பிசாசுகளைப் பிடிக்கலாம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 27, 2023
பார்வையிட்டோர்: 7,368 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதைகளிலும் சினிமா படங்களிலும் வருகிற கற்பனைப் பிசாசுகளைப் போன்ற தோற்றமும் உருவமும் கொண்ட அசல் பிசாசுகளிடம் எக்கச்சக்கமாக அகப் பட்டுக்கொண்டு அவதிப்பட்டேன்…

பேய் பிசாசுகள் என்பவை எப்படியிருக்கும்?

அவற்றை யாராகிலும் நேருக்குநேர் பார்த்திருக்கிறார்களா?

பார்த்ததாகப் பலபேர் கதை பேசுவார்கள். அந்தக் கதைகளை நான் நம்புவதேயில்லை! ‘பேயாவது பிசாசாவது’ என்று அலட்சியமாகக் கூறிவிடுவேன் முன்பெல்லாம்!

‘நாம்தான் பேய் பிசாசுகள். பணப் பேயாகிப் பறக்கிறோம். ஆசைப் பேயாகி அலைகிறோம். காமப் பிசாசாகிக் கலங்குகிறோம். சந்தேகப் பிசாசுகளாகித் தவிக்கிறோம்!’ என்று விளாசித் தள்ளுவேன்.

ஆனால், அப்படி விலாசியது தப்பு என்று நான் ஒரு சமயம் உணர நேர்ந்தது; சமீபத்தில் சில பிசாசுகள் என்னைச் சூழ்ந்துகொண்டு திக்கு முக்காடித் திணரடித்தன!

கதைகளிலும் சினிமாப் படங்களிலும் வருகிற கற்பனைப் பிசாசுகளைப் போன்ற தோற்றமும் உருவமும் கொண்ட ‘அசல் பிசாசுகளிடம்’ எக்கச்சக்கமாக அகப் பட்டுக்கொண்டு அவதிப்பட்டேன்!

சும்மா ‘அவுட்டா’ விடவில்லை. நடந்த சம்பவம், சொந்த அனுபவம், நம்பிக்கையோடு இதைப் படித்துப் பாருங்கள், புதிர் விளங்கும்.


நெருக்கடியும் பரபரப்பும் மிகுந்த நகரத்தி லிருந்து ஒதுக்குப்புறம் நோக்கி ‘டாச்சி’யில் ஏறிச் சில மைல் தூரம் சென்றதும் இறங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் காரோ சைக்கிளோ போவதற்குக் கூடச் சாலை வசதி கிடையாது.

ஒற்றையடிப் பாதை, இரு மருங்கிலும் லாலாங் புல் ஆள் உயரத்துக்கு மண்டிக்கிடக்கும். அவ்வழியே சுமார் பதினைந்து நிமிடம் நடந்தால் ஒரு பழைய மர வீட்டுக்கு முன்னால் போய் நிற்போம்.

பழங்காலத்து வீடு. கிட்டத்தட்ட அரை நூற்றாண் டுக்கு முன் கட்டியதுபோல் தோன்றும். சில பகுதி களைச் சமீபத்தில் பழுது பார்த்துச் செப்பனிட்ட அடையாளம் தெரியும்.

பலகைச் சுவர்களில் புதிதாகப் பூசப்பட்ட இளநீல வண்ணம். அத்தாப்புக் கூரை, வேய்ந்து ஒரு மாதம் தானிருக்கும்.

மூன்று அறைகள், ஒட்டுப் பலகைகளால் ஆக்கப் பட்ட கதவுகள். சமைப்பதற்கும் குளிப்பதற்கும் தனித்தனி இடங்கள். குழாய்களில் தண்ணீர் பீறிட்டு, வரும்.

கூப்பிடு தூரத்தில் கடல், கடலின் பேரிரைச்சல் காதைத் துளைக்கும். அலை ஓசை என்று சொல்லிக் கொண்டு அதை ரசிக்கலாம்,

அக்கம் பக்கத் தில் வீடுகளே இல்லை. புதர்களுக்கு மத்தியில் அமைந்துள்ள தன்னந்தனி வீடு. வசதியான வீடுதான். வாடகையும் அவ்வளவு அதிகம் இல்லை.

மற்றவர்களின் தலையீடு இல்லாத—அமைதியான வசதியான—தனியான வீடு ஒன்றும் பார்க்கும்படி நான் கேட்டுக்கொண்டதற்கிணங்கி நண்பரொருவர் வெகு சிரமப்பட்டுத் தேடிக் கண்டு பிடித்த வீடு.

இதுபோன்ற தனி வீடு கிடைப்பதென்றால் இலே சான காரியமில்லை. ஆனால். களவாணிப் பசங்களின் தொந்தரவு இருக்குமோ என்று சிந்தித்தேன். என் சிந்தனையைப் புரிந்துகொண்ட வீட்டுக்காரச் சீனத் தவக்கை ‘திருட்டைப் பற்றியோ வேறு எதைப் வேண்டாம். பற்றியுமோ கொஞ்சமும் பயப்பட எல்லாவற்றையும் நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று ஆணித்தரமாக உறுதி கூறினார்.

‘வேறு எதைப் பற்றியுமோ’ என்னும் வார்த்தை களைச் சற்று அழுத்தமாகவே குறிப்பிட்டார்.

தவக்கையின் “ஜாங்கான் தக்குள்” பேச்சிலும் பொருள் பொதிந்த பொதிந்த புன்னகையிலும் எனக்கு நம்பிக்கை பிறந்தது.

மறுநாளே அவ்வீட்டில் குடியேறியது எங்கள் குடும்பம்.


‘அந்த வீட்டிற்கா குடி போகுறீர்கள்?’ என்று ஒரு தினுசான கேள்வியை வீசினார் என்னுடன் வேலை செய்யும் ஒருவர்.

‘ஆமா, அந்த வீட்டுக்கு என்ன? எல்லா வசதியும் இருக்கே!’ என்றேன்.

‘வசதியெல்லாம் இருக்கும். உண்மை தான். ஆனால்…’ என்று நீட்டினார் அவர். நான் பேசாமல் அவர் முகத்தையே கவனித்தபடி நின்றேன்.

‘இந்த வீட்டிலே அது இருக்கும். இது இருக்கும் என்று சிலபேர் புரளி பேசுவாங்க. அதைக் கேட்டுப் பயந்து நீ வீட்டை விட்டுப் போய்விட வேண்டு மென்பதுதான் அவர்களின் திட்டமாயிருக்கும். நீ போய்விட்டால் அப்புறம் அவர்கள் குடிவந்து விடுவார்கள். ஆகவே, யார் பேச்சையும் நம்பி விடாதே. நினைவு வைச்சுக்க’ என்று வீடு தேடித்தந்த நண்பர் முன்கூட்டியே சொல்லி வைத்த எச்சரிக்கை ஞாபகத்துக்கு வந்தது. எனவே, ‘ஆனால்..’ என்று இழுத்தவர் தொடர்ந்து சொல்லப் போவதை அலட்சியத்தோடு எதிர்பார்த்தேன்.

‘பிள்ளை குட்டிக்காரன் நீ. வேறு நல்ல வீடாகப் பார்த்திருக்கலாம். அவசரப்பட்டுக் குடியேறிவிட் டாய் போலிருக்கிறது. ஆமா அந்த வீட்டைப்பற்றி மற்றவர்கள் பேசிக்கிற சேதி எதையும் நீ கேள்விப் படலியா?’ என்றார்.

‘நிறையக் கேள்விப் பட்டுத்தான் அந்த வீட்டை அமர்த்திக்கொண்டேன்’ என்று எரிச்சலுடன் கூறி விட்டு உடனே அங்கிருந்து நகர்ந்தேன்.

வேலை முடிந்து சாயங்காலம் வீட்டுக்குத் திரும்பிய நான், என்னை எதிர்பார்த்துக்கொண்டு வாசலில் நின்றிருந்த என் மனைவியைக் கண்டு பதறிப் போனேன். அவள் முகத்திலே திகிலும் கலவரமும் கலக்கமும் நிரம்பியியிருந்தன.

என்னைக் கண்டதும், வேண்டாங்க இந்த வீடு. இதிலே பிசாசுகள் நடமாட்டம் இருக்காம். ஒரு பணக்காரக் குடும்பம் படுகொலைக்குப் பலியான வீடாம் இது. அதுக்குப் பயந்து தான் இந்தப் பக்கத்தில் ஒருத்தர்கூட வீடு கட்டலையாம். இந்த வீட்டுக்கு குடிவருவதற்கு எல்லாரும் அஞ்சுவார்களாம். துணிஞ்சு ஒரு குடும்பம் போன வருசம் இங்கு வந்து குடியிருந்தார்களாம். ஆனால், வந்த அன்றைக்கு இரவே ஏழெட்டுப் பிசாசுகள் வந்து…’ சொல்லி முடிப்பதற்குள் அவள் உடம்பு ‘கிடுகிடு’வென நடுங்கியது.

சீனக் கிழவி ஒருத்தி அந்தப் பக்கமாகக் கீரை விற்றுக்கொண்டு போனாளாம். அவளைக் கூப்பிட்டுக் வாங்கும்போது அளந்திருக்கிறாள் இந்தக் கீரை கதையை.

‘பயப்படாமல் இரு. இன்றைக்கு இரவில் பிசாசு ஏதாவது வருகிறதா என்று பார்ப்போம். வந்தால் நாளைக்கே இங்கிருந்து போய்விடுவோம்’ என்று மனைவிக்கு ஆறுதல் சொல்லும்போது எனக்கும் உள்ளூர அச்சம் தோன்றாமலில்லை.

“ஜாங்கான் தக்குள்” என்று சொல்லிக்கொண்டே அங்கு வந்தார் வீடடுக்காரத் தவக்கை. இந்த வீட்டி லிருந்து சுமார் ஒரு ‘பர்லாங்கு’ தொலைவில் இருக் கிறது அவருடைய வீடு. இதே மாதிரிப் பழைய-தனி வீடுதான் அதுவும்.

கொஞ்சநேரம் எங்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பும்போது, ‘இன்றைக்கு இரவு முழுவதும் விளக்குகள் பூராவும் எரியட்டும். ஏனென்றால்…அதை அப்புறம் நீங்களே புரிந்துகொள்வீர்கள்’ என்று பூடக மாகக் கூறிவிட்டுப் போனார்.

அப்போது இரவு மணி ஏழு.

சொல்லிவைத்த மாதிரி அன்றைக்குச் செய்திப் பத்திரிகையில் பேய் பிசாசுகளைப் பற்றி இரண்டுமூன்று செய்திகள் வெளிவந்திருந்தன!

பத்திரிகையை வீசி எறிந்துவிட்டு வானொலிப் பெட்டியைத் திருகினேன். அதில் பயங்கரப் பேய் நாடகம் ஒன்று ஒலிபரப்பாகியது! பேயின் அலறல் என்று ஒரு பின்னணி ஒலி போட்டார்கள். அது காதில் விழும்போது உடல் புல்லரித்தது.

அதை நிறுத்திவிட்டுத் தொலைக்காட்சிப் பெட்டி யைத் திறந்தால் அதில் சுடுகாட்டுப் பிசாசுகள் நள்ளிர வில் ஒரு மாநாடு, நடத்திக் கொண்டிருக்கும் காட்சி நடைபெற்றது.

இப்படியாக, தொட்டதிலெல்லாம் பிசாசுகள் தோன்றி எங்களைக் கதிகலங்க அடித்துச்கொண்டிருக்க இரவு மெள்ள மெள்ள நகர்ந்தது.

பேயாவது பிசாசாவது என்ற நினைப்பை மறந்து, இந்த வீட்டில் உள்ள பிசாசுகள் டெலிவிஷனில் வந்த பிசாசுகள் மாதிரி இருக்குமா அல்லது வேறு மாதிரி யிருக்குமா என்றும், அவை ரேடியோவில் பிசாசுகள் அலறியமாதிரி அலறுமா அல்லது வேறு மாதிரி அலறுமா என்றும் சிந்திக்கத் தொடங்கிவிட்டேன்.

கவலையுடனும், பயத்துடனும் என் மனைவி பக்கத்தில் அமர்ந்திருந்தாள். அவள் முகத்தைப் பார்த்தால் பரிதாபமாயிருந்தது.

பிள்ளைகள் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

தவக்கை சொன்னபடியே எல்லா விளக்குகளும் எரிந்துகொண்டிருத்தன.

மணி எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று! கடி காரம் ‘டிக்டிக்’ என்று ஒலி யெழுப்ப, கடிகார முள் பன்னிரண்டை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது. ஆயிற்று மணி பன்னிரண்டு.

அப்போது—

வீட்டுக்கு வெளியே திடீரென்று ‘ஜங்ஜெங்’ என்ற பேரொலி கிளம்பியது. சீனர்கள் சவ ஊர்வலத்தின் போது முழங்குவார்களே அதே சத்தம்!

வாசலில் எழுந்த அச்சத்தம் வாசற்படியை. நெருங்கிக் கதவருகில் கேட்டது. பிறகு ‘டக்’கென்று சத்தம் நின்று அமைதி நிலவியது. ஆனால். மறுகணம் ‘அஹ்ஹ்ஹஹா…’ என்று சிலபேர் சேர்ந்து பயங்கரமாகச் சிரித்தாற்போல் கூச்சல்! பின்னர் மீண்டும் அமைதி!

என் விழிகள் கதவுத் தாழ்ப்பாளில் பதிந்திருக்க நெஞ்சு ‘திக்திக்’ என்று நடுநடுங்கிப் போயிருந்தேன்.

‘நெஞ்சு பொறுக்குதில்லையே…’ என்று பாரதியார் பாடியிருப்பது நினைவுக்கு வந்தும்கூடத் தைரியம் என்பது கடுகளவு கூடப் பிறக்கவில்லை.

இருந்தாற்போலிருந்து என் மனைவி ‘வீல்’ என்று அல்றினாள். கையை மேலே உயர்த்திக் காட்டி ஏதோ சொல்ல முயன்றாள். வாய் அசைந்ததே தவிர பேச்சு வரவில்லை. கீழே மயங்கி விழவிருந்தவளைத் தாங்கிக் கொண்டு, நிமிர்ந்து பார்த்தேன்,

ஐயோ! அங்கே ஐந்து பிசாசுகள்! பலகையைப் பிடித்தபடி தொங்கிக்கொண்டிருந்தன! காதுவரை நீண்ட வாய்கள்! பள்ளம் விழுந்த பயங்கர விழிகள்] பார்க்கச் சகிக்கா த பரட்டத் தலைகள்! மேனிமுழுவதும் கற்றை கற்றையான ரோமம்! விரல்களில் கூரான நகங்கள்! அசல் பிசாசுகள்! கரும் பிசாசுகள்!

அந்த நேரத்தில்கூட ஒரு சிந்தனை உதித்தது எனக்கு. பிசாசுகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்போலும்! மனிதர்களைப்போல் நிற மாறுபாடு, இல்லையே!

நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவை ஒவ்வொன்றாகத் ‘தொப் தொப்’ என்று கீழே குதித் தன! முதலில் குதித்த ஒரு பிசாசு என்னை நோக்கி அடிமேல் அடிவைத்து நடந்து வந்து தன் கையிலிருந்த இரும்புக் கோடரியை என் தலைக்குமேல் ஓங்கியது. மற்ற பிசாசுகள் என் பிள்ளைகளை நெருங்கின.

திகில் என் உடம்பை ‘ஜில்’லென்று உறைய வைத்தது. கல்லானேன். கண்கள் இருண்டன. உதடுகள் வறண்டன. நாக்கு ஒட்டிக்கொண்டது, அந்த வீடு ‘கிர்ர்ா’ என்று சுழன்றது. என்னைச் சுற்றி லும் ஆயிரம் பிசாசுகள் அலறிக்கொண்டு கூத்தாடு வதுபோல் ஒரு பிரமை.

அவ்வளவு தான் மயக்க முற்றுப் பேச்சிழந்து மூச்சிழந்து கிறுகிறுத்துக் கீழே சாய்ந்தேன். என் மனைவி எனக்கு முன்பே பிரக்ஞை இழந்துவிட்டாள்.


கதையை இதோடு நிறுத்திக் கொண்டால் அப்புறம் நாங்கள் என்ன ஆனோம். பிசாசுகளுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதைப் பற்றி வாசகர் களிடையே விவாதம் நடைபெறக் கூடும், ஆகவே, நானே நடந்ததைச் சொல்லி விடுகிறேன்.

மயக்கம் தெளிந்து நாங்கள் கண் திறந்தபோது வீடடுக்காரத் தவக்கையும் அவர் குடும்பத்தாரும் எங்களுக்குத் தண்ணீர் புகட்டிக் கொண்டும் விசிறிக் கொண்டும் ஆறுதல் சொல்லிக் கொண்டுமிருந்தார்கள்!

பிசாசுகள் கைகளில் விலங்கு பூட்டப்பட்டுக் கைதிகளாகி நின்றன! அவற்றைப் போலீசார் சூழ்ந்திருந் தார்கள்!

விஷயம் என்னவென்றால், வீட்டுக்காரத் தவக்கையிடமிருந்து இத்த வீட்டை விலைக்கு வாங்குவ தற்கு மற்றொரு தவக்கை முயன்றாராம், முயற்சி கைகூடாமல் போகவே, இவ்வீட்டுக்கு யாரும் குடிவராதபடி தடுப்பதற்காகப் பிசாசு நாடகம் நடத்தியிருக்கிறார்!

இப்படியொரு மிரட்டல் ஏற்பாடு நடக்கும் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு, கூலிக்கு வந்த பிசாசு வேடதாரிகளைப் போலீசாரிடம் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்துவிட்டார் வீட்டுக்காரத் தவக்கை! கெட்டிச்காரத் தவக்கைதான்!

இனிமேல், வேஷம் போடாத அசல் பிசாசுகளே வந்தாலும் சரி தான்-நாங்கள் பயப்படுவோமா?

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *