க்கு:- எத்தனை?

பெ. எ: மூணரை. சீக்கிரம் கொடுங்க.

கிளார்க்:- பணம்?

பெ. எ: அடட. இதோ வந்து விட்டேன். (தன் மனைவியை நோக்கி) மணி பர்ஸ் எங்கே?

கனகம்: யாரைக் கேட்கிறீர்.

பெ. எ: எங்கே என் டிரங்கு?

கனகம்: உங்கள் டிரங்கை எடுத்து வைக்கலே.

பெ. எ: ஐயையோ! (குப்பனை நோக்கி) என்ன பண்ணுவேன்.

(ரயில் ஓடுகிறது. சென்னையை நோக்கி!)

– கற்கண்டு, முதற் பதிப்பு: அக்டோபர் 1944, முத்தமிழ் நிலையம், கோனாப்பட்டு, புதுக்கோட்டைத் தனியரசு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *