பிருந்தாவனமும் நந்தகுமாரனும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 4,710 
 
 

இப்போது நீங்கள் பூவுலகின் சொர்க்கமென்று கருதப்படும் பிருந்தாவன் கார்டன்ஸில் இருக்கிறீர்கள். சற்று நேரத்துக்கெல்லாம் ஒளி வெள்ளத்தில் இந்த இடம் இருப்பதைக் காணும்போது சொர்க்கம்தானோ என்ற மயக்கமே உண்டாகும். ஆனாலும் நண்பர்களே! ஒன்று சொல்கிறேன். இதிலேயே லயித்துப் போய் உங்களை மறந்துவிடாதீர்கள். எங்கள் ‘பந்த் டிராவல் சர்வீஸை’த் தவறவிட்டால் பெங்களூருக்கு வேறு பஸ் கிடையாது! தவற விட்டால், இந்த இடம் நரகமாகிவிடும்!

’நந்தகுமார் இன்னொரு தரம் எழுதியதைப் படித்துப் பார்த்தான். பரவாயில்லை என்று தோன்றிற்று. பலர் முன்னிலையில் – பல்வேறு மொழிகள் பேசும் மனிதர்கள் முன்பு தான் பேசுவது போல் கற்பனை செய்து பார்க்கும்போதே, வாய் குழறுகிற மாதிரி பிரமை உண்டாயிற்று.

‘கைடாம்! ரூரிஸ்ட் இம்ப்ரூவ்மெண்ட் சர்வீஸாம். மண்ணாங்கட்டி!’ என்று அலுத்துக் கொண்டான். இந்தத் தொந்தரவுகளையெல்லாம் விட்டு விலகி, நிம்மதியாகத் திருச்சியில் சுகமாக இருக்கலாமே!’ என்ற எண்ணம் எழுந்தது.

‘என்ன நந்து! எப்படி இருக்கிறது ப்ரபரேஷன்?’ என்று கேட்டபடி உள்ளே நுழைந்தார் மார்க்கபந்து.

‘முதலில் எப்படி ஆரம்பித்திருக்கிறாய்?’

‘நான் ரிவெர்ஸ் ஆர்டரில் வருகிறேன் சார்!’ முதலில் பிருந்தாவன் கார்டன்ஸ், ஆர்ட் காலரி, திப்பு சுல்தான் பாலஸ் –

‘கடைசியில் பெங்களூர் ராஜாஜி நகர் பந்த் டிராவல் சர்வீஸாக்கும்!’ என்று புன்னகை செய்தார் மார்க்கபந்து.

‘எங்கே நீ எழுதி வைத்திருந்ததைக் காட்டு பார்ப்போம்!’

தன் குறிப்புக்களை எடுத்துக் காட்டினான் நந்தகுமார். வெளியே கலகல்வென்ற சிரிப்பொலியுடன் சென்று கொண்டிருந்த பெண்களை கவனித்த வண்ணமிருந்தான். அவர்களில் ராதாவும் ஒருத்தி.

’நீ முன்னே பின்னே கைடைப் பார்த்ததில்லையா?’ என்று கேட்டார் மார்க்கபந்து.

‘என்னது?’

‘கைட் பார்த்ததில்லையா?’

‘இரண்டு தரம் பார்த்திருக்கிறேன் சார்! பிரம்மாண்டமான படம்! தேவ் ஆனந்த், வஹிதா ரஹ்மான் நடித்தது! ஆர்.கே.நாராயண் எழுதிய கதை….’ என்று உற்சாகமாய் அடுக்கிக் கொண்டு போனான் நந்தகுமார்.

‘முட்டாள்!’ என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை மார்க்கபந்து. ஆனால் அந்த மாதிரி ஒரு பார்வை பார்த்தார். ‘சினிமா கைடைக் கேட்கவில்லை அப்பனே! நிஜ கைடைக் கேட்டேன். பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். ‘இன்பர்மேஷன்’ நிறைய கொடுக்கணும். ‘இந்த இடத்தில்தான் திப்பு சுல்தான் பாதுஷா சாப்பிட்டார். இந்த நந்தி இப்போது வளர்ந்து வருகிறது; இது ஓர் அதிசயம்! இப்படி….! சும்மா விஷயமே இல்லாது பேசினால் பிரயோசனமில்லை!’ என்று மார்க்கபந்து சற்று நிறுத்தினார். ‘அப்புறம் அந்த ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ன ஆயிற்று?’

‘அது…அது…வந்து….’ என்று இழுத்தான் நந்தகுமார்.

‘நோ! நோ!’ என்று கண்டித்தார் அவர். ‘மந்தமாய் உட்கார்ந்திருக்கக் கூடாது இந்த ஆபிசில். சுறுசுறுப்பாய் இருக்கணும். புரிந்ததா, நந்து?’

அவன் அவசர அவசரமாகத் தலை ஆட்டினான். எப்ப்டியாவது அவர் தன்னை விட்டால் போதுமென்றிருந்தது.

திருச்சியில் தென்னூருக்குப் பக்கத்தில் பெரிய வீடு. பட்டப்படிப்பு முடிந்து, பிசினஸ் மேனேஜ்மெண்ட் கோர்ஸையும் முடித்து விட்டு வீட்டோடு இருந்தான் நந்தகுமார். ஓரோர் சமயம் அப்பாவின் வேலைக்கும் துணையாக இருந்தான்.

‘நம்ம நந்த குமாருக்கு ஆனியிலேயே கல்யாணத்தை முடித்து விடலாமே, அந்த நடேசனுடைய பெண் பிருந்தா –’ என்று ஆரம்பித்தாள் அவன் தாயார்.நந்தகுமார் ஆவலுடனும் ஆசையுடனும் அப்பா என்ன பதில் சொல்லப் போகிறாரென்று காத்திருந்தான்.

‘கல்யாணத்துக்கு என்ன அவசரம் இப்போ?’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அவர். முதலிலே ஒரு பொறுப்பு வர வேண்டாமோ?’

‘ஏன்? பொறூப்பு இல்லாமல் என்னவாம்?’ என்று பிள்ளைக்கு பரிந்து பேசினாள் தாயார்க்காரி.

‘ஆமாம்பா, தினமும் நான் கம்பெனிக்குப் போகிறேனே!’

‘போய்க் கிழித்தாய்!’ என்று சீறினார் அப்பா.

‘யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்று உனக்குத் தெரியவில்லை. நேற்றைக்கு யாரோ ஒரு ஆளிடம் நீ சரியாக விசாரிக்கவில்லையாம்! அவர் வேறு இடத்துக்குப் போய் விட்டார்!’

திடீரென்று ஏதோ நினைவுக்கு வதவாரகக் கையைச் சொடுக்கினார் அவர். ‘மறந்தே போனேன்! மார்க்கம் லெட்டர் போட்டிருந்தானே! ‘இன் பிள்ளையைக் கோர்ஸ் முடிந்தவுடன் அனுப்பு’ என்று! அவன் ஒரு ட்ராவல் சர்வீஸ் நடத்துகிறான். படித்த ஆள் அவனுக்குத் தேவையாம்! அந்த மாதிரி புதுக் கம்பெனியில் நீ இருந்தால் உனக்கு அனுபவம் இருக்கும். உபயோகமாகவும் இருக்கும். நான் இன்றே எழுதுகிறேன்!

’நந்தகுமார் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தான். ‘எதற்காகப்பா? நான் இங்கேயே –

‘நோ, நோ! அதுதான் உனக்கு நல்லது. பெங்களூரில் தான் கொஞ்ச நாள் இருந்துவிட்டு வாயேன்!’

கொஞ்சம் தெம்பு வந்தது நந்தகுமாருக்கு. ஏதாவது பட்டிக்காடான நகரைச் சொல்லி விடுவாரோ என்று நினைத்தவனுக்கு இது ஆறுதலாக இருந்தது.

நந்தகுமார் பிரமாதமாக மனத்துள் கற்பனை செய்து வைத்திருந்தான். மொசெய்க் தளமும், அற்புதமான வேலைப்படுகளும் கொண்டு இடம் பெரிதாக இருக்கும் என்று எண்ணியிருந்தவனுக்கு ராஜாஜி நகரில் ஒரு மூலையில் காட்சியளித்த இடத்தைக் கண்டதும் ஏமாற்றமே உண்டாயிற்று. ‘பந்த் ட்ராவல் சர்வீஸ்’ என்ற பெயர்ப் பலகையைக் கண்டு கொள்ளவே அவனுக்குச் சில நிமிடங்கல் பிடித்தன.

தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். ஒரு வயதான மனிதர் நிமிர்ந்து பார்த்தார்.

‘யார் வேணும்?’

‘நான் திருச்சியிலிருந்து வந்திருக்கிறேன்!’ என்று அவன் தொடங்கியதுமே அவருக்குப் புரிந்துவிட்டது.

‘அட அட! அப்பாசாமி பிள்ளையா? நீ வந்து செகண்ட் ஸன் இல்லை? மூத்தவன் ஸி.எல்.ஆர்.ஐ.யில் இருக்கிறான். புத்திசாலிப் பையன் அவன்!’

‘நான் அத்தனை புத்திசாலி இல்லை! இருந்தால் இங்கு வருவேனா என்ன?’ என்று எண்ணிக்கொண்டான் நந்தகுமார்.

மார்க்கபந்து உள்ளே திரும்பி, ‘ராதா! வா இங்கே!’ என்றார்.ஓர் அப்சரஸ் அன்ன நடை நடந்து வந்து, ‘என்னப்பா?’ என்று இனிமையான குரலில் மிழற்றியபோது நந்தகுமார் இந்த உலகத்திலேயே இல்லை.

அவன் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

‘பையன் யார் தெரியுமோ?’ அப்பாசாமி பிள்ளையாண்டான்! அதுதான் நான் அடிக்கடி சொல்வேனே, தென்னூர் அப்பாசாமி –

‘நந்தகுமாருக்கு எரிச்சலாயிருந்தது. என்ன அப்பாசாமி பிள்லையாட்டன் வேண்டிக் கிடக்கிறது! என் பேர் நந்தகுமார்!’ என்று சொல்லிக் கைகளை குவித்தான்.

‘இவள் என் பெண் ராதா! ஏதோ சாதாரணமாய் நினைத்து விடாதே! பி.ஏ.முதல் கிளாஸில் பாஸ் பண்ணி இருக்கிறாள்!’

நந்தகுமார் ஓரக் கண்ணாலும் அரைக் கண்ணாலும் ராதாவை விழுங்கிக் கொண்டிருந்தான். சற்று நீள வாட்டசாட்டமான முகம். ஆனால் விழிகளில் பிறரை எளிதில் மயக்கும் கவர்ச்சி குடி கொண்டிருந்தது. படித்துப் பட்டம் பெற்ற மிடுக்கு அவள் தோற்றத்திலிருந்தாலும், அதே சமயம் அடக்கமும் இனிய பண்பும் அவளிடம் இருப்பதை உணர்ந்தான்.

‘நந்தகுமார் நீதான் இனிமேல் எல்லாம்! அக்கவுண்ட்ஸ் சம்பந்தமான வேலை. பிசினஸ் பிடிப்பது, அப்புறம் கரஸ்பாண்டன்ஸ் –’ என்ற மார்க்கபந்து, சட்டென்று ஞாபகம் வந்தவராக, ‘உனக்கு என்னென்ன பாஷைகள் தெரியும்?’ என்று கேட்டார்.

‘தமிழும் இங்கலீஷும்தான்!’

மார்க்கபந்து உதட்டைப் பிதுக்கினார். ‘நிறைய ‘லாங்வேஜ்’ தெரிந்து வைத்துக் கொள்ளணும். அப்பா!…முதல்லே கன்னடம் கட்டாயம் தெரியணும்! ராதா சொல்லித் தருவாள்! அவள் இங்கு வேலை பார்த்தவர்களிடம் கற்றுக் கொண்டிருக்கிறாள்!’

’ஆனால் என்னிடமிருந்து அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டதுதான் அதிகம்!’ என்று சொல்லிவிட்டுக் கணீரென்று சிரித்தாள் ராதா.

‘இன்று ஓய்வு எடுத்துக்கொள். நாளையிலிருந்து ‘ருடீன்’ ஆரம்பிக்கலாம்!’ என்று எழுந்து கொண்டார் மார்க்கபந்து.

‘பந்த் டிராவல் சர்வீஸில் (பி.டி.எஸ்) முக்கிய உதவியாளனாகச் சேர்ந்தான். மார்க்கபந்து அவனுக்குச் சில விசித்திரமான வேலைகள் எல்லாம் கொடுத்திருந்தார். காலையில், நகரின் கேந்திரமான இடங்களைச் சுற்றிப் பார்ப்பது; ரெயில்வே ஸ்டேஷனுக்குச் செல்வது; புதிதாக பெங்களூர் வருகிறவர்களைக் (குறைந்த பட்சம் அது போன்று தோற்றமளிப்பர்களை!) கண்டு ‘மைசூர், பிருந்தாவன் கார்டன்ஸ் பார்க்க வேண்டாமா! எங்கள் பந்த் டிராவல் சர்வீஸில் செல்லுங்கள்!’ என்று சொல்லி வலியக் கூட்டி வரவேண்டும். தானாகப் பத்து பேர் டிராவல் சர்வீஸுக்கு வந்தால், நந்தகுமார் ஓர் ஆசாமியைக் கொண்டு வரவேண்டும் என்பது மார்க்க பந்துவின் ஏற்பாடு!

காலையில் இது போன்று என்றால், பிற்பகலிலும் சாயந்திரத்திலும் ‘அக்கவுண்ட்ஸ்’ சம்பந்தமான தொந்தரவுகள், டிக்கெட் விற்பனை, பெட்ரோல் செலவு, டிரைவருக்குத் தரவேண்டிய பேட்டா – இத்யாதி இத்யாதி.

நந்தகுமாருக்குப் பல நேரங்களில் வேலை அலுத்துப் போனது மட்டுமல்ல, எரிச்சலும் ஊட்டியது. பேசாமல் திருச்சிக்குப் போய்விடலாம் என்று கூட நினைத்தான். ஆனால் ராதா!… அவள் கடைக்கண் பார்வை! அவளிடமிருந்து கன்னடம் மட்டுமா கற்றுக் கொள்ள முடிந்தது!…

அவளிடம் ஒரு நாள் சொன்னான் நந்தகுமார் : ‘என்னை உன்னிடம் கன்னடம் கற்றுக் கொள் என்றார் உன் அப்பா. அதில் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறேன்!’

‘எதை?’ என்று ராதா விழிகளை உயர்த்தினாள்.

‘நோடு’ என்பதைத்தான். வந்ததிலிருந்து உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்றான்.

ராதா புன்னகை செய்தாள். ‘நீங்கள் மட்டும்தானாக்கும்!’ என்றாள்

‘எப்படியாவது அப்பாவை இம்ப்ரெஸ் செய்து விடுங்கள். முக்கியமாக அவருக்கு வெளி நாட்டுக்காரர்கள் என்றால் ஒரே மோகம் அவர்கள் சிலர் இந்த டிராவல் சர்வீஸைப் புகழும்படி செய்துவிட்டீர்களோ –’ ராதா கண்ணைச் சுழற்றினாள். ‘அப்புறம் நான் உங்களுக்குத்தான்’ என்று சொல்லாமல் சொல்லியது அவள் பார்வை.

‘என்னவோ போ! எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்து பிருந்தாவன் கார்டன்ஸைப் பார்க்க அனுப்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் இன்னும் பார்க்கவில்லலி!’ என்றான் நந்தகுமார்.

அன்று மார்க்க பந்துவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ‘நந்தகுமார் நாம் எல்லோரும் இன்று ‘டூர்’ போகப் போகிறோம். ஆர்ட் காலரி, பிருந்தாவன், ஊம்! கிளம்பு’ என்று அவனைத் துரிதப்படுத்தினார்.

நந்தகுமார் குதூகலத்துடன் புறப்பட்டான். ராதாவும் கூட் அவருவாள் என அறிந்து அவன் மனம் துள்ளியது.

சுகமான கார்ப் பயணம்; வழி நெடுகிலும் கண்ணுக்கு இனியகாட்சிகள். அண்மையில் ராதா…

வேறென்ன வேண்டும் நந்தகுமாருக்கு? ஆனால் மார்க்க பந்துவின் அரிப்பைத் தான் அவனால் தாங்க முடியவில்லை. ‘அதைப் பார்த்தாயா, இதை கவனித்தாயா?’ என்று ஓயாது கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கான காரணம் அப்புறம் தான் தெரிந்தது.

மிருகக் காட்சிச் சாலையை அடைந்த போது, ‘இந்தியாவிலேயே இது தான் தேர்ட் ப்ளேஸ், முதலிரண்டு எங்கு இருக்கிறது, சொல் பார்ப்போம்’ என்று கேட்டார் மார்க்கபந்து. வினாடி வினா நடத்துபவர்போல !

‘எனக்குத் தெரியாது!’ என்று ஒப்புக் கொண்டான் நந்தகுமார்.

‘ஜெனரல் நாலெட்ஜ் ரொம்பக் குறைவு அப்பா உனக்கு!’ என்றார் அவர். ‘முதலில் திருவனந்தபுரம். அப்புறம் கல்கத்தா….ம்…அப்புறம் அந்த ஹிப்போபோடாமஸ் பார்த்திருக்கியா?’

நந்தகுமார் பதில் சொல்லவில்லை. என்ன இது! ஏன் மனுஷர் இப்படி கேட்கிறார்’ என்பதைப் போல ராதாவைப் பார்த்தான்.

‘என்ன யோசிக்கிறாய்? விஷயம் இருக்கிறது. சொல்கிறேன்!’

‘பிருந்தாவன் தோட்டம் ஒளியில் திளைத்துக் கொண்டிருந்தது. அவர் வரும் போது பிரத்யேகமாகக் கொண்டு வந்திருந்த உணவை ராதா இருவருக்கும் பரிமாறினாள்.

மார்க்கபந்து நந்தகுமாரை நோக்கி பெரிதாக புன்னகை செய்தார்.

‘நன்றாகப் பார்த்துக் கொள் எல்லாவற்றையும்! நீதான் அடுத்த வாரத்திலிருந்து நம் சரிவீசுக்கு கைட்!’

நந்தகுமார் ஒரு துள்ளு துள்ளினான். ‘ஆ! என்னது, என்னது!’

‘என்ன ராதா! சாப்பாட்டில் காரம் அதிகமா? நந்து துள்ளறானே!’ என்று கேட்டார் மார்க்கபந்து. பிறகு சாவதானமாக, கைட் என்றால் வழிகாட்டி என்று அர்த்தம். உன்னைப் போல் படித்த அளைப் போட்டால் பலரையும் கவரலாமே!’ என்றார்.

‘எனக்குப் பேசவே வராதே!’ ஆளைப் பார்த்தாலே வாய் குழறுமே!’

‘கண்ணை மூடிக்கொண்டு பேசு!’ என்றார் மார்க்கபந்து. ‘அடுத்த வாரம் ஃபாரினர்ஸ் எல்லாம் வருவார்கள் போலிருக்கிறது. ஸ்டூடண்ட்ஸ் செமினார் ஒன்று மதராசிலிருந்து வருகிறது.’

‘சார், ப்ளீஸ்! இது வேண்டாம் சார். எனக்குப் பயமாய்…’

‘பயமாய் இருக்கிறதென்றால் வேப்பிலைக் கொழுந்தை வைத்துக் கொள்ளேன்?’ என்று பெரிய நகைச்சுவையை உதிர்த்து விட்டது போல் அவர் சிரித்தார்.

நந்தகுமார் ஒரு ‘கைடு’க்கு வேண்டிய பாடங்களைக் குறித்துக் கொண்ட விதத்தையும், மார்க்க பந்து விமரிசனம் செய்ததையும் தான் ஆரம்பத்தில் பார்த்தோமே! வியாழக்கிழமை, ‘பந்த் டிராவல் சர்வீஸ்’ அமர்க்களப்பட்டது. அன்று தான் சென்னையிலிருந்து ஸ்டுடண்ட்ஸ் செமினார் வந்திருந்தது. கூட வெளிநாட்டுக்காரர்களும் இருந்தார்கள். மார்க்கபந்துவுக்குத் தலைகால் புரியவில்லை. ‘திஸ் இஸ் அவர் ‘கைட்’ மிஸ்டர் நந்தகுமார்!’ என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

நந்தகுமார் தவித்தான். அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளவே சிரமப்பட்டான். எதற்கெடுத்தாலும் ஒரு சைகை அல்லது ஒரு ‘யா’ – அழகாக ‘யெஸ்’ என்று சொல்வதை விட்டு விட்டு! இவர்களிடம் எப்படி எந்த மாதிரி சமாளிக்கப்போகிறோம்! இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எப்படிப் பதில் சொல்லமுடியும்? ஏதாவது அபத்தமாக உளறி அவமானப்பட்டால்?

மெள்ள மெள்ள நந்தகுமார் கிளம்பும் சமயமும் நெருங்கியது. புக்ககம் செல்ல இருக்கும் பெண்ணுக்குப் புத்திமதி கூறுவது மாதிரி மார்க்கபந்து நந்தகுமாருக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

‘ஆல் தி பெஸ்ட்’ என்று கை குலுக்கினார் மார்க்கபந்து. பஸ் புறப்படுகையில்.

நந்தகுமார் ராதாவையே நோக்கிக் கொண்டிருந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து –

‘இதைப் பார்த்தீர்களா, சார்?’ என்று இரண்டு கன்னட தினசரிகளை மார்க்கபந்துவிடம் பணிவோடு நீட்டினான் நந்தகுமார்.

மார்க்கபந்து பிரித்துப் பார்த்தார். பிருந்தாவன் கார்டன்ஸ் அயல் நாட்டினர் நிற்கிறார்கள். பக்கத்தில் ‘பந்த் டிராவல் சர்வீ’சுக்குச் சொந்தமான பஸ்…

‘பேஷ், பேஷ்! நல்ல பள்ளிசிடி!’ என்றார் அவர்.

‘இதைப் பாருங்கள் சார்!’ என்று தோல்பையிலிருந்து சில புகைப்படங்களை எடுத்துக் காட்டினான் நந்தகுமார். வெளிநாட்டுக்காரர்களிடம் நந்தகுமார் சிரித்து உரையாடிக் கொண்டிருக்கும் தோற்றங்கள் கொண்ட புகைப்படங்கள் அவை.

‘பலே, பலே! என்லார்ஜ் பண்ணி ஹாலில் மாட்டினால் அபாரமாயிருக்குமே!’ என்றார் மார்க்கபந்து.

‘இந்தப் போட்டோ சாமுண்டேஸ்வரி கோயிலுக்குப் போகும்போது எடுத்தது சார்! அந்தச் சமயம் ஒருத்தர் தாகமாயிருக்கிறதென்றார். நான் இளநீர் வாங்கிக் கொடுத்து, அப்படியே கோயிலைப் பற்றி எக்ஸ்ப்ளெயின் பண்ணினேன். என்ன உற்சாகம் என்கிறீர்கள் அவர்களுக்கு!’

‘குட்….’ மார்க்கபந்து நந்தகுமாரையே உற்றுப் பார்த்தார், ‘நீ ஒரு காரியம் செய்யணுமே!’

‘என்ன?’

‘உன் தகப்பனாருக்கு எழுதி உன் ஜாதகத்தை ஒரு பிரதி வரவழைக்கணுமே!’

‘என்னிடம் இருக்கிறதோ என்று பார்க்கிறேன்!’

அடுத்த மாதத்தில் பெங்களூர் ராஜாஜி நகரே அதிசயிக்கும்படி ராதாவுக்கும் நந்தகுமாருக்கும் திருமணம் நடந்தது.

கல்யாணமான மறு வாரம் பிருந்தாவன் கார்டன்ஸில் ராதாவும் நந்தகுமாரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ராதாவின் கையில் டிரான்சிஸ்டர்; நந்தகுமார் தோளில் காமிரா.

‘ஒன்று தெரியுமா உங்களுக்கு?’ என்று கேட்கிறாள் ராதா.

நந்தகுமார் ‘கிளிக்’க்டுவதைச் சற்று நிறுத்தித் திரும்பிப் பார்க்கிறான்.

‘அப்பா கம்பெனி பெயரை மாற்றப் போகிறாராம்! ‘நந்த்’ டிராவல் சர்வீஸ்’ என்று மாற்றி விடப் போகிறாராம்! அந்தப் ஃபாரீனர்களை இம்ப்ரெஸ் செய்ததற்கு உங்களைப் பாராட்டும் அடையாளமாக!’

நந்தகுமார் கலீரென்று சிரிக்கிறான். ‘எல்லாம் இது செய்த ‘டிரிக்’! என்று காமிராவைக் காட்டுகிறான். ‘அவர்கள் தான் ஸ்ரீரங்கப்படத்திலேயே ஏதோ நினைத்துக் கொண்டு இறங்கி விட்டார்களே! அப்புறம் பஸ்ஸில் வரவேயில்லை! நல்ல காலம்; முன்னதாகவே அவர்களை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தேனோ, ஐடியாவும் தோன்றியதோ! நான் அவர்களுடன் பேசுவது போல், பிருந்தாவனில் நிற்பது போல் – எல்லாம் போட்டோவின் மாயம் ராதா!’

ஏதோ சொல்ல வாயெடுக்கிறாள் ராதா. அதற்குள் டிரான்சிஸ்டரிலிருந்து –

‘ஏனோ ராத இந்தப் பொறாமை! யாவருக்கும் பொதுச் செல்வமன்றோ’ என்ற பாட்டு ஒலிக்கிறது.

‘இந்தப் பிருந்தாவனம் வேண்டுமானால் பொதுச் செல்வமாயிருக்கலாம்! ஆனால் நீங்கள் – ‘ என்கிறாள் ராதா.

நந்தகுமார் கலீரென்று சிரிக்கிறான்.

(தினமணி கதிர் 17.4.1970)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *