எந்தப் பெண்ணாவது தனக்கு குடிகார மாப்பிள்ளைதான் வேண்டுமென்று நிபந்தனை விதிப்பாளா? எங்கள் ஊர் சின்னத்தங்கம் அப்படி விதித்தாள். அதுமட்டுமல்ல; இல்லையென்றால் தனக்கு கல்யாணமே வேண்டாமென்று கட்டன்ரைச்சாக சொல்லிவிட்டாள்.
“அடிக் கேனக் கிறுக்கீ…! ஊருல அவவொ, ஒரு தண்ணி தவுடு போடாத,… ஒரு ப்பீடி சீரேட்டுக் குடிக்காத,… ஒரு சீட்டாட்டம் கீட்டாட்டம் ஆடாத… மாப்பளயாத்தாம் பாத்துக் கண்ணாலம் மூய்க்கோணும்னு கண்டுசன் பண்ணுவாளுகொ; கேட்டிருக்கறன். நீயென்றான்னா குடிகார மாப்பளதான் வேணுங்கறயா…?! வட்டுக்கிட்டு எளகீருச்சா? ஆராவுது கேட்டா வாயில சிரிக்க மாண்டாங்கொ. ஏன்டீ, ங்கொய்யன் குடிகாரக் குப்பனக் கட்டீட்டு இரவத்தி மூணு வருசமா நாஞ் சீரளிஞ்சு சின்னப்பட்டு, மண்டையொடச்சு மாவௌக்கெடுத்துட்டிருக்கறனே, பத்தாதா? அந்தாளோட அக்குறும்பத்துல நிய்யிந்தான லோல் படற? இன்னுட்டும் புத்தி வல்லீயாடீ உனக்கு? என்ன கருமாந்தரத்துக்கு குடிகாரந்தா வேணும்னு ஒத்தக்கால்ல நின்னுட்டு நிக்கற?” என்று அவளின் தாய் குலசம்மா புரியாமல் விழித்தாள்.
“அய்யனுக்கொசரந்தாம்மா” என்ற மகள், “எனக்கு அய்யனாட்டவேதான் குடிகார்ரா மாப்பள வேணும்” என்றாள்.
“அடியடி-யடி கேனக் கிறுக்கீ…! ஆத்தாளாட்டவே பொண்டாட்டி வேணும்னு அரச மரத்தடீலீம் கொளத்துமேட்டுலீம் வெநாயன் குக்கீட்டிருக்கறாப்புடி, அய்யனாட்டவே மாப்பள வேணுங்கறயே நீயி…?!” ஈடிபஸ் காம்ப்ளக்ஸுக்கு எதிர்ப்பதமான மகளின் போக்கு அந்தத் தாய்க்கு சம்சியத்தைக் கிளப்பியது.
“அன்னாடும் அய்யன் கள்ளக் குடிச்சுப் போட்டு வந்து பண்ற ரச்சை தாங்காமத்தானும்மா நம்மூட்டுக்கு ஒறம்பறைகளே ஒருத்தரும் வாறதில்ல. வந்தாலும் ரவை (ராத்திரி) தங்காம, பொளுதுளுகறக்கு மிந்தியே, உட்டாச் சேரீன்னு முட்டீட்டு சவாரியுட்டர்றாங்கொ. என்னையக் கட்டப் போறவரு குடிகார்ரா இல்லீன்னாலும் அதே மாறத்தான ஆகும்? நாளையும் பின்னீம் நானு அவுரு கூட வந்து தங்க வேண்டாமா இங்க? அதுக்குத்தேன் அவுரும்மு குடிகார்ரா இருந்துட்டா பிரசனை இல்ல பாரு. ரெண்டு பேர்த்துக்கும் சேந்துக்கும்.”
அதைக் கேட்டு குலசம்மா அசந்துவிட்டாள். சின்னத்தங்கா சொல்வதும் ஒரு வகையில் நாயந்தான். அருமையான ஒவாயமும் கூட. அதுக்கொசரம், தெரிஞ்சு தெரிஞ்சே மகளைப் பாங்கிணத்தில் தள்ள முடியுமா? ஆனால், அவள்தானே கல்லைக் கட்டிக்கொண்டு கண்ணை முளிச்சுட்டே குதிக்க ரெடி என்கிறாள்?
“எல்லாம் அந்தப் பாளாப்போன மனுசனால வந்த வெனை. அவுரு ஒளுக்கமா இருந்திருந்தா இவளுக்கு ஏன் புத்தி இப்புடிப் போகுது?
தாங்கெட்டதுமில்லாம கொரங்கு வனத்தீமளிச்ச மாறயல்லொ இப்ப ஆயிப்போச்சு” என்று கணவனைத் தாளித்துக் கொட்டினாள்.
தாயும் மகளும் இப்படி உணர்ச்சிக் கோலமாக நிற்பதைப் படிக்கும் வாசகர்கள், அதற்குக் காரணகர்த்தாவான சின்னத்தங்கத்தின் தந்தை, குடித்துவிட்டு பொண்டு புள்ளைகளை அடிக்கிறவர், ஊருக்குள் வம்பு வழக்கு செய்கிறவர், சம்பாதிக்கிற காசையெல்லாம் தண்ணியிலயே கரைக்கிறவர் என்றெல்லாம் விபரீதக் கற்பனைகள் செய்துகொள்ள வேண்டாம். அவர் அப்படியாப்பட்ட ரகமல்ல. அவரின் கிருதிகள், கிருத்தியங்கள் தனி விதம்.
பாகவதர் விவசாயப் பணியாள். வேலை கை மாறியதுமே அவரது கால்கள் லட்சிய வேகத்தோடு நடப்பது கள்ளுக்கடைக்குத்தான். காசிருப்பைப் பொறுத்து, ஒரு பாட்டிலோ இரண்டு பாட்டிலோ குடிப்பார். வயிற்றில் இறங்கிய கள் தலைக்கேறியதும், அவரது விவசாயப் பணியாள உடலுக்குள் இருக்கும் பாகவதர் மனம் ஸ்ருதி பிடித்துவிடும். எட்டுக்கட்டையில் தொள்ளை தொறக்கத் தொடங்கிவிடுவார். ராகம், பாவம் பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லை. கண்ணை மூடிக்கொண்டு சகுட்டுத்துக்கு எடுத்துவிட வேண்டியதுதான். ராக தேவதை காதுகளில் ரத்தம் வழிய, ஒழலப்பதி கள்ளுக்கடையிலிருந்து தெற்கு நோக்கி, அது மந்தையென்றும் மேடென்றும் பாராமல் அலறியடித்துக்கொண்டு ஓடுவாள். பாகவதர் வடக்கே நடப்பார்.
வழி நெடுக தனியாவர்த்தனம் கொடி கட்டும். வீடு வந்து சேர்ந்தால் திண்ணையில் சம்மணமிட்டு தொடையைத் தட்டியபடி ஒன்பது மணி வரையில் ததரினனா ஓயாது. பத்து வீடு தள்ளி தொண்ணூறு வயசுக் கிழம் ஒன்று, ஜங்ஷனிலிருந்து இவர் வருவதைப் பார்த்ததுமே தன் செவிட்டு மிஷினைக் காதிலிருந்து பிடுங்கிக் கொள்ளும் என்றால், பாகவதரின் ஐவேஸை நீங்கள் புரிந்துகொள்ளலாம். கேட்கக் கடவும் காதுள்ளவர்கள் பாடு பற்றியும் யூகிக்க முடியும்.
இப்போது சொல்லுங்கள், சின்னத்தங்கத்தின் முடிவு சரிதானே?
ஒழுக்க சீலங்கள் கொண்ட மாப்பிள்ளைக்குத்தான் டிமாண்ட். குடிகாரன் வேணுமென்றால் பஞ்சமா நாட்டில்? திருப்பூருக்குப் பக்கம் அன்னூரிலிருந்து மாப்பிள்ளை வந்தது. தறி குடோன் வேலையாம். வேலை நல்ல வேலைதான்; ஆனால், ஆள் அட்டைக் கரி. முரடனாகவும் தெரிந்தான். இதுதானே முதல் வரன், மற்றவையும் வரட்டும் பார்க்கலாம் என்றாள் குலசம்மா. சின்னத்தங்கமோ இதுவே போதும், எனக்கு மாப்பளயப் புடிச்சிருக்குது என்றுவிட்டாள்.
“அதென்னுமோங் நங்க,… செவத்த புள்ளைகளுக்கு கருமாண்டீகளத்தாம் புடிக்குது; சாது கொணவதிகளுக்கு மொரடனுகளத்தாம் புடிக்குது” என்று அத்தைக்காரி ஒருத்தியும் ஒத்து ஊதினாள். தன் மகன் தப்பிச்சானே என்ற நிம்மதியில், முறை மருமகளுக்கு மெப்புப் போட்டு பேசினாள் அவள்.
நல்ல வார்த்தை (நிச்சயதார்த்தம்) முடிந்த பிறகு சின்னத் தங்கத்தின் கூத்தைப் பார்க்கணுமே! பக்கத்தூட்டில் போய், சூரியன் எப்பெம், ரெய்ம்போ எப்பெம், லேடியாச் சிட்டி, அலோ எப்பெம், மிருச்சி என்று மாற்றி மாற்றி, நைன் ஃபைவ் கோடில் போன் போட்டு, “கருப்புத்தா எனக்குப் புடிச்ச களரு’ – பாட்டப் போடுங்கொ. என்னையக் கட்டிக்கப் போறவருக்கு, ங்கைய்யனுக்கு, ங்கம்மாளுக்கு, என்ற பிரண்டுகொ இன்னாரு இன்னாருக்கெல்லாம் டெடிக்கேசனுங்கொ” என்று கேட்டுக் கிளுகிளுத்துக்கொண்டிருந்தாள்.
மூன்றாம் மாதத்தில் திருமணம்.
மாப்பிள்ளை வீடு போவது, மறு விருந்துக்கு அழைப்பது என்று திருமணத்தை ஒட்டிய போக்கு வரவுகள் சில தடவை நடந்து முடிந்தன. குலசம்மாவின் மன்றாடலும் எச்சரிக்கையும் காரணமாக பாகவதர் அந் நாட்களில் வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டிருந்தார்.
வாரம் – பத்து நாக் கிருமிச்சு, அய்யனாத்தாளப் பாக்கோணும் என்று பொறந்த வீட்டுத் தேட்டமெடுத்து புதுக் கணவனோடு வந்திருந்தாள் சின்னத்தங்கம். குலசம்மா மருமகனுக்காகக் கோழியடித்து பொங்கு பொசுக்கிக்கொண்டிருந்தாள். சின்னத்தங்கம் அயல் வீடுகளுக்கு புதுமணப் பொலிவு மங்காமல் சென்று, அங்க கெய்ண்டர் இருக்குது, பிரிச்சு இருக்குது, மாமியா செத்துப் போச்சு, நாத்தனாளயும் கட்டிக்குடுத்தாச்சு என்று புகுந்த வீட்டுப் பெருமைகளைப் பீற்றிக்கொண்டிருந்தாள்.
பாகவதருக்கோ கெடை கொள்ளவில்லை. மருமகனிடம் பவ்யமாக, “ஏனுங் மாப்ள,… கள்ளு சாப்புடுவீங்ளா? நீங்க தமிழ் நாட்டுக்கார்ரு. பிஸ்க்கி – பிராந்திதா பளக்கமிருக்கும். அது வேணும்னா வேலந்தாவளத்துக்கோ கொளிஞ்சாம்பாறைக்கோ போகோணும்ங் மாப்பள. கள்ளுன்னா இங்கியே இருக்குது. தெக்காலதானுங் கடை” என்றார்.
அவுராக் கேப்பாரா, நம்மளே கேட்டர்லாமா என்று தருகிக்கொண்டிருந்த அவனும், “கள்ளுக் கடைக்கே போலாங் மாமா. விசுக்கி பிராந்தியெல்லாந்தா அங்கயே கெடைக்கும்ங்களாச்சு. எனக்கு நெம்ப நாளாவே கள்ளுக் குடிக்கோணும், கள்ளுக் குடிக்கோணும்னு ஒரு நிதுங் மாமா. கேரளால பொண்ணுப் பாத்ததே அதுக்குத்தான்னு வெச்சுக்குங்ளே” என்று கன்னங்கரேலில் வெள்ளை வெளேரென்று சிரித்தான்.
இருவரும் கிளம்பினார்கள்.
கள்ளுக்கடைச் சூழல் அவனுக்குப் புதுமையாக இருந்தது. தமிழகத்தில் பழக்கப்பட்ட ப்ராந்திக் கடைச் சூழலிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்த அதை வியப்புடன் பார்த்தான். பழைய பீர் பாட்டில்களில் கள் விநியோகம், ஊற்றிக் குடிப்பதற்கு ப்ளாஸ்டிக் மக், அதை அரிப்பதற்கு அரிப்பி. கடைக்குள் பெஞ்ச்சுகளில் தவிர வெளியே மரத்தடி நிழல்களில் குத்த வைத்துக்கொண்டும் கூட ஆண்கள், பெண்கள். அட,… குழந்தைகளும் குடிக்கின்றனவே…!? தன்னை விடவும் கருமையாக, ஆப்பிரிக்கக் கருப்பின நிறத்தில் இருக்கும் அவர்கள், தமிழும் அல்லாமல் மலையாளமும் அல்லாமல் ராகம் பாடுவது மாதிரியாக நீட்டி முழக்கி என்ன மொழி பேசுகிறார்கள்?
மலசர் எனப்படும் மலையகப் பழங்குடி இனத்தவர்கள் அவர்கள் என்று பாகவதர் தெரிவித்தார். அவர்களின் குழந்தைகள்தான் குடித்துக்கொண்டிருந்தன. தமிழ், மலையாளம், கன்னடம், மலையர் மொழி என நான்கு மொழிகள் அங்கே புழங்கிக்கொண்டிருந்தன.
மருமகன் இதுவரை கள்ளே குடித்ததில்லையாம். பாகவதர் இரண்டு ‘கப்பு'(மக்)களில் மட்டில்லாமல் அரித்து ஊற்றிவிட்டு, “பிராந்தி – பிஸ்க்கியாட்ட தண்ணி, சோடா ஒண்ணும் கலக்க வேண்டீதில்லீங் மாப்ள. பீராட்ட அப்புடியே அடிச்சுட வேண்டீதுதான். இங்கல்லாம் முட்ட வெச்சுக்க மாட்டாங்க. ரீசன்டு தெரியாத ஆளுக. நாம வேணும்னா முட்ட வெச்சுக்கலாங் மாப்ள. பாத்து, மொள்ள, தொட்டுக் குடக்கறாப்புடி முட்டுங்கொ. சிந்தீரப்போகுது” என்றபடியே தன் கப்பை எடுத்தார். அவனும் உற்சாகியாகி முட்ட வைத்துக்கொண்டு, “ச்சியர்சுங் மாமா” என்றான். அவருக்கு அந்த வார்த்தை வராததால், “அ – ஆம்ங் மாப்ள, அதேதான்” என்றுவிட்டு ஒற்றை இழுப்பில் கப்பை காலியாக்கி வாய் துடைத்துக்கொண்டார்.
கள்ளின் காட்டமான நெடியும் புளிப்புச் சுவையும் மருமகனுக்குக் குமட்டலை ஏற்படுத்தவே, ஒரு மொறடு குடித்துவிட்டுக் கீழே வைத்துவிட்டான்.
“வெச்சு வெச்சக் குடிச்சா கள்ளுக் குடிக்க முடியாதுங் மாப்ள. கசாயமாட்ட கண்ண மூடீட்டு ஒரே இளுப்புல இளுத்தரோணும். பளக்கமில்லாதவீகளுக்கு கசட்டமாத்தா இருக்கும். சேரி, நீங்க வெச்சு வெச்சே குடீங்கொ. சாக்கணாவக் கடிச்சுக்குங் மாப்ள. நமக்கு அதொண்ணும் வேண்டீதில்ல. ப்பீடி இருந்தா மதி” என்றுவிட்டு நூர்சேட் ஒன்றை முனை கிள்ளிப் பொருத்திக்கொண்டார் பாகவதர்.
கப்பை, கடலை, வேவிச்ச மொட்டு என்று வரிந்து கட்டியவன், கிடைக்கிற சந்து பொந்துகளில் மொறடு மொறடாகக் கள்ளையும் உள்ளே தள்ளலானான். அதன் நெடி பழக்கப்பட்ட பிறகு சுவையும் பிடித்துவிட்டது. நல்லாருக்குதுங் மாமா, நல்லாருக்குதுங் மாமா என்று சிலாகித்தபடியே சிட்டி லிமிட் தாண்டி வில்லேஜ் ஸ்பீடுக்கு வந்துவிட்டான். பாகவதர் மேலும் இரண்டு பாட்டில்கள் வாங்கி வர, அதுவும் காலியானது. மருமகன் மெதுமெதுவே மிதப்புக்கு வந்துகொண்டிருக்கும்போது பாகவதர் நல்ல தரிப்பில் இருந்தார். மனம் ஸ்ருதி பிடித்து, வாய் துறுதுறுக்கத் தொடங்கிய நேரம் பார்த்து, “ஏனுங் மாமா,… நீங்க மப்புப் போட்டா அட்டகாசமாப் பாடுவீங்கன்னு சின்னத்தங்கா
சொன்னாளுங்ளே…! உங்களுக்கு பாகவதர்னுதான் பட்டமாமா?! ஒரு பாகவதர் பாட்டு, பளைய பாட்டா எடுத்துடுங்களேன், கேக்கலாம்” என்றான் மருமகன்.
‘தேவுலியே,… நம்ம மக நம்ம அரும பெருமகளையெல்லாம் மாப்ளகட்ட எடுத்துச் சொல்லியிருக்கறாளாட்ட இருக்குதே…” என்று புளகாங்கிதப்பட்ட பாகவதர், ‘மாப்ளயோட மொரட்டு ஒடம்புக்குள்ளயும் பூவாட்ட ரசிக மனசு இருக்குதாட்டிருக்குதே…’ என்று ஆச்சரியமும்பட்டார்.
“இங்கத்த ஆளுகளுக்குக் கலைஞ்சானமே கெடையாதுங் மாப்ள. கோயல் பஜனைல கூட பாடறதுக்கு உடாம முடுக்கியுட்டர்றாங்கொ. நீங்கதா என்னையப் பாடச் சொல்லிக் கேட்ட மொத ஆளு. அதும் நீங்களே கேட்டுப்போட்டீங்கொ; ஒரு பாட்டென்னுங் மாப்ள,… இன்னைக்கு கானமேள(இன்னிசைக் கச்சேரி)யே நடத்திப் போடலாம். ஏனுங் மாப்ள, உங்குளுக்கு மீஜிக் தெரியுங்ளா? தெரிஞ்சா நீங்க மீஜிக் போடுங்கொ; நாம் பாடறன்” என்றுவிட்டு, “அளோ அளோ – ளோ…! மைக் டெஸ்ட்டிங். அளோ,… அளோ,… ளோ…” என்று எக்கோவுடன் தயாரானார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாட்டில், கப்புகளை எடுத்துக்கொண்டு தூரம் தொலையாக நகர்ந்துவிட்டனர். இன்னும் சிலர் மிச்ச மீதிகளை மொளோச் மொளோச்சென்று வயிற்றுக்குள் ஊற்றி, அவுக் அவுக் என்று வாய்க்குள் திணித்தபடி, “எந்நால் பின்னக் காணாம். எனிக்கு அல்ப்பம் த்ருதியிண்டு” (அப்போ பிறகு பாக்கலாம். எனக்குக் கொஞ்சம் அவசரம் இருக்கு) என்று வேட்டி நுனியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நடையோட்டம் விட்டனர். ராக தேவதை வேலி சாடி, வெள்ளாமைக் காடுகளில் விழுந்தடித்து, குதிகால் பொறத்தால பட மேற்கே ஓடிக்கொண்டிருந்தாள்.
“மன்மத லீஈஈலையை வென்ன்ன்றாாஆஆர்
உண்ண்டோஓஓஓ…?
என் மேல் உனக்கேனோஓஓ
பாராஆஆ முகௌவ்ம்…?”
பாகவதரின் இழுவை அவள் சடையைப் பிடித்து இழுத்தது. திரும்பிப் போய் ‘பொளோச்’சென்று செகுனியில் அப்பி, ‘உம் மொகரைல முளிச்சா எனக்கு சரிகமபதநியே மறந்து போயிரும்’ என்று சொல்லலாமா என யோசித்தாள். முன் வெச்ச காலைப் பின் வெக்கப் பாங்கில்லை என்பதால் காறித் துப்பிவிட்டுப் போய்விட்டாள்.
“அபாரம்ங் மாமோய். அருமெ… அருமெ…!” என்று மெச்சினான் பெஞ்சியில் மீஜிக் போட்டுக்கொண்டிருந்த மாப்பிள்ளை.
“காயாத கானகத்தேதத… ஏஏஏ
காஆயாத காஆனகத்தே…ஏஏஏ
காயாஆஆத காஆஆனகத்தேஏஏ
காாஆஆஆயாயாஆஆ…த
காஆஆ….னகத்தேஏஏஏஏஏஏ…”
மந்தை நாய் குடுகுக்குள் வால் நுழைத்தபடி வேலி முட்டி, உட்டேஞ் சவாரி உட்டேஞ் சவாரி என்று கிழக்கே ஓடி, தன் ஆத்திரத்தை எங்கே காட்டுவது என்று தெரியாமல், பொளி மீதிருந்த கரண்டுக் கம்பத்தில் பின்னங்கால் தூக்கியது.
“கொன்னெடுக்கறீங் மாமா. தியாகராச பாகவதரே தலகளாத் தண்ணிக்குள்ள நின்னு சாதகம் பண்ணுனாலும் உங்களையாட்ட வராது.”
பாடல்கள் கருப்பு வெள்ளையிலிருந்து கேவாக் கலர், ஈஸ்ட்மன் கலர், பிற்காலக் கலர், தற்காலக் கலர் என்று மாறிக்கொண்டிருந்தன. பாகவதரும் அசல் பாகவதர்கள் போலவே பல முக மன்னன் ஜோ ரேஞ்சுக்கு மூஞ்சியை நவ கோணலாக மாற்றி மாற்றி க்ராபிக்ஸ் காட்டிக்கொண்டிருந்தார்.
“மூணு பாட்டல் அடிச்ச மப்பெல்லாம் எறங்கிப் போச்சே…! அம்பத்து நால்ருவா வீணாப் போச்சே…!” குடிமகன் ஒருவன் புலம்பிக்கொண்டிருந்தான்.
“அப்ப நாம பெறப்படலாங் மாப்பள. கோளி ரெடியாயிருக்கும். நீங்க டெடியாத்தான இருக்கறீங்கொ? அன்னாச் சேரி… அடிச்சுடு டப்பிள் விசுலு; போலாம் ரைச்…!” என்று பாகவதர் கிளப்ப, இருவரும் லேசானது முதல் மிதமானது வரையிலான மப்பும் மந்தாரமுமாக நடக்கலாயினர்.
“தேனுங் மாமா,… உங்குளுக்கு மலையாளப் பாட்டு கீது தெரியுமுங்ளா?” என்றான் மருமகன். “தென்னுங் மாப்ள அப்புடிக் கேட்டுப் போட்டீங்கொ?” என்று பாகவதர் தொண்டையைக் கனைத்தார். பிறகு பிளிறினார்.
“கடலினக்கர போணோரே
காணாப் பொன்னினு போணோஓரே
போய் வரும்போள் எந்து கொண்டு வரூஊஊ?
கை நிறைய –
போய் வரும்போள் எந்து கொண்டு வரூஊஊ…?”
மீஜிக் கொட்ட பெஞ்ச் இல்லாததால் மருமகன் கைத்தாளமிட்டான்.
மாமனார் நடு ரோட்டில் துடுப்பு வலித்துத் தோணியோட்டியபடியே பாடினார். பாலக்காடு போய்ச் சேர்ந்துவிட்ட ராகதேவதை, ரத்தம் வழியும் காதுகளை ஈ.என்.ட்டி. ஸ்பெஷலிஸ்ட்டிடம் காட்டிக்கொண்டிருந்தாள்.
பத்து வருசத்துக்கு மிந்தியே சினிமாக் கொட்டாய இளுத்துப் பூட்டீட்டாங்களே,… மறுக்கா தொறந்துட்டாங்களா? ஸ்பீக்கருச் சத்தம் சவ்வக் கிளிக்குதே என்று ஜங்ஷனிலிருந்தவர்கள் எட்டிப் பார்க்கும்போது, பாகவதரும் மருமகனும் உச்சி வெயிலில் நெலாக் காய்ந்தபடி, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து வந்துகொண்டிருந்தனர்.
“கிருச்சினாா நீஈஈ பேஏஏகனேஏஏ
பாஆரோஓஓ…”
க்ருஷ்ணன் கோகுலத்திலிருந்து இளவட்டக் கல்லைத் தூக்கிக்கொண்டு கொலை வெறியோடு ஓடி வந்துகொண்டிருந்தான். தெரு வீடுகளில் படீர் படீர் என்று கதவு ஜன்னல்கள் சாத்தப்பட்டன. கிழக்கு வீதி வடக்குத்தலையில், தொண்ணூறு வயதுப் பாங்கிழம் தன் ஹியரிங் எய்டைக் கீழே எறிந்து மிதித்து உடைத்துக்கொண்டிருந்தது.
மாமனாருக்கு மருமகன் ஆதாரமா, மருமகனுக்கு மாமனார் ஆதாரமா என்று தெரியாதபடி ஒருவரையொருவர் தாங்கிக்கொண்டு வருவதை வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர் குலசம்மாவும் சின்னத்தங்கமும்.
“இந்த மனுசனால மானக்கேட்டுக்கு அத்து அதிரில்ல. மட்டு மருகேதியில்லாம மருமகங்கூடச் சேந்து குடிச்சுப் போட்டு, மட்ட மத்தியானத்துல கச்சேரி கட்டீட்டு வருது பாரு. இந்தக் குடி கெட்ட கூத்த நானு எங்கீன்னு போயிச் சொல்லுட்டும்,… ஏதுன்னு போயிச் சொல்லுட்டும்…? அப்பூமு நானு முடிய முடியச் சொல்றன், ‘அட மனுசா,… அவுரு வாரபோதாச்சு அடங்கி இருங்கோன்னு. அந்தள்ளைல இருக்கீல இந்தள்ளைல முட்டீட்டுப் போயிருச்சு பாரு. போனதுதாம் போச்சு, தனியாப் போயித் தொலைச்சிருக்க வேண்டீதுதானொ. மாப்பளைங் கூட்டீட்டுப் போயி, ஊரே கேளு நாடே கேளுன்னு தொள்ளை தொறந்துட்டு, என்னப் பாரு, என்னளகப் பாருன்னு வரோணுமா இப்புடி நாலு கால்ல…?” குலசம்மா ஆற்றமாட்டாத ஆவலாதியில் கொரகொரவெனக் கொதித்தாள்.
சின்னத்தங்கமோ பொங்கி வழியும் மந்தகாசத்தோடு, “மானக்கேடென்ன புதுசா நம்முளுக்கு? அத உடும்மா. அவிக ரெண்டு பேரும் எப்புடி சோடியாச் சந்தோசமா,… ஆட்டம் பாட்டமா வாறாங்க பாக்குல?! இதுக்குத்தான், நாஞ் சொன்னது இப்ப என்னாச்சு?” என்று தன் முன்புத்தி பலித்ததைப் பற்றிப் பூரித்தாள்.
பாகவதருக்குத் தன்னுடைய பாட்டைக் காது கொடுத்துக் கேட்பதற்கும் ஒரு ரசிகன் இந்த உலகத்தில் இருக்கிறான் என்பது நம்ப முடியாத அசுதீமாகவும் பெருமிதமாகவும் இருந்தது. அதைவிட, இவ்வளவு பாட்டைக் கேட்ட பிறகும் அவனுக்கு ஒரு பாதிப்பும் நேரவில்லையே என்கிற மலைப்பு. ‘அவன் மனுசனே கிடையாது’ என்று எண்ணியவர், ‘அதற்கு ஒரு படி மேல்’ என்பதையும் சேர்த்துக்கொண்டார். இவனுக்குப் பிறகு இன்னொரு ரசிகன் வருவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதிசியப் பிறவிகள் நூற்றாண்டுக்கு ஒரு முறைதான் பிறப்பார்களாம். எனவே, தன்னுடைய முதலும் கடைசியுமான ரசிகனை மனங்குளிர உபசரிக்க வேண்டும், கௌரவப்படுத்த வேண்டும் என்று கருதினார். அதனால் மருமகனுக்கு நானேதான் பரிமாறுவேன் என்று அடம்பிடித்து, மகளையும் இருத்தி, இருவருக்கும் பரிமாறினார்.
“மாப்ள,… கூச்சப்படாம சாப்புடுங் மாப்பள. சோறு கெடக்குது; கறிய மெல்லுங்கொ. மிசின் கோளியல்லங் மாப்ளேய்,… நாட்டுக்கோளியாக்குங்கொ. உரிக்காமத் தோலோட வாட்டி, பொடிப் போடாம, செலவு கிலவெல்லாம் உங்க மாமியா கைனாற அரைச்சு வெச்சது. காரங் கீரமெல்லாம் கரெக்கிட்டா இருக்குதுங்ளா?” என்று வறுவலை இன்னொரு கரண்டி அள்ளிப் போட்டார். விட்டால் அவரே ஊட்டியும் விடுவார் போலிருந்தது.
“நீங்களும் உக்காருங் மாமா. உங்களையுட்டுட்டு சாப்புட்டா எறங்கவே மாட்டீங்குது” என்று அவனும் உருகவே, அவரும் அமர்ந்துகொண்டார்.
கை கழுவித் திண்ணையில் பதியமிட்டதும் வெற்றிலை பாக்கு வந்தது. பாகவதர் வெற்றிலை முறுக்கினார். பழக்கமில்லை என்று மாப்பிள்ளை நிஜாம் பாக்கு மட்டும் எடுத்துக்கொண்டான்.
அவனுக்குப் புகைப்பதற்கான தேட்டம் எழுந்தது. கள்ளுக் கடையில் மாமனாருடன் இருந்ததால் அவர் முன்னிலையில் புகைக்கக்கூடாதென்ற கட்டுப்பாட்டில் இருந்தான். அவரது சங்கீதக் கடலில் குட்டியாக்கரணமடித்துக் குதித்து, முங்கா நீச்சலடித்து உப்புத் தண்ணி குடித்துக்கொண்டிருந்ததால், புகைத் தேட்டமே மறந்தும்விட்டிருந்தது. காப்பி – டீ குடித்தாலும், சாப்பிட்டாலும், உடனே ஒன்று இழுத்தாகணும். அவனிடம் சிகரெட் இருந்தது; தீப்பெட்டி இல்லை. உள்ளே போய் சின்னத்தங்கத்திடம் சன்னக் குரலில் தீப்பெட்டி கேட்டான். எடுப்பதற்காக அவள் அடுக்களைக்குப் போயிருக்கையில் மாமனாரின் அழைப்பு. “இதா வர்றனுங் மாமா” என்றபடியே திண்ணைக்கு வந்தான். அவர் ஏதோ கேட்டு, இவன் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கையில் சின்னத்தங்கம் குறுக்கிட்டுத் தீப்பெட்டியை நீட்டினாள்.
வந்ததே கோபம்; “ஏன்டீ,… மாமனாரு முன்னாடியே மருகேதியில்லாம தீப்ட்டி குடுக்கறயா?” என்று செகுனியில் ‘ரை…’ யின்னு ஒரு அப்பு விட்டான். சின்னத்தங்கத்தின் மண்டைக்குள் நட்சத்ரங்கள் சிதறித் தெறித்தன.
இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “நீங்க கேட்டீங்கன்னுதான குடுத்தன். மாமனாரும் மருமகனுஞ் சேந்து தண்ணியே போட்டுட்டு வந்தீங்களாமா; அவுரு முன்னாடி தீப்புட்டி குடத்தாத்தான் மருகேதி கெட்டுப் போச்சாக்கு?” என்று கேட்டாள்.
“ஏன்டீ,… தண்ணி போடறதும் பொகைப் போடறதும் ஒண்ணா? அப்பன் – மகன், அண்ணன் – தம்பி, மாமன் – மச்சான் சேந்து தண்ணி போடறவீக இருக்கறாங்கொ. சின்னவீக ப்பீடி சிகரெட் ஊதோணும்னா அக்கட்டால மறைஞ்சுதான் ஊதீட்டு வரோணும். அவிக மின்னாடி ஊத முடியுமா…?” என்று ஆண்களின் பழக்கத்தை விவரித்தவன், தீப்பெட்டியை வாங்காமல் பெட்டிக்கடை நோக்கிப் போய்விட்டான்.
தன் கண்ணெதிர்க்கவே மகளைத் தனது ரசிகனான புது மாப்பிள்ளை அப்பிப் போட்டானே என்பது பாகவதருக்கு வருத்தமாகத்தான் இருந்தது. என்றாலும் தனக்கு அவன் கொடுக்கும் மரியாதையை நினைத்துப் பெருமைப்படும்போது அந்த வருத்தம் காணாமல் போய்விட்டது.
சின்னத்தங்கத்துக்குத் தன் கணவன் சொன்ன ஆண்களின் லாஜிக் புரியவே இல்லை. நிலைவாயிலில் நின்று வெறித்துக்கொண்டிருந்த குலசம்மாவிடம், “ஏம்மா,… பொகையூதறது பெருசா, தண்ணியடிக்கறது பெருசாம்மா? எதும்மா பெரிய கெட்ட பளக்கம்? தண்ணியடிக்கறதுதானம்மா?” என்று தன் தரப்புக்கு ஆதரவு தேடும் முனைப்பில் ஈடுபட்டாள்.
“ம்க் – கும்! மொளகு சாத்துல நரகலாமா,… இருத்தாப்புடி ஊத்துன்னாளாமா…!” என்றாள் காரமாக.
– வாரமலர், ஆகஸ்ட் 09, 2009.
புனைப் பெயர்: யசோதன்
கதாசிரியர் குறிப்பு:
வாரமலர் இதழில், ஆங்காங்கே வணிக இதழ் தரப்பின் சிற்சிறு எடிட்டிங்குகளோடு பிரசுரமான இக் கதை, ‘வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது’ என்ற தலைப்பிலான எனது சிறுகதைத் தொகுப்பில் (2016, பழனியப்பா ப்ரதர்ஸ் வெளியீடு) எனது மூலப் பிரதிப்படியே முழுமையாக இடம்பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்றிருப்பது, அந்த மூலப் பிரதியின் செப்பனிடப்பட்ட (2022 ஜனவரி) வடிவம். வாசகர்கள் இதையே இறுதிப் பாடமாகக் கொள்ளவும்.
வாரமலரில் சிறுகதைகள் எழுத நான் பயன்படுத்திய பல்வேறு புனைப்பெயர்கள் மேற்படி தொகுப்பு முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.