வடபழனி முருகன் கோயிலுக்குப் போகிற வழியில் இடதுபுறம் திரும்புகிற குறுக்குத்தெரு திருப்பத்தில் விவேகானந்தர் பழைய புத்தகக் கடை, புத்தக விரும்பிகளுக்குப் பிடித்தமான ஒரு சரணாலயம். எழுத்தாளர் மாடலனை அக்கடையில் அடிக்கடி காண முடியும். அங்குதான் புதையல் எனத்தக்க பல அரிய புத்தகங்களை அவர் வாங்க முடிந்திருக்கிறது. வடுவூரார் எழுதிய மேனகா முதலிய நாவல்கள், வை.மு.கோதைநாயகி அம்மாளின் நாவல்கள், தேவன் முதலில் எழுதிய முழுவதும் டெக்°ட் வடிவிலான, ஓவியர் ராஜு வாராவாரம் வரைந்த ஓரிரு படங்களுடன் கூடிய துப்பறியும் சாம்பு; பிறகு அதே வாரப் பத்திரிகையில் ஓவியர் கோபுலு சித்திரங்களுடன் கூடிய படக் கதையாக வெளிவந்த துப்பறியும் சாம்பு, ஸி.ஐ.டி.சந்துரு, கல்கியின் பொய்மான் கரடு, சாண்டில்யனின் மன்னன் மகள், யவன ராணி சரித்திரத் தொடர்கள், வாண்டுமாமா எழுதிய பலமும் பெரிய உருவமும் கொண்ட வீர விஜயன் என்ற சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான சித்திரத் தொடர்கதை… என்று பல புத்த்கங்களை மாடலன் அங்குதான் ஆசை ஆசையாக வாங்கினார்.
அவருடைய எழுத்துக்களை வெளியிடும் கரும்பூனை பதிப்பகம் விருகம்பாக்கத்தில் இருந்தது. அன்று கரும்பூனை பதிப்பகத்தின் வரவேற்பறையில் மாடலன் ஒருவிதப் பதைப்போடு பதிப்பக உரிமையாளர் கண்ணுச்சாமிக்காகக் காத்திருந்தார்.
முந்தின நாள் மாடலன் மனைவி தில்ரூபா சொல்லி விட்டாள்: “தோ பாருங்க, ஹவுஸ் ஓனர் ரெண்டு மூணு தடவை வந்துட்டுப் போயிட்டார். இன்னும் ஒருவாரத்துல கண்டிப்பா வாடகை தந்துடணுமாம்; இல்லாட்டி வீட்டைக் காலி பண்ணிடுங்கங்கிறார். தீபாவளி வேற வருது. எனக்குக் காஞ்சிபுரம் பட்டு எடுத்துத் தாங்கன்னு கேட்கலை. ஒங்க பையன் அன்புவுக்கும் பொண்ணு அபிநயாவுக்கும் துனிமணி எடுத்துத்தான் ஆகணும். புரிஞ்சுக்கோங்க! ஒங்க பப்ளிஷர் கண்ணுச்சாமி நீங்க எழுதற புஸ்தகத்தை வித்துப் பெரிய பங்களா பங்களாவாக் கட்டிகிட்டே இருக்காரே, ஒங்களுக்குத் தர வேண்டிய ராயல்டி பணத்தைக் கொடுக்கறதுக்கு என்னவாம்? கண்டிசனாக் கேட்டு வாங்கிட்டு வர்ற வழியைப் பாருங்க!”
மாடலனும் கரும்பூனைப் பதிப்பகத்துக்கு நடையாய் நடக்கத்தான் செய்கிறார். போன மாதம் வந்த போது மாடலன் கடைசியாக எழுதிய இரவுச் சூரியன் என்ற நாவலுக்கான ராயல்டியைக் கேட்டார். கண்ணுச்சாமி ரொம்பவும் பணிவாக அவரை வரவேற்று, அவரிடம் இரவுச் சூரியன் நூறு பிரதிகளை பண்டல் கட்டிக் கொடுத்தார்.
“மாடலன் சார், ஒரு புக் ஹண்ட்ரட் ரூபிஸ் விலை வெச்சிருக்கேன். ஹண்ட்ரெட் காப்பிஸ் இதுல இருக்கு. இதுவே பத்தாயிரம் ரூபாய் ஆவுது. நீங்க இதை வித்துப் பணத்தை எடுத்துக்கோங்க. இதோட கைகழுவிடுவேன்னு நினைக்காதீங்க. ஒன் டைம் ராயல்டியா ஒரு ஐயாயிரம் ரூபா அடுத்த மாசம் தந்துடறேன். போயிட்டு வாங்க!” என்று கூறி அவரை வழியனுப்பி வைத்தார்.
இரவுச் சூரியன் 100 பிரதிகளையும் ஆட்டோவில் ஏற்றி, வடபழனி குமரன் காலனி 2 வது தெருவில் அவர் குடியிருந்த வீட்டுக்குக் கொண்டுவர நூறு ரூபாய் தண்டம் அழுது, வீட்டில் தன் அறையில் அழகாய் இரவுச் சூரியன் பிரதிகளை அடுக்கி வைத்தார் மாடலன்.
கடந்த ஆறு மாதங்களாய் இரவு பகல் உழைத்து அவர் எழுதிய நாவல் அது. பதிப்பாளர் அந்த நாவலை 1200 பிரதிகள் அச்சிட்டதாகச் சொன்னார். ஆனால் அது உண்மையாக இருக்காது. கூடுதலாக அச்சிட்டிருப்பார் என்பது மாடலனுக்குத் தெரியும். “இப்பல்லாம் லைப்ரரியில் புஸ்தகங்கள் வாங்கறதை நிறுத்திப் புட்டாங்க எழுத்தாளர் சார். அதனால புஸ்தக விற்பனை புக் ஃபேரை நம்பித்தான் ஓடுது. பேப்பர் விக்கிற விலையில புஸ்தகம் போட்டுக் கட்டுப்படி ஆகுமா சொல்லுங்க!” என்று கண்ணுச்சாமி அடிக்கடி இவரிடம் புலம்புவார். என்ன புலம்பினாலும் சரி, இன்னிக்கு கண்ணுச்சாமியிடம் ராயல்டி தொகையை வாங்காமல் வீட்டுக்குக் கிளம்புவதில்லை என்கிற தீர்மானத்தோடு உட்கார்ந்திருந்தார் மாடலன்.
ரொம்ப நேரம் காக்க வைத்தபின் வீட்டின் மாடியிலிருந்து “ஏவ்..” என்று ஏப்பம்ம் விட்டபடி கண்ணுச்சாமி இறங்கி வந்தார். “அட, எழுத்தாளர் சாரா? எப்ப வந்தீங்க? ஏண்டா பயலே, ஐயா வந்திருக்கார்னு மேல வந்து சொல்லியிருக்கப்படாது… அவரைப் போய் வெயிட் பண்ண வெச்சிட்டீங்களேடா?” என்று போலி உபச்சார வார்த்தைகளுடன் கீழே வந்து புத்த்க விற்பனை அறையில் தன் இருக்கையில் அமர்ந்தார்.
இதற்கெல்லாம்ம் மசிகிற மன நிலையில் மாடலன் இல்லை. கண்டிப்பாகப் பணம் தேவை என்று கூறி, முரண்டு பிடித்து கண்ணுச்சாமியிடம் ரூபாய் ஐயாயிரத்தை வாங்கியபிறகே அங்கிருந்து கிளம்பினார் மாடலன். “அடுத்த புக்கை சீக்கிரம் எழுதித் தாங்கய்யா! என்றபடி விடைகொடுத்தார்” கண்ணுச்சாமி.
செவ்வாய்க் கிரக சுற்றுப்பாதை என்ன, செவ்வாய் கிரகத்தையே தொட்டுவிட்ட மகிழ்ச்சி மாடலனுக்கு. ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் பத்து பாக்கெட்டில் உட்கார்ந்திருக்கும் மகிழ்ச்சி கம்பீரம் கொடுக்க, நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை சகிதம் தன் டிவிஎஸ் 50 வாகனத்தில் ஏறி, மெல்ல வடபழனி நோக்கிக் கிளம்பினார்.
வீட்டுக்குப் போகுமுன் வழக்கமாகப் போகும் விவேகானந்தர் புத்தகக்கடைக்குப் போய் அவருடைய வாகனம் நின்றது.
“வாங்க சார், வாங்க! எழுத்தாளர் லக்ஷ்மி எழுதின மிதிலா விலாஸ், அடுத்த வீடு, பண்ணையார் மகள், அரக்கு மாளிகை நாலு புக்ஸை உங்களுக்காகவே எடுத்து வெச்சிருக்கேன்…” என்று சொல்லி, அவற்றை எடுத்து மாடலனிடம் கடைக்கார மகாலி நீட்டினார்.
பப்ளிஷர் கண்ணுச்சாமி கொடுத்த பணம் இருக்கும் தெம்பில், கன கம்பீரமாக கடைக்காரர் நீட்டிய புத்தகங்களை அலட்சியமாக வாங்கிப் புரட்டினார்.
திடுமென கடையின் வலது பக்க மூலையில் புத்தம் புதிதாக ஓவியர் அரஸ் வரைந்த அட்டையுடன் ஒரு புத்தகம் அவர் கண்ணில் பட்டது. பதற்றத்துடன் அதை எடுத்தார். நெஞ்சு திடும் திடும் என அடித்துக் கொண்டது. அவர் சமீபத்தில் எழுதிய இரவுச் சூரியன் புத்தகம் தான் அது! அடப்பாவி! புத்தம் புதிய புத்தகம். எவனோ வாங்கிப் படித்துவிட்டு கொஞ்சமும் தாமதிக்காமல் எடைக்குப் போட்டு, பழைய புத்த்கக்கடைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. என் புத்தகத்துக்கு இந்த அவல நிலையா? அடக் கொடுமையே!
கடைக்காரர் மகாலி சொன்னார். “புது புஸ்தகம் சார். நூறு ரூபா பொஸ்தகம். நம்மகிட்ட பாதி விலைதான். இந்தப் புஸ்தகம் என்கிட்டே ஏராளமா இருக்கு. வேணும்னா லக்ஷ்மியம்மா புஸ்தகத்தோட இதையும் எடுத்துக்கோ சார்!”
“என்னது, இந்தப் புக் உன்கிட்டே எராளமா இருக்கா?” தொண்டையடைக்கக் கேட்டார் மாடலன். அவர் இரவு பகலாகக் கஷ்டப்பட்டு உழைத்து எழுதிய இரவுச் சூரியன் நாவல் அதற்குள் பழைய புத்த்கக் கடைக்கு வந்து விட்டதை அவரால் தாங்க முடியவில்லை.
“மிஸ்டர் மகாலி, இந்த இரவுச் சூரியன் எத்தனை காப்பி இருக்கோ, அத்தனையையும் என்கிட்டே கொடுத்துடுங்க. நானே வாங்கிக்கறேன்!” என்றார், கரகரத்த குரலில், வேதனையுடன்.
தன் இரு சக்கர வாகனத்தில் பண்டலை ஏற்றிக் கொண்டு, துயரத்துடன் வீட்டுக்குப் போனார்.
“வாங்க வாங்க! அந்த கரும்பூனை கண்ணுச்சாமி ராயல்டி பணம் கொடுத்தாரா? இன்னிக்கு சாயங்காலமே ஹவுஸ் ஓனரை வரச் சொல்லிப் பணத்தைக் கொடுத்துடணும்… சாயங்காலம் கொழந்தைகளுக்குத் தீபாவளிக்குத் துணி எடுத்துப்புடணு,ம்…” என்று கூறியபடி தில்ரூபா அவரை ஆர்வத்துடன் வரவேற்றாள்.
புத்தக பண்டலைத் தூக்கிக் கொண்டுபோய்த் தன் அறையில் வைத்தார் மாடலன். வேதனையுடன் மின்விசிறி ஸ்விட்சை ஆன் செய்துவிட்டுத் திரும்பியபோதுதான் அந்த அறையில் ஒரு மாற்றத்தை அவர் உணர்ந்தார்.
“தில்ரூபா, தில்ரூபா! என்று மனைவியைப் பதற்றத்துடன் கூப்பிட்டார். இங்கே இருந்த புக்ஸ் எல்லாம் எங்கே?”
“அட, அந்தக் குப்பையைக் கேக்கறீங்களா? எல்லாம் பழைய பேப்பர் வாங்கறவன்கிட்டே போட்டுட்டேன். இடமும் காலியாச்சு. கைக்கு இருநூறு ரூபா பணமும் வந்துச்சு. அதை வெச்சுத்தான் அரிசி பருப்பெல்லாம் வாங்கியாந்து சமைச்சு வெச்சேன். வாங்க ஒரு வாய் சாப்பிடுவீங்க!” என்று சர்வ சாதாரணமாகச் சொல்லியபடி பின்புறம் சென்றாள் தில்ரூபா.
“என்னது, என்னது?” விக்கித்துப் போய் நாற்காலியில் விழுந்தார் மாடலன். இந்த அறையில் வைக்கப்பட்டிருந்த அவர் எழுதிய நாவல் இரவுச் சூரியன் நூறு புத்தகங்களையும் அவர் மனைவி பழைய பேப்பர் காரனுக்குப் போட, அது விவேகானந்த பழைய புத்த்கக் கடைக்குப் போய், மீண்டும் அவரால் விலைக்கு வாங்கப்பட்டு அவர் வீட்டுக்கே திரும்பி வந்திருக்கிறது என்கிற உண்மை அவர் மனதில் அதிர்ச்சியை உண்டுபண்ணியது.
இருந்தாலும் ஓர் எழுத்தாளர் என்ற முறையில் அவருக்குக் கிட்டிய விசித்திரமான அனுபவம் அவருக்குச் சிரிப்பையும் வரவழைத்தது.
வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கிய அவரை இவருக்கு என்ன பைத்தியமா? என்பது போல தில்ரூபா வியப்புடன் பார்த்தாள்.
(தினமணி ஞாயிறு வார மலரில் வெளிவந்த கதை.)