பெயர்ப் பொருத்தம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 2,425 
 

தன்னுடைய இலட்சியத்தைப் பரப்புவதற்கென்று தானே ஒரு புதுப் பத்திரிகை வெளியிடுவதென்கிற முடிவுக்கு வந்து விட்டான் கைலாசம். என்ன பேர் வைப்பதென்பதுதான் முடிவாகவில்லை. வாசகர்களுடைய கவனத்தைக் கவர்கிற பேராக இருக்க வேண்டுமென்பது அவன் விருப்பம். ஆனால் அப்படிப்பட்ட பேர் ஒன்று கூட மீதமில்லாதபடி எல்லோரும் வைத்து முடித்திருந்தார்கள். தன்னுடைய நண்பர்கள் திருவேங்கடம், நாராயணசாமி, பராங்குசம் எல்லோரையும் சாயங்காலம் வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தான் கைலாசம். ‘திருவேங்கடம் இலக்கிய ஆர்வமுள்ளவன். நாராயணசாமி அரசியல்வாதி. பராங்குசம் சரியான அரட்டைக்கல்லி. இம்மூன்று பேரையும் கலந்து ஆலோசித்தால் இலக்கியம், அரசியல், நகைச்சுவை, மூன்று தரத்துப் பேர்களும் நிறையக் கிடைக்கும். அதில் ஏதாவது ஒன்றைப் புதுப் பத்திரிகைக்குச் சூட்டி விடலாம்’ என்பதுதான் அவன் நண்பர்களை அழைத்திருந்ததற்குக் காரணம்.

நண்பர்களுக்காகக் கொஞ்சம் டிபனும், காப்பியும் செலவாகும்! அதைப் பார்த்தால் முடியுமா? பத்திரிகைக்குப் பேர் கிடைக்க வேண்டுமே!

சரியாக நாலு மணிக்கு நண்பர்கள் வந்து விட்டார்கள். சிற்றுண்டி, காப்பி முடிந்தது. வெற்றிலை பாக்கு வேள்வியும் முடிந்தது.

“ஏண்டா கைலாசம்! ‘தாம்பூலம்’ என்றே உன் பத்திரிகைக்குப் பேர் வைத்து விடேன். மங்களகரமான பெயர், புதுமையாகவும் இருக்கும்” என்றான் அரட்டை பராங்குசம்.

“வைக்கீலாம். ஆனால் அதிலே ஒரு வம்பு இருக்கிறது. அப்பனே! ‘சர்க்குலேஷன்’ பாயிண்டிலே உதைக்கும். பத்திரிகைகளின் விற்பனை எல்லாம் பெரும்பாலும் வெற்றிலை பாக்குக் கடைகளில்தான். அங்கே போய் ஒரு வாசகன் ‘தாம்பூலம்’ கொடு என்று கேட்டால், கடைக்காரன் நிஜமாகவே தாம்பூலம் கொடுத்துவிடுவானே? நம் பத்திரிகை உருப்படாற்போல்தான்!” என்று அந்தப் பேரைக் கைலாசம் மறுத்துவிட்டான்.

நாராயணசாமி ஆரம்பித்தார் : “அரசியல் ஆவேசம்தான் இன்று பத்திரிகை விற்பனைக்கு முக்கியமான தூண்டுதல் நான் ஆவேசமும் உத்வேகமும் நிறைந்த ஒரு பேர் சொல்லுகிறேன். ‘அக்கினி’ என்று வைத்து விடு” .

“அங்ஙனம் புகலற்க! யாம் அப்பெயரை வன்மையாக மறுக்கின்றோம். ‘நெருப்பு’ என்னும் பைந்தமிழ்ச் சொல் இருக்கும் போது அதைப் புறக்கணித்துவிட்டு ‘அக்கினி’ என்று வடமொழிப் பெயரை வைப்பதாவது? அஃது அறமன்று ஒழுங்கன்று!” என்று திருவேங்கடம் தனித்தமிழ் உணர்வோடு மறுத்தான். அவன் முகம் சினத்தால், சிவந்துவிட்டது.

“நெருப்பு என்று பத்திரிகைக்குப் பேர்வைப்பதைவிடப் பத்திரிகையிலேயே அதை அள்ளி வைத்துவிடலாமே!” என்று அதைக் கிண்டல் செய்தான் பராங்குசம்.

“இந்த வம்பெல்லாம் வேண்டாம். நான் சொல்கிறபடி கேள். ‘நீட்டா’ ‘கைலாசம்’னு உன் பெயரையே பத்திரிகைக்கும் வைத்துவிடு. கச்சிதமாக இருக்கும் கைலாசம் – ஆசிரியர் ‘கைலாசம்’னு போட்டுக் கொள்ளலாம்” என்றார் நாராயணசாமி.

“ஐயய்யே, அபசகுனம் மாதிரி இருக்கிறது.கைலாசம் என்றால் சிவனின் இருப்பிடம், சிவனிடம் அழித்தல் தொழில் உண்டு. நம் கைலாசமும் இதற்கு முன் நான்கு ‘டெய்லி’யும் மூன்று ‘வீக்லியும்’, இரண்டு ‘மந்த்லி’யும் தொடங்கி அழித்திருக்கிறான். அதை நினைவுபடுத்துவதுபோல் இருக்கிறது கைலாசம் என்ற பெயர். கைலாசம் என்றாலே சம்ஹாரத் தொழில்தான் நினைவு வருகிறது. அது வேண்டாம்” என்று பராங்குசம் அதற்கு அஸ்துப் பாடினான்.

“யாம் புகல்வேம் கேண்மின் அருவிக்குத் தூய தமிழில் ‘மலைபடுகடாம்’ என்று பெயர். அருவி என்றால் எல்லோருக்கும் புரிந்துவிடும். எனவே புரியாத மாதிரியில் தமது இதழுக்கு மலைபடுகடாம் எனப் பெயர் வைத்திடுக” என்றார் திருவேங்கடனார்.

“ஐயன்மீர் நமது பத்திரிகையின் பேரைப் புகல்வோர் பல்லுடை படலாகுமோ?” ‘கலைபடுமடாம்’ என்ற பேர் வாயில் நுழையாதே?’

“பிழை பிழை மலைபடுகடாம் என்று சொல்.”

“பேரே மங்கலமாக இருக்க வேண்டும். பழைய பத்திரிகைகளைப் போல் நின்று போகாமல் இதுவாவது தீர்க்காயுசாக நடக்கும்படியான பேரைச் சொல்லுங்கள்.”

“அப்படியானால் ஆவி, உயிர்; சிரஞ்சீவி, ஆயுள்மணி என்கிற மாதிரி ஏதாவது ஒரு பெயரை வைத்துவிடு.”

“ஏய் பராங்குசம், உன்னை உதைத்து விடுவேன். உன் கிண்டல் அத்துமீறிப் போகிறது.”

“பத்திரிகைக்குத் தகுந்த பெயர் ஒன்று என் மனத்தில் இருக்கிறது. நீ கோபித்துக் கொள்ளாவிட்டால் சொல்கிறேன்” என்று பராங்குசம் ஆரம்பித்தான்.

“கோபமென்ன? கிண்டல் இல்லாமல் சொல்லு”

“அவியல் என்று வைத்துவிடு. நிம்மதியாகப் போய்விடும். உன் சகலவிதமான இலட்சியங்களுக்கும் அலட்சியங்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.”

என்ன ஆச்சரியம்! கைலாசம் உதைக்கப் போகிறான் என்று பயந்து கொண்டே இதைக் கூறிய பராங்குசத்துக்கு அவன் சபாஷ் போட்டதும் வியப்பாகிவிட்டது. “பராங்குசம்! இந்தப் பேர் ஏ ஒன்! நாளைக்கே ‘விளம்பரம்’ கொடுத்து விடுகிறேன்” என்றான் கைலாசம்.

“‘அவியல்’ என்பது நல்ல தமிழ்ச் சொல்லே! விகுதி பெற்ற தொழில் பெயராம். அதனை வைத்திடுதல் பொருத்தமே” என்றார் திருவேங்கடனார். அரசியல் நாராயணசாமிக்கு அந்தப் பெயர் விருப்பமில்லை. ஆனால் மறுத்துச் சொல்லாமல் சும்மா இருந்துவிட்டார்.

“அவியல் சிறந்த வார இதழ். ஆசிரியர் கைலாசம் – இன்றே வாங்கிப் படியுங்கள்” என்று விளம்பரம் கொடுக்கலாமா?” என்று கைலாசம் கேட்டான்.

“சே! சே! வழவழ வென்று அதிக வார்த்தைகளைப் போட்டு விளம்பரத்தைக் கவர்ச்சியற்றதாகச் செய்யாதே. விளம்பரத்திலும் ‘சஸ்பென்ஸ்’ வேண்டும். சுருக்கமாக ‘கைலாஷாவின் அவியலை நுகர்ந்து மகிழுங்கள்’ என்று விளம்பரம் கொடு. அதே வார்த்தைகளை மூவர்ணச் சுவரொட்டியாகப் பெரிய அளவில் ஏராளமாக அச்சடித்துச் சினிமாச் சுவரொட்டிபோல் மூலைக்குமுலை ஒட்டச்செய்.முதல் இதழ் பத்தாயிரம் பிரதிகள் போகவில்லையானால் என்னை ஏனென்று கேள்!” என்று கூறினான் பராங்குசம்.

முதல் இதழ் வெளிவருமுன் எல்லாத் தினசரிகளிலும், ‘கைலாஷின் அவியலை நுகர்ந்து மகிழுங்கள்’ என்று கொட்டை எழுத்துக்களில் விளம்பரம் வந்தது. சினிமாச் சுவரொட்டிகளை விடப் பெரிய மூவண்ணச் சுவரொட்டிகளில் ‘கைலாஷின் அவியலை நுகர்ந்து மகிழுங்கள்’ என்று அச்சிட்டு ஒட்டப் பெற்றது. சினிமாவில் அதே விளம்பரம் சிலைடாகக் காட்டப் பெற்றது.

புதுப் பத்திரிகை வெளிவந்தது. பராங்குசத்தின் யோசனைக்கு மேல் அதிகப்படி ஒர் ஐயாயிரம் சேர்த்து பதினையாயிரம் பிரதியாக முதல் இதழ் அச்சிட்டுவிட்டான் கைலாசம் விற்பனையாளர்களுக்குப் பிரதிகள் பறந்தன. எங்கு நோக்கினும், ‘அவியல்’ தொங்கிற்று. மக்கள் நிலையறிய மாறுவேடத்தோடு இரவில் நகர்ப்பரிசோதனைக்குப் போகிற அரசன் மாதிரிப் பத்திரிகை வெளியான அன்று கைலாசம் மாறுவேட மின்றியே பகலிலேயே தன் பத்திரிகையைப் பற்றி அறிவதற்குக் கிளம்பினான்.

பஸ் ஸ்டாண்டு அருகில் ‘அவியல்’ தொங்கின. வெற்றிலை பாக்குக் கடையின் முன்னால் இரண்டுமாணவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.“அவியல் ரொம்பப் பிரமாதம் பிரதர்!” இதைக் கேட்டதும் கைலாசத்துக்குத் தன் பிறவியே சாபல்யமடைந்துவிட்டது போலிருந்தது.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் மளிகைக்கடை வாசலில் இரண்டு கிழவர்கள், “கைலாசம் அவியல் நன்றாகப் போகிறான் அப்பா” என்று பேசிக்கொண்டிருப்பதைக் கைலாசமே கேட்டான்.

‘சே! சே! நம்மைப் பற்றி இவர்களெல்லாம் இத்தனை பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள். நாம் தரையில் நடந்து போவதாவது’ என்று ஒரு டாக்சியைக் கூப்பிட்டு ஏறிக் கொண்டான் கைலாசம். ‘அவியலின் எடிட்டர்’ என்றால் அதற்கு ஒரு ‘ரெஸ்பெக்ட் வேண்டாமா?

ஒரு ‘புக் ஷாப்பில்’ அழகிய இளநங்கை ஒருத்தி அவியலின் அட்டைப்படத்தைப் பார்த்து வியந்து நிற்பதையும் கைலாசம் டாக்ஸியில் போகும்போதே பார்த்தான் அவனுக்குப் பெருமை தாங்கவில்லை.

ஊரெங்கும் ‘கைலாஷின் அவியலைப்’ பற்றிய பேச்சு.

ஆனால் என்ன பரிதாபம்! முதல் இதழ் விற்பனைக் கணக்கு முடிந்து பதினாலாயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பது பிரதிகள் திரும்பி வந்துவிட்டன. இருபது பிரதிகள் நண்பர்களுக்குக் ‘காம்ப்ளிமெண்டரி’யாகக் கொடுத்திருந்தான் கைலாசம்.

‘என்ன அநியாயம்! ஊரெல்லாம் ‘அவியலை’ பற்றிப் பிரமாதமாகப் பேசிக் கொள்வதை என் காதாலேயே கேட்டேனே! எப்படி விற்காமல் போயிற்று?’ என்று திகைத்தான் கைலாசம். கோளாறு எங்கே என்று அவனுக்குப் புரியவில்லை. அவ்வளவும் நஷ்டம்! ‘கைலாசம்’ என்றாலே அழித்தல் தொழில்தானா? நான் தொடங்கி நின்று போன இதழ்களின் சோக வரலாற்றிலே, அவியலின் புதிய அத்தியாயமும் சேர வேண்டியதுதானா?” என்று கண்கலங்கி வருத்தத்துடன் வீற்றிருந்தான் கைலாசம்.

அப்போது பராங்குசம் வந்து சொன்னான்:”என்னை மன்னித்துவிடு, கைலாசம்! பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் ஒருத்தன் ‘ஹோட்டல் கைலாஷ்’ என்று வைத்திருக்கிறான். அவன் ஒட்டலில் அவியல் தினசரி போடுகிறான். நீ செய்த விளம்பரப் பயன் அவனுக்குப் போய்விட்டது. அவன் கடையில் கூட்டம் தாங்கவில்லை! ஊரெல்லாம் அவன் கடை அவியலைப் பற்றித்தான் பேச்சு. முடிந்தால் நீ கூடப் போய்ச் சாப்பிட்டு விட்டு வா.நான் போயிருந்தேன் மத்தியானம், அவியல் ஏ ஒன்” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்துவிட்டான் பராங்குசம், கைலாசத்திடம் அடிவாங்க அவன் தயாராயில்லை.

– கல்கி, 1964, நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *