பூம்புகார் கண்ட புகார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 27, 2023
பார்வையிட்டோர்: 4,028 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பின்னாலிருந்து ஒரு முரட்டுக்குரல் கடுமையாக உறுமுவதற்கும், திரையில் கலைஞர் கருணாநிதி காட்சி தருவதற்கும் சரியாக இருந்தது.

‘வீல்’ என்று குழந்தை அலறித்துடித்து என் மடியில் விழுந்ததற்குக் காரணமானவர் கருணாநிதியா, பின்னாலிருந்து உறுமியவரா என்பதை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை….

மாலை நேரம், கடற்கரை. எனக்கு அருகில் அமர்ந்திருந்த இருவர் திரைப்படங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். காரசாரமான விவாதம் தான்!

‘உனக்கு சினிமா எப்படிப் பார்க்கிறது என்று தெரியுமா?’ என்று அழுத்தம் திருத்தமாய்க் கேட்டார் ஒருவர்.

‘டிக்கட் வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள் சென்று நாற்காலியில் உட்கார்ந்து பார்க்கவேண்டும் சினிமாவை!’ என்று ‘கெக்கெக்கே’ பாணியில்’ பதில் கூறினார் மற்றவர்.

‘மண்ணாங்கட்டி, எல்லாருந்தான் இப்படிப் பார்க்கிறார்கள். நான் அதையா கேட்டேன்? கர்மம் கர்மம் உன்னைப் போன்றவர்கள் பெருகிவருவதால்தான் பாடாவதிப் படங்கள் இப்போது அதிகமாகி வருகின்றன!’- தலையில் அடித்துக் கொள்ளாத குறையாகச் சலிப்பைக் கொட்டினார் முன்னவர்; அவர் தலை சரியான வழுக்கை!

‘சரி உன்போன்ற மேதாவிகள் எப்படிச் சினிமாப் பார்ப்பீர்கள்? கொஞ்சம் அதைச் சொல்லேன் ஐயா…’ என்று பின்னவர் சிறிது அசந்துபோன மாதிரியும் குத்தலாகவும் வினவினார்! இவருக்கு ஆட்டுக்கடாக் கொம்புபோல அழகான மீசை!

‘சொல்றேன் கேளு……’ என்று ஆரம்பித்தது வழுக்கைத் தலை.

வேறெங்கோ பார்ப்பதுபோல் பாவனை செய்து கொண்டு நானும் ஒரு செவியை அவர்கள்பக்கம் திருப்பி னேன் சரியாகச் சொல்வதென்றால் ‘ஒட்டுக் கேட்டேன்!’

‘சினிமா எப்படிப் பார்க்க வேண்டுமென்றால், முதலில் சினிமா என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சினிமா என்பது தமிழ்ச் சொல். இதை ஆங்கிலத்தில் ‘பயாஸ்கோப்’ என்பார்கள்!’

இதைக் கேட்டு, மீசைக்காரர் கடகடவென்றுவாய் விட்டுச் சிரித்தார். ‘ஏன்’யா சிரிக்கிறாய்!’ என்று வழுக்கை கேட்டதும் ‘ஒன்றுமில்லை. மேலே சொல்லு’ என்றார் மீசை. வழுக்கை தொடர்ந்தது.

‘பயாஸ்கோப் ஆரம்பகாலத்தில் பேசவில்லை. ‘ஊமைப் படங்கள்’ என்று அப்போது கூறுவார்கள். பிறகுதான் அவை பேசத் தொடங்கின. முதன் முதல் சினிமாவில் பேசியவர் தியாகராஜபாகவதர்! அவரைப் போல் பேசுவதற்கும் பாடுவதற்கும் இப்போது ஆள் ஏது? ‘மானமெல்லாம் போன பின்னே’ என்று அவர் ‘கண்ணகி’யில் பாடினார் பார் ஒரு பாட்டு.. ம்… ஏன் கேட்கிறாய் போ!’

‘கண்ணகி படத்திலே தியாகராஜ பாகவதர் எப்போ வந்தார்?’ என்று குறுக்கிட்டார் மீசைக்காரர்.

‘எப்போது வந்தாரா? எங்கள் ஊர் படமேடையிலே ஒன்பது தடவை கண்ணகி பார்த்திருக்கிறேன். முதல் நாள் போட்ட கண்ணகியிலே பி.யு.சின்னப்பா வந்தார். எங்கள் ஊர்க்காரர்களுக்குச் சின்னப்பாவைப் பிடிக்காது. அதனாலே ‘கலாட்டா’ பண்ணினோம். உடனே ஆளை மாற்றிவிட்டார்கள். மறுநாளிலிருந்து தியாகராஜபாகவதர் வந்தார்…!’

‘நிறுத்து நிறுத்து’ என்று துள்ளினார் மீசை. தெருக்கூத்து எது சினிமா எது என்பதுகூட உனக்குத் தெரியாது போலிருக்கு…ம் உன்னைக் கேட்டேனே… எப்படிச் சினிமாப் பார்ப்பது என்று…கன்றாவிடா!’ என்று பொரிந்தார்.

‘எனக்கா சினிமாவைப் பற்றித் தெரியாது? ஓய்… என்னைப் பார்த்தா அப்படிக் கேட்கிறாய்? சினிமாவைக் கரைத்துக் குடித்தவன் நான். தெரியுமா?’ என்று ஆர்ப்பரித்தார் வழுக்கையர்.

‘ஊக்கும்! சீனியையும் மாவையும் தான் கரைத்துக் குடித்திருப்பாய்!’ என்று மீண்டும் ‘கெக்கெக்கே! முழக்கமிட்ட மீசைக்காரர் விருட்டென்று எழுந்து வந்து எனக்கு வலப்பக்கம் உட்கார்ந்து கொண்டார்.

பொங்கிவந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு நான் கடல் அலைகளை வேடிக்கை பார்த்தேன்.

‘ஒன்றுமே புரியாதவர்களெல்லாம் மேதாவிகளைப் போல் நடிக்கிறார்கள். கேட்டீர்களா அந்த ஆசாமி உளறிக் கொட்டிய சேதிகளை?’ என்று கேட்டுக் கொண்டே என்னுடன் பேச்சுக் கொடுத்தார் மீசை,

‘நீங்கள் சொல்லுங்கள், காசைக் கொடுத்துவிட்டு ஏதோ பார்த்தோம் என்று நேரம் போக்கிவிட்டு வந்தால் படம் பார்த்ததாக ஆகிவிடுமா?’ என்றவாறு வழுக்கைத்தலையர் இப்போது என் இடப்பக்கம் வந்து சேர்ந்தார்.

இந்தப் பக்கம் மீசை, அந்தப் பக்கம் வழுக்கை, நடுவில் அகப்பட்டிருந்தேன். யாருக்கு என்னவிதமாகப் பதில் சொல்வது?

உடனே ஒரு பளீர்த் திட்டம் உதித்தது என் மூளையில், ‘நீங்கள் எப்படிப் படம் பார்ப்பீர்கள்!’ என்று ஒரு கேள்வியை முதலில் வலப்புறம் வீசினேன். மீசைக்கார ஆசாமி திருதிருவென விழித்தார்!

அடுத்த அதே கேள்வியை இடப்புறம்-அதாவது வழுக்கையிடம் போட்டேன். அதுவும் தலையைத் தடவிக் கொண்டு தடுமாறியது!

நான் எதிர்பார்த்ததுதானே!

‘சரி, நான் எப்படிப் படம்பார்ப்பேன் தெரியுமா?’ என்று கடைசியில் பொதுவாகக் கேட்டதும் ‘அதைச் சொல்லுங்கள்’ என்று உடனே ‘இரு குரல் வசனம்’ ஒலித்தது.

‘பூம்புகார்’ படத்துக்குப் போயிருந்தேன். அதை எப்படிப் பார்த்தேன் என்பதைச் சொல்கிறேன், கேளுங்கள்’ என்று சொல்லத் தொடங்கினேன்.


‘குடும்பத்தோடு பார்க்க வேண்டிய அருமையான படம்’ என்று பூம்புகாரைப் பற்றிப் பத்திரிகைகள் பாராட்டியிருந்தன. ஆகவே, குடும்பத்தோடு பூம்புகார் பார்ப்பதென்று வீட்டில் ஏகமனதாகத் தீர் மானம் நிறைவேறியது.

அதேபோல் என் நண்பரின் குடும்பத்திலும் தீர்மானம் போட்டிருந்தார்கள்.

ஒரு குடும்பம் வெளியில் கிளம்புவதென்றால் எவ்வளவு முன்னேற்பாடுகள் வேண்டும் என்பது குடும்பக்காரர்களுக்குத்தான் தெரியும்!

ஆறரை மணிக்குப் படம் ஆரம்பமாகும் என்கிற உண்மையை மறைத்து, ‘ஐந்தரை மணிக்கு’ என்று நானும், நண்பரும் கூசாமல் கூட்டாகப் பொய் சொல்லிச் ‘சீக்கிரம் சீக்கிரம்’ என்று அவசரப்படுத்தியதன் விளைவாக எங்கள் குடும்பங்கள் சரியாக ஆறரை மணிக்குத் தியேட்டர் சென்று சேர்ந்தன. உண்மையைச் சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஏழரை மணிக்குத்தான் போய்ச் சேருவோம்! அதற்குள் கண்ணகிக்கும் கோவலனுக்கும் கல்யாணம் நடந்தேறியிருக்கும்!

முன் கூட்டியே திட்டமிட்டபடி நாற்காலிகளில் அமர்ந்தோம். குடும்பத் தலைவிகள் நடுவில். அவர்களையடுத்து இருபுறமும் குழந்தைகள். குழந்தைகளுக்குக் காவலர்களாக ஒரு கோடியில் நானும் மறுகோடியில் நண்பரும். எந்தக் குழந்தையும் எங்களுக்குத் தெரியாமல் வெளியேறமுடியாத ஏற்பாடுஇது.

மணியடித்தது. விளக்குகள் அணைந்தன. விளம்பர ‘சிலைடு’கள் திரையில் தோன்றின. அப்போது, என்னுடைய இரண்டாம் குழந்தை மெதுவாக என் பக்கம் வந்தது. ‘கப்’பென்று அதைப் பிடித்துக் கொண்டு, ‘என்னம்மா வேணும்?’ என்றேன்.

‘நீ இங்கே’டான் இருக்கியா அப்பா என்று பதிலுக்குக் கேட்டது குழந்தை. அதற்கு ‘த’ உச்சரிப்பு வராது!

‘ஆமா, நீ பேசாமல் உன் நாற்காலியில் போய் உட்காரம்மா. படம் வரப்போகுது’ என்றேன். ‘இருட்டாயிருக்குப்பா. விளக்கைப் போடுப்பா’ என்று குழந்தை சிணுங்கத் தொடங்கியது!

‘வெளிச்சமாயிருந்தால் படம் வராது’ம்மா’

‘ஏன் வராடு? நம்ம வீட்டிலே வருடே!’

‘நம்ம வீட்டிலே இருக்கிறது டெலிவிஷன். அது’லே வரும். இது சினிமா, இது’லே வராது……’

‘ம்……ம் இப்ப எனக்கு வெளிச்சம் வேணும்…’

‘சொன்னால் கேளம்மா…சமத்துல்ல… என்றுநான் கெஞ்சக் கெஞ்சக் குழந்தையின் பிடிவாதம் வலுத்துக்கொண்டே வந்தது.

‘யோவ், நிறுத்தய்யா பேச்சை’ என்று அப்போது பின்னாலிருந்து ஒரு முரட்டுக் குரல் கடுமையாக உறுமுவதற்கும், திரையில் கலைஞர் கருணாநிதி காட்சி தருவதற்கும் சரியாக இருந்தது’

‘வீல்’ என்று குழந்தை அலறித் துடித்து என் மடியில் விழுந்ததற்குக் காரணமானவர் கருணாநிதியா, பின்னாலிருந்து உறுமியவரா என்பதை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை.

உடனே குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியேறினேன் – வாசற்படியில் நின்ற ஊழியரிடம் ‘அவுட் பாஸ்’ வாங்கிக்கொண்டு.

எனக்கு முன்பே வந்து வெளியில் நின்று கொண்டிருந்தார் நண்பர்-அவருடைய குழந்தையுடன்!

‘கச்சான் வேணும்’னு வம்பு செய்யுதுங்க. வாங்கிக் கொடுக்கலாம்னு வந்தால்…ஒரு கச்சான் வியாபாரி யைக்கூடக் காணோம்…’ என்று பரிதாபமாகக் கூறினார்.

அங்கே கச்சான். இங்கே வேளிச்சம்! விவகாரம் வெவ்வேறாயிருந்தாலும் விளைவு ஒன்றேதான். அதாவது வெளியில் நிற்க நேர்ந்த விளைவு!

‘கருணாநிதி பேசுவதைக் கேட்க முடியாமல் போச்சே…’ என்று அவர் அழாத குறையாகச்சொன்ன போது நான் அழுதேவிட்டேன்.

குழந்தைகளைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். பேச்சு வார்த்தை நடைபெற்றது. கச்சான், வெளிச்சம் கோரிக்கைகளைக் கைவிடுவதற்குக் குழந்தைகள் ஒரு வழியாக ஒப்புக்கொண்டன. ஆனால், அதற்கு மாற்று வழியாக, ஆளுக்கொரு ஆரஞ்சுச் சுவை நீர்ப்போத்தல் வாங்கித்தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தன. உடனே சம்மதித்தோம். அத்துடன் உறிஞ்சு குழாயும் (பைப்) சேர்த்து வாங்கிக் கொடுத்துப் பருக வைத்தோம்.

சுமார் முக்கால்மணி நேரத்துக்குப் பிறகு தியேட்டருக்குள் நாங்கள் சென்றபோது, ‘தமிழ் எங்கள் உயிரானது’ என்று மாதவி பாடி ஆடிய ஆட்டத்தில் எல்லாரும் சொக்கிப் போயிருந்தார்கள்.

உட்கார்ந்து சில நிமிடங்களே ஆயின. எங்கள் குழந்தைகள் மத்தியில் ஏதோ சலசலப்பு எழுவதை உணர்ந்தேன். என்ன சலசலப்பு என்று நான் ஆராய முற்பட்டபோது, என் மூத்த குழந்தை முன்னே வந்து நின்றது. மற்ற குழந்தைகளின் சார்பில் பிரதிநிதியாக வந்திருக்கிறது என்று பார்த்தவுடனே புரிந்து கொண்டேன்.

‘அதுக்கு மட்டும் ஓரஞ்சு வாங்கிக்குடுத்தியாமே… எங்களுக்கெல்லாம் இல்லியா?’ என்று அது வினவிய விதம் அடுத்து நிகழப்போகும் பூகம்பத்துக்கு முன்னறிவிப்பு நோட்டீஸ் போலிருந்தது!

வருமுன் தடுப்பதே புத்திசாலித்தனமல்லவா! உடனே அதை வெளியில் கூட்டிச்சென்று ஒரு போத்தல் ஆரஞ்சு வாங்கிக்கொடுத்த அதே சமயம் என் நண்பரும் அங்கு அதே காரியத்தைச் செய்து கொண்டிருந்தார்!

தொடர்ந்து ஒவ்வொரு குழந்தையாக வெளியில் கூட்டி வந்து ஆரஞ்சு வாங்கிக்கொடுத்தோம். கடைசிக் குழந்தை ஆரஞ்சு குடிக்கும்போது கிட்டத்தட்ட பாதிப்படம் முடிந்துவிட்டது.

‘அப்பாடா, இனிமேல் தொல்லை ஏதும் இராது’ என்று சொல்லிக்கொண்டே நானும் நண்பரும் தியேட்டருக்குத் திரும்புவதற்கும், எங்கள் வீட்டரசிகள் கைக்குழந்தைகளுடன் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

‘காற்றோட்டம் போதாத காரணமோ, பசி தாங்காமலோ, தூக்கம் வந்ததாலோ வேறு எதனாலோ குழந்தைகள் ‘வீல் வீல்’ என்று சத்தம் போட்டு அழுதனவாம். அமைதிப்படுத்த முயன்று முடியாமல் போகவே வெளியில் வந்துவிட்டார்கள்!

‘குழந்தைகளை எங்களிடம் தந்துவிட்டு நீங்கள் உள்ளே போய்ப் படத்தைப் பாருங்கள். இதுகளை அழாமல் வேடிக்கை விளையாட்டுக் காட்டி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று கூறிக் குழந்தைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பி வைத்தோம்.

அவர்களாவது படம் முழுவதையும் ஒழுங்காய்ப் பார்க்கட்டுமே!

எங்கள் கைகளில் குழந்தைகளும் அழாமல் பராக்குப் பார்த்தவாறு இருந்தன!

‘நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது’ என்று சுந்தராம்பாள் கணீரென்று பாடுவது எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது!

படம் முடியும்வரை குழந்தைகளுடன் நாங்கள் வெளியிலேயே ‘நிம்மதியாக’ நின்றிருந்தாலும் வசனம், பாட்டு, பின்னணி எல்லாம் எங்களுக்குத் தெளிவாய்க் கேட்டன!

விஜயகுமாரி எவ்வளவு ஆவேசமாக வசனம் பேசினார். நாகேஷ் எப்படியெல்லாம் ரகளை பண்ணினார்! இன்னும்…

என்னைப்போன்ற ‘மக்களைப்பெற்ற மகராசர்கள்’ படம் பார்ப்பது கிட்டத்தட்ட இப்படித்தானிருக்கும்! ‘நீங்கள் இங்குக் குடும்பக்காரர்களா அல்லது…’ என்று கேட்டுக்கொண்டே நான் திரும்பிப் பார்த்த போது, எனக்கு இருபுறத்திலும் உட்கார்ந்திருந்த மீசைக்காரரும் வழுக்கைத் தலையரும் எழுந்து திரும்பிக்கூடப் பார்க்காமல் வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்கள்!

படம் எப்படிப் பார்ப்பது என்பதைப் புரிந்து கொண்டுதான் கிளம்பி விட்டார்களோ?

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

சிங்கை பெர்னாட்ஷா சே.வெ.சண்முகம் சே.வெ.சண்முகம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெய்வாசலில் 1933ல் பிறந்தார். 1951ல் சிங்கப்பூருக்கு வந்த இவர், துறைமுகத்தில் பணியாற்றினார். 1961ல் கிடங்குப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்று 1991ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1949ல் எழுதத் தொடங்கிய இவரது முதல் சிறுகதை “வேறு வழியில்லையா?” மதுரையிலிருந்து வெளியாகும் “நேதாஜி” இதழில் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இவர், சிறுகதைகள், தொடர்கதைகள், குட்டிக்கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், மேடை நாடகங்கள், வானொலி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *