பைலட் கிச்சா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 20, 2023
பார்வையிட்டோர்: 4,526 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சதாசர்வ காலமும் சர்சர்ரென்று விமானங்கள் வந்து போய்க் கொண்டிருக்கும் படு பிஸியான சர்வதேச ஏர்போர்ட்டுக்குச் சமமாக, கிச்சா வீட்டு பாத்ரூமில் நிமிஷத்துக்கு நாலு என்ற விகிதத்தில் ‘லேண்டிங்’, ‘டேக் ஆஃப் செய்வதற்காகக் கரப்பான் பூச்சிகள் தாழ்வாகப் பறந்து கொண்டிருக்கும்! இதனால் பயந்து போய்க் குளிப்பதற்குக்கூட போலீஸ் பந்தோபஸ்தை நாடும் அளவுக்கு ‘தொடை, முட்டி, கணுக்கால், பாத நடுங்கி’ * யான கிச்சா, போன மாதம் ஹைதராபாத்துக்கு ஒரு பிளேனை ஓட்டிக் கொண்டு போனதாக என்னிடம் மார்தட்டிக் கொண்டான்.

ஹைதராபாத் பாட்டி என்று கிச்சா செல்லமாக அழைக்கும் எச்சுமிப் பாட்டியின் ஒரே தங்கையின் இரண்டாவது பெண்ணின் மூன்றாவது பேத்தியின் நாலாவது பிரசவத்துக்கு உடனடியாக வருமாறு எச்சுமிப் பாட்டிக்கு டெலிகிராமில் அழைப்பும், கூடவே மணியார்டரில் பிளேன் டிக்கெட் வாங்குவதற்கான பணமும் சென்ற மாதம் வந்ததாம்.

பிளேன் டிக்கெட் வாங்கும் இடம் எது என்பது தெரியாமல் மவுண்ட் ரோடு பூராவும் சுற்றித் திரிந்த கிச்சா ஒரு ட்ராவல் ஏஜென்ஸி அலுவலகத்தில் நிழலுக்காக ஒதுங்கினான். அங்கு மாட்டப்பட்ட ஏரோபிளேன் படங்களைப் பார்த்து ‘பிளேன் படக்கடை’ என்று முதலில் நினைத்து, பிறகு எதற்கும் கேட்டுப் பார்ப்போம் என்ற ரீதியில் ‘இங்கு ஹைதராபாத்துக்கு பிளேன் டிக்கெட் கிடைக்குமா?’ என்று கேட்க, ‘இங்குதான் கிடைக்கும்’ என்று அவர்கள் ஆதரவாகக் கூறி இரண்டு டிக்கெட்டுகளைக் கொடுத்தார்கள்.

‘ஆகாய விமானத்தில் போகும்போது அடிவயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தியும் தலைசுற்றலும் வரும்’ என்று கேள்விப்பட்ட கிச்சா அந்த விபரீதத்துக்குத் தன்னைப் பழக்கிக் கொள்ள, புறப்படும் நாள் வரை தன் வீட்டுக் கூடத்து ஊஞ்சலில் அமர்ந்து, வாசல் வராண்டாவைத் தாண்டி தெருவில் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்ப கூடத்துக்குச் செல்லும் அளவுக்குப் புயல்வேகத்தில் ஆடி, தனக்கு ப்ராக்டீஸ் கொடுத்துக் கொண்டான். பேரனின் இந்தப் பிரத்தியேகமான விமான வாந்தியைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக எச்சுமிப் பாட்டி நான்கு கூஜாக்கள் நிரம்ப இஞ்சி, எலுமிச்சை ஜூஸ் எடுத்துக் கொண்டாள். இது போதாதென்று, ஒரு மணி நேரத்தில் ஹைதராபாத் வந்துவிடும் என்பதை அறியாத பேதை எச்சுமிப் பாட்டி, பிளேனில் கண்டதைச் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்ளாமல் இருக்க முறுக்கு, சீடை, நெய் சொட்ட அதிரசம், நேந்திரங்காய் சிப்ஸ், எல்.ஐ.ஸி. அளவு காரியரில் சாப்பாடு என்று கிளம்பும் வரையில் ஏகமாக லக்கேஜைக் கூட்டிக்கொண்டே போனாள்.

விடியற்காலை பிளேனைப் பிடிப்பதற்கு வசதியாக பாட்டியும் பேரனும் முதல் நாள் ராத்திரியே மீனம்பாக்கம் சென்று ஏர்போர்ட் லவுஞ்சில் ஸ்டவ், பாத்திரம், பண்டங்கள் புடைசூழத் தனிக்குடித்தனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்!

மறுநாள் காலை லவுஞ்சுக்குள் நுழைந்த பயணிகள் கிச்சாவும் பாட்டியும் சாப்பிட்டு விட்டு இறைத்த மந்தார இலைகளையும், எங்கு போனாலும் விடாமல் துரத்தும் மாகாளிக் கிழக்கு, மாவடு வாசனையையும் கண்டு ஒருவேளை மறந்துபோய் ஏர்போர்ட்டுக்குப் பதிலாக சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டோமா என்று விசாரிக்கும் அளவுக்குக் குழம்பினார்கள்!

போர்டிங் பாஸ் வாங்கிக் கொள்வதற்காக க்யூவில் நின்றபோது சிறிதும் கூச்சமில்லாமல் கிச்சா எம்பி எம்பி, ‘எனக்கும் பாட்டிக்கும் ஜன்னல் ஓரமா சீட்டு போட்டுடுங்க’ என்று கத்தி ரசாபாசமாக நடந்துகொண்டு க்யூவில் நின்ற மற்றவர்களை நெளிய வைத்தான்.

ஹைதராபாத் பேத்தியின் மசக்கைக்காகப் பாட்டி செய்து கொண்டு வந்த ஜவ்வரிசிக் கூழை பிளேன் படிக்கட்டில் ஏறும்போது கிச்சா கைதவறி டப்பாவோடு கொட்டி, சாதாரண படிக்கட்டை வழுக்கும் கன்வேயர் படிக்கட்டாக மாற்றினான். நுழையும்போது நமஸ்கரித்து வரவேற்கும் ஏர்ஹோஸ்டஸை சகபயணி என்று நினைத்த எச்சுமிப் பாட்டி, ‘மொதல்ல நீ போய் உக்காருடி. உனக்கு இடம் கிடைக்காம போயிடப் போறது…’ என்று கூறிவிட்டு, ‘கிச்சா, இவளை நம்ம சீமாச்சுக்குப் பாத்தா என்ன? என்ன கோத்திரம்டீ நீ என்று கேட்டு அவளைக் குழப்பினாள்.

எல்லோரையும் ஸீட்டிலுள்ள பாதுகாப்பு பெல்ட்டைப் போட்டுக் கொள்ளுமாறு அறிவிப்பு வந்ததும், அதை அரைகுறையாகப் புரிந்து கொண்ட கிச்சா எழுந்து ஓடிப்போய் அந்த ஏர்ஹோஸ்டஸைத் தனியாக அழைத்து, ‘மேடம்… வீட்டிலேர்ந்து நான் கிளம்பறச்சேயே பெல்ட் பிஞ்சிடுச்சு… ஆபத்துக்குப் பாதகமில்லேன்னு பாண்ட்டைச் சுத்தி இறுக்கமா சணல் கயிறால கட்டிண்டிருக்கேன். நாலு பேர் முன்னாடி ‘பெல்ட் போட்டுக்கோ’அ பிடிவாதம் பண்ணிப் பிராணனை வாங்காதீங்கோ’ என்று எச்சரிக்கை விடுத்தான்.

கேனத்தனமாக நடந்துகொள்ளும் கிச்சாவிடம் பயந்தபடி சாக்லேட் மிட்டாய் நிரம்பிய தட்டை நீட்டிய பணிப்பெண், ‘நோ தாங்க்ஸ்’ என்ற அவனது திடீர் நாசூக்கில் நெகிழ்ந்து போன சமயம், கிச்சா சார்பாகத் தட்டிலுள்ள அத்தனை இனிப்புகளையும் எச்சுமிப் பாட்டி புடைவைத் தலைப்பில் கொட்டி முடிந்து கொண்டுவிட்டாள்.

வந்த பயணிகளை பைலட் சார்பாக ஒரு பணிப்பெண் வரவேற்க, அப்போது திடீரென்று நினைவுக்கு வந்தவள் போல எச்சுமிப்பாட்டி எழுந்து நின்று ‘தோ பாரு, அவசரம் ஒண்ணுமில்லை, டிரைவர்கிட்டே சொல்லி பிளேனை மெல்ல ஓட்டச் சொல்லுடியம்மா. ஹைதராபாத் போய்க் கிழிக்கிற அளவுக்குப் பெரிசா ஒண்ணும் யாருக்கும் வேலையில்லை’ என்று கூவினாள்.

விமானம் ஆபத்துக்குள்ளாகும் நேரத்தில் தப்பிக்கும் எமர்ஜென்ஸி வாசல்களைத் திறக்கும் விதத்தையும், அழுத்தம் வேறுபடும் நேரங்களில் தலைக்குமேல் பிளாஸ்டிக் பையில் இருக்கும் ஆக்ஸிஜனை உபயோகிக்கும் வழிமுறைகளையும் ஒருத்தி அபிநயத்தோடு செய்துகாட்ட புல்லரித்துப் போன கிச்சா படபடவென்று கைதட்டிவிட்டு ‘ஒன்ஸ்மோர்’ என்று கூவி விசிலடித்தான்.

சக பயணிகளைச் சிநேகம் பண்ணிக்கொள்ள விரும்பிய எச்சுமிப்பாட்டி, தான் கொண்டுவந்த முறுக்கு, சீடை இத்யாதிகளை ஏர்ஹோஸ்டஸின் நளினத்தோடு நடந்து போய் அனைவருக்கும் விநியோகித்தாள். இதற்குள் கைமுறுக்கு விநியோக விஷயம் காக்-பிட்டுக்குப் பரவ, ஒலிபெருக்கியில் முறுக்கு கேட்டு

அறிவிப்பு செய்தார் காப்டன். முறுக்கு, சீடை டப்பாவோடு காக்-பிட்டுக்குள் நுழைந்த கிச்சா அங்கு விமானத்தை ஓட்டிக் கொண்டு பிஸியாக இருந்த கோ-பைலட்டின் திறந்த வாய்க்குள் நான்கைந்து சீடைகளை ஊட்டிவிட்டு, டப்பியோடு மீதியைப் பக்கத்தில் இருந்த பைலட்டிடம் தந்துவிட்டு வந்தான்.

திடீரென்று அபாய அறிவிப்பு மணி சத்தம் கேட்டு காக்-பிட்டுக்குள் ஓடிய பணிப்பெண் அங்கு ஏற்கெனவே கேஸ்ட்ரிக் ப்ராப்ளத்தால் கஷ்டப்படும் காப்டன், எச்சுமிப் பாட்டியின் உளுந்து பதார்த்தங்களை ஓவராகச் சாப்பிட்டதால் உப்புசமாகி வாயு தூத்தாக கை-கால் மடங்கிக் கீழே கிடப்பதைப் பார்த்தாள். இதைக் கண்டும் காணாதது போல இருக்கும் கோ-பைலட்டை உலுக்கியவள் அவர் தலை சாய்வது கண்டு திகைத்தாள். வாய்கொள்ளாமல் கிச்சா ஊட்டிய சீடை தொண்டையில் அடைத்துக் கொண்டதால், கோ- பைலட் மூச்சுவிட முடியாத அளவுக்குப் பேய் முழி முழித்துக் கொண்டிருந்தார். பைலட் இல்லாமல் அநாதையாக விமானம் பறப்பதைப் பார்த்த அந்தப் பணிப்பெண் இந்த ஆபத்தைத் தடுக்க எண்ணி; தனது சக சிப்பந்திகளைக் கூப்பிட்டு மறைவான இடத்தில் அவசர மாநாடு நடத்தினாள்.

இதற்குள் எச்சுமிப் பாட்டியின் அன்னதானத்தில் மூழ்கிய பயணிகள் அவள் நறுக்கித் தந்த மாம்பழத் துண்டங்களை முழுங்குவது, ஆளுக்கொரு உருண்டையாக அவள் தந்த தயிர்சாதத்தைக் கொட்டிக் கொள்வது, பலாச்சுளைகளைத் தேனில் தோய்த்துக் கொட்டிக் கொள்வது என்று விமானத்தை ‘பறக்கும் ஓட்ட’லாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சந்தோஷத்தை அதிகரிக்க அந்தச் சிறிய இடத்தில் ஏரோப்ளேன் பாண்டி ஆடிக் காட்டினான் கிச்சா. இதனால் கூச்சலும் குழப்பமுமாக இருந்த அவர்கள், விமானப் பணிப்பெண் வந்து, நேர்ந்திருக்கும் ஆபத்தைத் தனது நெளிவுசுளிவான ஆங்கிலத்தில் கூறியபோது, வழக்கம் போல பெல்ட் போட்டுக்கச் சொல்கிறாள் என்று நினைத்துக் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்து விட்டார்கள். அலுத்துப்போன அவள் உரத்த குரலில் காப்டனும், கோ-பைலட்டும் சீடை, முறுக்கால் சுவாதீனமிழந்து கிடப்பதைக் கூறிவிட்டு, ‘ஆபத்து சமயத்தில் என்ன புடலங்காய் ஆங்கிலம் வேண்டிக் கிடக்கு என்று, ‘தைரியமா பிளேன் ஓட்டத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?’ என்று தமிழிலேயே கேட்டாள்!

கார் ஓட்டுவதில் ஆரம்பித்து பிஸினஸில் ஈ ஓட்டுவது வரை அறிந்த பயணிகளில் பிளேன் ஓட்டத் தெரிந்தவர் ஒருத்தர்கூட இல்லை என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்ட பணிப்பெண் எல்லோரையும் பைலட், கோ-பைலட் சீக்கிரமாகவே குணமாக சர்வமத பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கொண்டாள்.

இதற்குள் ஒரு முடிவுக்கு வந்த கிச்சா தன்னுடையது என்று நினைத்து, பக்கத்தில் பயத்தால் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தவரின் பெல்ட்டை அவிழ்த்துவிட்டு எழுந்து பணிப் பெண்ணிடம் சென்று, ‘விமானத்தை நான் ஓட்டுகிறேன்’ என்று வீரமாகக் கூறிவிட்டு ரகசியமாக, ‘இது என்ன டைப் பிளேன்… வெஸ்பாவா? லாம்ப்ரட்டாவா?’ என்று கேட்டு அவளை மயக்கம் போட வைத்தான்.

காக்-பிட்டுக்குள் நுழைந்த கிச்சா சீட்டிலிருந்த கோ-பைலட்டை விடுவித்து வெளியே போட்டுவிட்டு அமர்ந்து, அரைமயக்கத்தில் இருக்கும் பைலட் சொல்லச் சொல்ல அதன்படி பிளேனை ஓட்ட ஆரம்பித்தான். முதலில் தனக்கு ராசியான பச்சை கலர் பட்டனை அமுக்க, ஓட்டுநர் இல்லாமல் இதுவரையில் ஓரளவு சீராகப் போய்க் கொண்டிருந்த அந்த விமானம் செங்குத்தாக நிமிர்ந்து ராக்கெட்டாகி அதே நிலையில் நூறு அடிகள் மேலே பாய்ந்தது. வெலவெலத்த கிச்சா வேறு ஏதோ பட்டனை அமுக்க, விமானம் பழையபடி சாதுவாகி பத்து மைல் வேகத்தில் தவழ ஆரம்பித்தது. எச்சுமிப் பாட்டியின் உபசரிப்பால் ஏகமாகத் தின்றுவிட்ட பயணிகள் கிச்சாவின் இந்தத் திடீர் ஹரியானா குலுக்கலால் குடை சாய்ந்து உருள, சிலர் வசதியாக இனி நடப்பது தெரியாத அளவுக்கு ஆழ்ந்த மயக்கத்தில் மூழ்கினார்கள். மீதியிருந்தவர்கள் அந்தக் குலுக்கலால் குப்பையாக விமானத்தின் ஈசான்ய மூலையில் குவிந்து கிடந்தார்கள்.

‘அப்புறம் அடுத்தது என்ன?’ என்று பார்த்த கிச்சாவிடம் வாயு உபத்திரவத்தால் வாய் குழறிப் போன பைலட், வெறியோடு, ‘ஆல்டிடுயூட்டைக் குறைச்சுத் தொலைடா அராத்து’ என்று கிச்சாவுக்குப் புரியாமல் உளற, கிச்சா அங்கிருந்த ஒரு லீவரைப் பற்றியிழுக்க பயங்கரமான சத்தத்தைத் தொடர்ந்து விமானத்தின் சக்கரங்கள் வெளியேறி கழண்டு கீழே விழுவதைத் தன் கண்களாலேயே பார்த்தான். விஷயத்தை பைலட்டிடம் கூறி, ‘ஸ்டெப்னி இருக்கா, மாட்டிடுவோம்’ என்று கிச்சா கேட்டபோது பைட் தனது முழு சுவாதீனத்தையும் இழந்து மோனத்துயிலில் மூழ்கினார்.

காக்-பிட் அதன் பிறகு கிச்சா ராஜ்யமானது. “என்ன கண்றாவிடா பண்ணிண்டுருக்கே?’ என்று கேட்டு வந்த எச்சுமிப் பாட்டியை பைலட் ஸீட்டில் அமர்த்திய கிச்சா அங்கிருந்த பட்டன்களை புல்புல்தாரா வாசிப்பது போல அமுக்கித் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து பார்த்தான்.

மீனம்பாக்கம் கண்ட்ரோல் டவரிலிருந்து நிலைமை உணர்ந்து அதிகாரிகள் ஆங்கிலத்தில் கிச்சாவுக்கு ஆர்டர்கள் கொடுக்க, ‘மொதல்ல தமிழ்ல பேசித் தொலையுங்கப்பா’ என்று கிச்சா பதில் ஆர்டர் அளித்துவிட்டு ஒரு பட்டனை அமுத்த, கண்ட்ரோல் டவர் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

கத்துக்குட்டி கிச்சா, அடுத்து ஏதோ ஒரு டயலைத் திருப்ப அதுவரை வானத்தில் தட்டாமாலை சுற்றிக் கொண்டிருந்த விமானம் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டுத் தனக்குக் கீழே தட்டாமாலையாகச் சுற்றிக் கொண்டிருந்த பருந்தைத் துரத்தித் துரத்தி அடித்து முடிவில் பருந்து மீது மோதி காக்-பிட் கண்ணாடி சுவர் உடைந்தது. இதுதான் சாக்கென்று எச்சுமிப் பாட்டி தன்னிடமிருந்த ஈர டவலை அந்தக் கண்ணாடி ஓட்டையில் தொங்கவிட்டுக் காயப் போட்டாள்.

“ஏன் இன்னும் ஹைதராபாத் வரலை?’ என்று கேட்டபடி எட்டிப் பார்த்த கிச்சா உற்சாகம் கொப்பளிக்க, ‘பாட்டி, பார்த்தசாரதி பெருமாள் கோயில்’ என்று கத்திவிட்டு விமானத்தைச் சற்றுத் தாழ்வாக இறக்க, எச்சுமிப் பாட்டி ஓட்டை வழியாகக் கைவிட்டு பெருமாள் கோயில் கோபுரத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். ‘கிச்சா அப்படியே டி.பி. கோயில் தெருவழியாக நம்மாத்துக்குப் போ…’ என்று எச்சுமிப் பாட்டி கேட்டுக் கொள்ள கிச்சாவின் விமானம் வீட்டு மொட்டைமாடிக்கருகில் மெதுவாகப் பறந்தது. அப்போது யாரும் இல்லாத தன் வீட்டுக்குள் நுழைய மாடிக்குக் குதித்த திருடனைப் பார்த்துக் கிச்சா ‘டாய்’ என்று கத்திவிட்டு, அவன் தலையில் பைலட் மீதி வைத்த சீடையால் விமானத் தாக்குதல் நடத்தி அவனை விரட்டியடித்தான். அப்போது அங்கு பறந்து கொண்டிருந்த ‘பாணா’ ரங்குடுவின் காத்தாடியைத் தனது ஏரோபிளேனால் டீல் போட்டுக் கீழே வீழ்த்தினான்.

டயர் இல்லாமல் விமானத்தை எப்படித் தரையில் இறக்குவது என்று யோசித்தபடி பீச்சோரமாக குளுகுளுவென்று பறந்து கொண்டிருந்த கிச்சா விமானத்தை மணலில் இறக்க முடிவு செய்தான். எச்சுமிப் பாட்டி ஒலிபெருக்கி வழியாக ஓரமாக உருண்டு கிடக்கும் பயணிகளை ஸீட்டில் அமர்ந்து பெல்ட்டைக் கட்டிக் கொள்ளுமாறு ஸ்டைலாகத் தமிழில் கேட்டுக் கொண்டாள். விமானத்தை இறக்கும் லீவரை கிச்சா செடி கிள்ளுவது போல வேகமாகப் பிடித்திழுக்க, சர்வமும் அடங்கி மவுனமான அந்த விமானம் மாடு சாணி

போட்டது போல தொப்பென்று வி.ஜி.பி. கோல்டன் பீச்சுக்கு அருகில் விழுந்தது. இப்படியாகத் தனது ! விமான காண்டத்தை என்னிடம் கூறி முடித்த கிச்சா, ‘உனக்கு நம்பிக்கையில்லாவிட்டால், வி.ஜி.பி. கோல்டன் பீச்சுக்கு வா, போகலாம். மணல் தட்டிய விமானத்தைக் காட்டுகிறேன்…’ என்று என்னிடம் கூற, நம்பிக்கையில்லாத நான் ‘நாளை போகலாம், ரெடி ஆயிரு என்றேன். மறுநாள் நான் பிரைவேட் டாக்ஸி வைத்துக் கொண்டு போனபோது, கிச்சாவும் எச்சுமிப் பாட்டியும் பழையபடி டப்பாவில் முறுக்கு, சீடை, கூஜாவில் ஜூஸ் என்று ரெடியாக இருந்தார்கள்.

வி.ஜி.பி. கோல்டன் பீச் சென்றதும், கிச்சாவின் விமான சாகசம் ஒரு ஆகாசப் புளுகு என்பது புரிந்துவிட்டது.

‘ஸாரிடா. கோல்டன் பீச் பாக்கணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. இப்படி ஏதாவது சொன்னாத்தான் நீ டாக்ஸி வெச்சு என்னை அழைச்சுண்டு போவேங்கறதுக்காகச் சொன்னேன்…’ என்று கூறிய கிச்சா, உள்ளே நுழைய மூன்று டிக்கெட் வாங்கும்படி என்னிடம் கூறிவிட்டு, அங்கிருந்த பொம்மை ரயிலில் பாட்டியோடு தாவி ஏறி என்னைப் பார்த்து நக்கலாகச் சிரிக்க ஆரம்பித்தான்.

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019)[3] தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்.[4] அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *