பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பரிமளா சொன்ன கள்ளன் புகுந்த கதை
“கேளாய், போஜனே! பெரும்பாலும் விமானத்திலேயே பிரயாணம் செய்துகொண்டிருந்த மிஸ்டர் விக்கிரமாதித்தர், ஒரு சமயம் ஏதோ ஒரு மாறுதலை உத்தேசித்து ரயிலியே பிரயாணம் செய்ய, அந்த ரயில் யாரோ ஒரு புண்ணியாத்மா நடுவழியில் செய்திருந்த நாசவேலை காரணமாக நடுக்காட்டிலே நிற்க, முழுத் தூக்கத்திலிருந்து அரைத் தூக்கத்துக்கு வந்த அவர் திடுக்கிட்டுச் சுற்று முற்றும் பார்ப்பாராயினர்.
இருட்டென்றால் இருட்டு; வெளியே ஒரே கும்மிருட்டு; ‘ஙொய், ஙொய்’ என்ற இனம் தெரியாத ஜீவராசிகளின் சத்தத்தைத் தவிர வேறு சத்தமில்லை. அவருடன் அந்த முதல் வகுப்புப் பெட்டியில் பிரயாணம் செய்து வந்த ஓரிருவரும் அவருக்குத் தெரியாமல் எங்கேயோ இறங்கிச் சென்று விட்டிருந்தனர். தமக்குத் துணையாக அன்று என்னவோ அவர் சிட்டியையும் அழைத்துக்கொண்டு வரவில்லை; பாதாளத்தையும் அழைத்துக்கொண்டு வரவில்லை. ‘தன்னந்தனியாக இப்படி வந்து அகப்பட்டுக் கொண்டோமே!’ என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தகாலை யாரோ ஒரு திருடன் மெல்ல வந்து அந்தப் பெட்டிக்குள் நுழைய, ‘என்ன செய்வது, இவனை எப்படிச் சமாளிப்பது?’ என்று ஒரு கணம் யோசித்த அவர் மறுகணம் சட்டென்று கண்ணை மூடிக்கொள்ள, ‘ஆசாமி தூங்குகிறார்போல் இருக்கிறது!’ என்று நினைத்த அவன் அடிமேல் அடி வைத்து அவருடைய பெட்டியை நெருங்க, அதுதான் சமயமென்று அவர் திடுக்கிட்டு எழுந்தவர் போல் எழுந்து, ‘ஐயோ, பாம்பு!’ என்று அவன் வந்ததைக் கவனிக்காதவர்போல் அலற, ‘அட சை! முழிச்சிக்கிட்டாண்டா!’ என்று அவன் சட்டென்று ‘பாத்ரூ‘முக்குள் ஓடி ஒளிய, அதற்குள் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், ‘எங்கே பாம்பு?’ என்று கேட்டுக்கொண்டே திரண்டு வந்து அவர் இருந்த பெட்டிக்குள் ‘திபுதிபு’வென்று நுழைய, ‘இப்படித்தான் வந்தது, இப்படித்தான் ஓடிற்று!’ என்று சொல்லிக் கொண்டே அவரும் கொஞ்ச நேரம் அவர்களுடன் சேர்ந்து பாம்பைத் தேடுபவர்போல தேட, கடைசியில் உதவிக்கு வந்தவர்களில் ஒருவர் அலுத்துப் போய், ‘நிஜமாகவே நீர் பாம்பைக் கண்டீரா? அல்லது கனவு கினவு, கண்டீரா?’ என்று கேட்க, ‘நிஜமாகத்தான் பாம்பைக் கண்டேன், சுவாமி! உங்களுக்குச் சந்தேகமாயிருந்தால் ‘பாத்ரூ’முக்குள் ஓர் ஐயா இருக்கிறார்; அவரை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்!’ என்று ‘பாத்ரூம்’ கதவைத் தட்ட, ‘அடப் பாவி, என்னைக் காட்டிக் கொடுக்கவா இந்த வேஷம்?’ என்று திருடன் சட்டென்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து, ‘தப்பினோம், பிழைத்தோம்’ என்று ஓடப் பார்க்க, எல்லோருமாகச் சேர்ந்து அவனை விரட்டிப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்புவிப்பாராயினர்.”
பதினெட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான பரிமளா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; பத்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சற்குணா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க… காண்க… காண்க……
– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.