நைனா வெர்சஸ் டாக்டர்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் நகைச்சுவை
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,932 
 

எங்கள் குடும்பம் மானமுள்ள குடும்பம். போலிஸ் ஸ்டேசன் வாசல்படியை கூட மிதிக்காத குடும்பம் என்று மார்தட்டிக்கொள்வதில் சலிப்படையாத ஒருவரை பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர் இந்த கிராமத்தில்தான் இருக்கிறார் தயவு செய்து அவர் வீட்டுக்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டால் போதும். கைசூப்பிக் கொண்டு, மூக்கில் சளி வழிந்தபடி 3 நாட்கள் குளிக்காமல் பரட்டைத் தலையுடன் இருக்கும் குழந்தை கூட கைபிடித்து இழுத்துக்கொண்டு போய் ராசு நைனா வீட்டில் தள்ளி விட்டு எகத்தாளமாக சிரிக்கும். இதுகூட தெரியவில்லையா உனக்கு என்பது போல.

முத்துவும், சாமியாத்தாலும் பேருந்தில் இருந்து இறங்கிய பொழுதே நன்றாக புரிந்து கொண்டார்கள். நரிக்குடி கிராமம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது என்று. மனிதர்களின் காலடித் தடங்களே படாத இடங்கள் இன்னும் பூமியில் பொலிவுடன் இயற்கை அழகு பொங்க காணப்படும். அதுபோன்ற ஒரு அழகுடன் அந்த ஊர் மிலிர்ந்தது. ஆனால்… சிங்கப்பூர், மலேசியாவில் எல்லாம் தார் ரோடு போட்டிருப்பார்களாமே என்று ஆச்சரியத்துடன் பேசக்கூடிய மனிதர்கள் இன்னும் அந்த ஊரில் இருப்பதால் அதற்குமேல் எதுவும் எதிர்பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டார்கள். ஆனால் நகர்ப்புறங்களில் போடப்பட்டிருக்கும் சாலைகளை விட செம்மண் சாலைகள் நேர்த்தியாகத்தான் இருந்தன. வெய்யில் கொடுமையிலிருந்து தப்பிக்க அவ்வூர் காரர்கள் இன்னும் ஆட்டுப் புழுக்கைகள் மீதுதான் நடந்து செல்கிறார்கள். செருப்புக் காலுடன் நடந்து வரும் இவர்களைப் பார்த்து அவர்கள் கேலியாக சிரித்துவிட்டுச் சென்றார்கள். அவர்களைப் பொருத்தவரை வெறும்காலில் வெய்யிலில் நடக்க முடியாதவர்கள் பூமியில் வாழத் தகுதியில்லாதவர்கள். அவர்களால் வாழ்க்கையில் வேறு எதைத்தான் தாங்க முடியும் என்பது அவர்களது எண்ணம்.

பல வருடங்களுக்கு பின் சொந்த ஊருக்கு வந்ததால் மொக்கராசு நைனாவின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வழியாக ஆடு மேய்ப்பவர்களிடம் வழியைக் கேட்டு கண்டுபிடித்து நைனா வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் முத்துவும், சாமியாத்தாளும்.

மொக்கராசு நைனாவிடம் பேசிக்கொண்டிருப்பவரை (மன்னிக்கவும்) மாட்டிக் கொண்டிருப்பவரை பார்த்தால் அழுது அழுது அவர் கண்கள் வீங்கியிருப்பது போல் காணப்பட்டது. என்னை யாராவது காப்பாற்றுங்கள். அப்படி மட்டும் காப்பாற்றி விட்டால் என் சொத்தையே உங்களுக்கு எழுதித் தந்து விடுகிறேன் என்று அவரது உள்மனம் கதறிக் கொண்டிருப்பது தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் முத்துவுக்கு கூட முகத்தில் அறைந்தாற் போன்று தெளிவாக தெரிந்து கொண்டிருந்தது. ஆனால் முத்துவுக்கு வந்த கடிதத்தில் என்னவோ, மொக்கராசு நைனா நோய்வாய்ப்பட்டு மரணத் தருவாயில் இருப்பதாகவும், இன்னும் சில தினங்களில் உடல் நலிவுற்று உயிர் பிரிந்து விடும் நிலையில் இருப்பதாகவும் கடைசியாக ஒருமுறை வந்து பார்த்துவிட்டு போனால் அவரது கட்டை நன்றாக வேகும் என்றும் அல்லவா எழுத்தப்பட்டிருந்தது. இப்பொழுது என்னடாவென்றால் ஜிம்முக்கு சென்றுவிட்டு வந்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கும் அர்னால்ட் ஸ்வாஸ்நேக்கரைப் போல் அல்லவா அமர்ந்திருக்கிறார். இந்த நரிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எப்பொழுதும் ஒன்று என்றால் ஒன்பது என்று சொல்லக்கூடியவர்கள். மிகை உணர்ச்சிக்கு அடிமையானவர்கள். இதைப்பற்றி சாமியாத்தாளிடம் கூறினாள் எங்கு புரிந்து கொள்ளப் போகிறார்.

கடிதத்தை படித்ததிலிருந்து முத்துவின் அம்மா சாமியாத்தாள் வடித்த அரை டம்ளர் கண்ணீருக்கு இன்றுதான் விடிவுகாலம் பிறந்தது. ஒரு சொட்டு கண்ணீருக்கு ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அளவுக்கு வார்த்தைகளை உபயோகப்படுத்தும் சாமியாத்தாள், அரை டம்ளர் கண்ணீரை வடித்திருக்கிறார் என்றால் முத்து ஒரு முனிவருக்கு ஒப்பானவன் என்பதை மறு பேச்சின்றி ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சாம, தான, பேத, தண்டம் என நான்கு வழிமுறைகளை மீறி இன்னும் சில புதிய கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தி அழுததில் துப்பாக்கி முனையில் செயல்படும் போர்க்கைதியை போல நரிக்குடி கிராமத்திற்கு தனது அம்மாவை அழைத்து வந்துள்ளான் முத்து.

நைனாவை பார்த்த மறுகனம் போரில் தன்மகனை இழந்த தாய் ஒருத்தி கதறி அழுவதை போல, துடி துடித்தபடி ஒரு ஒப்பாரி பாடலை பாடிக் கொண்டு 2 கைகளையும் விரித்துக் கொண்டு சாமியாத்தாள் ஓடினார். முத்துவால் திடீரென என்ன நடந்தது என்று கவனிக்க முடியவில்லை. யாரோ ரோட்டில் அடிபட்டு விட்டார்களோ என நினைத்துக் கொண்டு வெளியே ஓடிபோய் பார்த்தான். வெளியே ஒரு மாடு நடந்து போய் கொண்டிருந்தது எந்தவித கலவரமும் இல்லாமல். வீட்டிற்குள் இருந்துதான் சத்தம் வருகிறது என்பதை நிமிடத்தில் புரிந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தால் அங்கே நைனாவின் அருகில் அமர்ந்தபடி சாமியாத்தாள் 8 கட்டையில் சுருதி சுத்தமாக ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தார். நைனாவிடம் பேசிக் கொண்டிருந்தவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் பொங்கியபடி தப்பித்தோம் பிழைத்தோம் என்று எழுந்து ஓடினார். அதற்குள் நைனா மண்டையை போட்டுவிட்டாரா? இருக்காதே என நினைத்து அருகில் சென்று பார்த்தான் முத்து. இன்னும் சாகவில்லை அவர். எப்படியும் இந்த ஒப்பாரி முடிய 20 நிமிடங்கள் பிடிக்கும் என நினைத்த முத்து வெளியே வந்து அருகிலிருந்த கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தான்.

நைனாவின் உடல்நிலையைப் பற்றி துல்லியமாக ஒப்பாரி பாடல் மூலமாக விசாரித்துக் கொண்டிருந்தார் சாமியாத்தாள். சுருட்டு பிடித்து கம்மிப் போயிருந்த தொண்டையிலிருந்து வெளிப்பட்ட நைனாவின் கனீர் குரல் லாப்ரடார் வகை நாயின் குரல் போல் கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் இருந்தது. அது அவ்வளவாக புரியவில்லை என்றாலும் ஏதோ புரிந்ததை போல தலையை ஆட்டிக் கொண்டிருந்தார் சாமியாத்தாள். அரைமணி நேர இடைவெளிக்குப் பிறகு உள்ளே சென்ற முத்துவை பார்த்த நைனா என்னவோ கேட்டார். அது நலம் விசாரிப்பாகத்தான் இருக்கும் என்று யூகித்தபடி அவனாக ஒரு பதிலை கூறினான் முத்து. அதை மறுபேச்சின்றி அவரும் ஏற்றுக் கொண்டார்.

சாமியாத்தாளின் தந்தை (முத்துவின் தாத்தா) இறந்த பிறகு அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்களையும் வளர்த்து திருமணம் செய்து கொடுத்தவர் நைனாதான். முத்துவுக்கு மாடு மேய்த்தல், விவசாயம் செய்தல், ஆடு வளர்த்து மொத்த வியாபாரம் செய்தல் போன்ற வருமானம் மிகுந்த தொழில் ரகசியங்களை சொல்லிக் கொடுக்காமல், ஊர்க்கோடியில் இருந்த பள்ளிக் கூடத்தில் சேர்த்து படிக்க வைத்தார் நைனா. முத்துவும் வேறு வழியின்றி படித்துவிட்டு பட்டணத்தில் (சென்னையில்) இன்று ஒரு நல்ல வேலையில் இருக்கிறான். நைனாவை தந்தையைவிட ஒரு படி மேலாக மதித்து வந்த சாமியாத்தாள், அவரது உடம்புக்கு ஏதோ வியாதி வந்துவிட்டது என்றவுடன் பதறிவிட்டார். சென்னையில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் அலுவலர்களுக்கு லீவ் என்ற கெட்டவார்த்தையை பற்றி பேச சற்றும் உரிமை இல்லை. நில நடுக்கம் வந்தாலும் சரி, சுனாமி வந்தாலும் சரி அலுவலகத்துக்கு வரவில்லை என்றால் அவ்வளவுதான். அப்படிப்பட்ட அலுவலகத்தில் விடுமுறை வாங்குவதற்கு விடியவிடிய யோசித்து போராடி, கண்ணீர் விட்டு கதறி வாங்கிய விடுமுறையில் தாய் சாமியாத்தாளை நரிக்குடி கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தான் முத்து.

முத்துக்குமரனை அருகில் அழைத்துப் பேசிய நைனா நிமிடத்துக்கு ஒருமுறை இருமிக் கொண்டே இருந்தார். அவர் இருமும் போதுதான் தெரிந்தது அவருக்கு நெஞ்சு முழுவதும் எவ்வளவு சளி இருக்கிறது என்று. ஒருவேளை டி.பி.யாக கூட இருக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தான் முத்து. முத்துவிடம் சில கடினமான கேள்விகளை கேட்டார் நைனா.

நைனா : எங்க வேல பாக்குற

முத்து : சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில்

நைனா : எவ்வளவு சம்பளம் வாங்குற

முத்து : 12 ஆயிரம் ரூபாய்

நைனா : கட்டுப்படியாகுதா?

முத்து : ம்

நைனா: நம்ம வீட்டுக்கு பால் கறக்க வர்றானே, மூர்த்தி. அவன் எவ்வளவு சம்பாரிக்கிறான் தெரியுமா?

முத்து : ம்ஹும்

நைனா : மாசமானா 10 ஆயிரம் ரூவா சம்பாரிக்கிறான். நீ என்னாடானா சூட்டு கோட்டெல்லாம் மாட்டிகிட்டு 12 ஆயிரம் ரூவா சம்பாரிக்கிறேங்ற.

எதிர்பார்த்ததுதான் என்றாலும் அந்த அவமானத்தை ஏற்றுக்கொண்டான். ஏதோ அவனது பரிதாப நிலையை பார்த்து ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிப் போனது போன்று அவரது முகம் மாறிப் போனது. நைனாவுக்கு சூட்டு கோட்டு போட்டவனைப்பார்த்தால் மனதிற்குள் கோபம் வருகிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது அவனால், அவரைப் பொருத்தவரை கோவணத்தைக் கட்டிக்கொண்டு உடலை வளைத்து வேலை செய்பவன் தான் உண்மையான வேலைக்காரன். அதற்கு மேல் எதற்கு ஒருவனுக்கு உடை என்பது அவரது நியாயமான கேள்வி. காந்தி கடைசி வரை சட்டை போடவில்லை என்று யாரேனும் அவரிடம் ஆச்சரியம் பொங்க கூறினால் அவரால் புரிந்து கொள்ள முடியாது. சட்டை போடாமல் இருப்பது என்ன ஒரு சவாலான விஷயமா? என்று கேட்பார். அவரைப் பொருத்தவரை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளில் மட்டும் தான் சட்டை போடுவார். அவருக்கு துணிப்பிரச்னையே வந்ததில்லை. 2 வேட்டி போதும், அதை 10 வருடங்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்று உலகம் அவரைப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். கடைசியாக காலில் பட்ட காயத்திற்கு கட்டு போடுவது வரை அந்த துணி பயன்படுத்தப்படும்.

நைனாவின் முதல் மகன் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு வருடத்தில் மொத்தமாக ஆயிரம் ஆடுகளையாவது உருவாக்கி விடுவான். மொத்தமாக வளர்க்கப்பட்ட ஆடுகளை அருகில் இருக்கும் டவுனுக்கு ஓட்டிச் சென்று சந்தையில் விற்று விடுவான். சும்மா இல்லை பல லட்சம் ரூபாய்கள் கிடைக்கும். 12 வயதிலிருந்து அவன் இந்தத் தொழிலை செய்து வருகிறான். இப்பொழுது அவனுக்கு வயது 23. அவன் இப்பொழுது பல லட்சங்களுக்கு அதிபதி. யார் கண்டது கோடிகளை கூட வைத்திருக்கலாம். பேன் கார்டெல்லாம் வைத்திருக்கிறான். டேக்ஸ் கட்டுவான் போல. அவனிடம் உயர் ரக டச் ஸ்கிரீன் மொபைல் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது மகன் பால் பண்ணை வைத்திருக்கிறான். மொத்தம் 120 பால் கரக்கும் மாடுகள். 40 ஜோடி எருதுகள், 70 எருமைகள், 45 தொழிலாளர்கள். அவன் ஒரு குட்டித் தொழிலதிபர் என்று சொன்னால் அது மிகையில்லை. அவனை நம்பி சில கிராமங்கள் உள்ளன. தமிழகத்தின் பால் தேவையை நிறைவேற்றுவதில் அவனுக்கும் முக்கிய பங்கு உள்ளது. அவன் முதுகில் எப்பொழுதும் ஒரு பை தொங்கும். அதற்குள் ஒருவேலை லேப்டாப் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

மூன்றாவது மகன் விவசாயம் பார்க்கிறான். அவனைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், வெளிநாடுகளில் செய்வது போல் விமானத்தில் பறந்து உரமிடுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கேட்டுள்ளான். மூன்று பேருக்கும் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதுதான் அந்த ஞானோதயம் உதித்தது. ஆசிரியரிடம் அதிகபட்சமாக கூட்டல், கழித்தல் கணக்கு கற்றுக் கொண்டதே அதிகம் என்று முடிவெடுத்து அன்றே வெளியேறிவிட்டனர்.

பரிதாபத்திற்குரிய முத்துவை மட்டும் படிக்க வைத்து ஓரவஞ்சனை செய்துவிட்ட நைனாவை நினைத்து முத்து மட்டுமே மனதிற்குள்ளாக பொருமிக் கொண்டிருந்தான். 3 மகன்கள் இருந்தும் அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லவில்லை என்றால் என்ன அர்த்தம். ஒவ்வொரு முறையும் குத்தி காமித்து பேசியே வந்தால் எந்த மகன் தான் மதிப்பான். என்னதான் படிக்கவைத்து ஓர வஞ்சனை செய்தாலும் தான் தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்போவதாக பெருமையாக நினைத்துக் கொண்டான்.

ஆனால் ராசு நைனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் மிகப்பெரிய சிக்கல் ஒன்று உள்ளது. திருவாரூர் தேரை தனியாக நின்று வடம் பிடித்து இழுத்துச் செல்வதும் ஒன்றுதான், மொக்கராசு நைனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் ஒன்றுதான். மொக்க ராசு உங்களுக்கு ஹாட் அட்டாக் வந்துள்ளது, தயவு செய்து மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறினால் கூட, பரவாயில்லை நான் கருப்பட்டி கசாயம் காச்சி குடிச்சிக்கிறேன். நீ கவலைப் படாதே என்று கூலாக கூறுவார். நிகழவே நிகழாது என்ற வரைமுறைக்குள் உள்ள விஷயங்களில் ராசு நைனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் ஒன்று. மேற்கில் என்றுமே சூரியன் உதிப்பதில்லை.

அதனால், மேலும் அரை டம்ளர் கண்ணீர் வடிக்க வேண்டியிருந்தது சாமியாத்தாளுக்கு. உலகில் அணு ஆயுதத்திற்கு அடுத்த மிகவும் வலிமையான ஆயுதம் பெண்களின் கண்ணீர். அதிலும் சாமியாத்தாளிடம் சீரியல் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். நைனாவையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டது என்றால் அந்த கண்ணீரின் வலிமையை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மூன்றாவது ஆள் தனது உடலை ஆராய்ந்து நோயை கண்டுபிடித்துவிடுவானா? அவனுக்கு அவ்வளவு துணிச்சலா? என ஏதோ ஒரு அசரீரி கேட்டது முத்துவுக்கு. ஆனால் நைனா அதுபோன்று எதுவும் சொல்லவில்லை என்பது அன்று பூமியில் நிகழ்நத மிகமுக்கிய அதிசயங்களுள் ஒன்றாகும். அவர் தனக்குத் தானே ஒரு புது மருத்துவ முறையை கண்டுபிடித்து வைத்திருக்கிறார். அதன்படி தலைவலி, காய்ச்சல், கேன்சர், பன்றிக் காய்ச்சல், மற்றும் தீர்க்க முடியாத அனைத்து நோய்களுக்கு தெரியாது என்று கூறாமல் மருத்துவம் சொல்ல அவரால் தான் முடியும். ஆஃப்ட்ரால் சளிக்கு மருத்துவரை பார்க்க அழைத்துச் செல்ல நினைக்கும் சாமியாத்தாளை நினைத்தால் எப்படி சிரிக்காமல் இருப்பது என்றே அவருக்குத் தெரியவில்லை. முத்து படத்தில் தந்தை ரஜினி சிரிப்பது போல் ஒரு பெரிய சிரிப்பை உதிர்த்து விட்டு மருத்துவரிடம் வர ஒப்புதல் அளித்தார் நைனா.

நைனா மருத்துவமனை அழைத்துச் செல்லப்படும்போது வழியில் இருந்தவர்கள் அதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உட்பட்டு வாய்பிழந்து நின்றனர். சிலர் மயக்கநிலைக்குச் சென்றனர். காட்டுத்தீ போல் பரவிய செய்தியை கேள்விபட்ட சிலர் வதந்தியை கிளப்பாதே என கோபப்பட்டனர். ஆனால் நைனா சாமியாத்தாளின் அழுகைக்கு மதிப்பளித்து அவருக்கு வரம் கொடுப்பது போன்றதொரு சூழ்நிலையில் மருத்துவமனைக்கு ஒப்புக் கொண்டார் என்பதை நாளை சரித்திரம் கூறும்.

ஊரின் தென்கோடியில் இருந்த மருத்துவமனையில் பரிதாபமாக அமர்ந்திருக்கும் அந்த மருத்துவர் வெகுநாட்களாக வருமையில் வாடிக்கொண்டிருந்தார். அவர் இப்படிப்பட்ட ஒரு கிராமத்தில் மருத்துவமனை அமைத்ததற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். ஏழை- எளிய மக்களுக்கு சேவை செய்வதே தனது லட்சியம் என்று வீரவசனம் பேசிவிட்டு இங்கு வந்திருக்கலாம். அல்லது அரசாங்கத்தின் கடுமையான உத்தரவின் பேரில் ஒருவருட சேவைக்காக அவர் இங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது ஏதேனும் தவறு செய்து தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றலாகி வந்திருக்கலாம். அல்லது ப்ளஸ் டூ ஃபெயில் ஆனவரை நகரங்களில் மருத்துவராக ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அவர் இங்கு வந்திருக்கலாம். எது எப்படியோ அவ்வூரில் எல்லோருக்கும் காய்ச்சல் சரியானது. தலைவலி சரியானது. அதனால் அவரும் மருத்துவராக அங்கே உட்கார்ந்திருக்கிறார். மேலும் 5 ரூபாய்க்கு மேல் அவ்வூரில் பரவலாக பணப்புழக்கம் இல்லை என்பதால் அவர் டீ குடித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.

மருத்துவமனை அருகில் நெருங்கிவிட்டது என்பதை உணர்வதற்கு ஒரு ட்ரிக் உள்ளது. கண்ணை மூடிக்கொண்டு முகர்ந்து பார்த்தால் போதும். ஒருவித சாணி நாற்றம் அடிக்கும். அந்த மருத்துவமனை சுவரில் வராட்டி தட்டி உலர்த்தப்பட்டிருந்ததே அதற்கு முக்கிய காரணம். நல்லவேலையாக கதவு வைக்கப்பட்டிருந்த இடத்தில் கதவு இல்லை என்கிற ஒரே காரணத்தால் அங்கு வராட்டி தட்டமுடியவில்லை. மருத்துவர் ராஜேந்திரன் ஒரு பழைய வேட்டியில் தனது மருத்துவ உபகரணங்களை எல்லாம் எடுத்து வருவார். அதே வேட்டியில் மீண்டும் கட்டி எடுத்துச் சென்று விடுவார். ஏனெனில் இரவு நேரங்களில் அங்கு தங்குவது என்பது ஆபத்தானது. திருடர்களுக்கு அங்கு வர பயம் என்றாலும் பாம்புகளுக்கு அப்படியல்ல. அவை சுதந்திரமாக இரவு நேரங்களில் அங்கு சுற்றுலா வந்து செல்லும். அந்த சின்ன கிராமத்தில் இயற்கை பாம்புகளுக்கு அமைத்துக் கொடுத்த பண்ணை வீடுதான் அந்த மருத்துவமனை. மேலும் அந்த மருத்துவமனைக்கு ஒருஒற்றையடிப்பாதை உள்ளது. வரப்பு போன்று அமைக்கப்பட்ட அந்த ஒற்றையடிப்பாதையில் கயிற்றில் நடக்கும் திறமை உள்ளவர்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். இருபக்கமும் வளர்ந்துள்ள புதர்களுக்கு மத்தியில் தேள்களும், பாம்புகளும் உண்ட களைப்பில் உறங்கிக் கொண்டிருக்கும். அவைகளின் உறக்கம் களைக்கப்படாமல் இருக்கும் வரை உயிருக்கு உத்தரவாதம் என்ற ரகசியம் மருத்துவர் ராஜேந்திரனுக்கு நன்கு தெரியும் என்பதால் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்.

மருத்துவமனை அருகே நெருங்கிய முத்துக் குமரன், நாகரீகமாக சென்று கதவைத் தட்டலாம் என் வெகுநேரமாக கதவைத் தேடிக்கொண்டிருந்தான். அது மருத்துவமனைக்கு பின்புறம் கழற்றி அழகாக சாத்தி வைக்கப்பட்டிருந்தது. வெகுகாலமாக தவமிருக்கும் முனிவர்களை புற்று மூடிவிடுவது போல, கரையான் புற்று ஒன்றுஅந்தக் கதவை மூடிவிட்டிருந்தது. உள்ளே கதவு இருக்கிறதா? இல்லையா என யாரேனும் தைரியம் உடையவர்கள் அதை உடைத்துப் பார்த்தால்தான் தெரியும். டாக்டர். ராஜேந்திரனுக்கு எம்.பி.பி.எஸ். என்றால் என்னவென்று தெரியாததால், வெகு காலமாக அந்த ஊர் காளை மாடுகளுக்கும், எருமை மற்றும் ஆட்டுக் குட்டிகளுக்கும், மருத்துவம் பார்த்து வந்தார். கோழிகளுக்கும், சேவல்களுக்கும் பெரும்பாலும் அந்த மஞ்சள் நிற மருந்தையே கொடுத்து வந்தார். எருமை மாடுகளுக்கு எப்பொழும் அந்த சிவப்பு கலர் மருந்துதான். பசுமாடுகள் நமது தெய்வம் என்பதால் அவற்றுக்கு வெள்ளை அல்லது பச்சை நிற மருந்துகள் கொடுக்கப்பட்டன. அதனால் நரிக்குடி கிராம மக்கள் இங்கிலீஷ் மருத்துவத்தை எளிமையாக கற்றுக் கொண்டுவிட்டார்கள். மருத்துவருக்கு வயிற்றைக் கலக்கி எங்கேனும் வெளியே சென்றிருந்த சமயமாக யாரேனும் கோழியை எடுத்து வந்தார்களேயானால், அவர்கள் மருத்துவருக்காக காத்திருப்பதில்லை. அந்த மஞ்சள் நிற மருந்தை தாங்களே தேடி எடுத்து தங்கள் கோழிகளுக்கு கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

அதேபோல் மனிதர்கள் யாரேனும் உடல்நிலை சரியில்லை என்று வந்தால் அவர்களுக்கு இரண்டு ஊசிகள் போடாமல் விடமாட்டார். அந்த 2 சிறியரக பாட்டில்களிலும் டிஸ்டில் வாட்டர் என்றுமே குறைந்ததில்லை. மாற்றி மாற்றி ஊசி போடுவதில் வல்லவர். அன்று ஒருநாள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற ஒரு விவசாயிக்கு அதே இரண்டு ஊசியை போட்டார். அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை மாறிமாறி வாந்தியெடுத்து பிழைத்துக் கொண்டான். அன்றிலிருந்துதான் மருத்துவமனை சுவரில் வராட்டி தட்டுவதை சற்று குறைத்துக்கொண்டார்கள் அவ்வூர் மக்கள். கண்ணில் தூசி விழுந்தாலும் சரி, தலைவலி என்று வந்தாலும் எப்பொழுதும் 2 ஊசிகளுக்கு மேல் இல்லை என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார். பெரும்பாலும் வயிற்றுவலிகாரர்களுக்கு பச்சைநிற நட்சத்திரவடிவ மாத்திரைகளை கொடுப்பார். குத்துமதிப்பாக கைகளில் கொட்டி கொடுப்பார். அதில் எத்தனை வருகிறதோ அதை அவன் விழுங்க வேண்டும். அன்று ஒருநாள் அல்சர் வியாதியால் அடிக்கடி மருத்துவமனை வரும் ராமசாமிக்கு ஏதோ மறதியாக வட்டவடிவ மாத்திரையை கொடுத்து விட்டார். கேலியாக சிரித்த ராமசாமி, டாக்டர். ராஜேந்திரனை கிண்டல் செய்யும் விதத்தில் இவ்வாறு கூறினான்.

“டாக்டர் ஐயா அப்படி என்னத்ததான் படிச்சிங்களோ, வயித்த வலிக்கு நச்சத்திர மாத்திரையதான் கொடுக்கனும்னு உங்களுக்கு சொல்லிக் கொடுக்கலயா, அப்படி என்னத்ததான் படிச்சிங்களோ, இப்டி மாத்திரைய மாத்தி மாத்தி கொடுத்தா வியாதி எப்படி கொனமாகும்” என்றான் அதட்டலாக…..நிறங்களில்தான் டாக்டரின் வாழ்ககை ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அதில் துளியும் மிகையில்லை.

மருத்துவர் ராஜேந்திரனும் அவ்வூர் மக்களிடமருந்து நிறைய கற்றுக் கொண்டார். மாடுகளை சேரவைத்து இனப்பெருக்கத்துக்கு உதவுவது, காலில் அடிபட்ட ஆடுகளுக்கு கட்டுப் போடுவது, வியாதியே ஏற்படாத கோழிகளுக்கு வியாதி வந்துவிடும் என்று கூறி ஊசி போடுவது (2 ஊசிகள்) போன்று நிறைய கற்றுக்கொண்டார். அன்று ஒருநாள் ஒருகோழிக்கு ஒரு ஊசி மட்டுமே போட்டுவிட்டார். அதனால் அவர் அடைந்த மனவருத்தத்திற்கு அளவே இல்லை.

இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நரிக்குடி கிராமத்தில் உள்ள ஒரே அனைத்து உயிரின மருத்துவராகிய ராஜேந்திரனை, டாக்டரையும், திருட்டுப்பயலையும் ஒரே மாதிரியாக நினைக்கும் நைனா இன்று பார்க்க வருகிறார். பின் ஒரு ஊசிக்கு 2 ரூபாய் டாக்டர் ஃபீசாக வாங்கினால் அது பகல் கொள்ளையாக அல்லவா? இருக்கிறது. திருட்டு பயல்கள் என்று வாய்க்கு வந்த மாதிரி பேசும் நைனாவைப் பற்றி அரசல் புரசலாக கேள்விப் பட்டிருக்கும் டாக்டருக்கு பயத்தில் சற்று வயிற்றைக் கலக்கிக் கொண்டுதான் இருந்தது. இருப்பினும் நைனாவுக்கு மட்டும் இன்று ஊசி போட்டுவிட்டால் இந்த கிராமத்தில் இனி தான் முழுமையான மருத்துவர் என்பதை நிரூபித்துவிடலாம் என்று நம்பினார். தனக்கு போட்டியான மூலிகை முனியம்மா, சித்த மருத்துவம் பார்க்கும் சீத்தம்மா போன்றவர்களை ஓரங்கட்டிவிடலாம் என்று கணக்கு போட்டார். மோக்கராசுவுக்கு வைத்தியம் பார்த்ததை போட்டோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டார். தேவைப்பட்டால் வால்போஸ்ட் அடித்து ஒட்டவும் தயாராக இருந்தார். தொழில் போட்டி என்று வந்துவிட்டால் எந்த அளவிலும் இறங்கி பார்த்துவிட வேண்டும் என்ற வேகம் அவரை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்தது. பின் படிக்காத பதர்களான கிளவிகள் எல்லாம் இங்கிலீஷ் மருத்துவம் படித்திருக்கும் தனக்கு போட்டியாக வந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? என்று தனக்குள் கருவிக் கொண்டார்.

நைனா படிக்கட்டின் அருகில் நின்றபடி ஒருநிமிடம் யோசித்தார். பின் அதே முத்து பட ரஜினி சிரிப்பு. தனது இடது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றார். டாக்டர் முகெலும்பு மடங்காமல் நேராக உட்கார்ந்திருந்தார். அவரது உடலில் ஒரு சிறிய உதறல் ஏற்பட்டது. இருப்பினும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உடலை முறுக்கி இறுக்கிக் கொண்டார். மேசையின் இடது புறம் நோக்கினார். இரண்டு பாட்டில்களும் நிறைந்திருந்தன. 2 வருடங்களாக தான் பயன்படுத்தி வந்த முனை மழுங்கிய ஊசி ஒரு புறம் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் வெகுநாட்களாக பயன்படுத்தி வருகிறார். தனது இரண்டு காதுகளிலும் அதை பொறுத்தி அதன் முனையை நோயாளியின் நெஞ்சில் வைத்து லப்டப் என்ற ஓசை வருகிறதா? என்று கேட்பார். அதை கடந்த ஒரு மணிநேரமாக தேடி தூசி தட்டி இப்பொழுதுதான் டேபிள் மேல் எடுத்து வைத்திருந்தார். (அதன் பெயர் ஸ்டெதஸ்கோப்).

டாக்டர். ராஜேந்திரன் என்று எழுதப்பட்ட அந்த சின்னப் பலகையை எங்கெங்கெல்லாமோ தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. போன பொங்கலுக்கு வெள்ளையடித்த போது அதைப் பார்த்த நியாபகம். நட்சத்திர மாத்திரை தீர்ந்து போனது பற்றி தன்னையே நொந்து கொண்டார். இருப்பினும் வட்டவடிவ மாத்திரையை வைத்து சமாளித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டார். நல்லவேளை அந்த ராமசாமி ஊரில் இல்லை. இல்லையென்றால் போட்டுக் கொடுத்துவிடுவான். வயித்தவலிக்கு நட்சத்திர மாத்திரைதான் அமெரிக்காவில் கூட கொடுப்பார்கள். நான் எத்தனை நாளாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியாதா? என்று கருணையே இல்லாமல் போட்டுக் கொடுத்துவிடுவான். நாளை எப்படியும் உரம் வாங்கச் செல்லும் மாரிமுத்துவிடம் பத்து ரூபாயை கொடுத்து கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டலில் ஒரு படி நட்சத்திர மாத்திரை வாங்கி வரச் சொல்ல வேண்டும்.

இப்படித்தான் போன முறை நட்சத்திர மாத்திரை வாங்கச் சென்ற ராமசாமியிடம் எவனோ, அது குடும்ப கட்டுப்பாட்டுக்காக சாப்பிடும் மாத்திரை என்று தவறாக சொல்லியிருக்கிறான். அதை கவர்ன்மென்ட் இலவசமாக அனைவருக்கும் வழங்கி வருகிறது என்று வேறு சொல்லிவிட்டான். நல்லவேளை ராமசாமி அதையெல்லாம் நம்பவில்லை. அவன் வெகுஉறுதியாக நம்பினான். நட்சத்திர மாத்திரை என்றால் அது நிச்சயம் வயிற்று வலிக்குத்தான் என்று. அந்த மாத்திரையை கண்டுபிடித்தவனே வந்து சொன்னாலும், அவன் மண்டையில் நறுக்கென்று கொட்டி, இதை வயிற்றுவலிக்குத்தான் சாப்பிட வேண்டும் என்று கூறுவான். ஆனால் இந்த முறை அவன் வெளியூருக்கு சென்றவிட்டான். அதனால் வேறு வழியில்லை. மாரிமுத்துவிடம் தான் கொடுக்க வேண்டும்.

அந்த ஸ்டெதஸ்கோப் இவ்வளவு நாள் ஒரு கோணிப்பைக்குள் கிடந்தது. அதன் ஓரங்கள் தோல் உறிந்து துருபிடித்துப் போய் இருந்தது. அதையெல்லாம் நன்றாக எண்ணெய் விட்டு தேய்த்து துடைத்து வைத்தும் துரு போகமாட்டேன் என்கிறது. இருப்பினும் ஒரு பந்தாவுக்காக எடுத்து வைத்துக் கொண்டார். ரூபாய்க்கு ஒன்று என்று 2 ஊசிகளை இன்று நைனாவுக்கு போட்டு விட வேண்டும். 2 ரூபாய் நஷ்டமடைந்தாலும் சரி. இன்று தன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். என்று மௌனமாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார் டாக்டர் ராஜேந்திரன்.

நைனா இளக்காரமாக பார்த்தபடி சிரித்துக் கொண்டே வந்து அருகில் இருந்த சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்தார். தனது ஒருகாலை மடக்கி இன்னொரு காலில் போட்டு கொண்டார். சாமியாத்தாள் தனது புலம்பலை ஆரம்பித்தார். அரைமணி நேரத்திற்கு பின், தனக்கு ஒரு உளவியல் மருத்துவர் அவசரமாக தேவை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் டாக்டர். ராஜேந்திரன். வேக வேகமாக அந்த ஊசியை எடுத்து அதில் டிஸ்டில்டு வாட்டரை நிரப்பி நைனாவின் இடது கையில் சொருகினார். உழைத்து, உழைத்து உருவேறிய அவரது கையில் அந்த முனை மழுங்கிய ஊசி இறங்க மறுத்தது. இருப்பினும் பல்லைக் கடித்துக் கொண்டு ஊசியை அழுத்தினார் டாக்டர். நைனா வலியை பொருத்துக் கொண்டு சிரித்தார். நல்லவேளையாக அந்த ஊசி வளைந்து டாக்டரை அசிங்கப்படுத்தாமல் கைக்குள் சென்றது. வேகமாக டிஸ்டில்ட் வாட்டரை உள்ளே செலுத்தினார். நைனாவின் முகத்தில் இன்னும் அந்த சிரிப்பு தாண்டவமாடியது. பின் ஒவ்வொரு கலரிலும் 2 மாத்திரைகளை எடுத்து பொட்டலம் மடித்தார். கோழி, ஆடு, மாடு சாப்பிட வேண்டிய மாத்திரைகளில் எல்லாம் இரண்டிரண்டு மாத்திரைகள் என 5 பொட்டலங்களை வேகவேகமாக மடித்து கொடுத்தார் டாக்டர்.

மொக்கராசு நைனா பெரிய மனது பண்ணி அவரது வாழ்க்கையிலேயே இன்று அதிக செலவு செய்தார். 5 ரூபாயை எடுத்து டேபிளில் தூக்கி எறிந்தார். மீதியை டிப்சாக வைத்துக் கொள் என்பது போன்ற அவரது பாவனை அவரது சிரிப்பிலிருந்து தெரிந்தது. இதே வேறு ஆளாக இருந்தால் 8 ரூபாய் 25 காசுகளை வாங்காமல் விட மாட்டார் டாக்டர். ஏதோ வராத விருந்தாளி வந்திருப்பதால்தான் இந்த சலுகை என டாக்டர் தனது மனதுக்குள்ளாக மேதுவாக சொல்லிக் கொண்டார்.

அடுத்த நாள்……….

மொக்கராசு நைனாவை முனி அடித்துவிட்டதாக ஊருக்குள் பரவலாக பேச்சு எழுந்தது. கருக்கலில் வெளியே சென்ற அவரை ஊர்ப்புறத்தில் உள்ள பேய் முடி அறையப்பட்ட புளிய மரத்தருகே முனி அடித்துவிட்டதாக கிராமத்து மக்கள் அனைவரும் பெசிக்கொண்டார்கள். அவர் ரத்தவாந்தி எடுத்திருந்தார். இந்த சிம்பலை முனியை தவிர வேறு எதுவும் (பேய், பிசாசு, குட்டிப்பிசாசு) ஏற்படுத்த முடியாது. இந்த சிம்பல் முனியின் அதாரிட்டி சிம்பல். முனியை தவிர வேறு யாரும் அந்த சிம்பலுக்கு உரிமை கொண்டாட முடியாது. அது முனியின் எக்ஸ்க்ளூசிவ் சிம்பல்.

ஆனால் அவருக்கு வந்ததோ கார்டியாக் அரஸ்ட். இதயத்தின் ரத்தக் குழாயில் கொளுப்பு அடைத்து விட்டது. இதயத்துக்கு வரும் ரத்தம் தடுக்கப்பட்டதால் ரத்தவாந்தி எடுத்து செத்தார். இதே போன்று நரிக்குடியில் பலபேர் ரத்தவாந்தி எடுத்து இறந்திருக்கிறார்கள். தமிழ் மொழியில் கார்டியாக் அரெஸ்ட் என்றால் முனி அவ்வளவுதான். நைனா கடைசியாக துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த சிலர் கூட அவரை தூக்கிக்கொண்டு டாக்டர். ராஜேந்திரன் வீட்டை நோக்கித்தான் ஓடினார்கள். அந்த கிராமத்தின் ஒரே நம்பிக்கையாக அவர் இருந்திருக்கிறார். அவர் நிச்சயமாக ஒரு டாக்டர் இல்லை. ஆனால் அவர்தான் அந்த ஊரின் நிச்சயமான நம்பிக்கை. நைனா எதற்காக இறந்தார் என்று அவருக்கும் தெரியாது. நைனா எப்படி இறந்திருப்பார் என்று டாக்டருக்கும் தெரியாது. நரிக்குடி கிராமத்து மக்களுக்கும் அவர் இறந்ததின் காரணம் தெரியாது. ஆனால் ஒரு நம்பிக்கை இன்றும் உண்டு டாக்டர் என்று ஒருவர் இருக்கிறார் அவர் நம்மை எல்லாம் காப்பாற்றுவார்.

Print Friendly, PDF & Email

1 thought on “நைனா வெர்சஸ் டாக்டர்

  1. அருமை ……… மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி நகைச்சுவையாக அழகாக கூறினீர்கள் ஐயா .. வாழ்த்துக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *