பல்லேலக்காபாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 3,946 
 
 

ஆழியாறு மலைச்சாரலில், அறிவுத் திருக்கோவிலுக்கு ஆப்போஸிட் எதுக்க, 5.4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பல்லேலக்காபாளையம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைக் கிராமத்திலிருந்துதான் இலக்கியக் காலாண்டிதழான ‘வெள்ளைக் காக்கா’ வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதன் ஆசிரியன், நவீன கதைஞனும், பெருங்குடி மகனுமான பல்லேலக்கா பாலு.

பல்லேலக்காவின் சிறுகதைகள் மற்றும் நாவல்களை, அவனையும், DTP செய்த நபரையும் தவிர வேறு யாராவது முழுதாக வாசித்திருப்பார்களா என்பது சந்தேகமே. தொல் மொழி, படிம மொழி, புனைவு மொழி, பூடக மொழி என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு, இருபதாயிரம் வருடங்களுக்கு முன்னால் மூதாதைத் தமிழர்கள் லெமூரியாக் கண்டத்தில் பேசிக்கொண்டிருந்த மொழியை, தற்காலத் தமிழ் எழுத்தில் எழுதினால் யார் வாசிக்க முடியும்? ஆனால், மற்ற படைப்பாளிகளுக்கும் இடம் கொடுக்கிற அவனது வெள்ளைக் காக்கா சிற்றிதழை வேண்டுமானால், ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க புரட்டிப் பார்க்கலாம்.

காலாண்டிதழ் என்ற கிரமம் கொண்ட வெள்ளைக் காக்கா, சிற்றிதழ்களுக்கே உரித்தானபடி கெடுவைத் தாண்டி ஐந்து மாத, ஏழு மாத இடைவெளிகளில் வரும். பாகிஸ்தான்காரன் கைக்குச் சிக்கிவிடக் கூடாத ராணுவ ரகசியம் போல, ‘தனிச் சுற்றுக்கு மட்டும்’ என்கிற வாசகம் தாங்கியிருக்கும் அது, முந்நூறு பிரதிகள் அச்சடிக்கப்பட்டு, 37 பேரால் மட்டுமே வாசிக்கப்படுவது. அச்சடித்ததில் பாதியை அவன் வீட்டு அட்டாலிக் கரையான்கள் வாசித்துக் கொண்டிருக்கும். அடுத்த காற்பாதி, இலக்கிய விற்பனையகங்களில் சீந்துவாரின்றிக் கிடக்கும். பங்கு பெறும் படைப்பாளிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கான இலவசப் பிரதிகளில் வாசிக்கப்படுவதுதான் மேற்படி 37 பேர் கணக்கு. எழுத்தாளர்களே வாசகர்களுமாக உள்ள, முந்நூற்றுச் சிலுவானம் பேரே கொண்ட தமிழ் இலக்கிய உலகத்தில், இது பெருந்தொகைதானே! தவிர, பல்லேலக்காவைக் கேட்டால் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலுமாக உள்ள தமிழ் அறிவுஜீவிகள், தான் நீங்கலாக இந்த 37 பேர்தான் என்றும் சொல்வான்.

தமிழ் இலக்கியத்தை செவ்வாய் கிரக ரேஞ்சுக்கு உயர்த்தியாக வேண்டும் என்கிற குண்டுச் சட்டிக் கனவு, மற்ற நவீன இலக்கியவாதிகளைப்

போலவே பல்லேலக்காவுக்கும் உண்டு. இதற்காகவே அட்டாலிக் கரையான்களும் 37 அறிவுஜீவிகளும் வாசிக்கும்படியான வெள்ளைக் காக்காவை, ‘நடா’த்திக்கொண்டிருக்கிறான். இது தவிர காக்காக் கூட்டம் என்ற பெயரில், மாதாந்திரக் கூட்டங்களும், காக்கா மாநாடு என்ற பெயரில் வருடாந்திர விழாவும் இதற்காகவே நடத்தப்படுகின்றன.

இலக்கியத்தில் 7 பேர் சேர்ந்தால் கூட்டம், 25 பேர் சேர்ந்தால் பெருங்கூட்டம் என்று இலக்கியவாதிகளே கிண்டலடிப்பார்கள். பெரும்பாலான இலக்கியக் கூட்டங்களுக்கும் ஆட்கள் வருவது அந்தளவிலேயே இருக்கும். காக்காக் கூட்டங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

மாதாந்திரக் காக்காக் கூட்டங்கள் நடத்தப்படுவது பல்லேலக்காபாளையம் டாஸ்மாக் அல்லது புள்ளாச்சி நகர ஒயின் ஷாப் பார்களிலாக இருக்கும். இவனும், இவனது இணை மற்றும் துணைக் காக்காய்களும், சிங்கிடிக் காக்காய்களான புள்ளாச்சி வட்டார இலக்கியப் பெருங்குடி மக்கள் சிலரும் மட்டுமே கூடுகிற இந்தக் காக்காக் கூட்டத்தின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை ஒருபோதும் தொட்டதில்லை. ஆனால், மத்தியானம் பட்டைச் சாராயத்தோடு கெடா விருந்து, ராத்திரி வெடிய வெடிய அண்ணன்மார் கதை, தெருக் கூத்து, கரகாட்டம் போன்ற நாட்டார் கலைகள் சகிதம் ஒரு பகல் – ஒரு இரவாக நடைபெறும் காக்கா மாநாட்டுக்கு, தமிழகம் முச்சூடிலுமிருந்து அழையா விருந்தாளிகளும் சேர்த்து அறுபது, எழுபது இலக்கியவாதிகள் பறந்தடித்து வருவார்கள். பல்லேலக்காபாளையமும் பாலுவும் இலக்கிய உலகில் பேர் பெற்றதே அப்படித்தான்.

அடங் கொப்பன் தன்னானே! அந்த மாற மாநாடு நடத்தோணும்னா லவுண்டு லவுண்டாக் கள்ண்டு போயிருமே! அவனென்னொ இலக்கி ஈயம் பூசுன அரசியல்வாதியா? இல்லாட்டி அவனுக்கென்னொ இடுப்பச் சுத்தி கிட்னி கீது இருக்குதா, ஒவ்வொண்ணா வித்து செலவு பண்றதுக்கு?’ என, உங்களுக்குள் கேள்விக் குறி நெளிவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பொண்டாட்டி தாலியைப் புடுங்கி வித்தோ, தனது கிட்னியை அடமானம் வைத்தோ இதழ் நடத்துகிற சராசரி இலக்கிவாதியல்ல பல்லேலக்கா. பரம்பரை ஈஸ்வரங் கூட்டம் (கோடீஸ்வரர்கள்). ஆழியாற்றுக் கால்வாய் பாசனத்தில் செழித்த நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும், தென்னை, வாழை, கமுகுத் தோப்புகளுமாக உள்ள ஏழரை ஏக்கர் புஞ்சைக்கு ஏக வாரிசு. தோப்பில் ஒரு கெடு உளுகிற கொப்பரைக் காசுக்கு சமானமாகாது மாநாட்டுச் செலவு. கறி கிலோ ஐநூறு, முட்டை ஒண்ணு ஆயிரம் என விற்கிற ஈமு, எச்சமாகப் போடுகிற காசுதான் இதழ் நடப்புக்கும் மாதாந்திரக் கூட்டங்களுக்கும்.

போன ஜென்மத்தில் மசை நாயாகப் பிறந்து, ஜஞ்சணக்கு சாமியாரை சொல்லப் பாங்கில்லாத இடத்தில் கடித்துக் குதறியதால்தான் இந்த ஜென்மத்தில் இலக்கியவாதியாக ஆகியிருக்கிறான் என்றும், இதனால்

இப்படியான ஊதாரிச் செலவுகள் செய்வானே தவுத்து, வேறு தோஷம் கிடையாதென்றும் காக புஜண்ட நாடி சோசியமே சொல்லியிருக்கிறது.


பல்லேலக்கா பாலுவுக்கு ரெஜினா மனோன்மணியின் கவிதைகள் என்றாலே ஒரு ‘நித்த நிது’.

“அவளோட கவிதைகளப் படிச்சாலே நமக்கு ‘நித்த நிது’ ஆயிப் போயிருதுங் பங்காளி! மொதல் வடிசல் பட்டை ஆப் பாட்டலு அப்புடியே ராவாக் கமுத்துனாப்புடி, சும்மா ஜிவுஜிவுன்னு ஒடம்பே பத்தீட்டு எரியுது போ! சந்தேகமே இல்ல; சாட்சாத் சரோஜாதேவியோட மறு அவதாரமேதான்!” என்று ஒயின் ஷாப் இலக்கியக் கூட்டங்களுக்கு வருகிற துணை, இணை, சிங்கிடிக் காக்காய்களிடமும், அசலூர் இலக்கியக் கூட்டங்களில் அரங்குக்கு வெளியே நின்று விவாதித்துக்கொண்டிருக்கும் வெளிநடப்பு இலக்கியவாதிகளிடமும் சொல்லிச் சிலாகிப்பான்.

பிரசித்தி பெற்ற சமகால, போர்னோ பெண்ணியக் கவிஞிகளில் ட்ரிபிள் எக்ஸ் நட்சத்ரம் ரெஜினா மனோன்மணி. அவளது கவிதைகள் அந்தளவுக்கு ஹார்ட் கோராகத்தான் இருக்கும். அதனால்தானே எழுத வந்த இரண்டே வருடங்களில் சீனியர் போர்னோ பெண்ணியக்காரிகளையும் முறியடித்து உச்சாணிக் கொம்பிலேறி, ஆண் இலக்கியவாதிகளைப் பார்த்துக் கொக்காணி காட்டிக் கொண்டிருக்கிறாள்.

“நாமெல்லாம் இரவது வருசம், நுப்பது வருசம் எளுதி என்ன பிரயோசனம் பல்லேலக்கா? நாமளுந்தான் பொம்பளைகளோட ஸ்பேர் பார்ட்சுகள பச்சை பச்சையா இவளுகளாட்டவே எளுதறம். ஆனாட்டி இவளுகளுக்கு இருக்கற மவுசு நம்முளுக்கு வர மாண்டீங்குதே…!” சீனியர் சகாக்கள் பொறாமையில் பொறத்தாண்டி எரிச்சல் படுவார்கள்.

“செரியாப் போச்சு போ! ஆம்பளைக படிக்கறதுல ஆம்பளைகளே அப்படி எளுதுனா அதுல என்னுங் பங்காளி ஒரு நிது இருக்கும்? பொம்பளைக, அதுவும் இவளாட்ட கலியாணமாகாத வலசப் புள்ளைக, மூஞ்சியும் லச்சணமா, ஒடம்பும் கிண்ணு கிண்ணுன்னு மதாளிச்சுட்டு இருந்து, எளுதறதும் அந்த மாற எளுதுனா,… அது ஒரு ‘நிது’!” என விளக்கமளிப்பான்.

ரெஜினா மனோன்மணியின் கவிதைகள் மீது, பல்லேலக்காவுக்கு இருக்கிற நிந்த நிது, அவள் மீதும் உண்டு. அவளது கவிதைகளை வாசிக்கிற ஆண்கள் எல்லாருக்குமே அந்த நிது வரத்தான் செய்யும்.

கன்னிமை, கற்பு, ஒழுக்கம் போன்ற கெட்ட வார்த்தைகள் ரெஜினாவின் விவிலியத்திலேயே கிடையாது என்பது இலக்கிய உலகம் அறிந்த விஷயம். அவளது அந்தரங்கங்கள் பற்றி அனேக செய்திகள் நம்பத் தகுந்த

வட்டாரங்கள் வாயிலாக உலவிக்கொண்டிருந்தன. அவளது அந்தப்புர லீலைகள் பற்றிய சுவிசேஷங்களை, பல படைப்பாளிகளும் தங்களது கதை, கவிதை, நாவல்களில் எழுதியுமிருக்கிறார்கள். ரெஜினா அது பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், அவளைக் கோபமூட்டுகிறபடி வாலாட்டினால் தக்க பதிலை பேச்சிலோ, எழுத்திலோ அல்ல; செயலில் காட்டிவிடுவாள். அவளுக்கு பலான குறுஞ்செய்தி அனுப்பிய குத்தாட்டப் பாடலாசிரியன் பாரதிநேசனும், எச்சுப் பண்ணாட்டுப் பண்ணிய நாவலாசிரியன் வீரகேசரியும் அவ்வாறு மேடையிலேயே அறைச்சல் பட்டவர்கள்.

இப்படியான அசம்பாவிதங்களுக்கு தானும் ஆட்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கையினாலேயே பல்லேலக்கா தனது தாண்டுகால் ஆசைக்கு தளைகவுறு போட்டிருந்தான். எனினும் எப்படியாவது ரெஜினாவுக்குப் பிடித்தமானவனாக ஆகி, ஒரு முறையேனும் தனது ஆசையை நிறைவேற்றிவிட்டால், ஜஞ்சணக்கு சாமியாரின் பிரசுரிக்கத் தகாத ஸ்பேர் பார்ட்ஸைக் கடித்துக் குதறிய, போன ஜென்மப் பாவத்துக்குப் பரிகாரமாகிவிடும்; இலக்கியவாதியாகப் பிறப்பெடுத்திருக்கிற இந்த ஜென்மமும் சாபல்யமடைந்து விடும் என லட்சியம் கொண்டு, பல வகையிலும் முயற்சித்துக்கொண்டுமிருந்தான்.

வெள்ளைக் காக்கா இதழ் 11 மற்றும் 12&13-ல் அவளது கவிதைகளுக்கு சிறப்புப் பக்கங்கள் ஒதுக்கி வெளியிட்டது இதன் காரணமாகவே. இதழ் 14-ல் அவளது ‘ஜிகாலோக்கள் தேவை’ கவிதைத் தொகுப்புக்கு அவனே ஆறு பக்கம் மாய்ந்து மாய்ந்து மதிப்புரை எழுதியுமிருந்தான்.

‘பெண்களைத் தமது இச்சை தணிக்கும் போக உறுப்புகளாக மட்டுமே பார்க்கிற ஆயிரத்தாண்டு ஆணாதிக்கத்துக்கு எதிராக, ஆண்களைத் தமது தினவு தணிக்கும் எதிர் பால் உறுப்பாக மட்டுமே பார்க்கிறது சமகால தமிழ் பெண்ணியம். பரத்தையர் பாரம்பரியத்தில் ஊறித் திளைத்த ஆணாதிக்க சங்க மரபுக்கெதிராக, காதலன்களையும் கணவன்களையும் கள்ளக் காதலன்களையும் மறுதலித்துவிட்டு, ‘ஜிகாலோ’(gigolo)க்களை, அதாவது ஆண் விபச்சாரர்களைத் தெரிவு செய்கிறார் ரெஜினா மனோன்மணி. இதை இருபத்தோராம் நூற்றாண்டுப் பெண்ணியத்தின் உச்சம் என்றே சொல்லலாம்’ என எழுதியிருந்த அந்த மதிப்புரை மட்டுமே அவனுடைய எழுத்தில் புரியக்கூடிய ஒன்றாக இருந்தது என்று ரெஜினாவே அழைத்துப் பேசினாள்.

அந்த இரவுப் பேச்சின் குழறலில் அவள் கன மப்பில் இருப்பது தெரிய வந்தது. இவனும் அப்போது மப்பும் மந்தாரமுமாகவே இருந்தான். எனவே அதன் தைரியத்தில், மற்றவர்களிடம் சொல்கிறபடியே அவளது கவிதைகள் தன்னைக் கிளர்த்தும் அனுபவங்கள் பற்றி, பட்டைச் சாராய – சரோஜாதேவி ஒப்பிடல்களோடு குறிப்பிட்டான்.

உடனே அவள், “பட்டைச் சாராயம் அவ்வளவு ஹார்ட் கோரா பண்ணை? அப்படீன்னா அதை நான் அடிச்சுப் பாக்கணுமே! ஒரு ஆஃப் பாட்டில் கெடைக்குமா?” என்று கேட்டாள்.

“ஆப் பாட்டலென்னுங் ஆப் பாட்டல்? உன்னீம் மூணு மாசத்துல காக்கா மாநாடு வாறக்கு இருக்குதுங். அதுல நீங்க நிந்த நிதா – அதுதானுங் ப்பெசல் கெஸ்ட்டாக் கலந்துட்டீங்னா, உங்களைய வடிசல்லயே குளிப்பாட்டிப் போடலாங்” என்றான்.

“ஓ.கே., டன்!” என்றவள், “மாநாட்டுக்கு நான் மட்டும் வந்தா அவ்வளவு நல்லா இருக்காதே! இந்திராணி, தில்ஷாத் மாதிரி மத்த ஃபெமினிஸ்ட்டுகளையும் கூப்பிடுங்க. பெண்ணிய அமர்வு கூட வெச்சுக்கலாம்” என்று யோசனைகளும் நல்கவே, அவனுக்கு குஷி கிளம்பிவிட்டது. “கும்படப் போன குப்பியண்ணன் குறக்கால வந்ததும்மில்லாம, கைலிருக்கற சாராய பாட்டலையும் கஞ்சா சுருட்டையும் வரமாக் குடத்தாப்புடி இருக்குதுங்” என்று குதியாளம் போட்டான்.


அமைதிச் சோலையாகத் திகழும் பல்லேலக்காபாளையம் சற்று பரபரப்புக்குள்ளாவதே காக்கா மாநாடுகளின்போதுதான். அதிலும் இந்த மாநாடு, முன் எப்போதும் இருந்திராதபடி ப்பெசல் ஐட்டங்களோடு களை கட்டியிருந்தது. ஊர் மையமான பேருந்து நிறுத்த முச்சந்தியில் பேனர்கள், ஐந்தாவது காக்கா மாநாட்டுக்கு வருகை தரும் இலக்கியப் பெருந்தகைகளுக்கு வருக வருக போட்டன. பெண்ணியப் பேரொளி பட்டத்தோடு 8′x4′ ப்ளக்ஸில் ட்ரிபிள் எக்ஸ் கவிஞி ரெஜினா மனோண்மணி ஜீன்ஸில் நிறைந்து ட்டீ – ஷர்ட்டில் ததும்பிக்கொண்டிருந்தாள். பொக்குனு போயிருவாளுகளே என சீலை கட்டிய இந்திராணிக்கும், பர்தா போட்ட தில்ஷாத் பேகத்துக்கும் சேர்த்து பட்டைக்கடையாக ஒரு 6’x3 ‘ ஃப்ளக்ஸ். டபுள் எக்ஸ் கவிஞிகளான அவள்களுக்கு கெவுருதிப் பட்டமளிப்பும் கிடையாது.

கடைசி நேர அவுதியில் மேற்படி பேனர் கட்டுதல், ஃப்ளக்ஸ் போர்டு நாட்டுதல்களை பல்லேலக்காவும் மூன்று சிங்கிடிக் காக்காய்களும் மேற்பார்வையிட்டுக்கொண்டிருக்க, “என்னுங் கவுண்ரே,… இந்த வாட்டி இலக்கிய நோம்பி பெலமாட்டிருக்குதுங்!? பேனரு, கட்டவுட்டெல்லாம் வெச்சுக் கலக்கீட்டிருக்கறீங்கொ?! தாருங் இந்த சீன்சு அம்முணி; நடிகீங்ளா? நமீதாளாட்ட ‘கும்”முனு இருக்குது?!” என்று சுற்றுப்புறநர்களும் வெட்டி ஆப்பீசர்களும் குசலம் விசாரிப்புக்கு வந்துவிட்டனர். வடிசல் எத்தனை லிட்டர், கெடாய் எவ்வளவு என்று கூப்பிடாத பந்திக்கு கூட்டு பொரியல் எண்ணிய குடிகாரக் குப்பனுகள், “தேனுங் கவண்ரே,… விசுவேசமெல்லாம் முடிஞ்சவிட்டுன்னாலும் அடி வடிசலாச்சு அரைக் கெளாஸ் – காக் கெளாஸ்

கெடைக்கும்ங்ளா,… நெல்லுக்குப் பாயறது பில்லுக்கும் பாயறாப்புடி” என்று அச்சாரமும் போட்டனர்.

நேற்றிரவே புள்ளாச்சி வந்து சேர்ந்து சக்தி லாட்ஜில் தங்க வைக்கப்பட்டிருந்த கருத்தரங்க அமர்வாளர்களான இலக்கியப் பெருந்தகைகளையும், சிறப்புக் கருத்தரங்கிகளான பெண்ணியப் பேரொளி மற்றும் பேகம் அன்ட் கோ’வையும் அழைத்து வருவதற்காக இணைக் காக்கா சோழீஸ்வரனும், உதவிக் காக்கா லெனின் பாலாஜியும் பல்லேலக்காவின் காரை எடுத்துக்கொண்டு சென்றிருந்தனர். போர்னோக்காரிகளுக்கு மட்டுமே கார். ஆண் அமர்வாளர்களுக்கு அங்கிருந்தே வாடகை ஜிப்ஸி பிடித்துக்கொள்ள வேண்டியது.

தமிழகத்தின் திக்கெட்டிலுமிருந்து ராப் பயணம் முடிந்து வந்த இலக்கிய விடியா மூஞ்சிகள், புள்ளாச்சியிலிருந்து நகரப் பேருந்தோ சிற்றுந்தோ பிடித்து கூட்டம் கூட்டமாக முச்சந்தியில் இறங்கிக்கொண்டிருந்தன. ‘விவசாயத்துக்கு மட்டும்’ என எழுதிய டெம்ப்போ அந்த இலக்கிய லக்கேஜ்களை ஏற்றிக்கொண்டு, மாநாடு நடக்கும் இடமான பல்லேலக்காவின் தோட்டத்திற்குச் செல்வதும், இறக்கிவிட்டு வருவதுமாக இருந்தது. எட்டு மணி முதல் அரை மணி, முக்கால் மணி இடைவெளிகளில் அசலூர் விடியாமூஞ்சிகள் மம்மானியமாக வந்து இறங்கிக்கொண்டேயிருக்க, டெம்ப்போ நாலைந்து ட்ரிப் அடிக்க வேண்டியதாயிற்று.

“ஏன் ராசு,… ரெஜினா வாறதுனால இந்த வாட்டி கூட்டம் டப்புள் மடங்கு வரும்னு கணக்குப் பண்ணியிருந்தம்… உப்பப் பாத்தா முட்பிள் மடங்கே ஆயிருமாட்ட இருக்குது!? உரிச்சுட்டிருக்கற கெடாய்க பத்தாது. உன்னீமு ரெண்டு கெடாய்க்குச் சொல்லீரு. அதுக்குத் தகுந்தாப்புடி எஸ்ட்டாப் பாசுமதிச் சாக்க அண்ணாச்சி கடைலருந்து எடுத்து டிம்போலயே போட்டுட்டுரு. பிரியாணி சாமானம், ப்ளாஸ்டிக் கெளாசு, எஸ்ட்டா ஏனம் எது வேணுமோ அதெல்லாம் அங்கயே வாங்கிக்கொ. கொளந்தானக் கூப்புட்டு எலை எஸ்ட்டா அறுக்கச் சொல்லீரு” என உத்தரவு போட்டுக்கொண்டிருக்கையில் அலைபேசி ஒலித்தது.

அடுத்தடுத்து அழைப்புகள். தாமதமாக வந்துகொண்டிருக்கும் அசலூர்க்காரர்கள் சிலர், ரெஜினா மாநாட்டுப் பந்தலுக்கு வந்து சேர்ந்தாயிற்றா, மாநாடு சரியாக எத்தனை மணிக்கு என்று புள்ளாச்சியிலிருந்து ஒருத்தர், மாநாட்டுப் பந்தலிலிருந்து மேற்பார்வைக் காக்காய்களின் அதென்ன பண்றது, இதென்ன பண்றது கேள்விகள்.

அதற்குள், “காரு வந்துருச்சு,… காரு வந்துருச்சு…” என இங்குள்ள சிங்கிடிக் காக்காய்கள் றெக்கையடித்தன. பல்லேலக்கா இன்னும் இங்கே நிற்பதைப் பார்த்து சோழீஸ்வரன் காரை நிறுத்த, பின்னால் வந்த ஜிப்ஸியும் நின்றது. சிங்கிடிக் காக்காய்கள் புடை சூழ பல்லேலக்கா சிறப்பு விருந்தினர்களை வரவேற்க விரைந்தான்.

காரின் முன்னிருக்கையிலிருந்து ரெஜினா மனோண்மணி இறங்கியதுமே சுற்றுபுறச் சூழலில் தட்ப வெப்ப நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. முகத்தில் பாதி மறைக்கிறபடி குளிர்க் கண்ணாடி அணிந்திருந்தாள். ஆனால், இடுப்பெலும்பின் உட்சரிவுக் கோணம் தெரிகிற அளவுக்கு வெகு கீழே இறங்கியிருக்கும்படியான, DLJ எனப்படும் (Dangerly low Jeans) அபாயத் தாழ்ச்சி ஜீன்ஸ். தொப்புளுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும்படியான, இறுக்கிப் பிடித்த ஸ்லீவ்லெஸ் ட்டீ – ஷர்ட். தொப்புளுக்கு இடது பக்கம் தேளோ, நட்டுவாக்காலியோ ஸ்டாச்சூ.

தாங்குமா பல்லேலக்காபாளையம்?

“ரெஜினா, அவ கவிதையாட்டவேதான் இருக்கறா பங்காளி! ஆப் பாட்டலல்லொ; வடிசல் பானையவே ப்புல்லாக் கமுத்துனாப்புடி, வெந்தே போச்சு போ!” என்ற சிங்கிடிக் காக்காய்கள், இவனுக்கு முன்பே பறந்தடித்துப் பாய்ந்து அவளைச் சூழ்ந்துகொண்டன. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பக்கத்தில் சென்று தரிசித்துவிடுகிற ஆவல்; எங்கெங்கேயோ தொட வேண்டும் என்றிருக்கிற கொதிப்பைத் தணித்து, கையையாவது தொட்டுவிடுகிற ஆறுதலுக்காக கை குலுக்குதல்கள்; ஒரு வார்த்தையாவது பேசிவிட வேண்டும் என்பதற்காக, உங்களோட அந்தக் கவிதை சூப்பர், இந்தக் கவிதை டாப்பு என்கிற பாராட்டுதல்கள்…

சக்கர வியூகத்தை உடைத்துக்கொண்டு பல்லேலக்கா பாலு உட்பிரவேசித்தபோது இந்திராணியும் தில்ஷாத் பேகமும் இறங்கியிருந்தனர். இந்திராணி உள்ளாடைகள் ஊடுருவித் தெரியும்படியான சுடிதாரை மாட்டியிருந்தாள். அப்படியிருந்தும் அவளது கருத்த நிறத்துக்கும், அழகற்ற முகத்துக்கும் அது ‘பெப்பரப்பே’ எனப் பல்லிளித்தது. பொறத்தால குச்சீல கட்டித் தூக்கி சோளக் காட்டுல நிறுத்தலாம். துப்பட்டாவைத் தலைக்கு முக்காடிட்டிருந்த தில்ஷாத் பேகத்தின் முகம், எப்பவும் போல ஆப்கானிஸ்தான் அகதியாட்டமே இருந்தது.

நேற்றிரவே ரயில் நிலைய வரவேற்புக்கு இணைக் காக்கா, உதவிக் காக்கா சகிதம் சென்று சந்தித்திருந்ததால் இப்போது அறிமுகப் படலம் வேண்டியிருக்கவில்லை. மருகேதி நிமித்தமான “வாங் – வாங்!” கும்பிடுவை மட்டும் எல்லோருக்கும் போட்டு முடித்தான். சிங்கிடிக் காக்காய்கள் ரெஜினாவைக் கொத்தித் தின்றுவிடும் போல் மொய்த்துக்கொண்டிருந்தன.

உள்ளாடைக் கவர்ச்சி காட்டிக்கொண்டிருந்த இந்திராணியை ஒரு காக்கா கூடக் கண்டுகொள்ளவில்லை. அந்தக் கடுப்பில் அவள் சுற்றுமுற்றை பராக்குப் பார்க்க, ரெஜினாவுக்கு மட்டும் நின்ன மானிக்கு தனி ஃப்ளக்ஸ்; தங்கள் இருவருக்கும் சேர்த்து பட்டக்கடையாக, அளவிலும் சிறியதாக என்கிற விஷயமும் எரிச்சல் கூட்டுவது தெரிந்தது. முழங்கையில் இடித்து பேகத்திடம் சாடை காட்டவும் செய்தாள். பேகத்தின் ஆப்கன் முகத்தில் இந்தச் சோகமும் சேர்ந்துகொண்டது.

இடது கையால் குளிர்க் கண்ணாடியைத் தலையில் ஏற்றிக்கொண்டு, ரெஜினாவும் தனது ஃப்ளக்ஸை ஏறிட்டாள். அவள்களுடையதையும் அள்ளக் கண்ணில் நோட்டமிட்டு, தனது அந்தஸ்து நிலைநாட்டப்பட்டதின் பெருமிதத்தோடு கண்ணாடியை இறக்கிக்கொண்டாள்.

கூடியிருந்த வெட்டி, திண்ணை தேய்ப்பு, வழிப்போக்கு, வேலை மெனக்கெடுப்புக் கூட்டமும் இவர்களைச் சூழ்ந்துகொண்டது. ரெஜினாவைப் பார்த்து இன்னும் சில ஆண்களும், பெண்களும், சிறார்களும் கூட தத்தமது காரியங்களை விட்டுவிட்டு வந்தனர். “பத்து வருசத்துக்கு மிந்தி நாம ஓம் ப்ரகாஷ் தேட்டர்ல காலைக் காட்சி பாத்தாப்புடியே இருக்குதுறா.” நடுத்தர வயதினன் ஒருவன் சொல்ல, “அ – ஆண்டா! சாடை கூட சக்கீலா படத்து செக்கண்ட் கதாநாயகி ரேஷ்மாவாட்டவே இருக்குதல்லொ!? ஒடம்பும் பாரு அப்புடியே அவளாட்டமே கிண்ணு கிண்ணுனு மதாளிச்சுட்டு!” என்றான் உடனிருந்தவன். அவிழ்ந்து விழுமா, விழாதா என்ற அவளது அபாய விளிம்பு பேன்ட் பற்றிய ஆண்களின் விவாதங்கள் ப்ரார்த்தனைகளாக மாறின. “தென்ன இந்தம்முணி, அவுந்துளுறாப்புடி லூசுப் பேன்ட்டு போட்டுட்டிருக்குது,… ஆம்பளைக சொள்ளுத்தீட்டுப் பாக்கறது கூடத் தெரியாம!? ஏனம்முணி,… ப்பேன்ட்ட மேல தூக்கி பெல்ட்ட இறுக்கிக் கட்டு.” பெண்மணி ஒருத்தி அக்கறைப்பட, “விளுந்தா விளுகுட்டும்னுதாங்க அப்புடிப் போட்டிருக்கறா” என்று இந்திராணி ஃப்ளக்ஸ் காம்ப்ளக்ஸைத் தீர்த்துக்கொண்டாள். ரெஜினாவும் சிரித்தாள். “அவ சட்டி – பாடி தெரியறாப்புடி சுடிதாரு போட்டிருக்கறா; இவ அவுந்துளுகறக்கு பேண்டு போட்டிருக்கறா. இதுக செரியான டில்லி முள்ளு ஆட்டக்காரீகளாட்ட இருக்குது” என்றபடி பெண்கள் போய்விட்டனர்.

வழிப்போக்கில் இருந்த இவனது மாமா ஒருவரும் பைக்கை நிறுத்தி, “ஏம் மாப்ள,… வருசா வருசம் உங்க எளுத்தாளருக கூட்டத்து நோம்பிக்கு ராத்திரி அண்ணம்மாரு கதை, பாரதக் கூத்துன்னு நடத்துவீங்கொ. இந்த வாட்டி என்னொ ரிக்காட் டேன்சுங்ளா, டில்லி முள்ளு ஆட்டம்ங்ளா? ரேட்டு எப்புடீங்?” என்றபடி ரெஜினாவின் இடுப்பு வட்டாரத்தில் தன் பொலி காளைப் பார்வையை மேய விட்டார்.

“அய்யய்யோ,… அப்புடியில்லீங் மாமா! இவுங்களும் எளுத்தாளருக கூட்டந்தானுங். கவிதை எளுதறவீக” என்பதற்குள் ரெஜினா இவர்கள் பக்கம் வந்து நின்று, “டில்லி முள் ஆட்டம்னா என்னங்க பண்ணை? அந்த லேடீஸும்

சொன்னாங்க; இவரும் அதையே கேக்கறாரு!?” என்று ஆர்வத்தோடு வினவினாள்.

“சேம் சேம் பப்பி சேம் ஆட்டம்ங்க. ஊருக்கு ஒதுக்கமா காட்டுக்காள ஐநூறு, ஆயிரம்னு டிக்கிட்டுப் போட்டு நடக்கும். இங்கல்லாம் டவுன்ல, சிட்டீல மாற இல்லீங்ளே! ஆடியன்சுக பாஞ்சு பண்ணையம் பாத்துருவாங்க. அதுக்கொசரம் சுத்தீலயும் டில்லி முள்ளுப் போட்டு, உருட்டுக் கட்டையோட அடியாளுகளக் காவலுக்கும் நிறுத்தியிருப்பாங்” என விளக்கியவன், “உன்னீமு இங்க நின்னுட்டு நின்னா நம்ம பண்ணையம் கடவு முட்டிரும். ஏறுங் கார்ல” என்று முன் கதவை விரியத் திறந்தான்.


பச்சை மலைத் தொடர் பின்புலத்தில் கொக்கு பூத்த வயல்களும், பூவெடுத்த கரும்புத் தோட்டங்களும் பின்னோக்கி ஓட, கமுகு – வாழை – தென்னந் தோப்புகளில் டார்வின் சித்தாந்தங்கள் தாவிக்கொண்டிருந்தன. “இதெல்லாம் நம்ம தோட்டந்தானுங். கௌக்குத் தலைலிருந்து மேக்குத் தலை முட்டும், வடக்குத் தலைலிருந்து தெக்குத் தலை முட்டும் ஏள்ரை ஏக்கரா இருக்குதுங். ஏக்கரா இருவது லச்சத்துக்குப் போகுங்” என சொத்துக் கணக்கை ஒப்பித்துக்கொண்டிருந்தான் பல்லேலக்கா. சோழீஸ்வரனைத் தனது பைக்கில் வரும்படி பணித்துவிட்டு ஓட்டுநர் இருக்கையை அவன் கைப்பற்றியிருக்க, முன் இருக்கையில் வீற்றிருந்த ரெஜினா, வாவ், ஃபென்ட்டாஸ்ட்டிக், எக்ஸலென்ட் என சூப்பர்லெட்டிவ் டிகிரியில் வியந்தபடி அந்த இயற்கை அழகுகளை ஹேண்டிகேமில் பதிவாக்கிக்கொண்டிருந்தாள்.

சிதிலமடைந்த அப்பாறு காலத்துக் களத்து வீட்டின் பரந்த காரை வாசலை அடைத்தபடி தென்னோலையால் மாநாட்டுப் பந்தல் போடப்பட்டிருந்தது. மாவிலை, பனங்குருத்துத் தோரணங்கள், நுழைவாயிலில் குலைத்த வாழை சகிதம் விழாக் கோலம் பூண்டிருந்த அங்கும் முச்சந்தியில் போலவே பேனர்கள், ஃப்ளக்ஸ்கள். மாட்டுத் தொழுவத்திற்கப்பால் புளிய மரவாதில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு கிடா முண்டங்கள் தோலுரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

வந்திருந்த கூட்டம் பந்தலுக்குள் கெடை கொள்ளாமல் மாமரத்தடி, பலா மரத்தடிகளிலும், தோப்பு நிழல்களிலுமாகத் தஞ்சமடைந்திருந்தது. நகரவாசிகள் சிலர் மோட்டார் நீரில் ஆசை தீரக் குளித்துக்கொண்டிருக்க, மற்ற சிலர் தோட்டத்தைக் கள ஆய்வு செய்வதில் ஈடுபட்டிருந்தனர். பொறத்தால கையைக் கட்டியபடி பொளியில் நின்று களை பிடுங்கும் பெண்களை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்த காட்டுப் பண்ணாடியிடமும் ஓரிரு ஜோல்னாப் பையர்கள் ஏதோ நேர்காணல் நிகழ்த்திக்கொண்டிருப்பது தெரிந்தது.

பைக்குகள் பின்தொடர காரும் ஜிப்ஸியும் வந்து களத்து வளாகத்தில் நின்றதுமே நாலா புறமும் சிதறியிருந்த கூட்டம் பந்தலை நோக்கிக் குழுமலாயிற்று.

சீன்ஸ் அம்முணி, சுடிதார் சுந்தரி, முக்காடு பேகம் ஆகிய முப்பெரும் தேவியர் இறங்கிச் சென்றதுமே, அங்கிருந்த சிங்கிடிக் காக்காய்கள் அவரவர் பொறுப்புகளை உதறியெறிந்துவிட்டு, நாற்காலி விரிப்பு, இளநீர் விநியோகம், மாநாட்டு மலர் வழங்கல் என தேவியர் சேவையில் புண்ணியம் தேடிக்கொண்டனர். இளநீரை ஸ்ட்ராவில் உறிஞ்சிச் சுவைத்த பேகம், மாநாட்டு மலரை ஹராம் என ஒதுக்கிவிட்டாள். நாகர்கோவில் எலிமென்ட்ரி கவிஞன் குறுநகை கிருஷ்ணவேணி சுய அறிமுகத்துடன் குறுநகை பிரதிகளை மூவருக்கும் வழங்கிவிட்டு இதழுக்கு படைப்புகள் அனுப்புமாறு கோரிக்கை விடுக்க, “சிறுவர் மலர்லல்லாம் நாங்க எப்படிப்பா எழுதறது?” என்று கேட்டாள் இந்திராணி. “பொம்பளைப் பேரு வெச்சிருக்கறீங்களே,… நீங்க அரவாணியா? ஆப்பரேஷன் பண்ணீட்டீங்களா?” என்று கேட்டுக் கடுப்படித்த ரெஜினா, சிகரெட் எடுத்துக் கொளுத்திக்கொண்டு உல்லாசமாக கால் மேல் கால் போட்டு ஆட்டியபடி, வாயிலும் மூக்கிலும் ஜோராகப் புகைவிட்டாள்.


பத்து மணிக்குத் துவக்கம் என்று அழைப்பிதழில் போடப்பட்டிருந்த மாநாடு, பத்தே முக்காலுக்கு சோழீஸ்வரனின் வரவேற்புரையோடு ஆரம்பமாயிற்று. ஆண் கருத்தரங்கிகளின் முதல் அமர்வுக்கான கொங்குநாட்டானின் தலைமையுரையின்போதே அரங்கின் பின் பகுதியில் இருந்தவர்கள் வெளிநடப்பைத் துவக்கிவிட்டார்கள். முதல் கருத்தரங்கி அம்பேத்கர் அடிமை மைக்கைப் பிடித்தபோது மத்தியப் பகுதியும் புலம் பெயர்ந்துவிட்டது. அப்படியிருந்தும் அயராமல், ஆளுக்குக் கால் மணி நேரம் என்ற வரையறையை மீறி, ஆவேசம் பொங்க 35 நிமிடங்கள் வறுத்தெடுத்தார் திரு. அடிமையவர்கள். லோக்கல் கூட்டம்தானே என்று சாவகாசமாகப் புறப்பட்டு இரு சக்கர வாகனங்களில் வந்த புள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார இலக்கியவாதிகள், பந்தலுக்கு மேல் கட்டியிருந்த ஒலிபெருக்கிகளில் புகையைப் பார்த்ததுமே உள்ளே வராமல் வெளிநடப்பான்களிடமே நின்றுகொண்டனர். முன் வரிசைகளிலிருந்து கபாலம் கரிந்தவர்களும் தப்பியோடப் பார்க்கையில் பல்லேலக்கா குறுக்கு சால் ஓட்டி, அடுத்து வரும் கருத்தரங்கிகளை சுருக்கமாகப் பேசி முடிக்கும்படி கேட்டுக்கொண்டான். அந் நேரத்தில் சமையல் கூடத்திற்குச் சென்று நிலவரங்களைப் பார்வையிட்டுவிட்டும் வந்தான்.

பனிரெண்டு மணிக்குத் தேநீர் இடைவேளை.

பிறகு இரண்டாம் அமர்வாக நட்சத்ரப் போர்னோப் பெண்ணியக் கவிஞிகளின் சிறப்புக் கருத்தரங்கம். அப்போது மாமரத்தடி, பலா மரத்தடி மற்றும் தோப்பு நிழல்களில் இளைப்பாறியபடி இலக்கிய விவாதங்களிலும், போர்னோ நட்சத்ரங்களின் அந்தரங்கம் பற்றிய முனைவர் பட்ட ஆய்விலும் ஈடுபட்டிருந்த வெளிநடப்புவாதிகள் மற்றும் உள் நுழையாவாதிகள் ஒருவர் பாக்கியில்லாமல் பந்தலுக்குள் வந்துவிட்டனர்.

காரோட்டப் பழக்கியிருக்கிற வளர்ப்புப் பிராணியான கணவனுடன் மதுரையிலிருந்து தன் காரிலேயே வந்துவிட்ட அர்த்தநாரீஸ்வரிதான் பெண்ணிய அமர்வுக்குத் தலைமை. கவிதைகளும் கதைகளும் எழுதக்கூடிய அவளுக்கு ஒரு பிரி கழன்றிருப்பது அவளது எழுத்தில் தெரியாது; பேச்சிலும் நடவடிக்கைகளிலும் தெரியும். “பெண்ணியவாதிக எல்லாருமே நெம்ப நல்லவய்ங்ய! காக்காக் கூட்டமும் நெம்ப நல்ல கூட்டம்னு சொன்னாய்ங்ய. என்னோட புஜ்ஜிக் குட்டிக்கு பிரியாணி ரொம்பப் புடிக்கும்ங்கறதுனாலதான் நான் இந்த இலக்கியக் கூட்டத்துக்கே வந்தேன்” எனத் தலைமையுரை ஆற்றிவிட்டு அமர்ந்தாள்.

கருத்தரங்கின் முதல் வீச்சு இந்திராணியினுடையது. ரெஜினாவுக்கு சரிசமானமான ஃப்ளக்ஸ் வைக்காத கடுப்பு, அவளைவிட அதிகமாக ஊடுருவல் கவர்ச்சி காட்டியும் ஒருத்தன் கூட தன்னைப் பார்த்து ஜொள்ளு விடாத எரிச்சல் ஆகியவற்றால், ஆண்கள் என்றாலே ஆதிக்கம்தான் என்று விளாசியடித்தாள். அதைக் கேட்டு ஆண்கள் கைதட்டினார்கள். அடுத்து வந்த தில்ஷாத் பேகம் முக்காடை இழுத்து இழுத்து மூடிக்கொண்டு, அண்ணன் அடிச்சுப்போட்டான், ரெண்டாவது புருசனும் தலாக் பண்ணீட்டான், ஜமாத் தள்ளி வெச்சிருச்சு என்று மூக்கைச் சிந்தி, ‘எனது ……..கள் அழுகின்றன; எனது ……. அழுகிறது; எனது ‘நான்’ அழுகிறது’ என்று கவிதையாக ஒப்பாரி வைத்துவிட்டு அமர்ந்தாள். கூட்டம் கை தட்டுவதா, கர்ச்சீப் கொண்டு போய்க் கொடுப்பதா எனப் புரியாமல் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.

இறுதிப் பேச்சாக ட்ரிபிள் எக்ஸ் கவிதாயினி ரெஜினா மனோண்மணி.

“மச்சான்ஸ் அன்ட் மாம்ஸ் ஆஃப் ஆல் காக்காக் கூட்டம்” என்று அவள் துவங்கியதுமே குய் குய் என்று சிங்கிடிக் காக்காய்களின் விஸில் பறந்தது. “ஆணாதிக்கத்தைத்தான் நான் வெறுக்கறேன்; ஆம்பளைகளையல்ல” என்றபோது அரங்கமே ஆர்ப்பரித்தது. “பெண்ணுடல்ல எந்த அளவுக்கு உங்களுக்கு மயக்கமோ, அந்தளவுக்கு ஆண் உடல்ல எனக்குக் கிறக்கம்” என்றபோது கூட்டமே உச்சகட்டப் பரவசத்தில் திளைத்தது. போதாக்குறைக்கு ஆவலுறும் பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த அவளின் அபாயத் தாழ்ச்சி ஜீன்சும், தொப்புளுடன் கண்ணாமூச்சியாடுகிற ஸ்லீவ்லெஸ் ட்டீ – ஷர்ட்டும், பட்டைச் சாராய போதையை இப்போதே ஏற்படுத்தியிருந்தன.

அவள் பேசி முடித்ததுமே கூட்டத்திலிருந்த குறுந்தாடிக்காரனான ஒல்லிப்பிச்சான் ஒருவன் எழுந்து நின்று முஷ்டியை உயர்த்தி, “எங்கள் தலைவி

ரெஜினா மனோண்மணிக்கு” என்று குரல் எழுப்பினான். ஓரஞ்சாரமாக நின்றுகொண்டிருந்த சிங்கிடிக் காக்காய்கள் உற்சாகமாக ‘ஜே!’ போட்டன.

“தன்மானத் தங்கம், பெண்மானச் சிங்கம், தலைவி ரெஜினா மனோண்மணிக்கு – ”

“ஜே…! ஜே…!”

“வருங்கால முதல்வர், செம்மொழிச் செல்வி ரெஜினா மனோண்மணிக்கு – “

“ஜே…! ஜே…!”

கோஷத்தோடு இப்போது விஸிலடிப்பும் காது ஜவ்வைக் கிழித்த்து.

யார் அந்தக் குறுந்தாடி ஒல்லிப்பிச்சான் என்று பல்லேலக்காவும் மற்றவர்களும் உற்றுப் பார்த்தனர். வெள்ளைக் காக்கா வாசகனும், நவீன கவிதைகள் மற்றும் நடுத்தரக் கதைகள் எழுதுகிறவனும், அந்த 37 அறிவுஜீவிகளில் இருபத்தேழாமவனுமான ஷாராஜ்.


கருத்தரங்க அமர்வுகள் முடிந்ததுமே காக்கா மாநாட்டின் அடுத்த அமர்வான பட்டைச் சாராயக் கலை நிகழ்ச்சி. அரங்கமாக இருந்த பந்தல் பகுதியை, அடுத்து வரவிருக்கும் கலை நிகழ்ச்சியான கெடா விருந்துக்குத் தக்கபடி மாற்றி அமைக்க வேண்டியிருந்ததால், ஆலைச் சாளைக்குப் பின் பக்கமுள்ள மாமரங்களடியே சாராய வைபவத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பட்டைச் சாராய மகிமைகள் பற்றி புதியவர்களுக்குத் தெரியாதென்பதால் பல்லேலக்கா ஓர் அறிமுகச் சிற்றுரை ஆற்றினான்.

“பட்டை வடிசல் நம்ம பெண்ணியக் கவிஞிகளோட கவிதைகளாட்ட செம காட்டமா இருக்குமுங் பங்காளி. விஸ்க்கி, பிராந்தியாட்ட லேசுப்பட்ட காரியம்னு நெனைச்சுக்காதீங். பளக்கமில்லாதவீக ராவாக் குடிக்கவே முடியாது. ஒண்ணுக்கு எட்டு, ஒண்ணுக்குப் பத்துங்கற விகிதாச்சாரத்துல தண்ணி கலக்கோணும். காக் கெளாசுல பாதி, அரைக்கா அளவு வடிசல் ஊத்தீட்டு, கெளாசு நெறக்கா தண்ணி ஊத்தீட்டா செரியா இருக்கும். இல்லாட்டி ஒமட்டீரும். ஜின்னு, ஓட்காவாட்டம் இதுலயும் கனி (எலுமிச்சை) ரெண்டு மூணு சொட்டு புளிஞ்சுட்டுட்டா வாசமும் தெரியாது; டேஸ்ட்டும்

நல்லா இருக்கும். மொதல்ல அப்புடிக் குடிச்சுப் பாத்துட்டு, காட்டம் பத்துலீங்கறவுங்க மட்லும் வடிசலச் சேத்தி தண்ணியக் கொறைச்சுக்குங்.”

சிற்றுரை முடிந்ததும் சிங்கிடிக் காக்காய்கள் விநியோகத்தைத் துவக்கின. மேஜை, பெஞ்ச்சுகளில் வரிசையாக ப்ளாஸ்டிக் டம்ளர் சரம், வடிசல் கேன், தண்ணீர் அண்டா, எலுமிச்சைத் துண்டுகள், கமுகு மட்டைத் தட்டம், கிடா வறுவல், தோட்டத்தில் விளைந்த வெள்ளரி – ஹை ப்ரீட் தக்காளி – பல்லாரி நறுக்குகள், உப்பு – மிளகாய்ப் பொடி தூவிய மாங்காய்த் துண்டங்கள் ஆகியவை வைக்கப்பட்டிருக்க, குடிகாரக் குப்பன்கள் பஃபே சிஸ்ட்டத்தில் பட்டை வடிசல் பெற்று, நீர் விளாவி எலுமிச்சை பிழிந்து, கமுகுத் தட்டத்தில் கறி வறுவல், காய்கறிக் கலவை, மாங்காய்த் துண்டங்கள் வாங்கி, ஆங்காங்கே நின்றுகொண்டும், சவுரியமாக அமர்ந்துகொண்டும் ‘ச்சியர்ஸ்’ முட்ட வைத்துக்கொண்டனர்.

வளர்ப்புப் பிராணி பின்தொடர அவர்களுடே புகுந்து பராக்குப் பார்த்துக்கொண்டிருந்த அர்த்தநாரீஸ்வரி, “இங்க வந்திருக்கறவய்ங்க எல்லாருமே நெம்ப நல்லவய்ங்ய” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு, “அய்ய்…! அங்க பாரு கொரங்கு தூறியாடுது!” எனக் குதூகலமாகி, “நான் கொரங்கு பாக்கப் போறேன்” என தனக்குத்தானே அறிவித்துவிட்டு, தூரத்து மரங்களில் தலைகீழாகத் தம் வாலிலேயே தொங்கித் தூறியாடும் டார்வின் சித்தாந்தங்களை நோக்கி நகர்ந்தாள்.

பாடி கார்டாகப் பின்தொடர்ந்துகொண்டிருந்த வளர்ப்புப் பிராணி, “வேண்டாம் மகி! கொரங்கு புடிச்சுட்டுப் போயிரும்” எனப் பூச்சாண்டி காட்டியதில் சற்று பயந்து தருகியவள், “ஏங்…! கிஸ்க்கு நக்குடி கொய்யாப் பளம்; கிண்டு மந்தரம் செவ்வாக் கௌம. நீ சும்மானாச்சிக்குத்தான சொல்ற? நானொண்ணும் பயப்பட மாட்டனே! கொரங்குகல்லாம் நெம்ப நல்லவய்ங்ய” என்றபடி முன்னேறினாள்.

கூட்டத்தார் தத்தமது கடமையில் கண்ணும் கருத்துமாக, கையும் வாயுமாக இருந்ததால் கண்டு களித்திருக்க வேண்டிய இந்த ஓரங்கக் காட்சியைத் தவற விட்டுவிட்டனர். பட்டைச் சாராயம் என்கிற கிடைத்தற்கரிய தேவாம்ருதம் கிடைத்திருக்கும்போது, இந்த ஒரு பிரிக் கேஸை யார் பொருட்படுத்துவார்கள்? ஒரே இழுப்பில் டம்ளரை காலியாக்கி அடுத்த சுற்றுக்குப் போவதும், வெச்சு வெச்சுக் குடிப்பதுமாக கூட்டம் ரசித்து ருசித்துக்கொண்டிருந்தது.

அம்பேத்கர் அடிமைக்குப் பெருத்த சந்தேகம். “ஏன் பல்லேலக்கா,… இது கள்ளச் சாராயம்தானே! இதைக் குடிச்சு 27 பேருக்கு கண் பார்வை போயிருச்சு, 13 பேர் பலின்னெல்லாம் பேப்பர்ல வருதே…” என்று டம்ளரும் கையுமாக தர்க்கம் புரிந்துகொண்டிருந்தார்.

“அது வெசச் சாராயமுங் பங்காளி. பேட்ரைக் கட்டை, பல்லி வாலு, சுண்ணாம்புக் கல்லு, பாம்புப் பல்லு, யூரியான்னு கண்ட

கருமாந்தரத்தையெல்லாம் போட்டு உடனடியாக் காச்சற ஸ்ப்ரிட்டு. அதையக் குடிச்சா கொடலு குண்டாமண்டியெல்லாம் வெந்து, கண்ணும் உசுரும் போறது மட்லுமில்லீங், கல்யாணக் கருவியே லிப்பேரு ஆயிரும். இது அசல் பட்டைச் சரக்குங். சட்டப்படி கள்ளச் சாராயம்னாலும், சாஸ்த்தரப்படி சோம பானம், சுராபானமுங்” என்றவன் அதன் செய்முறையையும் விவரித்தான்.

ஒரு பெரிய மொடாவில் வெள்ளை வேலம் பட்டை, கரும்புச் சர்க்கரை ஆகியவற்றுடன் ஆப்பிள் – ஆரஞ்சு, அன்னாசி – திராட்சை, மா – பலா – வாழை முதற்கொண்டு கள்ளிப் பழம், கழுதைவிட்டாம் பழம் வரை கைக்குக் கிடைக்கிற பழ வகைகள் அனைத்தையும் அவுசேகமாட்டம் பிசைந்து போட்டு, மொடா நிறைய நீரூற்றிக்கொள்ள வேண்டும். பிறகு அதன் வாப்பாடை துணியில் கட்டி மூடி, மண்ணில் குழி தோண்டிப் புதைத்துவிட வேண்டும். வேலம் பட்டையும் பழங்களும் சேர்ந்து நீரில் ஊறி வேதிவினை புரியும். ஊறல் என்பது இதுதான்.

வாரம் பத்து நாக் கிருமிச்சு இந்த ஊறலை எடுத்து வடிசல் காய்ச்சப்படும். வாப்பாட்டுத் துணியை நீக்கிவிட்டு கல் அடுப்பில் ஊறல் மொடாவை வைத்து, அதற்கு மேல் அளவில் சற்று சிறிய காலி மொடா, அதற்கு மேல் இன்னும் சற்று சிறிய பானை, அதற்கு மேல் இன்னும் சிறியது என்று, கரகாட்டக்காரிகள் தலையில் வைத்து சாகசம் பண்ணுவது போல அடுக்கி வைத்து, உச்சிப் பானையை மூடி, அடி மொடாவின் ஊறலைச் சூடேற்றிக்கொண்டேயிருப்பார்கள். ஊறல் கொதித்து நீராவியாகி, மேல் மொடாவைச் சூடேற்றி, அதனுள் நீர்த் திவலைகளாக வடிந்து சேகரமாகும். வடிசல் எனப்படுவது இதுதான். தொடர்ந்து தீ முழக்கிக்கொண்டேயிருப்பதில் இந்த வடிசலும் கொதித்து ஆவியாகி, அடுத்த பானையில் மேல் வடிசல் சேகரமாகும். இப்படியே சென்று சென்று, உச்சிப் பானையில் சேகரமாவதுதான் முதல் வடிசல்.

வடிசல்களிலேயே ஆகச் சிறப்பானது இந்த முதல் வடிசல்தான். அளவில் குறைவாகவும், ஆனால் மிக மிகக் காட்டமாகவும் உள்ள அதை சாராயம் காய்ச்சுபவர்கள் பொதுவாக விற்பதில்லை. தங்களின் சொந்த உபயோகத்துக்கென்றே வைத்துக்கொள்வார்கள். மிகுந்த மருத்துவக் குணமுடைய அது கபம், காசம் போன்ற வியாதிகளுக்கு சாலச் சிறந்தது. ஒரு டம்ளர் முதல் வடிசலில் தண்ணீர் கலக்காமல் மூன்று நாலு சொட்டு எலுமிச்சையை மட்டும் பிழிந்துவிட்டு, மூக்கைப் பொத்தியபடி ஒரே இழுப்பில் கஷாயம் மாதிரி குடித்துவிட்டால் நெஞ்சு சளியை ஆணி வேர், அக்கு வேரோடு பிடுங்கிப் போட்டுவிட்டு கபம், காசமெல்லாம் சிட்டுக் குருவியாட்டம் பறந்தோடிவிடும்.

“ஆனாட்டி அதையக் குடிக்கறது நெம்ப கசட்டமுங் பங்காளி. தாங்க முடியாத ஒடம்பா இருந்தா நத்த வாந்தியே வந்துருமுங். ரெஜினா கவிதையாட்ட டப்புள் ஹாட்டு, முப்பிள் ஹார்டுக்கோரு” என அம்பேத்கர் அடிமையிடம் சொல்லி முடித்தான்.

அதே வேளையில் இவர்களின் பக்கத்திலேயே இணைக்காக்கா சோழீஸ்வரனும், உதவிக்காக்கா லெனின் பாலாஜியும் முப்பெரும் தேவியரை வடிசல் டம்ளரும் தீனித் தட்டங்களுமாக உபசரிக்க, “நான் குடிக்கறதில்ல” என வருத்தம் தெரிவித்து முக்காடை இழுத்துப் போர்த்திக்கொண்டிருந்தாள் தில்ஷாத் பேகம். “நான் பீர் மட்டும்தான்” என இந்திராணியும் ஒதுக்கிவிட்டிருந்தாள். ரெஜினாவிடம் இருவருமே டம்ளர்களை நீட்ட, “எனக்கு இதில்ல,… இப்ப பண்ணை சொன்னாரே,… என்னோட கவிதைகள் எந்த மாதிரி இருக்குதுன்னு கம்ப்பேர் பண்ணி எப்பவும் சொல்லுவாரே,… அந்த மொதல் வடிசல் – அத தர்றதா சொல்லியிருக்காரு. அது வேணும் எனக்கு” என்றாள்.

பல்லேலக்கா கட்டளையிட, களத்து வீட்டின் ஓய்வறையில் அவன் தனியாக எடுத்து வைத்திருந்த முதல் வடிசல் அரை பாட்டில் வந்து சேர்ந்தது. “நெம்ப நிதா இருக்குங் ரெஜி! தண்ணி நெறக்கா சேத்திக்குங்” என்று இவனும் மற்ற காக்காய்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் கேட்கவே இல்லை.

“ராவாக் குடிச்சு, இது என்னோட கவிதையளவுக்கு இருக்குதாங்கறத நான் டெஸ்ட் பண்ணியே ஆகணும்” என்று வீம்பு பிடித்து, எலுமிச்சை கூடப் பிழியாமல் அப்படியே பாட்டில் மூடியைத் திறந்து கடகடவென அண்ணாக்க விட்டடித்தாள்.

ஆண்கள் கூட்டம் அசந்துபோய்விட்டது.

வேறு யாராவதாக இருந்தால் மறு நொடியிலேயே குடல் குண்டாமண்டியெல்லாம் வாய் வழியாக வந்திருக்கும். ஆனால் ரெஜினா அசராமல் நின்று, காலி பாட்டிலை வீசியெறிந்தாள். ஏப்பமோ எதுக்களிப்போ வந்ததை அடக்கிக்கொண்டு, லெனின் பாலாஜி நீட்டிய தட்டிலிருந்து கிடா வறுவல் எலும்புகளை எடுத்து நொறுக்கிவிட்டு, “கிட்னி இல்லையா மச்சான்?” என்று கண் சிவக்கக் கேட்டாள்.


பத்தே நிமிடத்தில் முதல் வடிசல் வீரியம் சீன்சு அம்முணியின் மண்டைக்கேறிவிட்டது. கால்கள் துவள மிதந்தவள், “என் கவிதையளவுக்கு இருக்குதோ இல்லையோ,… மொதல் வடிசல் ஜிவு ஜிவுன்னுதான் இருக்குது பண்ணை” என்றபடி பல்லேலக்காவின் தோளில் கையைப் போட்டு சேர்த்தணைத்துக்கொண்டாள். அந்தத் தொடுகையிலும் சேர்த்தணைப்பிலும் அவனது உடலுமே ஜிவுஜிவுத்தது. தள்ளாடிக்கொண்டிருக்கும் அவள் தடுமாறாதபடிக்கு என்கிற சாக்கில் இடக் கரத்தால் அவளது இடுப்பைச் சுற்றி வளைத்துக்கொண்டான்.

அதற்குள் இரண்டு சுற்று முடித்துவிட்டிருந்த சோழீஸ்வரனுக்கு ஊடுருவல் உள்ளாடைக்காரி கவர்ச்சிக் கன்னியாகத் தெரிந்தாளோ, இல்லை, நமக்கு வாச்சது இவ்வளவுதான் என்று மனசைத் தேற்றிக்கொண்டானோ தெரியவில்லை; “ஏனுங் இந்திராணி,… ரெஜினா பாருங் ஆம்பளைகளே சாமானியமா அடிக்க முடியாத மொதல் வடிசல, ராவா, அதுவும் ஆப் பாட்டல் அப்புடியே அடிச்சப் போட்டுது. நீங்க என்னுமோ அடி வடிசல்ல தண்ணியூத்திக் கூட அடிக்க மாண்டீங்கறீங்கொ. அப்பறம் நீங்கல்லாம் என்ன பெரிய பெண்ணியவாதி?” என்று ஏத்திவிட்டு அழகு பார்த்துக்கொண்டிருந்தான். இதற்கு மேலும் பிலுக்கிக்கொண்டிருந்தால் தனது தன்மானத்துக்குப் பங்கம் வந்து விடுமென்று அவளும் அவன் நீட்டிய டம்ளரை வாங்கி மடக்கென்று கவிழ்த்துக்கொண்டு, கிறக்கமாக நவுண்டைக் கடித்தாள்.

இந்தக் காட்சிகளைக் காவிய சோகத்தோடு பார்த்துக்கொண்டிருந்த முக்காடு பேகத்திடம், “எளநியாச்சு குடீங் தில்லு”, “மந்தரம் ஓதாத்த கறிய அக்கட்டால எடுத்து வெச்சுட்டு, குஸ்க்காவன்னாலும் சாப்புடுங் தில்லு” என்று பரிந்து உபசரித்துக்கொண்டிருந்தான் லெனின் பாலாஜி. போகிற கோப்பைப் பார்த்தால் முக்காடுக்கு மூன்றாவது தலாக்கும் ஆகிவிடும் போலத் தெரிந்தது.

“நானு கொரங்கு தூறியாடறதப் பாத்தனே…! கொரங்கு, குட்டிக்கு பேன் பாக்கறதப் பாத்தனே…!” என்று பெருமிதத்தோடு சொல்லிக்கொண்டே வந்த ஒரு பிரியாள், முப்பெரும் தேவியர்களைப் பார்த்து டெங்சனாகி, “இவிய்ங்கெல்லாம் நெம்ப மோசம். ஆய்ப் புள்ளைங்க. நான் மதுரைக்கே ரிட்டன்” என தனக்குத் தானே அறிவித்துவிட்டு, மாநாட்டுப் பந்தலருகே நிறுத்தியிருக்கும் காரை நோக்கி விடுவிடுவென நடந்தாள். “பந்தி ரெடி. பிரியாணியாச்சும் சாப்ட்டுட்டுப் போயர்லாம் மகி. ப்ளீஸ், ப்ளீஸ்…” எனக் கெஞ்சியபடி வளர்ப்புப் பிராணி மோப்பம் பிடித்துக்கொண்டே பின்னால் குண்டுறு குண்டுறுவென ஓடியது.

“சில்ல்ல்…லென்று பூஊஊ…த்த

சிறுநெருஞ்சிக் காஆஆ…ட்டினிலேஏஏ…

நில்ல்ல்ல்…லென்று கூஊஊ…றி

நிறுத்த்தி வழி போஓ… ஓனாளேஏஏ…”

எங்கிருந்து தேவ கானம் என்று ஆங்காங்கே இருந்தவர்கள் திரும்பித் திரும்பிப் பார்க்க, மா நிழலில் ரசிகர் வட்டத்தினிடையே சம்பிரமமாக சம்மணம் போட்டு, ராக ஆலாபனையைக் காற்றில் வரைந்தபடி, குறுந்தாடி ஒல்லிப் பிச்சான், பதிமலையான் பண்டாரமாட்டம் கள்ளக் குரலெடுத்துக்கொண்டிருந்தான்.

“அவருதானே எனக்கு கோஷம் போட்டவரு? யாரு அவரு?” என விசாரித்த ரெஜினா, பல்லேலக்காவின் தோள் மீது போட்ட கையை

எடுத்துக்கொண்டு, இடுப்பணைத்திருக்கும் அவனது பிடியையும் விலக்கிவிட்டு, பாடல் பகுதியை நோக்கித் தள்ளாடிச் சென்றாள். தொகையறா முடிந்து செந்தமிழ் தேன்மொழியாள் எனப் பல்லவி தொடங்கவும் தானாகவே ஆட்டம் வந்தது. ரசிகர் வட்டத்துக்குள் மையமாக நின்று இடுப்பை வெட்டி, கைகளில் அபிநயம் பிடித்து, பாடலுக்கேற்ற மெல்லசைவுகளோடு நடனமாடலானாள். ரசிகர் கூட்டம் கைத்தாளமும் போட, சூழ்ந்திருந்த கூட்டமும் சுற்றிக் குழுமலாயிற்று. கள்ளக் குரல் பாடகன் சுதியைக் கூட்டி, பல்லவி வரிகளுக்குத் திரும்ப வரும்போது,

“ரெஜினா மனோண்மணியாள்

நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்”

– என்று பாட, கூட்டம் போதை கொண்டு கூத்தாடியது. அவளும் பூரித்து, ஒரு பறக்கும் முத்தத்தைப் பாடகனுக்குப் பரிசாக நல்கினாள்.

பல்லேலக்காவுக்கு அந்தக் கள்ளக் குரலானின் கொரவளியைக் கடிச்சுத் துப்ப வேண்டும் என்று வெறி வந்தது. “ஊத்துடா பங்காளி” என்று டம்ளரை நீட்டி, ராவாக அடித்துவிட்டு, சங்கிலிப் புகைப்பாக சிகரெட்டுகளை ஊதித் தள்ளலானான்.

“பம்பரக் கண்ணாலே – காதல்

சங்கதி சொன்னாளே

தங்கச் சிலை போல் வந்து மனசைத்

தவிக்க வைத்தாளே…”

ஸ்லீவ்லெஸ் கைகளைத் தலைக்கு மேல் தூக்கிக் கோர்த்துக்கொண்டு, ஜீன்ஸின் அபாயத் தாழ்ச்சியை சட்டை பண்ணாமல், தேளூரும் இடுப்பை வெட்டி வெட்டி வேகம் காட்டினாள் ரெஜினா. அவளுக்குக் கிடைத்துவரும் அமோக ஆதரவைக் கண்டு வெகுண்டு, ஊடுருவல் சுடிதார் சுந்தரியும் களத்தில் இறங்கிவிட்டாள். முக்காடு பேகத்தின் ஆப்கான் முகம் கூட மோனலிசாப் புன்னகை கொள்ள, “அடிச்சுடு அடிச்சுடு” என்று சிங்கிடிக் காக்காய்கள் சூடேறின.

“கத்தாளக் கண்ணால குத்தாத

நீ என்னெ…

இல்லாத இடுப்பால இடிக்காத

நீ என்னெ…”

கள்ளப் பாடகன் கருப்பு வெள்ளையிலிருந்து மஞ்சள் பச்சைக்கு மாற, ஜீன்ஸ் அம்முணியும் சுடிதார் சுந்தரியும் தேவையான இடத்தில் “ஆஆ…” என கோரஸும் கொடுத்தபடி குத்தாட்டம் தொடர்ந்தனர்.

“ரிக்காட் டேன்சு, டில்லி முள்ளாட்டமெல்லாம் இதுககிட்ட பிச்சை வாங்கோணும். என்னா குத்துக் குத்தறாளுக!” காக்காக் கூட்டம் வெந்து வாய் பிளந்தது.

சிங்கிடிக் காக்காய்கள் ஒவ்வொருவராக களத்தில் இறங்கி குத்தாட்டக் கவிஞிகளோடு சேர்ந்தாட, சம்மணமிட்டு அமர்ந்திருந்த சுற்று வட்டமும் எழுந்துகொண்டு ஆடலாயிற்று. தொலை தூரத்திலிருந்து வந்த இலக்கிய விருந்தாளிகள், கருத்தரங்க அமர்வாளர்களான இலக்கியப் பெருந்தகைகள் கூட மெல்ல மெல்ல ஆடத் தொடங்கினர். உச்சி பழுத்த கொங்குநாட்டான் சீன்சு அம்முணியுடனும், வீறாவேசியான அம்பேத்கர் அடிமை சுடிதார் சுந்தரியுடனும் ஜோடி சேர்ந்து ஆடியதுதான் உச்சம்.


ஆட்டம் பாட்டங்களால் நேரம் போனதே தெரியவில்லை. ஓய்ந்து பசியுணர்ந்தவர்கள் கெடா விருந்துக்கு வரும்போது பிரியாணி, வறுவல், குழம்பு வகையறாக்கள் சூடாறிவிட்டன. வயிறு நெறக்க வடிசலும் தண்ணியும் ஊற்றி, அதற்கு மேல் கிடா வறுவல், காய்கறிக் கலவை, மாந்துண்டங்கள் எனத் திணித்திருந்தாலும் ஆடிய ஆட்டத்தில் அத்தனையும் சீரணமாகியிருந்தது. அல்லது சில பேருக்கு எதுக்களித்து வாந்தியெடுத்ததில் வயிறு காலியாகியிருந்தது. ஆறிய பிரியாணியென்றாலும் ஒரு பிடி பிடித்தார்கள்.

மனசும், உடம்பும், வயிறும் வெகு திருப்தியாகி, “இலக்கியக் கூட்டம்னா இப்புடி இருக்கோணுமப்பா” என்று புகழ்ந்த வாயாற புகை ஊதியபடி மரத்தடி நிழல்களில் குழுக் குழுவாக இளைப்பாறிக்கொண்டிருந்தது மாநாட்டுக் கூட்டம். பலா மரத்தடியில் சிறப்பு விருந்தினர்களுடன் அமர்ந்திருந்த ரெஜினாவும் இந்திராணியும் ஒரே சிகரெட்டை மாற்றி மாற்றிப் புகைத்து தங்களின் நெருங்கிய நட்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். காக்காக் கூட்டமும் அங்கேயே வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

அடி மரத்திலிருந்தே காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்த பலாக் காய்களைப் பார்வையிட்ட ரெஜினா, “இதெல்லாம் காயா, பழமா பண்ணை?” என பல்லேலக்காவிடம் விசாரித்தாள்.

“இதுகல்லாம் வெக்காய்ங். முள்ளு விரிஞ்ச பெறப்பாடுதான் பளுக்கும்” என்றவன் அண்ணாந்து பார்வையிட்டு, “அங்க பாருங் வடக்க வாற வாதுல நாலாவதாத் தொங்குதல்லங்,… அது முள்ளு விரிஞ்சிருச்சு. அப்பறம் இதே இங்க பாருங். அங்கல்லங், இவடத்தால் பாருங். அதும் முள்ளு விரியறக்கு ஆச்சுங்.

அதுகள வேண்ணா வெட்டி எறக்கி சாக்கப் போட்டு மூடி வெச்சாப் பளுக்கும். இதுகள்ல சொளைக கம்மின்னாலும் வேர்ப் பெலாவாட்ட ருசி பிரமாதமா இருக்குமுங் ரெஜி. ஊருக்குக் கொண்டுட்டுப் போறதுன்னாச் சொல்லுங், நாளைக்கு வேண்ணா மாதேரீகள உட்டு ரெண்டையும் வெட்டி எறக்கீர்லாம்” என்றான்.

“இவ்ளோ பெரிச எப்படித் தூக்கீட்டுப் போறது? இப்பவே சாப்பிடற மாதிரி பழுத்தது ஏதாவது இருந்தா சொல்லுங்க.”

மீண்டும் அண்ணாந்து உன்னித்தவன், உச்சாணிக் கொம்பில் இருந்த ஒன்றைச் சுட்டிக் காட்டி, “அது வேண்ணா சிறுசா இருந்தாலும் நல்லா முள்ளு விரிஞ்சிருக்குதுங். பளுத்திருந்தாலும் பளுத்திருக்கும். ஆனாட்டி அதைய வெட்டி எறக்கறக்கு எசவு இல்லீங்ளே…! ஏறிப் போயிப் புடுங்கறக்கு இல்லாதபடிக்கு கொனைல இருக்குது. கொக்கிச் சல்லைல இளுத்து உளுக்காட்னாத்தான் ஆச்சு. ஆனாட்டி அத்தனை ஒசக்கத்துலிருந்து உளுந்தா காயி ஓடைஞ்சு செதறீருமுங்” என்றான்.

இரண்டு மணி நேரத்துக்கு முன்பு அடித்திருந்த முதல் வடிசலின் வீரியம் குறைந்திருந்தாலும் ரெஜினாவுக்கு இன்னும் மப்பு இருந்தது. மிதப்பான மனோ நிலையிலேயே இருந்த அவள் சற்றே யோசித்துவிட்டு, கூட்டத்தினர் அனைவரையும் பார்த்து ஒரு சவாலை முன் வைத்தாள். “யாராவது மரத்துல ஏறி அந்தப் பலாப் பழத்தைக் கையாலயே பறிச்சு எனக்குக் குடுத்தீங்கன்னா, நான் அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கறேன்.”

கூட்டம் உடனே ஆர்ப்பரித்தது. ஆனால் ஒருவரும் சவாலை ஏற்க முன்வரவில்லை.

“சவாலை ஏத்துக்க ஒரு ஆம்பளை கூட இல்லையா?”

“ஏத்துக்கத் தயாருங் ரெஜி. ஆனாட்டி உங்களையக் கல்யாணம் பண்ணிக்கறதுங்கற ப்ரைசுதான் ஒதைக்குது. அப்பப்ப வந்துட்டுப் போறாப்புடி செட்டப்பா இருக்கறதுன்னாச் சொல்லுங். நாங்க ரெடி” என்று சிங்கிடிக் காக்காய்கள் முன் வந்தன.

அவர்களை நெற்றிக் கண்ணில் முறைத்துவிட்டு, “செட்டப்பாக் கூட வேண்டாங் ரெஜி. ஒரே ஒரு சலக்காப் போதுங். உளுந்து கையிக் காலு ஓடைஞ்சாலும், உசுரே போனாலுஞ் செரியே” என்றான் பல்லேலக்கா.

“அது கூட வேண்டாமம்முணி. ஒரே ஒரு இங்கிலிப்பீஸ் கிஸ்சு குடக்கறதுன்னாலே நமக்குப் போதும்.” முச்சூடும் நரைத்த கொங்குநாட்டான் கூட வேட்டியை வரிந்து கட்டினார்.

ரெஜினா அந்த ஏற்பாடுகள் எதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை. “அதெல்லாம் எனக்கு போரடிச்சிருச்சு. இனிமே கல்யாணம் பண்ணி செட்டிலாயிடலாம்னு பாக்கறேன்” என்று கறாராக சொல்லிவிட்டாள்.

மற்றவர்கள் பின்வாங்க, பல்லேலக்காவுக்கு துணிந்துவிடலாமா வேண்டாமா என்று ரெண்டர்த்தமாகவே இருந்தது.

அப்போது அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த சோழீஸ்வரன், “அங்க பாருங் ஒரு அனுமாரு உச்சாணிக் கொம்புல ஏறீட்டிருக்கறாரு” என்று தெரிவித்தான். எல்லோரும் அண்ணாந்து பார்க்க, “ஏனுங் ரெஜி,… ஒருவேளை அந்த வாயு புத்தரன் பெலாப் பளத்தப் புடுங்கீட்டு வந்து குடுத்துட்டாருன்னா என்ன பண்ணுவீங்?” என்று கேட்டான்.

“அதையே கல்யாணம் பண்ணிக்குவேன்” என்றாள் அலட்சியமாக.

கூட்டத்தினர் ஆவலோடு கவனித்துக் கொண்டிருக்க, வானரம் உச்சாணிக் கொம்பின் நுனிக்குச் சென்று பலாப் பழத்தைப் பரிசோதித்துவிட்டு காம்பைத் திருகிப் பறித்தேவிட்டது. பிறகு காம்பை வாயில் கவ்வியபடி பதனமாக இறங்கி வந்தது.

“ஏய்…! நெஜமாவே உங்கிட்டதான் குடுக்கறக்கு வருதாட்டிருக்குது!” இந்திராணி குதூகலித்தாள்.

ஆளுயரத்துக்கு சற்று மேலிருக்கும் கிளை வரை இறங்கிய வானரம், அதன் கவுட்டிப் பகுதியில் வாகாக உட்கார்ந்துகொண்டது. ரெஜினாவும், “ச்சோ ச்வீட். நீதான் சரியான ஆம்பளை. ஐ லவ் யூ ஸோ மச்” என்றபடி நெருங்கி, “ஓ.கே. டார்லிங். சவால்ல நீ ஜெயிச்சுட்ட. சொன்ன மாதிரியே நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன். பழத்தக் குடு” என்று இரண்டு கைகளையும் உயரே நீட்டினாள்.

வானரம் ஈஈஈயென்று பல்லைக் கிஞ்சித்துக் கொக்காணி காட்டியது.

– வாரமலர், 2011, செப். 18, செப். 25 & அக். 02 இதழ்கள்.

கதாசிரியர் குறிப்பு:

வாரமலர் இதழில், ஆங்காங்கே வணிக இதழ் தரப்பின் எடிட்டிங்குகளோடு பிரசுரமான இக் கதை, ‘வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது’ என்ற தலைப்பிலான எனது சிறுகதைத் தொகுப்பில் (2016, பழனியப்பா ப்ரதர்ஸ் வெளியீடு) எனது மூலப் பிரதிப்படியே முழுமையாக இடம்பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்றிருப்பது, அந்த மூலப் பிரதியின் செப்பனிடப்பட்ட (2022 ஜனவரி) வடிவம். வாசகர்கள் இதையே இறுதிப் பாடமாகக் கொள்ளவும்.

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *