பார்த்த நியாபகம் இல்லையோ…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 26, 2022
பார்வையிட்டோர்: 9,012 
 
 

கற்பகம் ஒன்றைப் பிடித்தால் பிடித்ததுதான். அது புளியங்கொம்பாயிருந்தாலும் சரி, உடும்பு பிடியாய் இருந்தாலும் சரி..

ஸ்டூலைப் போட்டுக்கொண்டு எம்பி எம்பி ஒரு பழைய ஃபோட்டோவை ஆணியிலிருந்து எடுப்பதில் முனைந்திருந்தாள்.

எனக்கு பயமாக இருந்தது..

ஏற்கனவே தலைசுற்றல், முழங்கால் வலி , முதுகு வலி போன்ற ஏகப்பட்ட சமாச்சாரம் கைவசம் வைத்திருந்தாள்..

தலைசுற்றி விழுந்து விட்டால்?

“கற்பகம்.. என்னம்மா பண்ற? அந்த ஃபோட்டோ இப்போ எதுக்கு..? கேட்டால் நான் எடுத்து தர மாட்டேனா..? இறங்கு முதல்ல..!”

“உங்களுக்கு இத்தன மறதி ஆகாது..இல்ல மறந்த மாதிரி நடிக்கிறீங்களோ, யார் கண்டது…? நானும் போன வாரத்திலேர்ந்து நூறு தடவையாவது சொல்லியிருப்பேன்..”

(கற்பகம் கணக்கில் கொஞ்சம் வீக் என்று புரிந்திருக்குமே..(1 = 100).

அல்லது ரஜினி விசிறியாய் இருக்க வேண்டும்…(நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி…)

“உங்கள நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு கல்யாணம் ஆன நாளிலேயே புரிஞ்சுடுத்து”.(சரியான தீர்க்கதரிசி.)

“சரி..மீதி அர்ச்சனைய கீழ இறங்கி பண்ணப்படாதா..?”

ஒரு வழியாக படத்தை எடுத்துக் கொண்டு இறங்கினாள்..

“காமி..அது என்ன படம்..? நான் ஏதோ முன்ன குடியிருந்தவா விட்டுட்டு போனதாக்கும்னு நெனச்சிண்டிருக்கேன்..”

“ஆமா.நினப்பேள்..என்னக்கூட அப்படித்தானே நினைக்கிறேள்..உங்க பெண்டாட்டின்னு யாராவது சொன்னாத்தான் தெரியும்…!!”

எனக்கு நிஜமாகவே சிரிப்பு வந்தது.. அப்படியே இருக்கக் கூடாதா..? அற்ப சந்தோஷம்!

“சரி..அந்த ஃபோட்டோல என்ன விசேஷம்?”

“சொல்லத்தானே போறேன்..”

புடவைத்தலைப்பால் அழுத்தி அழுத்தி துடைத்துக் கொண்டிருந்தாள்.

“கற்பகம்..! அது நூறுவருஷத்து படமாச்சேம்மா..நீ எத்தனை அழுத்தி தொடச்சாலும் கண்ணாடி வேணா ஒடையுமேதவிர பளிச்சுன்னு தெரிய சான்சே இல்ல..குடு பாக்கலாம்…!”

கற்பகம் என்னை ஒரு முறை முறைத்து விட்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்..!

“வா..கிட்ட வந்து உக்காரு..!”

“நிறைய தமிழ் சினிமா பாப்பேளாக்கும்…??” என்று முகத்தை ஒரு வெட்டு வெட்டினாள்.

இதுக்கு எதற்கு தமிழ் சினிமா? எனக்கு சுத்தமாய் புரியவில்லை…

வயதானாலும் கொஞ்சம் கிளுகிளுப்பாய்த்தான் இருந்தது..இதுதான் தமிழ் சினிமா எஃபெக்ட் போலிருக்கு…

அவளாக வந்து நெருங்கி உட்கார்ந்தது இன்னைக்குத்தான்..

“இப்போ பாருங்கோ!”

“எங்க தாத்தா மாயவரத்தில இருக்கும்போது ஒரு விசேஷத்துல நாங்க எல்லாம் நின்னு எடுத்துண்டோம்..கும்பகோணம் வீனஸ் ஸ்டூடியோல குடுத்து டெவலப் பண்ணித்து..எங்காத்து மனுஷா எல்லாரும் இருக்கற ஒரே படம்…”

அவள் ‘எங்காத்து’ ன்னு சொன்னது அவ பொறந்த வீடு.

அவள் எத்தனை அழுத்தி துடைத்தும் படம் மங்கலாகத்தான் இருந்தது.

நான் சொன்னால் என்ன பதில் வருமென்று எனக்குத் தெரியாதா?

“ஆமா..ஏற்கனவே உங்களுக்கு எதுவுமே கண்ணுக்கு தெரியாது. ஒரு கண்ணுக்குத்தான் காடராக்ட் பண்ணியிருக்கு.இன்னொரு கண்ணுக்கும் சீக்கிரமே பண்ணிக்கணும்னு டாக்டர் சொல்லி ஆறு மாசமாச்சு…உங்களுக்கு எல்லாமே மங்கலாத்தான் தெரியும்..!

அவளே கதையையும் சொல்லி அதற்கொரு முற்றுப்புள்ளியும் வைத்து விட்டாள்…

மொத்தம் நாலு வரிசை…

கீழே குட்டிப்பசங்கள்… வேண்டாம். எல்லாம் ஆளுக்கொரு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது..

மேலேயிருந்து கீழே வருவோம்..

மேல் வரிசையில் இருபதிலிருந்து முப்பது வரை உள்ள இளவட்டங்கள்..

நேர் வகிடு, சைட் கிராப் , ஒன்றிரண்டு குறுந்தாடிகள், கிருதா மீசையுடன் இரண்டு பேர்.. எல்லோரும் ஸ்டைலான சட்டை , ஜிப்பாவுடன் நன்றாக சிரித்துக் கொண்டு…

‘இவா எல்லாம் என் சித்தப்பா, பெரிப்பா முறை..எல்லாரும் ஜப்பான் , சிங்கப்பூர் , அமெரிக்கான்னு பெரிய பெரிய வேலைல இருக்கா…

ஜப்பான் , சிங்கப்பூரை கொஞ்சம் வேண்டுமென்றே அழுத்தம் குடுத்து சொன்னது மாதிரி இருந்தது.

அடுத்த வரிசை.. ஆண்களும் பெண்களும் கலந்து கட்டியாக…

கணவன் மனைவியாக இருக்க வேண்டும்.

‘இது ஜானு பெரியம்மா, பெரியப்பா , இதோ மடிசார் கட்டிட்டு இருக்காளே அவதான் மூத்த அத்தை கோமு , அடுத்து கோண்டு மாமா..மாமி…’

அவள் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போனாள். எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.

மூன்றாவது வரிசையில் ஒரு அறுபது எழுபது வயதுகளில் பழுத்த பழங்கள்..இங்குதான் இருக்கிறது விஷயமே..

ஒரு அறுபது வயதுக்காரர்.. பார்ப்பதற்கு ஹீரோ மாதிரி இருந்தார்.. அவர் மடியில் ஐந்து வயது குழந்தை..

‘இந்த குழந்தைய கண்டுபிடிச்சா உங்களுக்கு ஐநூறு ரூபாய் தருவேன்….’

‘எடு..ஐநூற…!!!’

“யாரு சொல்லுங்கோ…”

“நீதாண்டி..என் ராஜகுமாரி…”

படபடவென்று கையைத் தட்டினாள்..!

“எப்பிடி இத்தன சரியா கண்டுபிடிச்சேள்..?”

“அதே அசட்டு சிரிப்பு. நீ மாறவே இல்ல..!”

கீழ் வரிசையில் தரையில் வாண்டுகள். சில குழந்தைகள் நன்றாக எண்ணெய் தடவி வழித்து வாரிக்கொண்டிருந்ததுகள்…

சில குழந்தைகளின் அம்மா அப்படியே விட்டு விட்டார்கள் போலிருக்கிறது.

இல்லாவிட்டால் அடம் பண்ணியிருக்கும்..

எது எப்படியானால் என்ன..? அவர்கள் எல்லோருமே ஒரே மாதிரி முழித்துக் கொண்டு பாவமாயிருந்தார்கள்..

அப்போதெல்லாம் புகைப்படக்காரர்களுக்கு ‘சீஸ்’ இருப்பது தெரியாது போலிருக்கு..

எனக்கு அதில் ஒரு முகம் பளிச்சென்று தெரிந்தது.. மேல் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு பையன்..

சுருள் கிராப்புடன் , கோண வகிட்டுடன் , அந்தக்கால ஜெமினி கணேசனின் அதே சாயல்..அந்த ஒரு முகம்தான் பார்க்கும்படி இருந்தது…

மேல் வரிசையில் இடது பக்கத்திலிருந்து ஆறாவது.. கிட்டத்தட்ட நடுவில் என்று வைத்துக் கொள்ளுங்களேன்…

“இது யாரு..?? ஜெமினியா..?? உங்க சொந்தமா..?”

“எல்லாரும் இதேதான் சொல்லுவா..இவரப்பத்தித்தான் சொல்லப்போறேன்..இதுக்காகத்தான் பிரயத்தனப்பட்டு இந்த படத்தை எடுத்தேனாக்கும்..!”

என்னவோ அவளே படம் பிடித்தமாதிரி பேசினாள்…

“என்ன மடில வச்சிண்டிருக்காரே அவர் என்னோட சின்ன தாத்தா. நான்னா அவருக்கு உயிர். மேல காமிச்சு கேட்டேளே அவர்தான் மூத்த பையன். பேரு அகோரமூர்த்தி..! அவனுக்கு பக்கத்தில அவன மாதிரியே இருக்கான் பாருங்கோ, அவன் பேரு அழகிய சுந்தரம்.”

“கற்பகம்.. கொஞ்சம் பொறு..இது என்ன பேரு..? அகோர மூர்த்தி. கேக்கவே பயம்மா இருக்கு..! இவ்வளவு அழகான பையனுக்கு ஏன் இத்தனை பயங்கரமான பேர்? அவன் தம்பிக்கு மாத்திரம் அழகிய சுந்தரம்னு?”

“இப்போ உங்க பேரு என்ன..?”
“பிச்ச மூர்த்தி…!!”

“உங்க தம்பி பேரு….?”

“கோடீஸ்வரன்..”

“இது எப்படி இருக்கு..?”

விழுந்து விழுந்து சிரித்தாள்.

“உங்களுக்கு போறாதுன்னா..!! கோரம்னாதான் பயங்கரம்..அகோரம்னா கோரமில்லை…அதாவது அழகுன்னு அர்த்தம்..! ஞானம்..அஞ்ஞானம்..மாதிரி வச்சுக்கோங்க…!

எங்க சின்ன தாத்தா மாதிரி ஒரு புத்திசாலி எங்க குடும்பத்திலேயே கிடையாது. காலேஜ்ல எல்லா வருஷமும் கோல்ட் மெடல். அப்போ நாங்கெல்லாம் மாயவரத்தில இருந்தோம்.தெருவில பாதி வீடு எங்க சொந்தக்காராதான். அங்கதான் சின்ன தாத்தா பெரிய வேலைல இருந்தார்.நிறைய தோப்பு, துரவு. வரவா போறவா அத்தனை பேருக்கும் மூணு வேளையும் சாப்பாடு. இரண்டு பசங்க..தாத்தாவுக்கு படிப்புதான் முக்கியம்..

முதல் பையன் பொறந்ததுமே திருவெண்காடு கோவில்ல போய் அவனுக்கு வேண்டிண்டு “அகோர மூர்த்தி’ன்னு பேர் வச்சார்..!

அங்க போன குழந்தைகள் படிப்புல ரொம்ப பெரிய ஆளாக வருவாங்கறது எங்க தாத்தாவோட நம்பிக்கை.

அவர் எதிர்பார்த்தமாதிரியே சித்தப்பா படிச்சு பெரிய IAS ஆபீசராயிருந்து ரிடையரானது எங்களுக்கெல்லாம் எத்தனை பெருமை தெரியுமா..?”

(அழகு சுந்தரம் என்ன ஆனான்னு கேக்க மறந்துட்டேன்)

அந்த கோவில் புதனுக்கு ரொம்ப உகந்தது. அப்பர், சுந்தர், சம்பந்தர், மாணிக்கவாசகர் நாலு பேரும் அங்க பாடியிருக்கார்னா பாத்துக்குங்கோ..!

கற்பகத்தின் ஒரே ஸ்ட்ராங் பாயின்ட் இந்தமாதிரியான இதிகாச புராணங்கள்தான்..

என் வாயை அடைக்க அவளுக்கு கிடைத்த ஆயுதம்…

“சரி..அவனுக்கு என்ன இப்போ?”

போன வருஷம் கூட அவருக்கு சதாபிஷேகம் ஆச்சே.. நமக்கெல்லாம் பத்திரிகை வந்துதே..மறந்துட்டேளா…?”

“ஆனா..அகோரமூர்த்திங்கிற பேரை பார்த்த நியாபகம் இல்லையே..!!! சுலபத்தில மறக்கற பேர் இல்லையே…??”

“அவர் இப்போ பேரச் சுருக்கி A.K.மூர்த்தின்னு வச்சுண்டுட்டார்…“

“பாவம்.உங்க சின்ன தாத்தா..! சரி.. மூர்த்திக்கு என்ன ஆச்சு..?”

“போன வாரம் உடம்பு சீரியசாகி இங்க பக்கத்தில இருக்கிற J.J. ஆஸ்பத்திரியில் ICU ல சேத்திருக்காளாம்..நாளைக்கு வார்டுக்கு வந்துடுவாராம்..நாம கண்டிப்பா போய் பாக்கணும்..எனக்கும் இப்போ அந்த ஜெமினி கணேசன் எப்படி இருக்கான்னு பாக்க ஆசைதான்..”

“சரி கற்பகம்.. ICU வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவருக்கு என்ன கொண்டு போறது..??”

“ஆமா..நாம் கொண்டுபோறத எல்லாம் பேஷன்ட்டா சாப்பிடப்போறா..? பாத்துக்கறவாளும், போறவா வரவாளும் தானே சாப்பிடுவா..! கொஞ்சம் பழம், பிஸ்கெட், ஹார்லிக்ஸ். ஏதாவது வாங்குங்கோ..!”

விடிகாலையில் எழுந்து விட்டாள் போலிருக்கிறது..

“நாம இங்கேயிருந்து நாலு மணிக்கெல்லாம் கிளம்பிடணும்.. அஞ்சுலேர்ந்து ஏழு விசிட்டர்ஸ் நேரம்..”

“இன்னும் சீக்கிரமே கிளம்பலாமே.பஸ்ஸப் பிடிச்சு போறதுக்கு நேரமாயிடுமே..!!

“பஸ்ஸா..? நான் ஏற்கனவே ஊபர் புக் பண்ணிட்டேன்.. இருந்து கூட்டிண்டு வருவான்..”

“விவரமெல்லாம் சரியா கேட்டியா..??”

“அதான், அன்னிக்கே சொன்னேனே. தீடீர்னு நெஞ்சுவலி..இரத்த குழாயெல்லாம் அடைப்பு..பைபாஸ் அறுவை சிகிச்சை..!”

“நான் அதக் கேக்கல கற்பகம்..! எந்த வார்டு..எத்தனாம் நம்பர்..??”

“அதெல்லாம் மூரத்தி, ஸ்பெஷல் வார்டுன்னு சொன்னா தெரியும்..”

இப்படி பேசிப் பேசியே முக்கிய தகவல்களை கோட்டை விடுவதில் அவளை அடிச்சுக்க ஆளே இல்லை.

ஆஸ்பத்திரி பளபளவென்று மின்னியது.புதிதாக கட்டப்பட்டது. நாலைந்து மாடிகள் இருக்கும் போலிருந்தது..

கால் வைத்தாலே வழுக்கும் கிரானைட் தரை..வழுக்கி விழுந்தாலும் நேராக இருந்தது காஷுவாலிட்டி..ஸ்ட்ரெச்சரும் தயாராகத்தானே இருக்கும்..

ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து விட்டால் இதுபற்றி எல்லாம் பயப்படத் தேவையில்லை..

பையில் நிறைய நோட்டுக்களோ, நாலைந்து கிரெடிட் கார்டுகளோ இருந்தால் விழுந்தாலும் ஒருவாரம் வரை ICU வில் இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை..!

“இருங்கோ..குடுகுடுன்னு ஓடாதீங்கோ.. எனக்கு நடக்கவே பயம்மா இருக்கு.ஒரே வழுக்கல்..கைய பிடிச்சுக்கோங்க..!”

நல்ல சமயத்தை மிஸ் பண்ணாமல் அவள் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்..!

இந்தி சினிமா நிறைய பாப்பியான்னு கேக்கலை..!

நேராக ரிசப்ஷனில் போய் நின்றோம். கொஞ்சம் கூட்டம் அதிகம்தான். ஆளாளுக்கு ஒரு பேரைச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“மூர்த்தி..ஸ்பெஷல் வார்டு…நேத்துதான் வார்டுக்கு மாத்தினாங்கன்னு சொன்னார்..”

அதற்குள் அவளுக்கு ஒரு அவசர கால்..ஒரு கையால் ஃபோனை காதில் பொத்தியபடி,

“தேர்ட் ஃப்ளோர்..ஏ.சி.வார்டு..ரூம் நம்பர் 310..” என்றாள். நேராக லிஃப்டையும் காண்பித்தாள்.

இந்த பெண்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒரே சமயம் ஒன்பது வேலையை அதுவும் சிரித்த முகத்துடன் செய்வது எப்படி என்று இவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.

“கொஞ்சம் தண்ணி தரியாம்மா ??” என்று தெரியாமல் ஒருநாள் கேட்டுவிட்டாலே, எனக்கென்ன பத்து கையா இருக்கு? காய் நறுக்கிண்டிருக்கேன்..வேணும்னா வந்து நீங்களே எடுத்துக்கறது.? சும்மாதானே இருக்கேள்..?”

(எனக்கும் வேண்டியதுதான்..)

பாவம்.. இவளுக்கும் இரண்டு கைதானே இருக்கு..?? இதுதான் மல்ட்டி டாஸ்கிங் என்பதா?

310 லேசாக திறந்திருந்தது. அப்போதுதான் நர்ஸ் வந்துவிட்டு போயிருக்க வேண்டும்.

பெல் அடிக்காமல் “சார்.. சார்..” என்று கூப்பிட்டேன்..

பின்னாலிருந்து கற்பகம் “என்ன சார்..?? சித்தப்பா இல்ல சித்தின்னு கூப்பிடுங்கோ..!”

“உள்ள வாங்கோ”ன்னு ஒரு குரல் கூப்பிட்டது.

ஒரு வயதானவர் கட்டிலில் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு ஒரு தட்டிலிருந்த மிக்சரையும் அல்வாவையும் வாயில் திணித்துக் கொண்டிருந்தார்.

முன்னாலிருந்த T.V யில் அந்தக் காலத்தில் சக்கைப்போடு போட்ட ‘கல்யாணப் பரிசு’ படம் ஓடிக்கொண்டிருந்தது.

விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

பக்கத்தில் உள்ள கட்டிலில் ஒரு அம்மா முதுகைத் காட்டியபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.

“இங்க..மூர்த்தின்னு..!”

“நான்தான் மூர்த்தி..! வாங்கோ..உக்காருங்கோ..என்ன காமெடி பாருங்கோ..தங்கவேலுவுக்கு மிஞ்சிதான் மத்தவா..!”

அவரும் பார்ப்பதற்கு வயதான தங்கவேலு மாதிரிதான் இருந்தாரேயொழிய ஜெமினி சாயல் மருந்துக்குக் கூட இல்லை..!

உடம்பில் அங்கங்கே குளுகோஸ், சலைன் குழாய்களோடு மயக்கமாய் படுத்திருப்பார் என்று எதிர்பார்த்தால் இவர் ஆனந்தமாய் அல்வா சாப்பிட்டுக்கொண்டு..!

கற்பகத்தால் அதுக்கு மேல் சும்மா இருக்கமுடியுமா..?

“சித்தப்பா..என்ன தெரியறதோ ? நான்தான் கப்பு..! உங்க பெரியப்பா பேத்தி..மாயவரத்துல..!”

“வாம்மா..லேசா நெனவுக்கு வருது. எனக்கு எதோ டிமென்ஷியாவோ, அல்சைமரோ சொல்றா..சட்னு பேரு நியாபகம் வராது..! நேத்து தான் எல்லா செக்கப்பும் பண்ணிண்டேன். எல்லாம் அமோகமா இருக்கு..ராத்திரி கண் முழிச்சதுல காமாட்சி அசந்து தூங்கறா..! எழுப்பவா..! உன்ன சட்னு அடையாளம் கண்டு பிடிச்சுடுவா..!”

“வேண்டாம் ! சித்தப்பா.. தூங்கட்டும்..நாங்க உங்கள பாக்கத்தானே வந்தோம்..!”

எனக்கு சீக்கிரம் அங்கிருந்து கிளம்பினால் தேவலை என்று தோணியது.

அல்சைமரால் ஒரு வேளை ICU வில் அட்மிட் ஆனதை மறந்து விட்டாரோ..?

“ஏதாவது சாப்பிடறேளா..? டேபிள்ள எல்லாம் இருக்கு பாருங்கோ..!”

“ஒண்ணும் வேண்டாம் சித்தப்பா..”

அதற்குள் காமாட்சி சித்தி எழுந்து விட்டாள்.

தூக்கக் கலக்கத்தில் “யாரு..கேட்ட குரலா இருக்கே…?” என்றாள்.

“சித்தி..! நான்தான் கப்பு! நீங்க அப்பிடியே இருக்கேள்.! சித்தப்பாக்கு முடியலன்னு கேட்டதுமே போட்டது போட்டபடி ஓடிவந்துட்டோம்..!”

“அவருக்கென்ன? நன்னாத்தான் இருக்கா..எனக்குத்தான் உடம்பு தள்ளவேயில்ல..!சரி..அத்த விடு..! நீங்க எங்க இருக்கேள்..குழந்தைகள் என்ன பண்றது?”

இரண்டு பேரும் ஏதோ ஒருவருக்கொருவர் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள்..

மாயவரத்தில் தாத்தாவை மாடு முட்டியது, வைத்தீஸ்வரன் கோயிலில் குடும்பத்தோடு அபிஷேகம், மூத்த பேரன் ஐஐடி யில் முதலாவதாக வந்தது, காமாட்சி கீழே விழுந்து, இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டது என்று மூச்சு விடாமல் பேச்சு.

பாவம் அகோர மூர்த்தி ICU வில் இருந்தது பற்றி ஒரு வார்த்தை..ம்ஹூம்..யாரும் மூச்சு விடவில்லை..காமாட்சி சித்திக்கும் அல்சைமாராய் இருக்குமோ?

“சித்தப்பா..! சித்தி..! உடம்ப பாத்துக்குங்கோ..!”

வழியெல்லாம் கற்பகம் புலம்பிக் கொண்டே வந்தாள்.

“எப்படி இருந்த சித்தப்பா இப்படி மாறிப்போய்ட்டாரே..?”

“ஆமா..! ஜெமினி கணேசன் மாதிரி இருந்தவர் தங்கவேலு மாதிரின்னா இருக்கார்..!”

“நீதானே..சித்தி..நீங்க மாறவேயில்லைன்னு சொல்லி ஒரு மணிநேரம் விடாம பேசிண்டிருந்தியே..?”

“சித்தியை எனக்கு எப்படி ஞாபகம் இருக்கும்..? எனக்கு அப்போ ஆறு வயசுகூட இருக்காதே…?”

“கற்பகம்.. உன் நடிப்பு ஏ.ஒன்..!! நானே ஏமாந்துட்டேன்..”

வந்ததிலிருந்து கற்பகத்தின் புலம்பல் தாங்கமுடியவில்லை.

“மூர்த்தி சித்தப்பா எப்படி இருந்தவர் தெரியுமா? இப்படியா ஆளே அடையாளம் தெரியாம மாறுவார் ஒத்தர்?

சித்திக்கு கொஞ்சமானும் கவல இருக்கா பார்த்தேளா..? தன்னப்பத்தியே பேசித் தள்றாளே..?

இரண்டு மூணு நாள் போயிருக்கும்…!

“கப்பு இருக்காளா..? நான் ரோஜு பேசறேன். மூர்த்தி சித்தப்பாவோட இரண்டாவது பொண்ணு..திருச்சில இருக்கேன்…நீங்க பிச்ச மூர்த்தி அத்திம்பேர் தானே..!”

“ஆமாம்மா…! என்ன கொரல் கம்மி இருக்கு..? என்னாச்சு?”

“அப்பா போய்ட்டார் இல்லையா… அதான் அவளுக்கு தெரியுமான்னு..? ஆஸ்பத்திரிக்கு வரேன்னு சொல்லியிருந்தா..காணலியே…!! அதான் நேர்ல தகவல் சொல்லணும்னு தோணித்து…!”

இது என்ன புதுக் கதை …?

நன்னா மிக்சரும் அல்வாவும் தின்னதை கண்ணால பார்த்தோமே!! என்று சொல்ல முடியுமா….?

“இதோ கப்புவைக் கூப்பிடறேன்…”

ஒருவழியாக பேசிவிட்டு ஃபோனை வைத்தவள்.

“சித்தப்பா போய் மூணு நாளாச்சாம்…ICU லேர்ந்து வந்து நாலஞ்சு மணிநேரத்திலேயே எல்லாம் முடிஞ்சுடுத்தாமே..!”

“அப்போ. நாம பார்த்த மூர்த்தி அவரோட ஆவியாயிருக்குமோ..?”

“போதுமே! நீங்களும் உங்க அசட்டு ஜோக்கும்..! அவா இருந்தது இரண்டாவது மாடியாம். அந்த ரிசப்ஷனிஸ்ட் ஒரேசமயத்தில ஒம்பது வேலையைச் செஞ்சா இப்படித்தான்..!”

(கப்புவுக்கு யாரும் ஸ்மார்ட்டா இருக்கான்னு சொன்னா பொறுக்காது…என்னோட மைண்ட் வாய்ஸ் நிச்சயம் கேட்டிருக்கும்..!)

“ஒழுங்கா சொல்ல வேண்டாமோ? போய் முந்தாநாள் பேப்பர எடுத்துண்டு வாங்கோ..! ஃபோட்டோவோட எல்லா விவரமும் வந்திருக்காம்..நமக்குத்தான் ஒண்ணும் கண்ணுல படமாட்டேங்கறது..”

ஃபோட்டோவில் ஜெமினி கணேசன் சிரித்துக் கொண்டே போஸ் குடுத்திருந்தார்..நானே அசந்து போய்விட்டேன்..

கீழே ‘அகோர மூர்த்தி.’ தோற்றம்..மறைவு..’ இத்யாதி..இத்யாதி..!

நாங்கள் பார்த்தது நிச்சயம் தங்கவேலுவைத்தான்…

ஜெமினியை இல்லை..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *