பக்கத்து வீட்டு றேடியோ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 8, 2022
பார்வையிட்டோர்: 3,996 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன காணும் உம்முடைய கட்டுரைகளை வெகு நாட் களாகப் பத்திரிகைகளில் காணவில்லையே? ஏன் கற்பனை வறண்டு விட்டதா? அல்லது கொழுவிறதற்கு ஆட்கள் எவ ரும் கிடைக்கவில்லையா?” என்றார் பக்கத்து வீட்டுப் பரமலிங்கம். அவர் எப்பொழுதும் என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் போலவும் அன்பு கொண்டவர் போலவும் நடந்து கொள்பவர். எங்கே தன்னைப் பற்றியும் ஏதாவது எழுதி விடுவானோ என்ற பயம் தான் இதற்கெல்லாம் காரணம் என்பது எனக்குத் தெரியாமலா போய்விடும்?

‘எதை எழுதுவது’ என்று எண்ணிக் கொண்டிருந்த எனது சிந்தனை சிறகுகட்டிப் பறந்தது. பக்கத்து வீட்டுப் பரமலிங்கத்தைப் பற்றியே – அவரது ரேடியோவைப் பற்றியே எழுதுவது என்று முடிவு கட்டி விட்டேன். பாவம், பரமலிங்கம்…!

ஒருநாள் பரமலிங்கம் வீட்டிலே மிகுந்த பரபரப்பாக இருந்தது. ஒருவர் மாமரத்தில் ஏறிக்கொண்டிருந்தார். இன்னொருவர் வீட்டுக் கூரையில் இருந்தார். பரமலிங்கத்தின் சுட்டிப்பயல் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்தான். பெண்களும் அங்கிங்கு என்று ஓடித்திரிந்தனர்.

வழக்கத்திற்கு மாறாக வேட்டியை மடித்துக் கட்டியபடி மூக்குக்கண்ணாடியுடன் உலாவிக்கொண்டிருந்த பரமலிங்கத்தை ‘என்ன சங்கதி’. என்று விசாரித்தேன். அவர் அங்கு அடுத்த நாள் ரேடியோ வரப்போகிற செய்தியை வாயெல்லாம் பல்லாகச் சிரித்தபடி சொன்னார்.

அடுத்த நாள் அவரது விறாந்தையில் ரேடியோவைப் பார்க்கவென்றும் நிகழ்ச்சிகளைக் கேட்கவென்றும் ஒரு பத்துப் பேர்கள் வரை கூடியிருந்தனர். அவர்கள் பாவம் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொடர்ந்து முழுவதுமாகக் கேட்காதவாறு பரமலிங்கம் அடிக்கடி கொழும்பு, திருச்சி, சென்னை என்று மீட்டரை மாற்றிக்கொண்டும், வேண்டாத ஒலிகளை உண்டாக்கிக் கொண்டும் நிகழ்ச்சிகளைக் கொலை செய்து கொண்டிருந்தார். இப்படி அவர் நிகழ்ச்சிகளில் கொலைத்தொழிலை மேற்கொள்ளுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று-

அவருக்கு வானொலி மீட்டர்களைச் சரியாக விடத் தெரியாதது. இன்னும்கூட ‘மீட்டர்’ ‘வேவ்பாண்ட்’ என்பனவெல்லாம் பரமலிங்கத்துக்குப் புரியாத புதிராகத்தான் இருந்து வருகிறது. இது சம்பந்தமாக அவரது வாய் அடிக்கடி முணுமுணுக்கும் வார்த்தைகளாவன: முதலாம் கட்டை, இரண்டாம் கட்டை, மூன்றாம் கட்டை!

இரண்டு-

நிகழ்ச்சிகளை இன்னும் இன்னும் தெளிவாகக் கேட்பதாக இருந்தால் என்ன செய்யவேண்டும் என்ற அவரது ஆராய்ச்சி அதுவரை முடியவடையாதது!

இந்த நிகழ்ச்சிகள் பரமலிங்கத்தின் வீட்டில் மூன்று நான்கு வாரங்கள் தொடர்ந்து நீடித்தது.

பரமலிங்கத்தின் வானொலிப்பெட்டி அப்படி ஒன்றும் உயர்ந்த வகையைச் சேர்ந்ததல்ல. ஏதோ விரலுக்குத் தகுந்த வீக்கந்தான். ஆனால் பரமலிங்கம் இந்த உண்மையை மறந்தும் ஒப்புக்கொள்வதில்லை. வானொலியில் இருந்து வேண்டாத இரைச்சல்களும் சப்தங்களும் வெளி வந்து நிகழ்ச்சிகள் தெளிவாகக் கேட்காதபோதெல்லாம் அதற்கான காரணங்களை அவர் காட்டுவார். கொழும்பில் சரியான மழை பெய்கிறது. திருச்சியில் இடி இடிக்கிறது, சென்னையில் மின்னல் போன்றவைகள் அவர் காட்டும் காரணங்களில் சிலவாகும். ‘என்ன செய்வது எனது வருவாய்க்குத் தகுந்த வானொலி தானே! குறைகள் இருக்கத்தானே செய்யும்?’ என்று மட்டும் அவர் கூற மாட்டார். தான் வாங்கியது எவ்வளவு மட்டமானது என்றாலும் அது தான் மிக உசத்தியானது என்று சாதிப்பது தான் புரமலிங்கத்தின் கொள்கை யாயிற்றே!

இப்பொழுதெல்லாம் பரமலிங்கத்தின் வானொலிக்கு ஓய்வே கிடையாது. நள்ளிரவு தொடங்கி அதிகாலைவரையுள்ள சொற்ப நேரம் தவிர அவரின் பக்கத்து வீட்டுக்காரர்களாகிய எங்களுக்கெல்லாம் ஒரே தலைவலிதான். பரமலிங்கத்தின் பாலன் முதல் பாட்டிவரை வானொலி போடக் கற்றுக்கொண்டு விட்டார்கள். அந்த வானொலிப்பெட்டி ‘மரண அறிவித்தல்’ தொடக்கம் ‘மாதர் கேட்டவை’ வரை எந்த நிகழ்ச்சியையும் விட்டுவைப்பதில்லை…

இந்த இடத்தில் எனது வாசக நேயர்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் எதற்காகச் சிலகாலங்களாக கட்டுரை எழுதவில்லை என்பதற்கு இந்தப்பக்கத்து வீட்டு வானொலி தான் காரணம் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒருவேளை பரமலிங்கம் எங்கே நான் அவரைப்பற்றி கட்டுரைகள் ஏதாவது எழுதிவிடுவேனோ என்று பயந்துதான் றேடியோ வாங்கி எனக்கு உபத்திரவம் தந்து கொண்டிருக்கிறாரோ என்னவோ!

எனக்குத்தான் பரமலிங்கம் இப்படித் தொல்லை கொடுக்கிறாரே தவிர, எனது அயலிலுள்ள வானொலிப்பிரியர்களுக்கு அவர் அனுகூலமே செய்து வருகிறார். அவரின் வானொலி சதா உச்சக்கட்டத்தில் அலறுவதால் ‘வானொலிப்பெட்டி ஒன்று வாங்கவேண்டும்’ என்ற எண்ணத்துடனிருந்த எமது ஏழெட்டு அயலவர்கள் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டனர். இன்னும் நாலைந்து வீடோ ஏற்கனவே தங்களிடமிருந்த பெட்டிகளையும் விற்றுவிட்டனர். ‘நமது பரமலிங் கத்தின், ரேடியோ இருக்கும் போது பிறகு எமக்கென்று வேறாக எதற்கு?’ என்கிறார்கள் அவர்கள். இவர்கள் எல்லாரும் வானொலியில் ஏதாவது கேட்க வேண்டுமானால் அப்பொழுது தமது காதுகளையும் கவனங்களையும் பரமலிங்கத்தின் வீட்டுப் பக்கமாகத் திருப்பப் பழகிக் கொண்டு விட்டனர்.

இறுதியாக இக்கட்டுரையை முடிக்குமுன் இக்கட்டுரை எழுதுவதற்கு எனக்கு உதவியும் ஒத்துழைப்பும் நல்கிய ‘றிப்பயர்’ காரணமாக இரண்டு நாட்கள் வாயடைத்துப் போன பரமலிங்கத்தின் வானொலியும், அந்த ‘றிப்பயர்’ ஏற்பட ஒல்லும்வகை முயன்றுழைத்த பரமலிங்கத்தின் சுட்டிப்பயலையும் நன்றியறிதலுடன் நினைவு கூருகின்றேன்.

– பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *