பேரண்ட வெளிச்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 10,334 
 

பல் துலக்குவதற்கு வேப்பங்குச்சியை ஒடிக்கக் கை உயர்த்தியபோது, அதுவரை வாகாய்த் தாழ்ந்திருந்த மரம், ‘சொய்ங்’கென்று மேலே போய்விட்டது. எப்போதும் குச்சியொடிக்கும் மரம்தான், அது. இதற்குமுன், இப்படி நிகழ்ந்ததில்லை. நிகழ்ந்ததாக, நான் கேள்விப்பட்டதுமில்லை. கோபித்துக் கொண்ட சவலைப்பிள்ளை முகம் தூக்கிக்கொள்வதுபோல நெடிதுயர்ந்துவிட்ட மரம், குச்சியொடிக்க முடியாத உயரத்தில், தனது கிளைகளை இருத்திக்கொண்டது. ஏணி வைத்தோ, மாடியில் ஏறியோக்கூட ஒடிக்க முடியாத உயரம், அது!

கொல்லிமலை முனிவர் ஒருவர், ‘தினமும் வேப்பங்குச்சியால்தான் நீ பல்துலக்க வேண்டும்’ என்று என் கனவில் வந்து எச்சரிக்கையும், கண்டிப்பும் காட்டிச் சொன்னதிலிருந்து, அங்கிருந்தே ஒரு வேப்பங்கன்றைக் கொண்டுவந்து நட்டு, இதற்காகவே வளர்த்து வருகிறேன்.

அந்த மரம், ‘திடுமென’ நெடுநெடுவென உயர்ந்துவிட்டது, அதிசயமாகத்தான் இருக்கிறது. அதைப் பார்த்து, “அட மாயமே…?” என்று நான் ஆச்சரியப்பட்ட நொடிகளில், என் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டு இருந்தவர்களெல்லாம் விழித்தெழுந்து அலறியடித்துக் கொண்டு, ‘தடாபுடா’வென்று வெளியில் ஓடிவந்தார்கள். வழியில் நின்றிருந்த என்னை ஆளாளுக்கு இடித்துத் தள்ளியபடி, தெருவுக்கு ஓடினார்கள்.

அப்போது, அதிகாலைத் தெரு அமைதியாக இருந்தது. விடியலை ஏந்திக் கொள்வதற்கான ஆயத்தம் கூட அங்கிருக்கவில்லை. பாதிப்பேர் இழுத்துப் போர்த்தியபடி அவரவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். மீதிப்பேர், அவரவர் சுக வேலையில் மும்முரமாக இருந்திருக்க வேண்டும். நடமாட்டம் எதுவுமில்லை. ஒருநாய் மட்டும், வயிற்றுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு, சுருண்டு படுத்திருந்தது.

தெருவுக்கு ஓடிய என் வீட்டார்களின் முகத்தில், பூகம்பத்தில் சிக்கிக் கொண்டவர்களின் பீதி இருந்தது. “சிக்கந்தா மலைமேலருக்குற பாறைக உருண்டுவர்ற மாதிரி சத்தங் கேட்டுச்சே!” என்று பரபரத்தார், என் பெரியப்பா.

“ரெண்டு மலைக மோதிக்குர்ற மாதிரி எனக்கு சத்தங் கேட்டுச்சு!” என்றார், என் அம்மா.

அப்பாவும், தங்கையும்கூட அவரவருக்குக் கேட்ட சத்தங்களை உணர்ச்சிப் பூர்வமாகச் சொன்னார்கள்.

“நீ தான் வெள்ளனமே எந்திரிச்சுட்டீயே, ஒனக்குக் கேக்கலை?” என்று என்னைப் பார்த்தார்கள்.

மரம் மேலேபோன சங்கதியைக் காட்டிலும் அந்தக்கேள்வி, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொஞ்ச நேரமாக எல்லாமே ஆச்சரியம் தரும் விஷயங்களாகவே நடக்கின்றன. வித்தியாசமான விடியலாக இன்றைய பொழுதை உணர முடிந்தாலும், அப்படியேதும் சத்தம் கேட்டதாக எனக்குத் தெரியவில்லை. என் காதுகள் கூர்மையானவை. பாம்புக்கு காதுகள் இல்லை என்று அறிவியல் பாடத்தில் படித்திருந்தாலும், எனக்கு பாம்புக் காது என்று அடிக்கடி வீட்டில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

“சத்தம் எதுவுங் கேக்கலியே!’ என்றேன்.

மறுபடியும் அவர்கள் வெளியே ஓடினார்கள். “அதே சத்தம்!” என்று பிரமித்தார்கள். அப்போதும் எனக்கு, சத்தம் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் மனப் பிராந்தியில் இருப்பதாக நினைத்துக் கொண்ட நான், அவர்களைக் கூர்ந்தேன். எதுவோ ஒன்று நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பவர்கள் போல அவர்கள் தென்பட்டார்கள். தெருவில் சிறிதுநேரம்வரை ஒருவிதத் தவிப்புடன் நின்றிருந்தவர்கள், பின்பு ஒவ்வொருவராய் உள்ளே வந்தார்கள். அவர்கள் முகத்தில், எதிர்பார்ப்பு நிறைவேறாத ஏமாற்றம் இருந்தது. “சத்தம் மட்டும் கேக்குது. ஆனா எதுவும் தென்பட மாட்டேங்குதே?” என்று, உவப்பற்ற விஷயத்தில் நேரம்கழியும் கவலையில், அவர்கள் ஆழ்ந்தார்கள்.

“எனக்கு ஒன்னுங் கேக்கலியே?” என்று இப்போது நான் சொன்னபோது, குண்டுவெடிக்கும் சத்தம் கேட்பது போல, பெரியப்பா மறுபடியும் காதைப்பொத்திக் கொண்டார்.

அம்மா, “இவன்ட்டருந்துதான் அப்படிச் சத்தம் வருது!” என்று மிரண்டு, பின் வாங்கினார்கள்.

அப்பாவும் பயந்து போனார். தங்கை மூர்ச்சையாகிக் கீழே விழுந்துவிட்டாள்.

‘எனக்கு ஒன்னுங் கேக்கலியே?’ என்று, மூன்று வார்த்தைகளைத்தான் நான் பேசியிருந்தேன். அவர்கள் அதில் பிரளயமே வருவதாகச் சொன்னார்கள். என் குரல் மாறிவிட்டதாகவும், அதில் கடூரம் இருப்பதாகவும் பயமுறுத்தினார்கள்.

வேறு யார் சொல்லியிருந்தாலும்கூட, அதை நான் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். சொன்னது பெரியப்பா. அவருக்கு என்மேல் பாசம் அதிகம். அறிவாளி என்று அன்பு பாராட்டுவார். அவருக்கு கவாலி, கஜல் எல்லாமே பிடிக்கும். என்னைப் பாடச்சொல்லிக் கேட்பார். பாடக் கற்றுக்கொடுத்ததே, அவர் தான். என்னை மறந்து உச்சஸ்தாதியில் நான் பாடும்போது எழுந்துநின்று, “வார்ர்ர்ரே… வாஹ்!” என்று வயதை மறந்து ஆடி, என்னை உற்சாகப் படுத்துவார். பாடி முடித்ததும் ஆரத் தழுவிக் கொள்வார். மற்றவர்களிடம், “என் தம்பிப் பையன். எம்மகன்!” என்று புளகாங்கிதத்துடன் அறிமுகம் செய்வார். கொல்லி மலை முனிவரின் நண்பர் அவர். அவருக்கும் கொஞ்சம் சித்துவேலைகள் தெரியும். அவரே, “மகனே… என்னாச்சு?” என்று பரிதவித்த போதுதான், என் குரலையே நான் கேட்டேன். மாறிப் போயிருந்தது. மீண்டும் பேசிப் பார்த்தேன். ‘கரகர’வென்றது. மெதுகுரலே பன்பெருக்கி இல்லாமல் ஆயிரங்களின் மடங்குகளில் ஒலித்தது.

பக்கத்து வீட்டிலிருந்தெல்லாம், ‘என்னமோ சத்தங் கேக்குதே… உங்களுக்குக் கேக்குதா?’ என்று, அலமாந்துபோய் வெளியில்வந்து, பயத்துடன் கேட்டார்கள். காட்சிப்பொருள் போலாக்கப்பட்ட என்னை, அசூசையுடன் பார்த்தார்கள்.

அந்தப் பார்வை என்மீது பட்டதில், நான் ஒரு புழுபோல சுருளத் துவங்கினேன். “கோரிப்பாளையம் பள்ளிவாசலுக்கு கூட்டிட்டுப்போய் மந்திரிக்கணும்” என்றார், பக்கத்து வீட்டுக்காரர். “வேணாம். உருளைக்கிழங்கு சாயபுட்ட காட்டுவோம். அவர் கைராசிக்காரரு” என்றார், மற்றொருவர்.

“எங்களுக்கு சிச்சாலால்தான் ராசியானவரு!” என்றார், அம்மா.

“ஏன் வீட்லயே நானில்லையா?” என்றார், பெரியப்பா.

ஆளாளுக்கு என்னை அம்மணமாகப் பார்க்க ஆசைப்பட்டார்கள். மாந்திரீகக்காரர் ‘ச்சா…சூ…சீ’ என்று ஏதோ சொல்லி, என் மூஞ்சியில் துப்புவதை ரசிக்கத் தயாராக அவர்கள் இருப்பது எனக்குப் புரிந்தது. ஏன் அவர்களுக்கு இத்தனை பெரிய ஆசை என்பது எனக்கு விளங்கவில்லை. மடங்கி உட்கார்ந்து அழ வேண்டும்போல் இருந்தது. மடங்கினால் புழுவாகவே ஆகியிருந்தேன்.

என்னை விட்டுவிட்டு, மூர்ச்சையாகி விழுந்துவிட்ட தங்கையைச் சுற்றி எல்லோரும் நின்றிருந்தார்கள்.

நேற்று இரவிலிருந்தே எனக்குள் ஒருமாற்றம் தெரியத் துவங்கியிருந்தது. ‘தமிழ் இலக்கியத்துக்கு, நாங்கதான் உலகத்துலேயே பெரிய இவங்க’ என்று சொல்லிக்கொள்ளும் மாதப் பத்திரிக்கைக்கு, கொஞ்ச நாட்களுக்கு முன்பு, ஒருகவிதை எழுதி அனுப்பியிருந்தேன்.

அந்தக் கவிதையை, அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், ‘உலகத் தரத்தில் வந்திருக்கும் ஒரே… கவிதை !’ எனும் அடைமொழிக் குறிப்புடன் வெளியிட்டிருந்தார்.

இதழ் வெளியான அரைமணி நேரத்திலேயே, அந்தப் புத்தகம் உலகமெங்கும் விற்றுத் தீர்ந்து விட்டதாக செய்திவந்தது. நூறு புத்தகங்களை மட்டுமே பதிப்பித்திருந்த அதன் பதிப்பாளர் அதைக்கேட்டு, ‘நம்ம புத்தகமா?’ என்று ஆசிரியரிடம் ஆச்சரியம் காட்டியபடி மயங்கி விழுந்ததில், கோமா நிலைக்குப்போய், ‘இன் ரிக்கோ டூபாங்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பியிருந்தனர்.

வலைத்தள மின்னிதழ் வாசகர்கள், அந்தக் கவிதையைப் படிக்க ஒரே நேரத்தில் வலையை அணுகியதில், வலை அறுந்துவிட்டதாக கூகுள் நிறுவனமும், யாஹூ நிறுவனமும் ‘sorry for the inconvenience’ என்று அழாதகுறையாக, வலைத்தள வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன், கவிதையை யாத்த என்னிடமும் தொடர்புகொண்டு, ‘தங்களுக்கு உதவமுடியாத நிலையில் இருக்கிறோம். பி.எஸ்.எல்.வி. சி – 11 சந்திரனுக்குப் புறப்பட்டுப் போய்விட்டதால், upgraded satillite அடுத்த ராக்கெட்டில் வைத்துதான் அனுப்பமுடியும்” என்று மன்றாடியிருந்தன.
ஐபி – சிபி, டாடா போன்ற வலைத்தள நிறுவனங்கள், ‘இந்தப் போட்டியில் நாம் பங்குகொள்ள முடியவில்லையே’ எனும் வருத்தத்தில், தனது ஊழியர்களுக்கு ஒருமாதச் சம்பளத்தை போனஸாகவும், கூடுதலாக ஆஸ்திரேலியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் விடுமுறைக்காலச் சுற்றுப்பயணத்துக்கான ரிட்டர்ன் டிக்கெட்டுகளும் எடுத்துக்கொடுத்து, விமான நிலையத்திற்கு அதன் தலைவர்களே சென்று வழியனுப்பிவைத்து, தங்கள் கவலையைப் போக்கிக்கொண்டனர்.

அமெரிக்காவிலுள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், மொழியியல் அறிஞருமான ஜார்ஜ்.எல்.ஹார்ட், ‘இக்கவிதையில் தனித்துவமான இலக்கிய மரபு, சுயமான அழகியல், கவிதையியல் கோட்பாடு சிறப்பாக உள்ளது. உலக இலக்கியக் களஞ்சியத்தில் இது முக்கியமானது. தமிழின் சிறப்புக்கு இக்கவிதை சான்றாகும்’ என்று வாசகர் கடிதம் எழுதி வைத்திக்கொண்டு, கூரியரில் அனுப்ப ஆளில்லாமல் தவித்துக்கொண்டிருப்பதாக ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

பூமத்திய அகாடமியின் தமிழ்மொழிப் பிரிவுத்தலைவர் நான்ங்க்.சூங்.திங்டன், ‘அற்புதமான படைப்பு. இதுக்கு விருது தராட்டி, அப்புறம் நான் எதுக்கு தலைவர் பதவில இருக்கணும்?’ என்று, தன் பரிந்துரையை ஏற்க மறுத்த அமைப்பின் இருக்கையை விட்டு எழுந்துவிட்டதாக, 27 – ம் தேதி ‘ரோமானியன் டைம்ஸ்’ பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில், ஆறாவது பத்தியின் நடுவில், இரண்டு துண்டுச் செய்திகளுக்கு இடையில், காலமானார் சைஸில் அச்சிடப்பட்டிருந்ததாக, சோழவந்தான் சுப்பிரமணியம் சுவாமி மொராக்கோ நாட்டிலிருந்து எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பி, ‘காலம் வரும்போது அதன் ஆதாரத்தை வெளியிடுவதாக’வும் சொல்லியிருந்தார்.

போஸ்ட் மார்டனிஸம்… பின் நவீனத்துவம் என்று கூட்டத்துக்குக் கூட்டம் அடித்துக் கொள்ளும் இலக்கிய ஆய்வாளர் பேராசிரியர். ப. ஆனந்தகுமார், ‘இதுபோலானதொரு கவிதை, கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வெளியாகி இருக்கிறது. கவிதையின் தலைப்பு… ‘அந்துக்கோ… ஆப்புக் கோ…’ மல்லாந்தான் மன்றாடிப் புலவனார் அதை யாத்திருந்தார். மன்னன் யாப்பிழந்தான் சிறுவழுதியின் சபையில் அதைப்பாடிவிட்டு, அப்புலவர் மன்னன் தந்த பரிசுத்தொகையை எண்ணிக் கொண்டே வெளியே வந்தபோது, மன்னன் அனுப்பிய ஆள் அந்தக் கவிதையை வழிப்பறி செய்து கொண்டுபோய், மன்னனிடமே சேர்ப்பித்துவிட்டான்.

தட்டிக்கொண்டுவந்த அந்தக் கவிதையை தான் யாத்ததாக, பக்கத்து நாட்டுப் பேரரசனிடமிருந்து கவர்ந்துவந்து அந்தப்புரத்தில் புதிதாகச் சேர்த்திருந்த காதுகொஞ்சம் மந்தமான புது ராணியிடம், மன்னன் யாப்பிழந்தான் சிறுவழுதி காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி எல்லாவற்றையும் விட்டு விட்டு, ஒண்ணாப்புக் குழந்தை கண்ணை மூடிக்கொண்டு பாடுமே, அதுபோல பாடிக்காட்ட… கடுப்பாகிப்போன புது ராணி, ‘வேலையத்த வேலைல கவிதைப் பாடுறானாமே… கவிதை?’ என்று அதை ஆத்திரத்தில் பறித்து எறிந்ததில், சுவற்றில் மாட்டியிருந்த தீவட்டியில் பட்டு, அந்தக் கவிதை எரிந்து போனதாக, ஈராக்கிலுள்ள பாக்தாத் அரசின் மத்திய நூலகத்தின் மூன்றாவது மாடியில், நாலாவது வரிசையில் உள்ள ஆறாவது இரும்பு ரேக்கின் பதினேழாவது புத்தகமான W.R. 52/48 KRT ‘Reasons for lose’ written by Hopeless Short Man, 3rd edition, 0023 A.D.,published by Zing Hong, Kenya வில் ஒருகுறிப்பு இருந்தது.

அந்தக் குறிப்பையும் அமெரிக்க வெண்ணை வெட்டி மொண்ணைச் சிப்பாய்கள், சதாம் உசேன் இன்றைய ராசிபலன் படிக்க அந்த நூலகத்துக்குப் போயிருக்கலாம் என்ற தவறான தகவலின்பேரில் போட்ட குண்டில், நூலகமே தீப்பற்றி எரிந்துவிட்டதில், சாம்பலாகிப் போய்விட்டது. அதன்பின், இப்போது தான் இப்படியான ஒருகவிதை வெளிவந்திருக்கிறது. இது, மிக முக்கியமான ஒன்று!

கவிதை வெளிவந்துள்ள இதழை, காசுகொடுத்து வாங்கியோ… அல்லது வாங்கியவர்கள் அசந்த நேரத்தில் அதைச்சுட்டோ… அல்லது ‘இதைப்போய் காசுகுடுத்து வாங்குனேம்பாரு’ என்று மனம் வெறுத்து, அதை சுடுதண்ணீ வாய்க்காலில் வாங்கியவர் விட்டெறியுமுன்போ கைப்பற்றி, வீட்டு ஜன்னல் ஓரத்திலோ… அலமாரியில் துணிகளுக்கு நடுவிலோ… பத்திரப்படுத்தி பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய கவிதை’ என்று பேசிப்பேசியே, ஒருவழிக்குக் கொண்டு வந்திருந்தார்.

அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட தாண்டவன் அருள்மொழியான் எனும் முதுபெரும் கவிஞர், ‘இதெல்லாம் ஒரு கவிதைன்னு பேசுறாங்கேய்… நான் எழுதுனக் கவிதைய ஒருபயலும் போட மாட்டேங்குறாய்ங்க. முப்பத்தி மூணு வருஷமா எழுதிக்கிட்டுருக்கேன். நாமளாத்தான் ஏதேனும் பப்ளிஷரைத் தேடிப்பிடிச்சுத் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு’ என்று, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இருள்சோணை என்ற குப்புற விழுந்தான் எனும் எழுத்தாளரிடம் வயிறெரிந்தார்.

இருள்சோணை என்ற குப்புற விழுந்தான் எனும் எழுத்தாளர், ஒரு ஆல் – ரவுண்டர். அவர், கவிஞர் தாண்டவன் அருள்மொழியானைத் தேற்றினார். “இதுக்குப்போய் அசந்துட்டா எப்டி? நான் வைக்கிறேன் பாருங்க, ஆப்பு. அடுத்து எந்தப் பத்திரிக்கையும் அவனோட கவிதைன்னாலே காத தூர ஓடுற மாதிரி என்ன எழுதுனா, அவனை ஓரங்கட்ட முடியும்?” என்று, வாசகர் கடிதம் எழுதி மண்ணைக் கவ்வச்செய்யும் அற்புதமான வேலையைச் செய்ய, யோசிக்க ஆரம்பித்திருந்தார்.

இதற்கிடையில், சுப்பிரமணியம் சுவாமி அனுப்பியக் குறுஞ்செய்தி, எப்படியோ உள்ளூர் பத்திரிகையின் பகுதிநேர நிருபருக்குக் கிடைக்க, அவர் என்னைத் ‘தொண்ணாந்தி’ எடுத்துவிட்டார், ‘ஒரு பேட்டிதாங்க சார்!’ என்று.

அவருக்குப் பேட்டிக் கொடுத்ததுதான் வம்பாகிப் போனது.

‘உலக இலக்கியமே நாங்க தான்!’ என்று சொல்லிக்கொள்ளும் இன்னொரு மாதப் பத்திரிகை, என்னிடம் கேட்காமலேயே, ‘அடுத்த இதழில்… உலக இலக்கியத் தரக் கவிதை வெளியாகும்’ என்று, நான் யோசித்தபடி உட்கார்ந்திருக்கும் என் பழைய புகைப்படத்தை, முத்ரா ஸ்டூடியோவில் கேட்டு வாங்கிப்போட்டு விளம்பரம் வைத்த பின்பு, எனக்கு சேதி அனுப்பி, தொகையைப் பூர்த்தி செய்து கொள்ளும்படி ஓர் செக்கும் கொடுத்திருந்தது.

அந்தப் பத்திரிக்கைக்குக் கவிதை எழுத, கரு யோசித்தபோதுதான், நேற்று ராத்திரி தூக்கம் தொலைந்து போனது. புரண்டு படுத்து, கவிழ்ந்து படுத்து, காலை மடக்கிக்கொண்டு படுத்து, நீட்டிக்கொண்டு படுத்து, அரைக் குப்புற, முக்கால் குப்புற, முக்கால் அரைக்கால் குப்புறவெல்லாம் படுத்துப் பார்த்தும் தூக்கம் வரவில்லை. ஒருவழியாக தூக்கம் வந்தபோது, நான் அமானுஷ்யத்தில் இருந்தேன்.

அது ஒரு வனாந்தரம். சடை சடையாய் விழுதுகளைத் தொங்கவிட்டிருக்கும் ஓங்கி உயர்ந்த மரங்கள். ஆலமரங்கள் மட்டுமல்லாமல், அத்தனை மரங்களுக்குமே விழுதுகள் இருந்தன. சூரிய ஒளி புகா வண்ணம் எங்கும் இருட்டடைந்திருந்தது, காடு. அந்த இருட்டினூடே வெண்ணிற பட்டாம் பூச்சிகள் சுற்றித் திரிந்தன. ஒன்றையொன்று அவை கடக்கும்போது, எதிர்பாராமல் உரசிக்கொள்ளும் தருணங்களில், இறக்கைகளிலிருந்து மின்னல் வெளிச்சம் எழுந்தது. அப்போது சூரிய ஒளியைக் காட்டிலும் அதிகப் பிரகாசம் இருந்தது. காடே ஒளிர்ந்தது!

நெடுநேரத்துக்குப் பின்பே, நான் மட்டும் தனியனாய் அங்கிருப்பதை உணர்ந்தேன். அம்மாவின் அரவணைப்பு, அப்பாவின் பாசமழை, சகோதர சகோதரிகளின் சுற்றம், பெரியப்பாவின் வழிகாட்டல் என்று எல்லாமுமாக இருந்த எனக்கு, அந்த இடம் அந்நியமாக மட்டுமல்ல… பயமாகவும் இருந்தது. திரும்பிப் பார்த்தபோது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு நெடுந்தூரம் வந்துவிட்டதை உணர முடிந் தது. வந்த பாதை தெரியவில்லை. திரும்பச் செல்ல வேண்டுமானாலும் வழிதெரியாமல் திண்டாட வேண்டியிருக்கும் போலிருந்தது.

‘ஆஹா… வசமாக மாட்டிக் கொண்டோம்!’ என்றுமட்டும் உணர முடிகிறது. தப்பித்துத் திரும்பச் சென்றுவிட வேண்டும் என்று மனசின் ஓரத்தில் ஒரு உந்துதல் கிளம்பினாலும்… அதைச் செயல்படுத்த முடியுமா எனும் ‘தொத்தல்’ கேள்வி ஒன்று எழுந்து, எனது முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடுகிறது.

தொத்தல் கேள்வியை ஓரங்கட்டிவிட்டு, ‘முயன்றால்… முடியாதது எதுவுமில்லை’ என்று, மூன்றாம் வகுப்பில் தெய்வானை டீச்சர் சொல்லிக்கொடுத்ததை மீட்டு, நினைவுக்குக் கொண்டுவந்து, என்னை நானே புதுப்பித்துக் கொள்கிறேன். அது எனக்குக் கை வருகிறது. உடனே புதுபலம் கிடைத்தது போல உடம்பெங்கும் உத்வேகம் பரவுகிறது. ‘இதோ நீ கேட்ட திட சக்தி’யுடன், புது மனிதனாக என்னை பலப்படுத்திக்கொண்டு, ‘வழியேதும் தெரிகிறதா?’ என்று பார்க்க, நெடிதுயர்ந்த மரம் ஒன்றில் மூதாதையரின் தரவின்படி ‘சரசர’வென்று மேலேறுகிறேன். முன்னோர் ஆசி இருப்பதாக பின்னங்கால்கள், முன்னங்கைகளின் செயல்பாடுகள் தெரிவித்தன. அதைப் பயன்படுத்தி ஏறி விட்டேன்.

இருட்டைத் தாண்டிய ஓர் வெளிச்சப் பகுதி அங்கிருப்பது தெரிகிறது. சுற்றும்முற்றும் பார்க்கிறேன். பேரண்ட வெளிச்சம், அது!

அந்த வெளிச்சப்பகுதி மெல்ல மெல்ல… நகர்ந்து, இருண்ட பகுதிக்குள் அமைதியாக ஊடாடுவது தெரிகிறது. வெளிச்சம் புகப்புக இருள் மறைகிறது. நகரும் வெளிச்சத்தை நான் கூர்ந்து பார்க்க… அது ஒரு ஊர்வலம். அதில் இருப்பவர்களெல்லாம் பெண்களாக இருந்தார்கள். அத்தனை அழகு, அவர்களுக்கு. அழகுப் போட்டியில் கலந்து கொள்பவர்களைப்போல ஆளாளுக்கு ஒயில்காட்டி நடந்து வந்தனர். பத்துப்பேர் கொண்ட அந்த ஊர்வலம் என்னைக் கடக்க, மூன்று மணிநேரம் நாற்பத்தெட்டு நிமிடங்கள் ஐம்பத்தொன்பது விநாடி ஆகியிருந்தது.

இதற்குமுன் இத்தனை அழகுடன் நான் கனவிலும்கூட பெண்களைப் பார்த்தது இல்லை. நானிருந்த இடத்தில் விஜய் மல்லையா இருந்திருந்தால், அந்தப் பெண்களுடன் கலந்து நின்று, புன்னகைத்தபடி புகைப்படம் எடுக்கச்சொல்லி, தனது நிறுவனத்தின விளம்பரக் காலண்டர்கள் அச்சடிக்க ஏற்பாடு செய்திருப்பார்.

இது நனவு!

ஒளிரும் அழகு கொண்டவர்களான அவர்கள், அருகில் வர வர… அத்தனைப் பெண்களும் நிர்வாணமாக இருப்பது தெரிகிறது. ஆடைகள் இருக்க வேண்டிய இடத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆபரணங்கள். ஊர்வலத்தில், நடுநாயகமாக வந்த இளம்பெண்ணின் மார்பில், இரண்டு கருப்பு நிறப் பட்டாம்பூச்சிகள் அமர்ந்திருந்தன. அதன் நுண்ணுணர்வுக் கொம்புகள், ஒரே தாள லயத்தில் அசைந்தாடின. வயிறுமுட்ட மதுவை உண்டிருந்த அவை, எழுந்து பறக்க முடியாமல் மயக்கத்தில் திண்டாடிக் கொண்டிருந்தன.

அவைகளை விரட்டி விடாமல் மது உண்ண அனுமதித்திருந்த அவள், மிகவும் அழகாக இருந்தாள். லயிப்பில் விழிகள் மேலேறி, அசைவற்றுச் சொக்கிப் போயிருந்தாள். அடுத்த அடி எடுத்துவைக்க முடியாமல் பாதங்கள் புரள்கின்றன. அந்தக் கூட்டத்துக்கு அவள் இளவரசியாக இருக்கவேண்டும் என்று நானாக நினைத்துக் கொண்டேன். மற்ற பெண்களும், ஏறக்குறைய அவளைப்போலவே இயங்கிக் கொண்டிருந்தனர்.

நானிருந்த மரத்தைக் கடந்துபோன அந்தக்கூட்டம், அங்கிருந்த குளம் ஒன்றில், அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றிவைத்துவிட்டு இறங்கி, நீந்தத் தொடங்கியது. குளத்திலிருந்த தண்ணீர், மெதுவாக அதன் குணத்தை இழந்து, மதுவாக மாறத் துவங்கியது.

அவர்களை நான் ரசித்துக் கொண்டிருந்தபோது, மரத்தின் மீது உட்கார்ந்திருந்த என்னை ஒருகை நிமிண்டியது. பயந்துபோய் குனிந்து பார்த்தேன். தரையில் நின்றபடியே ஒரு கிழப்பெண் கை நீட்டியிருந்தாள்.

நடுநடுங்கிப்போய் கீழே இறங்கி, முட்டாள்த்தனமாக ஓட யத்தனித்தபோது, நின்ற இடத்திலிருந்தே கைநீட்டி, என்னைப் பிடித்துவிட்டாள். “ஓடாதே… உனக்கு நான் உதவி செய்கிறேன்!” என்றாள்.

யாருடைய கருணையாக இருக்கும்?

“நீங்களெல்லாம் யார்?”

“நாங்களா?.. ஏவாளின் வழித் தோன்றல்கள்!”

“ஏன் நிர்வாணமாக இருக்கிறீர்கள்?”

“யார் இங்கே நிர்வாணமாக இருக்கிறார்கள்?”

“நீங்கள் எல்லோரும்தான். என்னைப்போல் யாருமே இங்கே ஆடை அணிய வில்லையே!”

“ஆடை அணிவதால் மட்டுமே நிர்வாணம் மறைந்துவிடுமா?”

எனக்கு பதில் சொல்லத் தொ¢யவில்லை.

அவள் சிரித்தபடி கேட்டாள். “நீ எதற்கு இங்கே வந்தாய்?”

“கவிதைக்கு கருத் தேடி வந்தேன்!”

“கவிதைக்கு கருவா?”

“ஆமாம்! கவிதைக்கு கருதான்!”

“அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஏவாளைக் காட்டுகிறேன்… அவளிடம் கேட்டுப் பார்!”

“ஏவாளிடமா?”

“ஆமாம். ஏவாளிடம்தான்!”

“அவள் இன்னுமா உயிரோடு இருக்கிறாள்?”

“அவளுக்கு இறப்புதான் இல்லையே!”

“இறப்பு இல்லையா? ம்… அப்படியானால் பார்ப்போமே!”

அவளைத் தொடர்ந்து சென்றேன்.

ஓரிடத்தில் நாங்கள் நின்றோம். அந்த இடத்தில் வெளிச்சம் இருந்தது.

ஆதாமைக் காணவில்லை. ஏவாள் மட்டுமே இருந்தாள், அதே பரிசுத்த நிர்வாணத்தோடு!

அவளைப் பார்த்த சந்தோஷத்தில், ‘ஆதாம் எங்கே?’ என்று கேட்க, முக்கியமாக மறந்துவிட்டேன்.

ஏவாள், சலூன்கடையின் ஓவியத்திலிருந்ததை விட அழகாக இருந்தாள். ஓவியத்துக்கும் அவளுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருந்தன. குமுதத்தின் ஆறு வித்தியாசங்கள் போலவோ… தினமலர் – வாரமலரின் எட்டு வித்தியாசங்கள் போலவோ… நான் பார்த்திருந்த படங்களுக்கும், நேராக அவளைப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிந்தன. குறிப்பாக பிறப்புறுப்பை, அவள் இலை கொண்டு மறைத்திருக்கவில்லை.

என்னைப் பார்த்தவள் புன்சிரிப்புடன், “நீ கவிஞனா?” என்றாள்.

எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. அதனால், ஆமாம் என்பது போலவும்… இல்லை என்பது போலவும்… மையமாகத் தலையாட்டி வைத்தேன்.

அவள் சிரித்துக் கொண்டே “உட்கார்!” என்று, ஓர் கல்லைக் காட்டினாள். அந்தக் கல், வழக்கமாக ஆதாம் உட்காரும் இடம்போலத் தெரிந்தது. உட்காரும் இடம் தேய்ந்து போயிருந்தது. அடர்த்தியாய் தூசி படிந்திருந்தது.

அதைத் துடைத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.

என்னை அழைத்துவந்த கிழப்பெண், விடை பெற்றிருந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தபோது, பசுங்கொடி ஒன்றில் கனிந்த ஆப்பிள் பழமொன்று, ‘புசியேன்’ என்பது போலத் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் அருகிலேயே காவிநிறப் பாம்பொன்றும் நெளிந்து கொண்டிருந்தது.

என்னைப் பார்த்த அந்தப் பாம்பு, ஏவாளிடம் கிசுகிசுத்தது. “காணாமல் போய் விட்ட ஆதாமைப் போல இவன் இருக்கிறான், இல்லையா?”

ஏவாள் என்னை அப்போதுதான் கூர்ந்து பார்த்தாள். என்ன தெரிந்ததென்று தெரியவில்லை. புன்னகையுடன், “ஆமாம்!” என்றாள்.

“பிறகென்ன?… ஆப்பிளை அவனுடன் சேர்ந்துப் புசித்து, அத்தனையையும் மீறு!” வார்த்தைகளில் கிளர்ச்சி மசகு உருகி வழிந்தது.

என்றாலும், “மறுபடியுமா?” என்று கேட்டுவிட்டு, நீண்டநேரம்வரை யோசித்துக் கொண்டிருந்தாள், ஏவாள். பல்வேறு நினைவுகள் அவளை ஆட்டிப்படைத்தன. பின்பு அவள்விட்ட பெருமூச்சில், அந்தப் பகுதியிலிருந்த மரங்கள் புயலில் சிக்கிக்கொண்டவைபோல பேயாட்டம் போட்டன. அவளிடம் மறுசலனம் தோன்றியது. வெட்கமாய் தலைகுனிந்து நாணினாள். பிறப்புறுப்பை ஒரு கை கொண்டு மறைத்தவள், நின்ற இடத்திலிருந்து மறுகை நீட்டி, ஆப்பிளைப் பறித்தாள்.

அவள் கண்கள் கிறங்கத் துவங்கின. மூன்றாம்பிறை சில்க் ஸ்மிதா போல ஏகாந்தமாய் உடம்பை வளைத்து, நெளித்து என்னருகில் வந்தாள். கையிலிருந்த ஆப்பிளைக் காக்காய் கடி கடித்துவிட்டு, மீதியை என்னிடம் வெட்கத்துடன் நீட்டினாள்.

ஏவாள் கடித்த அந்தப் பழத்தை ஆசையுடன் வாங்கி, ஆவலுடன் அதை நான் கடித்த போது, என் முன்பற்கள் இரண்டும் லேசாக ஆடின. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், அதிகாலை நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் இருக்கும் பயணிகளிடம், “நாலு பழம் நூறு ரூபாய்” என்று ஏமாற்றிவிற்கும் கூடைக்காரன் பழத்தைபோலவே இருந்தது, ‘புசியேன்’ என்று பசுங்கொடியில் தொங்கிக் கொண்டிருந்த அந்தக் கனிந்த ஆப்பிள்.

நான் அதைக் கடித்துவிட்டு நிமிர்ந்தபோது, வெளிச்சம் மெல்ல மறையத்தொடங்கி, இருள் கவிய ஆரம்பித்தது.

ஸ்பீல்பெர்க் படத்தில் காட்சிகள் மாறுவதுபோல, எல்லாமே மாறத் துவங்கியது. இப்போது, பரிசுத்த நிர்வாணம் அங்கில்லை. ஏவாளின் உடம்பில் ராஜ் மஹால் பட்டுப்புடவை லேபில் கிழிக்கப்படாமல் ஏறியிருந்தது. ஏவாள், தமன்னா போல மேக் – அப்பில் அழகாகத் தெரிந்தாள். ஜோய் ஆலுக்காஸில் வாங்கிய தங்க நகைகள் பளபளத்தன. பழைய ஸ்ரீதேவிபோல வாய்க்கோணிக்கொண்டு, ஏவாள் பொன்னகைத்தாள். நகை வாங்கியபோது, அவர்கள் கொடுத்த கிப்ட் பாக்ஸ் அங்கிருந்தத் திண்டில் பிரிக்கப்படாமல் இருந்தது.

காவிநிறப் பாம்பு, தன்வாலையும் தலையையும் ஒருசேர ஆட்டி, துள்ளித்துள்ளித் குதூகலித்தது. “மானிடர்கள் பொய்யர்கள்!” என்றது, அது.

ஏவாள் எதுவும் பேசவில்லை. பாம்பின் பேச்சை ஆதரிப்பதுபோல அவள் பாவனை செய்தாள்.

எனக்குக் கோபம் வந்துவிட்டது. “இல்லை… மானிடர்கள் பொய்யர்கள் இல்லை!” என்று உரக்கக் கத்தினேன்.

என் கத்தலில், குளத்தில் இன்பமாக நீந்தி, நீராடிக் கொண்டிருந்த அழகானப் பெண்கள் கூட்டம், அவசர அவசரமாகக் கரையேறியது. “ஹேய்… மானிடன்… அவன் எனக்கு வேண்டும்… எனக்கு வேண்டும்…!” என்று ஆளாளுக்குத் துரத்தியவண்ணம், என்னை நோக்கி ஓடிவந்தார்கள். ஏவாள் என்னைப் பார்த்துச் சிரித்தாள். அவர்களிடமிருந்து தப்பிக்க, ஓட்டமாய் ஓடிய என்னை ஒருகல் தடுக்கி, கீழே விழுத்தாட்டியது. கீழே விழுந்த என்மேல் அந்தக்கூட்டம் ஆவேசமாய் பரவ…

நான் உறக்கத்திலிருந்து எழுந்து, பல் துலக்க வேப்பங்குச்சியை ஒடிக்கக் கை உயர்த்தியபோது, அதுவரை வாகாய்த் தாழ்ந்திருந்த மரம், ‘சொய்ங்’கென்று மேலே போய்விட்டது.

மூர்ச்சையாகி விழுந்துவிட்ட தங்கையை, தண்ணீர்த் தெளித்து எழுப்பிவிட்டார்கள். அவள் என்னை அசுரப் பார்வை பார்த்தாள்.

அன்று முற்பகலில், காது, மூக்கு, தொண்டை நிபுணர், என் வாயை ‘ஆ’வெனத் திறக்கச்சொல்லி, பின்பு ‘குப்’பென்று வீசிய கப்பில், முகம் சுளித்தார். “கத்துனதுல, தொண்டை சதை கொஞ்சம் அறுந்துபோயிருக்கு. பெரிய அளவுல பாதிப்பெல்லாம் இல்லை. மாத்திரைத் தின்னாலே சரியாயிரும். வாயை தெனமும் மெளத் பிரெஷ்னரால காலைலயும் சாயந்தரமும் கொப்பளிங்க. இல்லாட்டி சுடுதண்ணீல உப்புப்போட்டும் கொப்பளிக்கலாம். கண்ட கண்ட புத்தகத்தைப் படிச்சுத் தூக்கத்தைத் தொலைக்காதீங்க. இல்லாட்டி கஷ்டந்தான்!” என்றார்.

அதன் பின்பு, அடர்வனத்தைப் பற்றி, அந்தப் பேரண்ட வெளிச்சம் பற்றி, ஊர்வலம் வந்த அழகுப் பெண்கள் பற்றி, ஏவாள் கடித்துவிட்டுத் தந்த ஆப்பிளைப் பற்றி, குளத்தில் நீராடியப் பெண்களின் அழகை வர்ணித்து, பற்பல கவிதைகளை எழுதி, உள்ளூர் சிற்றிதழ் முதல் உலகச் சிற்றிதழ் வரைக்கும் அனுப்பிவைத்தும் ஒன்றுகூட பிரசுமாகவில்லை.

ஒருதடவை நேராகப் போய் பார்த்துவிட்டு வரலாமென்று, செலவுசெய்து சென்னைக்கே போனேன்.

எந்த அலுவலகத்திலும், என்னைக் கண்டுகொள்ளவேயில்லை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *