பேயைத் தூர ஓட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 1,398 
 
 

1980 ஆம் ஆண்டு.

என்னங்க காசு போனதுதான் மிச்சம் நம்ம வீட்டிலிருந்து பிசாசு இன்னும் போகவில்லை என்று கவலைப்பட்டாள் தேவகி. 

வாசுவும் கவலைப்பட்டான் ஆமாம் தேவகி, சாமியாரும் வந்து பார்த்துவிட்டு போய்விட்டார், போனவாரம் சர்ச்சில் இருந்து ஃபாதரும் வந்து பார்த்துவிட்டு போய்விட்டார் ஆளாளுக்கு மந்திரித்த கயிறைத்தான் கட்டிட்டுப் போறாங்களே தவிர யாரும் பிசாசை கட்டிப்போட்ட மாதிரி தெரியவில்லை. ராத்திரி ஆனாப்போதும் பயமாயிருக்கிறது ஏதோ ஒரு அமானுஷ்ய குரல் கேட்குறதும், யாரோ “சர்ரக்” “புர்ரக்” என்று நடமாடுறதும், கொல்லைக்கதவு  திறக்குற சத்தம் கேட்குறதும், தொடர்ந்துகொண்டுதான் இருக்கு. 

இதுக்கு என்னதாங்க வழி  பேசாமல் வீட்டை வித்துடுவோமா?.

என்ன சொல்ற தேவகி யாராவது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவாங்களா!?.

நாம பயப்படுறது பூச்சிக்கு இல்லை பிசாசுக்கு. 

அது சரி நம்ம பொண்ணு நளினி காலேஜிக்கு போயிட்டாளா?. 

போயிட்டா. 

சரி அவள் வர்றதுக்குள்ளே நான் போய் அவரை கூட்டிட்டு வாரேன் இல்லைன்னா இதையெல்லாம் பார்த்துட்டு அவள் நம்பமாட்டாள் ஏற்கனவே சாமியாரையும் ஃபாதரையும் கூட்டிட்டு வந்ததுக்கே நம்மளை திட்டினாள். 

யாரை கூட்டியாரப் போறிய?.

இங்கேயிருந்து ரெண்டு தெரு தள்ளி இருக்குதுல்ல அந்த தர்கா அங்கே ஒரு “பாய்” இருக்கிறாராம் அவர் நல்லா “பேய்” விரட்டுவாராம். 

அவரைத்தான் கூப்பிடப்போறேன். 

பேய் விரட்ட என்ன பேய்மண்ட் வாங்குவாராம்? 

ரொம்பவும் எல்லாம் இல்லையாம் ஒரு கைப்பிடி சோறு சாப்பிடுவாராம் அவ்வளவுதான் அதனால் பாய்க்கு கருவாட்டு குழம்பை ஆக்கி வை. 

தேவகி மூக்கைப் பிடித்தாள். 

நீ என்ன மூக்கைப் பிடிக்கிற, பாய் வந்து மூக்கு பிடிக்கவா சாப்பிட போறாரு ஒரு கைப்பிடிதானே சாப்பிடப் போறாரு ஆக்கி வை. நான் அவரைக் கூட்டியாறேன்.  

வாசுவோட வீட்டின் தலைவாசலில், மயில் இறகை கொத்தாக கட்டி அதை கையில் பிடித்துக்கொண்டு வந்து நின்ற பாய், மயிலிறகு கொத்தை தலைவாசல் கதவில் அடித்துக்கொண்டு தன் பிரமாண்ட உருவத்தையும் முகத்தையும் ஒரு சிலுப்பு சிலுப்பினார் “ம்ம்ம்ஹ்ஹ்ஹஊம்” என்ற சத்தத்துடன். அப்போது வீட்டின் மேலிருந்த தகரக்கூரையில் ஒன்று கொஞசமா மேலே எழுந்து திரும்ப தன் பழைய இடத்திலேயே விழுந்தது.  

ஆடிக் காத்துல அம்மியே பறக்கும் போது இந்த லேசான தகரக்கூரை பறக்காதா? என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டார் பாய். ஆனால்  

வாசு அரண்டு போனான் அவனோட பீதியடைந்த முகத்தைப் பார்த்ததும்… 

இருக்கு, உள்ளே உன்னோட கஷ்டம் இருக்கு என்றார் பாய். 

ஆமாம் பாய் உள்ளே என் மனைவி இருக்கா. 

அப்படியெல்லாம் மனைவியை சாதாரண கஷ்டம் என்று நினைக்காதே, நீ எப்போதெல்லாம் பயங்கர கஷ்டத்தை அனுபவிக்கிறாயோ, அப்பொழுது மனைவியை நினைத்துப் பார், அப்போதைக்கு நீ பட்டுக்கொண்டிருக்கும் கஷ்டம் வெறும் தூசாகத் தெரியும். 

சரி பாய் என்ற வாசு கதவைத் தட்டினான். 

கதவைத் திறந்த தேவகி, பாயை பார்த்துவிட்டு என்ன பேய் விரட்ட பூதம் கிளம்புன கதையாவுல இருக்கு? என்று நினைத்தாள். 

பாய்க்கு தரையில் பாய் விரி என்றான் வாசு. 

ஒரு ஊதுபத்தி கட்டு, கொஞ்சம் சாம்பிராணி,ஒரு பன்னீர் பாட்டில், இரண்டு சந்தனவில்லைகள் ஒரு தீப்பெட்டி, நாலு வாழைப்பழம், ஒரு தேங்காய், ஒரு பித்தளை செம்பு, ஒரு தட்டு, இரண்டு 50 ரூபாய் தாளு எல்லாம் கொண்டு வாங்க என்றார் பாய். 

என்னங்க காசு கேட்கமாட்டாருன்னு சொன்னீங்க? மொத்தமா நூறு ரூபாய் கேட்குறாரு என்று கிசுகிசுத்தாள் தேவகி. 

ஸ்சுஊ.. சும்மா இரு எதுக்காவது இருக்கும். 

எல்லாம் ரெடியானதும், செம்பில் சந்தன வில்லைகளை போட்டு பன்னீரை ஊத்திக் குழைத்தார்,தட்டில் சாம்பிராணிகளை போட்டு நெருப்பு பற்றவைத்து புகைமூட்டினார். 

தேவகியை கூப்பிட்டு மகளே இந்த தேங்காயை உடைத்து கெட்டியாக பால் எடுத்து அதில் வாழைப்பழங்களை வட்டமாக நறுக்கிப் போட்டு கொஞ்சம் சர்க்கரை கலந்து கொண்டு வா அதுவரை நான் இறைவனை வேண்டி கொண்டிருக்கிறேன் என்றார். 

அப்புறம் ஊதுபத்தியை பற்றவைத்து அதை சந்தனக் கலவையில் நட்டு வைத்து ஏதோ முணுமுணுக்க ஆரம்பித்தார். 

தேவகி வாழைப்பழம் போட்ட தேங்காய் பாலை கொண்டு வந்ததும் அதை வாங்கி வைத்துவிட்டு எழுந்தார் வீட்டில் எல்லா மூலைகளிலும் சந்தனத்தை தடவிவிட்டு, இரண்டு பேரையும் கூப்பிட்டார் ஆளுக்கு ஒரு 50 ரூபாய் தாளை கொடுத்து ரூபாய் தாளின் மூலையில் லேசாக சந்தனத்தை தடவி கொல்லைப்புறத்தில் ஒரு குழியைத் தோண்டி இந்த ரூபாய் தாள்களை உங்கள் கையால் புதைத்துவிட்டு வாருங்கள் என்று மயிலிறகால் ஆளுக்கொரு அடி அடித்தார். 

இரண்டு பேரும் அவ்வாறு செய்து விட்டு வந்தபோது அவர் எல்லா பாலையும் குடித்துவிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தார். 

முடிந்தது அந்த கெட்ட சக்தியின் அட்டூழியம் இன்றோடு முடிந்தது நான் போய் கொல்லைக்கதவில் இந்த சந்தனத்தை தடவிவிட்டு வருகிறேன் நீங்கள் சாப்பிட ரெடி பண்ணி வையுங்கள் ஒரு கைப்பிடி சாப்பிட்டுவிட்டு போகிறேன் என்று எழுந்து கொல்லைப்பக்கம் போனார். 

தேவகி சாப்பாடு வாழை இலை எல்லாம் ரெடி பண்ணி வைத்ததும் வந்து உட்கார்ந்து, ஒரு கைப்பிடி சோறு போட்டு கொஞ்சூண்டு குளம்பு ஊத்து தாயி என்றார்.  

தேவகி அவ்வாறு செய்ததும் அதை எடுத்து சாப்பிட்டவர் ஆஹா மகளின் கைப்பக்குவம் அருமை என்று இன்னொரு கைப்பிடி போடு என்றார். அப்புறம் இன்னொரு கைப்பிடி, இன்னொரு கைப்பிடி என்று மொத்தம் பத்து கைப்பிடி சாப்பிட்டார். 

அதுதானே இவரைப் பார்க்கும் போது ஒரு கைப்பிடி சாப்பிடுற ஆளு மாதிரியா இருக்கு என்று தேவகி நினைத்துக்கொண்டாள். 

அதற்கு அப்புறம் இனி நீங்கள் இரண்டு பேரும் கவலைப்படவேண்டாம் பேயை விரட்டிட்டேன் என்று “பை” சொல்லிவிட்டு பாய் அங்கிருந்து வெளியேறினார். 

வாசு மற்றும் தேவகி முகத்தில் அப்படி ஒரு திருப்தி. 

வெளியே வந்த பாய் வாசுவின் வீட்டிற்கு எதிர்த்தாப்ல இருந்த மளிகைக் கடையில் தனது பழைய பாக்கியை அடைத்துவிட்டு மேலும் தனக்கு தேவையான பீடிக்கட்டு மற்றும் புகையிலையை வாங்கிட்டு அந்த இரண்டு 50 ரூபாய் தாளையும் நீட்டினார். 

அன்று மாலை காலேஜில் நளினியைப் பார்த்த அவள் தோழி துர்கா.. 

என்னடி சோகமா இருக்கே? என்றாள். 

எங்க அம்மா, அப்பாவை பார்த்தாதான்டி பாவமா இருக்கு பேயை விரட்டுறேன்னு இன்னைக்கு ஒரு பாயை கூட்டிட்டு வந்துட்டாங்க, உங்க அண்ணனிடம் கண்டிப்பாக சொல்லிடணும் ராத்திரி இந்த மாதிரி ரகசியமா சந்திக்கிறதெல்லாம் இனி வேணாம் என்று. உங்க அண்ணன் எங்கள் வீட்டு கொல்லைப் பக்கம் வந்து தினமும் போடுகிற அந்த சத்தத்தைக் கேட்டால் எனக்கே பயமாயிருக்கு,பாவம் அவங்க பயப்பட மாட்டாங்களா? படிப்பு முடிந்ததும் எங்க காதலை கண்டிப்பாக வீட்டில் சொல்லிடுவேன். 

கொஞ்ச நாளாக எந்த தொந்தரவும் இல்லாததால் வாசுவுக்கும் தேவகிக்கும் சந்தோஷம், கண்டிப்பாக அது பாய் பேயாகத்தான் இருக்கும். அதுதான் பாய் வந்து விரட்டியதும் ஓடிப் போயிடுச்சி என்று இருவரும் பேசிக்கொண்டார்கள்.  

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *